“ஏ.வி.மணிகண்டன், பெங்களூரைச் சேர்ந்த ஒரு புகைப்பட கலைஞர். அவருடைய புகைப்படங்களுக்கு எழுத்தாளர்கள் பாலசுப்ரமணியன் பொன்ராஜ், வயலட், சியாம் ஆகியோர் எழுதிய குறிப்புகளின் தொகுப்பு கீழே.”
உறைந்த இடைவெளிகளின் கடக்க முடியாத தொலைவு
ரோஜா மலரை உற்றுக் கவனிப்பவர்கள், இதழ்களால் மூடுண்ட ஒரு வட்டப்பாதை, மலரின் ஆழத்திற்கு அவர்களை நடத்திச் செல்வதற்கான அழைப்பைக் காண்பார்கள். அனைத்து அழைப்புகளும் ஒலிகளால் மட்டுமே ஆனவையல்ல. காதலர்களின் பார்வைகளை நினைவு கூருங்கள். ஒரு புகைப்படம், ரோஜாவைப் போன்ற அடுக்குகள் கொண்ட மலர்கள், காதலர்களின் பார்வைகள் இவை எல்லாம் அருகருகே இருக்கின்றன. ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்து கொள்ளும் அண்டை வீட்டார்களைப் போல.
ஒரு மலரைக் காட்டிலும் ஒரு புகைப்படம் கூடுதலாக எதனைக் கொண்டுள்ளது?
குளிர்சாதனப் பெட்டியின் பனிக்கட்டித் தட்டில் உறைந்திருக்கும் பனித்துண்டங்களைப் போன்ற, மனிதர்களின், இன்ன பிறவற்றினுடைய காலத்தின் மீச்சிறு அலகில், உருவ வரம்புகளை மீறி வெளிப்படும் இருப்பின் தற்கணம்? ஒரு நல்ல புகைப்படம் மலரைப் போல பொருள் செறிவு மிக்கது. அதனைக் காண்பதற்கான நேரத்தை நாம் வழங்காவிடில் காட்சி இன்பத்திலிருந்து பொருள் செறிவிற்கு நகர்வதை நாம் தவற விடுவோம்.
மணிகண்டன் அவர்களுடைய இப்புகைப்படம் கருத்தூன்றிப் பார்ப்பதின் புதிரை (Puzzle of gaze) நிகழ்த்த விழைகிறது. முடிக்கப்பட்ட ஒரு புதிரை, புதிதாக உருவாகும் மற்றொரு புதிருக்கு அருகே வைக்கிறது. யாருடைய முகத்தையும் யாரும் பார்க்காத இப்புகைப்படத்தில் தனித்து நிற்கும் ஒருவனும், அருகருகே அமர்ந்து இருப்பவர்களும் மற்றவர்களைக் கவனியாது இருக்கிறார்கள். புகைப்படம் எடுத்த மணிகண்டன், இடைவெளிகளை, முதுகு காட்டி அமர்ந்திருப்பதில், ஒரு மலரில் இருந்து ஓரிதழ் தனித்துப் பிரிவதில், அதன் மீது சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் பெண்ணில், கைகட்டி நிற்கும் ஒருவனுமாகச் சேர்ந்து அவர்களை அறியாமல் எழுப்ப முனையும் பொருளை தனது காமிராவின் வழியே உற்றுப் பார்க்கிறார். உறைந்திருக்கும் இடைவெளிகளின் கடக்க முடியாத தொலைவு இப்புகைப்படத்தின் பொருளாக தனது புதிரை மெல்ல அவிழ்க்கிறது. மணிகண்டன் அப்பொருளை, புகைப்படத்தின் முகூர்த்த நேரம் முடிந்து போவதற்குள், தனது ஆழ்பார்வையால் நமக்கு ஒரு காட்சியாக்கித் தருகிறார். பலமுறை சொல்லப்பட்ட தேய்வழக்கே என்றாலும் ஒரு புகைப்படம் ஆயிரம் சொற்களைப் பேசக் கூடியது மட்டுமல்ல, அதனால் ஒரு கதையைச் சொல்லிவிட முடியும். மணிகண்டனின் இப்புகைப்படம் இடைவெளிகளின் கதையை சொல்கிறது.
-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
“சீமுர்க்”, “துரதிருஷ்டம் பிடித்த கப்பலின் கதை” உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
000
காலமும் வெளியும்
“ஒருமுறை எலிஃபெண்டா குகைகளுக்கு சென்றிருந்தேன். ஆறாம் நூற்றாண்டுகள் வாக்கில் உருவாக்கப்பட்ட அந்த 16, 17 அடி உயர அர்த்தநாரீஸ்வரர், த்ரிமூர்த்தி சிற்பங்களின் முன் நிற்பது வினோதமான ஒரு உணர்வை ஏற்படுத்தியது. மனம் அதன்முன் நின்று வழிபட்ட ஆறாம் நூற்றாண்டு மனிதர்களைக் கற்பனை செய்ய முயன்றது. இந்தப் புகைப்படம் அந்த உணர்வுகளை நினைவுபடுத்தியது. இந்தியாவில் இன்னும் கைவிடப்பட்ட மால்களின் காலம் வரவில்லை. ஸ்பென்சர் பிளாசா கூட சென்னையில் உயிருடனே இருக்கிறது. ஆனால் பொருளாதாரம் மால்களைக் கைவிடும் காலம் வரும். அப்போது இத்தகையதொரு படம் பிழைத்திருக்குமானால் அதை எப்படி எதிர்கொள்வோம், அப்போதிருக்கும் மனிதர்கள் இதன் முன் அமர்ந்திருந்த நம்மை எப்படிக் கற்பனை செய்வார்கள் என்று யோசிக்கிறேன். ’உன் காலம், உன் வெளி’ என்ற இந்த மந்திரங்களையும். வழிபாட்டுத் தலங்களை நம்பிக்கை கொண்டு உருவாக்கியது போல நாம் நகரங்களை பொருளியல் கனவுகள் கொண்டு உருவாக்குகிறோம். எல்லோரது கனவுகளும் ஒன்றல்ல, ஆனால் அவற்றுக்கு ஒரே வடிவமென நம்மை நம்பவைக்கின்றன இந்த தற்காலத்தின் அடையாளங்கள். நாம் வாழ்வது யாருடைய காலத்தில்? யாருடைய வெளியில்?”
-வயலட்
“இதோ நம் தாய்”, “ஊதா ஸ்கர்ட் கதைகள்” உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
000
வான் நெசவு
வான் முழுக்க தொடர்புக் கோடுகள். நாம் நெய்து கொண்டே இருக்கிறோம். நிலத்திற்கு அடியிலும் வான் வெளியிலும் நமது இழைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒருவரை மற்றொருவருக்கு புரியவைத்துவிடுவதில்தான் நமக்கு எவ்வளவு ஆசை? ஒருவரை இன்னொருவரிடம் கொண்டு சேர்ப்பதில்தான் எத்தனை பிரயத்தனம்? மொழியெனவும் படிமமெனவும் இசையெனவும் பல வண்ண ஊடுகள் கொண்ட நெசவு நம்முடையது. ஒன்றையொன்று தொடாமல் எண்ணற்ற சங்கிலிகள் இதோ ஓடுகின்றன. மனித வரலாறு நெடுக கேட்டுக்கொண்டே இருக்கிறது இந்த நெசவின் சங்கீதம்.
பறக்கும் மீனின் கொம்பு
ஒரு மனிதன். அவனை இழுக்கும் ஒரு பறக்கும் மீன். அது உணர்கொம்பென காற்றில் மிதக்கிறது. Indian Terrain, Louis Philippe இன் கண்கூசும் பளபளப்புக்கு மத்தியில் அந்த மீனை ஏந்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. கடைசி தீக்குச்சியை பிடிக்கும் கைகளுடன் அதை பிடித்துக்கொள்ள நேர்கிறது. குர் ஆனில் ஒரு வாக்கியம் உண்டு, ‘குர் ஆனை மலைகளில் இறக்கி வைத்திருந்தால் அவை நடுங்கி இருக்கும்’. மலைகள் நடுங்குபவற்றைதான் நாம் நெடுங்காலமாக சுமந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அதுதான் எவ்வளவு எடையற்றிருக்கிறது? மிதக்கும் பலூன் போல.
ஒருவேளை அந்த பறக்கு மீனிலிருந்து நம்மை துண்டித்துக் கொள்ளவே இத்தனை பளபளப்புகளையும் உண்டாக்குகிறோமா என்ன? அத்தனை பெயர்ப்பலகைகளின் ஜொலிப்புக்கு இடையில் மங்கி அணையும் நிலையில் நிற்கும் மீனை ஓடிச் சென்று உள்ளங்கைகளுக்கு நடுவில் ஏந்திக்கொள்ள வேண்டுமென தோன்றுகிறது. ஈர வழவழப்பு கொண்ட குளிர் மீனல்ல, பற்றி உருக்கும் சுடர்.
–சியாம்
சிறுகதையாசிரியர், கட்டுரையாளர்
000
ஏ.வி.மணிகண்டன் புகைப்படத் தொகுப்பு (1)
ஏ.வி.மணிகண்டன் புகைப்படத் தொகுப்பு (2)
ஏ.வி.மணிகண்டன் புகைப்படத் தொகுப்பு (3)
ஏ.வி.மணிகண்டனின் புகைப்பட நூல்களை இங்கே காணலாம். https://www.manikandanav.com/