குட்டிக் காகம் : எல்.ஜே.வயலட்

இருபது வருடங்களுக்கு முன் நான் நிறைய கதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் எனக்கு கதை எழுதும் ஆர்வமே வருவதில்லை. எப்போதாவது எழுத முயன்றாலும் என் மொழிநடை துருபிடித்துக் கிடப்பதை உணர்ந்து உடனடியாகக் கைவிட்டுவிடுவேன். இருபது வருடங்களுக்கு முன் நான் கதை எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் திடீரென்று பிரபலமாகின, அவ்வளவுதான், இவைதான் இனிமேல் கதை எழுதப் போகின்றன, மனிதர்களுக்கு வேலை இல்லை என்றெல்லாம் பலரும் ஜோசியம் சொன்னார்கள். ஆனால், அப்படியெல்லாம் நடக்கவில்லை. அவற்றின் மீதான மோகம் விரைவிலேயே குறைந்தது. இன்னமும் சில மோசமான எழுத்தாளர்கள், கதையாசிரியர்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அதுவும் ஒரு கருவி அவ்வளவுதான். பாரதி எடுத்துவருவதாகச் சொல்லியிருக்கும் கதைகோர்க்கும் கருவி அதைப் போன்றதல்ல, இதுவொரு இயந்திரம், சிறிய கம்பி இழைகளாலும் திருகாணிகளாலும் இயங்குவது. ஒரு சில தடைசெய்யப்பட்ட போதை இரசாயனங்கள் உதவியோடு நம் மொழி இணைப்புகளைத் தூண்டி கதை ஒன்றைக் கோர்த்துத் தருவது. பாரதியும் நீண்ட நாட்களாக எதுவும் எழுதவில்லை. அந்தக் காலத்தில் நாங்கள் எழுத முயன்ற விநோதமான மொழிநடை கொண்ட கதையொன்றைக் கோர்த்துத் தரும் என்றுதான் நாங்கள் நம்பியிருந்தோம்…

பாரதியை நீண்ட நாட்கள் கழித்துச் சந்திப்பதால் நாங்கள் பலவற்றையும் பேசிக்கொண்டிருந்தோம். கடல் முன்னேறி வந்ததால் நகரின் கடற்கரைகள் எங்கும் காலியாகிக் கிடக்கும் பங்களாக்களில் எடுக்கப்பட்ட புதிய பேய்ப்படமொன்று பிரபலமாக ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு அந்தப் படம் பிடித்திருந்தது. ஆனால், அது துளியும் பயமுறுத்துவதாக இல்லை என்றால் பாரதி. இருபது வருடங்களுக்கு முன் நாங்கள் எழுதிய கதைகளைப் பற்றி பேசினோம், நான் எழுதிய ஒரு மருத்துவமனை கதை மட்டும்தான் நாங்கள் இருவரும் எழுதியதிலேயே ஜாலியான கதை, மீத எல்லாவற்றிலும் துயரம் துன்பம் என்று அலுத்துக்கொண்டாள். எனக்கு அப்படித் தோன்றவில்லை. துயரத்துக்கும், இருத்தலியல் வெறுமைக்குமான வித்தியாசத்தை, கதை என்றால் என்னவாக இருக்கமுடியும் என்பதைப் பேசினோம். ஆனால் பாரதிக்கு அதிலெல்லாம் மிகுந்த அலுப்பு தோன்றியிருப்பதை உணரமுடிந்தது. பின் அந்தக் கருவியை எடுத்து என் வீட்டிலிருந்த ப்ரிண்டரோடு வைஃபையில் இணைத்தேன். அறை விளக்குகளின் பிரகாசத்தைக் குறைத்துவிட்டு இருவரும் அந்தச் சிறிய மஞ்சள் நிறப் பெட்டியிலிருந்து ஒரு வயரை எடுத்து இரு ஆட்காட்டி விரல்களின் நுனியிலும் வைத்தோம். அந்த வயர்கள் பலவாகப் பிரிந்து சிறிய ஊசிகள் போல விரலுக்குள் நுழைய இருவரும் ஒருவர்மீதொருவர் சாய்ந்து அமர்ந்தோம். மெல்ல ப்ரிண்டர் சத்தமிடத் தொடங்கியது.

இந்தக் கதையை கோர்க்கத் தொடங்க நான் விக்கிபீடியாவைத் தேட வேண்டியிருந்தது. ரா சியன்னா என்ற வண்ணத்துக்கு சமமான தமிழ்ப்பெயர் எனக்குத் தெரியவில்லை. அதுவொரு மஞ்சள் – பழுப்பு நிறம். ஐரோப்பிய மறுமலர்ச்சி காலகட்ட நகரமான சியன்னாவின் பெயர் சூட்டப்பட்டது. ஏனென்றால், கொரோனாவுக்குப் பின்னான ஒரு ஆண்டில், ஒரு செப்டம்பர் மாத சனிக்கிழமையில் திருவான்மியூர் கடற்கரை முழுக்க அந்த நிறத்து நாய்களே நிறைந்திருந்தன. கருப்பு நாய்களை, முழுக்க வெள்ளையான, பழுப்பான நாய்களைப் பார்க்கவே முடியவில்லை. அந்த நாய்களைப் பற்றி யோசித்துக்கொண்டே வீட்டுக்கு வந்து நான் ஒரு குட்டிக் காகத்தைப் பார்த்தேன், எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பு ப வடிவில் இருக்கும். ப-வுக்கு நடுவில் இருக்கும் காலி இடத்தில்தான் கார்களும் பைக்குகளும் நிறுத்தப்பட்டிருக்கும். ஒரு வேப்பமரமும், நான் இதுவரை பெயர்தெரிந்துகொள்ள முயற்சிசெய்யாத இன்னும் மூன்று மரங்களும், அமர்ந்து ஓய்வெடுக்கும் இரு பெஞ்சுகளும் கூட அந்த ப-வில் அமைந்திருந்தன. அவற்றில் ஒரு மரத்தின் அடியில்தான், காகக் குஞ்சு என்று சொல்லமுடியாத அளவு வளர்ந்திருந்த அந்தக் குட்டிக்காகம் மழையில் நனைந்ததாலோ என்னவோ பறக்கமுடியாமல் உட்கார்ந்திருந்தது. காகத்தைப் பார்த்தவுடனே ஃபோனை எடுத்து படமெடுத்தேன். கொஞ்சம் கிட்டச் சென்றாலும் குட்டிக்காகம் லேசாக வாயைத் திறந்தது. மரத்தின் மேலிருந்து காகங்களின் கரைதல் சத்தம் கேட்டது. பொதுவாகவே காகங்கள் கரவம் வைத்துத் தாக்கும் என்ற பயமிருப்பதால் நான் அதைக்காட்டிலும் அருகே செல்லவில்லை.

இப்போது கூட நீ தூரத்தில் இருக்கிறாய் என்ற உணர்வில்தான் என்னால் இந்தக் கதையை எழுதமுடிகிறது. நீ இதே ஊரில் இருந்தால் கூட என்னால் இதை எல்லாம் எழுதமுடியாது. நான் தினம் நீ படித்த புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். நீ கேட்ட இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீ நேசித்த கடவுளை நேசித்துக் கொண்டிருக்கிறேன்.

பாரதி சட்டென்று விழித்து கையை உதறினாள். எனக்கு ஏதோ கனவில் உயரத்திலிருந்து தடுக்கி விழுந்த உணர்வு ஏற்பட்டது. வேகவேகமாக பல சொற்கள் என் கண்ணையும் காதையும் கடந்துசென்றன. பாரதி கண்ணீரை மறைத்துக்கொண்டு சிரிக்க முயன்றாள். பின் அவளே ஒன்றுமில்லை, பேசாதே, என்று சொல்லிவிட்டு அந்த இயந்திரத்தை மீண்டும் இயக்கினாள்.

முழுமையாக வளர்ந்த காகங்களின் கழுத்தில் இருப்பது போல குட்டிக் காகத்துக்கு சாம்பல் வண்ணம் வரவில்லை. அதன் உடல் இன்னும் முழுக்க கருப்பாகவே இருந்தது. கொஞ்ச தூரம் தள்ளி ஜானி தூங்கிக்கொண்டிருந்தாள். அவளுக்கு யார் ஜானி என்று பெயர் வைத்ததென்று தெரியவில்லை. ஆனால், அப்படித்தான் அவளை அந்தக் குடியிருப்பு பகுதியில் எல்லோரும் கூப்பிட்டார்கள். கொஞ்ச நாட்களாகவே அவளுக்கு வயிறு உப்பத் தொடங்கி உடலின் மீத பாகங்கள் வற்றலாகத் தொடங்கியிருந்தன, கர்ப்பமாக இருக்கிறாளா இல்லை வேறேதும் நோயா என்று எங்களுக்குத் தெரியாது. எங்களுக்கு என்று சும்மா சொல்கிறேனே தவிர இந்த குடியிருப்பில் நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதெல்லாம் குறைவுதான். ஜானி ஒரு மரத்தடியில் குழிபறித்து உடலைச் சுருட்டிப் படுத்திருந்தாள். ஒருவாரமாக வெயிலே அடிக்காததால், அதிசயமாக ஜானியின் அருகே இரு குடைக்காளான்கள் முளைத்திருந்தன.

மறுநாள் காலை நான் மீன் வாங்குவதற்காக பைக்கை எடுத்தபோதும் ஜானி அமைதியாக அதே இடத்தில் தூங்கிக்கொண்டிருந்தது. ஆனால், அதிலிருந்து சிறிது தூரத்தில் ஒரு குட்டிக் காகம் இறந்துகிடந்தது. நான் நேற்று பார்த்த குட்டிக்காகம்தானா என்று யோசிக்கும் முன், நேற்று பார்த்த அதே இடத்தில், சிறிய சிமெண்ட் உடைசல் குவியலில் அந்தக் குட்டி உட்கார்ந்திருந்தது. காகங்கள் மரங்களிலிருந்தும், பெஞ்சுகளிலும், ஜன்னல்களிலும் உட்கார்ந்து கரைந்துகொண்டிருந்தன. அந்தக் குட்டியினருகே யாராவது போவதுபோலத் தோன்றினால் சத்தம் அதிகரித்தது. ஃப்ரெடரிக் அதுகிட்ட போகாத என்று என் பக்கத்து வீட்டுக் குட்டிப்பையனை அவன் அம்மா எச்சரித்துக் கொண்டிருந்தார். அன்று நீ வருகிறேன் என்று சொல்லியிருந்ததால் என்பதால் நான் அவசர அவசரமாக மீன் வாங்கச் சென்றேன். கடற்கரையோரக் கடையில் கொஞ்சம் சங்கரா மீன்களை வாங்கி அரியக் கொடுத்துவிட்டு நின்றபோது ஒரு சேவல் பறந்துவந்து என் பைக்கின் மேல் உட்கார்ந்தது. மீன் கடையைச் சுற்றியிருந்த சிறிய பூனைக்குட்டி கும்பல் அதைக்கண்டு உஷாராகி, சில நிமிடங்களில் தங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லையென மீண்டும் மீனில் கவனம் செலுத்தத் தொடங்கின.

வீட்டில் உனக்காகக் காத்திருந்தபோது வெயில் உரைக்கத் தொடங்கியது. நான் என் அடுக்குமாடிக் குடியிருப்பருகே காளான் முளைக்குமளவு மழை பெய்த நாட்களை மறந்துவிடக்கூடாதென்று சொல்லி அவற்றைப் படமெடுக்கச் சென்றேன், அதற்குள் அவை வெயிலில் வாடியிருந்தன. ஜானி இன்னமும் தன் ஊதிய வயிறை அணைத்துப் படுத்திருந்தது. இறந்த குட்டிக் காகம் அப்படியே கிடந்தது. இறக்காத குட்டிக் காகமும் அதே இடத்தில் நின்றது. இப்போது அதன் இறகுகள் காய்ந்திருந்தன, இருந்தாலும் அதனால் பறக்கமுடியவில்லை. அருகிலிருந்த வேப்ப மரத்தில் அதைத் தூக்கி வைக்கலாமா என்று யோசித்தேன். நான் இதற்கு முன் குட்டிக் காகங்களைப் பார்த்ததே இல்லை. சிறுவயதில் குடியிருந்த வீட்டின் வாசலில் ஒரு கூடு கிடந்தது. அதில் நான்கு குஞ்சுக் காகங்கள் இருந்தன. அவை இன்னமும் இறகுகள் முளைக்காமல் சிவப்பாக இருந்தன. அப்போதும் காகங்கள் சுற்றிக் கூடிக் கரைந்துகொண்டிருந்தன. அம்மா அவற்றைத் திட்டியபடியும் பாவமென உச்சுக்கொட்டியபடியும் கூட்டைத் தூக்கி கூரையில் வெயில் படாத இடமாக வைத்தார். இந்தக் குட்டிக் காகத்திடம் போகும்போதெல்லாம் மீத காகங்கள் இரையத் தொடங்க எனக்கு பயம் வந்தது. அதற்குள் நீ ஃபோன் செய்ய நான் என்மீதே சுமத்த விரும்பிய பொறுப்பிலிருந்து நழுவி ஓடிவந்தேன். பின் உன்னோடு பேசிக் கொண்டிருக்கையில் நான் வெளியிலிருந்த குட்டிக் காகத்தை மறந்தே போயிருந்தேன்.

மதிய சாப்பாட்டுக்குப் பிறகு தூக்கத்தை ஒத்திவைத்து பேசிக்கொண்டிருந்தோம். நீ காகங்களை வரைவது கஷ்டமென சொல்லிக்கொண்டிருந்தாய். அவற்றின் உணர்வுகளைப் பிரதிபலிப்பது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை என்றாய். நான், டீ போடவா என்று கேட்டேன். ம்ம்ம் என்று நீ சொன்னபோது வெளியில் ஏதோ பெரிதாக மோதி உடையும் சத்தமும், அதைத் தொடர்ந்து அலறல் குரல்களும் கேட்டன. இருவரும் பால்கனி வழியாக எட்டிப் பார்த்தோம். ஒரு சிகப்பு நிறக் கார் அதற்கு முன்னால் நின்ற பைக்குகளை எல்லாம் இடித்து ஏறி, சுவரில் இடித்து நின்றது. அது வழக்கமாகக் குழந்தைகள் விளையாடும் இடம். ஃபிரெடரிக்கின் அம்மா அழுது அலறிக் கொண்டிருந்தார். ஃப்ரெடரிக்கும் இன்னொரு சிறுமியும் அழுதுகொண்டிருந்தனர். எல்லா வீடுகளிலிருந்தும் யாராவது எட்டிப் பார்த்து அவசர அவசரமாக வெளியேறி வந்தனர். சிகப்பு காரின் அருகே ஒரு வயதானவர் வெளிர்நீலச் சட்டையோடு நடுங்கியபடி நின்றிருந்தார். ஃப்ரெடரிக்கின் அப்பா அவசர அவசரமாக சட்டையை மாட்டிக்கொண்டு வந்தார். நான் அந்தக் குழந்தைகளை கவனித்துக்கொண்டிருந்த இரு பெண்களிடம் சென்றேன். அவர்களில் ஒருவரை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். குழந்தைகளுக்கு வெளிக்காயம் ஏதும் இல்லை. தலை வலிக்கிறதா, கண் மங்குகிறதா போன்று சிலவற்றைக் கேட்டேன். ஆபத்தாகத் தோன்றவில்லை. இடித்து நின்ற கார்கள், உடைந்த பைக்குகளை படமெடுக்கும்படி ஃப்ரெடரிக்கின் அப்பா உன்னிடம் கேட்டார்.

சிறிய நினைவுகள், சிறிய அலைகள், சிறிய நிற மாற்றங்கள், மாறிக்கொண்டேயிருக்கும் மேகங்கள், நடக்கும்போது தலையிலடிக்கும் வேப்பங்கொட்டைகள், சோளம் சாப்பிடவிடாமல் முறைத்துத் துரத்தும் காகம், தன் காதலியை பல கோணங்களில் புகைப்படம் எடுக்கும் காதலன். அவர்கள் காதலர்களாக இருப்பார்களா?

கொஞ்சம் கொஞ்சமாக பரபரப்பு அடங்கியது. நானும் நீயும் ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்தோம். எங்களெக்கெதிரே குட்டிக் காகம் பரிதாபமாக அதே சிமெண்ட் குவியலில் உட்கார்ந்திருந்தது. களேபரத்தால் ஜானி எங்கோ ஓடிப்போயிருந்தது. காகக் கூட்டமும் காணவில்லை. நீ குட்டிக் காகத்தின் அருகே சென்று புகைப்படம் எடுத்தாய். அன்று நாம் எல்லோரைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம், எல்லாவற்றைப் பற்றியும். இருவர் நண்பர்களாக என்னென்ன விசயங்கள் ஒத்துப்போகவேண்டும். இருபது வருடங்களுக்கு முன் நாம் இருவரும் ஒரே விசயங்களை எண்ணி கவலை கொண்டிருந்தோம். இப்போது?

மறுநாள் காலை நீ மெசேஜ் அனுப்பியிருந்தாய், குட்டிக் காகம் எப்படியிருக்கிறது என்று கேட்டிருந்தாய். நான் சென்று பார்த்தபோது அந்தக் காகத்தைக் காணவில்லை. அது எங்கும் செத்தும் கிடக்கவில்லை. நான் அது பறந்திருக்கும் என்றேன். நீ அது செத்துப்போய் ஏதாவது நாயோ பூனையோ தூக்கிப்போயிருக்கும் என்றாய். சில காகங்கள் பறந்துவிடுகின்றன, சில காகங்கள் செத்துப்போய்விடுகின்றன.

கதையைப் படிக்கும்போதே நாங்கள் ஐந்து வருடங்களுக்கு முன் பல்லாயிரம் கோடி செலவில் நாடு முழுக்க நடத்தப்பட்ட காகங்கள் ஒழிப்புத் திட்டத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். எதிர்ப்புகள், ஆதரவுகளைக் கடந்து எந்தப் பயனுமில்லாத, நிலைமையை மோசமாக்கிய ஒன்றாக அது இருந்தது. பின்னர், நாங்கள் அந்தக் கதைமுடிவைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தோம். இந்த இயந்திரமும் எல்லா கதைகளிலும் ஏதாவது சொல்லப்படுகிறதென்றே நினைக்கிறது என்றேன். இல்லை, இந்த இயந்திரம் அப்படி வேலை செய்வதில்லை என்றாள் பாரதி. அவள் நான் நடத்திய ஒரு எழுத்துப் பட்டறையை நினைவூட்டினாள். பள்ளிச் சிறுவர்களுக்கான அந்தப் பட்டறையில் நான் முதல் விசயமாக அவர்களிடம், உங்களை ஒரு கதை எழுதச் சொல்கிறேன். எந்தச் சம்பவத்தை உடனே எழுதவேண்டும் என்று தோன்றுகிறதோ அதைப் பற்றிய சிறிய குறிப்பை எழுதிக்கொள்ளுங்கள் என்றேன். அதேபோல் இந்த இயந்திரம் நமது மூளையில் கதை என்றதும் முதலில் தோன்றும் சம்பவத்தை எடுத்துக்கொள்கிறது. பின் அதற்குத் தோதான விவரணைகளைக் கோர்த்துக் கொண்டு, நம் மனவோட்டத்தைப் பின்பற்றிச் செல்கிறது என்றாள். ஒரு கதை என்னவாகவும் இருக்கலாம் என்று நாங்கள் ஒருகாலத்தில் பலமாக விவாதித்திருக்கிறோம், இப்போதெல்லாம் எதுவுமே கதை எனத் தோன்றுவதில்லை. இப்போது எழுதப்படும் கதைகளைக் குறித்து இருவருமே அலுப்பாக சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தோம், அவள் அழுவதற்கு முன் என்ன நடந்தது என்ற கேட்டபோது அவள் பதில்சொல்லவில்லை. எப்படியோ, இந்த முறை கதை துயரமானதுக்கு நான் பொறுப்பில்ல என்று சிரித்தேன். இந்த இயந்திரம் இன்னும் நிறைய முன்னேற வேண்டியிருக்கிறது என்றே இருவரும் நினைத்தோம்.

௦௦௦

வயலட்

எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான வயலட் பெங்களூருவில் உள்ள ஒரு சிறார் பதிப்பகத்தில் தமிழ் பதிப்பாசிரியராக பணியாற்றுகிறார். வயலட்டின் சிறுகதைகள் ‘ஊதா ஸ்கர்ட் கதைகள்’ (2017) என்ற தொகுப்பாக வெளிவந்திருக்கின்றது. எனில் என்ற இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். இவர் மொழிபெயர்த்த கவிதைகள், கதைகள் இணைய, அச்சுப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. காலச்சுவடு வெளியிட்ட ஹுவான் மனுவேல் மார்க்கோஸின் ‘குந்தரின் கூதிர் காலம்’ (2017) என்ற பராகுவே நாவலை இவர் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop

Don't Miss