ஒன்றா, இரண்டா…? : யுவன் சந்திரசேகர்

வெளித்தெரியாத குருகுலத்தில் நான் பயிற்சி மேற்கொண்ட நாட்கள் அவை. எழுத ஆரம்பித்த காலகட்டத்தில், குருவின் அறிமுகம் உண்டானது; அல்லது, அவரது அறிமுகத்துக்குப் பிறகுதான் எழுத்தில் ஒரு பிடிப்பே ஏற்பட்டது. இன்னும் ஏகப்பட்ட இரட்டைத் தடங்கள் வரவிருக்கின்றன – அதற்கான முன்னோட்டமாய்க்கூட மேற்சொன்ன இரட்டை வாக்கியத்தைக்  கொள்ளலாம்.

குருநாதர் என்னுடைய ஒரு வரியையும்  சிலாகித்ததில்லை. ஆனாலும், அவருடைய சிந்தனாமுறைமீதும், அது எகிறிப்பாயும்போது கேட்பவருக்குக் கிடைக்கும் லாகிரியிலும்  எனக்கு உள்ள மோகமும் பொறாமையும் கொஞ்சம்கூடக் குறைந்ததில்லை. என் கதைகள்மீது அவருடைய பொதுவான ஆதங்கம், அவை புனைகதையாவதற்கு ஒரு மாத்திரை முன்பாகவே நான் கடிவாளத்தை இழுத்துப் பிடிக்கிறேன் என்பது. ஒருமுறை, நான் ’தலையால் எழுதுகிறேன்’ என்று சொன்னார். ’எல்லாருமே அப்படித்தானே’ என்ற கேள்வியை அடக்கிக்கொண்டு, ‘புரியலயே சார்.’ என்று  மாத்திரம் சொன்னேன்.

மூளையால் எழுதுகிறாய். இதயத்தால் எழுதுவதுதான் இலக்கியமாகும். கலை என்பதே, இதயத்தின் வழியாக ஆன்மாவைத் தீண்டும் முயற்சிதான்.

என்று விளக்கினார்.

‘அளவற்ற கெட்டிக்காரத்தனத்தை வைத்து, வாசிப்பவரின் உணர்ச்சிப் பலவீனத்தில் மர்மத்தாக்குதல் நடத்துவதைத்தான் அவர் குறிப்புணர்த்துகிறாரா’ என்று கேட்க விரும்பினேன். மேலும் அவர் நாள்தவறாமல் போற்றிப் புகழும் எழுத்தாளரான போர்ஹேயைப் படித்து யாருக்காவது ஒரு துளி கண்ணீர் துளிர்த்திருக்க வாய்ப்புண்டா என்றும் கேட்க நினைத்தேன். இப்படித்தான், அவருடனான உரையாடல் எப்போதுமே இரண்டு பகுதிகளாக அமையும் – ஒன்று, வாய்விட்டு அவருடன் பேசுவது; மற்றது, எனக்குள்  நானே பேசிக்கொள்வது.

எளிமையான வழி ஒன்றை யதேச்சையாகக் கண்டுபிடித்தேன்.  கட்டுரைத்  தன்மை மிகுந்த கதைகள் என்றுதானே புகார் சொல்கிறார். கதைத் தன்மை மிகுந்த கட்டுரைகளை எழுதினால் போயிற்று.

ஆனால், கொஞ்சகாலம் கழித்து  இன்னொரு விபத்து நேர்ந்தது. ஒரு நாளிதழின் தீபாவளி மலருக்கு என்னிடம் கட்டுரை கேட்டார்கள். அனுப்பிவைத்தேன். நாலாவது நாள் ஒரு பெண்குரல் தொலைபேசியில் அரற்றியது – சற்றுப் பதற்றமாக.

சார், ’நாங்க கட்டுரை கேட்டிருந்தோம்; நீங்க கதை அனுப்பியிருக்கீங்களே’ன்னு எடிட்டர் கேக்கச் சொன்னாரு.

அட, நான் இப்பல்லாம் இந்த மாதிரித்தாம்மா எழுதுறேன்.

என்று எளிமையான பதில் சொன்னேன். அவர்களும் சமாதானமாகிவிட்டார்கள் என்று வையுங்கள். இல்லாவிட்டால் அந்தக் கட்டுரை  பிரசுரமாகியிருக்காதே. ஆனால், நான் சொல்லியிருக்க வேண்டிய, நேர்மையான, இரண்டாவது பதில்,

அட, இப்பிடிப் பிரிக்கிற கோடெல்லாம் அழிஞ்சு ரொம்பகாலம் ஆச்சம்மா.

கவிதை என்ற பெயரிலேயே கட்டுரை எழுதுவதெல்லாம் தமிழில் நடைமுறைக்கு வந்து குறைந்தபட்சம் முப்பது வருடங்களுக்குமேல் ஆகிறது, இல்லையா!

தொலைபேசி உரையாடலை குருநாதரிடம் சொன்னேன். முகத்தை அண்ணாந்து வெகு ஆனந்தமாகச் சிரித்தார். சிரிப்பின் பின்னால் ஏதேனும் ஒளிந்திருக்கிறதா என்று பார்க்க முடியவில்லை –  அவருடைய முகம்தான் ஆகாயத்தை நோக்கி இருந்ததே…

 ஆக, இப்போது நான் நீங்கள் வாசிப்பதும் கதைக் கட்டுரைதான்; அல்லது, கட்டுரைக் கதை. முதல் பகுதியிலேயே தலைப்புக்கு நியாயம் சேர்ந்துவிடுவது எத்தனை அதிர்ஷ்டகரமான சங்கதி என்பது தொடர்ந்து எழுதிச் சிரமப்படுகிறவர்களுக்குத்தான் தெரியும்…

 ண்மையில், இந்தக் கட்டுரை அல்லது கதை இரண்டு நூல்களைப் பற்றியது.  வெவ்வேறு காலத்தவை. வெவ்வேறு தரப்பைச் சேர்ந்தவை.  வெவ்வேறு மனோதளம்  கொண்டவை. நேரடியான ஒப்பீடுகள் கொள்ளாதவை.  ஆனாலும், அடிப்படையான ஒற்றுமைகள் நிறைய உள்ளவை.  இரண்டுமே போர்ச்சூழலைக் களமாகக் கொண்டவை.  பொதுநோக்கின் பார்வையில், எதிர்மறையானவை. மானுட அறத்தின் முன்னிலையில், தார்மீகமற்றவை. ஆனாலுமென்ன, எதிர்மறையுணர்வு வழங்கும் சுவாரசியத்துக்கும் வசீகரத்துக்கும் ஈடு உண்டா!

இரண்டு நூல்களின் நாயகர்களும் ஒருதலைப் பட்சமாகப் பேசியவர்கள். சமூகத்தின்  பார்வையில் துரோகிகள். மரணத்துக்கு வெகு அருகில் நின்றவர்கள்; அதை முன்னிட்டே,  தம்மைத் தீரர்களாகக் கருதிக்கொண்டவர்கள். கிட்டத்தட்டத் தலைமறைவு வாழ்க்கை நடத்தியவர்கள். புனைபெயரில் எழுதியவர்கள். அதன் காரணமாகவே, முழு உண்மையையும் சொல்வதாகத் தோற்றம் தருபவர்கள்.

ஒருவர் கொலைசெய்வதை முழுநேரப் பணியாய் மேற்கொண்டவர். மற்றவர், கொல்லப்பட வேண்டியவர்களை  மோப்பசக்தியால் உணர்ந்து, ஆள் காட்டுவதை அயராமல் செய்துவந்தவர். முன்னவர் தொழில் தர்மத்தை உயர்வானதாய்க் கோருபவர்; அடுத்தவர்,  தேசபக்தியை.

ஆனால், இரண்டு மனங்களுமே, வாழ்நாளின் இரண்டாம் பகுதி முழுவதையும் நடித்தே கழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் வீழ்ந்தவை. எந்த அளவுக்கு உண்மையை நேசித்தன, அதற்கான அவசியமோ சான்றுகளோ இருந்தனவா என்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன. இதுபோக, வாசிப்பவர் நல்லெண்ணத்தைச் சம்பாதிப்பதற்காகக் கலந்த பொய்கள் எவ்வளவோ…  

இரண்டு நூல்களுக்குமான மிக முக்கியமான ஒற்றுமை ஒன்று உண்டு. சிருஷ்டிகரம்! என்ன செய்ய, மொழியின் இயல்பு அது; இருபுறமும் கூர்மையான கத்தி.  எழுத்தை அளக்க அது மிக முக்கியமான அளவுகோல் என்பதே ஒருவித இரண்டுங்கெட்டான் முரண்தான், இல்லையா! விழுமியங்கள் கிடக்கட்டும், அவை என்ன எல்லாக்காலத்திலும் ஒரேமாதிரியாகவா இருக்கின்றன!

ஆனால், மேற்சொன்ன அளவிலும்கூட, முதல் புத்தகம் இம்மி இழையில் வெற்றிவாகை சூடுகிறது – அதன் பின்னணியாக மலைகளும் வனாந்தரமும் பசுமையும் அத்துவானமும் நிறைந்திருப்பதும், மொழியில் அபாரமான கவித்துவம் மேவியிருப்பதும்கூடக் காரணமாய் இருக்கலாம்.

இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். முதலாவது நூல், ஆரம்பத்தில் சொன்ன குருநாதர் வாசிக்கத் தந்த காகிதப் புத்தகம். இரண்டாவது, இணையத்தில் வேறெதையோ துழாவும்போது சிக்கிய மின்னூல். (இதிலும்கூட ஒரு சிறு தயக்கம் எனக்குள் நிலவுகிறது – திருட்டுப் புத்தகத்தை இலவசமாய்க் கொடுக்கவென்றே செயல்படும் இணையத்தளங்களில் நேரடியாகவோ, ‘தரவிறக்கி’யோ வாசிப்பது  அறம்தானா? ஆனால், வாசிப்பின் ஆசையும் போதையும் மீறும்போது தார்மிகமாவது ஒண்ணாவது என்று நானே சமாதானமடைவது இன்னும் பெரிய வயிற்றெரிச்சல்). வாசித்த கிரமத்திலேயே, அதாவது, முதல் நூலைப் பற்றியே, முதலில் சொல்கிறேன்.  அதற்கு முன்னால்,  சிறு இடையீடு.

 ண்முகநாதன் என்று சொன்னால் அநேகம்பேருக்குத் தெரியாது. ’ராஜாளி’  என்றால் உடனே புருவம் உயரும்; புன்னகை மலரும். அவருடைய பேரைச் சொன்ன  மாத்திரத்தில், மொழி எப்படி அலங்காரமாகிறது பாருங்கள்! திரைப்பாடல்களில் அளப்பரிய உச்சத்தை எட்டியவர். தேசிய விருதுபெற்ற,

கொக்கின் வெண்மையே – கோழி

யிறகின் மென்மையே

பாலின் புரதமே – என்

பகல்நேர விரதமே

என்ற பிரசித்திபெற்ற பாடலை எழுதி தேசியவிருது பெற்றவர். வழக்கம்போல, தன்னைப் பொருட்படுத்தாத பெண்ணுக்கு  நாயகன்   நூல்விடும் பல்லவிதான். மெட்டமைத்த தெலுங்கு இசையமைப்பாளரின் உறவினர் மத்திய அமைச்சராய் இருந்ததாலும்; அவர் சார்ந்த கட்சி மத்திய அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவேன் என்று சதா மிரட்டிவந்ததாலும் இறைபட்ட நீர் தமிழ்ப்புல்லுக்கும் பொசிந்தது என்று புலனாய்வுப் பத்திரிகை ஒன்றில் பெட்டிச்செய்தி வந்தது. அதனாலென்ன, விருது விருதுதானே.

மேற்சொன்னதுபோன்ற, தளுக்கும் குலுக்குமான ஆயிரத்திச்சொச்சம் பாடல்கள் தவிர,  கவிதை என்ற பெயரில் வண்டிவண்டியாய் எழுதிக் குவித்திருக்கிறார் ராஜாளி என்ற சண்முகநாதன்.  ஒரு வரிகூட என்னைக் கவர்ந்ததில்லை.    

ஆனால், எனக்கு இதுவரை தெரிந்திராத இன்னொரு பிம்பத்தைக் காட்டிவிட்டார், சமீபத்தில். அளவில் சற்றுப் பெரியதான நூல்  ஒன்றை எழுதியிருக்கிறார். நான் பேச உத்தேசித்த  முதலாவது நூல் அல்ல இது;  எதேச்சையாகக் குறுக்கிட்ட மூன்றாவது.  மற்றபடி, அதுவும் சுயவரலாறுதான். அதாவது, அப்படியொரு ஜாடையில்  வெளியாகியிருக்கும்  சுயப்பிரதாபம். ராஜாளியின் நூலைப் பற்றி விரிவாகப் பேச ஒன்றுமே இல்லை எனக்கு. அதில்  தவறுதலாக இடம்பெற்றதுபோலத் தென்பட்ட ஒரேயொரு அத்தியாயம் பற்றித்தான் ஓரிரு வரிகள்.

 ’மணலில் வீழ்ந்த மழைத்துளி’ என்னும் அந்த நூலுக்கு 2006ல் நாலாம் பதிப்பு வந்தது. அப்புறம் வேறு வந்ததாகத் தெரியவில்லை;  அவர் சார்ந்த கட்சி ஆட்சியிலிருந்து இறங்கியதா; அவருக்கே திரைத்துறையில் மவுசு குறைந்ததா; அல்லது கிசுகிசுக்கள் குறிப்பிடுகிற மாதிரி வேறு சுவாரசியங்களில் அவர் மூழ்கிவிட்டதா, எது காரணம் என்று தெரியவில்லை.

அதை விடுங்கள், மேற்சொன்ன  அத்தியாயத்தில், நான் முன்னமே  குறிப்பிட்ட குருநாதர் பற்றியும், நான் குறிப்பாகப் பேச விழைந்த முதலாவது நூலைப் பற்றியும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். ஒருவகையில், இதை நான் எழுதுவதற்குக்கூட அந்த அத்தியாயமே தூண்டுகோல். உவேசா, நாமக்கல் கவிஞருக்குப் பிறகு, தமிழில் என்னைக் கவர்ந்த சுயவரலாற்று அத்தியாயம் அது. இந்தப் பதினைந்து பக்கங்களில், சண்முகத்தின் மொழிநடை மட்டுமல்ல, விவரிக்கும் சம்பவங்களும் அவற்றின் வெளிப்படைத்தன்மையும்கூட அபாரம். உண்மையின் பலம் அது என்றுதான் கொள்ளவேண்டும்…

மேற்படி அத்தியாயம் இவ்வளவு தூரம் என்னை ஈர்த்ததற்கு நேரடியான இன்னொரு காரணம் உண்டு;   குருநாதர் பற்றிய சண்முகத்தின் விவரிப்பு. இவரும் அவருடைய சீடர்தான். மூன்றாவது காரணமும் உண்டு; இந்தக் கட்டுரைக்கதையை வாசிக்கிறவரே கண்டுபிடித்துக்கொள்ள வேண்டியது…

                                  2

வரைச் சந்தித்திராவிட்டால், ஒரு வரிகூட சொந்தமாக எழுதியிருக்க   மாட்டேன்.  இத்தனைக்கும், தாம் ஒரு வரிகூட எழுதாதவர் அவர். ’எழுதலாமே’ என்று எங்களைப்போன்ற சீடர்கள் வேண்டினால், ‘அட போங்கய்யா, ஊதுபத்தி புகை விடுது; அதையெல்லாம் சேர்த்தா வைக்கிறோம்! எரியிறப்ப மணந்தாப் பத்தாதா.’ என்று சிரிப்பார்.

இன்றுவரை நான் எழுதும் சகலமும் அவருக்குத்தான் சமர்ப்பணம் என்று மனம் கசிந்து சொல்லும்போதெல்லாம், ’அதெல்லாம் இல்லய்யா, ஒனக்குள்ளெ ஆர்வமும் சுனையும் இருந்துச்சு; சந்தர்ப்பம் கிடைச்சவொடனே பீச்சி அடிச்சிருச்சு. அவ்வளவுதான்’ என்பார். அது அவரது பெருந்தன்மை. என் எழுத்துக்கள்மீது அவருக்குப் பெரிய மரியாதையோ அபிமானமோ கிடையாது என்பது எனக்கே  தெரியும்; என்ன,  முகத்துக்கு நேரே சொல்லமாட்டார். அதுவும் அவருடைய பெருந்தன்மைதான். ரிச்சர்டுக்கும் என் எழுத்துக்கள் பிடிக்காது. போகட்டும், தொழில் நிமித்தம் நான் எழுதும் வரிகளை நானே உயர்வாகக் கருதமாட்டேனே… அவை பெரும்பாலும் சிருங்காரக்கொச்சைகள்தாமே.

மூன்றுபேர் ஒரே சமயத்தில் அவரிடம் சென்று சேர்ந்தோம். ஒரே வருடத்தில் ஒருவர் அகன்றுவிட்டார் – அது பரவாயில்லை; அலுவலகம் விட்டதும், புது மாமனாரின் புரோட்டாக் கடை கல்லாவில் போய்  அமர்ந்தார். ‘அறிவுஜீவியா இருக்குறது அத்தனை சுலபமில்லீங்க. நாப்பது வயசைத் தாண்டியும் ஒருத்தனுக்கு சிந்தனைமேலெ பிடிப்பு இருந்ததுன்னா, தமிழ்ச்சூழல்லெ அது பேரதிசயம்’ என்பார் எங்கள் ஆசிரியர்.

என்னுடைய ஆசையோ, உத்தேசமோ அறிவுஜீவி ஆவது இல்லை. ’கடந்து செல்லும் ஒவ்வொரு தருணமுமே ஒரு முழூக் கவிதை ஆகும் அருகதை கொண்டது; கவிதையாகவோ கதையாகவோ சொல்லும்போது கருத்துகளின் வறட்டுத்தன்மை மட்டுமல்ல, கூர்மையும், குரூரமும்கூடக் குறைந்து கனிய வாய்ப்புண்டு’ என்று எண்ணுபவன்…

ரிச்சர்டுக்கு  ‘இந்தப் பயல் சரியாய் வேகாத உருளைக்கிழங்கு’ என்று  அபிப்பிராயம். எனக்கோ மற்ற ஆசாமி  ‘ஒரு  கிளையில் நிச்சிந்தையாய் அமர முடியாத, மூலவியாதி பீடித்த குரங்கு’ என்று எண்ணம். மாறி மாறிக் குதறிக்கொள்வோம். ஆசிரியர் வெற்றுப் பார்வையுடன் கவனித்துக்கொண்டிருப்பார். ’அட, நம்மை ஆதரிக்க வேண்டாம்; முகத்தையாவது தர்மசங்கடமாக வைத்துக்கொள்ளக் கூடாதா’ என்பது என் ஆற்றாமை.

நான் ஆன்மிகம் பேசினால் ரிச்சர்டு இடது சித்தாந்தம் பேசுவார்; நான் ஊழியர் சங்கம் பற்றிப் பேச்செடுத்தால், அவர் சைவ மடங்கள் பற்றிப் பேசுவார். நான்   மாஜிக்கல் ரியாலிசம் என்றால், அவர் சிலுவைப் போர் என்பார். நான் க்வாண்ட்டம் இயற்பியல் என்று பேச்செடுத்தால், அவர் சோழர் கால விவசாயம்  என்று  தாவுவார். நான் தயங்கிய குரலில் ஐய உணர்வோடு உதிர்க்கும் வாக்கியங்களை, கண்மூடித்தனமான ஆவேசத்துடன் மட்டையடியாய்த் தகர்த்தெறிவார். அவருடைய முழுநேர அக்கறை, எனக்கு எதிர்நிலை எடுப்பது மட்டுமே என்று உணர்ந்து நான் தணிந்தபோது, திரை அலுவல்களை முன்னிட்டு, தலைநகருக்கு  இடம் பெயர்ந்திருந்தேன். ஓரளவு பெயரும் ஈட்டியிருந்தேன்.

ஊரை நீங்கிய நாட்களில், ஆசிரியரைத் தொலைபேசியில் அடிக்கடி  அழைப்பேன். நெடுநேரம் பேசுவேன். பேருக்குக்கூட, ரிச்சர்டு பற்றி விசாரித்ததில்லை; ஆர்வமிருக்காது.

ரிலிருந்த காலத்தில் ஒருநாள், நானும் ஆசிரியரும் தனியாக மாலைநடை போனோம்.

அந்தாளு  அவ்வளவு வன்மத்தோடெ தாக்குறாரு. நீங்க பேசாமெ இருக்கீங்களே?

என்று ஆதங்கமும் விசனமும் பொங்கும் தொனியில் கேட்டேன்.

அப்பிடியா! அதுக்குப் பேருதான் வன்மமா? நீ சொல்லித்தான் தெரியுதுப்பா!

என்றார் மிருதுவாக. குரலில் குறும்போ, கரிசனமோ இல்லை. அத்தனை சகஜபாவத்துடன் இருந்த வெகுளியான முகத்தை எதிர்கொள்ள எனக்குத் தெரியவில்லை… நடை முடிந்து அவர் வீட்டு வாசலுக்கு வந்தபோது எனக்கொரு புத்தகம் தந்தார்.

ஆப்பிரிக்க நாடொன்றின் ராணுவ மற்றும் அரசியல் நிகழ்வுகளை விவரிக்கும் நூல். போலிப் பெயர்களில் கள்ளப் பாஸ்போர்ட் தாங்கிய முன்னாள் உலகப்போர் வீரர்களின் பட்டாலியன் ஒன்றை உருவாக்கி, ஜனநாயகம்  கோரும் கொரில்லாப் படையை சமாளிக்க அனுப்புகிறது  அரசாங்கம்.

எத்தனை கொடூரத்தையும் நியாயப்படுத்துவதற்கு பிரத்தியேக தர்க்கம்  இருக்கத்தான் செய்யும் என்பதற்கு முன்னுதாரணமான நூல் அது.  அழுத்தமான மனப்பதிவை உருவாக்கிய புத்தகத்தின் பெயரோ எழுதியவர் பெயரோ எனக்குக் கொஞ்சமும் நினைவில்லை என்பதே விசித்திரம்தான். ஆனால், கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் ஓடிவிட்டனவே… கேட்டு எழுதியவர் பெயரும், நேரடி அனுபவங்களை நேரில் பகிர்ந்துகொண்ட முன்னாள்  போர்க் குற்றவாளியின்  பெயரும்கூட நினைவில்லை. பின்னவருடையது, உச்சரிக்கக் கடினமான ஜெர்மானியப் பெயர் என்று  நினைவு…

ஒரு எதிர்மறையான ஆசையின் பிரகாரம் வாசித்து முடித்தேனே தவிர, மனப்பூர்வமாக அதனுடன் ஒன்ற முடியவில்லை என்னால்.

என்று ஆசிரியரிடம் நான் சொல்லும்போதுதான் அந்த நூலை ரிச்சர்டும் வாசித்திருக்கிறார் என்று தெரிந்தது. அவருடைய கருத்து இது:

ஆனால், வெளிப்படையாக உலகமே எதிர்த்துக் கரித்துக்கொட்டும் ஹிட்லர் மாதிரியான ஒரு மனிதனை, தாட்சண்யமில்லாமல் ஒரு இனத்தையே அழிக்கப் புறப்பட்ட ஒரு கோட்பாட்டை, பின்தொடர்வதும், அந்த மனிதனின்  செயல்களை நியாயப்படுத்துவதும் நடைமுறை அரசியல் சரித்தன்மைக்கு எத்தனை எதிரானது! அதைச் செய்ய எவ்வளவு துணிச்சல் வேண்டும்…

என்றார்! ரிச்சர்டின்  ஆங்கிலத் திறன்மீது எனக்கு மோகமே உண்டு…

முன்னாள் சகாவும்,  இனிய விரோதியுமான ரிச்சர்டின்  குடும்பத்தில் ஒருவர்    மாண்ட செய்தி,  ஒரு பொது நண்பர்மூலம் கிடைத்தது. அந்தக் கணத்தில் என் கண்களில் நீர் துளிர்த்தது. மேற்படி நூலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த நாள் மறுபடியும் நினைவில் எழுந்தது.  புத்தகத்தைப் பற்றி விவாதித்த அன்று எங்கள் ஆசிரியர் சொன்னார்:

நடைமுறையாய் வெளித்தெரியும் மனிதனுக்கு ஒரு அரசியல் சரித்தன்மை இருக்கிறது என்றால், பூடகமாக எல்லாருக்குள்ளேயும் இருக்கும் ஒரே மனிதனுக்கும் ஒருவித சரித்தன்மை இருக்கத்தான் செய்யும் போல. அதைத்தான் மானுட அறம் என்று சொல்கிறார்களோ?…

இப்படி அவர் சொல்லக் காரணம், அந்த நூலிலுள்ள இரண்டு தருணங்கள்.     

குரூரமான போர்த்தந்திரங்களை வகுக்கிற, தாட்சண்யமின்றிச் சுட்டுத்    தள்ளுகிற; தனக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமற்ற நாட்டின் சுதந்திரப் போராளிகளைக் கொத்துக்கொத்தாகக் கொல்கிற; மரணமடைந்த கொரில்லா உடல்களை செத்துப்போன கரப்பான்பூச்சிகளுக்கு நிகராக அவமதிக்கிற அந்த அதிகாரி கலங்கி நிற்கும் ஒரு சந்தர்ப்பம்.

இரண்டாம் உலகப்போர்க் காலம் முதல்  தன்னுடன் தோளோடுதோள் நின்று போரிட்டுவரும்  நெருங்கிய தோழன் கொல்லப்படும்போது நிலைகுலைந்து போவார். அதுவரையிலான சகலத்தையும் முரட்டுத்தனமான சொற்களில் விவரித்துவந்த மொழி சட்டென்று கனிந்துவிடும். கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொள்ள சிரமப்படுவார். இதை நான் குறிப்பிட்டேன்.  ஆசிரியர் தொடர்ந்து பேசினார்:

இறந்தவர்களைப் புனிதராக மதிப்பது எல்லாக்காலத்துக்குமான  மானுட சுபாவம்தானே. அப்புறம், உறவு, நெருக்கம் என்று வரும்போது நிலைப்பாடுகளும் கோட்பாடுகளும் பிரயோசனமில்லாமல் போய்விடுகிறது பாருங்கள்!

நானும் ரிச்சர்டும் தலைகுனிந்து அமர்ந்திருந்தோம்…

இன்னொரு சந்தர்ப்பம், வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வரும் கொரில்லாப் போராளியை இவர்கள்  அவமதிக்கும் இடம். அவனை முழு நிர்வாணமாக்கி, உடம்பு முழுக்க பயனெட்டாலும், கொளுத்திய சிகரெட் முனைகளாலும் துன்புறுத்துகிறார்கள். நாலாமவர் மட்டும் இதில் பங்கெடுக்க மனமின்றி தனியாய் அமர்ந்திருக்கிறார். அவரேதான்; மேலே ஒரு பத்தியில் இறந்துபட்டு, மேற்சொன்ன நூலின் நாயகரான அதிகாரியைக் கலங்க வைத்தவர். இவர்களுடைய சித்திரவதை எல்லை மீறும்போது, சட்டென்று எழுகிறார். இடுப்பில் செருகிய கைத்துப்பாக்கியை உருவி, வதைபடும் மனிதனை மூன்றுமுறை சுட்டுக் கொல்கிறார். உடனடியாக முழந்தாளிட்டு, தேவலோகத்தை நோக்கிக் கையுயர்த்திப் பிரார்த்திக்கிறார் – பாவமன்னிப்புக் கோருவதுபோல.

அதுவரை, மரணத்தை தண்டனையாக வழங்கிவந்த மனிதன், அதையே  விடுதலையாக மாற்றிய தருணம் எனக்குள் புதிய குமிழி ஒன்றை உடைத்துத் திறந்தது. 

ரிச்சர்டுமீது  எனக்கிருந்த புகார் இன்னது என்றும் இப்போது புரிகிற மாதிரி இருந்தது. ஒரே கூட்டுக்குள் வசித்தாலும், ரிச்சர்டு என்னை நண்பனாய்க் கருதவில்லை என்ற ஆதங்கம்தானோ அது…

                                    3   

மேற்கண்ட அத்தியாயத்தின் சாராம்சம் அவ்வளவுதான். இதில் ’ரிச்சர்டு’ என்ற புனைபெயரில் குறிக்கப்படும்  நபர் நானேதான் என்பதைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் அல்லவா! அதனாலேயே மேற்சொன்ன  அத்தியாயம் என்னை ஈர்த்தது என்பதையும் கண்டுபிடித்திருப்பீர்கள்!!…  சண்முகம் குறிப்பிடும் ’மாண்டவர்’ வேறு யாருமில்லை; தகப்பனார் மரணத்துக்குப் பிறகு என்னை வளர்த்த என் சொந்த அண்ணனேதான். அவருக்கும் எனக்கும் இருந்த விருப்பும் வெறுப்புமான உறவு ஊரறிந்த ரகசியம்…

அதை விடுங்கள், சண்முகநாதனின் மேற்சொன்ன அத்தியாயத்தை வாசித்தபோது எனக்குள் உயர்ந்த ஆச்சரியத்தைச் சொல்லி மாளாது. இப்படியொரு பணிவும், பார்வையும் உள்ள மனிதர் நேரில் ஒருமுறைகூட வெளிப்பட்டதேயில்லையே என்ற ஆச்சரியம்.  அதைவிட, நான் சொன்னவற்றைத் தான் சொன்னதாகவும், தான் சொன்னவற்றை நான் சொன்னதாகவும் மாற்றிச் சொல்கிறாரே, மறதிக் கோளாறா, சமத்காரமா என்ற ஐயம் வேறு உறுத்தியது…

போகட்டும், சண்முகநாதனையும் என்னையும் ஒருசேரக் கவர்ந்த அந்த நூலை முதன்முதலில் வாசித்தபோது, இனம் புரியாத ஒருவிதப் பரவசம் எனக்குள்ளும் திக்குமுக்காடியது. அந்த நேரத்தில், ஒரு சிறு மதிப்புரைபோல எழுதி வைத்திருந்தேன்.  அதிலுள்ள தகவல்களை இந்த இடத்தில் கொடுத்தால் பொருத்தமாய் இருக்கும் என்று தோன்றுகிறது.

சண்முகநாதன் குறிப்பிடும் நூலின் பெயர், Messenger of Death. (’யமதூதன்’ என்று மொழிபெயர்க்கலாமா – வெளிவந்த காலத்துடன் பொருத்திப் பார்த்தால்,மிகப்  பொருத்தமாக இருக்கும்!) ஜோஸஃப் ஸிம்மர்மான் என்பவர் கூற, ராபர்ட் ஸ்மித் என்பவர் தொகுத்து எழுதியது. இரண்டாம் உலகப் போரின் முடிவில், போலந்தில் இருந்த ஜெர்மானியத் தளபதிகளில் ஒருவர் ஸிம்மர்மான்.  கூட்டுநாடுகளின் படையிடம் சரணடையும்படி மேலிடத்திலிருந்து உத்தரவு வருகிறது. அதற்கு  ஓரிரு மணிநேரத்துக்கு முன்பே, நிகழவிருப்பதை அனுமானித்து,  தப்பிச்செல்லும் நால்வரில் ஒருவர். மேற்சொன்ன நூல் அவர் விவரிக்கும் போர் அனுபவங்கள் பற்றியதே.  ’நால்வர் பற்றிய விபரங்களைக் கேட்டு யாரும் தம்மை அணுக வேண்டாம்’ என்று இந்நூலின் ஆசிரியரும் பத்திரிகையாளருமான ஸ்மித் கறாராகச் சொல்கிறார்.

வியட்நாம் யுத்தத்துக்கு எதிராக ஒட்டுமொத்த அமெரிக்காவும் திரண்டெழுந்தபோது, அதை சமனப்படுத்துவதற்காக அரசு முகமை ஒன்று வேண்டிக்கொண்டதற்கேற்ப, தினத்தாளில் எழுதப்பட்ட கட்டுரைத் தொடர் இது; பரவலான வாசக கவனத்தைக் கவரும் உத்தேசத்துடன், புனைவான தகவல்கள் சிலவற்றையும் சேர்த்திருப்பதாக, ஒருவிதப் பாவமன்னிப்புக் கோரும் தொனியில் தகவல் தெரிவிக்கிறார். இப்போது இந்தப் புத்தகத்தின் அடிப்படை பற்றியே வாசகருக்கு சந்தேகம் ஏற்படுவது இயல்புதானே!

பல்வேறு இடர்களுக்குத் தப்பி, போர்க்களத்தினளவு தீவிரமானதும், ஆனால் பலமடங்கு ரகசியமும் சதியும் கொண்டதுமான சிறு காலகட்டத்துக்குப் பிறகு, சகாக்கள் நால்வரும் ஆப்பிரிக்க தேசமொன்றில் தலைமறைவாகிறார்கள். மக்கள் புரட்சியின் அறிகுறிகள் துளிரிட்டுவிட்ட, மும்முனை உரசல் நிகழ்ந்துகொண்டிருக்கும் சிறு தேசம். சர்வாதிகாரியான அதிபரின் தரப்பு, அவரின் ஆதரவு ராணுவம்; உரிய தருணத்தில் அரசைக் கவிழ்த்துவிட்டு, பதவியேற்கத் துடிக்கும் ராணுவ அதிகாரிகள் குழுவும், அவர்களது ஆதரவுத் துருப்புகளும்; இந்த இரண்டு தரப்புக்கும் எதிரான, மக்களாட்சியை நிறுவத் துடிக்கும் கொரில்லாப் படையினர். இதில், அபூர்வமான சுவாரசியம் ஒன்று ஒளிந்திருக்கிறது. மூன்று தரப்பும் ஒரே மதம் சார்ந்தது; ஒரே இனத்தவர்கள்; ஒரே மொழி பேசுகிறவர்கள். அவரவர் நியாயத்தின் பிரகாரம் மற்ற இரண்டு தரப்புடனும் ஓயாமல் சண்டை வளர்க்கிறார்கள்!

தலைமறைவான சகாக்கள் நால்வரும், பல்வேறு காய் நகர்த்தல்கள் மூலம், அதிபர் தரப்பின் காவலர்கள் ஆகிறார்கள். வேறு பெயர்கள்;  வேறு அடையாளங்கள்; வேறு பாஸ்போர்ட்கள். ஸிம்மர்மானின் வார்த்தைகளில்,

உலகப்போர் முடிவுக்கு வந்திருக்கலாம்; வேறு முனையில், வேறு எதிரிகளுடன், எங்கள் யுத்தம் தொடரவே செய்தது…

உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருக்கும் கொரில்லாப்படையை ஸிம்மர்மானும் அவருடைய அணியும் எதிர்கொண்ட விதமே இந்த நூல். ’எதிர்மறை வீரத்தை விதந்தோதுவது’  என்று சொல்லலாம். சிறுகச் சிறுக, இரண்டாம் உலகப்போரில் பங்கெடுத்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த  முன்னாள் வீரர்கள் மட்டுமே கொண்டதாகிறது அந்த அணி.

      ஸிம்மர்மானின் நண்பர்கள் ஒவ்வொருவராகக் கொல்லப்படும்போது நூலின் தொனி, மொழி, நிகழ்வுகளை விவரிக்கும் கோணம் என்று எல்லாமே மாறிவிடுகிறது -மாவீரனின் மரணத்தைக் காவியங்கள் விவரிக்கும் தொனி சேர்கிறது –    கொலைகாரர்களின் தர்க்கம் எவ்வளவு வேறுபட்டு இருக்க முடியும் என்பதற்கான உடனடிச் சான்றாக.  மரணம்கூட ஒற்றைத்தன்மை கொண்டது அல்ல, விருப்புவெறுப்புகளின் அடிப்படையில் வேறுவேறாகத் தோற்றம் தருவது என்ற உண்மை வாசிப்பவரின் முகத்தில் அறைகிறது; ஒருவித ஆயாசத்தைத் தொற்ற வைக்கிறது. உண்மை என்பது வெளிச்சம் மட்டுமே அல்ல என்பது இன்னொரு முறை ருசுவாகிறது…

ஆனால், நேர்ப்பழக்கத்தில் எதிரெதிர்த் துருவங்களாக இருந்த  சண்முகநாதனையும்  என்னையும் ஒரேவிதமாகத் தொந்தரவு செய்த சம்பவம் ஒன்றேதான் என்பது எனக்கு மட்டுமேயான கூடுதல் வியப்பு.

                                    4

த்தனை  முறை அந்தப் புத்தகத்தைப் படித்திருப்பேன் என்று சொல்லவே முடியாது. மனம் சோர்வுறும்போது சில தடவை; பெரும் உற்சாகத்தில் பொங்கும்போது சில தடவை என்று வாசிக்கத் தொடங்கி, ஏழெட்டு முறை முழுசாகவே படித்திருக்கிறேன். ’அதெப்படி, இரண்டு எதிரெதிர் மனநிலைகளுக்கு  உகந்ததாக ஒரே புத்தகம் இருக்க முடியும்?’ என்று கேட்பவர்களுக்கு, வேறு புலத்திலிருந்துதான் உவமை சொல்ல வேண்டும் – சாமானிய மனிதன்  கோவிலுக்குப் போவதை எண்ணிப் பாருங்கள்.

இந்த இடத்தில், இன்னொரு இடையீடு அவசியமாகிறது. அந்தப் புத்தகம் பற்றி நான் சொன்ன பெயர்கள் அனைத்துமே உண்மையானவை. இந்த இடத்தில் இதைச் சொல்ல இரண்டு காரணங்கள். 1. ஏற்கனவே என்னுடைய கதைகள் சிலவற்றில்,  புனைவான நூல்களின் பெயர்களை, எழுதியவர்கள் விவரங்களைத் தெரிவித்ததுண்டு.  என் கதைகளைப் படிக்க நேர்ந்த அபூர்வ வாசகர்கள் மேற்படிப் புத்தகங்களை கூகிளில் தேடி ஏமாந்த சந்தர்ப்பங்களைப் பின்னாட்களில் என்னிடமே சொல்லிச் சிரித்திருக்கிறார்கள். 2. இந்தக் கதையில் உள்ள விபரங்களை நம்பி, ‘ராஜாளி’யைப் பற்றிய அனுமானங்களில் இறங்கிவிட வேண்டாம். அவர் தொடர்பான அத்தனையையும் மாற்றியிருக்கிறேன் – எனது பெயரை ‘ரிச்சர்டு’ என்று அவர் மாற்றியதற்குப் பழிவாங்குகிறேன் என்று  நினைத்துவிடாதீர்கள்,  தயவுசெய்து.

அல்லது, பிரமுகர் என்பதால். தமக்கு நினைவில்லை என்று சண்முகநாதன் வழுக்கிச் செல்லும் இடங்களை ஆணியடித்ததுபோன்ற தகவல்களால் நிரப்பிக் காட்டி அவர் முகத்தைக் கிழிப்பதற்காகவோ  என்றும் நினைத்துவிட வேண்டாம்; நானே ஒருவேளை பிரமுகர் ஆனாலும், ஒருவிதமான அரசியல் சரித்தன்மைக்கு ஆளாகத்தான் வேண்டிவரும்… அதுதான் முன்னமே சொன்னேனே  – சண்முகநாதனின் விவரிப்பில், அவர் பேசியதாக வரும் வாசகங்கள் அனைத்துமே நான் பேசியவை! ரிச்சர்டு கூறியதாக அவர் சொல்கிறவை, சாட்சாத் சண்முகநாதனின் வாதங்களேதான்!

’அத்தனை தடவை படித்த நூல் என்றால், கிட்டத்தட்ட மனப்பாடம் ஆகியிருக்குமே அய்யா; இதில் வியக்க என்ன இருக்கிறது’ என்று ஒருவர் கேட்டாலும் நியாயம்தான். எனக்கு அப்படி மனனம் ஆகவில்லை; இதற்கும் வேறு புலத்திலிருந்துதான் பதில் சொல்ல வேண்டும். சாஸ்திரீய இசை கேட்பவர்களுக்குத் தெரியும்; ஒரு மணிநேர ராகம் தானம் பல்லவியைத் திரும்பத் திரும்பக் கேட்பதில்லை? சில இடங்களில் மனம் ஒட்டி நிலைக்கும்; மிகப் பல இடங்களில் மனம் தன்னிச்சையாய்ப் பறந்து திரியத் தொடங்கும். அந்த இடங்களை அடுத்த முறை கேட்கும்போது, புதிதாய்க் கேட்கிற மாதிரி இருக்காதா!

கடைசியில், புத்தகம் பற்றிய விவரிப்பு,  புத்தகத்தைவிட நீளமாகிவிடுமோ என்று கவலையாய் இருக்கிறது!

ரண்டாவது நூல், Seasonal Deserter. ’தற்காலிக துரோகி’ என்று    தற்போதைக்கு மொழிபெயர்க்கலாமா! 1988ல் வெளிவந்தது.  ஆசிரியர், அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர். மோஜிம்போ என்ற பெயரில் நூல் வெளியாகியிருக்கிறது – அது அவரது உண்மைப் பெயர் இல்லை என்று பதிப்பாளர் குறிப்பு சொல்கிறது.

பரம்பரை அதிபராட்சியின் சர்வாதிகாரம் தாளாமல் கிளர்ந்தெழும் ஜனசமூகம், தானறியாமலே, ராணுவத் தலைமையின் கொடுங்கோன்மையிடம் சரணடையும் நகைமுரண் விசித்திரமானது.

இரண்டு நூல்களும் வாசகருக்குள் உருவாக்கும் அதிர்வலைகள் வெகுகாலம் நீடிக்கக் கூடியவை. புத்தகங்களுக்கு வெளியில் விரிந்து கிடக்கும் நிஜ உலகத்தை பயங்கரமானதாக ஆக்கிக் காட்டக்கூடியவை.

நாகரிகமடைந்த ஒரு சமூகம் எவ்வளவு விரைவாக விரோதிகளை உருவாக்கிக்கொள்கிறது – அவர்களைப் பேணும் விதமாக எவ்வளவு குரோதத்தை ஓயாமல் வெளிப்படுத்துகிறது என்ற வியாகூலம்  வாசிப்பவர்களுக்குள் மிகுவதற்கு வாய்ப்புண்டு. இந்த ’வியாகூலம்’ என்ற சொல் எப்போதுமே எனக்குள் இருந்து வந்திருக்கிறதா, இந்தச் சந்தர்ப்பத்துக்காக என்று புதிதாக முளைத்து வந்ததா என்று வியப்பாய் இருக்கிறது…

தனிமனிதர்களைக் குற்றம் சொல்வது சுலபம். ஆனால், இது தனிமனித மனங்களைத் தாண்டி வெகுதூரம் ஆழச் செல்லும் சமாசாரம் என்றுதான் சொல்லவேண்டும். பரிணாமத்தின் பாதையில் பல படிகளை சர்வசாதாரணமாகக் கடந்து வந்திருக்கும் மனிதப் பிரக்ஞை,  தனக்குத்தானே எதிர்நிலைகள் எடுத்து தன்னைத்தானே குதறிக்கொள்ளும் விந்தை, அதன் இரட்டைநிலை, ஒருபோதும் புரிந்துகொள்ளவியலாத புதிராக மாறிக்கொண்டே செல்கிறது.

நோய் தீர்க்கவும், ஆயுளை நீட்டிக்கவுமான ஆய்வுகளுக்கு அமைக்கப்படும் சோதனைச்சாலைகளுக்கு நிகராக, காரணமறியாத ஜனங்களைக் கொத்துக்கொத்தாக அழித்தொழிப்பதற்கு ஆயுதங்களைக்  கண்டறியவும், வடிவமைக்கவும் ஓயாமல் இயங்குகிற சோதனைச்சாலைகளும் நிறுவப்படுகின்றன. உண்மையில் மனிதப் பிரக்ஞையைவிடத் தன்னை வருத்தி இன்புறும் (masochist என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ்க் கருத்துரு) இன்னொரு வியக்தியைக் காண முடியும் என்று தோன்றவில்லை. மெய்யான பிரபஞ்ச ரகசியங்களில் ஒன்று அது.

கட்டுரை நெடியின் விகிதம் அதிகரித்துவிட்ட மாதிரி எனக்கே மூச்சுத் திணறுகிறது. மோஜிம்போவின் நூலிலிருந்து சில தகவல்களைச் சொல்கிறேன். புனைவுக்கு நிகரான வசீகரம் கொண்ட தகவல்கள் அவை…

கொரில்லா இயக்கத்தின் சிவில்சமூக உறுப்பினராக இருக்கிறார் மோஜிம்போ. அதேநேரம் அரசு  ஊழியராகவும் இருக்கிறார். அரசாங்கத்தின் தகவல்தொழில்நுட்பத் துறையில் பணிபுரிகிறார். ரகசியத் தகவல்கள் பலவும் இவர்மூலமாகவே சங்கேத மொழிக்கு மாற்றமுறுகின்றன.  உடனுக்குடன் கொரில்லாத் தலைமைக்கும் இடம்பெயர்கின்றன.  இது பலகாலம் நடந்து வருகிறது. ஒரு இடத்தில் அவர் சொல்கிறார்:

என் நாட்டு மக்கள் அனைவரும் நிச்சிந்தையாக உறங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் நான் இரவு முழுக்க விழித்திருந்து, சங்கேத மொழிக்குப் பெயர்த்தவற்றை நடைமுறை மொழிக்கு மீண்டும் பெயர்த்துக்கொண்டிருப்பேன்… அந்த வேளைகளில் இறையுணர்வும், தேசத்தின்மீதான பற்றும் எனக்குள் அதிகரித்துக்கொண்டே போகும். அடுத்த அறையில், குறட்டைவிட்டு உறங்கும் என் அன்பு மனைவியின்மீதான காதலும்கூட அளவற்றுப் பெருகும்…

’மோஜிம்போ’ என்றால் அவர்கள் மொழியில் ‘ஆந்தை’ என்று பொருள் என்பது  உபரித் தகவல். சுவாரசியமான இன்னொரு தகவல், அந்தச் சொல்லுக்கு அதே தேசத்தின்  இன்னொரு பிராந்தியப்  பேச்சுவழக்கில் ‘வவ்வால்’ என்று பொருளாம்! இரண்டு சொல்லையும் ’இரவுப் பிராணி’ என்ற பொதுப்பொருள் இணைக்கிறதோ என்பது என்னுடைய ஐயம்; நிரூபணம் கிடைக்காதது.

திடீர்த்தாக்குதல் நடத்த எப்போது போனாலும், முன்னமே தெரிந்திருந்தது போன்ற தயார்நிலையில் போராளிக்குழு  இருப்பதும், கணநேரத்தில் விமரிசையான எதிர்த்தாக்குதலில் ஈடுபடுவதும் அரசுத் தரப்புக்கு விந்தையாய்ப் படுகிறது. நாளடைவில், இரு தரப்பு  ஒற்றர்  இன்னார்தான்  என்று கண்டறிந்துவிடுகிறார்கள்.

அதிபர் அலுவலகத்திலிருந்து அழைப்பு என்ற மாத்திரத்தில், அச்சத்தின் பேரலை மோதி, திக்குமுக்காடுகிறார் மோஜிம்போ. மனைவியிடம் எச்சரிக்கையாய் இருக்கும்படி சொல்லிவிட்டு, அவருடைய வெளிறிய முகத்தைக் கண்மல்கப் பார்த்தபடி புறப்பட்டுப் போகிறார்.

நடுங்கிக்கொண்டே போன மனிதர், முகம் முழுக்கச் சிரிப்புடன் திரும்பி  வருவதை நம்பமுடியாமல் பார்க்கிறார் மனைவி. அன்றிரவிலிருந்து மோஜிம்போவின் பணிச்சுமை இரட்டிப்பாகிறது. இரவுகளின் முதல் பாதியில் போராளித் தரப்புக்கும், இரண்டாம் பாதியில் அரசுத் தரப்புக்கும் உளவுவேலை செய்கிறார். ஆனால், முன்யோசனையாக, தன் மொத்தக் குடும்பத்தையும் சுற்றுலா மற்றும் கல்விக் காரணங்களை முன்னிட்டு, தாமே நாடு கடத்துகிறார்…

நூலின் கடைசி இரண்டு அத்தியாயங்களில் நம்பமுடியாத திருப்பங்கள் நிகழ்ந்தேறுகின்றன – ஒன்று, அரசுத் தரப்பும் போராளித் தரப்பும் தங்கள் பொது எதிரியை எதிர்கொள்ளும் பொருட்டு சமரசப் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. வல்லரசு ஒன்றின் ஆதரவுடன் ராணுவப் புரட்சி நடத்தி ஆட்சியைக் கைப்பற்றும் திட்டத்தில்  ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளின் குழுவே அந்தப் பொது எதிரி.

பேச்சுவார்த்தையின்போது இன்னொரு ஒப்பந்தமும் போடப்படுகிறது – இரு தரப்பினரதும் உளவாளிகளை எதிர்த்தரப்பு வசம் ஒப்படைக்கவேண்டும். இரண்டு பட்டியலிலும் மோஜிம்போவின் சொந்தப் பெயர் ஒரே முகவரியுடன் இருப்பது இரு தரப்புக்குமே ஆச்சரியம் விளைவிக்கிறது!

கடைசி அத்தியாயம் சற்று நீளமானது. அதில் இடம்பெறும்  திருப்பங்களை உலகின் முன்னணி மர்மக் கதாசிரியர்கள்கூடக் கற்பனை செய்துவிட முடியாது..

மேற்படிப் பட்டியல்கள் இரண்டினதும் உள்ளடக்கம், மூன்றாம் தரப்புக்கு  அப்போதே கிடைக்கிறது! ’எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற ஜகப்பிரசித்தமான  பொதுவிதியின்  பிரகாரம், மோஜிம்போவின் பாதுகாப்பைத் தன்வசம் எடுத்துக்கொள்கிறது, ராணுவப் புரட்சிக்குழு. பார்க்கப்போனால், மாற்றுத் தரப்புகள் இரண்டுக்குள்ளும் குழப்பத்தையும் சேதத்தையும் விளைவித்த தீரனல்லவா மோஜிம்போ!

அண்டை நாட்டுடனான வர்த்தகப் போக்குவரத்துக்குக் காவல் செல்லும்   ராணுவக் கவச வண்டிக்குள் பத்திரமாக எல்லை தாண்டும் மோஜிம்போ, அங்கிருந்தே, மனைவிமக்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் வல்லரசு நோக்கி ஆகாய விமானத்தில் பறக்கிறார். சுபம்.

உபரியாக இரண்டு செய்திகள். ஒன்று, நிகழ்வுகளின் வேகத்தால் தலை  கிறுகிறுத்து குறுக்கெழுத்துப் புதிரின் மையத்தில் சிக்கிய மாதிரித் திகைத்தேன். கடைசி நாலைந்து அத்தியாயங்களை இரண்டாவது தடவை படித்தே புரிந்துகொண்டேன்.

இரண்டாவது, அதிபர் மாளிகையின் அழைப்பு கிடைத்ததிலிருந்து, வல்லரசின் விமான நிலையத்தில் வந்து இறங்குவதுவரை, தமது மனத்தை முழுக்க நிரப்பியிருந்ததாக மோஜிம்போ குறிப்பிடும் ஓர் அம்சம்: அவருடைய ஆறாவது குழந்தையின் மழலைக் குரல். குடும்பத்தினரை யாராவது காட்டிக்கொடுத்துவிடுவார்களோ என்ற அச்சமும் இருந்துகொண்டே இருந்ததாம்…

தொகுக்கும் விதமாக சில விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன்.

நேருக்கு நேர் மோதுவதைத் தனது அறம் என்று கருதியவர் ஜோஸெஃப் ஸிம்மர்மான்.

காட்டிக்கொடுத்தலை அறமாக வரித்தவர் மோஜிம்போ.

அப்புறம், இரண்டு நூல்களுக்கும் இடையில் முப்பதாண்டு இடைவெளி இருந்தாலும், இரண்டும் ஒரே நாடு, ஒரே சூழலைப் பற்றியவையோ என்ற என் சந்தேகம். இரண்டு நூல்களிலும், இதை ருசுப்பிக்கும் எண்ணற்ற தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன – சில இடங்கள் வெளிப்படையாக இல்லாவிட்டாலும், உணரமுடிகிற விதமாக தொனிக்கின்றன.   இன்னமும்  அதே சூழ்நிலை அங்கே நீடிக்க வாய்ப்பிருக்கிறது என்றும்கூடப்  படுகிறது.  

ஆனால், என் கவனம் சென்று ஊன்றிக்கொள்வது வேறொரு விஷயத்தில். பொதுச்சொற்களை உருவாக்கவும் பேணவும் புழங்கவும் மனிதப்  பிரக்ஞை படும் பாடுதான் எத்தகையது! அதன் பலனாகத்தானே நான் கல் என்று சொன்னதும் எதிர் மனம் பாறையையோ மணல் துகளையோ அன்றி, தோராயமான பருமனும்  வடிவமும் கொண்ட,  ஒரு கல்லையே உருவகித்துக் கொள்கிறது. ஒருபோதும் தண்ணீரையோ மரத்தையோ கற்பிதம் செய்துகொள்வதில்லையே – எப்பேர்ப்பட்ட சீர்மை இது!

ஆனால், அதே பிரக்ஞையின் இன்னொரு பகுதி சொற்களை அர்த்தமிழக்க வைக்கும் முழுநேரப் பணியில் ஈடுபட்டிருக்கிறது. கருத்தாக்கமாக நிலைபெற்றுவிட்ட ஒற்றைச் சொற்களைப் பேரார்வத்துடன் அழித்து வருகிறது – தான் பிறப்பித்தவையேதாம் அவை என்றபோதிலும். எத்தனை உதாரணங்கள்! உண்மை, ஆன்மா, நீதி, அறம்!

எல்லாருக்குமான பொது அறமோ, பொது நீதியோ எந்தக் காலத்திலாவது உருவாகவும், நிலைபெறவும் முடியுமா என்ன! இலக்கியமும், அதன்   மையத் தாதுவான கவித்துவமும்கூட வெறும் வார்த்தையளவில் நின்றுவிடும்போது அதன் நடைமுறை சாத்தியங்களை நோக்கி நகரும் இன்னொரு தரப்பு ஆசைஆசையாய்க் களத்தில் இறங்கி செயல்படுகிறது…

உண்மையில், மேற்சொன்ன இரண்டு நூல்களையும் படித்து முடித்த   மாத்திரத்தில், ‘எல்லாருக்குமானது’ என்று எதுவுமே எஞ்சாதோ என்று அச்சமாய் இருக்கிறது.

அல்லது, ’எல்லாரும்’ என்ற ஒன்றே கிடையாதோ என்னவோ!

***

யுவன் சந்திரசேகர்

தமிழ் எழுத்தாளர், கவிஞர். பின்நவீனத்துவ அழகியல் கூறுகளைகொண்டு எழுதிய முக்கியமான படைப்பாளி. எம்.யுவன் என்ற பெயரில் கவிதை எழுதினார். மாற்றுமெய்மை என யுவன் சந்திரசேகர் வரையறை செய்யும் ஒருவகை மாய யதார்த்தத்தை அவருடைய படைப்புகள் வெளிப்படுத்துகின்றன.

தமிழ்விக்கியில்

1 Comment

  1. இக்கட்டுரை எழுத்தில் சொல்லப்பட்ட புத்தகங்களின் தகவல் மெய்யானவயா? திருத்தம் செய்யப்பட்டதா?

உரையாடலுக்கு

Your email address will not be published.