/

ஈழத்தில் சைவம் : வி.துலாஞ்சனன்

ஒரு வரலாற்றுப் பார்வை

“நாம் இந்தியாவின் மலபார்க் கரையிலும் குமரிமுனையின் இருபுறமும் உள்ள தூத்துக்குடி, திருவிதாங்கோடு, கொல்லம், காயாங்குளம், கொச்சி, கொடுங்கல்லூர், கோழிக்கோடு, கண்ணூர் பகுதிகளிலும்1 மற்றும் சோழமண்டலக் கரை, இலங்கைத்தீவு என்பனவற்றிலுமுள்ள பாகன்களின் சிலை வழிபாடு பற்றிப் பார்ப்போம். ரொஜேரியஸ் சொல்வதன் படி, பிராமணர்களில் ஆறு வகைச் சமயப்பிரிவினர் இருக்கிறார்கள் – வைணவர், சைவர், சுமார்த்தர், சாருவாகர், பாசாண்டர், சாக்தர்2 . [….] முன்பு குறிப்பிட்ட இடங்களில் நான்கு வகைப் பிராமணர்கள் பரவலாக இருக்கிறார்கள். முதல் வகை சாருவாகர் […] இரண்டாம் வகை சுமார்த்தர் […] மூன்றாம் வகை வைணவர் […] நான்காம் வகை யோகிகள். [..] சிலர் விஷ்ணுவை தங்கள் முழுமுதலாகக் கொள்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் இக்சோராவையே தங்கள் முழுமுதலாகக் கொள்கிறார்கள்.”

  • Phillipus Baldaeus

இது பதினேழாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தென்னிந்தியா – இலங்கை பற்றி ஆய்வுகளை மேற்கொண்ட இடச்சு எழுத்தாளர் பிலிப்பஸ் பால்டியசின் (Phillipus Baldaeus) நூலின் ஒரு பகுதி. 1703இல் எழுதப்பட்ட அவரது நூலில் கேரளம், சோழமண்டலக் கரையோரம், இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் எத்தகைய சமயங்கள் கடைப்பிடிக்கப்பட்டன என்பது கூறப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இக்சோரா (Ixora – ஈசுவரன்) பற்றிய விரிவான தகவல்கள் அடங்கியிருக்கின்றன. இக்சோராவையும் சிவலிங்கத்தையும் (Quivelingam) வழிபடும் சமயத்தை யோகிகளின் சமயம் என்றும் சைவம் என்றும் அவர் கூறுகிறார்.

இலங்கையைப் பொறுத்தவரை சைவ சமயத்துக்கும், அதன் முதன்மையான வழிபடு தெய்வமான சிவனுக்கும் நீண்ட வரலாறுண்டு. இலங்கையிலுள்ள சைவர்கள், திருமந்திரத்தை மேற்கோள் காட்டி ஈழத்தை “சிவபூமி” என்று சொல்வார்கள். வரலாற்று அடிப்படையிலும் பார்த்தால், இலங்கையில் மிகப்பழங்காலம் தொட்டே சிவவழிபாடும் சைவ சமயமும் நீடித்து வந்திருக்கின்றன. இங்கு கிடைக்கின்ற தமிழ் – சிங்கள – பாளி இலக்கியங்களையும், ஐரோப்பியர் குறிப்புகளையும், கல்வெட்டு – தொல்லியல் சான்றுகளையும் தொகுத்து நோக்கும் போது, ஈழ நாட்டில் சைவசமயம் எத்தகைய நிலையில் இருந்தது என்பதை மேலோட்டமாக அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

இலங்கையில் கிடைத்துள்ள பொது ஆண்டுக்கு முற்பட்ட3 கல்வெட்டுக்கள், பிராமி எழுத்திலும் தமிழி எழுத்திலும் பொறிக்கப்பட்டவை. பிராமிக் கல்வெட்டுக்கள், சிங்களத்துக்கு முந்திய ஈழப்பாகத (அல்லது இலங்கைப் பிராகிருத) மொழியிலும் தமிழ்க் கல்வெட்டுகள் பழந்தமிழிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இதுவரை வாசிக்கப்பட்டுள்ள தமிழிக்கல்வெட்டுகளில் கணிசமானவை நாகர்களுடன் தொடர்பானவை.

திருக்கோணமலையின் கரைசை எனும் தலத்திலுள்ள சிவலிங்கமொன்றில் பொறிக்கப்பட்டிருந்த “மணிணாகன்” எனும் தமிழி வாசகத்தை பேரா.சி.பத்மநாதன் அண்மையில் வாசித்துள்ளார். மணிநாகன் என்பது நாகர்கள் தங்கள் தெய்வத்துக்குச் சூட்டியிருந்த பெயர். பெருங்கற்கால மற்றும் ஆதி இரும்புக் காலத்துக்குப் பிந்தைய இலங்கையின் வழிபாட்டுச் சின்னங்களிலும் தொன்மையான சைவ – பௌத்த அடையாளங்களிலும் அந்தப்பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.

பௌத்தமும் சைவமும் ஈழத்து நாகரிடையே பரவியபோது, தமது மணிநாகனின் பெயரையே சிவனுக்கும் புத்தனுக்கும் சூட்டியிருக்கின்றனர் என்பார் சி.பத்மநாதன். திருமுறைகளில் சிவனைக் குறிக்க மணிநாகன் என்ற சொல் பயன்படாவிடினும் சிவன் அணிந்த பாம்பைக் குறிக்க “மணிநாகம்” எனும் சொல் எடுத்தாளப்பட்டுள்ளது. இந்த வாசகம் பொறித்த சிவலிங்கம் கிடைத்த கரைசை, இலங்கையில் தலபுராணம் பாடப்பெற்ற முதல் இரு கோவில்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது (மற்றையது திருக்கோணேச்சரம்). “மணிணாகன்” வாசகம் பொறித்த பொபி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த இன்னொரு சிவலிங்கம் யாழ்ப்பாணம் இணுவில் காரைக்கால் சிவன் கோவிலிலும் கண்டறியப்பட்டுள்ளது.

நாகரின் தமிழிக்கல்வெட்டுகள் தவிர, ஈழப்பாகதத்தில் அமைந்த பிராமிக் கல்வெட்டுக்களில் அறுபதுக்கும் குறையாத இடங்களில் “சிவ” என்ற சொல் ஆட்பெயராக வருகின்றது. இந்த எல்லாப் பெயர்களுமே பௌத்தத் துறவிகளுக்கு அளிக்கப்பட்ட தானங்கள் தொடர்பானவை எனும் போதும், சிவன் எனும் பெயரைக் கொண்டோரில் சிலர் பிராமணர்கள் என்பதும் அறியக்கிடைப்பதால், இவர்கள் பௌத்தத்தைத் தழுவமுன்னர் சிவவழிபாட்டில் ஈடுபட்டு வந்தோர் என்ற ஊகத்தை சில அறிஞர்கள் முன்வைக்கிறார்கள். இலங்கை வரலாற்றைப் பாடும் மகாவம்சம் முதலிய பாளி இலக்கியங்களில் மூத்தசிவன், யட்டயால சிவன், மகாசிவன், சந்திரமுக சிவன் முதலிய மன்னர்களின் பெயர்கள் ‘சிவ’ என்ற பெயரைத் தாங்கி வருகின்றன. இவர்களில் மூத்தசிவன் (பொமு 367 – 307), இலங்கையில் பௌத்தத்தை அறிமுகப்படுத்தியதாகக் கருதப்படும் அசோக மன்னன் காலத்துக்கு முந்தியவனாகக் காலம் கணிக்கப்படுகின்றான் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்தசிவனுக்கு முன்னர் அனுராதபுரத்தை ஆண்டு பண்டுகாபய மன்னன் (பொமு 437 – 367) தன் அரண்மனையில் சிவிகசாலை எனும் மண்டபத்தை அமைத்திருந்ததாக மகாவம்சம் பாடும். சிவிகசாலைக்கு “சிவலிங்கக்கோவில்” என்று பொருள் கூறுகிறது மகாவம்சத்தின் உரைநூலான வம்சத்தப் பகாசினி.

பொபி 274 – 301 வரை அனுராதபுரத்தை ஆண்ட மகாசேன மன்னன் மகாயான பௌத்தத்தைக் கடைப்பிடித்ததுடன், அவனால் கோகண்ண, ஏரகாவில, கலந்தனின் ஊர் ஆகிய மூன்று இடங்களில் அமைந்திருந்த பிராமணக் கோவில்கள் சிதைக்கப்பட்டு விகாரங்கள் அமைக்கப்பட்ட குறிப்பு மகாவம்சத்தில் வருகின்றது. அவை மூன்றும் சிவாலயங்கள் என்றும் அவற்றில் கோகண்ண என்பதை திருக்கோணமலை கோணேச்சரம் என்றும், ஏரகாவில என்பதை மட்டக்களப்பின் ஏறாவூர் என்றும் இனங்கண்டிருக்கிறார்கள்.

வரலாற்றுக் காலத்தில் மேற்கு இலங்கையில் இருந்த மன்னார் மாதோட்டமும் கிழக்கு இலங்கையில் இருந்த திருக்கோணமலையும் புகழ்வாய்ந்த வணிகத் துறைமுகங்களாக இருந்தன. மாதோட்டமானது, அனுராதபுரத்தை ஊடறுத்து ஓடிவந்து கடலில் பாய்ந்த அருவியாற்றின் கழிமுகத்தில் அமைந்திருந்தது. இயற்கைத் துறைமுகமான திருக்கோணமலை, மத்திய கால இலங்கைத் தலைநகரான பொலனறுவையை நெருங்கிப் பாயும் இலங்கையின் நீளமான ஆறான மகாவலி கங்கையின் கழிமுகத்தில் காணப்பட்டது. இலங்கைத்தீவினுள் நுழையும் பிரதானமான இந்த இரண்டு நீர்வழி மார்க்கங்களும் துவங்கிய துறைமுகங்களில் கேதீச்சரம், கோணேச்சரம் எனும் இருபெரும் சிவாலயங்கள் அமைந்திருந்தன. இவற்றை பொபி 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தரும் அப்பரும்4 மற்றும் 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரரும் பாடியிருப்பதால், இவை அக்காலத் தமிழகத்திலும் புகழ்பெற்றிருந்ததை உய்த்துணரலாம்.

தாதுவம்சம் எனும் பாளிநூல், மாதோட்டத்தில் மேகவண்ண மன்னன் காலத்தில் (301 – 328) ஒரு சிவாலயம் அமைந்திருந்ததைச் சொல்கிறது. மாதோட்டத்தின் சிங்களப் பெயர் மகாதித்த (வடமொழி: மகாதீர்த்தம்) என்று குறிப்பிடப்படுவதாலும், சில கல்வெட்டுக்களில் மாதோட்டத்தில் பசுவதை புரிந்தோர் பெறும் பாவம் பற்றிய வரி காணப்படுவதாலும், மாதோட்டம் பண்டைக் காலத்தில் சிங்களவராலும் போற்றப்பட்டது என்பதும், மகாதீர்த்தக்கரையான அங்கு நீராடுவது புண்ணியத்தைத் தரும் என்ற நம்பிக்கை காணப்பட்டதும் தெரியவருகின்றது. பின்னாளில் கடல் நீரோட்ட மாறுபாடுகளாலும், அருவியாறு திசைமாறி ஓடியதாலும் மாதோட்டத் துறைமுகம் மண்மூடி மறைந்துபோனது. அதன் எச்சமே இன்றுள்ள பாலாவித் தீர்த்தக்குளம்.

இலங்கையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தலைநகராக நீடித்த அனுராதபுரத்திலும் சிவவழிபாடு இடம்பெற்று வந்திருக்கிறது. அனுராதபுரம் விஜயாராம விகாரத்துக்கு அருகே கண்டறியப்பட்ட சிவாலயமொன்றின் இடிபாடுகளுக்கு மத்தியில் இரு தமிழ்க் கல்வெட்டுக்கள் வாசிக்கப்பட்டன. அவை “குமாரகணத்துப் பேரூர்” எனும் சபையினர் சேக்கிழான் சங்கன், செட்டி சேக்கிழான் சென்னை என்னும் இருவரிடம் கோவிலில் விளக்கெரிக்க ஈழக்காசு பெற்றமையைத் தெரிவிக்கின்றன. இக்கல்வெட்டும் சிவாலய இடிபாடுகளும் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியாகக் காலம் கணிக்கப்படுகின்றன என்பதும், அப்போது இலங்கையில் சோழராட்சி ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 993இற்கு முந்தையதாகக் காலம் கணிக்கப்படும் இராஜராஜ சோழனின் ஒரு கல்வெட்டு திருக்கோணமலை நிலாவெளியிலும், இன்னொரு கல்வெட்டு துண்டமான நிலையில் கோணேச்சரத்திலும் கண்டெடுக்கப்பட்டன. நிலாவெளிக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள “திருக்கோணமலை” என்ற இடப்பெயர் ஆயிரம் ஆண்டுகள் தாண்டி இன்றும் அப்பழம்பதியின் பெயராக நீடிக்கின்றது.

ஆனால் அதே 993இல் இலங்கை மீதான இராஜராஜ சோழனின் பெரும்படையெடுப்பை அடுத்து, இலங்கையின் வடக்கு கிழக்கு நிலப்பகுதி சோழராட்சியின் கீழ் சென்றது. இலங்கையிலிருந்து தஞ்சைப்பெருங்கோவிலுக்கு இலுப்பை எண்ணெயும் நெல்லும் ஏற்றுமதி செய்யப்பட்டதை அக்கோவில் கல்வெட்டொன்று சொல்லும். அப்பொருட்களை ஏற்றுமதி செய்த கணக்கன் கொட்டியாரம் மாப்பிசும்பு கொட்டியாரம் எனும் இரு நிருவாகப் பிரிவுகள், சோழர் காலத்துக்கு முன்பின்னான சிங்களக் கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் கண்டபடி, இன்றைய திருக்கோணமலை சேறுவில் மற்றும் நீலாப்பளை ஆகிய இடங்களை முறையே அண்டி அமைந்திருந்தன என்பது தெரியவந்திருக்கிறது. கணக்கன் கொட்டியாரம் அல்லது கிணிகம் கொத்தசாரத்தைச் சேர்ந்த சேறுவில்லில் இன்று காடுமண்டிப் பாழடைந்து கிடக்கும் திருமங்கலாய் சிவன் கோவில் சூழலிலும் பல சோழர் காலச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சோழரால் கைப்பற்றப்பட்ட வட இலங்கையில் மாதோட்டத்துக் கேதீச்சரம் “இராஜராஜ ஈச்சரம்” என்ற பெயரைப் பெற்றுத் திருப்பணி கண்டது. அங்கு ஒன்பதாம் நூற்றாண்டில் வைகாசி விசாகத்தை இறுதியாகக் கொண்டு ஏழு நாள் திருவிழா இடம்பெற்றதை ஒரு கல்வெட்டு சொல்லும். மாதோட்டத்துக்கு அக்கரையில் இருந்த இராமேச்சரத்தின் தாக்கத்தில், மாதோட்டத்தில் திருவிராம ஈச்சரம் என்ற பெயரில் இன்னொரு சிவாலயமும் இக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சோழர்களின் பின்னணியில் இலங்கையில் குடியேறிய தென்னிந்திய வணிக கணங்களால் பல்வேறு புதிய நகரங்களும் கோவில்களும் அமைக்கப்பட்டன. திசையாயிரத்து ஐநூற்றுவர், வளஞ்செயர் முதலியோர் இத்தகைய புகழ்பெற்ற வணிககணங்கள். கடல்வழி வாணிகத்தில் பாதுகாப்பையும் நிலைபேற்றையும் உறுதிப்படுத்த இவர்களில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த வணிகர்களும் போர்வீரர்களும் கடற்படையினரும் கப்பல் மாலுமிகளும் அடங்கியிருந்தனர் என்பது தெரிகின்றது.

திருக்கோணமலைக்கு வடகிழக்கே “பதி” என்று அழைக்கப்பட்ட இடம் இப்படி வணிககணங்களின் குடியிருப்புகள் மூலம் வளர்ச்சி கண்ட நகராகும். இன்று “பதவியா” என்று அறியப்படும் பதி நகரத்தில் ஐந்து சிவாலயங்களின் இடிபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் முதன்மையான கோவில் “இரவிகுலமாணிக்க ஈச்சரம்” என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இரவிகுலமாணிக்கம் என்பது இராஜராஜசோழனின் பட்டங்களுள் ஒன்று. அம்மன்னனின் ஆட்சிக்காலத்தில் 1005ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு இங்கு கிடைத்தது. அங்கு மூன்றாம் சிவாலயம் என அடையாளமிடப்பட்ட கோவிலின் பெயர் “வலகழி உத்தமர் கோவில்” என்பது இன்னொரு கல்வெட்டால் தெரியவந்திருக்கிறது. பதவியாவில் அமைந்துள்ள புத்தனேஹெல எனும் பௌத்தக்குகைகளின் நடுவே சைவர்களால் பயன்படுத்தப்பட்டதாக அடையாளப்படுத்தப்படும் குகையொன்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இன்று பொலனறுவைக்கு வடக்கே உள்ள மெதிரிகிரி எனும் ஊர், அப்போது நித்தவினோதபுரம் என்று அழைக்கப்பட்டதுடன், அங்கு பண்டிதசோழ ஈச்சரம் என்ற பெயரில் ஒரு சிவாலயம் அமைக்கப்பட்டிருந்தது. குருநாகலுக்கு அருகே ஆதகடை எனும் இடத்தில் இராஜராஜசோழனுக்கு முன்பு ஆண்ட அவனது சிற்றப்பன் பெயரில் “உத்தமசோழ ஈச்சரம்” அமைந்திருந்தது. மட்டக்களப்பில் இதே காலத்தில் அமைந்திருந்த இன்னொரு சிவாலயத்தில் தட்சிணாமூர்த்திக்கு திருவுருவம் நிறுவப்பட்டதை அங்கு இடச்சுக் கோட்டையில் கிடைத்த கல்வெட்டொன்று சொல்கின்றது.

நிக்கவரெட்டிக்கு அருகே உள்ள மாகலில் “விக்கிரம சலாமேக ஈச்சரம்” என்ற பெயரில் ஓர் சிவாலயம் காணப்பட்டது. இந்தக்கோவிலுக்கு குலோத்துங்க சோழனின் மகளும் சிங்கள இளவரசனான மானாபரணனை மணந்திருந்தவளுமான சுந்தமல்லியாழ்வார் எனும் சோழ இளவரசி தானம் வழங்கியுள்ளாள். அக்கோவில் இடிபாடுகள் இன்று அருகில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரமொன்றில் சேர்த்துக் கட்டப்பட்டுள்ளன.

பதினோராம் நூற்றாண்டில் இலங்கையில் நாலாதிக்கிலும் இவ்வாறு புகழ்பெற்றிருந்த சிவாலயங்களுக்கெல்லாம் மேலாக, அப்போதைய சோழரின் தலைநகரான பொலனறுவையில் எட்டுக்குக் குறையாத சிவாலயங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பழைமையும் பெருமையும் வாய்ந்தது, முதலாம் இராஜேந்திர சோழனால் அவன் தாய் நினைவாக கட்டப்பட்டதாகக் கருதப்படும் “வானவன் மாதேவி ஈச்சரம்”. இலங்கையில் இன்றும் பெருமளவு சிதையாது நீடிக்கும் மிகப்பழைய சைவக்கோவில் கட்டுமானம் இது தான். பொலனறுவையில் ஐந்தாம் சிவாலயம் என்று அடையாளமிடப்பட்டுள்ள இன்னொரு கோவில் திசையாயிரத்து ஐநூற்றுவர் பெயரில் “ஐநூற்றுவ ஈச்சரம்” என்று அறியப்பட்டதை அங்கு கிடைக்கும் இன்னொரு கல்வெட்டுச் சொல்லும். பொலனறுவையின் எட்டுச் சிவாலயங்களிலும் கிடைத்த வெண்கல மற்றும் கருங்கற் திருவுருவங்களில் பிள்ளையார், முருகன், சிவன், அம்மன், நாயன்மார், சூரியன், திருமால் உள்ளிட்ட கலையழகு மிகுந்த ஏராளமான சிலைகள் அடங்குகின்றன.

சோழர் காலத்தில் ஏனைய இந்திய மதங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. அனுராதபுரத்தில் “மும்முடிச்சோழ விண்ணகரம்” என்ற பெயரில் ஒரு பெருமாள் கோவில் அமைந்திருந்தது. பொலனறுவையில் இன்று மூன்று பெருமாள் கோவில்களின் இடிபாடுகளைக் காணமுடிகின்றது. நானாதேசி வணிகர்கள் கர்நாடகத்தின் “ஐகொலே” என்ற நகரில் கோவில்கொண்டிருந்த கொற்றவையை “ஐயம்பொழில்புர பரமேசுவரி” என்ற பெயரில் குலதெய்வமாக வழிபட்டதுடன், அவளுக்கு தங்கள் வணிகப் பட்டினங்களில் எல்லாம் கோவில்கள் அமைத்திருந்தனர். இந்தக் கொற்றவைக்கு பொலனறுவை, கல்லுத்துறை, அனுராதபுரம் முதலிய இடங்களில் கோவில்கள் எடுப்பிக்கப்பட்டிருந்தன. சுமார்த்த மதத்தவரான பிராமணர்களுக்கு திருக்கோணமலை கந்தளாயில் “இராஜராஜ சதுர்வேதிமங்கலம்” எனும் பிரமதேயம் ஒன்று வழங்கப்பட்டிருந்தது. சோழராட்சியின் பின் அது “விஜயராஜ சதுர்வேதி மங்கலம்” எனும் பெயரைப் பெற்றுகொண்டது. அனுராதபுரத்துக்கு அருகே இருந்த மகாகிரிந்தகாமத்திலும் “சயங்கொண்ட சலாமேக சதுர்வேதி மங்கலம்” எனும் பிராமணர் குடியிருப்பு ஒன்று பன்னிரண்டாம் நூற்றாண்டில் அமைந்திருந்தது.

கோணேச்சரம் பற்றி மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட சோழக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பொலனறுவை தலைநகராக வளர்ச்சி கண்ட சோழராட்சிக் காலத்தில், அந்நகருக்கு நுழையும் பிரதான கடல்வழி மார்க்கமாக இருந்த திருக்கோணமலை முக்கியமான வர்த்தக நகராக புகழ்பெற்றதுடன், அங்கு அமைந்திருந்த திருக்கோணேச்சரம் “மச்சகேசுவரம்” என்ற பெயரில் பல சோழத் திருப்பணிகளையும் கண்டது. பொலனறுவையை ஆண்ட சோழ அரசின் பிரதிநிதி “சோழ இலங்கேசுவரன்” என்ற பட்டத்தைத் தரித்திருந்ததோடு, கோணேச்சரத்தையும் போற்றி வழிபட்டு வந்திருக்கிறான். இப்படி சோழர் காலத்தில் அக்கோவிலுக்கென திருப்பணிகள் புரிந்த ஒன்று அல்லது பல சோழ இலங்கேசுவரர் பற்றிய கதைகள் சேர்ந்து கோணேச்சரத்தில் திருப்பணிகள் செய்த “குளக்கோட்டு மகாராசா” என்ற மன்னன் பற்றிய நம்பிக்கைகள் இலங்கைத் தமிழர் மத்தியில் நீடிக்கின்றன. பதினோராம் நூற்றாண்டில் இலங்கை வந்த சோழகங்கன் எனும் இளவரசனொருவனை குளக்கோட்டனாக அடையாளம் காண்பது வழக்கம். எனினும் குளக்கோட்டன் யார் என்பதை சரியாக உறுதிப்படுத்த போதிய சான்றுகள் கிடைக்கவில்லை.

சோழர் காலத்திலும் தென்னிலங்கையில் நீடித்திருந்த சிங்கள அரசான உரோகணத்திலிருந்து 1070ஆம் ஆண்டு படையெடுத்து வந்த முதலாம் விஜயபாகுவால் இலங்கை. சோழராட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டது. எனினும் தென்னகத்து வணிகக் கணங்களும் சோழரின் வேளைக்காரப் படையினரும் தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருந்தனர் என்பது முதலாம் பராக்கிரமபாகு மன்னன் காலம் வரையான தொல்லியல் இலக்கியச் சான்றுகளிலிருந்து தெரியவருகின்றது.

1111இல் பொலனறுவையின் அரசுக்கட்டிலில் ஏறிய முதலாம் விஜயபாகுவின் மகனான விக்கிரமபாகு, முறைப்படி முடிசூடிக்கொள்ளாமல் தனக்கு முன் ஆண்ட தன் சிறிய தந்தை ஜயபாகுவின் ஆட்சியாண்டைக் குறிப்பிட்டே கல்வெட்டுக்களை வடித்தான். விக்கிரமபாகு முடிசூடாமைக்கான காரணம் அவன் சைவனாக இருந்தது தான் என்பது பெரும்பாலான ஆய்வாளர்களின் முடிவு. விக்கிரமபாகு சைவனாக இருந்தான் என்பதற்கு, அவனால் வெளியிடப்பட்ட கஹம்பிலியாவைச் செப்பேட்டிலுள்ள சைவச்சார்பான வரிகளை உதாரணம் காட்டுவார்கள். விக்கிரமபாகுவைப் போலவே அவனது மகனான இரண்டாம் கஜபாகுவும் பௌத்த முறைப்படி முடிசூடாது தன் பாட்டன் ஜயபாகுவின் ஆட்சியாண்டையே கல்வெட்டுக்களில் குறிப்பிட்டான். தன் ஆட்சிக்காலத்தில் பல தமிழ்க்கல்வெட்டுகளையும் வெளியிட்டுள்ள கஜபாகு, தனது மைத்துனன் முதலாம் பராக்கிரமபாகுவால் (1153 – 1186) தோற்கடிக்கப்பட்டபின்னர் தன் இறுதிக்காலத்தை கந்தளாயில் கழித்ததை மகாவம்சம் சொல்கின்றது. கஜபாகு மன்னன் திருக்கோணேச்சரத்துடன் கொண்டிருந்த தொடர்புகள் பற்றி தட்சிணகைலாச புராணம், கோணேசர் கல்வெட்டு முதலிய திருக்கோணமலை இலக்கியங்கள் பாடுகின்றன.

பராக்கிரமபாகுவிற்குப் பின்னர் இலங்கையில் கலிங்க – பாண்டிய வம்சங்களுக்கிடையே ஆட்சியுரிமை பற்றிய முரண் ஏற்பட்டுவிடுவதால், அரசியல் குழப்பங்கள் ஏற்படுகின்றன. இக்காலத்தில் மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் ஆசீர்வாதத்தோடு 1215ஆம் ஆண்டு படையெடுத்த கலிங்க மாகோன், சிங்களவருக்கும் பௌத்த சமயத்தும் பெருங்கேடுகளை விளைவித்த கொடுங்கோலனாக வர்ணிக்கப்படுகின்றான். மட்டக்களப்புக்குத் தெற்கே அமைந்துள்ள திருக்கோவில் முருகன் கோவிலிலும், கொக்கட்டிச்சோலை சிவன் கோவிலிலும் காலிங்க மாகோன் பற்றிய பல்வேறு தொன்மங்கள் நிலவுகின்றன. இவ்விரு கோவில்களும் சோழராட்சிக்கும் மாகோன் ஆட்சிக்கும் இடைப்பட்ட காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம் என ஊகிப்பதற்கு பல சான்றுகள் கிடைக்கின்றன. இக்கோவில்களின் தொன்மங்களில் மாகோன் பௌத்தர், சமணர், வைணவர் முதலிய சமயத்தாருக்கு விளைவித்த இன்னல்களும் நினைவுகூரப்படுவதால், மாகோன் பற்றி மகாவம்சம் கூறும் விடயங்கள் உண்மையாகலாம்.

ஆனால் சுமார் 40 ஆண்டுகள் இலங்கையை ஆளும் மாகோன் தன் ஆட்சியின் பிற்காலத்தில் அமைதியான சூழலையே நாட்டில் உருவாக்கியிருந்தான் என ஊகிக்கலாம். மாகோனின் படைகள் பாசறை அமைத்திருந்த மானாமத்த, குருந்தி முதலிய இடங்கள் பற்றிய குறிப்புகள் பாளி இலக்கியங்களில் வருகின்றன. மானாமத்த என்பது இன்றைய திருக்கோணமலை கிவுலக்கடவலைப் பகுதி என இனங்காணப்பட்டுள்ளதுடன், அந்த இடத்தில் சிதைந்துபோன சோழர் காலச் சிவாலயமொன்றும் கல்வெட்டொன்றும் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளன. குருந்தி என்பது, எண்பட்டைச் சிவலிங்கம் கிடைத்ததாக இன்று இலங்கை அரசியலில் சர்ச்சைக்குள்ளாகிவரும் முல்லைத்தீவு குருந்தனூர் மலையாக இனங்காணப்படுகின்றது.

மாகோனின் ஆட்சியின் இறுதியில் சாவகத்திலிருந்து படையெடுத்து வந்த சந்திரபானுவால் பொலனறுவை அரசு வீழ்ச்சி கண்டபின்னர் இலங்கையில் பலம்வாய்ந்த மைய அரசுகள் உடைந்து பிராந்தியச் சிற்றரசுகளே குறுகிய நிலப்பரப்புகளில் ஆண்டுவந்தன. இந்தப் பிராந்திய அரசுகளில் சற்று பெரிய நிலப்பகுதிகளை ஆண்ட யாழ்ப்பாண அரசு, குருநாகல் அரசு, யாப்பகூவை அரசு, கம்பளை அரசு என்பன முக்கியமானவை ஆகும்.

14ஆம் நூற்றாண்டில் கிழக்கே திருக்கோணேச்சரமும் தெற்கே மாத்துறை தேனவரை நாயனார் கோவிலும் மிகப்புகழ் பூத்தனவாகத் திகழ்ந்தன. தேனவரை நாயனார் கோவில் திருமால் கோவிலாக இருந்தது. எனினும் அங்கு கிடைத்துள்ள நந்தி, சிவலிங்கம் என்பன அக்கோவிலருகே ஒரு சிவாலயம் அமைந்திருந்தமைக்கான ஆதாரமாகின்றன. தேனவரை நாயனார் கோவிலுக்கு அருகில் இன்று கல்வீடு (கல்கே) என்று அழைக்கப்படும் கட்டட இடிபாடு சைவக்கோவிலொன்றின் கருவறை வேலைப்பாடுகளைப் பிரதிபலிப்பதை இங்கு ஒப்புநோக்கலாம்.

வடக்கே யாழ்ப்பாண அரசர்கள் கோணேச்சர இறைவன் மீது பெரும்பக்தி கொண்டிருந்ததையும், தென்கயிலையான கோணேச்சரம் நினைவாக நல்லூரில் கைலாசநாதர் கோவில் அமைக்கப்பட்டதையும் கைலாயமாலை எனும் இலக்கியம் பாடுகின்றது. அங்கு பண்டுதொட்டே கீரிமலை நகுலேச்சரம் முக்கியமான வழிபாட்டுத் தலமாக நீடித்திருந்தது. யாழ்ப்பாண ஆரியச்சக்கரவர்த்தி மன்னர்கள் தங்கள் பூர்விகமாக இராமேச்சரத்தைக் கருதியதுடன் சிவனது ஊர்தியான இடபத்தையே தங்கள் கொடியாகக் கொண்டிருந்தனர்.

கொழும்புக்கு அருகே சேர நாட்டு அளகைக்கோனால் பதினான்காம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட கோட்டை அரசில் சிவாலயம் அமைந்திருந்ததை சிங்களத்தூது இலக்கியங்களான “சந்தேச” பாடல்கள் பாடுகின்றன. யாழ்ப்பாண மற்றும் கோட்டை அரசர்கள் முத்துக்குளிக்கும் துறையாக விளங்கிய சிலாபத்துக்கு அருகே கோட்டை அரசனான ஆறாம் பராக்கிரமபாகுவால் (1412-1467) முன்னேச்சரம் எனும் சிவாலயம் திருத்திக் கட்டப்படுகின்றது. கோட்டை அரசிலிருந்து பிரிந்து உருவான சீதாவக்கை அரசால் நிருமாணிக்கப்பட்டிருந்த பழைய ஆலயமொன்றின் இடிபாடுகளை இன்றும் அவிசாவளையில் காணலாம். இன்று “பெரண்டி” என்று அறியப்படும் அக்கோவில் சிவவடிவமான “பைரவ ஆண்டிக்காக” அமைக்கப்பட்டதாக ஊகிக்கப்படுகின்றது.

14ஆம் நூற்றாண்டு அளவில் தமிழிலும் சிங்களத்திலும் “ஆண்டி” என்றும், பால்டியசால் “யோகி” என்றும் இனங்காணப்பட்ட சைவ சன்னியாசிகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு யாத்திரை வந்துகொண்டிருந்தனர். கதிர்காமம், கோணேச்சரம், சிவனொளிபாதமலை என்பன அவர்களது முக்கியமான யாத்திரைத்தலங்களாக விளங்கின. மகாவலி கங்கை சமனொளி மலையடிவாரத்தில் ஊற்றெடுப்பதாகப் பாடும் 13ஆம் நூற்றாண்டு தமிழக சைவ இலக்கியமான நம்பி திருவிளையாடற் புராணத்திலும் 16ஆம் நூற்றாண்டு ஈழத்து இலக்கியமான கைலாச புராணத்திலும் காணலாம். சிவத்தலமான கோணேச்சரத்தில் கடலில் கலக்கும் மகாவலி கங்கை, சிவனொளிபாத மலை அடிவாரத்திலேயே ஊற்றெடுப்பதாக சைவரிடமும் நம்பிக்கை நிலவியதால் அம்மலையும் சிவனது பாதங்கள் பதிந்த மலையாக வழிபாட்டுக்குரியதாயிற்று.

மணிமேகலை இலக்கிய காலம் தொட்டு பௌத்தத் தலமாக விளங்கிய சமனொளிபாதம், சைவ ஆண்டிகளின் தொடர்ச்சியான யாத்திரைகளால் சைவத்தலமாகவும் மாறியிருந்தது எனத் தெரிகிறது. சீதாவாக்கை அரசின் காலத்தில் (1521 – 1594) ஒரு கட்டத்தில் சிவனொளிபாதமலையை நிருவகிக்கும் பொறுப்பும் ஆண்டிகளிடமே கையளிக்கப்பட்டதாகவும் கண்டி அரசனான கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் காலத்திலேயே (1747 – 1782) பௌத்த பிக்குகளிடம் கைமாறப்பட்டதாகவும் ஒரு சிங்களக்குறிப்பு தெரிவிக்கின்றது.

இக்காலத்தில் சிவன் சிங்களவரின் வழிபாட்டுக்குரிய பௌத்த தேவர்களில் ஒருவராகவும் இடம்பிடித்துக்கொண்டார். “இசுரு தெவி” (வடமொழி: ஈஸ்வர தேவன்) என்ற பெயரில் சிவன் தொடர்பான நாட்டுப்புறக் கதைகளும் பாடல்களும் சிங்கள இலக்கியங்களில் இடம்பெறலாயின. அதேவேளை சிங்களப் பண்பாட்டுடனும் தமிழகத்தவர் நெருங்கிய உறவுகளை இக்காலத்தில் பேணிவரலாயினர். சிவாலயங்களில் தேவரடியார் ஆடிய நடனங்கள் தேசி, வடுகு, சிங்களம் எனும் மூன்று வகைகளில் பயிற்றுவிக்கப்பட்டன. இவை முறையே தமிழ்நாட்டு, வடநாட்டு, இலங்கை நடன மரபுகளைப் பின்பற்றிக் கற்பிக்கப்பட்டவை என்று கொள்ளலாம். சிவாலயங்களில் இறுதி வழிபாட்டை ஏற்கும் சண்டேசுவரர் எனும் தெய்வத்துக்கான உருவவியல் சிங்கள தேசத்தில் மட்டும் மாறுபடும் என்ற குறிப்பு சிவாகமங்களில் காணப்படுகின்றது.

இறுதியாக, இலங்கையில் நிலவும் சைவத்தை ஈழத்துச் சைவம் என்று தமிழகச் சைவமரபிலிருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்துவதற்கு அதற்கு ஏதும் தனித்துவங்கள் உள்ளனவா?

ஆம், ஈழத்தமிழ்ச் சைவ மரபின் தனித்துவமாக நான்கு சான்றுகளைச் சொல்லலாம்.

முதலாவது, சைவ சித்தாந்த அறிஞரான நெல்லை மாதவச் சிவஞான முனிவரால் (1753 – 1785), சமயங்கள், அகம், புறம், அகப்புறம், புறப்புறம் என்று தலா ஆறு வீதம் பிரிக்கப்பட்டு, அந்த இருபத்து நான்கு சமயங்களிலும் மேலானதாக சைவ சித்தாந்தம் நிலைநிறுத்தப்படுகிறது. ஆனால் இலங்கைச் சைவ அறிஞரான பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை இந்த வகைப்பாட்டை மறுக்கிறார். பழஞ்சைவ நூல்களில் அகம், புறம் எனும் இரு பிரிவினைகள் மட்டுமே உள்ளதைச் சுட்டிக்காட்டும் அவர், பதினான்கு சைவசித்தாந்த நூல்களில் கண்டிக்கப்பட்ட சில சைவப்பிரிவுகள் அகச்சமயமாக காட்டப்பட்டுள்ளதையும், அந்நூல்களில் கண்டிக்கப்படாத வேறு சைவப்பிரிவுகள் அகப்புறம் என்று சற்று அப்பால் வகைப்பிரிக்கப்பட்டுள்ளமையையும் அவர் எடுத்துக்காட்டுகிறார். சைவத்தின் அகம் – புறம் எனும் சமய வகைப்பாட்டை காலத்துக்கேற்ப இற்றைப்படுத்த வேண்டியதன் தேவையை வலியுறுத்திய முதற்குரல் இப்படி ஈழத்திலிருந்தே எழுந்தது.

இரண்டாவது, சித்தாந்த நூலான சிவஞானசித்தியாருக்கு யாழ்ப்பாணத்தவரான ஞானப்பிரகாச முனிவர் செய்த உரையை தமிழகத்து சைவ சித்தாந்திகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது உரையைக் கொண்டு அவரது தத்துவங்களும் ப“சிவசமவாதம்” எனும் சைவப்பிரிவைச் சேர்ந்தவராகவே அவர்கள் வகைப்பிரிக்கின்றனர். ஆனால் பண்டிதர் மு.கந்தையா ஞானப்பிரகாச முனிவரை ஏன் சிவசமவாதியாகக் கருதமுடியாது என்பதையும், அவரை சைவசித்தாந்தியாகவே கருதமுடியும் என்பதையும் போதுமான சான்றாதாரங்களுடன் முன்வைக்கின்றார்.

மூன்றாவது ஈழத்துச் சைவ மரபில் நாட்டார் முறைப்படி வழிபடப்படும் தெய்வங்களின் சைவச்சார்பு. திருமாலும் ஈழத்தில் சைவமரபுப்படியே வழிபடப்பட்டு வருகிறார். நாகதம்பிரான், வைரவர் ஆகியோர் ஒரேநேரத்தில் நாட்டார் தெய்வங்களாகவும், ஆகமவழிப்பட்டு மேல்நிலையாக்கப்பட்ட சைவக் கடவுளராக தனிக்கோவில் கட்டி வழிபடப்படும் மரபும் உண்டு. வைரவருக்கும் நாகதம்பிரானுக்கும் சிறப்பான இந்த வழிபாட்டு முறை தமிழ்நாட்டில் இல்லை, அல்லது மிகக்குறைவு. கண்ணகி, மாரி உள்ளிட்டோரை சிவசக்தியாகப் பாவித்து வழிபடும் மரபும் இந்நாட்டின் கிராமிய வழிபாட்டுக்குள்ளது.

நான்காவது, ஈழத்துக்குச் சிறப்பான வீரசைவம். வீரசைவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் வசித்து வருகிறார்கள். கிழக்கு இலங்கையில் பரவலாக வாழும் வீரசைவர் ஆந்திரத்து ஸ்ரீசைலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்களாக தம்மை சொல்லிக்கொள்கிறார்கள். கலிங்க மாகோனோடு இலங்கைக்கு வந்தததாகக் கூறப்படும் இவர்களிடம் தமிழக வீரசைவர்களைப் போல இலிங்கத்தை மார்பில் அணிந்து கொள்ளும் வழமையும் காணப்படுகின்றது. வீரசைவருக்குத் தனித்துவமான வேறு மரபுகள் இங்கு சமகாலத்தில் மருவிச்சென்றாலும், அவர்களின் சமய வகிபாகம் ஈழத்துக் கீழைக்கரையில் முற்றாக மறையவில்லை எனலாம்.

ஐரோப்பிய ஆட்சிக்காலத்தில் கோணேச்சரம், கேதீச்சரம் முதலிய சிவாலயங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. சைவத்தைக் கடைப்பிடிப்பதற்கு ஐரோப்பிய ஆட்சியாளர்களால் பல கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. பல சவால்களைக் கடந்து பல தனித்துவங்களுடன் நீடிக்கும் ஈழத்துச் சைவம் இன்றும் இந்துத்துவம் சார்ந்த பொது “இந்து” அடையாளத்துக்குள் தன்னை முற்றாகக் கரைக்காமல் ஓரளவுக்கேனும் தன் சுயத்தைத் தக்கவைத்துள்ளது எனலாம்.

௦௦௦

அடிக்குறிப்புகள்

[1]Tutecoryn, Trevanor, Coulang, Calecoulang, Cochin, Cranganor, Calecut, Cananor.
[2] Wesitnouwas, Seivia, Smaerta, Schaerwaeka, Pasenda, Tscheczea. உச்சரிப்புத் தடுமாற்றம் தென்படுவதால் இறுதிப்பிரிவு சாக்தம் தானா என்பதை உறுதியாகக் கூறமுடியவில்லை.

[3] பொது ஆண்டு (Common Era  – CE) – கிறிஸ்து ஆண்டு; பொமு – பொது ஆண்டுக்கு முன் (BCE), பொபி – பொது ஆண்டுக்குப் பின் (CE)

[4] அப்பரின் பாடல்களில் கேதீச்சரமும் கோணேச்சரமும் “தெக்காரும் மாகோணத்தானே”, “கேதீச்சரம் மேவினார் கேதாரத்தார்” என்றவாறு நேரடியாகப் பாடப்படாமல் வேறு தலங்களின் பதிகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்:
Baldeus, P. (1672). A True and Exact Description of the most Celebrated East India Coasts of Malabar and Coromandel as also of the Isle of Ceylon, Amsterdam.
பத்மநாதன், சி., (2016). இலங்கைத் தமிழர் வரலாறு: கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் (கிமு.250-கி.பி.300), கொழும்பு : இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
பத்மநாதன், சி. (2000). இலங்கையில் இந்து கலாசாரம் பகுதி ஒன்று, கொழும்பு: இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.

வி.துலாஞ்சனன்

மட்டகளப்பில் வசித்துவரும் எழுத்தாளர் துலாஞ்சனன், இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ எனும் சைவ வரலாற்று நூலையும் (2018),  ‘மட்டக்களப்பு எட்டுப் பகுதி’ நூலை தனது திருமண சிறப்புமலராககவும் (2021) வெளியிட்டுள்ளார். வரலாற்று பார்வையில் ஆய்வுரீதியான பண்பாட்டுசார் கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.