/

ஏடா லிமோன் கவிதைகள்

உயிர்த்தெழுதலின் பிரதேசத்தில்

நேற்றிரவு நாம் கருணையினால்
சாலையின் நடுவே ஒரு கீரியை கொலை செய்தோம்
அது இறந்துக் கொண்டிருந்தது. முகம் ரத்தக்காடாக இருக்க,
பின்னங்கால்கள் நொறுங்கியிருந்தன.
காரைவிட்டு வெளியே இறங்கியதுதான் நான் செய்த தவறு
(நீ வேண்டாம் என்றாய்). ஆனால்
எனக்கு உறுதியாக தெரிய வேண்டியிருந்தது,
அதை காப்பாற்றவே முடியாதா என்று. (வேறு யாரோ அதை அடித்துவிட்டிருந்தார்கள்)
அது உருவாக்கிய சத்தம் இருக்கிறதே. அந்த சத்தம்
காற்றேயில்லாத காருக்குள் என்னை சுருண்டுக் கொள்ள வைத்தது.
செய்து முடி, சீக்கிரம் செய்து முடி, அதை ஓங்கி அறைவது வரை
நான் தலையை தாழ்த்தி அமர்ந்திருந்தேன். நீ அதை அமைதியாக கொன்றாய்.
அரிவாள் வடிவ நிலவின் நீழே காரை ஓட்டி நாம் வீடு திரும்பினோம்
கொடியில் துணிகள் எல்லாம் காய்ந்து குளிர்ந்திருந்தன
ஆனால் அது நேற்றிரவு நடந்தது. இந்த காலையில்
சமையலறையில் சூரியன் உயிர்ப்போடு நுழைகிறது
கேஸ் நிலையத்தில் கிடைக்கும் காஃபியை வாங்கிவர நீ சென்றிருக்கிறாய்
இந்த பிரதேசம் முழுக்கவே அவ்வளவு உயிர்த்தன்மை இருக்கிறது

நான் ஆச்சர்யப்படுகிறோம்

இப்போது, மூளைகளின் மத்தியில்
நாம் நிலவை ஏற்றியிருக்கிறோம்
தெருவோர அனாதை பூனைகளைப் போல நாம் காட்சியளிக்கிறோம்
பிரகாசமாய் வெளிச்சம் மின்னும் வெள்ளை கண்களுடனும்
ஆனால் எப்போது அல்லது எங்கே ஓட வேண்டும் என்று
உண்மையான யோசனைகள் இல்லாமலும்

நிலப்பரப்பின் பச்சைமுனையில் அலைந்தபடி
நாம் சொல்கிறோம், “மைந்தனே, என்றாவது ஒரு நாள்,
இவை எல்லாம் உன்னுடையதாக இல்லாமல் போகும்”

அற்புதங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன
வீடற்றவர்கள் என்பதைவிட நாம் வீடு தேவைப்படாதவர்கள்
சில்லறைக் கூட இல்லாதவர்கள்
ஆனால் கூதிர் பருவத்தை தடுக்கும்
காதலுக்கும் இலைகளுக்கும் நிறைய அதிர்ஷ்டம் கொண்டவர்கள்
இதோ இங்கே இருக்கிறது:
நம்முள்ளிருக்கும் உலகத்தோடு வாழ்வதற்கான ஒரு புதிய வழி
எனவே நாம் அதை தொலைத்திட முடியாது
நாமும் தொலைந்திட முடியாது
நீயும் நானும் என்பது
நாமும் அவர்களும்
அதுவும் வானமும் என்றாகிறது.
இதை ஏற்கனவே அறிந்திருக்கவில்லை என்பதை
நம்ப சிரமமாக இருக்கிறது.
இறுதியில்,வெளிச்சம் வரும்போது
கூடுதலாய் ஒளிவிடுவதற்காகவே
நாம் காலியாக்கப்பட்டோம் என்பதையும் உறிந்தெடுக்கப்பட்டோம் என்பதையும்
நம்ப சிரமமாக இருக்கிறது.

புல்வெட்டுதல்

தெருவின் எதிர்புறத்தில் வசிக்கும் மனிதர் 40 ஏக்கர் நிலத்தை சிறிய புல்வெட்டும் இயந்திரத்தால் சமநிலைப்படுத்துகிறார். அந்த மிகச் சிறிய இயந்திரத்தில் புல் வெட்டி முடிக்க அவருக்கு பல நாட்கள் தேவைப்படும். எனவே அவருக்கு அச்செயல் பிடித்திருக்க வேண்டும் என நானே கற்பனை செய்து கொள்கிறேன். நிச்சயம் அவருக்கு அது பிடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு மரத்தைச் சுற்றியும் அவர் அவ்வளவு கவனமாக இயந்திரத்தை ஓட்டுகிறார். அங்கு 10,000 மரங்கள் உள்ளன. அது மரத் தோப்பு என்பதால் அங்கே பல மரங்கள் இருக்கின்றன. இந்த பக்கமாக ஒரு வட்டம். அந்த பக்கமாக ஒரு வட்டம். நானும் என்னுடைய நாயும் அதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். வெளிச்சம் வானில் நழுவிக் கொண்டிருக்கிறது. நான் நிற்பதற்காகவே, யார் கண்ணுக்கும் தெரியாத, எனக்கு பிடித்தமான ஓர் இடம்- மேட்டுக்கு முன்னால்- உள்ளது. அங்கே நின்றிருக்கிறேன். மேலும் என்னிடம் ஓர் நாய் இருக்கிறது. மேலும் ஒரு மனிதர் வட்டங்களில் சுற்றி சுற்றி புல் வெட்டிக் கொண்டிருக்கிறார். பல்வேறு வட்டங்கள். பறவைகளோ அல்லது வேறெதுவோ அங்கே இல்லை. அல்லது என் பார்வைக்கு தெரியவில்லை. ஒளிந்திருப்பது பற்றியும், நிழலாடும் ஒன்றுமில்லாததில் காணாமல் போவது பற்றியும், இரவில் அசைவற்று நிற்பது பற்றியும் நான் கற்பனை செய்கிறேன். துயரம் போல ஒலித்தாலும் அது துயரம் அல்ல. மனிதர்கள் குறித்தும் மரங்கள் குறித்தும் யோசிக்கிறேன். இன்னும் அதிகம் அமைதியாக இருக்க விரும்புவது குறித்தும் மற்ற எதுவாக இருப்பதைவிடவும் அதிகம் மரமாக இருக்க விரும்புவது குறித்தும் யோசிக்கிறேன். இன்னும் குறைந்த ஒழுங்கின்மையோடும் குறைந்த ஓசையோடும் குறைந்த சுயபெருமையோடும் இருக்க விரும்புவது குறித்தும் யோசிக்கிறேன். வெள்ளை பைன் மரமாக இன்னும் அதிகம் குளிர்ந்திருக்க விரும்புவது குறித்தும், எப்போதும் எதையேனும் எதிர்பார்க்காமல் இருப்பது எவ்வளவு கடினமானது என்றும் யோசிக்கிறேன். கூடவே, இந்த காட்டுப் புற்களை அப்படியே வளரவிடுவது எவ்வளவு கடினமானது என்றும்.

அற்புத மீன்

கடவுள் மீது நம்பிக்கை இருப்பது போல பாவனை செய்யும் பழக்கம் எனக்கிருந்தது. முக்கியமாக இருட்டில் யாரோ ஒருவரிடம் பேசுவது எனக்கு மிக பிடித்திருந்தது. யோசித்து பாருங்கள் ,பிரபஞ்சத்தை தாண்டி செல்வதற்கு ஒரு குரல் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும். அங்கு செல்வதற்கு அந்த குரல் எவ்வளவு வலிமையானதாக இருக்க வேண்டும். ஒருமுறை நியு மெக்ஸிகோ, சியாமோவில் ஒரு குட்டி தேவாலயத்தில் மண்ணில் முழந்தாளிட்டேன்- ஒருவர் அங்கு அப்படிதான் நடந்துகொள்ள வேண்டும் என எண்ணியதால். இது நடந்தது, என்னுள்ளிருந்து மேலெழும் விசையை சேணமிட கற்றுக் கொண்டதற்கு முன்னால். என் உடலின் ரத்தத்தில் தலையை அடை கொடுத்தற்கு முன்னால். தேவாலயத்தில் ஒரு சின்னம் இருந்தது. “இந்த உலகம் ஆசீர்வதிக்கப்பட்டது. அதில் விளையாடாதீர்கள்” என்று அது சொன்னது. ஆனால் நான் சத்தியமாக சொல்கிறேன். ஆசீர்வதிக்கப்பட்ட இந்த உலகத்தில் மரணிக்கும்வரை நான் விளையாடுவேன். ஒருமுறை நியுயார்க் நகரத்தில், என் அதிர்ஷ்டத்தை தெரிந்து கொள்வதாக ஓர் அற்புத மீனை நம்பிச் சென்றேன். இது நடந்தது, என் உடலின் நீரே அதை இயக்கியது என்பது தெரிவதற்கு முன்னால். என்னுள்ளிருக்கும் பிரம்மாண்டமான கடலே அந்த மீனை நீந்தச் செய்தது என்பது தெரிவதற்கு முன்னால்.

இங்கே தெற்கு பகுதியில்

நாய் ஓர் அழகிய செயலில் ஈடுபடுகிறது.
அது காத்திருக்கிறது.
தன் அசைவை நிறுத்தி அது தீர்மாணிக்கிறது,
காத்திருப்பது ஓர் அவசியமான செயல்.
நான் நினைக்கிறேன்
முடிவற்ற காலம் என்பது
மேஜைக்குள் இருக்கும் ஒன்றாகவோ
பட்டன் துளைக்குள் இருக்கும் ஒன்றாகவோ
இருக்க வேண்டும்
கூக்குரலிடுவது எல்லாம்
முன்னர் தெருவில் சத்தமாக நிகழ்ந்தது
இப்போது அது உஷ் என்பது போல நிகழ்கிறது
நான் முன்னர் கேட்டிராத
ஓரு பேச்சுவழக்கு இங்கே தெற்கு பகுதியில் இருக்கிறது
“உனக்காக நான் அதை வெறுக்கிறேன்”
அதற்கு அர்த்தம்,
உங்கள் வீட்டு தரைவிரிப்பில் நாய் சிறுநீர் கழித்தால்
“பாவம் நீ. உனக்காக நான் அதை வெறுக்கிறேன்” என்று சொல்வது
அதற்கு அர்த்தம்,
சுற்றி எல்லா பக்கமும் அன்பு இருக்கும்போதும்
நீங்கள் மட்டும் தனிமையில் இருந்தால்
“நாங்கள் எங்கள் தனிமையான தொப்பிகளை தாழ்த்தி வணக்கம் வைக்கிறோம்
ஒரு தனிமையற்ற சத்தமாய்” என்பது.

கவிஞர் குறிப்பு: மெக்ஸிக வம்சாவளியான ஏடா லிமோன் ஓர் அமெரிக்க கவிஞர். 2022ல் அந்த ஆண்டுக்கான அமெரிக்க நாட்டின் அரசு கவியாக பரிசு வென்றவர். ஆறு கவிதை நூல்கள் இயற்றியிருக்கிறார். “பிரகாசமான, உயிரற்ற பொருட்கள்” (Bright Dead Things) கவிதைத் தொகுப்பிலிருந்து இக்கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தீபா

பெங்களூரில் வசித்துவரும் தீபா, மொழியாக்கங்களில் ஈடுபட்டு வருகிறார்.

1 Comment

  1. சிறப்பான கவிதை , மொழிபெயர்ப்பு வாழ்த்துகள்,,,,,.

உரையாடலுக்கு

Your email address will not be published.