/

மார்கரெட் ஆட்வுட் கவிதைகள்

தமிழில் எல்.ஜே.வயலட்

நீ என்னில் பொருந்துகிறாய்

கண்ணில் முள்ளாக

ஒரு தூண்டில் முள்

ஒரு மூடாத கண்

000

பின், நீ சாதாரணம்தான்:

2 கைகள் 2 கால்கள்

1 தலை, போதுமானளவு நல்ல ஒரு

உடல், விரல்கள், சில

பைத்தியக்காரத்தனங்கள், கொஞ்சம் நேர்மை

நிறைய அல்ல, நிறைய

ஒத்திவைத்தல்களும் வருத்தங்களும் ஆனால்

நீ அனுசரித்துக் கொள்வாய், நேரத்தில்

வேலைகள் முடிப்பாய், பிறரை சந்திப்பாய்,

சில நேரம் தவறான பெண்ணை காதலிப்பதாக

நடிப்பாய், உன் மூளை சுருங்கும் சத்தம்

கேட்பாய், உன் நாட்குறிப்புகள்

உன் வயதோடு சேர்ந்து வளரும்

வயதாகி, நிச்சயம் நீயும்

சாவாய் ஆனால் இப்போதல்ல, உனைக் குறித்த

என் திரிந்த பிம்பங்களைத் தாண்டி நீ வாழ்வாய்

நீ மகிழ்ச்சியற்று, நோய்மையோடு

இருப்பது குறித்து

நான் எதையும் செய்ய விரும்பவில்லை

நீ நோய்மையோடு, மகிழ்ச்சியற்று இல்லை

உயிரோடிருக்கிறாய் & உயிரோடிருப்பதில் சிக்கியிருக்கிறாய்

000

இது ஒரு பிழை

இந்தக் கைகளும் கால்களும்

இப்போது வேலை செய்யவில்லை

அது உடைந்துவிட்டது

சொல்லக் காரணங்கள் ஏதுமில்லை

பூமி நமக்கு ஆறுதல் அளிப்பதில்லை,

அமைதியாயிருக்குமளவு பண்பிருந்தால்

அது நம்மை மூடிடும்

சூரியன் மன்னிப்பதில்லை

அது பார்த்துவிட்டு போய்க்கொண்டே இருக்கிறது

இரவு நம்முள் இறங்குகிறது

நாம் ஒருவர் மேல் ஒருவர் இழைத்த

விபத்துகளின் ஊடாக

அடுத்த முறை நாம் காதல்

செய்கையில், முதலிலேயே தேர்ந்தெடுத்துவிட வேண்டும்

எதைக் கொல்வதென்று

000

தப்பிவந்து இப்புல்வெளியெங்கும் தடுமாறும் உனைப் பார்க்கிறேன்,

தாகத்தில் சுருங்கிய நுரையீரல்கள், உனை அழுத்தும்

வெய்யில், விலங்குகளோடும் நச்சுப் புதிர்ப்பாதைகளோடும்

உனைத் துரத்தக்கூடிய எல்லாம்

உன் பின்னால்

நான் உனக்கு உதவுவதா?

உனக்காய் கானல் நீர் செய்வதா?

என் வலது கை உனைச் சுற்றி நதிகளை விரிக்கிறது

என் இடது கை மரங்களை விடுவிக்கிறது,

நான் மழையைப் பேசுகிறேன்,

உனக்கொரு இரவை நெய்கிறேன், நீ அதில் மறைந்துகொள்கிறாய்

பலருக்கு பதிலாய், இப்போது

உனக்கு ஒரே எதிரி

000

அவர்கள் வெளியே சாப்பிடுகிறார்கள்

உணவகங்களில் நாம் சண்டையிடுகிறோம்

யாருடைய சாவுக்கு யார் செலவு செய்வதென்று

ஆனால் உண்மையான கேள்வி

என்னால் உனக்கு சாகாவரமளிக்க முடியுமா முடியாதா

இந்த கணத்தில் நான்

நான் மட்டுமே அதைச் செய்ய முடியும், எனவே

மாயாஜால முட்கரண்டியை

பீஃப் ரைஸ் தட்டுக்கு மேல் உயர்த்தி

உன் இதயத்தில் சொருகுகிறேன்.

சிறிய பலூன் வெடிக்கும் சத்தம், ஏதோ பொரியும் சத்தம்

பிளந்து நிற்கும் உன் தலை வழியே

நீ ஒளிர்ந்து எழுகிறாய்

மேற்கூரை திறந்து

ஒரு குரல் பாடுகிறது காதலென்பது பல

மகிமைகள் கொண்ட ஒன்று

நீ நகரத்தின் மேல் மிதக்கிறாய்

நீல கால்சட்டையும், முதுகில் கட்டிய சிகப்புத் துணியுமாக

உன்னிரு கண்களும் ஒரேநேரத்தில் மினுமினுக்கின்றன

சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் உன்னை கவனிக்கிறார்கள்

சிலர் ஆச்சரியமாக, சிலர் சலிப்பாக

நீ புதிய ஆயுதமா

வெறும் புதிய விளம்பரமா என்று அவர்களால் முடிவெடுக்க முடியவில்லை.

நான், நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.

நீ எப்படி இருந்தாயோ அப்படியே எனக்குப் பிடித்திருந்தது

ஆனால் நீயோ எப்போதும் பெரிய கனவுகள் கொண்டிருந்தாய்

வயலட்

எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான வயலட் பெங்களூருவில் உள்ள ஒரு சிறார் பதிப்பகத்தில் தமிழ் பதிப்பாசிரியராக பணியாற்றுகிறார். வயலட்டின் சிறுகதைகள் ‘ஊதா ஸ்கர்ட் கதைகள்’ (2017) என்ற தொகுப்பாக வெளிவந்திருக்கின்றது. எனில் என்ற இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். இவர் மொழிபெயர்த்த கவிதைகள், கதைகள் இணைய, அச்சுப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. காலச்சுவடு வெளியிட்ட ஹுவான் மனுவேல் மார்க்கோஸின் ‘குந்தரின் கூதிர் காலம்’ (2017) என்ற பராகுவே நாவலை இவர் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.