குறுங்கதைகள் : சுரேஷ்குமார இந்திரஜித்

செத்த எலி போல நாறுகிறது தர்மம்

“அத்தான் எங்க அம்மா இன்னைக்கி போன் பண்ணினாங்க. என்னை எல்லோரும் ஏத்துக்கிட்டாங்களாம். வர்ற ஞாயித்துக்கிழமை குழந்தைகளையும் உங்களையும் கூட்டிட்டு வரச் சொல்றாங்க. அப்பா மனசு மாறியிருச்சுன்னு அம்மா சொல்றாங்க.” என்று சந்தோஷமாகக் கூறினாள் வைதேகி.

“உண்மை சொல்றாங்களா. இல்லை கூப்பிட்டு ஏதாவது பண்ணப் போறாங்களா” என்றான் முத்து.

“ச்சே அப்படியெல்லாம் இருக்காது. ஆறு வருஷமாச்சு. ஒரு மிரட்டல் இருந்துச்சா. வீட்லே ஒத்துக்கலை. ஓடிவந்துட்டோம். குழந்தையும் ஆயிருச்சு. அவுங்ககளுக்குப் பேத்தியைப் பாக்கணும்னு ஆசை இருக்காதா.”

“வாழ்க்கை நல்லாப் போய்க்கிட்டிருக்கு. போயி ஏதும் வாக்குவாதம் வந்து குழம்பியிருக்கக் கூடாதுன்னு யோசிக்கறேன்.”

“ஒருநாள் டைம் எடுத்து யோசிங்க. வர்ற ஞாயித்துக்கிழமைதான். நாளிருக்கு. எனக்கு அம்மா, அப்பா, தம்பி, எல்லாத்தையும் பாக்கணும்னு ஆசையா இருக்கு.”

“ஏதாவது சூழ்ச்சி இருக்கப்போகுது.”

“ஆறு வருஷமாச்சு. வெறுப்பு அப்படியேவா இருக்கும். மாறியிருக்கும். போயி ஒண்ணு சேந்துருவோம்.”

முத்து வெளியே சென்றுவிட்டான். வைதேகிக்குப் பதற்றமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு, அப்பாவுக்கு, தம்பிக்கு என்ன வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும் என்று யோசித்தாள்.

வைதேகி வீட்டைவிட்டு வெளியேறி வந்தபோது தம்பி ரங்கன் பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்தான். வெளியிடங்களுக்குச் செல்லும்போது அவளுக்குத் துணையாகத் தம்பிதான் வருவான். அவனோடு சேர்ந்து மாங்காய் பறித்துத் தின்றிருக்கிறாள். அம்மாவுடன் இருந்த பொழுதுகளை நினைத்துக்கொண்டாள். அப்பா எப்போதும் சற்று விலகியே இருப்பார். அவளுடைய காதல் விஷயம் கேள்விப்பட்டபின் அவர் குணம் மூர்க்கமாக மாறிவிட்டது. கன்னங்களிலும் முதுகிலும் மாறிமாறி அடித்தது நினைவுக்கு வந்தது. அப்பாவிற்கும் அவள் வருவதில் விருப்பம் உள்ளது என்று அம்மா போனில் கூறியிருந்தாள்.

முத்து கவலையுடன் இருந்தான். வைதேகியின் பெற்றோர் வீட்டுக்குச் செல்வதில் விருப்பமே இல்லை. அவளையும் மகனையும் போகச் சொல்லலாம் என்றால் வைதேகி கேட்கமாட்டேன் என்கிறாள்.

முத்துவுடன் வைதேகி ஜவுளிக்கடைக்குச் சென்று அப்பாவுக்கு வேட்டி, சட்டைத் துணி, அம்மாவுக்குச் சேலை, தம்பிக்கு பேண்ட், சட்டைத் துணி எடுத்தாள். பெற்றோர் வீட்டுக்குக் கொண்டுசெல்ல அதிரசம், முறுக்கு செய்தாள்.

பஸ்ஸில் செல்லும்போது அவள் வீட்டிற்குச் செல்வதை பலவகையாகக் கற்பனை செய்தாள். முத்து தேவையில்லாமல் சஞ்சலத்துடன் இருப்பதாக அவள் நினைத்தாள்.

பஸ் ஊரை அடைந்தது. ஆட்டோ பிடித்து வீட்டை அடைந்தார்கள். அம்மா, அப்பா, தம்பி இருந்தார்கள். அம்மா கட்டியணைத்துக்கொண்டாள். அம்மாவும் அப்பாவும் முத்துவை “வாங்க மாப்பிள்ளை” என்றார்கள். முத்து சிரித்துக்கொண்டே வீட்டிற்குள் வைதேகியுடன் சென்றான். வைதேகி குழந்தையை இடுப்பில் வைத்திருந்தாள். குழந்தையை அம்மா வாங்கிக்கொண்டாள். ஹாலில் உள்ள சோபா நாற்காலிகளில் அப்பா, தம்பி, முத்து, அம்மா, வைதேகி உட்கார்ந்தார்கள்.

அப்பா வாசற்கதவைச் சாத்தினார். அம்மா குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு வைதேகியை அறைக்குள் அழைத்துச் சென்றாள். அதே சமயம் வைதேகியின் தம்பி நாற்காலியில் உட்கார்ந்திருந்த முத்துவின் தலையில் அரிவாளால் முதலில் வெட்டினான். பின்னர் உடலின் பல இடங்களில் வெட்டினான். முத்து கொலையுண்டு இறந்தான். அம்மா குழந்தையைத் தரையில் விட்டுவிட்டு வைதேகியைக் கெட்டியாகப் பிடித்திருந்தாள்.

***

மாதுளம் பழங்கள்

பிரபாவதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அழைப்புமணிச் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்து பார்த்தால், அங்கு ஆனந்தகுமார் நிற்கிறான். அவனை அவள் எதிர்பார்க்கவில்லை. பதற்றம் ஏற்பட்டது. உள்ளே வரச்சொல்லி உட்காரச் சொன்னாள். அடுத்த ஹாலுக்குச் சென்றாள். நெஞ்சைப் பிடித்துக்கொண்டாள். பின் சுதாரித்து அடுக்களைக்குச் சென்று தம்ளரில் தண்ணீர் எடுத்துவந்து அவனிடம் கொடுத்தாள்.

“உன்னைப் பாக்கணும் போல இருந்துச்சு. தள்ளிப் போட்டுக்கிட்டே இருந்தேன். தாங்க முடியலை. அதான் வந்துட்டேன்.”

“வீட்டுக்காரர் சாப்பாட்டுக்கு வர்ற நேரம். நீங்க கிளம்பியிருங்க.”

“இந்தப் பழங்களை வாங்கிக்க” என்று பழங்களைக் கொடுத்தான்.

“என்னைச் சிக்கல்லே மாட்டிவிட்றாதிங்க. கிளம்புங்க. பழங்களையும் கொண்டு போயிருங்க.”

வாசலில் இருசக்கர வாகனம் நிற்கும் ஓசை கேட்டது. அவள் வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்தாள். அவளின் கணவன் சரவணன் வாகனத்தை நிறுத்திவிட்டு வந்தான். வீட்டிற்குள் நுழைந்ததும் உட்கார்ந்திருந்த ஆனந்தகுமாரைப் பார்த்து, “எப்ப வந்தீங்க” என்று கேட்டான்.

“இப்பதான் அஞ்சு நிமிஷம்கூட இருக்காது.”

சரவணன் இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்தான்.

“இப்ப எந்த ஊர்லே வேலை பாக்குறீங்க” என்றான் சரவணன்.

“நாமக்கல்லே வேலை பாக்கறேன்.”

“வேலையெல்லாம் எப்படி போயிக்கிட்டிருக்கு.”

“ஏதோ போய்க்கிட்டிருக்கு.”

“என்ன சாப்பிடறீங்க.”

“இப்பதான் தண்ணி சாப்பிட்டேன்.”

“மோராவது சாப்பிடுங்க. பிரபாவதி மோர் கொண்டுவா.”

அவள் அடுக்களைக்குச் சென்றாள். ‘எனக்கு காலேஜ்லே படிக்கிற பொண்ணு இருக்கு. இன்னும் என்னை நெனைச்சுக்கிட்டு இருக்காரா. எனக்கு அவர் நினைவே இல்லை’ என்று நினைத்துக்கொண்டாள் பிரபாவதி.

மோர் தம்ளரை அவனிடம் கொடுத்தாள். அவன் பிரபாவதியைப் பார்த்துக்கொண்டே மோரைக் குடித்தான்.

சரவணனுக்கும் ஆனந்தகுமாருக்கும் பேசுவதற்கு ஒன்றுமில்லை. பிரபாவதியைக் காட்டி, “இவளோட அண்ணனைப் பாத்திட்டீங்களா” என்றான் சரவணன்.

“இல்லை. இனிமேதான் பாக்கணும். இங்க வந்துட்டு பிறகு அவரைப் பாக்கலாம்னு நெனைச்சேன்.”

“சாப்பாட்டு நேரமா இருக்கே” என்றான் சரவணன்.

“எனக்கு மூணு மணிக்குச் சாப்பிட்டுத்தான் பழக்கம்” என்றான் ஆனந்தகுமார்.

பிரபாவதி சுவரில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தாள்.

“சரி. நான் கிளம்பறேன்” என்றான் ஆனந்தகுமார்.

ஏதோ நினைவுகளில் இருந்த பிரபாவதி அவன் குரல் கேட்டுத் திடுக்கிட்டவளாக அவனைப் பார்த்தாள். அவன் வெளியே சென்று அங்கு காத்திருந்த ஆட்டோவில் சென்றுவிட்டான்.

சரவணன் ஆடைகளை மாற்றிக்கொண்டு வந்தான். “சாப்பிடலாம்” என்றான். அவனுக்கு அவள் சாப்பாடு பரிமாறினாள். இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

சாப்பிட்டுவிட்டு சற்றுநேரம் காலையில் படிக்காதிருந்த தினசரி பேப்பரைப் படித்தான். பின் ஆடைகளை மாற்றிக்கொண்டு, “ஆபிஸ் போய்ட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

பிரபாவதி படுக்கையில் படுத்தாள். சற்றுநேரத்திலேயே தூங்கிவிட்டாள். சரவணனிடம் ஆனந்தகுமார் கொடுத்த மாதுளம் பழங்கள் சாப்பாட்டு மேசையில் இருந்தன.

***

மதுமதி

நான் மதுமதியின் திருமணத்திற்குப் போயிருந்தேன். அப்போது மன அழுத்தத்தில் இருந்தேன். மனம் முழுக்க அவள் நினைவாகவே இருந்தது. மதுமதி மணப்பெண். நான் ஒரு ஹேண்ட் பேக் வாங்கிப் போயிருந்தேன். அதைப் பரிசாகக் கொடுத்துவிட்டு வந்தேன்.

இப்போது மதுமதியின் மகள் திருமணத்திற்கு வந்திருக்கிறேன். அவளைக் காண்பதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படியும் அவள் என் கண்களில் தென்பட்டாள். அவளுக்குப் பள்ளியில் படிக்கும்போதே திருமணமாகி அடுத்த வருடமே மகளும் பிறந்துவிட்டதால் அவளுக்கு இப்போது வயது அதிகமாக ஆகிவிடவில்லை. அவள் தனியாக நடந்துவரும் காட்சி என் மனதில் பதிந்துவிட்டது.

என் அம்மாவிடம் இங்கிருந்து பக்கத்து ஊரிலிருக்கும் அலுவலகத்திற்கு நான் சென்றுவிடுவதாகக் கூறியிருந்தேன். அவர் இந்தத் திருமணக் கூட்டத்தில் எங்கே இருக்கிறார் என்பதைக் காணமுடியவில்லை.

மதுமதி அங்கும் இங்குமாக அலைந்துகொண்டிருந்தாள். நான் வெளியே செல்வதற்கு எழுந்து நடந்தபோது என் எதிரே மதுமதி வந்துவிட்டாள். அவள் மெதுவாக, “நல்லாயிருக்கீங்களா” என்றாள். நான் தலையாட்டினேன்.

முட்டாளும் அவளை மறக்கமுடியாதவனுமாகிய நான் அவள் தலையில் அடித்துக்கொண்டு செல்வதைக் கண்டேன்.

***

சுரேஷ்குமார இந்திரஜித்

சுரேஷ்குமார இந்திரஜித்  தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதி வருகிறார். ஆண் பெண் உறவுகளின் சிக்கல்கள், காமம், சமூக அவலங்கள் குறித்த கதைக்களங்களில் எழுதி வருபவர்.

தமிழ் விக்கியில்


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

4 Comments உரையாடலுக்கு

  1. “அம்மா குழந்தையைத் தரையில் விட்டுவிட்டு வைதேகியைக் கெட்டியாகப் பிடித்திருந்தாள்.”- விதிர்த்துப்போய் அம்ர்ந்திருந்தேன்; குறுங்கதையின் இறுதிப்பத்தியின் இறுதிவரியே கதை.

  2. குறுங்கதை : சுரேஷ்குமார இந்திரஜித்
    தலைப்பு : செத்த எலி போல நாறுகிறது தர்மம் …

    இக்கதை பற்றி என்னுள் ஏற்பட்ட எண்ணங்கள் :

    நல்லா போய்க்கிட்டு இருக்கிற கலப்புத்திருமண காதல் தம்பதிகளின் வாழ்க்கையை, பல ஆண்டுகளானாலும் தீராத வஞ்சத்தோடு இருக்கும் பெற்றோர் பாச வலையோடு அழைப்பதும், அதை நம்பி செல்லும் காதல் தம்பதி படுகொலையாகும் செய்திகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன். அதை வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டுன்னு நச்சுன்னு எழுதின சிறந்த கதையை, அதுவும் குறுங்கதை வடிவில் இப்பத்தான் படிக்கிறேன்.

    இக்கதையில் சாதி என்கிற வார்த்தை பிரயோகமே இல்லாவிட்டாலும், சுய சாதி பெருமிதம், பிற சாதி துவேஷம் இருக்கிற சமூகத்தில், மறுக்கப்படுகிற பல காதல்களில் நடந்த, நடந்து கொண்டிருக்கிற ஆணவக்கொலையை ஆவணப்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர். அபாரமான பதிவு.

    ‘செத்த எலி போல நாறுகிறது சாதி’ என்று தான் எனக்கு சொல்லத் தோன்றுகிறது.

    இக்குறுங்கதையை படிக்கையில், என்னுள்ளும் மகிழ்ச்சி, பதற்றம், கவலை, , சஞ்சலம் ஏற்பட்டுக்கொண்டே வந்தது. கதையின் இறுதியில் நானே வெட்டுப்பட்டது போல் திடுக்கிட்டேன். கொடூரமான ஒரு காட்சியை இறுதி பாரா வடிமைத்திருக்கிறது. ஒரு நாவல் ஏற்படுத்துகிற தாக்கத்தை விட, இக் குறுங்கதை ஏற்படுத்திய தாக்கம் பெரிது.

    அடுத்த கதைகளுக்கு செல்ல முடியாத வேதனை. என்னை ஆசுவாசப்படுத்திய பின் அடுத்த கதைகளுக்கு செல்வேன்.

    – கருணாகரன் A.

  3. ‘மாதுளம் பழங்கள்’, ‘மதுமதி’ ஆகிய குறுங்கதைகள் பற்றி சுருக்கமாக சொல்வதென்றால் …

    காலம் கடந்த வயதிலும் ஒருவனின் மனைவி, தன்னை விரும்பிய காதலன் தன் வீட்டிற்கு வரும்போது பதற்றத்திற்கு ஆளாக வேண்டிய சூழ்நிலையை பதிவிட்டுள்ளது ‘மாதுளம் பழங்கள்’ எனும் குறுங்கதை.

    காலம் கடந்த வயதிலும் பழைய காலத்திலிருந்து தன்னைப் பின் தொடர்ந்து கொண்டிருப்பவனைப்
    பார்த்து ஒரு பெண்
    தலையிலடித்துக்கொண்டு கடந்து செல்வதையும் அவளை மறக்க முடியாத அவன் தன்னை, தனக்குத் தானே முட்டாள் என்று சொல்லிக் கொள்வதையும் பதிவிட்டுள்ளது ‘மதுமதி’ எனும் குறுங்கதை.

    காதலோடு எப்போதோ விளையாடியது போதும். நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள், என்று தலையில் அடித்துச் சொல்கிறார் எழுத்தாளர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss