தையலும் இல்லாள்; மையலும் இல்லாள்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பி விரட்டிக் கொண்டிருக்கும் போலீஸ் மெல்ல அந்த நீல குர்தா பெண்ணை நெருங்கினாள். அந்தப் பெண்ணின் முகத்தில் பல நாட்களின் களைப்பு தேங்கியிருக்கிறது. இருந்தாலும் அவளை எழுப்பித்தான் ஆகவேண்டும். அவளது கசங்காத உடையைப் பார்க்கும்போது வீடில்லாமல் பேருந்து நிலையத்தில் வந்து படுத்திருக்க அவளுக்கு எந்த காரணமும் இல்லை என்றே தோன்றியது, ஆனால் வீட்டை விட்டு ஓடி வந்திருக்கலாம். போலீஸ் நெருங்கி வரும்போதே அவள் ஃபோன் ஒலித்து எழுகிறாள். அவசரமாக ஃபோனை எடுத்துப் பேசிவிட்டு பையை எடுத்துக்கொண்டு கிளம்புகிறாள். பேருந்து நேரத்துக்கு பல மணிநேரம் முன்வந்திருக்கும் ஒருத்தி, அல்லது வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்துவிட்டு தங்க இடமில்லாமல் பேருந்து நிலையத்தில் தூங்கி எழுந்து செல்லும் ஒருத்தி என்று எண்ணியபடி போலீஸ் அடுத்த நாற்காலிக்கடியில் தூங்கிக்கொண்டிருந்த கிழவரை லத்தியால் தட்டி எழுப்புகிறாள்.

பையிலிருந்து நீல குர்தாவுக்குப் பொருத்தமாக ஒரு வெள்ளை துப்பட்டாவை எடுத்து அணிந்துகொண்டு ஓங்கோல் பேருந்துகள் நிற்குமிடம் நோக்கிச் செல்கிறாள் தையல். மறுபடி மறுபடி ஃபோனை எடுத்து அன்லாக் செய்து, லாக் செய்து பைக்குள் போட்டபடி நடக்கிறாள். ஃபோன் திரையில் அவளது காதலியின் படம். என் அழகே என்று மனதுக்குள் சொல்லிக்கொள்கிறாள். கருப்பு ஆடை அணிந்து முகம் தெரியாதபடி திரும்பி உட்கார்ந்திருக்கும் அவள் ஒரு கல் சிற்பத்தை ரசித்துக் கொண்டிருக்கிறாள். பெங்களூருவின் மையத்தில் புத்தம்புதிதாய் துவங்கப்பட்ட ஒரு ஃபேன்சியான கலையரங்கத்தின் முகப்பு அது. தையல் பொதுவாக நிறைய புகைப்படங்கள் எடுப்பவள் அல்ல. அவளது 35 கால வாழ்வில், 5-இலிருந்து 15 வயதில் எடுக்கப்பட்ட சில பள்ளிப் புகைப்படங்களும், கடந்த 5 ஆண்டுகளாக அவள் எடுத்த மிகச்சில புகைப்படங்களும் மட்டுமே அவளிடம் இருக்கின்றன. 15 ஆண்டுகள் நடுவே, அவள் நினைவில் மட்டுமே மிச்சமிருக்கின்றன. சொல்லப்போனால் அவை அப்படியே இருப்பதுதான் நல்லது.

“பஸ் எப்ப சார் எடுப்பீங்க?”

“ஆள் ஏறினதும் எடுத்துடுவோம்மா. எடுக்கிற நேரம்தான். ஏறி உட்காருங்க.”, அருகிலிருந்தவரிடம் பேசியபடியே ஓட்டுநர் பதிலளித்தார்.

எப்போ ஆள் ஏறுவாங்க என்று அவரிடம் கேட்கமுடியாது. பேருந்து பாதிக்கு மேல் காலியாக இருந்தது. ஓட்டுநருக்குப் பின்னால் இரண்டாவது வரிசை சீட்டில் உட்கார்ந்துகொண்டாள் தையல். தன் பையை மடியில் வைத்துக்கொண்டு அதில் சிறிது நேரம் தலைசாய்த்து அமர்ந்திருந்தாள். சென்னையிலிருந்து ஓங்கோல் ஆறேழு மணிநேரம். இந்தப் பேருந்து எட்டு அல்லது ஒன்பது மணிநேரத்தில் போய் சேர்ந்துவிடும். அவ்வளவு நீண்ட பயணம் அல்ல. தனக்குத் தேவையான பொருட்கள் எல்லாம் மறக்காமல் எடுத்து வந்திருக்கிறோமா என்று பையைத் திறக்காமலேயே பையைத் தடவிப் பார்த்து சோதித்துக் கொண்டாள். கண்டக்டர் பஸ்ஸில் ஏறி டிக்கெட் போட ஆரம்பித்தார். டிக்கெட் வாங்கியபிறகு இதற்கு முன் கிளம்பும் பேருந்து வந்தால் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே அருகில் வந்து நின்று, எதிர் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபடி எங்கே என்றார். அதற்குமேல் யோசிக்க ஒன்றுமில்லை.

மெல்ல நகர்ந்து சென்னையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த அந்தப் பேருந்தில் முக்கால்வாசி இருக்கைகளே நிரம்பியிருந்தன. தையலின் அருகிலிருந்த இருக்கையில் யாரும் உட்காரவில்லை. ஃபோனை இறுகப் பிடித்திருந்தாள். தூக்கம் சொக்கியபோது, தூங்கும் முன் ஃபோனை பையில் போட்டுவிட வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அவள் அழைத்தால்? இந்த ஃபோன் வேறு அடிக்கடி சரியாக சத்தம் கேட்க மாட்டேன் என்கிறது. அவள் அழைக்கவே மாட்டாள் என்ற நம்பிக்கையின்மையில் மூழ்கியிருந்த ஒரு வாரம் அவள் நிம்மதியாகத்தான் இருந்தாள். நிம்மதி போல ஏதோ ஒன்று! ஆனால் இப்போது இந்த மிகச்சிறிய நம்பிக்கை அவளை எரிக்கிறது. அதை அணைக்க அவளால் முடியவில்லை.

கையில் யாரோ தட்டியதை உணர்ந்து எழுந்தாள் தையல். எங்கிருக்கிறோம் என்று தெளிய ஒரு நிமிடம் ஆனது. அவள் பக்கத்து இருக்கையில் பளீர் பின்க் நிற சுடிதார் அணிந்து ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவள்தான் ஃபோன் என்று தரையைக் காட்டினாள். ஃபோன் கவிழ்ந்து கிடந்தது. தையல் பதறி எடுத்து ஏதாவது அழைப்புகள் வந்திருக்கிறதா என்று பார்த்தாள். எதுவுமில்லை. தேங்க்ஸ் என்று தையல் அவள் முகத்தைப் பார்த்து சிரிக்க முயன்றாள். தையலின் கண்களைச் சந்திக்காமலேயே அந்தப் பெண் கண்ணை மூடினாள். பேருந்தில் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. தையல் தன் மடியிலிருந்த பையை இன்னும் இறுக அணைத்துக் கொண்டாள். வெளியே வடக்கு நோக்கி ஏதோவொரு அடையாளமில்லா நெடுஞ்சாலை விரைந்துகொண்டிருந்தது. அருகிலிருந்த பிங்க் சுடிதார் பெண் தூங்கியிருந்தாள். பேருந்துக் கம்பியை இறுகப் பிடித்த கையில் சாய்ந்திருந்த அவள் வாய் லேசாகத் திறந்திருக்க, மெல்லிய குறட்டை சத்தம் கேட்டது, அதற்குள் தூங்கிவிட்டாளா, இப்போதுதானே ஃபோனுக்காக எழுப்பினாள். தையல் ஃபோனில் நேரத்தைப் பார்த்தாள். ஆனால் இதற்கு முந்தைய முறை ஃபோனை எடுத்தபோது அதில் நேரம் பார்த்ததாக அவளுக்கு நினைவில்லை. இப்போது பார்த்த நேரமே ஒரு நிமிடத்தில் மறந்துவிடும். முதலில் இந்த படத்தை மாற்றவேண்டும். ஆனால் இப்போதும் அவளை நினைத்தால் மனது நிரம்பவே செய்கிறது. இந்த ஃபோன் ஒரு சாபம் என்று மனதுக்குள் சொல்லியபடி அதைப் பைக்குள் போட்டு மூடிவிட்டு மனதிலிருக்கும் நம்பிக்கையையும் வெளியே தள்ள முயன்றாள். துப்பட்டாவை தலையைச் சுற்றி காதுகளை மறைத்து சுற்றிக் கொண்டு பாதி மூடிய ஜன்னலில் சாய்ந்தாள்.

பர்சில் எவ்வளவு காசு இருக்கிறதென மனதில் கணக்கு ஓடியது. கிரெடிட் கார்டு பில் நாளைக்குள் கட்டவேண்டும். அதைக் கட்டிவிட்டால் வங்கிக் கணக்கிலும் ஆயிரம் ரூபாய்தான் இருக்கும். கிரெடிட் கார்டின் அடுத்த மாதக் கணக்கில் செலவழிக்கலாம். அதை எப்படித் திருப்பிக் கட்டுவது என்பதை தையல் இப்போதைக்கு யோசிப்பதாயில்லை. இந்தச் சிறிய நம்பிக்கை அவள் திரும்பி சென்னைக்கு வருவது குறித்து யோசிக்கச் சொன்னது. ஆனால் அது நிறைவேறப் போவதில்லை இல்லையா. இல்லை, இதை சுய பச்சாதாபம் துளியுமின்றி தர்க்கரீதியாக சிந்திக்க வேண்டும். அதற்கு சாத்தியமில்லை என்றுணர்ந்த தையலின் மூளை மீண்டும் சாலையில் கவனம் செலுத்தத் தொடங்கியது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை காயந்த வயலும் வெட்ட வெளியுமாக இருந்தது. இந்த நெடுஞ்சாலைகளில் நாய்களைக் கூடப் பார்க்க முடிவதில்லை.

இம்முறை நின்றுகொண்டிருந்த பேருந்தின் பக்கவாட்டில் யாரோ தட்டும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள் தையல். ஏதோ ஒரு கனவு அவள் மூளையை அவ்வளவு நேரம் தீவிரமாக ஆக்கிரமித்திருந்தது. அது சட்டென விலகியதில் அவள் மிரண்டு போயிருந்தாள். பக்கத்து இருக்கையிலும் முன்னாலும் யாரையும் காணோம். பதட்டத்துடன் பையை இறுகப் பிடித்துக் கொண்டாள். சாப்பிடும் இடத்தில் நிறுத்தியிருக்கிறது என்று நினைத்து மெல்ல எழுந்து பார்த்தாள். சில பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெரிய வெளிச்சமில்லாத வளாகம். அவளோடு பேருந்தில் வந்தவர்கள் போல சிலர் சற்றே தூரமாக இருப்பதைக் கண்டு இறங்கி அவர்களை நோக்கி நடந்தார். பஸ் ரிப்பேர்மா, அடுத்த பஸ் கொஞ்ச நேரத்துல வந்துடும். அங்க போய் இருங்க என்று சோர்வான குரலில் சொல்லியபடி கண்டக்டர் எங்கோ நடந்துபோனார். இங்க ஒரு டீக்கடை கூட இல்ல என்ற குரல் பயணிகள் கூட்டத்திலிருந்து கேட்டது. அங்கிருந்த இரு சிறிய பெஞ்சுகள் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தன. ஆண்கள் சிலர் வளாகத்துக்கு வெளியே சாலையில் ஒன்றுக்கடித்துக் கொண்டிருந்தனர். யாரோ ஒரு குழந்தைக்காக ஃபோனில் கார்ட்டூன் சத்தமாக ஓடிக்கொண்டிருந்தது, ஓரிருவர் சிறு சிறு வீடியோக்களை ஃபோனில் தேய்த்துக் கொண்டிருந்தனர். மிகப் பழகிய சத்தங்கள். அதைத் தவிர அந்த வளாகத்தில் எந்த சத்தமோ, ஆளிருப்பதற்கான அடையாளமோ இல்லை. அடுத்த பேருந்து எப்போது வரும் என்ற சிறிய பதட்டம் தையலின் மனதில் தோன்றியது.

தையல் ஃபோனை எடுத்து அனிச்சையாகத் தன் காதலியின் படங்களைப் பார்க்கத் தொடங்கினாள். ஒர் ரயில் பயணம், மியூசியம் வாசல், சமையலறை, டாட்டூ ஸ்டூடியோ… என் அழகே! மனது வேறொரு பதட்டத்தில் நிரம்பி மெல்ல சமாதானமானது. அங்கிருந்து நகர்ந்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்தாள். அந்த மரத்தடில உட்காரதம்மா, இன்னிக்கு வெட்ட ஆரம்பிச்சாங்க. பாதியில விட்டுப் போயிருக்கானுங்க. விழுந்தாலும், விழுந்துடும்.

யார் வெட்ட ஆரம்பிச்சாங்க?

தையலின் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை. தையல் அங்கிருந்து மெல்ல எழுந்து நடக்கத் தொடங்கினாள். நீண்ட நேரம் நடப்பது உடலுக்கு நல்லது. ஆனால், ஒரு சின்ன பிரச்சினை. அவ்வப்போது நாம் வரலாற்றுக்கு வெளியே காலெடுத்து வைத்துவிடுவோம். தையலுக்கு அதுதான் நடந்தது. அவளுக்கு நினைவு தெரிந்ததில் இருந்து அவள் நடந்துகொண்டிருக்கிறாள். அவள் ஆடைகள் அழுக்கடைந்திருக்கின்றன. முதுகில் மாட்டியிருக்கும் பை கொஞ்சம் கனக்கிறது. தையல் ஒரு நதிக்கரையில் ஓய்வாகத் தன் பையை இறக்கி வைத்துவிட்டு முகத்தைக் கழுவினாள். கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டு… இது நதி நீர் குடிக்கத் தகுதியாய் இருந்த காலம்தானா என்று யோசித்தாள். அவள் கண்களில் நிறைய பச்சை பட்டது. எனவே நம்பிக்கையோடு இன்னும் கொஞ்சம் நீரைக் குடித்துவிட்டு தன் பையை அவிழ்த்து அதிலிருக்கும் எதையாவது தூக்கிப் போடலாமா என்று பார்த்தாள். சிறிய சிறிய பொருட்கள். பொம்மைகள், நூல்கள், ஊசிகள், கற்கள், மேக்கப் சாமான்கள், கத்திகள், புத்தகங்கள், மை, கரித்துண்டு ஒவ்வொன்றாக கையில் எடுத்து யோசித்துப் பார்த்தாள். எதையும் தூக்கிப் போடலாம் என்று தோன்றவில்லை. சில எலும்புகள் இருந்தன. நீண்ட தூரம் நடந்ததில் அவள் தன்னையே பலமுறை கடந்து வந்திருந்தாள். சிலநேரம் அவள் இறந்து எலும்பாகியிருந்த பின்னே கடந்தாள். அப்போதெல்லாம் நினைவுக்காக சிறிய எலும்பொன்றை எடுத்து வைத்திருந்தாள். பற்களையும். அவற்றில் கொஞ்சம் பெரிய எலும்புகளை அங்கே விட்டுச்செல்ல முயன்றாள். கைகள், கால்கள், மண்டையோடு… இல்லை மண்டையோட்டை விட்டுப்போக முடியாது. அதற்கென்று ஒரு உணர்வு மதிப்பு இருக்கிறது அல்லவா. இருந்தாலும் அடுத்த நதிக்கரையிலேயே இவற்றை எல்லாம் அவள் திரும்ப எதிர்கொள்ள வேண்டி வரலாம். இல்லை இன்னும் எவ்வளவு காலமாகுமோ யாருக்குத் தெரியும்.

அன்று இரவு. ஏதோ ஒரு இரவு. பாதி வெட்டப்பட்ட மரத்தின் அடியில் தையல் படுத்திருந்தாள். விடிந்ததும் அந்த மரத்தை வெட்ட ஆரம்பித்தவர்கள் தங்கள் வேலையை முடிக்கத் திரும்பி வருவார்கள் என்று நம்பினாள். அவள் வேறு யாரையும் சந்தித்தே நீண்ட காலம் ஆகிறது. தையலுக்கு கொஞ்சம் போர் அடித்தது. அதுவொரு தூங்குமூஞ்சி மரம். இன்னும் எவ்வளவு தூரம் நடக்கவேண்டும்?, என்று கேட்டாள் தையல்.

நீண்ட தூரம், என்று தையல் பதில்சொன்னாள்.

இங்க, இங்க என்னவோ என்று வலது கண்ணருகே சுட்டிக்காட்டினாள். அவள் என்ன, எங்க என்று இடது கண்ணருகே தேய்த்தாள். தையல் குனிந்து அவள் கண்களைத் துடைக்கப் போனாள். அதற்குள் அவளே தூசியை எடுத்துவிட்டாள்.

எனக்கு பைத்தியம் பிடிப்பது போலிருக்கிறது.

எனக்கு ஏற்கனவே பைத்தியம் பிடித்துவிட்டது.

நீ மும்பை போயிருக்கிறாயா?

இல்லை.

மும்பை மிகவும் அழகான நகரம்.

அப்படி என்ன இருக்கும் மும்பையில்.

கூட்டம். அப்படியொரு கூட்டம். எங்கு பார்த்தாலும் ஆட்கள் இருப்பார்கள். மும்பையில் வீடுகளின் அளவு ரொம்பச் சிறியது என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரு மும்பை நடுத்தரக் குடும்பத்தின் வீடுதான் மனிதர்கள் வாழப் பொறுத்தமான அளவு. நாம் அப்படி அடைந்துதான் வாழவேண்டும். அப்படித்தான் நாம் உருவாக்கப் பட்டிருக்கிறோம்.

எனக்கு நிறைய இடம் வேண்டும். அவள் தன் கையை நீட்டி தையல் எட்டப்போகச் சொன்னாள். பின் தன் கைகளை விரித்துச் சுழன்றபடி எனக்கு இவ்வளவு இடம் வேண்டும் என்றாள்.

நாம் நேற்றும் இங்குதானே இருந்தோம், அந்த மரவெட்டிகள் திரும்ப வரவில்லை இல்லையா?

நான் நேற்று மாலைதான் வந்தேன். நீ எவ்வளவு நாட்களாக இங்கேயே காத்திருக்கிறாய்?

நீண்ட காலமாக.

நீண்ட காலமென்றால்?

நான்தான் பைத்தியம் பிடித்துவிட்டது என்றேனே என்னால் எப்படி காலத்தை கணக்கு வைத்துக்கொள்ள முடியும்.

எனக்கு ஒரு பைத்தியத்தைத் தெரியும், அவள் பெயர் தையல். அவளால் காலத்தை மிகச்சரியாக ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதி கணக்கு வைத்துக்கொள்ள முடியும்.

மரங்களை ஏன் வெட்டுகிறார்கள்?

ஏன் நீ மரத்தோடு பேச வேண்டுமா?

எனக்கு வேறு யாருடனாவது பேச வேண்டும்.

ஏன் எனக்கு என்ன?

மறுநாள் காலை அந்த வழியாக வந்த சின்னப்பெண்ணொருத்தி தையலுக்கு கொஞ்சம் கூழும் கறியும் கொடுத்தாள். பாப்பா இந்த மரத்த வெட்டினவங்க எங்க போனாங்க?

எனக்கு பாப்பான்னு கூப்பிட்டா பிடிக்காது.

சரி உன் பேர் என்ன?

தையல்.

தையல், இந்த மரத்த வெட்டினவங்க எப்போ வேலைய முடிக்க வருவாங்க.

வரமாட்டாங்க.

ஏன்மா?

அவங்க எல்லாம் வெளியூருக்குப் போய்ட்டாங்க.

எந்த ஊருக்கு.

மும்பைக்கு.

திரும்ப வரமாட்டாங்களா?

தெரியாது.

உன் அப்பா அம்மா எங்க?

அங்க என்று குழந்தை மேற்கு நோக்கி கைகாட்டினாள்.

உனக்கு காக்கா பிடிக்குமா குயில் பிடிக்குமா?

நான் ஒண்ணும் சின்ன பிள்ளை இல்ல.

சரி, சொன்னீன்னா என் பையில ஒரு குருவி பொம்மை இருக்கு. தரலாம் நினைச்சேன்.

பையில வேற என்ன வெச்சிருக்கீங்க?

நிறைய வெச்சிருக்கேன். நான் நிறைய ஊர் போயிருக்கேன். அங்கிருந்து எல்லாம் நிறைய கொண்டு வந்திருக்கேன்.

எனக்கு வேண்டாம். என் அம்மா திட்டுவாங்க.

குழந்தை மறுபடி மேற்கு நோக்கி கைகாட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள். தையல் தன் பையை எடுத்து சிதறியிருந்த பொருட்களை அடுக்கினாள். அந்த மரத்தில் இருந்து விழுந்திருந்த தூங்குமூஞ்சி பூவொன்றை தன் நோட்டுப்புத்தகத்தில் பதிய வைத்தாள். பின் பையை மாட்டிக்கொண்டு மேற்கு திசை நோக்கி தொடர்ந்து நடந்தாள். நடந்து நடந்து தையல் மயக்கம் போட்டு விழுந்தாள். அவள் மனதில் பாரமாக இருந்தது. அவள் வீட்டுக்குப் போக விரும்பினாள். ஆனால் வீடு எங்கே என்று அவளுக்குத் தெரியவில்லை. வீடு என்ற வார்த்தை மட்டும் அவளுக்கு ஞாபகம் இருந்தது. வீட்டுக்கு எத்தனை கால்கள், எத்தனை கைகள் என்று யோசித்தாள். அவளிடம் இருந்த கை கால்களை எல்லாம் போன நதிக்கரையிலிருந்தே விட்டுவிட்டு வந்தது நினைவு வந்தது. தையலை ஒரு வயதான பெண் எழுப்பினாள். அவள் நதியிலிருந்து எடுத்து வந்த தண்ணீரில் தன் கையில் வைத்திருந்த சிறிய பையில் இருந்த ஒரு மூலிகையை கலந்துகொண்டிருந்தாள். தையல் அவள் பெயரைக் கேட்கவில்லை. அவளுக்குத் தெரியும். எனவே அவளுக்குத் தெரியாததைக் கேட்டாள். அந்த மூலிகையின் பெயர் என்ன என்று கேட்டாள். இது மனமிலக்கி. சோகத்தின் எடையைக் குறைப்பது என்று சொன்னாள். உங்கள் பையில் அது மட்டும்தான் இருக்கா? அது போதுமா என்று வியப்பாகக் கேட்டாள்.

ஏன் உன் பையில என்ன இருக்கு?

கல்.

எதுக்கு வீடு கட்டவா?

எடை போட. அப்புறம் கத்தி.

யார் கூட சண்டை போட?

காய்கறி நறுக்க, அப்புறம்…

போதும் போதும், நீ எதையும் அது அதுக்கு பயன்படுத்த மாட்டியா.

இப்படித்தான் என் அம்மாவும் சொல்வாங்க. ஆனா என்னன்னா.

தையல் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் பெண் அம்மான்னா என்ன என்று கேட்டாள். தையலுக்கு குழப்பமாக இருந்தது. அவளுக்கும் சரியாக ஞாபகமில்லை. அம்மா என்பது ஒரு செடி, ஆனால் அந்த செடி என்ன சொன்னது. இல்லை இல்லை, அது ஒரு பறவை? அவர்கள் எவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. தையலின் மனதில் இருந்த பாரம் மிகவும் குறைந்திருந்தது. அவள் தன் சிறிய பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நடக்கத் தொடங்கினாள். நடக்க நடக்க தூரத்திலிருந்து கடல் சத்தம் கேட்டது. புயல் நாளின் அலைகள் போன்ற சத்தம். ஆனால் வானம் தெளிவாகவே இருந்தது. அதில் வித்தியாசமாக ஏதும் இல்லை. வழக்கம் போல ஒரு பறவை கூட இல்லை.

மேற்கே நான் நீண்டதூரம் போக வேண்டும் என்று மட்டும் நினைவிருந்தது. எங்கே என்று நினைவில்லை. நல்லவேளையாக ரயில் நேரத்துக்கு வந்தது. ஏறி உட்கார்ந்ததுமே என் உடலில் ஒரு பெரும் சோர்வு பீடித்தது. சுற்றிலும் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்துகொண்டேன். அப்படியே இருக்கையிலிருந்து தவழ்ந்து இறங்கி ஒரு கம்பியைப் பிடித்தபடி படுத்துக்கொண்டேன். கைகால்களை நன்றாக நீட்டினேன். என் உடலின் எடைகள் பரவி ரயிலில் அதிர்வோடு கரைவதை உணர முடிந்தது. அப்படியே எவ்வளவு நேரம் படுத்திருந்தேன் என்று நினைவில்லை. கொஞ்சம் குளிர் அடிக்க ஆரம்பித்தது. ரயிலில் மெல்லிய மஞ்சள் விளக்குகள் தவிர வெளியே வெளிச்சம் இல்லை என்று தெரிந்தது. நிலவைக் கூட காணவில்லை, நட்சத்திரங்களையும். எனது நிறுத்தத்தை தவறவிட்டுவிட்டேனா என்று பார்த்தேன், இல்லை அதற்கு இன்னும் நீண்ட தூரம் இருந்தது. விடியும் வரை அந்த இடத்திலிருந்து அசையாமல் இருந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று எனக்கே சொல்லிக்கொண்டேன்.

காலையில் எழுந்தபோது தூரத்தில் கடல் சத்தம் கேட்டது. குளிருக்கு இதமாக சூரிய ஒளி தோலை எரித்தது. மெல்ல நடந்து அடுத்த பெட்டிக்கு அருகே சென்றேன். அதிலிருந்து கலகலப்பாக பேச்சுச் சத்தம் கேட்டது. சூடான தேநீர் வாசமும், சமோசா வாசமும் கூட வந்தது. டாய்லெட் போய் வந்து அந்தக் கதவைத் தட்டலாம் என்று நினைத்தேன். அது பூட்டியிருந்தது. ஜன்னலின் அந்தப் பக்கம் ஒரு நீலத் திரைச்சீலை போட்டு மூடப்பட்டிருந்தது. எனக்கு தைரியம் வரவில்லை. மீண்டும் வந்து என் இருக்கையில் அமர்ந்தேன். வேறு யாரிடமாவது பேசவேண்டும் என்றுதானே தையலிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். இப்போது என்ன ஆனது. ஏன் என்னால் பேச முடியவில்லை. அந்தப் பெட்டியில் ஆட்கள் இருக்கிறார்கள். வேறு யாரோ இருக்கிறார்கள். அதற்குள் நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது.

அந்தச் சிறிய நிறுத்தம் பளபளப்பாக துடைத்து வைக்கப்பட்டிருந்தது. இல்லை, அதுவொரு மலைப்பிரதேசம் என்பதால் அங்கே அவ்வளவு தூசு இல்லாமல் இருந்தது. ரயிலில் ஏறி எத்தனை நாட்கள் ஆகிறதென தையல் கணக்கிட முயன்றாள். ஒருநாள் பனி இருந்தது, ஒருநாள் வெய்யில், ஒருநாள் தூரத்து கடல் சத்தம்… ரயிலில் ஏறுவதற்கு முன் அவள் ஒரு மரத்தைத் தேடிக்கொண்டிருந்தாள் இல்லையா! இல்லை, மரம் இல்லை. ஒரு பெண்ணை. ஒரு அழகான முகத்தை, அதன் குரலை, அதன் உரையாடலை… இல்லையா? இனி தொடர்ந்து நடக்கவேண்டும்.

000

வயலட்

எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான வயலட் பெங்களூருவில் உள்ள ஒரு சிறார் பதிப்பகத்தில் தமிழ் பதிப்பாசிரியராக பணியாற்றுகிறார். வயலட்டின் சிறுகதைகள் ‘ஊதா ஸ்கர்ட் கதைகள்’ (2017) என்ற தொகுப்பாக வெளிவந்திருக்கின்றது. எனில் என்ற இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். இவர் மொழிபெயர்த்த கவிதைகள், கதைகள் இணைய, அச்சுப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. காலச்சுவடு வெளியிட்ட ஹுவான் மனுவேல் மார்க்கோஸின் ‘குந்தரின் கூதிர் காலம்’ (2017) என்ற பராகுவே நாவலை இவர் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop

Don't Miss