சிறிய நீர்த்தொட்டி- சுரேஷ்குமார இந்திரஜித்

நான் என்னுடன் படித்த ஜெயராமனின் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். வெகுகாலத்திற்குப் பின் ரயிலில் அவனைச் சந்தித்தேன். சென்னையிலிருந்து புறப்பட்டிருந்த ரயிலில் நான் மதுரைக்குச் சென்றுகொண்டிருந்தேன். அவன் திருநெல்வேலிக்குச் சென்றுகொண்டிருந்தான். என்னை அவன் அடையாளம் கண்டு பேசிய பின்னரே என்னால் அவனை அடையாளம் காண முடிந்தது.

இருவரும் குடும்ப நிலைமைகளைப்பற்றிப் பேசிக்கொண்டோம். எனக்குக் குடும்பம் பற்றிச் சொல்லப் பெரிதாக ஏதுமில்லை. ஒரு பையன் திருமணமாகி குடும்பத்துடன் ஜெர்மனியிலும் இன்னொரு மகன் திருமணமாகி குடும்பத்துடன் லண்டனிலும் இருப்பதாகக் கூறினேன். நான் மனைவியுடன் மதுரையில் வசிக்கிறேன் என்பதையும் பேரக்குழந்தைகள் விவரங்களையும் கூறினேன். அவனுடைய குடும்ப நிலைமை சோகமாக இருந்தது. சக பயணிகள் கேட்பார்கள் என்பதற்காக என்னைக் குளிர்சாதன கோச்சின் வாசல் பகுதிக்கு அழைத்துச் சென்று சொன்னான்.

“என் மனைவி நாப்பது வயசிலே இறந்துட்டாங்க. ஒரு பெண். ஒரு பையன். எனக்கு அப்ப வேலை ஒரு தனியார் நிறுவனத்துலே. லிமிட்டான சம்பளம். யோசிச்சுப் பாரு. சாப்பிடனும். டிரஸ் வாங்கணும். உடம்பு சரியில்லைன்னா செலவு பண்ணணும். வீடு பூர்வீக வீடா இருந்ததினாலே வீட்டு வாடகை மிச்சம். சைக்கிளிலே ஆபிஸ் போவேன். பையன் படிக்கறப்பவே வீடுகளுக்கு பேப்பர் போடுவான். காலையிலே அஞ்சு மணிக்கு வேலைக்குப் போவான். ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்துருவான். ஒரே சைக்கிள்தான். அந்த சைக்கிளை எங்கிட்டே கொடுத்துட்டு, குளிச்சி, சாப்பிட்டுட்டு ஸ்கூலுக்குப் போவான். மகளின் துணையோடு காலைக்கும் மதியத்துக்கும் சமைத்துவிடுவோம். மகளும் ஸ்கூலுக்குப் போயிடுவா.

“மகளை காலேஜுக்கு அனுப்பிப் படிக்க வைக்க முடியலை. பையனை மட்டும் டிகிரி படிக்க வைச்சேன். மகள் டெய்லரிங் படிச்சா. தையல் மெஷின் வாங்கினேன். தெருக்காரங்க தைக்கக்கொடுப்பாங்க. அவளுக்குன்னு நான் செலவுக்குக் காசு கொடுக்கறதில்லை. அவள் தன்னோட செலவுக்கு வருமானத்தை வைச்சுக்குவா. பையன் காலேஜுக்குப் போன பிறகும் வீடுகளுக்குப் பேப்பர் போட்டுக்கிட்டு இருந்தான். அந்த வீடுகள்ளே அவன் கூடப் படிக்கிற பையன்கள் சிலர் இருந்திருக்காங்க. ஒரு பையன் இவன் பேப்பர் போட்டதைப் பாத்துட்டான். மகன் அவமானம் தாங்க முடியாம அழுதான். வேறென்ன செய்யறது. கிளாஸ் பூரா பரவியிருமேன்னு அவனுக்குக் கவலை. மானத்தைப் பாத்தா வாழமுடியுமா. அவனுக்குன்னு ஒரு சைக்கிள் வாங்கிட்டோம். சர்வீஸ் கமிஷன் பரிட்சை எழுதி பாஸ் பண்ணினான். குமாஸ்தா வேலை. ஊரக வளர்ச்சித்துறையிலே. அவனுக்கு இன்னும் கல்யாணமாகலை. பெண்ணுக்கு எப்படியோ கல்யாணம் பண்ணிட்டோம். என் மனைவி நகைகளை வைச்சு, சிம்பிளா முடிச்சிக்கிட்டோம். மாப்பிள்ளை பியூனா வேலை பாக்கறாரு. ஏதோ ஓடுது. மகன் எங்கூடத்தான் இருந்தான். இப்ப நாகர்கோயிலுக்கு மாத்திட்டாங்க. நான் மட்டும் தனியா இருக்கேன். அவனுக்கு ஒரு பெண்ணைப்பாத்து கல்யாணம் பண்ணணும். இப்ப டோனோவூர் பெல்லோஷிப் ஆபிஸ்லே வேலை பாக்கறேன். அவுங்க சொல்ற வேலையைச் செய்வேன். ஏதோ வாழ்க்கை ஓடுது” என்றான்.

திரும்பவும் கோச்சில் உட்கார்ந்திருந்த இருக்கைகளுக்கு வந்தோம். நான் ஜன்னல் வழியாகக் கடந்துகொண்டிருக்கும் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் மதுரையில் ரயிலிருந்து இறங்கிவிட்டேன்.

2

எனக்கு நாகர்கோயிலில் ஒரு திருமணத்தில் கலந்துகொள்ளவேண்டிய நிலை. மதுரையிலிருந்து காரில் சென்று திரும்ப ஏற்பாடு செய்திருந்தேன். வழியில் திருநெல்வேலியில் ஜெயராமனைப் பார்க்கத் திட்டமிட்டிருந்தேன். சந்திக்கும் நாள் ஞாயிறு என்பதால் அவனுக்கும் வசதியாக இருந்தது.

சொன்ன நேரத்தில் அவன் வீட்டை அடைந்துவிட்டேன். சிறிய வீடு. வாசலில் திண்ணைகள் இருந்தன. சின்ன ஹால். ஒரு ரூம். பின் அடுப்படி. என்னை ஜெயராமன் வரவேற்றான். மகன் இந்த ஞாயிறு வீட்டிற்கு வரவில்லை என்றான். எனக்குக் காபி தயாரித்துக் கொடுத்தான். சிறு தட்டில் சீடைகள் வைத்திருந்தான். சுவரில் மாட்டப்பட்டிருந்த படங்களைப் பார்த்தேன். அவனுடைய தாய், தந்தை, மனைவி, மகள் திருமண போட்டோக்கள் இருந்தன. மகன் அம்மாவுடன் இருக்கும் போட்டோ தனியே ஒரு சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அருகில் இரண்டு படங்கள் வித்தியாசமாக இருந்தன. ஒரு ஐரோப்பியப் பெண் இரண்டு இந்தியக் குழந்தைகளுடன் இருக்கும் படம் ஒன்று, இன்னொரு படம் அதே ஐரோப்பியப் பெண் கருப்பு நிறம் பூசி, ஒரு இந்தியக் குழந்தையை அணைத்திருக்கும் படம்.

“இவர் யார்” என்று அவனிடம் கேட்டேன்.

“இவர் பெயர் ஏமிகார் மைக்கேல். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். மிஷனரி வேலைக்காகத் திருநெல்வேலி வந்து பண்ணைவிளை என்ற இடத்தில் சேவை செய்துகொண்டிருந்த ஏமியிடம் லட்சுமின்னு பெயர் உள்ள சிறுமி அடைக்கலமாகுறா. அந்தச் சிறுமி பெருங்குளம் கோயிலில் தேவதாசியாக அர்ப்பணிக்கப்பட்டவ. அங்கிருந்து அவள் தப்பி வருகிறாள். அவளைக் கண்டுபிடித்து கோயிலில் சேர்த்து காலில் சூடு வைத்துவிடுகிறார்கள். அந்தச் சிறுமி மீண்டும் தப்பித்துத்தான் ஏமியிடம் அடைக்கலமாகியிருக்கா. அந்தச் சிறுமியை ஏமி ஏற்றுக்கொள்கிறார். ப்ரீனா என்று அந்தச் சிறுமியின் பெயரை மாற்றுகிறார். அப்போதுதான் கடவுளுக்குச் சிறுமிகளை அர்ப்பணம் செய்யும் பழக்கம் இருப்பதை ஏமி அறிகிறார். பெண் குழந்தைகளையும் சிறுமிகளையும் மீட்டெடுத்துப் பராமரிப்பதைச் செய்கிறார். ஏமியிடம் லட்சுமி வந்த ஆண்டு 1901. இந்தியர்களுக்குத் தன் நிறம் ஒவ்வாமையை ஏற்படுத்தறதை உணர்ந்த ஏமி, ஆடைகளுக்கு வெளியே தெரியும் உடல் பகுதிகளை காப்பித்தூளைப் பூசிக் கருப்பாக்கி கொள்கிறார். பெண் குழந்தைகளைத் தத்துக்கொடுப்பதும் அவற்றைத் தேவதாசிப் பெண்கள் பெற்றுத் தாங்கள் சம்பாதிப்பதற்காகக் கோயிலில் ஒப்படைப்பதும் வழக்கமா இருந்தது. அத்தகைய இடங்களுக்கு ஏமி சென்று பணம் கொடுத்து அவர்களைத் தத்து எடுத்துக்கொள்கிறார். 1901ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த மீட்டெடுப்பு பெருகியது. தாய்ப்பால் குழந்தைகளுக்குக் கிடைக்காத நிலையில் தாய்ப்பாலுக்காக ஏமி அலைந்தார். பணம் கொடுத்து வாங்கினார். ஒரு விதவையைச் சாக்குப்பையில் கட்டி வைத்திருப்பதை ஏமி பார்க்கிறார். ஆதரவற்ற பெண்களையும் விதவைகளையும் தன் சேவாலயத்தில் சேர்த்துக்கொள்கிறார். இடையில் திருநெல்வேலியிலிருந்து பதினான்கு கிலோமீட்டர் தொலைவிலே இடம் வாங்கி டோனாவூர் என்று பெயர் வைச்சு அங்குதான் அனைவரையும் பராமரிக்கிறார். வெளியூர்களுக்கெல்லாம் சென்று பெண் குழந்தையை மீட்டுக்கொண்டு வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கைவிடப்பட்ட ஆண் குழந்தைகளையும் பராமரிக்க ஆரம்பித்தார். அவர் 1951ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அந்த இடத்திலே ஸ்கூலு, ஆஸ்பத்திரி, தங்குமிடம், விவசாயம் இப்படி எல்லாம் நடக்குது. ஏமிசாகப் போறப்ப, “என்னைப் புதைச்ச இடத்திலே கல்லறை கட்டக் கூடாது. சிறிய நீர்த்தொட்டி அமைக்கணும். பறவைகள் அங்கு வந்து நீர் அருந்தணும்” என்று சொல்லியிருக்கார். அதனாலே அவரைப் புதைச்ச இடத்திலே சிறிய நீர்த்தொட்டி அமைச்சிருக்காங்க. பறவைகள் வந்து நீர் அருந்துகின்றன. அதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்கியிருக்காங்க. அந்த லேடி உருவாக்குன டோனாவூர்லேதான் நான் இப்ப வேலை பாக்கறேன்” என்றான்.

நான் இதுவரை கேள்விப்படாத விஷயங்களாக இவை இருந்தன. கல்லறைக்குப் பதிலாகப் பறவைகள் நீர் அருந்தும் சிறிய நீர்த்தொட்டி என்ற படிமம் எனக்கு அற்புதமானதாகத் தோன்றியது.

வாசலில் யாரோ இருவர் இருசக்கர வாகனத்தில் இறங்கினார்கள். அவர்களைப் பார்த்ததும் ஜெயராமனின் முகம் மாறியது. “இரு வந்துர்றேன்” என்று சொல்லி வீட்டிலிருந்து சென்று திண்ணையில் உட்கார்ந்து அவர்களுடன் பேசினான். அவர்கள் உரத்த குரலில் பேசினார்கள். கடன் விவகாரம் என்று எனக்குத் தெரிந்தது. நான் அந்த இடத்திற்குச் சென்றேன். ஜெயராமன் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறான். கொடுக்க முடியவில்லை. கேட்டு வந்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் பேசினேன். அவர்கள் கடுமையாகப் பேசினார்கள். வீட்டிலுள்ள பொருட்களை எடுத்துச் சென்றுவிடுவதாகப் பேசினார்கள்.

நான் ஜெயராமனின் ஜிபே இருக்கிறதா என்று கேட்டேன். அவன் ஒரு டப்பா போன்தான் என்னிடம் இருக்கிறது என்றான். நான் அவர்களிடம், “நீங்கள் சொல்லும் எண்ணுக்கு நான் ஜிபே செய்கிறேன். வரவு வைத்துக்கொள்ளுங்கள். பின்னால் பிரச்சினை செய்யக் கூடாது” என்றேன். அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் சொன்ன தொகையை அவர்கள் சொன்ன எண்ணுக்கு ஜிபே சேய்தேன். அவர்கள் நன்றி சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

நானும் ஜெயராமனும் வீட்டுக்குள் வந்தோம். “என் பையன் இப்பத்தான் வேலைக்குப் போயிருக்கான். என் மகள் கல்யாணத்துக்கு வாங்கிய கடன். கொஞ்சம் கொஞ்சமா கொடுத்துடறேன்” என்றான்.

“வேண்டாம். உன் மகள் கல்யாணத்துக்கு நான் செய்த மொய்யாக இருக்கட்டும்” என்றேன்.

“நான் புறப்படும் நேரம் வந்துவிட்டது. நான் அடுத்தமுறை திருநெல்வேலி வரும்போது டோனாவூரில் உன்னைப் பார்க்கிறேன். எனக்கு அந்தப் பறவைகள் நீர் அருந்தும் நீர்த்தொட்டியைப் பார்க்க வேண்டும்” என்றேன்.

அவன் “சரி” என்றான். நான் காரை நோக்கிச் சென்றேன்.

௦௦௦

சுரேஷ்குமார இந்திரஜித்

சுரேஷ்குமார இந்திரஜித்  தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதி வருகிறார். ஆண் பெண் உறவுகளின் சிக்கல்கள், காமம், சமூக அவலங்கள் குறித்த கதைக்களங்களில் எழுதி வருபவர்.

தமிழ் விக்கியில்


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

2 Comments உரையாடலுக்கு

  1. நீண்ட காலத்திற்குப்பின் நண்பனை சந்தித்து பிரியும்போது சாதாரணமாக கடந்து செல்வதும், மீண்டும் சந்திக்கையில் பெரிய உதவிகள் செய்தாலும், சாதாரணமாக விடைபெற்று செல்வதும், உணர்ச்சிகளையும், கிளர்ச்சிகளையும் வெளிப்படுத்த இயலாத சில மனிதர்களின் சுபாவமாக இருக்கிறது. அது மேம்பட்ட மனதாக இருக்கிறது. அதை நாம் இக்கதையின் நாயகனில் காண்கிறோம். எவ்வகைப்பட்ட பேரன்பை பெரும் அமைதியோடு வெளிப்படுத்தியுள்ளார் சுரேஷ்குமார இந்திரஜித். மௌனத்தை உணர வைக்கும் உன்னத கதை இது.
    எளிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை மூடப் பழக்கங்களில் இருந்து காப்பாற்றி பராமரிப்பது முக்கியமான தர்மச் செயல். அதை 1901 ஆம் ஆண்டே ஏமி கார் மைக்கேல் செய்திருக்கிறார்.
    அவரைப் பற்றிய தகவல்களை நான் அறிந்து கொண்டேன்.

    – A. கருணாகரன்.

  2. கதையில் வரும் ஏமிகார் மைக்கலால்தான் கதை சொல்லியின் மனமாற்றம் நிகழ்கிறது எனப் புரிந்துகொள்ளலாம். ஆண்டே ஏமி நிராதரவற்றவர்களை அரவணைப்பதும், தன்னையே காப்பித் தூளால் நிறம் மாற்றிக்கொண்டு சமூக சேவையில் ஈடுபடுவதும் கதைசொல்லியைப் பாதித்திருக்கிறது. அவரின் தன்னலமற்ற தொண்டே கதைசொல்லியை நண்பனுக்கு ஆபத்து நேரத்தில் உதவ வைத்திருக்கிறது.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop

Don't Miss