/

நிலத்தொடு நீரே.. : ஜா.ராஜகோபாலன்

நண்பர் ஒருவருடனான உரையாடலே இக்கட்டுரையின் அடிப்படை. அவர் தமிழ் மீது வைத்த விமரிசனங்களை இப்படி வகைப்படுத்தலாம் – 1. தமிழ் பழம்பெருமை மட்டுமே கொண்ட மொழி 2. நவீன கருத்துகளுக்கான மொழியாக அது இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அதன் இலக்கியங்களிலேயே அந்தப் பார்வை இல்லாமைதான். 3. தமிழ் மொழி இலக்கியங்களில் அறிவியல் என்பதற்கு முக்கிய இடம் கொடுக்கப்படவில்லை. ஆகவேதான் இங்கு மொழியில் ஈடுபடுவோருக்கு அறிவியல் பார்வை இல்லை 4. உதாரணங்களாகக் காட்டுவதாக இருந்தால் ஒரு கேள்வி , சூழலியல் போன்ற கருத்துக்கள் ஏன் பழந்தமிழில் இல்லை?

உரையாடலால் சீண்டப்பட்டு அவருக்கு பல உதாரணங்களை பிற நண்பர்கள் எடுத்துக் காட்டினர். ஆனால் அவரோ அவை தனித்தனியே இருப்பவை. மலர்களின் பெயரையோ, மரங்களின் பெயரையோ சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது என்றார். சற்று சிந்தித்ததும்தான் பிடி கிட்டியது. அவருக்குத் தேவை உதாரணங்களல்ல. ஒரு அறிவு இயலுக்கான விஷயங்கள் பழந்தமிழ் இலக்கியத்தில் பயின்று வருவதை அவதானிப்பதற்கான ஒரு முறைமையே அவருக்குத் தேவை. எவ்வாறு நமக்குத் தேவையானவற்றை மொத்த குவியலிலிருந்து தேடி எடுப்பது என்பதற்கான ஒரு கருவி தான் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் அவருக்குச் சொன்னவையே இக்கட்டுரையின் துவக்கப்புள்ளி. இதன் விரிவான வடிவம் சென்னை அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரியில் உரையாக நிகழ்த்தப்பெற்றது. இதன் விரிவான கட்டுரை வடிவம் “புரவி” அச்சிதழில் தொடராக வந்துள்ளது. சங்க இலக்கியங்களுக்குள் புகுந்து உதாரணங்களை விளக்காமல் இலக்கியங்களில் சூழலியலைக் கவனிப்பதற்கான உரையாடலாக மட்டுமே இக்கட்டுரை அமைந்திருக்கிறது.

பகுதி 1   

நாம் ஒரு பொருளை அல்லது கருத்தை ஒரு குறிப்பிட்ட விதத்தில் மட்டுமே காணும்படி  சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு அவை அறிமுகம் ஆகும்போது எந்த  வடிவத்தில் நமக்குக் கொடுக்கப்படுகிறதோ  அந்த விதத்தில்தான் அந்தப் பொருளோ, கருத்தோ இருப்பதாக நமக்கு தோன்ற ஆரம்பித்து விடுகிறது. இப்போதும் நீர் என்றால் நமக்கு மனதில்  தோன்றுவது என்ன? ஆறு, ஏரி, கடல் என்ற இயற்கையின் வடிவமைப்பிற்குள் நிற்கும் நீரையோ, செம்பு, குடம், போத்தல் என நாம் முகர்ந்து வைக்கும் வடிவமைப்பிற்குள் நிற்கும் நீரையோ தானே நம் மனம்  நமக்கு காட்சிப்படுத்துகிறது. எந்த வரையறைக்கும் தன்னை ஒப்புக்கொடுத்தாலும் ஒரு வடிவ  வரையறைக்குள் அடங்காத நீரின் தன்மையை நம்மால் காட்சியாக உணர முடிகிறதா? மொழியின் இயல்பும் அவ்வாறுதான். கொள்கலனின் வரையறைக்கு உட்படுமென்றாலும் அதை மீறியும் பெருகும்  இயல்புடையதே மொழி. அதுவும் தமிழ் போன்ற ஈராயிர வருட பண்பாட்டு மரபு கொண்ட மொழியின் பேரொழுக்கில் சூழலியல் எனும் கொள்கலனில் நாம்  இதுவரை முகக்கவில்லை என்பது மொழியின், பண்பாட்டின் போதாமை அல்ல. அதற்கான நுட்பமும், கூர்மையும் மிக்க பல தரவுகள் நம் மொழியின் பழம் இலக்கிய வரிசைகளில் உள்ளன. அவற்றைப் பார்க்கும் முன் சூழலியல் சார்ந்த சில அடிப்படைக் கருத்துகளையும் , பண்பாடு சார்ந்த சில அடிப்படைகளையும் புரிந்து கொள்வோம். அவற்றின் வழியேதான் நாம் நம் பழந்தமிழ் இலக்கியத்தில் துலங்கும் சூழலியல் கருத்துகளைப் புரிந்து கொள்ளப்போகிறோம்.

முதலில் சூழலியல் எனும் சொல்லை எடுத்துக் கொள்வோம். இச்சொல் நமக்களிக்கும் பொருள் என்ன?  சூழ் எனும் வேர்ச்சொல்லில் இருந்து உருவாகி வந்த சூழலியல் எனும் இச்சொல் நம்மைச் சுற்றி இருக்கும் பருப்பொருட்கள், உயிரினங்கள், அவற்றோடு தொடர்புடைய செயல்கள், காரணிகள்,  சார்புநிலை இயக்கங்கள், அவற்றின் பாதிப்புகள் போன்றவற்றை விரிவாகப் பார்க்கும் பார்வையைக் குறிக்கும் ஒரு தொகுப்புச் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது. இங்கு அறிவியல் இயங்கு விதிகளின் அடிப்படையிலான ஆய்வுப்பார்வை கொண்ட துறைகளை தமிழ்மொழியில் குறிப்பிடுகையில் துறையுடன் “இயல்” எனும் சொல்லை விகுதியாக சேர்க்கிறோம். புவி குறித்த அறிவியல் நோக்குப்பார்வை புவியியல், பருப்பொருட்கள், அவற்றுக்கிடையேயான விசைகள் ஆகியவை குறித்த பார்வை இயற்பியல்.. என சொல்கிறோம். இந்த சூழலியல் என்பதை  முதல் புள்ளியாகக் கொள்வோம். இரண்டாவது  புள்ளியாக பண்பாடு என்பதைக் கொள்வோம்.

பண்பாடு என்ற சொல்லின் பொருளை இப்படிப் பார்க்கலாம். ஒரு இனத்தின், குழுவின், சமூகத்தின் நம்பிக்கைகள், விழுமியங்கள், சடங்குகள், உறவுமுறைகள், சமூக முறைமைகள், நெறிகள், மொழி, கலைகள், இலக்கியம், அரசியல் ஆகியவற்றை உள்ளடக்கிய வாழ்க்கை முறையினைக் குறிக்கும் தொகுப்புச் சொல்லாகவே பண்பாடு எனும் சொல்லைப் பார்க்கலாம். ஒரு நாகரிகம் என்பதை பண்பாட்டின் செயல்பாடுகள் எனவும் சொல்லலாம். இதில் மொழி எங்கே வருகிறது? ஒரு திரள் தன்னை சமூகமாக உணர்ந்து திரள்கையில் அதன் அச்சாக அமைவது அதன் விழுமியங்களே. அந்த விழுமியங்களே பண்பாட்டுக் கூறுகளாக பேசப்பட்டு அச்சமூகத்தின் கலைகளிலும் இலக்கியத்திலும் வெளிப்படுகிறது. காலத்தால் மேலும் மேலும் முதிர்வடையும் விழுமியங்களும், பண்பாட்டுக் கூறுகளும் வெளிப்படுத்தப்படுவது மொழி வழியேதான். எப்படி பண்பாட்டின் செயல்முறைகளில் ஒரு வளர்ச்சி இருக்கிறதோ அதே போலவே பண்பாட்டின் முக்கியக் கூறான மொழிக்கும் வளர்ச்சி நிலை உண்டு. வாய்மொழியாக ஆரம்பித்து நாட்டார் பாடல்களாகப் பரிணமித்து கலை வடிவங்களுடன் இணைந்து கொண்டு சமூகத்தோடு வளரும் மொழி கூடவே தன்னளவில் எழுத்து வடிவம் பெற்று செம்மையான இலக்கண வடிவைப் பெற்று தன்னைப் பரிணமித்துக் கொண்டே வருகிறது. ஆகவேதான் ஒரு பண்பாட்டின் பரிணாம வளர்ச்சியை, அதன் கூறுகளை   அப்பண்பாட்டின் இலக்கியங்கள் வழியே காணலாம் என்பதை ஆய்வுலகம் ஏற்றுக் கொள்கிறது. இயல்பான வாழ்க்கைக் களங்களில் வளர்வதும், செம்மொழியாக தன்னை மேம்படுத்திக் கொள்வதும் மொழிக்கு ஒருசேர நடக்கிறது. 

சமூகம் தன்னை தொகுத்துக் கொள்ளும் அச்சாக அமையும் விழுமியங்களின் அடிப்படையில்தான் அந்த சமூகத்தின் இலக்கியங்கள் உருவாகின்றன. கலை வடிவங்களும் இதே முறையில்தான் உருவாகின்றன. காலத்தால்  விழுமியங்கள் மாறிவருவதும் , மாறி வரும் விழுமியங்களை வலியுறுத்தும் இலக்கியப் படைப்புகளுமாகத்தான் எந்த சமூகமும் இலக்கியப் படைப்புகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கி வந்திருக்கிறது.  ஆக இலக்கியப்படைப்புகளின் வழியே அந்த சமூகத்தின் விழுமியங்களை நாம் அவதானித்து புரிந்து கொள்ள முடியும்.

இந்த இரு புள்ளிகளிலிருந்து மூன்றாவது புள்ளிக்குப் போகலாம். இந்தப் புள்ளியை ஒரு சொல்லாக அல்லாது ஒரு கருத்தாக பார்க்கலாம். ஒரு அறிவியல்துறை அல்லது பிரிவு சார்ந்த ஆய்வுப்பார்வையை ஒரு பொருள் / செயல் மேல் போட்டுப்பார்த்தால் அதற்கு இயல் எனும் விகுதியைச் சேர்க்கிறோம் என்று பார்த்தோம். அந்த இயல் என்பதை எங்கிருந்து அறிவியல் எடுக்கிறது? நம்மைச் சுற்றியிருக்கும் சூழல்கள், அவற்றில் இயங்கும் உயிரினங்கள், இயற்கை செயல்பாடுகள் ஆகியவற்றிலிருந்துதான் எடுக்கிறது. நம்மைச் சுற்றி இருக்கும், இயங்கும் அனைத்தையும், அவற்றுடனான நமது தொடர்புச் செயல்பாடுகளையும் மொத்தமாக  மானுட வாழ்க்கை என்கிறோம். தொகுப்புச் சொல்லாக முந்தைய இரு புள்ளிகளைப் பார்த்தோம் என்றால் இந்த மூன்றாவது புள்ளி  பகுப்புச் சொல்லாக வருகிறது. வாழ்க்கையில் இணைந்திருக்கும், அன்றாடத்தில் கலந்து பரவியிருக்கும் ஒவ்வொன்றும் ஒரு இயல்தான். இயல்களால் இணைத்து நெய்யப்பட்ட வாழ்க்கை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

பகுதி 2

காலையில் எழுந்ததும் பல்துலக்குவது வாழ்க்கையில் ஒரு வழமையான செயல். ஆனால் அதில் வேதியல், இயற்பியல், உயிரியல், இயந்திரவியல், தொழில்நுட்பவியல், வடிவமைப்பியல், கணிதவியல், வணிகவியல் போன்ற இன்னும் பல இயல்களும் கலந்திருக்கின்றன. இத்தனை இயல்களா எனக் கேட்போர் நேரமிருப்பின் இந்த இயல்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு பல்துலக்குவதில்   செயல்படுகின்றன என்பதை ஆராய்ந்து சரிபார்க்கலாம்.

பல் துலக்குவது போல நம் வாழ்வில் அன்றாடச் செயல்பாடுகளில் தொடக்கி அசாதாரண, சிறப்புச் செயல்பாடுகள் வரை மனித வாழ்வில் எத்தனை இயல்கள் ஊடுபாவாக பிணைந்து செயல்படுகின்றன என்பதைப் பார்க்க வியப்புதான். இதைப் போலவே  பிற பருப்பொருட்கள், இயற்கை விசைகள், பிற உயிரினங்கள் ஆகியவற்றின் வாழ்க்கையிலும், செயல்பாட்டிலும் எண்ணற்ற இயல்களை நாம் பிரித்தறிய  முடியும், ஆகவே இயல் என்பது ஒரு பிரித்தறியும் செயல்பாடு  என்பதை உணர்கிறோமோ? ஆமென்றால் அடுத்த கட்டத்துக்கு நகரலாம்.  

மேற்கத்திய நாடுகள் பகுப்புமுறை அடிப்படையிலான அறிவியல் பார்வையைக் கையில் எடுத்துக் கொண்டு வளர ஆரம்பித்து ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளே ஆகின்றன. எப்பொருளைப் பேச வேண்டுமானாலும் நமக்கு மொழி இன்றி இயலாது என்பதால் அவர்களது அறிவியல்  பார்வையை ஒட்டியே அவர்கள் மொழியையும் பயன்படுத்தினார்கள். பகுப்பு முறை அறிவியல் புகழ் பெற்று வளர, வளர புதிய புதிய இயல்கள் தோன்றி வளர ஆரம்பித்தன. இருபதாண்டுகளுக்கு முந்தைய கல்லூரிப் படிப்புப் பிரிவுகளையும் இன்று இருக்கும் கல்லூரிப் படிப்பின் பிரிவுகளையும் பாருங்கள். எவ்வளவு விதமான பிரிவுகள் இன்று வந்து விட்டன. மருத்துவம் என்றால் அதிலேயே நாற்பதுக்கும் மேற்பட்ட பிரிவுகள், பொறியியல் என்றால்  அதில் ஐம்பது பிரிவுகள், வணிகவியலில் கூட இருபது பிரிவுகள் என பகுப்புப் பார்வை வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தக் கருத்தை மூன்றாவது புள்ளி எனக் கொள்வோம்.

இந்த மூன்று புள்ளிகளும் இணைந்து அமையும் முக்கோணமே நமது தமிழ் இலக்கியங்களிலிருக்கும்  சூழலியல் கருத்துகளை நாம் புரிந்து கொள்வதற்கான அணுகுமுறையை தெளிவாக்குகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் பேசிய படைப்புகளை தமிழ் இலக்கியம் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக வாழ்வைத் தொகுத்துப் பார்க்கும் பார்வையைக் கொண்டவை நமது இலக்கியங்கள். ஒரு மானிட வாழ்க்கையைக் கூட அல்ல, மொத்த மானுட வாழ்வின் சாராம்சத்தையும் தொகுத்துப் பேசும் பார்வையைக் கொண்டவை நமது இலக்கியங்கள்.

ஒரு மொழிக்கு முக்கியத்துவமும், முதன்மைப் பொருளாகவும் சுட்டப்படும் நூல்/நூல்கள் ஆங்கிலத்தில் Canon என்று சொல்லப்படும் தமிழ் மொழிக்கு Canon எவை எனக் கேட்டால் நமது பழந்தமிழ் (தொல்நூல்கள் -Primitive text) நூலான தொல்காப்பியத்தையும், சங்க இலக்கிய நூல்களையும் கொள்வதில் எனக்குத் தயக்கமில்லை.  நமக்குக் கிடைக்கும் பழமையான பண்பாட்டுத் தரவுகள் அவைதாம். ஆகவே அவற்றை அடிப்படையாகக் கொண்டே நாம் நமது பண்பாட்டில் நிறைந்துள்ள சூழலியல் கருத்துகளை பேசப் போகிறோம்.

நமது தொல்நூல்கள் குறித்த முழுமையான ஒரு புரிதலிலிருந்து ஆரம்பிக்கலாம். ஏன் அப்படி ஒரு புரிதல் நமக்குத் தேவைப்படுகிறது எனில் தரவுகளின் ஆதாரமாக அவை இருக்கின்றன. மேலும் அவற்றிலிருந்து மேலதிகத் தரவுகளை எடுக்க முடியும் என்பதால் அவற்றைக் குறித்த அடிப்படை அறிமுகம் நமக்கு தேவையாகிறது.

முதலில் தொல்காப்பியத்திலிருந்து துவக்கலாம். தொல்காப்பியம் என்பது நமது மொழி மரபில் கிடைக்கக்கூடிய மிகப் பழமையான இலக்கண நூல். பொதுவாக ஒரு இலக்கண நூல் மொழியின் அமைப்பைக் குறித்துப் பேசுவதே இயல்பு. எழுத்துகள், அவை இணைந்து சொற்களாகும் விதம், வாக்கிய அமைப்பு போன்றவற்றுக்கான விதிமுறைகளை இலக்கண நூல்களில் காணமுடியும். ஆனால் தொல்காப்பியம் அவற்றிலிருந்தும் மேலே செல்கிறது. மொழி எவற்றையெல்லாம் பேச முடியுமோ அவற்றையெல்லாம் பேசுவதற்கான அடிப்படைகளை வகுக்கிறது. தமிழின் தனித்தன்மையான தொல் இலக்கண நூலின் சிறப்பு இது.

ஒரு முறை நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு நாளில் மொழியைப் பயன்படுத்தி நீங்கள் பேசும் சொற்களும், வாக்கியங்களும் எவற்றைச் சுட்டுகின்றன? நம் சுற்றுப்புறச் சூழலில் இருப்பவற்றையும், நமது அன்றாட வாழ்க்கையோடு இணைந்தவற்றையும்தானே.  தொல்காப்பியம் மொழி சென்று தொடும் அனைத்தையும் முன்சென்று உணர்ந்து வகைப்படுத்தி வைக்கிறது. மனித வாழ்க்கை நிகழ்வது என்பது இந்தப் புவியில்தான். தொல்காப்பியமும் நிலத்தை அடிப்படையாக வைத்தே உலகைப் பகுக்கிறது.

தொல்காப்பிய அகத்திணையியல் ஐந்தாம் நூற்பா உலகப் பகுப்பு என்பதை இப்படியாக வரையறுக்கிறது.

 மாயோன் மேய காடுறை உலகமும்   

சேயோன் மேய மைவரை உலகமும்  

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்    

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே. (அகத்.5)

நிலத்தின் வகைகளும் அவற்றுக்கான பெயர்களும் அவற்றுக்கான தெய்வங்களும் இப்பாடலில்  சொல்லப்படுகின்றன. நண்பர்களுக்கு இங்கு ஒரு ஐயம் வரலாம். ஐவகை நிலங்கள் எனக் கேட்டதுண்டு. ஆனால் தொல்காப்பியம் நால்வகை நிலங்களையே வகைப்படுத்துகிறதே என ஐயம் வந்தால் அது சரியானதே. பாலை எனும் நிலப்பகுதியை தனியே வரையறை செய்யவில்லை. மாறாக தன்னியல்பு திரிந்து வெம்மை காட்டும் நிலங்களை குறிப்பாக முல்லை, குறிஞ்சி நிலங்களை பாலையாகக் கொள்கிறது தொல்லிலக்கணம். சிலப்பதிகாரத்தில் வரும் முல்லையும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” எனும் வரியால் இதை உணரலாம்.  நம்பி அகப்பொருள் நூலில் ஐவகை நிலத்துக்கான வரையறை இருக்கிறது.

இன்னும் வியப்பான ஒன்று நிலத்துடன் காலம் அதாவது பொழுது என்பதையும் இணைத்துப் பொருளாக்கியது தான்.  காலம் என்பதை நம் அறிவின் அளவுக்கு உட்படுத்திக் கொள்ளும் விதமாக அளவீட்டு முறைக்குள் கொண்டு  வந்தோம். அதாவது காலம் தன்போக்கில் இயங்கும். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டி ஒரு அளவீட்டு முறையை அதன் மீது போட்டுப் பார்த்தோம். அதுதான் நேரம் எனும் அளவீட்டு முறை. கடிகாரம் என்ற இயந்திரப் பொறி வந்ததும் நாம் காலத்தை எண்ணுவதில்லை, அதை மறந்து வெறுமே எண்களால் அளவிடப்படும் நேரத்துக்கு நம்மை ஒப்புக்கொடுத்து விட்டோம். ஆனால் இயற்கை காலத்தை எப்படி அளவிடுகிறது? அதற்கு இயல்பான ஒரு வழி இருக்கவேண்டுமில்லையா? அதுதான் பொழுது. கதிரவனின் பயணத்தையும், நிலவின் பயணத்தையும் கணக்கில் கொண்டு செய்யப்பட வகைப்பாடுகள். இன்றும் கூட காலைப் பொழுது எனும் வார்த்தையைப் பயன்படுத்திக் கொண்டுதானே இருக்கிறோம். மனித வாழ்க்கை காலத்தால் வரையறுக்கப்பட்டு நிலத்தோடு பிணைக்கப்பட்டது.இந்த பொழுதையும், நிலத்தையும் தான் முதன்மை வகைப்பாடாகப் பயன்படுத்தி உலகைப் பகுக்கிறது தொல்காப்பியம்.

நிலமும் பொழுதும் என  முதல் இரு வகைத்தே ..

( நம்பியகப் பொருள் நூற்பா -8) எனும் தொல்காப்பிய விளக்க நூலின் வழியே இதைத் தெரிந்து கொள்ளலாம்.  பொழுது என்பது இரு சுடர்கள் என இலக்கியங்களால் சுட்டப்படும் சூரியன், சந்திரன் ஆகியவற்றின் பகல், இரவு  இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாளைப் பகுக்கும் முறை. என்றும் இயங்கும் கடிகாரம். உலகின் இயக்கத்திற்குப் பொதுவான பெரிய முள் சூரியனும், சின்ன முள் சந்திரனும் என அமைந்த காலத்தின் அளவீடு.

இப்படி முதல்வகை பகுப்பாக நிலத்தையும், பொழுதையும் கொண்டு முதற்பொருள் என வகைப்படுத்தும் தொல்காப்பியம் அவற்றுக்குரிய கருப்பொருள் என ஒரு வகையையும், உரிப்பொருள் என ஒரு வகையையும் வைக்கிறது. இதிலிருந்துதான் திணைப் பகுப்பு உருவாகி வருகிறது. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய மூவகைப் பகுப்புகள் அவற்றுக்குரிய பேசுபொருட்களோடு வகைப்படுத்தப்பட்டுள்ளன.   முதற்பொருள் எனப்படுபவை நிலமும், பொழுதும் எனப் பார்த்தோம். அவ்வாறு பிரிக்கப்பட்ட ஐவகை நிலமும் தமக்கு உரிய கருப்பொருட்களை உரிபொருட்களைக் கொண்டுள்ளன.

இந்த மூன்று வகைப்பாடுகளில் நாம் முதற்பொருள், கருப்பொருள் ஆகிய இரண்டையும் எடுத்துக் கொண்டோமானால் மொழி வழியே நம்மைச் சுற்றியுள்ள சூழலை, சுற்றுப்புறத்தை தமிழின் தொல்நூல் அணுகியிருக்கும் விதம் புரியும். தொல்காப்பிய விளக்கமாக எழுதப்பட்ட நம்பி அகப்பொருள் நூலை எடுத்துக் கொள்வோம். அது பட்டியலிடும் கருப்பொருள்கள் இவை:

கருப்பொருள்
1. தெய்வம்
2. உயர்ந்தோர்
3. உயர்ந்தோர் அல்லாதவர்
4. பறவை
5. விலங்கு
6. ஊர்
7. நீர்
8. பூ
9. மரம்
10.உணவு
11. பறை
12. யாழ்
13. பண்
14. தொழில்

இந்த கருப்பொருள் ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனியாக வரையறுக்கப்பட்டு சொல்லப்படுகிறது. கீழ்கண்ட பட்டியல் அதை விளக்கும்-

தன்மைகள்குறிஞ்சித் திணைமுல்லைத் திணைமருதத் திணைநெய்தல் திணைபாலைத்திணை
நிலப்பரப்புமலை, மலை சார்ந்த இடம்காடு, காடு சார்ந்த இடம்வயல்,வயல் சார்ந்த இடம்கடல் சார்ந்த இடம்தரிசு நிலம்
மலர்குறிஞ்சி மலர்முல்லை மலர்மருத மலர்அல்லி மலர்பாலை மலர்
நேரம்நள்ளிரவுமாலை நேரம்வைகறைப் பொழுதுஅந்தி மாலைஉச்சிப் பொழுது
பருவ நிலைகுளிர்காலம்பின்கோடை காலம்பின் வசந்த காலம்முன்கோடைக் காலம்கோடைக் காலம்
விலங்குயானை, புலி, குரங்கு,எருது, குதிரைமான்எருமை, நன்னீர் மீனினங்கள்முதலை, சுறாதளர்ந்த யானை, புலி, செந்நாய்
மரம்/செடிமூங்கில்,பலா, வேங்கைகொன்றைமாமரம்புன்னை மரம்கள்ளி
நீர் நிலைஅருவிஆறுகுளம்கடல், கிணறுவறண்ட கிணறு, குட்டை
மண்சரளை மண், செம்மண், கரிசல் மண்செம்மண்வண்டல் மண்மணல்,உவர் மண்உப்பு மண்
தொழிற்படுவோர்மலைக்குடியினர்கால்நடை புரப்போர், வேளாண் தொழிலாளர்வேளாண்மை தொழிலாளர்மீனவர்பயணியர், கள்வர்

உரிப்பொருள் என்பது அந்தந்த நிலத்தின் மக்கள் வாழும் வாழ்க்கை முறையையும், அவர்களின் விழுமியங்களையும் பாடுபொருளாகக் கொண்டிருப்பவை. ஆகவே உணர்வு நிலைகள் உரிப்பொருளில் வரும் அதே நேரம் அவை கருப்பொருள், முதற்பொருளில் ஏற்றிக் காட்டப்பட்டிருக்கும்.

உலகின் வேறெந்த மொழியின் இலக்கண நூலும் இத்தனை விரிவாக உலக வாழ்வை மொழிக்குள் கொண்டுவந்திருக்கவில்லை. இங்கு முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது மனித வாழ்வை பேசுபொருளாகக் கொண்ட இலக்கியங்களுக்கு நெறி காட்டும் இலக்கணம் மானுடர்களின் வகைப்பாட்டை பேசவில்லை. தாவரங்கள், விலங்குகள், பறவைகள், நிலம், நீர், சூரியன், சந்திரன், மலை, ஆறு, கடல், ஏரி, குளம், பூ என சூழலியலின் அங்கங்களான அனைத்தையும் கருப்பொருள் எனச் சுட்டுவது மிக நுட்பமும், ஆழமும் வாய்ந்த ஒன்று. மானுட வாழ்வின் கருப்பொருட்களாக விளங்குபவை இவை எனும் முடிவுக்கு வர எவ்வளவு சிந்தித்திருக்கவேண்டும்…  மானுட உணர்வுகளையும், இயற்கையின் இயல்புகளையும் இணைத்தே கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இலக்கணம் வலியுறுத்தும் புள்ளியும் அதுவாகத்தான் இருக்கிறது.

பகுதி 3

முன்பே பார்த்தபடி சூழலியல் எனும் சொல்லின் வேர்ச்சொல் சூழ் எனும் சொல். நம்மைச் சூழ்ந்திருப்பவை குறித்தும், அவை இயங்கும் விதம் குறித்தும்,  அவற்றுக்கிடையேயான இயக்கங்களின் ஒத்திசைவுகள் குறித்தும் ஆராய்ந்து அறியும் அறிவு இயலின் ஒரு பகுப்புப் பிரிவே சூழலியல் எனப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தின் உயிருள்ள, உயிரற்ற அனைத்தின் இயக்கமும் ஒன்றையொன்று பின்னி அமைந்துள்ளது. சில இயக்கங்கள் ஒன்றையொன்று நேரடியாக  சார்ந்தும், சில இயக்கங்கள் ஒன்றையொன்று மறைமுகமாக சார்ந்தும், மேலும் சில இயக்கங்கள் ஆய்வுக்கு எட்டாத தொடர்புகளோடும் இருக்கின்றன. மனித இயக்கங்களுக்கும்  இதில் விலக்கில்லை என்பதே இயற்கை இதுவரை காட்டியுள்ள நிரூபண உண்மை.  மனிதனுக்கு தனித்த சிறப்பாக இயற்கை வழங்கியுள்ள கொடையாக ஒன்றைச் சொல்லிக்கொள்ளலாம் – இந்த சூழலின் இயக்கங்கள் அனைத்தையும் அறிந்து புரிந்து தொகுத்துக் கொள்ளும் மூளைத் திறன். பிற அனைத்தும் இந்த இயக்கத்தின் இசைவில் தத்தம் பங்கை நிறைவேற்றும் கடமை வரையே செயல்பாடாகக் கொண்டிருக்கும்போது மனிதனுக்குத் தரப்பட்ட தனித்த திறன் நம்மால் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா? இன்று படித்தவர்கள், நாகரிகம் மிக்கோர் வாழும் நகரப் பகுதிகளில்தான் மரங்களை வெட்டும் கொடுமை அதிகம் ( ரொம்ப குப்பை ஆகுது சார் ). ஆனால் நமது தொல் மரபை கவனித்தால் இந்த அளவுக்கு கேவலமாக   நாம் இருந்ததில்லை எனும் ஆறுதல் நமது சங்க இலக்கியங்களில் கிடைக்கிறது.

 சூழலியல் என்பது ஒரு அறிவியல் கலைச்சொல். அதே நேரம் அதன் அடிப்படைகள் நம்மைச் சுற்றியுள்ளவற்றின் இயக்கங்கள், அமைப்புகள் குறித்தவை என்பதால் நமக்கும் தெரிந்தவையே. ஒரு அறிவியல் அதன் பயன்பாட்டில் நம்மைச் சுற்றி ஒவ்வொரு கணமும் இருந்துகொண்டேதான் அதாவது இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது.

இயற்பியலின் அறிதல் இருப்பவர்களைக் கேட்டால் அதன் நூறு விதிமுறைகளின் நிரூபணங்கள் நம் தினப்படி வாழ்வில் நிகழ்வுகள் வழியே நிரூபணமாகுபவை என்பதை ஐயமின்றி சொல்வார்கள். அவ்வாறே வேதியியல், மின்னியல் என பலவற்றைச் சொல்லமுடியும். நாம் அவற்றை பயன்பாட்டின் வழியே மட்டுமே அறிமுகம் செய்துகொண்டு பயன்பாட்டுப் பொருளாகவே அவற்றை அணுகுவதால் அறிவியல் பார்வை கொண்டிருப்பதில்லை. அதே சமயம் அதன் அடிப்படைகளை உணராமலும் இல்லை. மின் சாதனங்களைப் பயன்படுத்த ஒருவர் மின்னியல் பொறியாளராக இருக்க வேண்டியதில்லை. ஆனால் மின்சாரத்தைக் கையாள்வதில் கவனம் உடையவராக இருக்குமளவு ஒரு புரிதல் இருக்கும் அல்லவா? அதிலிருந்து அவரால் ஃப்யூஸ் மாற்றுதல், பல்புகளை மாற்றுதல் போன்ற அடிப்படைப் பணிகளைச் செய்ய முடிகிறதில்லையா? ஆகவே அறிவியலின் இயங்கு விதிகள் ஆய்வகங்களிலிருந்து வருவதில்லை. கண்டறியப்பட்டவை ஆய்வகங்களில் நிரூபிக்கப்படுகின்றன. அவை அனைத்தும் நம்மைச் சுற்றி இயங்கிக் கொண்டிருப்பவையே. அவை நம் வாழ்வின் பகுதியாக நம்மைச் சுற்றிலும் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருப்பவையே. நம்மால் உணரத்தக்கவையே.

இந்த இயக்கங்களை கவனித்து, அவற்றைப் புரிந்து கொள்ளும் செயலையே அறிவியல் ஆய்வாளர்கள் மேற்கொள்கிறார்கள். அதாவது ஒன்றின் இயக்கத்தை மட்டுமே கவனித்து புரிந்து கொள்ளும் செயல்பாடே ஆய்வின் அடிப்படை இயல்பாகிறது. அறிவியலின் இப்பார்வை நமக்கு வந்து அதிகமும் 300 ஆண்டுகள் கூட ஆகவில்லை என முன்பே பேசியிருக்கிறோம். அப்படியானால் அதற்கு முன்பு இந்த விதிகள், இயக்கங்கள் குறித்த அறிவு இல்லையா என்றால் இருந்தது என்பதே பதில். எப்படி இருந்தது என்றால் மனித வாழ்வின் பகுதியாகவே இருந்தது. வாழ்க்கை முறையாகவே பயின்று வந்தது. பண்பாட்டின் உறுப்பாகவே இருந்து வந்திருக்கிறது. அதுவே நம் இலக்கியங்களில் பயின்று வந்திருப்பது.  இப்போது அதை நாம் எப்படி புரிந்து கொள்வது?

ஒரு அறிவியல் பார்வை என்பதற்கு அடிப்படையாக அவதானிப்பு, புரிதல் மற்றும் அணுகுமுறை ஆகிய மூன்று பண்புகளைக் கொள்வோம். அதாவது ஒரு செயலில் உள்ள அறிவியல் தன்மை என்பது அதனை நாம் அவதானிக்கும் விதத்தாலும், புரிந்து கொள்ளும் முறையாலும், அதை நமது செயல்கள் வழியே அணுகும் விதத்தாலும் வரையறுக்கப்படுகிறது. இம்மூன்று அடிப்படை பண்புகள் வழியே நாம் நம்மைச் சுற்றியிருக்கும் சூழலை பார்க்கும்போதுதான் நாம் சூழலியல் பார்வை கொண்டவராக இருக்கிறோம் என்பதே இங்கு கருதுகோள். 

முதலாவதாக அவதானிப்பு என்பது என்ன? Observation எனும் ஆங்கிலச்சொல்லை இதற்கு இணையாகச் சொல்லலாம்.  நாம் பார்க்கிறோம், கவனிக்கிறோம் என்பதிலிருந்து அவதானிக்கிறோம் என்ற செயல் எப்படி தனித்த பொருள் கொண்டதாகிறது? இம்மூன்று சொற்களையும் அதன் பயன்பாட்டு அளவில் வைத்தே நாம் பொருள் கொள்வோம். பார்த்தல் என்பதை புலன் வழி, அதாவது கண்கள் வழியே மூளைக்கு கடத்தப்பட்டு அதன் தொடர்ச்சியாக அனிச்சையாக நிகழும் நம் செயல்பாடுகள் வரையில் எனக் கொள்ளலாம்.  நாம் பார்க்கிறோம் எனும்போது அதைத் தொடர்ந்த செயல்களுக்குள் தன்னியல்பாக ஈடுபடுகிறோம். கவனித்தல் என்பதை  ஏதோ ஒரு நோக்கத்தோடு செய்யப்படும் பார்த்தல் என்று புரிந்து கொள்ளலாம். அவதானிப்பு என்பது நாம் பார்க்கும், கவனிக்கும் ஒரு விஷயத்தை  அதனுடன் தொடர்புடைய பிற செயல்கள், அதே விஷயத்தின் வெவ்வேறு நிலைகளில் அதன் செயல்பாடுகள், வெவ்வேறு காலங்களில் அதன் செயல்பாடுகள், அதனுடன் தொடர்புடைய பிறவற்றோடு  இருக்கும் நெருக்கம் அல்லது விலக்கம் என ஒரு முழுமையான கருத்தை உருவாக்கிக் கொள்ளும் பார்வையைக்  குறிப்பதாகக் கொள்ளலாம். கூடுதலாகச் சொல்வதானால் அவதானிப்பு முன்பே கவனித்தவை, பார்த்தவை ஆகியவற்றை புள்ளிகளாகக் கொண்டு வருங்காலத்துக்கான புள்ளிகளுக்கும் இடம் கொடுத்து நம் சிந்தனை உருவாக்கிக் கொள்ளும் ஒரு வரைபடம் என கொள்ளலாம்.

இரண்டாவதாக புரிதல் எனும் பண்பைக் குறித்து பேசலாம். Understanding எனும் ஆங்கிலச்சொல் புரிதலுக்கு நெருங்கி வரக்கூடும். புரிதல் என்பதை நாம் அவதானிக்கும் ஒரு விஷயம் ஒரு இயக்கமாக எப்படி நிகழ்கிறது என உணர்ந்து கொள்வதைக் குறிப்பதாகக் கொள்ளலாம். நாம் பார்க்கையில் நிகழும் செயல் அந்த நேரத்துக்கு உரியது. ஆனால் அந்த செயல் தொடர்ந்து நிகழும் செயல்பாட்டின் ஒரு அங்கம். நமது புரிதல் என்பது இந்த ஒரு செயலை பார்த்ததும் அதன் அனைத்து பரிமாணங்களையும் அவதானித்து அந்தச் செயலிலிருந்து அதற்கு முன்னும், பின்னுமான செயல்களைக் கோர்த்து ஒரு செயல்பாடாக அதனை உணர்தல். உதாரணமாக, ஒரு மலர் மலர்ந்திருப்பதைப் பார்க்கிறோம். நம் புரிதல் என்ன? மலர்- காய்-கனி- விதை- முளை- செடி-மீண்டும் மலர்- ஒளிச் சேர்க்கை- வேர்-மண்- நீர் என நாம் கண்டதிலிருந்து நம்மால் முன்பின்னாக ஒரு தாவரத்தின் வாழ்க்கை சுழற்சியை உணர முடியும் இல்லையா ?  புரிதல் என்பதில் இருக்கும் மற்றொரு நுட்பம் புரிதல் பொதுவானது என்பதே. அனைவருக்கும் அதே அளவில் அந்த செயல்பாடு சரியாக இருப்பதையே புரிதல் குறிக்கிறது. மாறாக தாவரங்களின் வாழ்க்கை சுழற்சி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுவிதமாக புரிகிறது என்றால்  அந்த அவதானிப்பு இன்னும் ஒட்டுமொத்த செயல்பாட்டின் வடிவத்தை அடையவில்லை என்றுதான் கொள்ள முடியும். ஆகவே புரிதல் எனும் நிலையில் நாம் முழுமைப்பொது எனும் கருத்துருவாக்கத்தை அடைந்திருக்கிறோம் என்று கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக அணுகுமுறை  எனும் பண்பு. Approach எனும் ஆங்கிலச் சொல் இதற்கு நெருங்கிய பொருள் தருவதாக அமைகிறது.  ஒரு விஷயத்தை/செயலை/செயல்பாட்டை  பார்த்து, கவனித்து, அவதானித்து, புரிந்து கொண்டதும் என்ன செய்யப் போகிறோம்? இனி அந்தச் செயல்பாட்டை ஒட்டி நாம் செய்யக்கூடுவது என்ன என முடிவெடுப்பதுதானே? நாம் கொண்ட புரிதலின் அடிப்படையில் இனி அந்த செயலை, செயல்பாட்டினை நம்மோடு எப்படி தொடர்புபடுத்திக் கொள்வது, எந்த இடத்தை அதற்கு அளிப்பது, அதன் செயல்பாட்டில் நம் பங்கு உண்டெனில் அதை எப்படி செம்மையுறச் செய்வது, நம் செயல் அதன் செயல்பாட்டுச் சுழற்சியில் இடையூறாக இருக்குமெனில் அதை எப்படி நாம் மாற்றிக் கொள்வது ஆகிய அனைத்தும் நமது அணுகுமுறையில் அடங்கும். முதல் இரண்டையும் போல அல்லாமல் அணுகுமுறை நாம் செய்யும் செயல்களோடு தொடர்புடையது. பிரபஞ்ச சூழலில் நமது பொறுப்பை உணர்த்துவது. நாம் கையளித்துச் செல்ல வேண்டிய விழுமியங்களின் உள்ளுறையாக இருப்பது.

சுருக்கமாகச் சொல்வதானால், நம்மைச் சுற்றியிருக்கும் உலக இயக்கங்களை அவதானித்து, புரிந்து கொண்டு அணுகும் முறையை சூழலியல் பார்வை  எனலாம்.

பகுதி 4

மூன்று அணுகுமுறைப் புள்ளிகளின் வழியே நாம் சங்கப் பாடல்களை அணுகலாம். இது விரிவான தொடர் கட்டுரை இல்லை என்பதால் ஓரிரு உதாரணங்களுடன் மட்டும் ஒவ்வொரு அணுகுமுறைப் புள்ளியும் எடுத்துக் காட்டப்படும்.

முதலாவதாக அவதானிப்பு எனும் பண்பைப் பற்றி சங்கப் பாடல்களை வாசித்தால் கலித்தொகையில் ஒரு ஆர்வமூட்டும் விஷயம் கிடைக்கிறது.

கலித்தொகையின் 72 ஆவது பாடல் ஆம்பல் மலரைக் குறித்த ஆர்வமூட்டும் ஒரு அவதானிப்பை முன்வைக்கிறது- “மதிநோக்கி அலர்வீத்த ஆம்பல் வான்மலர் “–  அலர்வித்த என்றால் இதழ்கள் விரிந்த என்று பொருள். அதாவது மலர்ந்த. மதி நோக்கி – நிலவை நோக்கி மலர்ந்த ஆம்பல். அல்லி இரவில் மலரும் மலர் என்பதை கலித்தொகை போலவே பல சங்கப்பாடல்களும் குறிப்பிடுவதைப் பார்க்கலாம். இன்றைய உடனடி ஐயம்நீக்கியான கூகிள் க்கு சென்று Nocturnal flowers  என குறிச்சொல்லிட்டு தேடிப் பாருங்கள்.  Moon flowers என்றே அவை குறிப்பிடப்படுவதையும் பார்க்கலாம். எவ்வளவு கூர்த்த அவதானிப்பு இருந்தால் ஒரு மலரைக் குறித்த இத்தனை நுட்பங்களை பாடலில் கொண்டுவந்திருப்பார்கள்?

அகநானூறு நூலின் 180ஆவது பாடலில்  “தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ படப்பை நின்ற முடத்தாள் புன்னை “ எனக் குறிப்பிடப்படுகிறது புன்னை. இங்கும் தாழையோடு புன்னை மரம் சேர்த்து சொல்லப்படுகிறது. கூடவே ஞாழல் எனப்படும் கொன்றை மலர் செடியும் சொல்லப்படுகிறது. இம்மூன்றுமே இன்றும் கடலை ஒட்டிய பகுதிகளில் செழித்து வளரும் தாவரங்கள். வகைப்பாட்டிலேயே நெய்தல் தாவரங்கள் தான். புன்னையோடு தாழையும், ஞாழலும் சேர்ந்திருக்கும் காட்சி சங்கப்பாடல்களில் வெவ்வேறு இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.   மூன்றும் இணைந்து செழிப்பாக அடர்ந்து வளர்ந்திருப்பதாக இப்பாடல் சொல்கிறது.

சரி – இங்கு  தாழை, ஞாழல் இரண்டுக்கும் இல்லாத முன்னொட்டு புன்னை மரத்துக்கு வருவதைக் கவனிப்போம். “முடத்தாள்” – முடம் + தாள் . முடம் என்பது வளைந்த, சீரற்ற எனும் பொருளையும் தரும் சொல். தாள் என்பது தாங்கி நிற்பது எனும் பொருளைத் தருவது. ஆகவே கால் பாதத்தை தாள் எனச் சொல்வது புலவர் வழக்கம். புன்னை மரத்தைத் தாங்கி நிற்கும் நடுத்தண்டு என்பது இங்கு பொருள். முடத்தாள் புன்னை –  வளைந்த சீரற்ற தண்டினை உடைய புன்னை மரம் எனச் சொல்லப்படுகிறது.

இந்த சொல்லைப் படித்ததும் அது ஒரு சொல்லாகவே மனதில் நின்றது. சென்னை மயிலாப்பூரில்உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்றபோது திருச்சுற்றில் கோசாலை அருகே நிற்கும் தலவிருட்சமான புன்னையைப் பார்த்தேன். முடத்தாள் புன்னை எனும் சொல் மின்னலென மின்னி சொல் எனும் நிலையிலிருந்து அறிவு எனும் நிலையை எட்டியது. கண்முன் காட்சியாக இன்று சென்றாலும் கபாலீஸ்வரர் கோவிலில் சங்கப் புலவர்கள் அவதானித்த வளைந்த, கோணலான புன்னை மரத்தை நாம் பார்க்கலாம். அதிலிருந்து ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் புன்னை மரங்களைப் பார்த்தேன். ஒன்று கூட தென்னை, பனை, தேக்கு போல சீரான நெடுந்தண்டோடு  நிற்கவில்லை. புன்னை என்றும் முடத்தாள் புன்னைதான். உறுதியாகச் சொல்லலாம். ஒரு புன்னை மரத்தை மட்டும் பார்த்து எழுதப்பட்ட வரியல்ல சங்கப்பாடல்களில் வருவது. எவ்வளவு அவதானிப்பிற்குப் பிறகு இவ்வரி வருகிறது என்பதுதான் சிறப்பே.

இரண்டாவதாக புரிதல்  எனும் பண்பைப் பற்றி சங்கப் பாடல்களை வாசித்தால் பட்டினப் பாலையில் ஆர்வமூட்டும் விஷயம் ஒன்று கிடைக்கிறது.

“வான்முகந்த நீர் மழை பொழியவும்

மழைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்

மாரி பெய்யும் பருவம் போல்

நீரின்றும் நிலத்து ஏற்றவும்

நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்

அளந்து அறியாப் பல பண்டம்”                                                                                    –

பட்டினப்பாலை, 126-131

கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய இந்த நூலில் மேலே உள்ள பாடல் காவிரிபூம்பட்டினத்தின் துறைமுகச் சிறப்பை விளக்குகிறது. துறைமுகத்தில் ஒரே நேரத்தில் கப்பல்களில் பல பண்டங்கள் ஏற்றப்படுகின்றன. அதைப் போலவே பல பண்டங்களும் இறக்கப்படுகின்றன. ஏற்றுமதியும், இறக்குமதியும் அளவிடமுடியாத அளவில் நிகழ்கின்றன. இதை விளக்க புலவர் சொல்லும் உவமை மழை பெய்யும் விதம். மேகங்கள் கடலிலிருந்து நீரை முகந்து மழையாகக் கொட்டி மீண்டும் கடலில் அந்த நீர்  கடலில் கலந்து மீண்டும் மேகம் நீரை முகந்து என எப்படி இடைவிடாத சுழற்சியாக மழை பெய்வது அமைந்துள்ளதோ அதைப் போல அளந்து அறியாப் பல பண்டம் நீரிலிருந்து நிலத்துக்கும், நிலத்திலிருந்து நீருக்குமாக சுழல்கின்றனவாம்.

இன்று நமக்கு நான்காம் வகுப்பிலேயே கற்றுக் கொடுக்கப்பட்டு விட்ட மழை பொழியும் விதம் கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைவருக்கும் புரிந்த    ஒன்றாக இருந்திருக்கிறது. ஆகவேதான் அதை உவமையாக எளிதில் கையாள முடிந்திருக்கிறது புலவரால்.

சிலப்பதிகாரம் சொல்லும் இன்னுமொரு விஷயம் இன்றைய அரசாங்கங்கள் மக்களிடம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் விஷயம்.

பெருவளம் சுரப்ப

மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்”                                                

                                    – சிலப்பதிகாரம் (26 – 28)

மழை பிணித்து ஆண்ட மன்னனைப் புகழ்கிறது சிலம்பு. மழை பிணித்தல் என்றால் என்ன? மழையாகப் பொழிந்து ஆறாக வரும் நீரை குளங்கள், ஏரிகள் ஆகியவற்றுக்கு கால்வாய்கள் மூலம் திருப்பி வீணே போகாமல் நீரைப் பாதுகாத்தல் என்பதைத்தான் மழை பிணித்தல் என்கிறது சிலம்பு. அதைச் செய்தால்  வேளாண்மை சிறந்து வளம் பெருகும். இதற்கு உதவிடும் மன்னவனையே புகழ்கிறது சிலம்பு. மன்னன் புகழ் என்பதிலிருந்து சற்று கூர்ந்து கவனித்தால் மழை நீரை சேமிப்பது குறித்த புரிதல், ஆட்சியாளர்கள் அதற்குத் தர வேண்டிய முக்கியத்துவம் ஆகியவற்றை எவ்வாறு மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள் என்பதை உணரலாம். 

மூன்றாவதாக நிகழ்வுகள்  எனும் பண்பைப் பற்றி  வாசித்தால் ஆசாரக் கோவை  ஆர்வமூட்டும் விஷயங்களைப் பேசுகிறது.

 இன்றும் நாம் பேசும் ஒரு கருத்து இயற்கை வளங்கள் மனிதனுக்கு மட்டும் உரியன அல்ல. ஆகவே அவற்றைக் கையாள்வதில் மனிதன் பொறுப்புடனும். கவனத்துடனும் இருக்க வேண்டும் என்பது. நீர் என்பது உலகின் அனைத்து உயிர்களுக்கும் பொது. ஆகவே ஆசாரக் கோவை மனிதன் அதைப் பயன்படுத்துகையில் செய்யத்தாக்காதவை என சிலவற்றைப் பட்டியலிடுகிறது.

உடுத்த ஆடை நீருள் பிழியார் ….

எஞ்ஞான்றும் நீந்தாருமியார் …..

நீரகத்து நின்று       வாய் பூசார் ……

                                                -ஆசாரக் கோவை (11,14,35)

ஆசாரக் கோவை சொல்வதன்படி உடுத்திய ஆடையை நீர்நிலைகளில் துவைக்கும்போது அந்த அழுக்கு நீரை நீருக்குள் பிழியக்கூடாது. நம் உடையின் அழுக்குகள் நீரில் கலந்து விடக்கூடாது என்கிறது ஆசாரக்கோவை. இன்று நாம் சோப்பும், ஷாம்பூவும் பூசியே நீர்நிலைகளை மாசுபடுத்துகிறோம்.  நீரில் நீந்துகையில் நீருக்குள் உமிழக் கூடாது, நீரின் உள்ளே நின்று கொண்டு வாயை சுத்தம் செய்தல் (பால் தேய்த்தல், நாக்கு வழித்தல், உமிழ்தல்) கூடாது என்கிறது நூல். நாமோ இன்று சாலைகளில், பொது இடங்களில் கூட உமிழ வெட்குவதேயில்லை. 

இந்த நிகழ்வுகளைக் கூடவா சொல்ல வேண்டும் என்பவர்களுக்கு அதே நூலில் வரும் இன்னொரு பாடல் இன்னும் வியப்பைத் தரலாம்.

புற் பைங்கூழ் ஆப்பி சுடலைவழி தீர்த்தத்  தேவகுல நிழலா னிலை வெண்பலியென்            றீரைந்தின் கண்ணுமுமிழ்வோ டிருபுலனுஞ் சோரா ருணர்வுடையார்…        

-ஆசாரக் கோவை 32

புல்வெளி, பசிய வயல், பசுஞ்சாணம், சுடுகாடு, மக்கள் செல்லும் வழி, நீர்நிலை,கோவில்களின் சுற்றம்,  நிழல் விழும் பரப்பு, பசுக்கள் அடையும் பட்டி,  வெண்சாம்பல் ஆகிய பத்து இடங்களில் உமிழவோ, சிறுநீர் கழிக்கவோ, மலம் கழிக்கவோ கூடாது என்கிறது ஆசாரக்கோவை.

இயற்கையின் உந்துதல்களாக நிகழ்வனவற்றிலும் கூட எவ்வளவு தெளிவான சிந்தனை.

வாழ்க்கையின் பகுதிகளாக நாம் கொண்டவற்றிலிருந்துதான் இலக்கியங்களைப் படைக்கிறோம். அவை அறிவியலின் பார்வையில் வேறொன்றாக விளக்கப்பட்டாலும் அவை குறித்த புரிதல் ஒன்றேதான் என சொல்ல முடியும் என்றுதான் தோன்றுகிறது.  சற்று நீண்டு விட்ட கட்டுரை என்றாலும்,  இதன் விரிவான படைப்பு  பேசவந்தவற்றை சுருக்கமாகவே விளக்கியிருக்கிறது என நம்புகிறேன். நன்றி நண்பர்களே!

ஜா.ராஜகோபாலன்

ஜா.ராஜகோபாலன் சென்னையில் தற்சயமயம் வசிக்கிறார். கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.

தமிழ் விக்கியில்

5 Comments

  1. மிக அற்புதமான விளக்கியுள்ளீர்கள்.

  2. இலக்கியத்தில் கவிதைகள் கட்டுரைகள் என யாவும் மனிதன் அறிவை வளர்த்துக் கொள்ளவும், நாம் எவ்வாறு மெல்ல மெல்ல உயர்ந்து, வளர்ந்து இன்றைய நிலையை அடைந்திருக்கிறோம் என்பதை தெளிவாக காட்டுகிறது என்பதையும் இக்கட்டுரை விளக்குகிறது. அற்புதமான விளக்கம்.

  3. மனிதனும், சுழியலும் பிரிக்கமுடியாத பந்தத்தினை பழந்தமிழ் பாடல் கொண்டு விளக்கிய சிறப்பான கட்டுரை. ஆம் “லோகா சமஸ்தா சுகினோ பவந்து”

  4. மிகச் சிறப்பான , செறிவான, ஆழம்மிக்க கட்டுரை…நன்றி பல …

உரையாடலுக்கு

Your email address will not be published.