/

பொதுவோட்டத்துக்கு அப்பால் உள்ள சிந்தனைகளை முன்வைத்தல்…

அகழ் ஜுன் இதழில் மீண்டும் சந்திக்கிறோம். வருடத்தின் ஆறாவது இதழை நிறைவுடன் கொண்டு வருகிறோம். மாத இதழாக அகழ் இதழ் வெளிவரவேண்டும் என்று முடிவெடுத்த பின்னர் ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கிறோம். ஓர் இதழ் வேலைகளை முடிந்தவுடன் அடுத்த இதழ் வேலைகளை உடனடியாக ஆரம்பிக்கிறோம், இது மிகுந்த சவாலாக இருந்தாலும் அப்படி இயங்குவது மகிழ்ச்சியைத் தருகிறது. சதா இலக்கியத்தின் பிடியில் இருப்பதே பேறுதானே. இவ்விதழில் சுகுமாரனின் விரிவான நேர்காணல் வெளியாகிறது. இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஓய்விலிருந்த சுகுமாரனை நேர்காணலுக்காய் அணுகுவது சற்றுத் தயக்கமாகவே இருந்தது, தொந்தரவாக இருக்கக்கூடாது என்பது எம் எண்ணம். ஆனால், அவரோ உற்சாகமாக நேர்காணலுக்குச் சம்மதம் தெரிவித்தார். பல கட்டமாக உரையாடி விரிவான நேர்காணலாக விஷால் ராஜா உருவாக்கி இருக்கிறார். நவீன தமிழ் இலக்கியம் பற்றிய ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை இந்நேர்காணல் வழியாகவே வாசகர்கள் உருவாக்கிக் கொள்ள முடியும்.
0
டானியல் ஜெயந்தன் எழுதிய சிறுகதைத் தொகுப்பான ‘வயல்மாதா’ நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு புத்தகத்தை வாங்கியவர்கள் , பின்னர் புத்தகத்தை படித்துவிட்டு எரித்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளார்கள். புத்தகத்திலுள்ள தலைப்புக் கதையான வயல் மாதா எனும் கதை எழுத்தாளரின் சொந்த ஊரில் இடம்பெற்ற நிஜமான நிகழ்வு எனவும், அதனை எழுதிய விதம் மற்றும் நிஜமான பெயர்களைப் பயன்படுத்தி எழுத்தாளர் இக்கதையை எழுதியுள்ளதால், இது தங்களையும் தங்கள் பின்பற்றும் மதத்தையும் புண்படுத்துவதாக நூலை எரியூட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள். எனினும் எழுத்தாளர் இதனை மறுத்துள்ளார். வயல்மாதா எனும் இக்கதை புனைவு தளத்தில் அக்கதையில் வரும் பெண்ணின் பக்கம் நிற்கிறது. மத நிறுவனத்திற்குள் இருந்து வெளியேற முயலும் பெண்ணையும் அவர் சார்ந்த ஊர் மக்களின் எததிர்வினையையும் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இக்கதை ஏன் ஊர் மக்களின் வெறுப்புக்கு உள்ளாகிறது என்பதில் இரண்டு காரணங்கள் இருக்கவேண்டும். நிஜமான நிகழ்வுகளைப் புனைவில் கையாளும்போது, எழுத்தாளன் கதாப்பாத்திரத்தை மாண்புடன் அணுக வேண்டும். இது நிகழாதபோது அது தோல்வியையே சந்திக்கும். இரண்டு, இலக்கியத்தை வெகுஜனப் படுத்தும் போது இருக்கக்கூடிய சிக்கல்கள். இப்புத்தக எரிப்பு மூலம் விடுவிக்கப்படும் எழுத்தாளர் மீதான அச்சுறுத்தல் ஏற்கத் தகுந்ததல்ல. எதிர்வினைகள் எழுத்தின் வழியே நிகழவேண்டும்.
0
இம்மாத “அர்த்தமண்டபம்” பகுதியில் கவிஞர் ச.துரை சந்திரா, நரன், ரமேஷ் பிரேதன் ஆகியோரது கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வாசித்துள்ளார். வாசகர்கள் இங்கே செவிமடுக்க முடியும். ச.துரைக்கு மிக்க நன்றி.
0
பௌத்த அறிஞர் ஓ.ரா.ந.கிருஷ்ணன் தொகுத்து உருவாக்கிய “பௌத்த பைபிள்” நூலிலிருந்து ஒரு பகுதியை இந்த இதழில் பிரசுரித்துள்ளோம். ஒரு மாற்றிதழாக பொதுவோட்டத்துக்கு அப்பால் உள்ள சிந்தனைகளை முன்வைப்பதும் அவை சார்ந்த உரையாடலைக் கோருவதும் எம் கடமை என்றே எண்ணுகிறோம். அதனாலேயே ஓ.ரா.ந.கிருஷ்ணனின் எழுத்தைப் பிரசுரிக்க விருப்பம் கொண்டோம். தன் நூலிலிருந்து இப்பகுதியைப் பிரசுரிக்க அனுமதித்த ஓ.ரா.ந.கிருஷ்ணன் அவர்களுக்கும், அவரோடு உரையாடி அனுமதி பெற்றுத் தந்த “குருகு” இதழாசிரியர் அணங்கனுக்கும் நன்றி.
0
கோவை புத்தகக் கண்காட்சி ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. அதையொட்டி வெளியாகவுள்ள நூல்களுக்கு இவ்விதழில் கவனம் கொடுத்துள்ளோம். இதழில் பங்களித்த எழுத்தாளர்கள் சுகுமாரன் ,ஓ.ரா.ந.கிருஷ்ணன், ஷங்கர்ராமசுப்ரமணியன், சாம்ராஜ் , லஷ்மி மணிவண்ணன், அஜிதன், கார்த்திக் பாலசுப்பிரமணியன் , தீபா, கு.அ.தமிழ்மொழி ,எல்.ஜே. வயலட், விஷால் ராஜா ஆகியோருக்கு நன்றிகள்.

1 Comment

  1. நல்ல தரமான படைப்புகளாக வந்து கொண்டிருக்கும் ‘அகழ்’ க்கு வாழ்த்துக்கள் .

உரையாடலுக்கு

Your email address will not be published.