நேற்று ஒரு இலக்கிய விழாவில் பார்த்த அந்தப் பெண்ணின் பக்கத்தை இன்ஸ்டாகிராம் பரிந்துரைத்ததைப் பற்றி உன்னிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். நாம் போகவேண்டிய இடத்துக்கு இன்னும் ஒரு மணிநேரம் ஆகும். ஆட்டோவில் உனக்கு லேசாக வாந்தி வருவது போலிருந்தது. அவ்வளவு புகை இந்த ஊரில். அந்தப் பெண்ணுக்கு மிக அழகிய முகம். உலகம் அழகானவர்களால் நிரம்பியிருக்கிறது. நான் ஏன் அவரைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை. இதற்குப் பெயர்தான் கிரஷ்ஷா? உன்னிடம் சொல்லியதை நான் ஏன் எழுதுகிறேன் என்று எனக்குத் தெரியும். நான் உண்மையை எழுதுகிறேன். சொல்லும்போது கொஞ்சம் சிரிப்பு வருகிறது. ஆனால் கார்ல் ஓவ் நாஸ்கார்டின் நாவல்களைப் படித்து லேசாக மூளை குழம்பியிருக்கும் இந்த நிலையில் வேறு எதை எழுதுவது என்று தெரியவில்லை. நம்மைச் சுற்றி எங்கும் புனைவாக இருக்கிறது. எனவே நான் உண்மையை எழுதுகிறேன் என்று கார்ல் ஓவ் எழுதிய ஆறு நாவல்களில் இரண்டைப் படித்துவிட்டு நானும் சற்றே குழம்பிய நிலையில் இருக்கிறேன். நேற்று அந்த இலக்கிய விழாவில் ஒரு கவிஞர் நிலம் இல்லாத படைப்புகள் போலியானவை என்பது பற்றிப் பேசினார். இலக்கியத்தில் புனைவின், அபுனைவின் உண்மைத்தன்மை பற்றியும் பேசப்பட்டது. உண்மை மிக முக்கியமானதாம். அதே அளவு நிலமும். நான் நிலத்தை எழுதவேண்டும். ஆனால் எனக்கென்று நிலமில்லை. எனக்கென்று வீடில்லை. இந்தக் கதையை நான் வாழ்ந்த எந்த ஊரிலும் எழுதிவிட முடியும், பெரிதாக வித்தியாசம் எதுவும் இருக்காது. எனவே நிலம் பற்றி எழுத எனக்கு எதுவுமில்லை. நிலம் என்பது சொந்தமாக இருக்கும் நிலம் மட்டுமல்ல. நிலம் என்பது வளமாக மட்டுமல்ல, உங்கள் மீது செலுத்தப்பட்ட ஒடுக்குமுறையாகவும் இருக்கலாம்.
நிலம் என்பது காதலாக இருக்கலாம். பிறர் ரிலேட்டபிள் என்று கருதும் இன்பம் துன்பம் எதுவாகவும் இருக்கலாம். நிலம் என்பது நீ யார் என்ற அதே கேள்விதான். நிலம், உடல், இனம் பலவும் புனைப்பெயர்களில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. கதை என்றால் முரண் இருக்க வேண்டும் என்றார் ஒரு நண்பர். நான் உர்சுலா லெ குவினின் கட்டுரை ஒன்றை நினைவூட்டினேன். கதை என்பது பையில் பொறுக்கிப் போட்ட விதைகளாக, பீச்சில் சேகரித்துக் கைவிட்ட கிளிஞ்சல்களாக இருக்கலாம் என்றேன். க்ளாரிஸ் லிஸ்பெக்டரின் கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் வித்தியாசம் சொல்ல முடியுமா. நான் என் சோம்பேறித்தனங்களுக்குக் காரணங்கள் கற்பிக்கிறேனா? இருக்கலாம்.
செத்த எலியைப் பரிசளிக்கும் கடவுள்கள் இருக்கும் இந்த உலகத்தில் வேறு என்ன செய்ய முடியும். வாழ்க்கையைப் பற்றி ஏதுமறியாத அந்தச் சின்னஞ்சிறு சிறுவன் விளையாடப் போகும் இடத்தில் கடவுள் ஒரு செத்த எலியைப் போட்டு வைத்திருக்கிறார். அம்மா என்றோ அப்பா என்றோ கத்தாமல் அவன் கடவுளின் பெயரைச் சொல்லிக் கத்துகிறான். சுற்றியிருப்பவர்களுக்குக் கூடக் கேட்காமல் தொண்டையிலேயே அடைபட்டுப் போய்விட்ட அந்தக் குரல் கடவுளை மருகச் செய்கிறது. அச்சச்சோ பயப்படாதே சிற்றுயிரே என்றபடி அந்த எலிக்கு உயிர்கொடுத்து ஓடச் செய்கிறார். எலும்புகள் வெளித்தெரிய காய்ந்துகிடந்த எலி எழுந்தோடுவதைக் கண்ட சிறுவன் பயத்தில் உறைந்துபோனான்.
அவன் தன்னைவிட வயதுமூத்த நான்கு நண்பர்களோடு அங்கே கால்பந்து விளையாட வந்திருந்தான். அவனுக்குப் பெங்காலியும், கொஞ்சம் இந்தியும் மட்டும்தான் தெரியும். அவனோடு விளையாட வந்திருந்த எங்கள் நால்வருக்கும் தமிழும், ஆங்கிலமும் கொஞ்சமே கொஞ்சம் இந்தியும்தான் தெரியும். கால்பந்தைக் கொண்டு ஒரு சதுர இடத்தில் நாங்கள் விளையாட முயலும் விளையாட்டின் விதிகள் அவனுக்குப் புரிவதாயில்லை. இந்தச் செருப்பு வேறு பந்தை உதைக்கும்போதெல்லாம் பந்தை விட உயரமாகப் பறந்துபோகிறது. அவனிடம் ஒரு ஷூ இருக்கிறது. அதைப் போட்டுக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அது கிழிந்துவிட்டால் ஸ்கூலுக்கு எதைப் போட்டுப் போவாய், செருப்பையே போட்டு வா என்று நாங்கள் சொல்லிவிட்டோம்.
நாங்கள் நால்வரும் ஒரு மைதானத்துக்குச் சென்று விளையாடி நீண்ட காலம் ஆகிறது. உலகக்கோப்பை ஆர்வத்தில் வாங்கிய பந்து சும்மா கிடக்கிறதே என்று அந்த ஞாயிறு மதியத்தில் விளையாட வந்திருந்தோம். மைதானம் முழுக்கக் கூட்டமும் தூசியுமாக இருந்தது. நிறையச் சிறுவர்களும் ஆண்களும் க்ரிக்கெட்டும் கால்பந்தும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பால், பால் என்ற குரல்கள் எங்கும் பந்தின் பின் ஓடிக்கொண்டிருந்தன. சிறுவன் உதைத்த பந்தில் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்களின் க்ரிக்கெட் பந்து பட்டுப் பறந்து, எங்களில் ஒருவரின் தோளில் அடித்துப் பறந்தது. தோள்பட்டையைத் தேய்த்துக்கொண்டே அவர் சிறுவனைப் பார்த்தார்.
எதன் பக்கத்திலோ போகப் பயந்துகொண்டே உறைந்து நின்றிருந்தான். டேய் இந்தப் பக்கம் வா நீ… அய்யோ தமிழ்லயே பேசிக்கிட்டு இருக்கேன் இவன்கிட்ட என்றபடி அவனைக் கையைப் பிடித்து இந்தப் பக்கம் வா என்று இழுத்துவிட்டு அங்கே பார்க்க, ஒரு செத்த எலி காய்ந்து கிடந்தது. காலால் எத்தி அதைத் தள்ளிவிட்டார். பின் அங்குக் கிடந்த ஒரு காக்கி நிறக் காகிதத்தை எடுத்து எலியை மூடி வைத்தார். இப்போது சிறுவன் மைதானத்தின் களேபரத்தில் ஆழ்ந்திருந்தான். தூரத்தில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த சிறுவர்கள் மீதே அவன் கண்ணிருந்தது. பளபளக்கும் சில்வர் காகிதங்கள் சலசலக்க அவர்கள் அப்பட்டத்தைப் பறக்க வைக்க முயன்றுகொண்டிருந்தார்கள். எனக்குச் சர்வம் படத்தில் பட்டம் நூலால் கழுத்தறுந்து இறந்துபோகும் த்ரிஷாவின் நினைவு வந்தது.
த்ரிஷாவின் நினைவை மூளைக்குள் ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு என் பக்கம் வந்து, என்னைக் கடந்து சென்ற பந்தின் பின் ஓடினேன். எவ்வளவு வேகமாக ஓடியும் பந்தைக் காலால் நிறுத்தமுடியவில்லை. கொஞ்சம் மூச்சுப் பிடித்து ஓரிரு அடிகள் வேகமாக ஓடி பந்தைக் கையில் எடுத்தேன். பக்கத்தில் சில குழந்தைகள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அனைவரும் ஃபுட்பால் ஷூக்கள், ஜெர்சிக்கள் அணிந்திருந்தனர். மெஸ்ஸியின் பெயர் போட்ட டிஷர்ட் அணிந்திருந்த ஒரு சிறுமி பந்தைத் துரத்திக் கொண்டிருந்தாள். நான்கு பந்துகள் அடுக்கி வைத்தால் என்ன உயரம் வருமோ அவ்வளவுதான் இருந்தாள் அவள். பளபளவென ஸ்ட்ரெயிட்டன் செய்யப்பட்ட முடியில் குதிரை வால் ஆட ஓடிக்கொண்டிருந்தாள். தூரத்திலிருந்து பந்தை எடுத்து வரும்போது விரல்கள் படாமல், இரண்டு முட்டிக் கைகளுக்கும் இடையில் பந்தைப் பிடித்துத் தூக்கி வினோதமாக நடந்துவந்தாள்.
அந்தச் சிறுமியின் முகத்தில் விளையாட்டின் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. அவளோடு விளையாடிய இன்னொரு சிறுமியும், இரு சிறுவர்களும் சிரித்துக் கொண்டே இருந்தார்கள். அவர்களோடு விளையாடிக்கொண்டிருந்த அந்த ஆண், அவர்களில் ஒருவரது தந்தையா இல்லை அவர்களின் விளையாட்டுப் பயிற்சியாளரா என்று சொல்லமுடியாதபடி இருந்தார். அவரும் அவர்களுக்கு இணையாக ஓடி, பந்தை எடுத்துவரச் சொல்லி ஆட்டத்தைக் கட்டுக்குள் வைத்திருந்தார். அந்தச் சிறுவர்கள் இருவரும் பந்தை தங்களுக்குள் வைத்துக்கொண்டே விளையாடினர். அவர்களுக்குச் சிறுமிகள் இருவரும் பொருட்டாகத் தெரியவில்லை. ஆனால் மெஸ்ஸி டிஷர்ட் அணிந்திருந்த சிறுமி அவர்களை அப்படி விளையாட அனுமதிக்கவில்லை. அவள் இடையில் புகுந்து பந்தைப் பறிக்கவோ, பந்து நீண்ட தூரம் போகும்போது முதல்
ஆளாக அதன் பின் ஓடவோ தயங்கவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாகப் பந்து ஒருவர் கையிலிருந்து இன்னொருவர் கைக்குப் போவது குறைந்தது. ஒவ்வொருவராக ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்கத் தொடங்கினோம். கடவுளிடமிருந்து செத்த எலி பரிசுபெற்ற சிறுவன், மைதானத்தில் களேபரத்தில் கவனத்தைத் தொலைத்திருந்தான். படபடக்கும் பட்டம் மீதே எல்லோர் கவனமும் அவ்வப்போது சென்று திரும்பியது. இந்தக் களேபரங்களுக்கு இடையே ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் பொன்னிற நாயுடன் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தனர். நாங்கள் ஓரமாக உட்கார்ந்து மெஸ்ஸி ஆடை
அணிந்த பெண்ணும் பிறரும் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். சிறுவன் அவர்கள் பக்கமே திரும்பாமல் பந்தை உதைத்தும் வேடிக்கை பார்த்தும் விளையாடிக் கொண்டிருந்தான்.
திடீரென்று ஓவென்ற அழுகுரல் சத்தம் மைதானத்தை நிரப்பியது. கவனிக்காதவர்களுக்கு கவனித்தவர்கள் விளக்கியபடி, என்ன நடந்ததென்றால், அந்தப் பொன்னிற நாய் ஓடிச்சென்று ஒரே தாவாகத் தாவி சற்றே குறைவான உயரத்தில் பறந்துகொண்டிருந்த பட்டத்தைக் கவ்விச் சென்றுவிட்டது. பட்டத்தை வைத்திருந்த சிறுவனின் அழுகுரல்தான் அது. நாயுடன் வந்தவர்களில் ஒருவர் சிறுவனைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். இன்னொருவர் மைதானத்தில் மூலையில் தனக்குக் கிடைத்த பட்ட இரையைப் பிய்த்துக் கொண்டிருந்த நாயை சமாதானப் படுத்தப் போனார். பட்டம் வைத்திருந்த சிறுவன் சமாதானமாவதாகத் தெரியவில்லை. மைதானத்தின் ஒட்டுமொத்த கரிசனம் அவன் பக்கமே சரிந்திருந்தது. இந்த மாதிரி கூட்டமான இடத்துக்கெல்லாம் ஏன் நாயைக் கூட்டி வர்றாங்க என்று சிலர் விசனப்பட்டனர்.
நான் மெஸ்ஸி டிஷர்ட் அணிந்திருந்த சிறுமியையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வியர்த்து விறுவிறுக்க அந்தச் சிறிய உருவம் சற்றும் சிரிக்காமல் பந்தின் பின் ஓடுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றியது.
பசிக்கிதா? நாலு பேரில் யார் இந்தக் கேள்வியைக் கேட்டோம் தெரியவில்லை. ஆனால் எல்லோர் மனதிலும் நிரம்பிவிட்டது. ஐஸ்கிரீம் சாப்பிடுகிறாயா என்றோம். சிறுவன் தலையாட்டி மறுத்துவிட்டான். ஐஸ்கிரீமை மறுக்கும் குழந்தைகளை என்ன செய்வது. நாங்கள் மெதுவாக மைதானத்தை விட்டு வெளியே நடக்கத் தொடங்கினோம்.
அப்போதுதான் எங்களைக் கவனித்த மெஸ்ஸி டிஷர்ட், சட்டென்று சிறுவனைப் பெயர் சொல்லி அழைத்தாள். அவன் அவள் பக்கம் திரும்பி சட்டென்று சிரித்துவிட்டு, சிரித்தான் என்றே நான் நினைக்கிறேன், ஏனென்றால் அந்தச் சிறுமியின் முகத்தில் புன்னகை படிந்திருந்தது, எங்களை முந்தி நடக்கத் தொடங்கினான். உனக்குத் தெரியுமாடா அந்தப் பெண்ணை என்று கேட்டதற்கு, மிக மெல்லிய குரலில் என் வகுப்புதான் என்றான். நான் அந்தச் சிறுமியைத் திரும்பிப் பார்த்துக்கொண்டேன். நாங்கள் மீண்டும் ஐஸ்கிரீம் குறித்துப் பேசியபடி நடக்கத் தொடங்கினோம்.
சிலரைப் பார்த்தால் சட்டென்று இவர் நமது வாழ்க்கையில் இருந்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றும். இந்தப் புன்னகை நமது நண்பருடையதாக இருக்கவேண்டுமெனத் தோன்றும். ஆனால் ஒரு குழந்தையைப் பார்க்கும்போது அப்படித் தோன்றுமா. இவளை நான் தினமும் கவனித்துக் கொள்ளவேண்டும், சோறூட்ட வேண்டும், வளர்வதைப் பார்க்க வேண்டும் என்று.
இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருந்தது. நாம் மனதில் இருந்த சோகங்களை மறைக்கவில்லை. கல்யாண வெப்சைட்ல போட அம்மா ஃபோட்டோ கேட்டாங்க, என் லவ்வர எடுத்துத்தரச் சொல்றேன்னு சொல்லியிருக்கேன், எடுத்துக் கொடு என்று விளையாடிக் கொண்டிருந்தோம். நான் அப்போதுதான் உன்னிடம் ஃபுட்பால், மெஸ்ஸி டிஷர்ட், சிறுவன் கதையைச் சொல்லி முடித்திருந்தேன். சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் கதையாக எழுதும்போது விவரங்கள் வேண்டும் என்றாய் இதைப் படித்துவிட்டு. என்ன மாதிரி விவரங்கள்? அந்தச் சிறுவன் என்ன நிறத்தில் உடை அணிந்திருந்தான். நாம் பேசிக்கொண்டிருந்தபோது ஆட்டோக்காரர் என்ன செய்துகொண்டிருந்தார். நான் எழுதலாம்தான். ஆனால் ஒவ்வொருவரும் அதில் ஒவ்வொன்றை நிரப்பிக்கொள்வார்கள்தானே. ஒவ்வொருவரும் தங்கள் நினைவில் உள்ள சிறுவர்களை, நிறங்களை, நகரங்களை… ஒவ்வொரு நகரத்திலும் பல ஊர்கள் இருக்கின்றன என்று சொல்வார்கள். நாம் ஊர்விட்டு ஊர் வந்திருந்தோம். சொந்த நாட்டுக்கு டூரிஸ்ட்டாகத் திரும்பி வந்தவர்களின் மனநிலை லேசாகத் தலைகாட்டியிருந்தது. நாம் அந்தப் பகுதியின் சிறப்பம்சங்களை ஓரளவு பார்த்துவிட்டிருந்தோம். பழைய புத்தகக் கடைகள், சுவரோவியங்கள்… ஒரு நல்ல காஃபி. ஒரு கடையில் தோடு வாங்கிக் கொடுத்தாய். நீ எனக்குப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பது பற்றி நாம் இருவர் மட்டும் சிரித்துக்கொள்ளச் சில விசயங்கள் இருந்தன. போதுமா நடந்தது என்று தோன்றியது. இங்கு எங்கோ ஒரு கோயில் இருக்கிறது. கொஞ்சம் பழைய கோயில். அழகிய நாகராஜா சிற்பங்கள் கொண்டது என்றாய். நடக்கத் தெம்பிருக்கிறதா? ம்ம்ம் இந்த நெரிசலில் ஆட்டோவில் போக இருவருமே தயாராக இல்லை. ஏற்கனவே ஒரு மணிநேரம் ஆட்டோவில் வந்தது தலைசுற்றுவது போல் இருந்தது.
போகும் வழியில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அதில் சாப்பிடலாமா என்று பார்க்கலாம். ஆனால் அங்கு நமக்கு எதுவும் சாப்பிடப் பிடிக்கவில்லை. எனவே இரண்டு சாத்துக்குடி ஜூஸ் மட்டும் சொல்லிவிட்டு வெளியே அமைத்திருந்த ஒரு மேடையில் உட்கார்ந்தோம். ஜூஸ் வர நேரம் ஆகும்போல் இருந்தது. அப்போதுதான் அந்தக் குட்டி உருவம் என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். அது என்னையே பார்த்துக்கொண்டிருப்பதை அவளது தந்தையைப் போலிருந்த ஒருவரும், நீயும் கவனித்தீர்கள். அவளுக்குச் சிறிய தங்கமீன்கள் போன்ற கண்கள், மிக அழகிய அரிசி மணிகள் போன்ற பற்கள். அவளுக்கு மலைவாசஸ்தலங்களில் இருக்கும் துணிக்கடை பொம்மையைப் போல அழகாக ஆடை உடுத்தியிருந்தார்கள். என்ன என்று தலையாட்டிக் கேட்டேன். ஒண்ணுமில்ல என்று பதிலுக்குத் தலையாட்டினாள். நான் சிரித்தேன். அவள் கண்ணிமைக்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். எங்கள் இருவருக்கும் நடுவே ஒரு தூண் இருந்தது. நான் சற்றே நகர்ந்து மறைந்தேன். கண்ணாமூச்சி. அவள் தூணைச் சுற்றி வந்து மெல்லச் சிரித்துப் பின் தன் பழைய பார்வைக்குத் திரும்பினாள். அவள் அப்பா அவளிடம் ஏதோ கேட்டார். அவள் பதிலளிக்கவில்லை. நீ என்னிடம் ஏதாவது கேட்டாயா. என்னையும் அவளையும் பார்க்க இரு குழந்தைகள் போல் இருந்ததா? அம்மாவும் குழந்தையும் போல் இருந்தது என்று சொல்லேன். அப்படியொரு நிமிடம். அருகில் இருப்பவர்கள் பொறாமைப்படுமளவு ஒரு வரமளிக்கப்பட்டதாய் உணர்ந்தேன். ஆனால் நீ என்னைப் பார்த்துச் சந்தோஷமாக இருந்தாய்.
அங்கிருந்து நாம் கொஞ்ச நேரத்தில் கிளம்பிவிட்டோம். ஆனாலும் அவள் உருவம் என் மனதை விட்டுப் போகவில்லை. அவள் பெயர் அப்பு என்று அவளது அப்பா அழைத்ததாகச் சொன்னாய். அடுத்தடுத்து நான் பேசும்போது அப்புவை மிகப் பரிச்சயமானது போல் பெயர் சொல்லிப் பேசத் தொடங்கினேன். ஏன் நான் இவ்வளவு அதையே யோசித்துக் கொண்டிருக்கிறேன்? நாம் இதற்கு முன் குழந்தை வளர்ப்புப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறோம். சொல்லப்போனால் உன்னிடம்தான் முதல்முறை நான் தாய்மை குறித்த என் அவாக்களை, ஏக்கங்களை, வெறுப்புகளை முழுமையாகச் சொல்லியிருக்கிறேன். ஆனால் நான் இப்போது புதிதாக ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கின்றேன். எதற்காக அவள் என்னை அப்படிப் பார்த்தாள். இதற்கு முன்னும் குழந்தைகள் என்னை முறைத்திருக்கின்றன, சிரித்திருக்கின்றன, வினோதமாகப் பார்த்திருக்கின்றன. ஆனால் இம்முறை என் மனது என்னவோ ஆகியிருந்தது. நிரம்பியிருந்தது. நாம் ஒரு கோயிலுக்குச் சென்றோம். அங்கிருந்து வீட்டுக்கு ஆட்டோவில் ஏறினோம்.
அப்புவுக்குத் தங்கமீன் கண்கள், அரிசி மணிப் பற்கள்… நான் இன்னமும் அப்புவைக் குறித்தே யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
வயலட்
எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான வயலட் பெங்களூருவில் உள்ள ஒரு சிறார் பதிப்பகத்தில் தமிழ் பதிப்பாசிரியராக பணியாற்றுகிறார். வயலட்டின் சிறுகதைகள் ‘ஊதா ஸ்கர்ட் கதைகள்’ (2017) என்ற தொகுப்பாக வெளிவந்திருக்கின்றது. எனில் என்ற இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். இவர் மொழிபெயர்த்த கவிதைகள், கதைகள் இணைய, அச்சுப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. காலச்சுவடு வெளியிட்ட ஹுவான் மனுவேல் மார்க்கோஸின் ‘குந்தரின் கூதிர் காலம்’ (2017) என்ற பராகுவே நாவலை இவர் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.
கற்பனை குதிரை தறிகெட்டு ஓடினாலும் புனைவின் எல்லைக்கு அப்பாலும் பார்வை செல்வது. அற்புதம். பார்க்கும் பார்வையின் பதிவுகளின் தொகுப்பும் சீரான மொழியும். சிறப்பு.