/

வெந்தயநிறச் சேலை : சுரேஷ்குமார இந்திரஜித்

இன்று விடுமுறை நாள். டி.வி. முன் உட்கார்ந்து பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தபோது ஏதாவது பிடித்தமான சினிமாப்பாடல் காட்சி ஒளிபரப்பினால் ‘இன்று நல்ல நாள்’ என்று நினைத்தேன். சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா பாடும் ‘அங்கே மாலை மயக்கம் யாருக்காக’ என்ற பாடல் ஒளிபரப்பானது. இந்தப் பாடல் பிரமாதமான பாடல் என்று சொல்லமுடியாது. ஆனால், கே. ஆர். விஜயா இந்தப் பாடல் காட்சியில் கட்டியிருக்கும் புடவையின் நிறம் எனக்கு மிகவும் பிடித்தது. அந்த நிறத்தின் பெயர் எனக்குத் தெரியவில்லை. அந்தப் புடவையில் கே. ஆர். விஜயா அழகாக இருப்பார். இடது கண்ணுக்குக் கீழே மேக்கப்மேன் ஒரு மச்சம் வைத்திருப்பார். அந்தப் பாடல் காட்சியில் அவர் நடனமும் எனக்குப் பிடித்திருந்தது.

மனைவியை அழைத்து கே. ஆர். விஜயா கட்டியிருக்கும் சேலை நிறத்திற்கு என்ன பெயர் என்று கேட்டதற்கு “வெந்தயக்கலர்” என்றாள். வெந்தயத்தைக் கொண்டுவரச் சொல்லிப் பார்த்தேன். ஆம். சேலையின் நிறம் வெந்தயத்தின் நிறம்தான். இந்த நிறத்தில் கதாநாயகிக்குச் சேலை உடுத்தவேண்டும் என்று முடிவு செய்தவன் கலைஞன்தான்.

என் மனைவிக்கு அழகியல் உணர்வு இல்லை என்றே கூறுவேன். திருமணத்திற்கு முன் அழகியல் உணர்வைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்று சில சடங்குகளை வைத்தால் நன்றாக இருக்கும். அவ்வாறு செய்வதில்லை. அழகியல் உணர்வு உள்ளவர்கள் யாராவது சாப்பிட்டபின் விரல்களை நாக்கால் நக்குவார்களா என்ன?

நான் சரளாவை நினைத்துக்கொண்டேன். என் அத்தை மகள். என் ஒன்றுவிட்ட சித்தப்பா பையனை திருமணம் செய்துவிட்டாள். அவளுக்குத் திருமணப் பேச்சு வந்தபோது எனக்கு வேலை இல்லை. இப்படித்தான் ஏதாவது நடந்து வாழ்க்கையை மாற்றிப்போட்டுவிடுகிறது.

நாற்காலியில் அமர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்த நான் டி.வி.யை அணைத்துவிட்டு படுக்கையில் படுத்தேன். எனக்குத் தலையணை மிதுக்மிதுக் என்று இருக்கவேண்டும். ரொம்பவும் மிதுக்காகவும் இருந்துவிடக்கூடாது. கல் மாதிரியும் இருந்துவிடக்கூடாது. வெளியூர் சென்று தங்கவேண்டியிருந்தால் பெரும்பாலும் கல் போன்ற தலையணைதான் கிடைக்கும். சென்னையில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்க நேர்ந்தது. மெத்தையில் உட்கார்ந்தால் அமுங்குகிறது. புரண்டு படுத்தால் மெத்தையும் பள்ளம் போட்டு அமுங்குகிறது. தலையணையும் பள்ளம் போட்டு முகம் அதில் அமுங்குகிறது.

இது என் வீடு. என் ரசனைக்கேற்ப எல்லாவற்றையும் முடிந்த அளவு அமைத்துக்கொண்டேன். பெரிய சோவி ஒன்று என் படுக்கையில் கிடக்கும். அதை எடுத்து வலது உள்ளங்கைக்குள் வைத்துக்கொள்வேன். சில்லென்று இருக்கும். தூக்கத்தைத் தூண்டும். சோவியை வலது உள்ளங்கைக்குள் வைத்துக்கொண்டேன்.

இன்று நானும் என் மனைவி அனுராதாவும் பக்கத்து ஊரில் இருக்கும் சரளா வீட்டிற்குச் செல்கிறோம். சரளா நினைவு வந்ததும் மனம் புரண்டது. சிறுவயதில் இருவரும் விளையாடியது நினைவிற்கு வந்தது. தாய விளையாட்டில் அவளைச் ஜெயிக்க முடியாது. தாயக்கட்டையை நாலு என்று சொல்லி உருட்டிவிடுவாள். நாலு வந்திருக்கும். உருட்டுவதற்கு முன் இரண்டு உள்ளங்கைகளில் வைத்து சூடுபடுத்துவதுபோல உருட்டித் தேய்த்துப் பிறகுதான் தரையில் விடுவாள். “இந்தா தாயம். இந்தா மூணு. இந்தா அஞ்சு.” என்று சொல்லிச் சொல்லி விழ வைப்பாள்.

சரளாவுக்கென்று தனித்த விருப்பங்கள் ஏதும் இருந்ததா என்று தெரியவில்லை. பெண்களின் தனித்த விருப்பங்கள் ரகசியமானவை. யாருக்குக் கட்டிக்கொடுத்திருக்கிறார்களோ அவன் கணவன். அவனோடு சேர்ந்து வாழ்நாள் முழுதும் வாழவேண்டும்.

மாமாவும் அத்தையும் சரளா வீட்டிற்கு இரண்டு தெரு தள்ளிக் குடியிருக்கிறார்கள். அவர்களையும் சென்று பார்த்துவிட்டு சரளா வீட்டிற்குப் போகலாம் என்று நினைத்திருக்கிறேன். என் மனைவிக்குச் சரளா வீட்டிற்குச் செல்வதில் விருப்பம் இருந்ததில்லை. ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளமாட்டாள். அவளுடைய முக பாவனைகளில் இருந்து அவள் மனதை அறிந்துகொள்வேன். சரியான நேரத்திற்குத் தயாராகமாட்டாள். நான் தயாராகி உட்கார்ந்திருப்பேன். தாமதமாகத் தயார் ஆவாள். அவள் அவசர அவசரமாகத் தயாராவதால் வியர்த்துவிடும். முகப்பவுடர் திட்டுத் திட்டாகத் தெரியும். மின்விசிறிக்குக் கீழே உட்கார்ந்து வியர்வை அடங்கியபின் முகத்தைத் துடைத்து மீண்டும் பவுடர் போட்டுக்கொள்வாள்.

இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினோம். இரண்டு வீடுகளுக்குச் செல்வதால் பழங்களும் இனிப்புகளும் இரண்டு பைகளில் வாங்கவேண்டும். இனிப்பு வாங்கும் கடையில் நான் பால்பேடா வாங்கவேண்டும் என்று சொன்னால் என் மனைவி மைசூர்பாக் அல்லது ஜாங்கிரி வாங்கவேண்டும் என்கிறாள். பிடிவாதம் பிடித்து பால்பேடா இரண்டு டப்பா வாங்கினேன்.

அடுத்து பஸ் பிடித்துச் செல்லவேண்டும். பஸ் நிலையத்திற்குச் சென்றோம். நாங்கள் செல்லவேண்டிய பஸ் வர அரைமணிநேரம் காத்திருந்தோம். “வெயிலா இருக்கு” என்று அனுராதா பத்துத் தடவையாவது சொல்லியிருப்பாள். பஸ் வந்தது. பஸ்ஸிலே ஏறினோம். இரண்டு நபர் அமரும் இருக்கையில் அவளுக்கு ஜன்னலோர இருக்கையைக் கொடுத்து அமர்ந்தேன். ஆட்கள் சேரவில்லை என்பதால் கண்டக்டர் கூவி அழைத்துக்கொண்டிருந்தார். டிரைவர் கீழே நின்று சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தார். ஆட்கள் சேர்ந்து பஸ் கிளம்பியது. டிரைவர் காது கிழிகிற சத்தத்துடன் ஹாரனை அடிக்கடி அடித்துக்கொண்டிருந்தார்.

கண்டக்டர், டிக்கெட்டுக்கள் கொடுத்துவிட்டு சில்லறை இல்லை என்று சொல்லிவிட்டுப் பிற இருக்கைகளுக்குச் சென்றுவிட்டார். “என்னங்க மீதிப் பணம் கேட்டு வாங்குங்க” என்று அனுராதா அனத்திக்கொண்டிருந்தாள். கண்டக்டர் அருகில் வந்தால் கேட்கலாம். அவர் டிரைவர் இருக்கைக்குப் பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்திருக்கும்போது இங்கிருந்து எழுந்து சென்று அவரிடம் டிக்கெட் போக மீதிப்பணம் கேட்பது சரியல்ல என்று எனக்குத் தோன்றியது.

அதிசயம் நடந்தது. கண்டக்டர் என் அருகில் வந்து டிக்கெட்டுகள் போக மீதிப் பணத்தைக் கொடுத்தார். இப்படியும் கண்டக்டர் இருக்கிறார். நான் அனுராதாவைப் பார்த்தேன். “இவர் புதுசா வேலைக்குச் சேர்ந்தவர்னு நினைக்கிறேன்” என்றாள். பஸ் சீராகச் சென்றுகொண்டிருந்தது. ஜன்னல் வழி காற்று வந்தது. டிரைவர் சினிமாப்பாடல்களை ஒலிக்கவிட்டார். டப்பாங்குத்துப் பாடல்கள். பக்கத்திலிருப்பவரிடம்கூட பேச முடியாது. அப்படி ஒரு சத்தம். பஸ்ஸில் எல்லோரும் முகம் வெளிறிப்போய் உட்கார்ந்திருந்தார்கள். நான் கண்டக்டரிடம் சென்று சத்தத்தைக் குறைக்கச் சொன்னேன். டிரைவர் சினிமாப்பட வில்லன் போன்று இருந்தார். பின்னால் திரும்பிப் பார்த்து சத்தத்தை லேசாகக் குறைத்தார். இன்னும் குறைக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. இப்படித்தான் பஸ் பயணத்தைக் கெடுத்துவிடுகிறார்கள்.

பஸ் ஊரையடைந்தது. அத்தை வீட்டிற்கு ஆட்டோவில்தான் போகவேண்டும். ஆட்டோக்காரர்கள் பலவிதத் தோற்றங்களில் இருப்பார்கள். அதில் ஒரு நல்ல ஆளைப் பார்த்துத் தேர்வு செய்து அவரிடம் பேரம் பேசவேண்டும். அப்படி ஒருவரைத் தேர்வு செய்து பேரம் பேசி முடிவு செய்தேன். ஆட்டோ சென்றது. பஸ்ஸில் வரும்போது ஜன்னலோரமாக அனுராதா உட்கார்ந்திருந்ததால் தலைமுடி கலைந்திருந்தது. சிறிய கண்ணாடியைப் பார்த்துச் சரி செய்தாள். ஆனால் ஓடிக்கொண்டிருந்த ஆட்டோவில் அதைச் சரியாகச் செய்யமுடியவில்லை. சித்தப்பா வீட்டிற்குச் சற்றுமுன் ஆட்டோவை நிறுத்தச் சொன்னாள்.

ஆட்டோ நின்றது. பவுடர் டப்பாவும் பஃப்பும் கொண்டுவந்திருந்தாள். சிறு கண்ணாடியைப் பார்த்து முகத்தோற்றத்தைப் புதுப்பித்துக்கொண்டாள். நானும் பவுடர் டப்பாவை வாங்கி முகத்தோற்றத்தைப் புதுப்பித்துக்கொண்டேன். அத்தை வீட்டை அடைந்தோம்.

மாமா வாசலில் நின்று வரவேற்றார். அத்தை நிலைப்படியில் நின்றிருந்தாள். அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பழங்கள் இனிப்புகளை அவளும் சரளாவுக்குக் கொடுக்கவேண்டியதை நானும் எடுத்துக்கொண்டோம்.

அத்தைக்கு என்னைப் பிடிக்கும். என் அப்பாவின் கூடப்பிறந்த தங்கை. அவளுக்குத் திருமணமாகும் வரை என் அப்பாவுடன் சேர்ந்து ஒரே வீட்டில்தானே இருந்தாள். அப்பாவிற்கு வெந்நீர் வைத்துக்கொடுப்பது, உணவு பரிமாறுவது, அவரின் ஆடைகளைத் துவைப்பது உள்ளிட்ட வேலைகளை அவள்தான் செய்தாள். அப்பா இதைப் பலதடவை சொல்லியிருக்கிறார்.

என் அப்பா, அம்மா பற்றி அத்தை விசாரித்தாள். அப்பாவின் பிஸினஸ் பற்றி மாமா விசாரித்தார். சம்பிரதாயமான விஷயங்கள் பேசியபின் என்ன பேசுவது என்றே எவருக்கும் தெரியவில்லை. பேச்சு நின்றது. அனுராதா என்னைப் பார்த்தாள். காபி வேண்டாம் என்று அத்தை கொடுத்த கூல் டிரிங்ஸ் குடித்திருந்தோம். நான் சும்மா உட்கார்ந்திருக்க, அனுராதா மீண்டும் ஒரு தடவை என்னைப் பார்த்தாள். நாங்கள், மாமா, அத்தையிடம் சொல்லிக்கொண்டோம். சரளாவிடம் கொடுக்கச் சொல்லி அத்தை ஒரு கனத்த பையைக் கொண்டுவந்தாள். மாமா, “வேண்டாம். நாம் அதைக் கொடுத்துக்கொள்ளலாம். விருந்தாளிகளிடம் வேலை சொல்லக்கூடாது” என்று சொல்லி அந்தப் பையை உள்ளே கொண்டுபோய் வைத்துவிட்டார்.

அத்தை போன் பண்ணி ஆட்டோ வரச்சொன்னாள். ஆட்டோ வந்தது. நானும் அனுராதாவும் ஏறிக்கொண்டோம். ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தபோது, “வெந்தயக் கலரில் உனக்குப் புடவை எடுத்துவிடுவோம்” என்றேன். “என்னைக் கே. ஆர். விஜயாவா ஆக்கிப் பாக்கணுமா” என்று கோபமாகக் கேட்டாள். நான் மௌனமானேன். நான் அனுராதாவிடம் அந்தப் பாடலின்போது கே. ஆர். விஜயா கட்டியிருக்கும் சேலை நிறத்தைக் கேட்டிருக்கக் கூடாது. இனி இந்த வாழ்க்கை முழுவதும் வெந்தயக் கலர் சேலை வாங்கிக்கொடுக்க முடியாது. வெந்தயக் கலர் சேலையிலும் அனுராதாவைப் பார்க்க முடியாது.

சரளா வீட்டிற்குச் சற்று தூரத்தில் ஆட்டோவை நிறுத்தினேன். சிறு கண்ணாடியைப் பார்த்து, முகப்பவுடர் போட்டுக்கொண்டேன். தலை சீவிக்கொண்டேன். அனுராதா மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஒப்பனை செய்துகொள்ளவில்லை. நான் கேட்டேன். “தேவையில்லை. இது போதும்” என்று சொல்லிவிட்டாள்.

எங்களை எதிர்பார்த்தே வாசலில் சரளா நின்றிருந்தாள். எங்களைப் பார்த்தும், “அத்தான் வாங்க. அக்கா வாங்க” என்றாள். அனுராதா என்னை ‘அத்தான்’ என்று அழைத்ததேயில்லை. ‘என்னங்க’ என்றுதான் அழைப்பாள். நானும் சொல்லிப் பார்த்தேன். அவள் இதுவரை கூப்பிடவில்லை. சிறுவயதில் இருந்தே சரளா என்னை ‘அத்தான்’ என்றே அழைத்துவந்தாள். ‘அத்தான்’ என்ற வார்த்தை இனிமையானது.

“தம்பி எங்கே” என்று கேட்டேன்.

“அத்தான்… இப்பத்தான் ஒரு மணிநேரத்துக்கு முன்னே கேதம்னு செய்தி வந்தது. கூட வேலை பாக்கிறவருடைய அப்பாவாம். உன்கிட்டே சொல்லச் சொல்லிட்டு போயிட்டார். எப்ப வருவார்னு தெரியலை. சாப்பாடு எல்லோருக்கும் தயார் பண்ணியிருக்கேன்.”

சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவள் அடிக்கடி ‘அத்தான்’ என்று அழைத்துக்கொண்டிருந்தாள். அனுராதா ஏதாவது நினைத்துக்கொள்வாளே என்று நான் சங்கடப்பட்டுக்கொண்டிருந்தேன். சாப்பிடச் சென்றோம். சரளா மீன் குழம்பு ருசியாக வைத்திருந்தாள். மீன் வருவல், பருப்பு வடை, கீரை என்று எல்லாமே நன்றாகச் செய்திருந்தாள். நான் அவளைப் புகழ்ந்துகொண்டிருந்தேன். அவள், “புகழாதீங்க அத்தான்” என்று சொன்னாள். நான் அனுராதா முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தேன்.

பொழுதைக் கழிப்பதற்காக தாயம் விளையாடலாம் என்றேன். தாயம் விளையாண்டோம். சரளா கேட்டதெல்லாம் தாயத்தில் விழுந்தது. பழைய கெட்டிக்காரத்தனமும் அதிர்ஷ்டமும் தொடர்ந்துகொண்டிருந்தன. அனுராதாவின் விளையாட்டு மோசமாக இருந்தது. கிளம்பும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.

அனுராதா பாத்ரூம் போய்விட்டு வருவதாகக் கூறிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தாள். அவள் நுழைந்தவுடன் நான் சரளாவைத் தழுவிக்கொண்டேன். அவள் வாசற்கதவு சாத்தியிருப்பதைப் பார்த்துவிட்டு என்னைத் தழுவிக்கொண்டாள். இருவரும் தழுவிக்கொண்டிருந்ததை விட்டு விலகிக்கொண்டோம். அனுராதா பாத்ரூம் கதவைத் திறந்து வெளியே வந்தாள். சரளா உடைகளைச் சரிசெய்துகொண்டாள். அனுராதா முகத்தைக் கழுவினாள். உள்ளறைக்குச் சென்றாள். டிரெஸ்ஸிங் டேபிள் சேரில் உட்கார்ந்து ஒப்பனை செய்தாள். கட்டிலில் சரளாவின் வெந்தயக்கலர் சேலை இருந்ததைப் பார்த்தாள். சரளா, இந்தப் புடவையை இந்த நேரத்திலா கட்டிலில் வைத்திருப்பாள் என்று நொந்துகொண்டேன்.

கிளம்பினோம். ஆட்டோவில் ஏறினோம். ஆட்டோ அருகில் சரளா நின்றாள். கை அசைத்தாள். நாங்களும் கை அசைத்தோம். ஆட்டோ கிளம்பியது. தலையை வெளியே நீட்டிப் பார்க்கலாம் என்று தோன்றியது. பக்கத்தில் அனுராதா உட்கார்ந்திருந்ததினால் கட்டுப்படுத்திக்கொண்டேன். ஆட்டோ சென்றுகொண்டிருந்தது. “என்னங்க வெந்தயக் கலர்லே எனக்கு ஒரு புடவை எடுத்துருவோம். இந்த ஊர்லே இருந்தாக்கூட எடுத்துருவோம்.” என்றாள் அனுராதா. நான் மௌனமாக இருந்தேன்.

சுரேஷ்குமார இந்திரஜித்

சுரேஷ்குமார இந்திரஜித்  தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதி வருகிறார். ஆண் பெண் உறவுகளின் சிக்கல்கள், காமம், சமூக அவலங்கள் குறித்த கதைக்களங்களில் எழுதி வருபவர்.

தமிழ் விக்கியில்

7 Comments

  1. சுரேஷ்குமார இந்திரஜித்தின் ஒவ்வொரு வாக்கியமும் எனக்கு பரவசம். காலைப்பொழுதை இனிமையாக துவக்கியுள்ளேன். இந்த கதையை பகிர்ந்தற்கு நன்றி.

  2. கதைக்குள்ளே வைக்கப்பட்டிருக்கும் பூடகம்தான் கதை. அதுதான் கதையை அழுத்தமான தளத்தில் இயங்க வைக்கிறது. ஒவ்வொரு வரியையும் வாசித்துவிட்டு, வாசகன் தனக்கான பொருளை நிறைத்துக்கொள்ளும் வாசக ஈடுபாடு இதில் உண்டு. சரளாவைப் பார்க்க ஏன் மனைவியை அழைத்துப் போகவேண்டும்? சரளாவுக்கும் கதைசொல்லிக்கும் இருக்கும் ‘தொடர்பு’
    பற்றி அனுராதா சந்தேகிக்கக்கூடாது என்பதறற்காக இருக்கலாம். அல்லது அவளுக்குத் தெரியட்டுமே என்ற வியூகமாகக் கூட இருக்கலாம். வெந்தயக் கலர் புடவையை சரளா அனுராதாவுக்குத் தெரியும்படி வைத்ததுகூட அநுராதாவுக்கு கதைசொல்லிக்கும் உள்ள அணுக்கத்தை அனுவுக்கு பூடகமாகச் சொல்லும் செய்தியாகக்கூட இருக்கலாம். அனுவுக்கு அது தெரிந்துதான் இருக்கிறது என்பதை பல இடங்களில் சொல்லாமல் சொல்கிறார் கதாசிரியர், தனக்கும் வெந்தயக் கலர் புடவை ஒன்று வேண்டுமென்று அனு சொல்வதிலிருந்து இது புலனாகிறது.

  3. நண்பரும் விமர்சகரும் ஆன சுரேஷ் வெங்கடாத்திரி மற்றும் எழுத்தாளர் மயூரா இரத்தினசாமி இருவரும் வாசிக்க சொன்னார்கள்..வாசித்தேன்..எங்கவோ என்னவோ ஓன்னு குறையுது என்னதுன்னு தெரியலை … இந்த கதையில் அனுவின் கதாபாத்திரம் சரி…சரளாவின் கதாபாத்திரம் வெந்தய நிற சேலை பாத்ரும் போன சமயம் கட்டிப்பிடிப்பது …ம் என்ன காரணம்… இருவரின் உள்ளம் ஓன்றுபட மூலதாரமான காரணம் எனக்கு ஏனோ புரியலை …சரி இரண்டு தடவை படிச்சு பார்க்கலாம்… நல்ல கதை …வெந்தய நிற ஜரிகை போட்ட புடவை இரண்டு வாங்கனும்…யார் யாருக்கு தரலாம்…

  4. நடையும் கதையும் நன்றாக இருந்தாலும் திருமணம் மீறிய உறவு உருத்தவே செய்கிறது.
    கதையாசிரியரின் தரம் தாழ்கிறது .

  5. சுரேஷ் குமார இந்திராஜீத் அவர்களின் சிறுகதைகள் உலக தரம் கொண்டவை. இக்கதை உணர்வுகளின் தடத்தில் செல்கிறது.

உரையாடலுக்கு

Your email address will not be published.