/

செவ்வியல் என்றால் என்ன? (பகுதி 1) : டி.எஸ்.எலியட்

தமிழில் விஷால் ராஜா

மொத்த ஐரோப்பிய கலாச்சாரத்திலும், விர்ஜில் (Virgil) அளவுக்கு, முக்கியமான பன்முகப்பட்ட உரையாடலுக்கேற்ற பிரதிகளை உருவாக்கிய இன்னொரு கவிஞரில்லை. ஐரோப்பிய வரலாற்றில் பல்வேறு விஷயங்களை குறியீடுகளாக மாற்றியிருப்பதோடு அடிப்படையான ஐரோப்பிய மதிப்பீடுகளை பிரதிபலிப்பவராகவும் விர்ஜில் இருக்கிறார். அதுவே அவர் நினைவை பாதுகாக்கும்படியான சமூகத்தை தோற்றுவிக்கும் நியாயத்தை வழங்குகிறது.  அவர் விரிவான தளங்களை உள்ளடக்கியவராக இருப்பதோடு ஆதார மையமாகவும் இருப்பதே என்னுடைய இந்த உரைக்கான நியாயமுமாகும்.

விர்ஜிலின் கவிதை என்பது அறிஞர்கள் மட்டுமே விவாதிக்க வேண்டிய பேசுபொருள் என்றால், என்னை இங்கு பேச அழைத்திருக்கமாட்டீர்கள். அல்லது நான் பேசுவது பற்றி அக்கறை கொண்டிருக்கமாட்டீர்கள். விர்ஜில் பற்றி பேசுவதற்கு எந்த விசேஷ அறிவும் தேர்ச்சியும் தனிச் சலுகையாக மாறுவதில்லை என்பது  தைரியமூட்டுகிறது.

விர்ஜிலின் கவிதையை, பல்வேறு திறன் கொண்ட பேச்சாளர்கள் தங்கள் ஆற்றலுக்கேற்ப பல்வேறு விஷயங்கள் சார்ந்ததாக மாற்ற முடியும். தங்கள் ஆய்வுகள் மூலம் விர்ஜிலின் மதிப்பை துலங்கச் செய்ய முடியும். விர்ஜில் வழியே அவர்கள் பெற்றுக் கொண்ட ஞானத்தை. தங்கள் வாழ்க்கை அனுபவத்தை ஒட்டி. பொதுத் தளத்துக்கு கொண்டு வர முடியும். ஒவ்வொருவரும் தனக்கு பரிச்சயமுள்ள, தான் ஆழ்ந்து பயின்ற துறையை வைத்தே விர்ஜிலுக்கான சாட்சியத்தையும் கூற முடியும். இதையே “பன்முகத்தன்மை” என்றேன். இந்த செயல்பாட்டின் இறுதியில், நாம் அனைவரும் ஒரே விஷயத்தை வெவ்வேறு விதங்களில் சொல்லியிருப்போம். இதையே “முக்கியமான பன்முகத்தன்மை” என்றேன்.

“செவ்வியல் என்றால் என்ன?” – இக்கேள்வியையே நான் பேசுபொருளாக எடுத்திருக்கிறேன். இதுவொன்றும் புதிய கேள்வி அல்ல. சாண்ட்-பொவெ (Sainte Beuve) இதே தலைப்பில் ஒரு புகழ்பெற்ற கட்டுரை எழுதியிருக்கிறார். “செவ்வியல் என்றால் என்ன?” எனும் கேள்வியை, விர்ஜிலை மனதில் வைத்து கேட்கும்போது, அதன் பொருத்தப்பாடு வெளிப்படையாகவே தெரிகிறது. ஏனென்றால்,  செவ்வியலுக்கு நாம் என்ன வகையான வரையறையை எட்டினாலும், அது விர்ஜிலை உள்ளடக்காததாக இருக்க முடியாது. இன்னும் துணிந்து, விர்ஜிலை கணக்கில் எடுத்துக் கொள்வது மட்டுமே செவ்வியலுக்கான சரியான வரையறையாக இருக்க முடியும் எனலாம்.

இது பற்றி தொடர்ந்து பேசுவதற்கு முன்னால், சில முன்முடிவுகளை அகற்ற விரும்புகிறேன். போலவே தவிர்க்க முடியாத வேறு சில தவறான புரிதல்களையும் என்னால் இப்போதே அனுமானிக்க முடிகிறது. “செவ்வியல்” எனும் சொல் இதுவரை என்ன அர்த்தத்தில் புழங்குகிறதோ அதை மாற்றுவதோ அல்லது ஏற்கப்பட்ட அந்த அர்த்தத்தை தவறு என்று நிரூபிப்பதோ என் நோக்கம் அல்ல.  அந்த சொல் இனியும் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு அர்த்தங்களை தொடர்ந்து வெளிப்படுத்தும். இங்கு ஒரேயொரு குறிப்பிட்டச் சட்டகத்திற்குள்ளாக மட்டுமே அச்சொல்லின் அர்த்தம் சார்ந்து நான் கவனம் கொண்டிருக்கிறேன்.

மேலும், இந்த இடத்தில் “செவ்வியல்” எனும் சொல்லை இன்ன விதத்தில் வரையறுப்பதால், வருங்காலத்தில் வேறெந்த சூழ்நிலையிலும், அதன் புழக்க அர்த்தத்தை நான் உபயோகிக்காமல் இருக்கப் போவதில்லை. உதாரணத்துக்கு, நாளை ஏதாவது ஒரு தருணத்தில் எழுத்திலோ அல்லது மேடைப் பேச்சிலோ அல்லது தனிப்பட்ட உரையாடலிலோ “செவ்வியல்” எனும் சொல்லை “ஒரு மொழியை சேர்ந்த தரமான எழுத்தாளர்” எனும் அர்த்தத்தில் பயன்படுத்தினால் , உடனே என்னிடம் நீங்கள் மன்னிப்பை எதிர்பார்க்கக் கூடாது. ஒரு குறிப்பிட்ட வகையான எழுத்தாளரின் முக்கியத்துவம், நீடித்த மதிப்பு அல்லது மகத்துவம் போன்றவற்றுக்கான அறிகுறியாக “செவ்வியல்” எனும் சொல்லை நான் பயன்படுத்தியிருக்கக்கூடும். “ஹேண்ட்லி கிராஸ்” (Handley Cross) வேட்டைத் துறையில் ஒரு செவ்வியல் நூல் என்று சொல்வது போல. வேறு சந்தர்ப்பத்தில் கிரேக்க அல்லது லத்தீன் இலக்கியத்தை மொத்தமாக குறிக்கவோ அல்லது அம்மொழிகளின் சிறந்த ஆசிரியர்களை சுட்டுவதற்காகவோ “செவ்வியலாக்கங்கள்” (the classics) எனும் பதத்தை நான் உபயோகிக்கலாம்.

இறுதியாக, செவ்வியல் பற்றிய என் வரையறை மூலம் இன்னொரு விஷயத்தையும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். “கற்பனாவாதம்” (romantic), “செவ்வியல்” இரண்டையும் எதிர்நிலைகளாக(anti-thesis) கட்டமைக்கும் போக்கிலிருந்து செவ்வியலை விடுவிக்க வேண்டும். செவ்வியல்-கற்பனாவாதம் சார்ந்த சர்ச்சையினால், எந்த கலையாக்கத்தையும் “செவ்வியல்த்தன்மை கொண்டது” (classical) என்றழைப்பது, அவரவர் சார்பு நிலையை ஒட்டி, உயரிய பாராட்டாகவோ அல்லது மோசமான சாடலாகவோ கருதப்படுகிறது. வடிவக் கச்சிதம் போன்ற தகுதிகளையோ அல்லது உணர்ச்சியில்லாத வறட்டுத்தன்மை போன்ற குறைபாடுகளையோ அந்த அடைமொழியால் சுட்டுகிறார்கள்.

இங்கு, ஒரு குறிப்பிட்ட வகையான கலையை வகுத்தளிக்க நினைக்கிறேன். நான் வகுத்தளிக்கும் கலை, இன்னொரு வகையான கலையைவிட அனைத்து விதங்களிலும் மேம்பட்டதா அல்லது குறைவுபட்டதா என்பது என் அக்கறையன்று. என் எதிர்பார்ப்பில், “செவ்வியல்” கலை தன்னில் கொண்டிருக்க வேண்டிய சில பண்புநலன்களை மட்டுமே குறிப்பிடுகிறேன். ஆனால் இலக்கியமானது மகத்தானதாக இருக்க, இப்பண்புநலன்கள் யாவும் வெளிப்படும்விதமாய் அது ஒரு குறிப்பிட்ட ஆசிரியரால் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்றோ அல்லது அது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்றோ நான் சொல்லவரவில்லை. நான் எண்ணுவது போல, இப்பண்புகள் யாவற்றையும் விர்ஜிலிடம் காண முடிகிறதென்றால், அதன் அர்த்தம் விர்ஜிலே இதுவரையிலான எல்லா கவிஞர்களிலும் தலைசிறந்தவர் என்பதல்ல. எந்த கவிஞர் பற்றியும் அப்படி சொல்வது பொருளற்றது. போலவே, லத்தீன் இலக்கியமே பிற இலக்கியங்களைவிட சிறந்தது என்றும் நான் குறிப்பிடவில்லை.

ஏதேனும் ஒரு மொழியில் எந்தவொரு ஆசிரியரையோ அல்லது எந்தவொரு காலக்கட்டத்தையோ பூரணமாக “செவ்வியல்” என்று சொல்ல முடியாவிடில், அது அந்த  மொழியின் இலக்கியத்தின் குறைபாடன்று. போலவே, ஒரு மொழியின் செவ்வியல் காலகட்டமானது, ஆங்கில இலக்கியத்தில் நேர்ந்தது மாதிரி, அதன் சிறந்த காலகட்டமாகவும் இல்லாமல் போகலாம். அதுவும் அந்த இலக்கியத்தின் குறையன்று. இன்னும் சொல்லப்போனால், வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு ஆசிரியர்களிடையே செவ்வியல் பண்புநலன்கள் சிதறி பரவியிருக்குமேயானால், அந்த மொழி இலக்கியங்களே கூடுதல் செறிவை கொண்டிருக்கக்கூடும். ஆங்கில இலக்கியத்தை அதில் முதன்மையானதாக சொல்லலாம்.  

ஒவ்வொரு மொழியும் தனக்குரிய வளங்களையும் தனக்குரிய எல்லைகளையும் ஒருங்கே கொண்டிருக்கிறது. செவ்வியல் காலகட்டம் அல்லது செவ்வியல் ஆசிரியர் பற்றிய பொது எதிர்பார்ப்பினை, ஒரு மொழியின் சூழ்நிலைகளும், அம்மொழியை பேசுகிற மக்களின் அவர்கள் வரலாற்றின் சூழ்நிலைகளும் ரத்து செய்துவிடக்கூடும். ஆனால் அது வருத்தத்திற்குரியதல்ல. ரோம வரலாற்றினாலும் லத்தீன் மொழியின் குணநலனினாலும் தனித்துவமான ஒரு செவ்வியல் கவிஞர் தோன்றுவதற்கான தருணம் அமைந்தது. அத்தருணம் அமைவதற்கு ஒரு குறிப்பிட்ட கவிஞர் தேவைப்பட்டிருக்கிறார் என்பதையும் அக்கவிஞருக்கு தன் கச்சாப்பொருளிலிருந்து செவ்வியலை உருவாக்க ஆயுட்கால உழைப்பு தேவைப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். விர்ஜிலுக்கு, கண்டிப்பாக, தான் செவ்வியல் கலையாக்கத்தில் ஈடுப்பட்டிருப்பது அப்போது தெரிந்திருக்காது.

இதுவரை வரலாற்றில் எப்போதேனும், தன் முயற்சி மற்றும் செயல் பற்றி தீவிரமான விழிப்பைக் கொண்டிருந்த ஒரு கவிஞன் இருந்திருப்பானென்றால், அத்தகைய ஒருவனாலும் இனங்கண்டிருக்க முடியாத அல்லது குறிக்கோளாக கொண்டிருக்க முடியாத விஷயம் என்பது ஒரு செவ்வியலாக்கத்தை உருவாக்குவதே. ஏனென்றால் வரலாற்று கோணத்தில், காலத்தை பின்னோக்கி பார்க்கும்போதே செவ்வியலை அடையாளப்படுத்த முடியும்.

“செவ்வியல்” எனும் சொல் வழியே நான் உத்தேசிப்பதை, கூடுமானவரை பொருத்தமாக வெளிப்படுத்தக் கூடிய இன்னொரு சொல் இருக்கும் என்றால், அந்த சொல் “முதிர்ச்சி” (Maturity) என்பதாகவே இருக்க முடியும். அதனடிப்படையிலேயே செவ்வியலை வகைப்படுத்த நினைக்கிறேன். விர்ஜில் போன்ற உலகப் பொதுவான செவ்வியல் (universal classic) ஒரு ரகம். தன் மொழியில் பிற இலக்கிய ஆக்கங்களுடனான ஒப்பீடு மூலமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் வாழ்க்கைப் பார்வை காரணமாகவோ செவ்வியல் அந்தஸ்து பெறுகிறவை மற்றொரு ரகம்.

செவ்வியல் தோன்றுவதற்கு ஒரு நாகரீகம் முதிர்ச்சியடைய வேண்டும்; ஒரு மொழியும் அதன் இலக்கியமும் முதிர்ச்சியடைய வேண்டும். மேலும் செவ்வியலானது ஒரு முதிர்ச்சியடைந்த மனதின் ஆக்கமாகவே இருக்க முடியும். ஒரு நாகரீகத்தின், ஒரு மொழியின் சிறப்பம்சமும் ஒரு கவிஞனின் மன விஸ்தரீனமும் இணைந்தே ஒரு கலைக்கு உலகப் பொதுத்தன்மையை (universality) வழங்குகின்றன.

 “முதிர்ச்சி” எனும் சொல்லின் அர்த்தம் ஒருவருக்கு ஏற்கனவே தெரியும் என்று கற்பிதம் செய்துகொள்ளாமல் அதை வரையறுப்பது ஏறத்தாழ சாத்தியமில்லாதது. இப்படி சொல்லலாம் –  நாம் கற்றறிந்ததோடு முதிர்ச்சியும் அடைந்த மனிதர்கள் என்றால், வாழ்வில் எதிர்கொள்ளும் பிற மனிதர்களிடம் நம்மால் எப்படி முதிர்ச்சியை அடையாளம் காண முடிகிறதோ அதே போல ஒரு நாகரீகத்திலும், ஓர் இலக்கியத்திலும் நம்மால் முதிர்ச்சியை அடையாளம் காண முடியும். முதிர்ச்சியற்றவர்களிடம் முதிர்ச்சியின் அர்த்தத்தை புரிய வைப்பதோ அல்லது குறைந்தபட்சம் அதை ஏற்றுக் கொள்ள வைப்பதோ சாத்தியமில்லாதது. ஆனால், நாம் முதிர்ச்சி கொண்டிருந்தாலோ நம்மால் முதிர்ச்சியை உடனடியாக அடையாளம் காண முடியும். அல்லது ஒரு நெருக்கமான தொடர்பின் வழியே அறிந்துகொள்ள முடியும்.

ஷேக்ஸ்பியரின் எந்த வாசகராலும், ஷேக்ஸ்பியரின் மனம் படிப்படியாக கனிந்திருப்பதை கவனிக்காமல் இருக்க முடியாது. அந்த வாசகரின் தொடர்ச்சியான சொந்த வளர்ச்சியை ஒட்டி இது நிகழும். அவ்வளவு தூரம் வளர்ச்சியடையாத ஒரு வாசகர்கூட, ஆரம்பகட்ட டியூடர்(Tudor) காலத்தின் பண்படாதத்தன்மைக்கும் ஷேக்ஸ்பியரின் நாடகங்களுக்கும் நடுவே எலிஸபெத்தியன் (Elizabethan) இலக்கியமும் நாடகமும் சட்டென்று மொத்தமாக மேம்பட்டிருப்பதை கவனிக்க முடியும். போலவே ஷேக்ஸ்பியருக்கு அடுத்த தலைமுறையினரிடையே அந்த மேம்பாடு சரியத் தொடங்கியிருப்பதையும் கவனிக்கலாம்.

சற்று உன்னித்து பார்க்கையில் தோன்றும் இன்னொரு அவதானிப்பு. கிறிஸ்டோபர் மார்லோ (Christopher Marlowe), ஷேக்ஸ்பியர் அவர் வயதில் வெளிப்படுத்திய முதிர்ச்சியைக் காட்டிலும், கூடுதல் முதிர்ச்சியை, எழுத்து நடையிலும் மனதிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஒருவேளை ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலம் அளவுக்கு மார்லோவும் வாழ்ந்திருந்தால் அவர் வளர்ச்சி அப்படியே தொடர்ந்திருக்குமா என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. ஆனால் எனக்கு அதில் சந்தேகம் இருக்கிறது. சில மனங்கள் மற்றவர்களைவிட சீக்கிரமாகவே முதிர்ச்சி பெறுவதை கவனிக்கும்போதே, அப்படி சீக்கிரமாக முதிர்ச்சி பெறும் மனங்கள் தொடர்ந்து நீடித்து வளர்வதில்லை என்பதையும் நாம் கவனிக்கிறோம். இதை ஒரு நினைவூட்டலாகவே குறிப்பிடுகிறேன்.

முதலில் “முதிர்ச்சி”யின் மதிப்பானது “எது” முதிர்கிறதோ அதனுடைய மதிப்பை சார்ந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, தனித்தனி எழுத்தாளர்களின் முதிர்ச்சி பற்றி எப்போது அக்கறைக் கொண்டிருக்கிறோம் என்பதையும் அதற்கிணையான இலக்கிய காலகட்டங்களின் முதிர்ச்சி பற்றி  எப்போது அக்கறைக் கொண்டிருக்கிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.ஓர் எழுத்தாளர் தன்னளவில் முதிர்ச்சி பெற்ற மனதினைக் கொண்டிருந்தாலும், அவருடைய காலக்கட்டம் முதிர்ச்சி குறைவான காலக்கட்டமாக இருந்தால் அவருடைய ஆக்கத்திலும் முதிர்ச்சி குறைவாக இருக்கும்.

ஓர் இலக்கியத்தின் முதிர்ச்சி என்பது அது உருவாகக்கூடிய சமூகத்தின் பிரதிபலிப்பேயாகும். ஒரு தனி எழுத்தாளர் – ஷேக்ஸ்பியர் மற்றும் விர்ஜின் போல்- தன் மொழியை சீர்ப்படுத்த பல விஷயங்களை மேற்கொள்ளலாம். ஆனால் அவருடைய முன்னோடிகள் கடைசிக் கட்டம் வரையிலான தயாரிப்புகளை ஏற்கனவே செய்யாமல் இருந்தால், அந்த தனி எழுத்தாளரால் மொழியை முதிர்ச்சியடைய வைக்க முடியாது. எனில், முதிர்ச்சியடைந்த இலக்கியம் என்பது தன் பின்னே ஒரு வரலாறை கொண்டிருக்கும்.  இங்கே வரலாறு என்பது வெறுமனே நிகழ்ச்சி குறிப்போ, வெவ்வேறு வகைப்பட்ட பிரதிகளின் சேகரிப்போ அல்ல. தன் சொந்த எல்லைகளினூடே தன் சாத்தியக்கூறுகளை உணரும் மொழியின், ஒழுங்குப்பட்ட ஆனால் பிரக்ஞாபூர்வமாக நிகழாத ஒரு வளர்ச்சி.

தனிமனிதனைப் போலவே ,ஒரு சமூகமும் இலக்கியமும் எல்லா தளங்கிலும் சம அளவிலோ அல்லது ஒரே மாதிரியோ முதிர்ச்சியடைவதில்லை என்பதை கவனிக்க வேண்டும். வயதுக்குமீறிய முதிர்ச்சி பெறும் குழந்தையே, சில வெளிப்படையான விதங்களில், தன் வயதையொத்த சாதாரண குழந்தைகளைவிடவும் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்ளும். முழுமையாக முதிர்ச்சியடைந்ததும் பரந்துபட்டதும் சமநிலைக் கொண்டதுமான காலகட்டம் என்று ஆங்கில இலக்கியத்தில் ஏதாவது ஒரு காலகட்டத்தை சுட்டிக்காட்ட முடியுமா? எனக்கு அப்படி தோன்றவில்லை. ஆங்கிலத்தில் எந்தவொரு கவிஞனும் தன் வாழ்நாளில் ஷேக்ஸ்பியரைவிடவும் முதிர்ச்சியான ஒரு மனிதனாய் உருபெற்றிருப்பதாக நாம் சொல்லிவிட முடியாது. எந்த கவிஞனும் ஆங்கில மொழிக்கு அந்த அளவு பங்களிப்பாற்றியிருக்க முடியாது. மிக நுட்பமான எண்ணத்தையும், நயமான நிற வேறுபாடுகள் கொண்ட உணர்ச்சியையும் வெளிப்படுத்துவதற்கான திறன் மிக்கதாக ஆங்கில மொழியை அவர் அளவுக்கு எந்த கவிஞனும் மாற்றியதில்லை. எனினும் காங்ரீவின் (Congreve) “உலகத்தின் வழி” (Way of the world) போன்றதொரு நாடகம் ஷேக்ஸ்பியரின் எந்த நாடகத்தைவிடவும் சில வழிகளில் முதிர்ச்சியோடிருப்பதை நம்மால் உணராமல் இருக்க முடிவதில்லை. அந்த விதத்தில், அது கூடுதல் முதிர்ச்சியடைந்த சமூகத்தை பிரதிபலிக்கிறது. அதாவது பழக்கவழக்கங்களில் (manners) மேலும் கூடுதலான முதிர்ச்சியை பிரதிபலிக்கிறது.

நம்முடைய பார்வையில் காங்ரீவ் எந்த சமூகத்துக்காக எழுதினாரோ அது நாகரீகமடையாததாகவும், கொடூரமானதாகவும் தோன்றலாம். ஆனால் டியூடர்களின் (Tudor) சமூகத்தைக் காட்டிலும் அதுவே நமக்கு அண்மையில் இருக்கிறது. அதனாலேயே அதை இன்னும் தீவிரமாக மதிப்பிடுகிறோம். குழு நோக்கோடு குறுகல் பார்வை கொண்ட சமூகமாயும் இருந்தாலும் காங்ரீவ் கால சமூகம் ஒப்பீட்டளவில் கூடுதலாய் பண்பட்டிருந்தது. அதன் மனம் ஆழமற்றதாகவும், நுண்ணுணர்வு எல்லைக்குட்பட்டதாகவும் இருந்ததால் முதிர்ச்சியின் ஒரு பகுதியை இழந்திருந்தது. ஆனால் முதிர்ச்சியின் இன்னொரு சாத்தியத்தை உணர்ந்திருந்தது. எனவே மனதின் முதிர்ச்சியோடு, பழக்கவழக்கங்களின் முதிர்ச்சியையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

கவிதையைவிடவும் உரைநடையின் வளர்ச்சியிலேயே, ஒரு மொழியின் முதிர்ச்சி நோக்கிய முன்னேற்றம் எளிதில் அடையாளம் காணப்பட்டு, உடனடியாக அங்கீகரிக்கப்படுகிறது. உரைநடையை கணக்கில் எடுக்கும்போது அதன் மேன்மைகளில் உள்ள தனிப்பட்ட வேறுபாடுகளால் நம் கவனம் சிதறுவதில்லை. பொதுவான தரநிலை (common standard), பொதுவான சொற்களஞ்சியம் (common vocabulary) மற்றும் பொதுவான வாக்கிய அமைப்பு (common sentence structure) இவற்றுக்கான ஒத்திசைவு நோக்கியே நம் பார்வை இருக்கிறது. இந்த பொதுவான தரநிலைகளிலிருந்து மிகவும் வேறுபடுகிற, தீவிரமாய் தனித்தன்மையை வெளிப்படுத்துகிற உரைநடையே ‘கவித்துவ உரைநடை’ என்று நாம் பெயரிடும் தகுதியை பெறுகிறது.

கவிதையில் ‘இங்கிலாந்து’ அற்புதங்களை சாதித்திருந்த நேரத்தில் அவளுடைய உரைநடையோ ஒப்பீட்டளவில் முதிர்ச்சியற்றதாக இருந்தது. சில நோக்கங்களை அடைவதில் போதுமான அளவு வளர்ச்சியை எட்டியிருந்தாலும் சிலவற்றில் போதாமையோடிருந்தது. அதே வேளையில், பிரெஞ்சு மொழி ஆங்கிலத்தைவிட கவிதையில் குறைவுப்பட்ட நம்பிக்கையே வழங்கினாலும் உரைநடையில் அதிகம் முதிர்ச்சி கண்டிருந்தது. டியூடர் காலத்தை சேர்ந்த ஏதேனும் ஓர் எழுத்தாளரை மான்டெய்ங்னே(Montaigne) ஒருவரோடு ஒப்புமை செய்தாலே போதும்.  நடையழகாளரான (Stylist) மான்டெய்ங்னே ஒரு முன்னோடி. அதே சமயம், அவர் உரைநடையும் செவ்வியல் உருவாக்கத்திற்கான பிரெஞ்சு தேவையை பூர்த்தி செய்யும்படி அமையவில்லை.

பிற மொழிகளோடு போட்டியிடுவதற்கு முன்பாகவே, ஆங்கில உரைநடை சில காரியங்களுக்கு ஏற்றதாய் உருபெற்றிருந்தது. ஹூக்கருக்கு (Hooker) வெகு முன்பாகவே ஒரு மலோரியும் (Malory), ஹோப்ஸ்க்கு (Hobbes) முன்னால் ஒரு ஹூக்கரும் (Hooker), ஆடிசனுக்கு (Addison) முன்னால் ஒரு ஹோப்ஸும் (Hobbes) ஆங்கிலத்தில் இருந்திருக்கிறார்கள். கவிதையில் இவ்வகையிலான  தரப்படுத்தலை முன்வைப்பதில் என்னென்ன சிரமங்கள் இருந்தாலும், ஒரு செவ்வியல் உரைநடையின் வளர்ச்சியை பொருத்தமட்டில், அதை ஒரு பொது வடிவம் (common style) நோக்கிய முன்னேற்றமாக காணும் வாய்ப்பிருக்கிறது. உடனே, சிறந்த உரைநடை எழுத்தாளர்களை ஒருவருக்கொருவர் வேறுபடுத்த முடியாது என்று சொல்லவரவில்லை.

அடிப்படையானதும் பண்புநலன்கள் சார்ந்ததுமான வேறுபாடுகள் இருக்கவே செய்யும். அதாவது, வேறுபாடுகள் குறைந்துவிடவில்லை; அவை மேலும் நுட்பமாகியிருக்கின்றன. சீர்பட்டிருக்கின்றன. நுண்ணுனர்வுள்ள ஒருவரால் ஏடிசன் (Addison), ஸ்விப்ட் (Swift) இருவரின் உரைநடைகளுக்கும் நடுவிலான வேறுபாட்டை துல்லியமாக அறிய முடியும். சுவைத்திறன் கொண்ட ஒரு வல்லுநருக்கு இரண்டு வகை வைன்கள் நடுவே வேறுபாடு தெரிவது போல.

செவ்வியல் உரைநடையின் காலகட்டத்தில், செய்தித்தாள் எழுத்தாளர்களின் பொது நடையினைப் போல வெறுமனே எழுதுவதற்கான ஒரு பொது முறைமையை மட்டும் நாம் காணவில்லை. மாறாக ரசனையின் ஒரு கூட்டிணைவை காண்கிறோம். செவ்வியலுக்கு முந்தைய காலமானது, மையத்திலிருந்து விலகிய அசாதாரணத்தன்மை (eccentricity), சலிப்பூட்டும் ஒரே பாணி (monotony) இவ்விரண்டையும் மொழியில் வெளிப்படுத்தக்கூடும். மொழியின் வளங்கள் இன்னமும் பரிசோதிக்கப்படாததால் “ஒரே பாணி”யும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலை இன்னமும் உருவாகததால் “அசாதாரணத்தன்மை”யும்  வெளிப்படுகின்றன – மையமே இல்லாத நிலையில் அதை அசாதாரணம் என்று அழைக்க முடியுமேயானால். எனவே, செவ்வியலுக்கு முந்தைய கால எழுத்து ஒரே நேரத்தில் விதிகளை வலியுறுத்துவதாகவும், மீறல் கொண்டதாகவும் இருக்கலாம்.

செவ்வியலுக்கு பிந்தைய காலமும் “அசாதாரணத்தன்மை”,”ஒரே பாணி” இரண்டையும் மொழியில் வெளிப்படுத்தக்கூடும். மொழியின் வளங்கள், அந்த நேரத்தில், முழுமையாக காலி செய்யப்பட்டுவிட்டதால் “ஒரே பாணி”யும், சரித்தன்மையைவிடவும் தனித்தன்மை மிகுந்த முக்கியத்துவம் பெறுவதால் “அசாதாரணத்தன்மை”யும் வெளிப்படுகின்றன. ஆனால், பொது நடையினை கண்டடைகிற காலமே ஒரு சமூகம் ஒழுங்கையும் ஸ்திரத்தன்மையினையும் அடைந்த தருணமாக இருக்கும். சமநிலையினையும் ஒத்திசைவினையும் அடைந்த தருணமாக இருக்கும். போலவே, தனித்தனி எழுத்து நடைகளில் மிகப் பெரும் உச்சங்கள் வெளிப்படும் காலம் என்பது வளர்ச்சியின் காலமாகவோ அல்லது வீழ்ச்சியின் காலமாகவோ இருக்கலாம்.

மொழியின் முதிர்ச்சி என்பது இயற்கையாகவே, மனம் மற்றும் பழக்க வழக்கங்களின் முதிர்ச்சியை துணையாக கொண்டிருக்கும். ஒரு மொழி தன் கடந்தகாலம் பற்றிய விமர்சனபூர்வமான அறிவையும், தன் நிகழ்காலம் மீதான நம்பிக்கையையும் கொண்டிருப்பதோடு  தன் எதிர்காலம் பற்றி எந்த சந்தேகத்தையும் நினைவில் கொண்டிராத தருணத்திலேயே அது முதிர்ச்சியை நெருங்கும் என நாம் எதிர்பார்க்கலாம். இலக்கியத்தில், இதன் அர்த்தம், ஒரு கவிஞன் தன் முன்னோடிகள் பற்றி அறிந்திருக்கிறான் என்பதேயாகும். நாமும் அவனுடைய ஆக்கங்களுக்கு பின்னுள்ள முன்னோடிகள் பற்றி அறிந்திருக்கிறோம்.  அதாவது, ஒரு மனிதனிடம் முன்னோர்களின் கூறுகளை அறிய முடிவதைப் போல. அதே நேரத்தில் அவன் வேறுபாடும் தனித்தன்மையும் கொண்டவனாக இருப்பதையும் போல.

இலக்கியத்தில் முன்னோடிகள் தம்மளவிலேயே நாம் கௌரவம் செய்கிறபடிக்கு மகத்தானவர்களாக இருக்க வேண்டும். ஆனால், அவர்களுடைய சாதனை மொழியின் இன்னும் மேம்படாத வளங்களுக்கான யூகத்தை அளிப்பதாகவும் இருக்க வேண்டும். தம் மொழியில் செய்யப்பட வேண்டியவை எல்லாம் ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டதாக எண்ணி, இளம் எழுத்தாளர்கள், அச்சத்தால் அழுத்தப்படாதவாறே அவர்கள் சாதனை இருக்க வேண்டும். முதிர்ச்சியடைந்த ஒரு காலகட்டத்தில், ஒரு கவிஞன் தன் முன்னோடிகள் செய்யாத ஒரு விஷயத்தை நிகழ்த்துவதற்கான நம்பிக்கையிலிருந்து நிச்சயம் உத்வேகம் பெறமுடியும். முன்னோடிகளுக்கு எதிராக அவன் கலகம் கூட செய்யலாம். ஒரு நம்பிக்கைக்குரிய இளைஞன் தன் பெற்றோரின் விசுவாசங்கள் மற்றும் பழக்க வழக்கங்களுக்கு எதிராக கலகம் செய்வது போல. ஆனால் பின்னோக்கி ஆராயும்போது அவனும் அவர்கள் மரபின் தொடர்ச்சியே என்பதையும் அடிப்படையான குடும்ப குணாதிசயங்களை அவனும் பாதுகாக்கிறான் என்பதையும் அவனுடைய நடவடிக்கையின் வேறுபாடானது இன்னொரு காலகட்டத்தின் சூழ்நிலைகளின் வேறுபாடே என்பதையும் நம்மால் காண முடிகிறது.

சில நேரங்களில் மனிதர்களின் வாழ்க்கையை தந்தை அல்லது தாத்தாவின் புகழ், நிழலாய் மூடி மறைத்துவிடுவதால் அவர்கள் செய்யக்கூடிய எந்த சாதனையும் ஒப்பீட்டில் மதிப்பற்றதாக மாறுவதை நாம் கவனித்திருக்கிறோம். அது போல கவிதையும் ஒரு காலகட்டத்தின் முடிவில் தன் தந்தைவழி சாதனையோடு போட்டியிடுவதற்கான ஆற்றலற்றாய் மாறலாம்.  இவ்வகைப்பட்ட கவிஞர்களை எந்தவொரு காலகட்டத்தின் முடிவிலும் நம்மால் சந்திக்க முடிகிறது. அவர்கள்,கடந்தகாலம் பற்றிய உணர்வை மட்டுமே கொண்ட கவிஞர்கள். அல்லது மாற்றி சொன்னால், கடந்தகாலத்தை கைவிடும் முயற்சியின் அடிப்படையிலேயே எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை கட்டமைப்பவர்கள். மரபுக்கும் -கடந்தகால இலக்கியம் வழியே உணரப்படும் கூட்டாளுமை- வாழும் தலைமுறையின் அசல்த்தன்மைக்கும் நடுவிலான சமநிலை பேணப்படும் இடத்திலேயே இலக்கிய படைப்பாற்றலுக்கான தொடர் உறுதிப்பாடு எந்த மனிதரிலும் திகழ்கிறது.

தன்னளவில் மகத்தானதாக இருந்தாலும், எலிஸபெத்தியன் கால இலக்கியத்தை நாம் முழுமையாக முதிர்ச்சியடைந்ததாக சொல்ல முடியாது. அதை செவ்வியல் என்று அழைக்க முடியாது. முதிர்ச்சிக்கான ஆரம்ப சாயல், மறுமலர்ச்சி காலத்திலேயே தென்படத் துவங்குகிறது. முதிர்ச்சியை நெருங்கிக்கொண்டிருக்கும் பிரக்ஞையை மில்டனிடமே (Milton) நாம் அடைகிறோம். தன் முன்னோடிகளைக் காட்டிலும் மில்டனே ஆங்கில இலக்கியத்தின் கடந்தகாலம் பற்றி விமர்சனபூர்வமான அறிவை பெறுவதற்கான சாத்தியத்தை கொண்டிருந்தார். மில்டனை வாசிப்பதென்பது ஸ்பென்சரின் (Spencer) மேதமையின் மதிப்பின் மேல் உறுதிப்பாடுக் கொள்வது. மில்டனின் வசனக் கவிதை உருபெறுவதற்கான வாய்ப்பை உண்டு பண்ணியதால் ஸ்பென்சர் மேல் நன்றியுணர்ச்சி கொள்வது. எனினும் மில்டனின் நடை, செவ்வியல் நடையன்று. இன்னமும் உருவாக்கத்தில் உள்ள ஒரு மொழியின் நடை. தன் ஆசிரியர்களை ஆங்கிலத்தில் காணாமல், லத்தீனிலும், சற்று குறைந்த அளவு கிரேக்கத்திலும் கண்டடைந்த ஓர் எழுத்தாளனின் நடை. இதையே, ஜான்சனும் (Johnson), லேண்டரும் (Landor)  மில்டனுடைய நடையில் ஆங்கிலத்தன்மை இல்லை என்று குற்றமாக சொன்னார்கள் என நினைக்கிறேன். அவர்களுடைய இந்த தீர்ப்பினை சரி செய்யும்விதமாக மொழியின் வளர்ச்சிக்கு மில்டன் அதிகம் பங்களிப்பாற்றினார் என்று நாம் உடனடியாக சொல்லிவிடலாம்.  

செவ்வியல் நடையை நெருங்குவதன் அறிகுறிகளில் ஒன்று – சிக்கலான ஊடுபாவுகள் நோக்கி வாக்கியம் மற்றும் முற்றுப்புள்ளியின் அமைப்பு வளர்வது. ஷேக்ஸ்பியரின் நடையை ஆரம்ப காலத்திலிருந்து கடைசி கால நாடகங்கள் வரை தொடரும்போது அத்தகைய வளர்ச்சி வெளிப்படையாக தெரிகிறது. மற்ற வடிவங்களைவிட குறுகலான எல்லைக் கொண்ட நாடக வசனத்தில் அதில் சாத்தியப்படக்கூடிய தூரம்வரை சிக்கலான ஊடுபாவுகளின் திசையில் ஷேக்ஸ்பியர் தன் கடைசி கால நாடகங்களில் பயணப்பட்டிருப்பதாகவும் நாம் சொல்லலாம். ஆனால் வெறுமனே சிக்கலின் நிமித்தம் நடையை சிக்கலாக்குவது சரியான குறிக்கோள் அல்ல. இங்கே குறிக்கோள் என்பது, முதலில், உணர்ச்சி மற்றும் எண்ணத்தின் நயமான வேறுபாடுகளை துல்லியமாக வெளிப்படுத்துதல். இரண்டாவதாக, மகத்தான தூய்மை மற்றும் பல்வகைப்பட்ட இசைமையை அறிமுகம் செய்தல்.

விரிவான கட்டமைப்பின்(elaborate structure) மீதுள்ள காதலால்,  ஓர் ஆசிரியர், எதையும் எளிமையாக சொல்லும் திறனை இழந்துவிட்டாலோ, எளிமையாகவும் திருத்தமாகவும் சொல்லப்பட வேண்டியதை விரிவாக சொல்லும்படிக்கு வடிவ மோகத்தால் ஆட்கொள்ளப்பட்டாலோ, அவருடைய வெளிப்பாட்டின் வீச்சு எல்லைக்குட்படுவதோடு சிக்கலான ஊடுபாவுகளை கையாளும் முறைமையும் ஆரோக்கியமற்றதாக மாறிவிடும். மேலும் பேச்சு மொழியோடு அந்த ஆசிரியர் நெருக்கத்தையும் இழந்துவிடுவார். எப்படியிருப்பினும், வசனக் கவிதை ஒவ்வொரு கவிஞனின் கையிலும் அடுத்தடுத்து மேம்பட்டு வளரும்போது, “ஒரே பாணி”யிலிருந்து பல வகைப்பட்டதாகிறது. எளிமையிலிருந்து ஊடுபாவுகள் நோக்கி செல்கிறது. வீழ்ச்சியுறும்போது, மீண்டும் ஒரே பாணிக்கு திரும்புகிறது – மேதமைகளால் உயிரும் அர்த்தமும் கொடுக்கப்பட்ட வடிவ அமைப்பு நிலைத்திருந்தாலும்.

மேற்சொன்ன பொதுமைப்படுத்தல் விர்ஜிலின் முன்னோடிகளுக்கும், பின்வந்தவர்களுக்கும் எவ்வளவு தூரம் பொருந்துகிறது என்பதை நீங்களே சரி பார்த்துக் கொள்ளலாம். மில்டனை பதினெட்டாம் நூற்றாண்டில் நகலெடுத்த எழுத்தாளர்களிடம் இந்த இரண்டாம் நிலையை சேர்ந்த சலிப்பூட்டும் ஒரே பாணியை நம்மால் பார்க்க முடிகிறது; மில்டனோ ஒருபோதும் ஒரே மாதிரி எழுதியவர் அல்ல. அத்தகைய நேரத்தில் ஒரு புதுவகை எளிமையோ, அல்லது ஒப்பீட்டளவில் ஒரு பண்படாதத்தன்மையோக் கூட மாற்றாக தோன்றும் காலம் வரக்கூடும்.

இங்கே, நான் என்ன முடிவுக்கு வருகிறேன் என்பதை நீங்கள் ஏற்கனவே கணித்திருக்கலாம். செவ்வியலின் பண்புநலன்களாக இதுவரை நான் முன்வைத்த மனதின் முதிர்ச்சி, பழக்கவழக்கங்களின் முதிர்ச்சி, மொழியின் முதிர்ச்சி மற்றும் ஒரு பொது நடையின் தேர்ச்சி ஆகியவை பெரும்பாலும் ஆங்கில இலக்கியத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் காணக் கிடைக்கின்றன. கவிதையில், போப்பை (Pope) உதாரணம் சொல்ல முடிகிறது. இந்த விஷயத்தில் நான் சொல்ல வேண்டியது இவ்வளவுதான் என்றால், இது நிச்சயம் புதிதானது அல்ல. சொல்ல தகுதியானதும் அல்ல. அப்படி சொல்வது, ஏற்கனவே மற்றவர்கள் செய்தது போல, இரண்டு பிழைகள் நடுவே ஒரு தேர்வை முன்மொழிவதாக மாறிவிடும். ஒன்று, பதினெட்டாம் நூற்றாண்டே (அது தானும் எண்ணியது போல) ஆங்கில இலக்கியத்தின் சிறந்த காலகட்டம் என்பது. மற்றது, செவ்வியல் எனும் சிந்தனையையே மொத்தமாக கைவிட்டுவிட வேண்டும் என்பது.

  • தொடரும்

டி.எஸ்.எலியட்

இருபதாம் நூற்றாண்டின் முக்கிய கவிஞர்களில் ஒருவராகவும் விளங்கியவர். நவீனத்துவத்தின் பிதாமகராகக் கருதப்படுகிறார். நுட்பமான இலக்கியத் திறனாய்வு நூல்களும், நாடகங்களும் எழுதியிருக்கிறார். 'பாழ்நிலம்' படைப்புக்காக நோபால் பரிசு வென்ற ஆங்கிலக் கவிஞர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.