000
பதிமூன்று ஆரஞ்சுகள்
ஒழுங்குடன் வரிசையாய் நடந்து
சென்று கொண்டிருந்தன
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில்
நடுவில்
ஓர் ஆப்பிள் நுழைந்தது
ஆரஞ்சுகள் ஒன்றும்
சொல்லவில்லை
ஒரு குழந்தை
உள்ளே வரும்போதுதான்
அவை ஓடத் தொடங்கின
000
எதுவும் சிந்திக்க இயலாமல்
கற்பனைகள் தீர்ந்துபோய்
வாழ்வு வெறுப்படைந்த
நாள் ஒன்றில்தான்
நியூட்டனின் முன்
அந்த ஆப்பிள்
விழுந்திருக்க வேண்டும்
000
வரிக்குதிரைகளின்
வரிகளை எண்ணுவது
அவ்வளவு எளிதன்று
அவை ஓடிக்கொண்டிருக்கும்
நின்றுகொண்டிருக்கும்
படுத்துக்கொண்டிருக்கும்
சில நேரம்
சும்மா கூட இருக்கும்
ஆனால்
ஒருபோதும்
எண்ண மட்டும் விடாது
000
கதவு தட்டப்பட்டது
நீயாகத் தான் இருக்கவேண்டுமென விரும்பினேன்
நான் நினைத்ததற்காவது நீ வந்து இருக்கலாம்
பரவாயில்லை
நான் எல்லாவற்றையும் ஏற்கத்தொடங்கிவிட்டேன்
சகிக்கத்தொடங்கி விட்டேன்
இனி நீ கதவைத் தட்டாமல்தான்
வருவாய் எனக் காத்திருக்கத் தொடங்கிவிட்டேன்
000
எனக்கு முழுநேரமும் அது
தேவையாய் இருந்தது
அதனாலே நிலவு வீசிய வெளிச்சத் துண்டை வெட்டியெடுத்து
அதில் உன் முகம் வரைந்து கூடவே
எடுத்துச் சென்றேன்
பகலில் நிலவு அழுதது
இரவில் நான் அழுதேன்
000
துயரம் காகம் எனப் பறந்து
என் கைகளில் அமர்ந்தது
நான் காகத்திடம் சொன்னேன்
“ஒவ்வொரு பிரிவிலும் நான் சாகிறேன்
அதிலொரு பிடிக்காத இதமுண்டு”
கு.அ.தமிழ்மொழி
கு.அ.தமிழ்மொழி கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். புதுச்சேரியைச் சேர்ந்த இவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.
கவிதைகள் மிக அருமை மா.வாழ்த்துகள்
நன்றி அக்கா