/

இடங்கை வலங்கை – இனக்குழுக்களின் ஆட்சிக் கூட்டணி : கார்த்திக் புகழேந்தி

கார்த்திக் புகழேந்தி

தஞ்சை வேதநாயக சாஸ்திரி. புகைப்பட உதவி : தமிழ் விக்கி

தமிழ்நாட்டு வரலாற்றில், சாதிகள் குறித்த உரையாடலென்பது பனிமூட்டமான சூழலுக்குள் நெருப்பைக் கொளுத்திவிட்டுப் போவதற்குச் சமமானது. தீப்பற்றி, பனி விலகினால் உடனே அந்த இடத்தை புகை நிரப்பிக் கொள்ளும். சாதிய பிடிமானங்கள் அவ்வளவு இறுக்கமாக இருக்கும் சூழலுக்குள்தான், சாதிகள் குறித்த விவாதங்களும் இடைவெளியின்றி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதிலும் பண்பாட்டு ஆய்வு மேசைகளில், ‘இடங்கை – வலங்கைச் சாதிகளின் வரலாறு’ குறித்த உரையாடல் என்றைக்கும் தவிர்க்க முடியாத ஒரு தலைப்பு. 

தமிழ்ச் சமூகத்தில் அமைப்புரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் சாதிகள் தொழிற்படுவதற்கு, அதன் புராணத் தொடர்பும் நம்பிக்கைகளுமே முக்கிய அடிப்படைகளாக விளங்குகின்றன. சாதிகளுக்கு ‘மதிப்பீடுகளை’ ஏற்படுத்தித் தரும் இந்தப் ‘புனைவுகளின்’ உருவாக்கத்தில் பல தரப்பினரது பங்களிப்பு உண்டு. சாதியத்தை ஒரு பொது மனோபாவமாக வளர்த்தெடுத்ததில் இந்தக் கதை, கலைப் புனைவுகளின் தாக்கம் மிகமுக்கிய அம்சம். வர்ணாசிரமக் கோட்பாடே ஒரு ‘சுவாரசியமான புனைகதை’ அம்சம் தான். 

மனிதர்களைப் பிறப்பு, தொழில், கர்மபலன் ஆகியவற்றின் அடிப்படையில், மேலிருந்து கீழாக, சாதிகளை நான்கு அடுக்குகளாகப் பகுக்கும் வர்ணாசிரமக் கோட்பாடு, இந்திய இனக்குழுச் சமூகங்கள் அனைத்தினாலும் முழுமையாக ஏற்கப்பட்ட ஒன்றல்ல. அதனடிப்படையில் தங்கள்மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைகளைக் கண்டித்து, தங்களை அவற்றிலிருந்து விடுவித்துக் கொண்ட ’அவர்ணர், பஞ்சமர்’ எனும் (எந்த வர்ணமும் சாராத) புதிய அடையாளமேகூட இதற்கு நல்ல உதாரணம். அதனை ஓர் ‘எதிர்நிலைக் கோட்பாடு’ என்றும்கூட புரிந்துகொள்ளலாம். இந்த இரு கருத்துருவாக்கங்களும் இந்து Vs பௌத்தம் எனும் இரு மதங்களின் தாழ்வாரத்தில் நின்று வாதிட்டன. ஆனால், இதற்கு சற்று நேர்மாறாக, தமிழ்நிலத்தில், நால்வர்ணக் கோட்பாடும் அதன் எதிர்நிலைக் கோட்பாடும் வேறுமாதிரியான சமரசங்த்தில் ஈடுபட்டிருப்பதை ‘இடங்கை-வலங்கை’ வரலாறு குறித்த வாசிப்பில் கண்டடைய முடிகிறது.

நான்கும் இரண்டும்

மதம், வேதம், சாதி, வர்ணாசிரம உருவாக்கம் குறித்து நமக்கு நெருங்கத்தக்க சான்றுகள் சொற்பமானவை. ஆனால், தமிழ்நாட்டில் செயல்பாட்டிலிருந்த ‘இடங்கை – வலங்கை’ச் சாதிக் குழுக்களின் சரித்திரம் குறித்து நமக்குச் சில குறிப்பிட்ட வரலாற்றுத் தரவுகள் கிடைக்கின்றன. பல்வேறு சாதிகளை ‘இடம்- வலம்’ என இரு குழுக்களாக அணிதிரட்டிய இந்தக் கருத்துருவாக்கம் குறித்த சுவடிகள், நூல்கள், கல்வெட்டுகள் ஆதாரங்கள், ஆய்வாளர்களின் கருத்துகள் எனப் பல தரவுகளை அணுகும்போது, சாதிய அமைப்பை ஒரு புனைவு எப்படி வலுவடையச் செய்கிறது என்ற ‘வரலாற்றுத் தெளிச்சி’ கிடைக்கிறது. அதோடு, இந்தியாவெங்கும் பொருள்பட்ட ‘நான்கு அடுக்குப் படிநிலை’ தமிழ்நாட்டில் இரண்டாகச் சுருங்கி, வர்ணாசிரமக் கருத்துக்களுடன், முரண்பட்ட இனக்குழுவினரையும் உள்ளடக்கியதாக, ‘இடங்கை – வலங்கை’ எனும் சாதிக் குழுக்களின் அணிதிரட்டல் நிகழ்ந்திருப்பதை அறியமுடிகிறது. 

இதனை ‘நெகிழ்வுத்தன்மை‘ அல்லது ‘அரசியல் கூட்டணி’ என எந்தப் பெயரிட்டு அழைத்தாலுமேகூட, இந்த அணிதிரட்டல் சமூக அங்கீகாரம் பெற்றிருந்த விதத்தைக் கவனிக்கும்போது, தமிழ்நாட்டின் உள்ளடங்கிய அரசியல்முறைமையை (Inclusive Politics) விளங்கி கொள்ள முடிகிறது. தவிர, இங்கு எழுந்த கலகக் குரல்களின் வரலாற்றுத் தொடர்ச்சியும் புலப்படுகிறது. 

சாதி  ஒரு குறுகிய ஆட்சியமைப்பு!

சாதி எப்படி ஒரு சமூக அமைப்பாக தனி மனிதர்களிடம் வந்தடைகிறது என்ற பார்வை அவசியமானது. 1896-ல்  ‘இந்தியாவில் உள்ள சாதிகள் – நம்பகங்கள் மற்றும் அமைப்புகள்’ (Les Castes dans l’inde : les faits et le système) என்ற பிரெஞ்சு நூலை எழுதிய பேராசிரியர் எமில் செனார்ட் (Emile Senart), ‘சாதி அமைப்பு ஒரு குறுகிய ஆட்சியமைப்பு’ என்று மதிப்பீடு செய்கிறார்.

இந்த அமைப்பு அதன் ஒழுக்க வழக்கங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. திருவிழாக்களின்போது ஒன்று கூடுகிறது. திருமண உறவு பேணுகிறது. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையேயான வரம்புகளை வரையறை செய்கிறது. மரபு எனும் அனுபவப் பழக்கத்தின் வழியாக நிறைந்த அதிகாரம்கொண்ட ஒரு பேரவையாகச் செயல்படுகிறது. இந்தப் பேரவை தன் உறுப்பினர்கள்மீது ஆதிக்கம் செலுத்துகிறது. மற்றவர்களுடன் நீர், நிலம், உணவு, உறவு, அதிகாரம், சொத்து முதலிவற்றைப் பகிர்ந்து கொள்ளத் தடைவிதிக்கிறது. ஒற்றைத் தலைமையையும், அதன் ஆலோசனைக் குழுவையும், அதன் கீழான பல குடும்பங்களின் கூட்டமைப்பாக இயங்குகிறது. முக்கியமாக, வேளாண்மை, பாசனம், நிலம், தெய்வம், தனியுரிமை, மேல்நிலையாக்கம், தொழில், வாணிகம், அரசியல் அதிகாரம் எனப் பல அடுக்குகளைக் கொண்ட சங்கிலித்தொடர் நுகர்வுடன் (Chain consumption) சாதி அதிகாரம் பிணைக்கப்பட்டிருக்கிறது. 

சாதி எனும் ஒற்றை இயல்பு

இந்தக் கூட்டமைப்பின் வாரிசுகள் அனைவருமே அதன் உறுப்பினர்கள். அவர்கள் மாற்று இனக்குழுவினருடன் உறவு மேற்கொள்ளவும் அதன்வழி வாரிசுகளைப் பெறவும் தடைவிதிக்கப்பட்டவர்கள். தண்டனைகள் விதிப்பதன் மூலம் இனக்குழுவிலிருந்து விலக்கி வைக்கவும் தண்டம் கட்டுவது, பரிகாரம் செய்வது ஆகியவற்றின் மூலமாக மீண்டும் இனக்குழுவுடன் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கும் தகுதியானவர்கள். 

புராணத் தெய்வங்கள் அல்லது தங்களின் முன்னோர்களின் தொழில், அதிகாரம், அறிவு, வீரம், தெய்வீகத்தன்மை உள்ளிட்டவை மரபுரீதியாக இனக் குழுவைச் சேர்ந்தவர்களுக்குக் கடத்தப்பட்டதாக அறிவுறுத்தப்படுகிறது. அவற்றை எந்தவிதக் கேள்வியுமின்றி பின்பற்றப் பழக்கப்படுத்தப்படுகிறது. இதற்குப் புராணங்களும் இதிகாசங்களும் புனைவுகளும் நம்பகங்களும் ‘கர்ண’ (காது-செவிவழி) பரம்பரைக் கதைகளும் வலுசேர்க்கின்றன. 

இப்படிப் பிறப்பு முதலாக மனிதர்களது அன்றாட நடவடிக்கைகளில் ஊடுறுவக் கூடிய இந்த ஆழமான கருத்தியல் உறவாடல், சாதியின் பெயராலான ‘ஒற்றை இயல்பு’ என்ற அடையாளத்துக்குள் ஒரு தனிமனிதனைப் பழக்கப்படுத்துகிறது. அதே நேரத்தில் பிற இனக்குழுக்கள் மீதான மேன்மை மற்றும் இழிவுப் பார்வைகளையும் புகட்டுகிறது. நவீன காலமான இன்றும், மனிதர்களால் அடையாளம் இல்லாமல் வாழ முடிவதில்லை. ஓர் அமைப்பு வாழ்வாதார பலன்களை அளிப்பதோடு அடையாளத்தையும் வழங்குவதனால் இந்தப் புனைகதைகளிலிருந்து அவ்வளவு சுலபத்தில் வெளிவரவும் முடிவதில்லை. 

இடங்கை – வலங்கைச் சாதிகள்!  

ஒரு குறுகிய ஆட்சியமைப்பாக இருக்கும் வரை சாதி அமைப்பு அதன் வலுவோடு பிழைத்திருந்தாலும், ஆட்சியமைப்பு விரிவடையத் தொடங்கிய காலத்தில், பல்வேறு சாதிகளுடன் கைகோர்க்க வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது. இதற்காக சில புதிய நம்பகங்களையும் ஏற்கெனவே சொல்லப்பட்ட புராணங்களோடு தொடர்புபடுத்தி உருவாக்கி அளிக்கவும் செய்திருக்கிறார்கள். இதுவே இடங்கை-வலங்கைச் சாதிகளின் அணிதிரட்டலின் மூலாதாரமாக இருந்திருக்கிறது. 

அந்த வகையில்,  ‘இடங்கை, வலங்கைச் சாதியர்’ பற்றி நமக்குக் கிடைப்பதில் நான்கு சுவடிகள் முக்கியமானவை. முதலாவது, தெலுங்கு எழுத்தில் உருவாக்கப்பட்ட, ‘இடங்கை வலங்கை புராணம்’ எனும் சுவடி. இது சரபோஜி மன்னரின் ஆட்சிக்காலத்தில் 1798-ல் எழுதப்பட்டது. 

‘ராசிப் புள்ளையனுக்கு ஒழிகரே நாட்டுப் புன்னப்பான் எழுதிக் கொடுத்த பட்டயம்’ (ஒழிகரை-புதுச்சேரி) எனத் தொடங்கும் அந்தச் சுவடியில் புராணரீதியாக இடங்கை-வலங்கை சாதிகளின் உருவாக்கம் குறித்த கதை இடம்பெறுகிறது. அதன்படி வலங்கைச் சாதிகள் மொத்தம் பத்து என்ற குறிப்பு கிடைக்கிறது.  

இரண்டாவது தஞ்சை வேதநாயக சாஸ்திரி என்ற புலவரால் எழுதப்பட்ட, ‘வலங்கை சரித்திரம்’ எனும் தாள் சுவடி. ‘கனம் பொருந்திய கலநெல் காலன் மைக்கிஞ்சித் துரை’ (Colonel Colin Mackenzie- காலின் மெக்கன்சி) கொடுத்த கட்டைளையின்படி எழுதப்பட்ட இந்தச் சுவடியில், ‘வலங்கை என்றால் வெள்ளாளரையும் அவர்களைச் சேர்ந்த சகல சாதியரையும், இடங்கை என்றால் கம்மாளரையும் அவர்களைச் சேர்ந்த சகல சாதிகளையும் காட்டுகிறது’ என வரையறுக்கிறது. 

வலங்கைச் சாதிகள் குறித்து மெக்கன்ஸி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவே இந்தச் சுவடியை எழுதியிருக்கிறார் வேதநாயக சாஸ்திரி. இதன் வழியாக அந்தக் காலக்கட்டத்தில் சாதிகளின் தோற்றக் கதை, முந்தைய கால உறவு, பேதம், பகைமை, சமூக உரிமை, பெருமிதம், கர்மவினை ஆகியவற்றை அவரறிந்த விதத்தில் பதிவு செய்திருக்கிறார்.  

மூன்றாவது சுவடி, ‘இடங்கை, வலங்கை சாதி வரலாறு.’ இதில்தான் முதன்முறையாக வலங்கை சாதிகள் 98 இடங்கை சாதிகள் 98 என 196 சாதிகள் பட்டியலிடப்படுகின்றன. அதோடு இந்தச் சாதியருக்கென குறிப்பிட்ட குலக்குறி அடையாளங்களும் சுவடியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவற்றோடு, சாதிக்கலப்பு ஏற்பட்டு அதிலிருந்து உற்பத்தியான புதிய சாதிகளைக் குறித்தும், சாதித் தொழில் குறித்தும் தரவுகள் இடம்பெறுகின்றன. 

நான்காவது, ‘புதுவை- இடங்கை, வலங்கை சாதியர் வரலாறு’ எனும் சுவடி. இந்தச் சுவடி கி.பி.1776 முதல் புதுவையைச் சேர்ந்த மக்களின் வாக்குமூலங்கள் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் புதுவையில் வாழ்ந்த சாதிக் குழுக்களின் சமூக மதிப்பு, திருமணச் சடங்குகளில் இருந்த உரிமை, மறுப்பு உள்ளிட்டவை இதில் பதிவாகியிருக்கின்றன. உதாரணமாக தங்களது குடும்பத் திருமணங்களின்போது இடங்கை, வலங்கைச் சாதியர், ‘என்ன வகை குடை பிடிக்க வேண்டும். என்ன வகை கோல், கழி பிடிக்க வேண்டும், எந்த நிறக் குதிரையில் ஏற வேண்டும்’ என்பது உள்ளிட்ட கட்டுப்பாடு மற்றும் உரிமைகளைப் பெறுவது தொடர்பாக நடைபெற்ற மீறல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

ஆச்சர்யமாக, புதுவைச் சுவடியில் பரத்தை தொழிலில் ஈடுபட்டுவந்த தேவதாசிகளில் வலங்கை தேவதாசி, இடங்கை தேவதாசி எனப் பிரிவுகள் இருந்ததையும், அவர்களிடம் பழக்கம்வைத்துக் கொள்வதில் நிலவிய பாகுபாடுகளும் அது தொடர்பான வழக்குகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. 

காலின் மெக்கன்சி

நூல்களிலிருந்து… 

இந்த நான்கு சுவடிகளுக்கும் முன்பின் காலகட்டத்திலும் இடங்கை-வலங்கை சாதிகள் குறித்த பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 1876-ல் ஜெ.எஃப்.கெர்ன்ஸ் என்பவர் ‘இந்திய பழமை’ என்ற நூல் தொகுதியில் இது குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், ‘விஸ்வகர்மா சாதியருக்கும் பார்ப்பனர்களுக்கும் புரோகிதத் தொழில் செய்வதில் ஏற்பட்ட பூசல்களைத் தீர்த்துவைத்து, பார்ப்பனர்களை ஆதரிப்பவர்கள் வலங்கையினர் என்றும் விஸ்வகர்மர்களை ஆதரிப்பவர்கள் இடங்கையினர்’ என்றும் சோழர் மன்னர்கள் வரையறுத்ததாகக் குறிப்பிடுகிறார். 

சான்றாக, ‘கிபி.1072-ல் தஞ்சையிலுள்ள ராஜ மகேந்திர சதுர்வேதி மங்கலத்தில் வலங்கை – இடங்கை சாதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு, கோயில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அது தொடர்பாக, வலங்கையினரான பார்ப்பனர், வேளாளர்கள் அடங்கிய அரசதிகாரிகள் வன்னியர் சாதியரோடு இணைந்து, இடங்கை சாதியர் மீது தாக்குதல் நடத்தினர்…’ என்ற குறிப்பை நீலகண்ட சாஸ்திரி அவருடைய சோழர்கள் நூலில் (The Cholas. University of Madras- 1935)  தருகிறார்.

அவர் எழுதிய ‘தென்னிந்திய வரலாறு’ நூலில், சாதிய அமைப்பும் அதன் வழியில் அமைந்த சமூக, பொருளாதார முறைகளின் அடிப்படையில், வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் விவகாரங்களை பரிபாலனம் செய்து சமூக ஒழுங்கை நிலைநிறுத்துவது அரச கடமையாகக் கருதப்பட்டது’ என்கிறார். அதற்கேற்ப, ‘சோழர்கள்’ நூலில், ‘சோழன் கரிலாலன் காலத்தில், இருதரப்பு மக்களிடையே மோதல் ஏற்பட்டு, அந்த வழக்கு மன்னனின் தீர்ப்புக்குச் சென்றபோது, அரசனுக்கு வலதுபுறமும் இடது புறமும் நின்றதாக’ச் செவிவழிச் செய்தி ஒன்றையும் குறிப்பிடுகிறார், நீலகண்ட சாஸ்திரி.

பின்னாளில் பிரெஞ்சு அரசின் கீழிருந்த புதுச்சேரியிலும் இந்த நடைமுறை கையாளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அங்குள்ள ‘நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்படும்போது, வேளாளர், பறையர் உள்ளிட்ட வலங்கைச் சாதியர் நீதிபதியின் வலதுபுறமும் செட்டி, கம்மாளர் (விசுவகர்மா), அருந்ததியர் உள்ளிட்ட சாதியர் இடதுபுறமும் நிற்கவைக்கப்பட்டார்கள்’ என ஆனந்தரங்கம் பிள்ளை தனது நாட்குறிப்பில் (1736-1761) குறிப்பிடுகிறார். பதினெட்டாம் நூற்றாண்டில் பிரெஞ்சு நாடாளுமன்றத்திலும் மரபான அரசு ஆதரவாளர்கள் வலது புறத்திலும் புரட்சியாளர்கள் இடது புறத்திலும் அமர்ந்திருந்ததையும் அதன் விளைவாகவே வலதுசாரி, இடதுசாரி எனும் அடையாளங்கள் உருவானதையும் இந்த இடத்தில் இணைத்துப் புரிந்து கொள்ளலாம். 

ஜெர்மானிய ஆய்வாளரான பிலிப் வான் மோர்க்கன் (Philipp van Moekern), கள ஆய்வு மற்றும் சொந்தக் கணிப்புகளின் அடிப்படையில் எழுதிய ‘கிழக்கிந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் அதன் குடிமக்கள்’ (Ostindien Seine Geschichte Cultur Und Seine Bewohner) என்ற நூலில், இடங்கை-வலங்கை சாதிகள் பற்றிய குறிப்பினைத் தருகிறார். அதன்படி, வேடர், நெசவாளர், செட்டி உள்ளிட்டோர் அடங்கிய இடங்கை சாதிகள் ஒன்பது என்றும், குயவர், வண்ணார், பல்லக்குத் தூக்கி, முகமதியரில் ஒரு பிரிவினர் ஆகியோர் அடங்கிய  வலங்கைச் சாதிகள் பதினெட்டு என்றும் 1857-ல் பதிவுசெய்கிறார். 

அயோத்திதாசரும் தனது எழுத்துக்களில் இந்த வலங்கை -இடங்கை சாதிய அரசியல் குறித்து எழுதியிருக்கிறார். காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் வாழ்ந்த விஸ்வகர்மா (கம்மாளர்) சமூகத்தினருடனான மோதல்களிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள, ’வர்ணபேதம்’ கற்பித்துவந்த பறையர் சமூகத்தினருடன் பார்ப்பனர்கள் சினேகம் வளர்த்தனர் என்றும் சுங்கம், ஆயம் வசூலிக்கும் தேயப் பஞ்சாயத்துகளின்போது பறையர் சாதியரை  தங்களோடு வலப்பக்கமாக வீற்றிருக்கச் செய்யும் நூதனமான ஏற்பாட்டைச் செய்திருந்ததாகவும் குறிப்பிடுகிறார் அயோத்திதாசர்.

நூல்கள் தவிர்த்து, கல்வெட்டுப் பதிவுகள் சிலவற்றிலும் இடங்கை வலங்கை சாதிகள் பற்றிய  குறிப்புகள் கிடைக்கின்றன. அதில் முக்கியமானது காஞ்சிச் செப்பேடு. இடங்கை வலங்கை பிரிவு குறித்த பழமையான குறிப்பும் அந்தச் செப்பேட்டில்தான் காணப்படுகிறது. பிறகு, வேறு சில கல்வெட்டுக்களில் சாதிக் குறிப்புகளின் முன்னொட்டாக ஒரு நபர் எந்தத் தரப்பைச் சார்ந்தவர் என்று சுட்டிக்காட்டப்படுவது நடைமுறையிலிருந்திருக்கிறது. தஞ்சை பெரியகோயில் கல்வெட்டுகளில் கம்பர், வேளக்காரர் சாதிகளைச் சேர்ந்தவர்கள் வலங்கை முன்னொட்டுடன் குறிப்பிடப்படுகிறார்கள்.

நாயக்கர்கள் மத்யஸ்தம்

இந்த இடங்கை-வலங்கை பிரிவுகளின் உற்பத்திக்கு காரணமாகச் சொல்லப்படும் கதைகள் பலவும் ‘புராணத் தொடர்பு’ பின்னணியுடனே கிளைக்கின்றன. தமிழ் நிலத்துக்குத் தொடர்பேயில்லாத ரிஷிகளும், இயற்கை நிகழ்வல்லாத புனைவுகளும், ஒருசில சம்பவ வினோதங்களுமே இந்த சாதியப் பிரிவினையின் உற்பத்தி ஆதாரங்களாக விவரிக்கப்படுகின்றன. 

வலங்கை-இடங்கை கருத்தாக்கத்தின் கதைமூலமேகூட சிவன்–பார்வதி எனும் உருவ வடிவத்திலிருந்து ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சிவனும் தேவேந்திரனும் இடங்கைக்கு உரியவர்கள், பிரம்மனும், பிருகு ரிஷியும் (Bhrigu) வலங்கைக்கு உரியவர்கள் எனக் கட்டுமானம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவை சமூக அந்தஸ்து பெற்றது நாயக்கர் காலகட்டத்தில் நிகழ்ந்த ஒரு மோதலின் விளைவாக என்பதை மேற்கண்ட சுவடிகளில் இடம்பெறும் செய்திகள் குறிப்பிடுகின்றன.  

முதலாவதாகக் குறிப்பிட்ட ‘இடங்கை வலங்கைப் புராணம்’ சுவடியின்படி, சோழன் ராஜராஜேஸ்வரன் வழித் தோன்றல்களாக நீலகங்கன், கங்க பரிபாலன், வஜ்ரபாகன், ஜம்புகுல வேந்தன், பரசுராமன் எனும் ஐந்து வேந்தர்கள் தோன்றுகிறார்கள். இவர்கள், பாரடப்பள்ளி, துஷ்டப்பள்ளி, சிஷ்டப்பள்ளி, வன்னியப்பள்ளி, அரசப்பள்ளி ஆகிய ஐந்து தேசங்களில் ஆட்சி செய்துவருகிறார்கள். 

அப்போது, இடங்கைச் சாதியைச் சேர்ந்த நாட்டரசர்களின் குலக்குறி அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட ‘பஞ்ச வர்ணப் பாவாடை’யினை வலங்கைச் சாதியர் பிடுங்கிச் சென்றதாக ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கிறது. இதனால், இடங்கை பண்ணார்ட்டார்கள் சேலம் சீமை எழுபத்தாறு நத்தம், வெளியூர் நாடு 32 கிராமங்கள், ஆத்துநாடு 64 நத்தம் மற்றும் 14 தேசங்களைச் சேர்ந்த உறவின்முறைகள் ஒன்றுகூடி சேரமண்டலம், சேலம் நகரில் உள்நாட்டுக் கலகம் ஒன்றை நிகழ்த்தியதாக சுவடி குறிப்பிடுகிறது. 

அந்தக் கலகம் அடக்கப்பட்டு, பட்டத்தரசர் வெங்கடபதி ராயனிடமும் (ஆட்சிக்காலம் 1586-1614), அவரது தளபதி பெத்தள நாயக்கரிடமும் வழக்காக கொண்டு செல்லப்படுகிறது. அவர்கள் வலங்கை, இடங்கை சமயங்களின் காரியக்காரர்களுக்கு (சமயம் என்றே இடம்பெறுகிறது சுவடியில்) ஓலை அனுப்புகிறார்கள். கூடவே, இருதரப்பினரது, ‘ஆகம புராண’ங்களையும் அவர்களின் பிறப்பு முதலான அனைத்துச் சுவடிகளையும் எடுத்துவரச் செய்கிறார்கள். 

அந்த மத்யஸ்த நிகழ்வின் போது, பாண்டலம் சீமை ஆரூரிலிருந்த யக்ஞ நாராயண தீக்ஷிதர் குமாரன் ராஜப்ப பிள்ளையன் என்பவர், ‘வலங்கை இடங்கை சாதிகளின் சமய ஆகமம், பிறப்பு வளர்ப்பு, வன்னியர் புராணம் ஆகியவற்றை தெலுங்கு அரசர்களிடம் அவர்களுக்குப் புரிந்த மொழியில் விவரிக்கிறார்கள். 

இதில், “வலங்கை இடங்கை தோற்றம் சிவன் பார்வதியின் அர்த்தநாரி வடிவத்தின் விளைவு, இடங்கைக்கு உரியவர் சிவனும் தேவேந்திரனும்; வலங்கைக்கு உரியவர் பிரம்மனும் ப்ருகு மஹரிஷியும் (பிரம்மனின் உதவியாளன்)” என்கிறார் ராஜப்பப் பிள்ளையன்.

தன்னை மனு விக்ஞானம், வேதம், ஆகமம், வன்னியர் புராணம் அறிந்தவரெனக் குறிப்பிடும் ராஜப்பப் பிள்ளையன், “வன்னியர் சாதியர், இரண்யகசிபு, கும்பகர்ணன், சிசுபாலன் தந்தவக்ரன் என மூன்று சத்ருப் பிறப்பெடுத்தனர். பிறகு, பார்வதியின் உள்ளங்கையில் விசுவகர்மா ஹோமம் வளர்க்க, சிவன் நெற்றிக்கண் சுடரிலிருந்து வன்னிய குமாரர் பிறந்தார்” என விவரிக்கிறார். மேலும், அப்படித் தோன்றியபோது, பஞ்ச வர்ணப் பாவாடை, ஜெகஜம்புக்கொடி, பஞ்சமுகத் தீவட்டி ஆகியவை இடங்கையினரான பண்ணாட்டாரின் அடையாளங்கள் என்று ராஜப்பப் பிள்ளையன், பட்டத்தரசர் வெங்கடபதி ராயன் முன்னால் வாதம் வைக்கிறார். இதனால் வலங்கையினர் சீறுகிறார்கள்.

“வித்வான் கட்டின இந்தக் கட்டுக்கதைகளில் எங்களுக்குச் சம்மதமில்லை. இதைக் காஞ்சீபுரத்திலே பிராமணத்திலே ஒப்பிக்கச் சொல்லும்” என்று கம்பளராயனிடம் வலங்கையினர் பதில் வைக்கிறார்கள். அதற்கு, ராஜப்பப் பிள்ளையன் சம்மதம் தெரிவிக்கிறார். 

பிறகு, காஞ்சி பொன்னம்மன் சன்னதியில், இடங்கை-வலங்கை சாதியர் தீர்வு எழுதி, அதை தீயில் இடுகிறார்கள். வலங்கை எழுத்து தீயில் கருகுகிறது. இடங்கையினர் எழுத்தோலை கருகவில்லை. இதைக்கொண்டு வெங்கடபதி ராயன் சமரசம் நிகழ்த்துகிறார். வாதில் வென்றவர்களாக இடங்கையினரை அறிவிக்கிறார். கலகத்தில் ஈடுபட்ட பண்ணாட்டாரை பட்டணபிரவேசம்  (ஊர்வலம்) செய்யவைத்து, மறுதரப்பையும் அமைதிப்படுத்தி அனுப்புகிறார் வெங்கடபதி ராயன்.

வாதத்தில் தங்களுக்கு வெற்றி தேடித் தந்த ராஜப்பப் பிள்ளைய்யனுக்கு இடங்கைப் பண்ணாட்டார் ஒன்றுகூடி, பெரிய குடிக்கு ரெண்டு பணம்; சின்ன குடிக்கு ஒரு பணம், திருமணத்திற்கு நீரிட்ட பணம், கட்டின ஏர் ஒன்றுக்கு நாலு வள்ளம் தானியமும் என பொருள் தரச் சாஸனப் பட்டயம் எழுதிக் கொடுக்கிறார்கள். இதில் இடையூறு நேர்ந்தால், ஊர் கவுண்டர் இந்தத் தானத்தை வாங்கிக் கொடுக்கத்தக்கவர் என வாக்குறுதியும் தருகிறார்கள். 

அதுவும் எவ்வளவு காலத்துக்கு..? காவேரியும், கல்லு முள்ளும், ஆகாசமும் பூமியும் உள்ளளவும் பாரம்பரியமாய் கொடுத்துவரவேண்டும் என்கிறது சாஸனம். மறுப்பவன் (வழமை போல) காசியில் பசுவைக் கொன்றது தொடங்கி ஆகாத தோஷங்களுக்கு ஆளாவான் என்று தீர்மானம் போடப்படுகிறது. கூடுதலாக, வெற்றிதேடித்தந்த ராஜப்பப்பிள்ளை இந்த யுகத்தில் இடங்கைச் சாதிக்கென தோன்றிய இரண்டாம் ஜம்பு முனிவர் என்று பிரசன்ன பட்டயமும் எழுதிக் கொடுக்கப்படுகிறது.

அயோத்திதாசர்

வலங்கை வரலாறு

இடங்கைச் சாதியினரின் கை ஓங்கிய இந்த வழக்கிற்குப் பிறகு, வலங்கைச் சாதிகளின் முதன்மை அதிகாரத்தைத் தக்க வைத்திருந்தவர்களுக்குத் தங்களுக்கான ‘சரித்திரத்தை’ வலுப்படுத்த வேண்டிய அல்லது மீளத் தேடியெடுக்க வேண்டிய தேவை உருவாகியிருந்தது.  

1798-ல் காலின் மெக்கன்ஸி அளித்த உத்தரவின் பேரில், தஞ்சை வேதநாயக சாஸ்திரி என்பவர், ‘வலங்கை சரித்திரத்தை தாள் சுவடியாக எழுதுகிறார். 24 அதிகாரங்கள் கொண்ட அந்தச் சுவடியில், சாம்புகச் சாம்பான், பிறவிடைச் சாம்பான், தியாகச் சாம்பான் என்கிற மூன்று பிரிவினரின் சரித்திரம் முதன்மையாக இடம்பெறுகிறது. அதோடு, திருவாரூர் தியாகச் சாம்பான், ஆனையேறும் பெரும் பறையன், நந்தன் ஆகியோரின் சரித்திரங்களும் நந்திக்கலம்பகம் உருவான பின்னணியும்  இந்தச் சுவடியில் இடம்பெறுகிறது. குறிப்பாக பறையர் சமூகத்தினரின் ஒரு கிளைப் பிரிவான ‘வள்ளுவர்’ சாதியருக்கும் பார்ப்பனர்களுக்குமான உறவு குறித்த செய்தி புராணரீதியில் கட்டமைக்கப்படுகிறது. இரு தரப்புக்கும் இடையிலான பங்காளித் தத்துவமும் ‘வள்ளுவர் வேறு பறையர் வேறு’ என்ற பேதமும் சுட்டப்படுகிறது. இந்த இரு சாதிகளின் கலப்பில் மற்ற துணைச்சாதிகள் கிளைத்தன என்றும் நீள்கிறது சுவடி.

சாஸ்திரி எழுதியளித்த வலங்கைச் சரித்திரத்தில் உள்ளபடி, “கரூவூரைச் சேர்ந்த ‘ஆதி’ என்கிற பறைக்குலப் பெண்ணுக்கும் ‘பகவன்’ பார்ப்பனர் ஒருவருக்கும் உறவு ஏற்படுகிறது. (குறளில் வரும் -ஆதிபகவன்) அவர்களைச் சாதி விலக்கம் செய்ததனால் காட்டிலே குடியேறினார்கள். அவர்களுக்கு மூன்று ஆணும் நான்கு பெண்ணுமாக ஏழு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூத்த பெண் உப்பை எனும் ‘மாரி’யை வண்ணார் சாதியரும், உறுவை என்னும் ‘பிடாரி’யை சாணார் (நாடார்) சாதியரும்  வளர்த்தனர். 

மாரிக்கும் பிணம் எரிக்கும் தொழிலாளருக்கும் பின்னாளில் திருமணம் ஏற்படுகிறது. பிடாரியும் ஐயனாரும் ஊர்க்காவல் தெய்வங்களாகிறார்கள். பிடாரிக்கு, கள்ளு படையல் பொருளானது.  

அவ்வையை மதுரையைச் சேர்ந்த பாணர்கள் (தையல் தொழிலும் செய்தோர்) வளர்த்தனர். கல்விகற்ற அவ்வைக்குச் சோழ மன்னர்களுடன் அறிமுகமும் ஏற்படுகிறது. கம்பன் என்கிற வித்துவானுக்கும் அவ்வைக்கும் அவைக்கள மோதல் நிலவி வந்தது.

சிலையுமான் கருவூர் வஞ்சி ராஜனால் வளர்க்கப்பட்டு சேரன் என்று அறியப்பட்டு அரசாண்டார். கபிலர், திருவாரூர் பார்ப்பனர் வீட்டில் வளர்ந்து வேதம் கற்று ஒழுகினார். வள்ளியைக் குறவர்கள் வளர்த்தனர். பழனி மலை முருகன் அவரைக் காதலித்து மணந்தார். 

வள்ளுவனைத் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த மயிலாப்பூர் பார்ப்பனர்கள் வளர்த்தனர். பாண்டியர்கள் காலத்தில் இயங்கி வந்த சங்கப் பலகையை அழித்தவராக இவர் குறிப்பிடப்படுகிறார். ‘ஞானவெட்டியான்’ என்ற நூலை இயற்றியவர் இந்த வள்ளுவர் தானென்றும் சுவடி குறிப்பிடுகிறது. 

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இன்று புழக்கத்திலிருக்கும் பெரும்பான்மை, சிறுபான்மை சாதிகளின் ‘பிறப்பியல்’ முன்னோடிகளாக இந்த ஏழுபேரும் குறிப்பிடப்படுகிறார்கள். அவை தெய்வங்களாகவும் சமயங்களில் நாடறிந்த புலவர்களாகவும் கவிகளாகவும் அறியப்பட்ட சித்திரமும் இந்தப் பிறப்பியல் புனைவில் திரண்டிருக்கிறது.

மறுகதையாடல்

அதே சமயத்தில் இந்தக் கலப்புகளின் காரணக் கதையில் தங்களின் மேன்மை களங்கத்துக்கு உட்படக்கூடாது என்பதற்காக, ‘மூலக் கதையின் வேறு வடிவங்கள் சிலவும் வழக்கத்திலிருந்ததாகக் குறிப்பிடுகிறார் தஞ்சை வேதநாயக சாஸ்திரி. அதாவது, ‘ஆதி’ என்ற பறைக்குலப் பெண் ‘பகவன்’ என்ற பிராமண இளைஞனிடம் தன் சாதி அடையாளத்தை மறைத்து, ஒன்று கூடிவிட்டாள் என்றும் அது தொடர்பான ஆதாரம் வடமொழிப் புராணங்களில் ஒன்றான சைவ புராணத்தின், உருத்திர சங்கிதையின் 18-ம் அத்தியாயத்தில் இடம்பெறுவதாகவும் மற்றொரு கருத்தையும் குறிப்பிடுகிறார். 

இந்த இடத்தில், பிராமணராகப் பிறந்து அருந்ததியப் பெண்களை மணம் முடித்து, களக்காடு ஜமீன்களின் துணையோடு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்தவர்களைத் தடுத்த காரணத்துக்காகக் கொலை செய்யப்பட்ட ‘முத்துப்பட்டன் கதை’ நினைவுக்கு வருகிறது. வில்லுப்பாட்டாக முத்துப்பட்டன் கதை வழக்கிலிருந்த நிலையில், அவரது மனைவிகளான பொம்மக்கா, திம்மக்கா இருவரும் அருந்ததியர்கள் அல்ல. பிராமணர் வீட்டில் பிறந்த இரட்டைக் குழந்தைகள். அவர்களை காட்டிலிருந்து அருந்ததிய சமூகத்தினர் கண்டெடுத்தனர் என்று மறுகதையாடல் ஒன்று கட்டமைக்கப்பட்டது. 

இதுகுறித்து வில்லிசைக் கலைஞர் முத்துப்புலவரிடம் நாட்டாரியல் ஆய்வாளர், நா.வானமாமலை உரையாடியபோது, “எங்கள் முன்னோர்கள் பாடிவந்த முத்துப்பட்டன் கதையை சில ஆண்டுகளுக்கு முன்பு பிராமணர்களும் சில உயர் சாதிக்காரர்களும் ஆட்சேபித்தார்கள். ஒரு பிராமணன் சக்கிலியப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வதை அவர்களால் ஏற்க முடியவில்லை. முத்துப்பட்டன் வழிபாடு பெருகியிருந்த சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு மேல் சாதிக்காரர்கள் அதிகமாக வருவதால் பொம்மக்கா, திம்மக்காவின் பிறப்பு பின்புலத்தை மாற்றியமைக்கவும் வற்புறுத்தியதாகத் முத்துப் புலவர் தெரிவித்திருக்கிறார். 

ஒரு புனைவின் அடித்தளத்தின் மேல் கட்டப்பட்ட பல புனைவுகளாகவோ அல்லது ஒரு புனைவின் அடித்தளத்தையே மாற்றுகிற புதிய புனைவாகவோ இவை உருவாகின்றன என்பதை இது போன்ற திருத்தங்களால் உணர்ந்துகொள்ள முடிகிறது. தஞ்சை வேதநாயக சாஸ்திரி முன்வைக்கும் கருத்துகளிலுமேகூட பிறரது சொந்த விருப்பங்கள் இழையோடியிருக்கின்றன

இருந்தபோதும் சுவடி குறித்து மெக்கன்சிக்கு எழுப்பிய கேள்விகளுக்குப் பிறகு, சாஸ்திரி எழுதிய பதில் கடிதத்தில் சமூக நம்பிக்கை மற்றும் முந்தைய சுவடித் தரவுகள், மக்களிடையே புழங்கிய கருத்துகள் மற்றும் சில வரலாற்றுத் தகவல்களையும் குறிப்பிட்டிருக்கிறார். 

திருநெல்வேலியில் வடமலையப்பப் பிள்ளை ராஜ்ஜிய பரிபாலனம் செய்தபோது, அங்குள்ள மறவர்கள் அனுபவித்த கொடுமைகள் குறிப்பு… உடையார் என்றழைக்கப்படும் நத்தமாடிச் சாதியர், கள்ளர், பள்ளர் (தேவேந்திரகுல வேளாளர்), சாணார் (நாடார்) ஆகிய இனக்குழுக்களின் வழக்கு முறைமைகள் வலங்கைச் சுவடியில் இடம்பெறுகின்றன. திருவிதாங்கூர் எட்டுகூட்டம் பிள்ளைமார், பதினாறு கூட்ட மாடம்பிகளை அழித்து, அவர்களின் பெண்டுகளை முக்குவருக்குத் திருமணம் செய்துவைத்த செய்தி, புலையர்களின் புலையாட்டம், கவரை சாதியரின் நாட்டாண்மை முறை வேளாண் பணிகளில் இடம்பெறும் சாதிய இடையீடுகள், பனைத் தொழிலாளர்களிடம் காட்டப்படும் அடக்குமுறை, பல்லக்கு ஏறுவதில் காட்டப்படும் பேதம், தெருக்களில் நுழையத் தடை, தொண்டு  செய்தோருக்கு சாதிப்பட்டம், விருது அளித்த விதம் ஆகியன இந்தச் சுவடியில் வரலாற்றுத் தகவல்களாகப் பதிவாகியிருக்கின்றன.

முத்தாய்ப்பாக, “அக்காலத்தில் எந்தெந்த சாதி உயர்ந்த கையாய் இருக்கிறதோ, எவர்கள் காரியக்காரரோ அவர்களும், அவர்களோடு சேர்ந்தவர்களும் வலங்கைப் பிரிவினர்” என்கிறார் வேதநாயக சாஸ்திரி! 

நீலகண்ட சாஸ்திரி

18-ம் நூற்றாண்டின் நிலை

இந்தப் புராணச் சுவடியை வாசித்துவிட்டு, தர்க்கப்பூர்வமாக சில கேள்விகளை முன்வைத்திருக்கிறார் மெக்கன்ஸி. “வேதநாயகம், நீர் இங்கே சொல்வதில் பல புத்திக்கு உதவாததாக இருக்கிறது… ஒரு வண்ணார் வீட்டில் வளர்ந்த ஒரே ஒரு பிள்ளைக்குப் பிறந்தவர்கள்தான் வடக்கே காசி தொடங்கி தெற்கே மலையாளம் கண்டித் தேசம் மேற்கே மைசூர் ராஜ்ஜியங்கள் எங்கும் வாழ்கிற ஒரு சாதியரா… இப்படிச் சொன்னால் யார் நம்புவார்?” என்று கேள்வி கேட்கிறார் மெக்கென்ஸி. (மொழிபெயர்ப்பு) 

அதற்கு, “இந்தக் காரியங்களை சகல சாதியரும் நம்புகிறார்கள். அதனைத்    தொட்டே இந்தச் சண்டைகளும் பொல்லாப்புகளும் வலங்கைக்கும் இடங்கைக்கும் உண்டாகிறது. அதனாலேயே மேற்சொன்ன வரலாறுகள் நடந்திருக்க வேண்டுமென்று நினைக்க வேண்டியிருக்கிறது. துரையவர்களுக்குச் (மெக்கன்ஸி) சித்தமாய் இருந்தால் இங்கே மறுசாதிப் பெண்களை வைத்திருந்தார்கள் என்று சொல்லப்பட்ட பத்து பேருடைய சரித்திரத்தை அலாதியாக வேறே பொஸ்தகத்தில் எழுதி அனுப்புகிறேன்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார் வேதநாயக சாஸ்திரி. 

ஒருவகையில் பார்த்தால் சாஸ்திரியின் கருத்துகள் முழுமையாக அவரது சொந்தக் கருத்துகளாக மட்டும் கருத முடியாது. காலம் காலமாகக் கேள்வி எழுப்பப்படாத புரையேறிய தகவல்கள், நம்பகங்கள், அதன் சமூக அசைவு ஆகியவற்றை மொழியறிவு, எழுத்தறிவின் காரணமாக அவர் பதிவுசெய்து கொடுத்திருக்கிறார். உதாரணமாக கீழே உள்ள பத்திகளைக் கவனிக்கலாம். 

“வெள்ளாளர்கள், முதலிகள் (உள்ளிட்ட) மற்ற சாதியர்களைத் தங்களுக்கு அடுத்தவர்களென்று அவர்கள் (பார்ப்பனர்கள்) சொல்லிக் கொண்டதுபோல, கவரைகள் அல்லது வடுகரையும் தங்களோடு (வலங்கையோடு) சேர்த்துக் கொண்டனர். ஏனென்றால் வடுகர்கள் அப்போது அரசாண்டு வந்தனர். அதனால் அவர்களைத் தங்களுக்குத் (பார்ப்பனர்களுக்குத்) தலைமை என்று சொல்லிக் கொண்டார்கள். ஆனால், தங்களோடு ஒத்த சாதியாய் இருந்தாலும் கம்மாளர் (விஸ்வகர்மா) தங்களோடு சேர்த்தி அல்ல, அவர்களை இடங்கையினர் என்கிறார்கள்.” இந்தக் கருத்து அதிகாரம் எப்படித் தனது கூட்டணியை உருவாக்கிக் கொண்டது என்பதை நேரடியாக எடுத்துரைக்கிறது. 

அதோடு, இந்தக் கூட்டணி எப்படி எதிர்விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் அவர் பதிவு செய்கிறார். “உழைக்கும் குடிகள் நிலத்தில் சேர்ந்து உழைப்பவர்கள். கலப்பை அடித்துக் கொடுப்பவருக்கும் உழுபவருக்கும் தொழில் பேதம் ஏற்பட்டு பகை உண்டாகும். நீ பெரியவன், நான் பெரியவன் எனச் சண்டை உண்டாகும். திருவிழாக்களில் மோதல் வெடிக்கும். விக்கிரகங்களுக்கு முன்னால் வெங்கலக் கலசம், வெள்ளைக்குடை பிடித்து யார் போவது என்று சண்டை எழும். மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் சீமைகளிலே இந்தக் காரணங்களால் அடிக்கடி பலத்த சண்டைகள் உண்டாகி, கொலைகளும் நடந்திருக்கின்றன. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு (நூல்  எழுதப்பட்டது 1798-ம் ஆண்டு) சிவகங்கைச் சீமை கண்டதேவி கிராமத்தில் 16 கொலைகள் நிகழ்ந்தன. கண்டதேவிக் கொலைகளுக்குப் பிறகு, குடை பிடிக்க கோர்ட் தடைவிதித்தது.” எனச் சுவடியில் சாதி அணிதிரட்டல்களின் பின்னணியில் அதிகாரம் இருந்ததையும் வலங்கை இடங்கை மோதலின் அன்றைய களநிலவரத்தையும் விவரிக்கிறார். இவை அனைத்தையும் கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்த ஸ்காட்லாந்த் இராணுவ அதிகாரி மெக்கன்ஸி சுவடிகளாகச் சேகரித்து அளித்திருக்கிறார். 

சுவடியில் கடைசியாக வலங்கைச் சாதிகள் 98 இடங்கை சாதிகள் 98 எனப் 196 சாதிகளைப் பட்டியலிடப் பட்டிருக்கிறது. அவற்றில் இடங்கையில் மூன்றும் வலங்கையில் ஒன்றுமாக நான்கு சாதிகளின் பெயர்கள் தெளிவாக இல்லை. பிற்சேர்க்கையாக ஒவ்வொரு சாதியின் குலக்குறி அடையாளங்கள் இடம்பெறுகின்றன.

பள்ளர்க்கு நெல்லித்தாரும் நண்டுக்கொடியும், அருந்ததியருக்கு தென்னஞ்சோலையும் வீரக்கத்தியும், கள்ளருக்கு கிச்சிலிக் கொடியும் வேங்கைத் தாரும் குறவருக்கு கொஞ்சித் தாரும் சொக்கத்தடியும், இருளருக்கு எருக்கம் மாலையும் குற்று பற்றமும், குளுவருக்கு கழுதைக் கொடியும் குடுவையும் கண்ணியும், வண்ணாருக்கு புலிக்கொடியும் அல்லித்தாருமென  நூற்றுச் சொச்சம் சாதிகளின் குலக்குறி அடையாளங்கள்   தொகுத்தளிக்கப் பட்டிருக்கின்றன. 

உரிமைகளும் கலகக்குரலும்!

நான்காவதான ‘புதுச்சேரி இடங்கை வலங்கை வரலாறு’ சுவடி இடங்கைச் சாதியரான கம்மாளர், 17-18ம் நூற்றாண்டுகளில் தங்களுடைய சாதியரின் திருமணச் சடங்கு உரிமை மறுக்கப்பட்டதற்காக கலகக்குரல் எழுப்பியதைப் பதிவு செய்கிறது. “தங்கள் சாதியினரான பெண், மாப்பிள்ளை இருவரும் பட்டண பிரவேசம் வந்தாலொழிய நாங்கள் பட்டணத்தில் ஒரு வேலையும் செய்ய மாட்டோம் என்று குடிவாங்கி, மேற்கே பத்து நாழிகை வழிக்கப்புறம் பட்டிக்காடுகளிலே போய்க் குடியிருந்தார்கள்” எனக் கம்மாளர்கள் ஊரை விட்டு வெளியேறிச் சென்று குடிபெயர்ந்த நிகழ்வும் வேறு சில வழக்குகளும் இந்தச் சுவடியில் இடம்பெறுகிறது.

இந்த தரவுகளைக் கொண்டு அணுகும்போது, சாதிக் குழுக்களுக்கு என சில பண்பாட்டுப் பழக்கங்கள் மரபுரீதியாக புழக்கத்திலிருந்திருக்கின்றன. அவற்றின் உருவாக்கங்களைப் புராணங்களோடு ஒருங்கிணைத்துக் கொடுக்கும் நிகழ்வு பெரும்பாலும் அந்நிய அரசாட்சிகளின் காலத்திலேயே ஏற்பட்டிருக்கிறது. சாதிக் குழுக்கள் தங்களின் ‘சொந்த வரலாறு’ என்று நம்பும் புனைவுகளின் மூலமாக அனுகூலங்களையும் சமூகத்தில் உயர் அந்தஸ்தையும் பெற்றிருக்கின்றன. அவற்றை உருவாக்கியளித்த அல்லது வடமொழி ஆக்கங்களிலிருந்து திரட்டி அளித்தவர்களுக்குப் பலாபலன்கள் வாய்த்திருக்கின்றன. 

சொந்த நலன்களைத் தற்காத்துக்கொள்ள சாதிகளின் கூட்டணிகளை அமைத்தபோதும் அந்தப் புனைவில் ஒருவித இழிவைச் சுமத்த புனைகதை உருவாக்குநர்கள் தயங்கவில்லை. உழைக்கும் மக்களின்மீது நிகழ்த்தப்பட்ட சுரண்டல் அவர்கள் பிறப்பு குறித்த புனைவின் அடிப்படையில் நியாயப்படுத்தப் பட்டிருக்கிறது. மெக்கன்ஸியின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது ‘இவை சமூகத்திலிருக்கும் நம்பகங்கள்… அதனால்தான் இந்த மோதல்கள்… எனவே நம்பகங்கள் உண்மையானவையாக இருக்கக்கூடும்’ என்று வழங்கப்படுகிற பதிலே இன்றளவும் சமூகத்தில் சாதி தொழிற்படுவதற்கு ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது.

நிலைபெற்றவை எல்லாம் தொடக்கத்திலிருந்தே மாற்றமில்லாமல் இயங்குகின்றன எனும் நம்பிக்கை அல்லது நம்பிக்கைத் திணிப்பே இத்தகைய பதில்களில் தெரிகிறது. நூற்றாண்டுகள் கடந்தும் அது அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதில்லை. மதம் அல்லது சாதி சார் அடிப்படைவாதத்தினால் அவை காப்பாற்றப்படுகிறது. பண்பாட்டின் ஆணி வேரின் மேல் நிற்கும் சல்லி வேர்களே நல்லதும் கெட்டதுமான பழக்க வழக்கங்கள். ஆணி வேரை நாம் அணுகக்கூடாது என்றே சல்லி வேர்கள் போராடுகின்றன. புனைவெனும் ஆணி வேரை அசைத்துவிட்டால் இவை அனைத்தும் ஆட்டம் கண்டுவிடும். நம்முடைய பரிசீலனைகள் என்னவாக இருக்கப்போகின்றன என்பதை ஒரு கேள்வியாக முன்வைக்கிறேன்.

கார்த்திக் புகழேந்தி

எழுத்தாளர், பத்திரிகையாளர். நாட்டுப்புறவியல்,நெல்லைத் தமிழ் ஆய்வு, சங்க இலக்கியம், கல்வெட்டு வாசிப்பு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். முதன்மையாக சிறுகதை எழுத்தாளராக புகழ்பெற்றிருக்கிறார். தமிழ் விக்கியில்

2 Comments

  1. மிக விரிவான தெளிவான கட்டுரை. மேலும் படித்து புரிந்து கொள்ள நூல்கள் இருந்தால் பரிந்துரைக்கவும்.

உரையாடலுக்கு

Your email address will not be published.