/

மங்களம்: கா.சிவா

ஆனைமலை அடிவாரத்தில் இருந்த  பனையோலை வேய்ந்த குடிசைகளில் ஒன்றினுள் பசுஞ்சாணத்தால் மெழுகிய மண்தரையில் நைந்த பாயில் உடல் குறுக்கிப் படுத்திருந்தார் பாலாமணி அம்மாள். குறுக்காக கட்டப்பட்டிருந்த கொடிக்கயிற்றில் நிறம் மங்கிய சில துணிகள் ஒழுங்கில்லாமல் தொங்கிக் கொண்டிருந்தன. தென்கிழக்கு மூலையில் அமைந்திருந்த இரட்டை அடுப்பு சாம்பல்களுமின்றி வெறுமையாய் கிடந்தது. அருகில் குவிமணல்மேல் இருந்த  மண்பானை பாதியளவு தண்ணீர் இருப்பதன் அடையாளமாக இடைவரை வேர்த்திருந்தது. அதை மூடியிருந்த நெளிந்த அலுமினியத் தட்டின் மீது குவளை சாய்ந்து கிடந்தது. உச்சியை அடைந்த சூரியனின் கூரிய கதிர்கள் ஆங்காங்கே குடிசையின் கூரையைத் துளைத்துக் கீழேவந்து  தரைக்குள் நுழைய முயன்று கொண்டிருந்தன.

இடது கையில் தூக்குச்சட்டியை வைத்திருந்த திலகா மறுகையால் குடிசையின் கதவென சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஓலைப்படலை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தாள். படலைத் தள்ளும்போது எழுந்த ஓலை நலுங்கும் ஒலி பாலாமணி அம்மாளிடம் எந்த உணர்வையும் ஏற்படுத்தவில்லை. அவள் சென்று இவரை இதமாகத் தொட்டபோதும் எந்த மாற்றமும் இல்லாததால் வைத்த கையை சற்று அழுத்தினாள்.  தோலுக்கடியில் சதையின்றி எலும்பின் மெல்லிய அதிர்வை விரல்களில் உணர்ந்தாள்.

குழிந்திருந்த விழிகளை மிகவும் சிரமத்துடன் திறந்தவர் அவளைக் கண்டு திகைத்து சில கணங்களுக்குப் பின்னர் தெளிந்து சிநேகப் புன்னகை புரிந்தார். திலகா தோளில் கைகொடுத்து தாங்க எழுந்தமர்ந்தார். திலகா பித்தளைத் தூக்குவாளியைத் திறந்து அதிலிருந்த கஞ்சியை குவளையில் ஊற்றி கொடுக்க இவரும் கொஞ்சம் கொஞ்சமாக பருகினார். இருந்ததில் பாதியாக குறையும் முன்னரே போதும் என தலையாட்டினார். திலகா வற்புறுத்தியபோதும் ஏற்கவில்லை. பாலாமணி அம்மாளை இடுப்பளவே இருந்த மண் சுவரில் சாய்ந்திருக்குமாறு செய்துவிட்டு மீதமிருந்த கஞ்சியைக் குடித்தாள். வீணாக்க வேண்டாம்னுதாம்மா குடிக்கிறேன் என்று அவள் சொன்னபோது அதை ஏற்பதான மெல்லிய முறுவல் செய்தார். கஞ்சியை முழுவதுமாகக் குடித்தவுடன் இவருக்கு எதுவும் வேண்டுமா என வினவினாள். இவர் தேவையில்லையென தலையசைத்தவுடன் வேலையிருப்பதாகக் கூறி விடைபெற்றாள். இவரும் புன்னகையுடன் தலையசைத்தார்.

திலகா இளைத்துக் கொண்டே செல்வதாக பாலாமணி அம்மாளுக்கு தோன்றியது.   சில ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தபோது இவருக்கு சமைத்துப் போடவென சாமன்னாதான் திலகாவை நியமித்தார். அப்போது திருமணமாகி சில மாதங்களே ஆகியிருந்த அவளின் முகத்தில் ஒரு குறுகுறுப்பும் உடலில் இளமையின் திரட்சியும் நிறைந்திருந்தது. அவை மொத்தமும் வடிந்து, அந்த முகத்தில் இப்போது துயர் உண்டாக்கும் இருண்மை படிந்துவிட்டது. அதைப் பற்றி விசாரித்தால் ஏற்கனவே இல்லறத் துன்பத்தில் இருப்பவள் மேலும் தாழ்வுணர்ச்சியை அடைவாள் என்றெண்ணி அமைதியாக இருந்தார். தான் துன்பம் அடைகிறோம் என்பதைவிட அதை பிறர் அறிகிறார்கள் என்பதே மிகப்பெரும் வலியைத் தரும் என்பதை இளமையிலேயே இவர் உணர்ந்திருந்தார்.

கும்பகோணத்தில், நவாப் வீட்டில் அக்கா இராஜாமணியுடன் இருந்தபோது ஒரு பாதுகாப்பு உணர்வுடன் மற்றவரை அண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறோமே என்ற உணர்வும் உள்ளத்தில் எப்போதும் நீடித்தது. நவாப் இறந்து வெளியேற்றப்பட்டபோது துயர் இருந்தபோதும் ஒரு விடுதலையுணர்வும் தோன்றி உள்ளம் உவகையடைந்ததை எண்ணியபோது இப்போதும் உள்ளுக்குள் ஓர் இனிமை சுரந்தது. அந்த விடுதலையுணர்வின் தித்திப்புதான் அடுத்தடுத்து எடுத்த முடிவுகளுக்கு ஊற்றுக்கண்ணாக இருந்திருக்கவேண்டும் என இப்போது தோன்றியது.

நாடகத்தில் நடிக்கவேண்டும் என்ற எண்ணம்தான் முதலில் தோன்றியது. கும்பேசுவரருக்கு சேவை செய்ய வேண்டியவள் நாடகம் நடிப்பது சரியா என்று உள்ளுக்குள் எழுந்த கேள்விக்கு நடனத்தால் மட்டுமே ஈசுவரனுக்கு சேவை செய்யவேண்டும், நடிப்பை  அர்ப்பணிக்கக்கூடாதென்று ஏதேனும் விதியுள்ளதா… நான் செய்வேன் என வைராக்கியம் தோன்றியது.

பெண்ணை நடிக்க வைப்பது அப்போது வழக்கமில்லை. அதுவும் இறைசேவையாற்றும் குலத்தில் பிறந்த பெண்ணை மேடையேற்றுவதை எவராலும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத நிலை. சிறிய முடிவை செயல்படுத்த அதனினும் பெரிய முடிவை எடுக்கவேண்டியதானது. நடிப்பதற்காக நாடகத்தையே போடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. முடிவெடுப்பது மேலும் தொடர்ந்து உடன் நடிக்கும் அத்தனை பேரும் பெண்களாக இருக்கலாம் என்பதை அடைந்தது. 

முடிவை செயல்படுத்தும்போது தோன்றும் எந்த இடரையும் எதிர் கொள்வதற்கான துணிவு அந்த முடிவின் மீது எவ்வளவு விருப்பம் கொண்டுள்ளோம் என்பதைப் பொறுத்தே அமையும். இவளிடம் வெளிப்பட்ட துணிவினைக் கொண்டே இவளுடைய விருப்பம் எத்தனை ஆழமானது என்பதை இவளே உணர்ந்தாள். நடிக்கும் பெண்களை தேடத் தொடங்கியபோதுதான் இவளைப்போல எத்தனைபேர் நடிப்பதற்கான துடிப்புடன் அதற்கான வழியை அறியாது தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தாள். அவர்களை அணுகியபோதுதான் தான் மேற்கொள்வது எளிய செயலன்று என்பதையும் இத்தனை பேருடைய கனவை நிறைவேற்றும் பெரும்பணியும்தான் என்பதையும் உணர்ந்து மேலும் ஊக்கம் கொண்டாள்.

நடிப்பவர்களை ஒருக்கியபின்தான்  நாடகமேடையின் தேவையை உணர்ந்தார்கள். நாடக கொட்டகைகள் பெரும்பாலும் மேல்தட்டு ஆண்கள் வசமிருந்தது. அவர்களை அணுகவே முடியவில்லை. திகைத்து நின்றபோதுதான் உள்ளூர் திருவிழாவிற்கு நாள் குறித்தார்கள். இறைவனுக்குமுன் பெண்கள் நடனமாடலாம் என்றிருக்கும்போது நாடகமும் போடலாம் என  இராஜாமணி அக்காவுக்கு நெருக்கமான மிராசுதார் தன் கட்டுப்பாட்டில் இருந்த ஊர்க் கமிட்டியை ஏற்க வைத்தார். முழுக்க பெண்களே நடித்த நாடகத்தை அவ்வூரின் ஈசனோடு சேர்ந்து ,மக்களும் கண்டு உவந்தனர். மக்கள் மகிழ்ந்தனர் என்பதற்கு இவர்களின் அடுத்தடுத்த நாடகங்களுக்கு வந்த கூட்டத்தைக் கொண்டும் ஈசனும் மகிழ்ந்தான் என்பதை மற்ற ஊர்களுக்கும் இவர்கள் அழைக்கப்பட்டதைக் கொண்டும் உணர்ந்தாள்.

முதல் நாடகத்திற்கு பின் இவர்களது நாடகக்குழு  பாலாமணியம்மாள் நாடகக் கம்பெனி என மக்களிடம் பெயர் பெற்றது. புதுப்புது நாடகங்களுக்கான கதை மற்றும் உரையாடல்களை எழுதுவதற்கு கந்தசாமி முதலியார் அமைந்தார். நடிப்பு ஒத்திகை மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதுடன் நாடகக் கம்பெனியின் எல்லா நிர்வாகங்களையும் கவனிப்பது பாலாமணிக்கு சிரமமாயிருந்தது. அப்போதுதான் சாமன்னா வந்து சேர்ந்தார். முதலில் நகைச்சுவை நடிகராகவே வாய்ப்புக் கேட்டு வந்தார். அறுபது பெண்களுக்கிடையில் ஒரு ஆண் நடிகர் என்பது சரியாக இருக்காதென்றே பாலாமணி கருதினாள். ஆனால், ஏதாவதொரு  பிடி கிடைக்குமா என வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு ஏங்குபவன் போன்ற சாமன்னாவின் தோற்றத்தையும் அவரின் விழிகளில் தெரிந்த கண்ணியத்தையும் உணர்ந்து இராஜாமணி அக்காதான்  நடிக்க வைக்காவிட்டாலும் நிர்வாகத்திற்கு உதவியாக ஒரு ஆண் இருக்கட்டும் எனக் கூறினாள். நிர்வாகத்தில் பெண்களுக்கு இருக்கும் ஓர் எல்லையை அதற்குள்ளாகவே பாலாமணி உணர்ந்திருந்ததால் அக்காளின் கருத்தை ஏற்றாள். அன்றிலிருந்து இன்றுவரை சாமன்னா தன் உடன்பிறவா சகோதரியெனவே இவளை  கருதி வருகிறார்.

அதன்பின் பாலாமணி எண்ணியதெல்லாம் நிகழ்ந்தது. நாளும் கோளும் இவள் எண்ணுவதற்காகவே காத்திருந்ததைப் போல இவள் விழைந்த அனைத்தையும் நிறைவேற்றின. இந்தக் கம்பெனி நாடகம் நடத்தவேண்டுமென நாடக மன்றங்கள் இவளிடம் கேட்டுக் காத்திருக்க ஆரம்பித்தார்கள். நமக்காக காத்திருக்கிறார்களே என்பதற்காக ஒரே நாடகத்தை மேடையேற்றாமல் ஒவ்வொரு முறையும் பார்ப்பவர் வியக்கும் வண்ணம் புதிதாக ஒன்றை செய்யும் தாகத்துடன் இருந்தாள். இவள் தான் இயற்றவேண்டியதில் மட்டுமே முழுமனதுடன் ஈடுபட்டிருந்ததால்  புகழும் செல்வமும் வளர்ந்ததை இவளே உணரும் முன் உச்சத்திற்கு சென்றுவிட்டிருந்தாள்.

முதலில் நடிப்பவர்களுக்கு மட்டுமே சமைத்துக் கொண்டிருந்த நிலையை மாற்றி அவர்களைக் காணவரும் உறவினர்களுக்கும் சேர்த்து என்றானது. அதுவே மேலும் வளர்ந்து காணவரும் எல்லோருக்கும் என்றானது. தினமும் காலையில் குளித்து முடித்தவுடன் பாலாமணியின் முதல் வேலை அன்றைய சமையலுக்கான முதல் படி அரிசியை அளிப்பது. அதன் பிறகு நாடகத்தைப் பற்றி மட்டுமே தன் கவனத்தை செலுத்தினாள். மற்ற நிர்வாகம் அனைத்தையும் சாமன்னாவே கவனித்துக் கொண்டார்.  நீச்சல்குளம்,  தோட்டம், நீரூற்று ஆகியவற்றைக் கொண்ட பெரிய மாளிகை கட்டியது, சுற்று வட்டாரங்களில் தோட்டங்களை வாங்கியது எல்லாமே அவரது யோசனைதான். அதைப் பற்றி இவளிடம் அபிப்ராயம் கேட்க முயன்றால் அதெல்லாம் உங்கள் முடிவு என்று சொல்லிவிடுவாள். சாமன்னா, வாரம் ஒருமுறை வரவு செலவு விவரத்தைக் கூறும்போது மட்டும் அவர் திருப்திக்காக அதில் மனம் லயிக்காமல் கேட்டுக் கொள்வதோடு சரி.

மக்களிடம் பெரும் புகழுடன் இருந்தபோது திருச்சியிலிருந்து கும்பகோணம் வழியாக செல்லும் ரயிலுக்கு பாலாமணி எக்ஸ்பிரஸ் என்றே பெயரிட்டு அழைக்குமளவிற்கு அதில் இவள் நாடகத்தை காணவருபவர்களின் கூட்டம் நிறைந்திருந்தது. எத்தனையெத்தனை பெரிய மனிதர்கள் இவளைத் தேடிவந்து கண்டார்கள்.  எளியவரோ செல்வந்தரோ இவளைக் காணவரும் அனைவரிடமுமே புன்னகையுடன் நலம் விசாரிப்பதோடு சரி. அவர்களைப் பற்றி எவரிடமும் விசாரிக்கவும் மாட்டாள், மனதில் இருத்திக்கொள்ளவும் மாட்டாள். இவள் மனமெங்கும் நாடகம் சரியாக அமையவேண்டும் நடிப்பில் குறைவந்துவிடக் கூடாதென்பதிலேயே நிலை கொண்டிருக்கும். இவள் நடித்துக் கொண்டிருக்கும்போது பார்த்துக் கொண்டிருப்பவர்களின் விழிகளில் பிரதிபலிக்கும் உவகைதான் இவள் வாழ்வை இயக்கிய உந்துசக்தி. அந்த உவகையை திரும்பத் திரும்பக் காணவேண்டும் என்பதற்காகவே புதிதுபுதிதாக ஏதாவது செய்யவேண்டுமென்ற விழைவைக் கொண்டிருந்தாள்.

எல்லாம் சரியாக நடப்பதாகவேதான் தோன்றியது. ஒருநாள், இவள் மேடையில் இருந்து பார்வையாளர்களின் விழிகளை நோக்கியபோது ஏதோவொரு விழியில் சலிப்பு இருப்பதாக தோன்றியது. ஒரு கணம்தான்.  என்னதென்று வகைப்படுத்த இயலாத பேரச்சம் வந்து மனதை அறைந்தது.  ஒவ்வொரு முறை மேடையேறும்போதும் உவகையும் பூரிப்புமாகவே திகழ்வாள். ஆனால், அக்கணத்தில் உவகை பூரிப்பு மட்டுமல்ல உடலின் சக்தியனைத்தும் ஆவியானதோ என தோன்றுமளவிற்கு பெரும் களைப்பை அடைந்தாள். என்னவாயிற்று என எல்லோரும் அடைந்த திகைப்பை இவளும் அடைந்தாள். நடிக்க வந்ததே பிறர் தன்னைப் பார்த்து உவகையடையவேண்டும் என்பதற்காக. தன்னைக் கண்டு மெய்சிலிர்த்து பரவசமடைந்த விழிகளில் சலிப்பு தோன்றியதென்றால் தன் நடிப்பில் ஏதோ குறையிருப்பதாகத்தானே பொருள். அதை ஏன் யாருமே சுட்டிக்காட்டவில்லை. மற்றவர் சுட்டிக்காட்டும் முன் தன்னால் ஏன் உணரமுடியவில்லை என தொடர்ந்து எழுந்த கேள்விகள் மனதை சிந்திக்கவிடாமல் மொத்தமாக மூடின.

சில நாட்களுக்குப் பின்னர்  சாமன்னாதான் நிகழ்ந்ததை விளக்க முயன்றார்.  “இந்த கம்பெனி தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. உன்னைப் பார்த்தாலே பரவசம் கொண்ட தொடக்ககாலப் பார்வையாளர்களாக இருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் இப்போது இல்லை. அவர்கள் அப்படியே ஒரு மாயம்போல காணாமலாகிவிட்டார்கள். இப்போது வருபவர்கள் இளையவர்கள். இவர்களின் ரசனையும் எதிர்பார்ப்பும் மாறிவிட்டன. அதற்கேற்றாற்போல நம்மால் மாறமுடியவில்லை. உண்மையைச் சொல்வதென்றால் மாறமுடியாது. மாற முயற்சித்தால் அப்பட்டமாக செயற்கையாக வெளிறிப்போய் தெரியும். இதை உன்னிடம் சொல்வதற்கு பலமுறை முயற்சி செய்தேன். ஆனால் உன் மனம் சங்கடப்படும் என்பதையெண்ணி தயங்கிவிட்டேன். முன்பெல்லாம் உன்னைப் பார்ப்பதற்காக எத்தனைபேர் மாளிகைக்கு வருவார்கள். இப்போது உணவுண்ண மட்டும்தான் வருகிறார்கள். அதற்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பார்வையாளர்கள் குறைந்து வருமானமும் மிகவும் குறைந்துவிட்டது. செலவை சமாளிக்க அடுத்து செய்யவேண்டியதை யோசிக்கவேண்டும்…”

தாட்டியான உடலுடன் நிமிர்ந்தே நடக்கும் பாலாமணியின் உடலில் தளர்ச்சியும் லேசான குனிவும் தோன்றிவிட்டது. எந்தவொரு ஏற்றத்திற்கு பிறகும் இறக்கம் இருந்தே தீரும் என்பதை நவாப் இறந்தபோது நேரடியாகவே உணர்ந்திருந்தாள். ஆனாலும் தன் நாடக வாழ்வின் உச்சத்தை இவ்வளவு விரைவாக எட்டியிருக்க வேண்டாமோ எனத் தோன்றியது. வெற்றி மேல் வெற்றி என்பது மகிழ்வாகத்தான் உள்ளது. ஆனால், அப்போது தோன்றுவதில்லை உச்சத்தை எத்தனை விரைவாக எட்டுகிறோமோ அத்தனை விரைவாக இறக்கத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது. உவகைக்கு நடுவில் சிந்தனை செய்வதற்கோ  தத்துவத்தை நினைக்கவோ ஒரு சிறு இடைவெளியும் இருப்பதில்லை.  இனி யோசிப்பதால் எந்தப்பயனும் இல்லை. நிகழ்வதை எதிர்கொள்ள வேண்டியதுதான். அதற்காக உணவுக்கென நாடி வருபவர்களை புறங்கையால் விலக்கக்கூடாதென்று உறுதி கொண்டாள்.

“எத்தனை நாள் முடியுமோ அதுவரை உணவளிப்பதை நிறுத்தவேண்டாம். தோட்டங்களை விற்பதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்” என்று  கூறியபோது குரலில் தொனித்த உறுதி சாமன்னாவை மறுக்கவிடாமல் தடுத்தது. ஏற்றம் அவரவருக்கான ஊழின்படி மெதுவாகவோ விரைவாகவோ  இருக்கும். ஆனால் இறக்கம் எல்லோருக்குமே மிகவிரைவுதான். ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து உருவாக்கத்தானே நேரமெடுக்கும். அழிப்பதை கண்ணை மூடிக்கொண்டு செய்துவிடமுடியுமே.

பார்த்துக் கொண்டிருக்கும்போதே அத்தனை துரிதமாக செல்வம் முழுமையாக கரைந்தது. உடனிருந்தவர்களுக்கும் பணியாட்களுக்கும் கொடுத்தது போக எஞ்சிய நாடகப் பேரரசி பதக்கத்தை சாமன்னாவிடம் வற்புறுத்தி அளித்துவிட்டு மதுரைக்கு ரயிலேறினாள். மதுரையில் நாடகக் கம்பெனிகளில் நடிக்க வாய்ப்புக் கேட்கலாமென்றும் மீனாட்சியை தரிசிக்கலாமென்றும் சாமன்னாவிடம் கூறியது உண்மையில்லை. பிறந்து வளர்ந்து உச்சகட்ட புகழோடு வாழ்ந்த கும்பகோணத்தில், தாழ்ந்த நிலையில் வாழ்வதற்கு மனம் ஒப்பவில்லை. சற்று தூரமாகச் செல்லவேண்டும் என்பதற்காக மதுரையை தேர்ந்தெடுத்துவிட்டு பிறகுதான் அந்தக் காரணங்களை யோசித்துக் கூறினாள்.

ஆனால் மதுரை என முடிவு செய்தது ஒரு தெய்வக்கணம்தான் என்று இப்போது எழுந்த எண்ணத்தால்  மெல்லிய புன்னகை தோன்றியது. இங்கு வரவில்லையென்றால் கடைசி வரைக்கும் புத்திக்கு உறைக்காமலேயே போயிருக்கும் என்று எண்ணியபடியே கைகளை தரையில் பெருமுயற்சியுடன் உடலை உந்தி எழுந்தார். படலைத் திறந்துகொண்டு வெளியே வந்து ஆனைமலையை நிமிர்ந்து பார்த்தார். கையெடுத்து வணங்கிய பின் அருகில் நின்ற புளியமரத்தின் வளைந்து முறுக்கிச் சென்ற வேரில் அமர்ந்தார்.  மெல்லிய நிழல் பரவியிருந்தது. ஆங்காங்கே சில புளியம்பழங்கள் உதிர்ந்து கிடந்தன. சாலையில் நிற்கும் மரங்களிலிருந்து உதிர்ந்த பழங்களை முதலில் பார்ப்பவர் எடுத்துச் செல்வார்கள். இம்மரம் குடிசைக்கருகில் நின்றதால் யாரும் எடுக்காமல் கிடந்தன. இங்கு வந்தபிறகுதான் புளியமரம் தன்னை முழுமையாக மற்றவர்களுக்கு அர்பணிப்பதைக் கண்டாள். கும்பகோணத்திலும் புளியமரத்தைக் கண்டிருக்கிறாள். ஆனால் அங்கு இருந்த மனநிலையில் இம்மரத்தைக் கவனிப்பதற்கான சூழல் அமையவில்லை. புளியத்தின் இளம்பச்சையான மென்துவர்ப்பான துளிரிலைகளை, லேசான தித்திப்பு கொண்ட வெண்மலர்களை, புளிப்பின் குழவியான சிறுசிறு பிஞ்சுகளை, புளிப்புகூடிய சற்று பெரிதான காய்களை, பழுத்து உட்சுருங்கிய இனிப்பும் புளிப்பும் இயைந்த கனியை என ஒவ்வொரு படிநிலையிலும் சிறு பிள்ளைகளிருந்து பெரியவர்களும், ஆடு மாடுகளும் கிளிகளும் மைனாக்களும் ருசித்தனர். பிறருக்கு முழுமையாய் தன்னை அளிக்கும் இம்மரத்தை அறிவதற்கு இவ்வளவு தூரம் வரவேண்டியதாகிவிட்டது என்ற எண்ணம் தோன்றியபோதே இதற்கு மட்டுமா, தன்னைப் பற்றி உணரவும்தானே என்றும் தோன்றியது.

ரயிலில் வரும்போது வாழ்வின் நிலை பற்றி யோசனை ஓடியது. எப்படித் தொடங்கிய வாழ்க்கை… தடம் மாறி அத்தனை உயரம் சென்று இப்போது தரையில் வீழ்ந்து கிடக்கிறது. ஏனிப்படி நிகழ்ந்தது. தான் இயற்றிய பிழை என்ன. எவரிடமும் மரியாதையின்றி நடந்ததில்லை. அத்தனை பேருக்கும் இல்லையென்று கூறாமல் உணவளித்தேன். நாடகத்தின் மீதன்றி எதன் மீதும் பற்றுக் கொள்ளவில்லை. அப்படியிருக்க இத்தனை விரைவில்  வீழவேண்டிய அவசியம் என்ன… என்னைப்பற்றி அறியாத என் முகம் தெரிந்திராத ஊரைத் தேடி செல்லவேண்டிய தேவை ஏன் வந்தது. சிறு பெண்ணாய் இருந்தது… நாடகத்தில் நடிக்கத் தொடங்கியது… அரங்கம் கொள்ளாக் கூட்டம் பரவசத்துடன் பார்த்திருக்க நடித்த தருணம், ஒரு  சிறிய துணி மூட்டையுடன் மாளிகையை விட்டு வெளியேறியது என காட்சிகள் மாறிமாறித் தோன்றி பதிலறியாக் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தன. தொடர்ந்து கேள்விகளே எழுந்து கொண்டிருந்தால் பதிலை எப்படி அறிவது. கேள்விகளின் வேகம் குறையும் வரை காத்திருக்க முடிவு செய்தாள்.

ரயில் மதுரையை வந்தடைந்தபோது மாலையாகிவிட்டது. மனித நடமாட்டம் குறைவான பகுதிக்கு செல்லலாமென இவள் கூறவும் சாமன்னாதான் அங்கிருந்தவர்களிடம் விசாரித்து ஒரு மாட்டு வண்டிக்காரரை அழைத்து வந்தார். அரைமணிநேர குலுங்கிய பயணத்திற்குப் பின் இவ்விடத்திற்கு வந்து வண்டி நின்றது. குடிசையைப் பார்த்ததும் சாமன்னா திகைத்துவிட்டார். சிறியதாக ஒரு வீடு என்று அங்கே விசாரித்திருந்தார். ஆனால் குடிசையை எதிர்பார்க்கவில்லை. எல்லாவித வசதிகளுடன் பெரிய மாளிகையில் வசித்த பாலாமணி இதில் வசிக்கப்போகிறார் என்ற யதார்த்தம் பெரும் பாரமென மனதில் அறைந்து அவருக்கு வேதனையை ஏற்படுத்தியது. இருளடைந்துவிட்டதால்  குடிசையின் எதிரே உயர்ந்து நின்ற மலையை பாலாமணி நிமிர்ந்து பார்க்கவில்லை. ஆனால், கருமையான பெரும் இருப்பாக ஒரு ஆதரவான பாதுகாப்புணர்வை உணர்ந்தாள். எனவே வேறு வீடு பார்க்கலாம் என்ற சாமன்னாவின் வேண்டுதலை நிராகரித்தாள். வண்டிக்காரரிடம்தான் சாவி இருந்தது. குடிசையை இவர் பொறுப்பில் விட்டிருந்தார்கள் போல. உள்ளே சென்று சிறு மண்ணெண்ணை விளக்கைப் பற்றவைத்து சுவரில் அடித்திருந்த ஆணியில் பொருத்தினார். இவர்கள் உள்ளே சென்றபோது சிறிய வெளிச்சம் பரவியிருந்தது. அவருக்கு முன்தொகை கொடுத்து அனுப்பிவிட்டு கொண்டு வந்திருந்த புளிசாதத்தை இருவரும் உண்டார்கள். பாலாமணி நன்றாக உண்டாள். சாமன்னாவால் உண்ண முடியவில்லை. பாதியை, பாலாமணி அறியாதவாறு கீழே போடும்படி ஆகிவிட்டது.

உறக்கம் வராமல் படுத்திருந்த சாமன்னா காலையிலேயே சமைத்துப்போட ஆள் விசாரித்து திலகாவிடம் பேசி சம்மதம் பெற்ற பிறகு அருகிலிருந்த பலசரக்கு கடையில் கையிலிருந்த பணத்தைக் கொடுத்து திலகா கேட்கும் பொருள்களை கொடுக்குமாறும் மாதமொருமுறை கணக்கு முடிப்பதாகவும் பேசிவிட்டு வந்தார்.

விடிந்த பின்னும் பாலாமணி உறங்குவதை சாமன்னா முதன்முதலாகக் கண்டார். நாடகங்கள் போடும்போது விடிகாலையிலேயே எழுந்து ஒத்திகைகளும் புதுப்புது யோசணைகளுமாய் கழியும். நாடகம் போடுவது நின்ற பிறகு உறக்கம் வராமல் மாடத்தில் நின்றபடி விட்டேத்தியாக வெளியை வெறித்து நிற்பார்.  இங்கே குடிசையில் அயர்ந்து உறங்குவதைக் கண்டபோது என்னவென்று பகுத்திட முடியாத உணர்வில் விழிகளில் நீர் கசிந்தது.

சற்று வெயிலேறிய பிறகே எழுந்த பாலாமணி கண்களை லேசாக தேய்த்துக் கொண்டு படலை திறந்து வெளியே வந்தார். வெயிலை எதிர் கொள்ளமுடியாமல் விழிகளை சுருக்கியபடி நிமிர்ந்து பார்த்தார். அவர் உடல் விதிர்த்து நடுங்கியது.  எதிரே அப்போதுதான் தோலுரிக்கப்பட்ட மாபெரும் சதைப்பிண்டம் ஆங்காங்கே குருதி ஊறியும் சில இடங்களில் வெல்லெலும்புகள் தெரியுமாறும் முடிவின்றி பிரமாண்டமாய் கிடந்தது. அதைக் கண்டவுடனேயே அய்யோ என்ற கேவல் கூர்மையாய் எழ அப்படியே நிலைகுலைந்து வாசலிலேயே அமர்ந்தார். புளிய மரத்தினடியில் அமர்ந்திருந்த சாமன்னா ஓடிவந்தார். பாலாமணியம்மாளின் பார்வை நிலை குத்தி நின்றதைக் கண்டு திரும்பி நோக்கினார். “இத ஆனைமலைன்னு சொல்றாங்கம்மா…” என்று கூறியபடி அவரின் பதறலுக்கான காரணம் புரியாமல் நின்றார்.

“யானையா…” என்றபோது மேலும் பதறினார். மீண்டும் மலையை நோக்கினார். முகத்தில் இருந்த அதிர்ச்சியும் உடலின் நடுக்கமும் மாறியது. விழிகள் விரிய தலைதூக்கி நோக்கியபோது முகத்தில் பரவசம் மிளிர்ந்து உடலெங்கும் சிலிர்ப்பு பரவியது. இரு கைகளையும் உயர்த்தி இணைத்து “ஈசனே..” எனக் கூவி வணங்கினார். அப்போது  உடலே லேசாகி பறந்துவிடும்போலத் தெரிந்தது.

நடப்பது எதுவுமே புரியாமல் நின்றார் சாமன்னா. சிறிது நேரம் கழித்து இயல்பு நிலைக்குத் திரும்பியபோது பாலாமணி அம்மாளின் முகம் பெரும் பூரிப்புடன் இருந்தது. “என்னம்மா ஆச்சு..” என இவர் பதறியபடி கேட்டவுடன் முகத்திலிருந்த பூரிப்பு மறைந்து கழிவிரக்கம் தோன்றியது. உதடுகள் லேசாக இழுபட அழுவதற்கான முதல்நிலைபோல தெரிந்தது. அவரின் மாறிக்கொண்டே இருக்கும் உணர்வுநிலைகளைக் கண்டபோது சாமன்னாவுக்கு அச்சம் தோன்றியது. அவர் சொன்னார் என்பதற்காக இங்கே அழைத்து வந்திருக்கக்கூடாது. உடனே வேறு எங்காவது அழைத்துச் சென்று நல்ல வீடாகப் பார்த்து தங்க வைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் “அம்மா, வேறெங்காவது போயிடலாம்மா. நாந்தான் புத்தியில்லாம வண்டிக்காரன் சொன்னான்னு விசாரிக்காமக் கொள்ளாம இங்க கூட்டியாந்துட்டேன். கொஞ்சநேரம் இருங்கம்மா வண்டி ஏதாச்சும் கெடைக்குதான்னு பாக்குறேன்..” என்று உடல் பதறக் கூறினார்.

“பதறாதீங்கண்ணே.. எனக்கு ஒன்னுமில்ல. வரவேண்டிய எடத்துக்குத்தான் வந்திருக்கேன். நாம நெனச்சதில்லை. அவனோட ஆடல்…” என்று கூறி மேலே சுட்டினார். சாமன்னா புரியாமல் நோக்கினார்.

“வழுவூருக்கு ஒரு தடவ போனமே. அந்தக் கோயில்ல இருந்த செப்பு செலையப் பாத்து சிவன் என்ன செய்யிறாருன்னு கேட்டனே ஞாபகம் இருக்கா…”

பெருங்குழப்பத்திலிருந்த சாமன்னாவால் அவர் கூறியதை சட்டென நினைவுபடுத்திக் கொள்ள  இயலவில்லை. 

“ஞாபகம் வரலையா… அதான் யானையோட தலைமேல காலை வச்சு ஆடிட்டு இருப்பாரே. நீங்க கூட அதுக்கு ஒரு பேரு சொன்னீங்களே…”

சாமன்னாவுக்கு நினைவு வந்துவிட்டது. “ஆங்.. அது கஜசம்ஹார மூர்த்தி. அதுக்கென்னமா”

“இந்த மலையப் பாத்தா யானையோட தோலில்லாத ஒடம்பு மாதிரி தெரியுதுண்ணா… நீங்க அப்ப சொன்னது வெளிய வர்றப்பவே மறந்திடுச்சு. ஆனா இந்த மலையோட பேர நீங்க சொன்னவொடனே இப்பச் சொன்னது மாதிரி பளிச்சுன்னு ஞாபகம் வந்திடுச்சு. மனுசங்களோட ஆணவத்த அழிச்சிட்டு அதுமேல நின்னு ஆடுறார்னு நீங்க சொன்னீங்க. அதோட அர்த்தம் புரிய இத்தன வருசம் தேவைப்பட்டிருக்கு…” என்று கூறி தனக்குள் ஆழ்ந்தார்.

“நாடகத்த அர்ப்பணிச்சா ஈசன் ஏத்துக்கமாட்டாரான்னு கேட்டுத்தானே ஆரம்பிச்ச. அதுக்கப்புறம் எப்பவுமே ஈசன நெனச்சதில்லையே. நெதம் காலையில பேருக்கு கையெடுத்து கும்பிடறதோட சரி… நாடகம் நாடகம்னு திரிஞ்சியே ஈசனோட ஞாபகம் வந்துச்சா. ஏனிப்படி சரிவு இவ்ளோ வேகமா வந்துச்சுன்னு அலமந்து போனியே… அதுக்கு காரணம் தெரிய இங்க வரவேண்டியிருக்கு. ஒவ்வொரு நாடகத்தையும் பாக்குறவன் உவகையோட பாக்கனுங்கிறதுக்காக நடிச்சியே இதையே ஈசனுக்கு அர்பணிச்சிருந்தா அந்த சலிப்ப பாத்திருக்க வேண்டியிருக்காதே. தன் கலையை ஈசனுக்கு அர்பணிச்சவங்க ஆயிரம் வருசத்துக்கப்புறமும் அந்தக் கலையாகவே மாறி வாழ்ந்திட்டிருக்காங்க. காரைக்காலம்மை மாதிரி ஈசனோட கலந்திருக்க கெடச்ச வாய்ப்ப தவறவிட்டுட்ட… இனி யோசிச்சு என்ன பண்ண. இப்பவாச்சும் இங்க கூட்டியாந்தாரே. இனிமே எந்தக் கேள்வியும் மனசுக்குள்ள எழாது… ஈசன நெனச்சுக்கிட்டே கெடக்க வேண்டியதுதான்..” பாலாமணி அம்மாள் தனக்குத்தானே பேசிக் கொண்டதை சாமன்னாவும் கேட்டார். ஏனென்றறியாமல் விழிகளில் நீர் சுரந்தது.

நாடகத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளைக் கேட்டு எங்கும் செல்லவில்லை. திலகா தினமும் வந்து சமைத்து கொடுத்தாள். சில மாதங்களுக்குப் பிறகு இரண்டு நேர உணவு மட்டும் போதும் என்று கூறினார். ஆறு மாதமாக ஒருவேளை கஞ்சி மட்டும்போதும் என்று சுருக்கிக் கொண்டார்.

தினமும் காலையில் எழுந்து அருகிலிருந்த அல்லிக்குளத்தில் குளித்துவிட்டு வருவார். அரைமணி நேரம் மலையையே பார்ப்பார். யானையின் தோலற்ற உடம்பு மட்டும் முதலில் தெரியும். சற்று மனதை ஒருமுகப்படுத்தியதும் யானையின் தலைமேல் ஒரு காலை வைத்து மறுகாலை தூக்கி அதன் உள்ளங்கால் தெரியும் வண்ணம் நடனமாடுவதும் யானையின் தோலை இரு கரங்கள் பற்றியிருக்க யானையின் கால்கள் நான்கு பக்கம் தொங்க வால் மேல் நோக்கி சுருண்டிருக்கும். நானொரு நடிகை, எத்தனை ஆயிரம் பேர் என் நடிப்புக்கென என்னை நோக்கி ஓடி வருகிறார்கள். நான் இடும் உணவை உட்கொள்ளவென எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என ஏதோவொரு கணத்தில் தோன்றிய செருக்கே அந்த பொற்பாதங்களில் அழுந்திக் கிடக்கிறது. அதைக்காணும் தோறும் உடலே உருகிவிடுகிறது. மனம் பொங்கி ஆவியாவதாகத் தோன்றுகிறது. அக்காட்சி காற்றில் கரைந்து போகும்வரை ஈசனின் அருள் சுரக்கும் முகத்தையே பார்த்தபடி நின்று கொண்டிருப்பாள். சில நிமிடங்களே நீடிக்கும் அக்காட்சியைக் காண்பதற்காகவே வாழ்ந்து கொண்டிருந்தார் பாலாமணி அம்மாள். மிச்ச நேரமெல்லாம் அக்காட்சியை மனதில் ஓட்டிப் பார்ப்பதும், தினம் ஒரு நாடகத்தை மனதிற்குள்ளேயே இயற்றி நடித்து ஈசனுக்கு அர்ப்பணித்துமாய் கடந்தது.

மாதமொருமுறை  சாமன்னா வரும்போது இவர் காணும் காட்சியை கண்டுவிட முயற்சி செய்தார். அவருக்கு கிட்டவேயில்லை. இதில் சாமன்னாவைவிட பாலாமணி அம்மாளுக்குதான் பெரும் வருத்தம். சாமன்னா கடந்தமுறை வந்தபோது சில பெரியமனிதர்கள் இவரைப் பற்றி விசாரித்ததாகவும் உதவி தேவையென்றால் அளிப்பதாகக் கூறியதாகவும் தெரிவித்தார். எல்லாம் ஈசனருள்தான் என்று எண்ணிக் கொண்டவர் இன்று எழுந்ததிலிருந்தே மனதிற்குள் ஓர் இனிமை ஊறிக் கொண்டிருப்பதை வியப்புடன் உணர்ந்தார். தவம் இவ்வளவு விரைவாக முடிவதில் உவகை பொங்கியது. இன்று சாமன்னா வரும் தினம்தான் என்பதும் நினைவுக்கு வந்தது. தான் நடித்த அத்தனை நாடகத்தையும் ஈசனுக்கு அர்பணித்துவிட்டதை  எண்ணியபோது ஒரு நிறைவு தோன்றியது. மனதில் எந்தக் கேள்வியும் இல்லை. எந்தக் குறையும் இல்லை என உணர்ந்தபோது மனமும் உடலும் லேசாவதாகத் தோன்றியது. எழுந்து மலையை நோக்கி வணங்கிவிட்டு குடிசைக்குள் சென்று சுவரில் சாய்ந்தமர்ந்து விழிகளை மூடினார்.

கா. சிவா

கா.சிவா ‘விரிசல்’ சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியர். பல்வேறு இதழ்களில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.

1 Comment

  1. 🌿🐦🐿️🐤🌿 கதைகள் மூன்றுமே regarding the D.Q.short film level.வாசிப்பு பரவலாக குறைந்து வருகிறது.” சுபமஸ்து ” # smart finishing✒️அனாவசிய தளர்வு ,நீட்சிகள் இல்லாமல் கலை/ கலைஞர்/ ரசனை/ மூன்றிற்கும் ஆன பேருண்மையை ” எக்கால சமூகமும் உணரும் வகையில் பட்டுக்கத்தரித்தாற்போல ” எழுதினது பாராட்டு க்குரியதே! அவரவர் 😴கற்பனை✍️களைக்🤏கண்களில் சுமக்கவோ, எண்ணக்குடுவையில் ஏந்தவோ! பெரிதான நோக்கமும் இல்லை.ஆர்வமுமில்லை வாசிப்பவர் வட்டத்திலே யே. வாசகர்களும்.. வாசிப்பு அருகி.. குறும்படக்காட்சி களாக , காண்பதேபோதுமென🕰️ஆகிவருகிறதும் உண்மையே ! ஃநற்பவி ⚛️

உரையாடலுக்கு

Your email address will not be published.