/

வானம் கீழிறங்கும்போது – கைபிடித்து அழைத்துச் செல்லும் கவிதை : ஆனந்த்

'வானம் கீழிறங்கும்போது' கவிதைத் தொகுப்பின் முன்னுரை

என்ன செய்வதென்று தெரியவில்லை. எப்படிப் போவதென்று புரியவில்லை. கொஞ்சமும் வழி தெரியவில்லை.

என் பதின்பருவங்களில் என்னைச் சுற்றி வீட்டிலும் வெளியிலும் நடக்கும் நிகழ்வுகளால் நான் காணும் அந்த வாழ்க்கைமுறை பற்றிய என் நம்பிக்கைகள் அடியோடு தகர்ந்து போயின. நான் எவ்வாறு வாழவேண்டும் என்று எனக்குச் சொல்லிக் கொடுக்கும் ‘பெரியவர்கள்’, தம் வாழ்க்கையில் அந்த விழுமியங்களை முற்றிலும் கையாளத் தவறுவதைக் கண்கூடாகப் பார்த்தேன். பெற்றோர்கள் மட்டுமின்றி நெருங்கிய உறவினரின் வட்டம் முழுவதும் அடிப்படை மனமுதிர்ச்சி சிறிதுமில்லாமல் சிறுபிள்ளைகள்போல் போடும் சண்டை சச்சரவுகள் என் மனத்தில் விரக்தியையும் பெருத்த அவநம்பிக்கையையும் தோற்றுவித்தன. நெஞ்சில் சற்றும் இரக்கமோ ஈரமோ ஏதுமின்றி தெரிந்தே ஒருவரையொருவர் தாக்கிப் புண்படுத்திக்கொள்ளும் மனோபாவம் எனக்குள் பெரும் வேதனையையும் வலியையும் தோற்றுவித்தது. தெரிந்தே அவர்கள் சொல்லும் அப்பட்டமான பொய்கள் அவர்கள் மீதிருந்த மரியாதையை முற்றிலும் இல்லாமல் போக்கிவிட்டது. சமூக நிறுவனங்கள் மீது நான் கட்டிவைத்திருந்த நம்பிக்கைகள் உடைந்து போயின. எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த, ஆண்டாண்டு காலமாக எல்லோருமாகச் சேர்ந்து போற்றி வந்திருந்த, வாழ்முறை குறித்த வரைபடம் அர்த்தமற்றுப் போயிற்று. அதைத் தூக்கி எறியவேண்டியதாயிற்று. 

ஆனால் இப்போது நான் இருக்கும் இடம், சூழ்நிலை பற்றிய தெளிவு சிறிதும் இல்லை.  செல்ல வேண்டிய திசை எனக்குத் தெரியவில்லை. அடுத்த அடி எங்கே எடுத்துவைப்பது என்பது பற்றிய குறிப்பு ஏதும் என்னிடம் இல்லாமல் போயிற்று. நடுக்கடலில் திசைகாட்டியைத் தொலைத்துவிட்ட மாலுமியைப் போல் உணர்ந்தேன். 

பதின்பருவமும் அது ஒருபுறம் திறந்துவிட்ட சுதந்திரமும் மறுபுறம் அது உருவாக்கியிருக்கும் குழப்பங்களும் வேறொரு புதிய கட்டத்தை வந்தடைகின்றன. இருபத்தியொரு வயது முடிகிறது. படிப்பு முடிந்து வேலைக்குச் செல்கிறேன். அதுவரையில் நடந்த சிக்கல் மிகுந்த நிகழ்வுகளின் தொடர்ந்த பாதிப்பால் உள்ளே என் அகவெளியில் பெரும் பிரளயம் மூள்கிறது. உள்ளியக்கத்துக்கும் வெளியுலகுக்கும் இடையிலான உறவில் பெரும் மோதல்கள், நெரிசல்கள். சமூக மனம் சுய ஆளுமையின் தற்காப்புக்காகக் கட்டிவைத்திருக்கும் மதிற்சுவர்கள் தகர்ந்து விழுகின்றன. சமூக-கலாச்சார சக்திகள் நனவு மனத்தையும் நனவிலித் தளத்தையும் (Unconscious) பிரித்துவைப்பதற்காக உருவாக்கி வைத்திருக்கும் எல்லைக்கோடு கரைந்து இல்லாமல் போகிறது. கலாச்சார பிம்பங்களின் அடிப்படையில் என்னைப் பற்றி என் மனத்தில் நான் கட்டமைத்து வைத்திருந்த சுயபிம்பங்கள் அஸ்திவாரம் இல்லாமல் போனதால் இடிந்து விழுகின்றன. அகவெளி எங்கும் என் சுயத்தின் சில்லுகள் சின்னாபின்னமாக இறைந்து கிடக்கின்றன. சீரான சிந்தனை முற்றிலும் சாத்தியமில்லாமல் போகிறது. ஆழ்மனச் சக்திகளின் ஆவேசக்கூத்து உள்ளே புயலாய் வீசுகிறது. தாங்க முடியாத வேதனையும் அச்சமும் எந்நேரமும் மனத்தைத் தாக்குகின்றன. 

சுழன்று தெறிக்கும் இந்தப் பெருவீச்சில் ‘நான்’ என்று தன்னை மையமாக வைத்திருந்து சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்த புள்ளி அச்சு கழன்று காணாமல் போகிறது. பெரும்புயலில் நங்கூரமிழந்த கப்பல்போல் மனம் பேரலைகளில் அங்குமிங்கும் அலைக்கழிந்து தவிக்கிறது. ஆழ்மனப் பிம்பங்கள் பெரும் வேகத்துடன் வெளிப்பட்டுக் கட்டுப்பாடற்று அகவெளியெங்கும் வீசித் தெறிக்கின்றன. ஆழ்தளங்களிலிருந்து வெளிப்பட்ட சக்தியின் வீச்சைத் தாங்கமுடியாமல் மனம் அல்லலுறுகிறது. அடங்காத துன்பத்தில் துடிக்கிறது; பேதலித்துப் போகிறது. பைத்தியம் பிடிப்பது என்பது இதுதானோ என்ற அச்சம் மனத்தை ஆட்டிவைக்கிறது. பைத்தியம் பிடிக்கத் தொடங்கிவிட்டதென்ற பயம் மனத்தை உலுக்குகிறது. பைத்தியம் பிடித்துவிட்டதென்றே ஒரு கட்டத்தில் மனம் முடிவு செய்துவிடுகிறது. தொடர்ந்து கட்டுப்பாடற்று மேலெழும் ஆழ்மன பிம்பங்களின் ஆட்டத்தை நிறுத்துவதென்பது என் கையில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை.

*

அதுவரையில் கவிதையோ கதைகளோ எழுதும் எண்ணம் ஏதும் எனக்கு இருந்ததில்லை. வாசிப்பது மட்டுமே நான் விரும்பும் விஷயமாக இருந்துவந்திருக்கிறது. ஆனால் தாமாக உள்ளே எழும் ஆழ்மன பிம்பங்கள் என்னைத் தமது ஆதிக்கத்துக்குள் இழுத்துக்கொள்ள முயல்கின்றன. சக்திவாய்ந்த அந்த பிம்பங்களை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் ஏதும் எனக்குத் தெரியவில்லை. சரியாகப் புரியாவிட்டாலும் அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற உணர்வு மட்டும் ஏற்படுகிறது. மறந்து போய்விடக்கூடாதென்று மேலெழும் எண்ணங்களையும் ஆழ்மன பிம்பங்களையும் ஒரு குறிப்பேட்டில் எழுதிவைக்கிறேன்.

*

ஒரு நாள் எதேச்சையாக(!) ஞானக்கூத்தன் அவர்களை வழியில் சந்தித்தேன். கையில் இருந்த குறிப்பேட்டை வாங்கிப் பார்த்தார். சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்த பிறகு ஒரு பக்கத்தைக் காட்டி அதில் இருப்பதை அப்படியே பிரதியெடுத்து அனுப்பும்படி சொன்னார். நவீன கவிதையின் அனைத்து அம்சங்களையும் அது கொண்டிருப்பதாக அவர் சொன்னார். தொடர்ந்து எழுதும்படியும் சொன்னார். அடுத்த இதழ் ‘கசடதபற’வில் ‘யுத்தக் காட்சி’ என்ற தலைப்பில் அது பிரசுரமாயிற்று. 1976 தொடக்கம் என்று நினைக்கிறேன். இதோ அந்தக் கவிதை.

யுத்தக் காட்சி 

இது என்றுமுள்ள யுத்தத்தின் இன்றைய காட்சி.
இன்றைய யுத்தத்தில் தம் கட்சியினர் ̃, பகைவர் ̃ என இரு பிரிவுகள் இல்லை.
ஒவ்வொரு வீரனுக்கும் மற்ற அனைவரும் பகைவராக உள்ளனர்.
வீரர்கள் அனைவரும் உடல், முகம் முழுவதும் மூடிய கவசங்கள் அணிந்திருக்கிறபடியால் யாருடைய முகமும் தெரியவில்விலை.
பளபளக்கும் உலோக முகக்கவசத்தின் திறந்தே இருக்கும் கண்களுக்குள் வீரர்களின் கண்கள் மூடிய வண்ணமே இருக்கின்றன.
கண்கள் மூடியுள்ளமையால் இரவு, பகல் என இன்றி எப்போதும் யுத்தம் நடக்கிறது.
அனைவரும் அஹிம்ஸாவாதிகளாகையால் வீரர்கள் அனைவரின் வாள்களும் உறைக்குள்ளேயே துருப்பிடித்துக் கிடக்கின்றன.
அனைவரும் வாளை எடுக்காமல் கேடயம் கொண்டே யுத்தம் புரிகின்றனர்.
பல வீரர்கள் யுத்தத்தில் மடிய, புதிதாக வீரர்கள் யுத்தத்தில் சேர்ந்த வண்ணம் இருக்கின்றனர். புதிதாகச் சேரும் வீரர்களுக்குத் தங்கள் இடையில் தொங்கும் வாளின் உபயோகம் தெரியவில்லை.
கேடயத்தால் தாக்கினாலும் வலிக்கத்தான் செய்கிறது.
ஆனால் யாரும் வாளை எடுத்துப் போர் புரிய மாட்டார்கள். 
ஏனெனில் இது தர்ம யுத்தம். 
அனைவரும் அஹிம்ஸாவாதிகள். 

*

அப்போதும் கவிதை எழுதும் நோக்கம் எதுவுமில்லை. தொடர்ந்து உள்ளே ஊழிக்கூத்து நடந்துகொண்டுதான் இருந்தது. அப்போதுதான் ஆத்மாநாம் ‘ழ’ இதழைத் தொடங்கினார். கவிதைகள் தரும்படிக் கேட்டார். நான் கவிதைகள் எதுவும் எழுதவில்லை என்று சொன்னேன். மீண்டும் சிலமுறை அவர் கேட்டதால் ‘ழ’ இரண்டாவது இதழுக்கு என் குறிப்பேட்டில் இருந்து சிலவற்றை எழுதிக் கொடுத்தேன். அவை பிரசுரமாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, ‘அதோ அந்தச் சிறுபறவை’ என்ற கவிதை பலர் கவனத்தைக் கவர்ந்தது. 

சிறுபறவை அழைத்துவரும் மேகம்

அதோ
அந்தச் சிறுபறவை
அழைத்துவரும் மேகம்
தண்ணென என்னை நிறைக்கையில்
நான்
இல்லாது போவேன்
என் சட்டையை நீ எடுத்துக்கொள்ளலாம்
நீ என் செருப்பை எடுத்துக்கொள்
என் சுவாசகோளங்களை 
மேகம் நிறைக்கையில்
கணிதங்கள் அற்றுப் போகும்
அதன் பின்
என்னைப் பற்றி
ஏதேனும்
அறியவேண்டுமாயின்
அந்தச் சிறுபறவையை
அழைத்துக்
கேள்.

*

ஒருமுறை ந. முத்துசாமி அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. பரந்தாமன் நடத்திவந்த ‘அஃ’ இதழில், ‘ஒரு சொல்லின் மரணம்’ என்ற தலைப்பில் மொழி தொடர்பான என் கட்டுரை ஒன்று பிரசுரமாகியிருந்தது. அதை மிகவும் சிலாகித்துக் கூறிய அவர், மதுரையிலிருந்து வெளிவரும் ‘வைகை’ இலக்கிய இதழுக்குக் கவிதைகள் அனுப்பும்படிச் சொன்னார். அனுப்பிவைத்தேன். அவையும் பிரசுரமாயின. அந்தக் கவிதைகள் நல்ல வரவேற்பைப் பெற்றன. ‘முதல் அம்பு’ என்ற கவிதை அப்போதுதான் வெளிவந்தது. நாமும் கவிதை எழுதலாம் என்ற எண்ணம் லேசாக அப்போது ஏற்பட்டது. 

முதல் அம்பு

நான் முதல் அம்பு
பன்னெடுங்காலமாய் 
இந்த மலையுச்சியில்
கிடக்கிறேன்
யார் மீதும் விரோதமற்ற
ஒருவன் வந்து
தன் வில் கொண்டு
என்னை 
வெளியில் செலுத்துவானென.

அந்தக் காலகட்டத்தில் ஞானக்கூத்தன் தேவதச்சனை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அது என் வாழ்க்கையில் முக்கியமானதொரு திருப்புமுனையாக அமைந்தது. புதிய பயணம் ஒன்று தொடங்கியது. நாங்களிருவரும் கவிதையியல் குறித்து மட்டுமில்லாமல் மனம், பிரக்ஞை, கவனம் குறித்த தொடர்ந்த உரையாடலில் ஈடுபட்டோம். இன்றுவரையிலும் கூட அந்த உரையாடல் தொடர்ந்து நடந்துகொண்டு வருகிறது. 

*

உள்ளே தொடர்ந்து நடந்துகொண்டிருந்த முறைப்பாடு (Process) சற்றும் புரிபடாமல்தான் இருந்தது. மேலெழும் அந்தப் பிம்பங்களின் முக்கியத்துவமோ உட்பொருளோ எனக்குச் சற்றும் விளங்கவில்லை. ஆனால் தொடர்ந்து எழுதத் தொடங்கினேன். பிம்பங்களைக் கவிதைகளாகப் புனைவது மனச்சஞ்சலத்திற்கு ஓரளவு ஆறுதலளித்தது. பெரும்பாலும் கவிதை வரிகள் மேல்மனத்தின் முயற்சி ஏதுமின்றித் தன்னியல்பாக வெளிப்பட்டன. சில கவிதைகள் வாசித்தவர்கள் மனத்தை மிகவும் ஈர்த்தன. அவர்களுக்குள் ஏதோ ஒரு ஆழத்தை அவை தீண்டின. முக்கியமான கவிதைகள் என்று சிலர் அபிப்பிராயப்பட்டனர். வழக்கம்போல் புரியவில்லை என்ற குற்றச்சாட்டும் ஒருபுறம் எழுந்தது. 

சில நண்பர்கள் கவிதை குறித்துக் கேள்விகள் எழுப்பியபோது, ஒரு வாசகனாக நான் அந்தக் கவிதையை எப்படிப் புரிந்துகொள்கிறேன் என்பதை அவர்களுக்குச் சொன்னேன். எனக்கே சரியாகப் புரியாத என் கவிதைகளைப் பற்றி அந்தக் கணத்தில் என் மனத்தில் எழுந்த விளக்கத்தை அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன். அப்படி விளக்கும்போது என்னை மீறிய தெளிவுடன் புதிய கோணத்திலிருந்து அவற்றை விளக்க என்னால் முடிந்தது. அவர்களுக்கு விளக்கும்போதுதான் எனக்கே அந்த பிம்பங்களின் உட்பொருள் விளக்கம் கொண்டது. இந்த விளக்கத்தின் வெளிச்சத்தில் அந்த பிம்பங்கள் புதிய பொருளை மேற்கொண்டன. என் மனத்தின் கட்டமைப்பிலேயே படிப்படியாக மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. பார்வையின் இயக்கத்தில் அடிப்படையான மாற்றம் விளைய ஆரம்பித்தது. 

உதாரணமாக அந்தக் காலகட்டத்தில் எனக்குள்ளிருந்து தன்னியல்பாக வெளிப்பட்ட கவிதைகளில் ஒரு தன்மை தெரிந்தது. இரண்டு மனங்களிடையேயான உரையாடலின் உருவில் பல கவிதைகள் இருக்கும். ஒரு பெருமனம், அதன் அங்கமான ஒரு சிறுமனம், இவை இரண்டுக்கிடையே நிகழும் பரிவர்த்தனையாக இவை அமைந்திருக்கும். சில கவிதைகள் சிறுமனம் பெருமனத்திடம் பேசுவதாகவும், மற்றவை பெருமனம் சிறுமனத்திடம் சொல்லும் கூற்றாகவும் அமைந்திருக்கும். இதோ ஒன்று.

மலர்க்கண்கள்

அவ்வப்போது
என் மலர்க்கண்கள்
மண்ணில் உதிர்கையில்
உன்னை நான்
காண முடிவதில்லை
மறுமலர்கள்
மலரும் வரைக்கும்
உன்னைக் காண
வரம் ஒன்று
தா.

*

இன்னுமொன்று மற்ற வகையினது.

கணக்கில்தான்

உனக்கும் எனக்கும் இடையில்
கணக்கில்தான் வேறுபாடு
உன் பலநூறு வருடங்கள்
என் சிறுபொழுதில் விரைந்தோடும்.
என் வானில் ஒரு பறவையின்
ஒரு சிறகடிப்பில்
உனக்கு முதுமை வந்து சேரும்
உன் காலடித் தடங்களைக் கணக்கிட்டு
நீ சொல்வாய்
காலம் பறந்தோடிவிட்டதென்று
நான்
பறவையின் அடுத்த சிறகு வீச்சில்
கவனம் கொள்வேன்.

*

எனக்குள் நிகழத் தொடங்கிய இந்த முறைப்பாடு (Process) மிகவும் அடிப்படையான முக்கியத்துவம் கொண்டதாக எனக்குப் பட்டது. ஆழ்மனத்தில் எனக்கு உள்ளூரப் புரிந்திருந்த விஷயங்கள் மேல்மனத்துக்குத் தெளிவாகப் புரிவதற்கு இந்த முறைப்பாடு பெரிதும் உதவியாக இருந்தது. இது மேல்மன அமைப்பை மாற்றி மறுவுருவாக்கம் (Transformation) செய்யும் விதமாக அமைந்தது. வாழ்வனுபவத்தில் என்னைப் பற்றியும் வாழ்க்கை குறித்தும் புதிய வெளிச்சங்கள் தன்னியல்பாக வெளிப்பட்டன. மனத்தின் காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆறிப் போய் ஆழமான ஆறுதல் நெஞ்சில் நிறையத் தொடங்கியது.

எனக்குள் ஏற்பட்டுக்கொண்டிருந்த அகமாற்றத்தின் விளைவுகளை எதிர்கொண்டு அதன் பலன்களை நான் முழுமையாக அடைவதில் இந்த முறைப்பாடு மிகவும் முக்கியப் பங்கு வகித்தது. உள்ளிருந்து மேலெழும் பிம்பங்களை நான் எதிர்கொண்டு உள்வாங்கிக்கொள்வது என் மனஒழுங்குக்கு இன்றியமையாதது என்று தெரிந்தது. அந்தக் காலகட்டத்தில் உள்ளே தன்னிலை இழந்துவிடாமல் என்னை நான் காப்பாற்றிக்கொள்வதற்கு கவிதையும் அது சார்ந்த முறைப்பாடும் பேருதவியாக இருந்தன. 

ஆழ்மன இருளில் உறைந்திருந்த இந்த பிம்பங்களை நனவின் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து என் மொத்த ஆளுமையுடன் அவற்றை ஒன்றிணைப்பது என் அகவளர்ச்சிக்கும் மனத்தின் சமநிலைக்கும் இன்றியமையாதது என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அது மட்டுமல்லாமல், என் மன ஆரோக்கியத்துக்கும் இது அவசியமானதாக இருந்தது என்பதுதான் உண்மை. அந்த நேரத்தில் நான் கவிதையின் முறைப்பாட்டுக்கு என்னை முழுமையாக ஒப்புக்கொடுத்திராவிட்டால் என்னுள்ளே ஏற்பட்டிருந்த அகப்பிரளயத்தின் பெருவீச்சில் நான் சிக்குண்டு காணாமல் போயிருப்பேன் என்பதில் எள்ளளவும் எனக்குச் சந்தேகமில்லை. இப்போது பின்னோக்கிப் பார்க்கும்போது கவிதை என்னைக் காப்பாற்ற வந்த பேரருளாகவே தோன்றுகிறது. 

*

அகவளர்ச்சியின் முறைப்பாடு நனவுமனத்துக்கும் நனவிலிக்கும் இடையில் இப்போது மூடிவைக்கப்பட்டிருக்கும் கதவு திறப்பதிலிருந்து தொடங்குகிறது. இது எல்லோருக்கும் நடப்பதில்லை. யாருக்கு எப்போது இது நடக்கும் என்னும் இலக்கணத்தை முன்கூட்டி யாராலும் அறியமுடிவதில்லை. ஆனால் ஒருமுறை அந்தக் கதவு திறந்துவிட்டால் அதை மூடுவது சாத்தியமில்லை. அந்தக் கதவு திறந்த பின்னர் இந்த இரு தளங்களிடையே ஏற்படும் பரிமாற்றம் ஒரு மனிதனின் அகவாழ்க்கையையும் புறவாழ்க்கையையும் ஒருங்கே புரட்டிப் போட்டுவிட வல்லது. கவிதை போன்ற கலைவெளிப்பாடுகள் இந்தப் பரிமாற்றத்துக்கு ஏற்றதொரு சாதனமாக இயங்கக்கூடியவை. கலை இந்த இரு தளங்களிடையே ஒரு பாலமாகச் செயல்படக்கூடியது. இந்த வகையில் கவிதை எனக்கு இந்த இரண்டு தளங்களிடையே நடக்கும் உரையாடலுக்கான மையவெளியாக இயக்கம் கொண்டது. இந்த மையவெளிதான் நனவு மனத்தின் சிந்தனையோட்டங்களும் நனவிலியிலிருந்து மேலெழும் ஆழ்மன பிம்பங்களும் சந்திக்கும் தளமாக அமைந்தது.  இந்தச் சந்திப்பில் ஏற்படும் பரஸ்பரப் பரிமாற்றத்தில் கவிதை கருக்கொள்கிறது. கலைவெளிப்பாட்டு இயக்கத்தின் முறைப்பாட்டில் சொற்களையும் படிமங்களையும் ஏற்றுக்கொண்டு கவிதை பிறக்கிறது. 

கனவின் முறைப்பாட்டுக்கும் கவிதையின் முறைப்பாட்டுக்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடு ஏதும் இல்லை. இரண்டும் ஆழ்தள இயக்கத்தின் இலக்கணக் கூறுகளைத் தம் காரணிகளாகக் கொண்டவை. இவை இரண்டுமே நனவிலியின் உள்ளியக்கங்களைப் பிரதிபலிக்க வல்லவை; அந்த ஆழ்மன உள்ளியக்கங்களை வெளிப்படுத்திக் காட்டும் கண்ணாடி போன்றவை. கனவின் மாய உலகங்களைப் போலவே கவிதையும் மாய உலகங்களைக் கட்டமைக்கும் சக்தி கொண்டது. ஆழ்மனம் கட்டமைக்கும் மாய உலகங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மாய உலகங்கள் பொய்யானவை இல்லை. ஆக்கபூர்வமான சக்திகளின் உருவ வெளிப்பாடு இந்த மாய உலகங்கள். நனவிலித் தளத்தின் சக்தி மிகுந்த உட்சாரங்களில் ஊறியவை அவை. சமூக கலாச்சாரச் சக்திகள் கட்டமைத்து வைத்திருக்கும் கூட்டு உடன்படிக்கை உலகத்தின் (Consensus World) மன அமைப்புகள், அந்த அமைப்பின் வெளிப்பாடான மொழி, இவற்றின் வரையறைக்குள் அடங்காத ஆழ்மனத்தளங்களைப் பிரதிபலித்துக் காட்டுபவை மாய உலகங்கள். மாய உலகங்கள் இல்லையென்றால் கலை என்ற ஒன்று இல்லை. இந்தக் காரணத்தால் இவை இல்லாமல் அகவளர்ச்சியும் சாத்தியமேயில்லை. மாய உலகங்களின் வழியாகத்தான் ஆழ்மனத்தில் பொதிந்து இன்னும் வெளித்தெரியாமல் இருக்கும் உண்மைகள் மேல்மன வெளிச்சத்தில் வெளிப்பட்டுத் தம்மைக் காட்டிக்கொள்ள முடியும். இந்தக் காரணத்தால் தவிர்த்துவிடவே முடியாத முக்கியத்துவம் கொண்டவை  இந்த மாய உலகங்கள். பிரக்ஞை மாற்றம், மனமாற்றம், உலக மாற்றம், இவையெல்லாவற்றுக்கும் ஆழ்மனம் மேல்மனத்தில் கட்டமைக்கும் மாய உலகங்களே அடிப்படை. 

*

அந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு கணமும் நான் அனுபவித்துக்கொண்டிருந்த பெரும் அவஸ்தையிலிருந்தும் துன்பத்திலிருந்தும் மீண்டு, ஓரளவுக்குச் சமநிலைக்கு வருவதற்குக் கவிதையே பெரும் துணையாகவும் ஆதரவாகவும் அமைந்தது. வழியறியாத அடர்ந்த பெரும் கானகத்துள்ளே நான் என்னைத் தொலைத்து விட்டிருந்தேன். வரைபடம் ஏதுமற்ற, திசை தெரியாத கானகத்து இருளில் நான் காணாமல் போயிருந்தேன். அப்போது தூரத்து ஒளிபோல் கவிதை எனக்கு வழி காட்டியது. கொஞ்சம் கொஞ்சமாக நான் அறிந்த உலகத்திற்கு நான் மீண்டும் வந்து சேர்வதற்கான திசையை எனக்குக் கவிதை காட்டித் தந்தது. ஒருவிதத்தில் சொல்லப் போனால் நான் மீண்டும் வந்தடைந்த உலகம் சில விதங்களில் என் பழைய உலகம்போல் தோற்றம் கொண்டிருந்தாலும் தன் அடிப்படைத் தன்மையில் மிகவும் புதியதாகவும் வேறானதாகவும் இருந்தது. அதைப் புதிதாக நான் பரிச்சயம் கொள்ளவேண்டிய நிலையில்தான் இருந்தேன். என் கவிதை வளரும்போது என் புதிய உலகத்துடன் என் பரிச்சயமும் கூடவே வளர்ந்தது. என் பிரத்தியேகமான உலகம் என் கவிதைகளில் பிரதிபலிக்கத் தொடங்கியது. என் தனிமனமும் கூட்டுமன உலகமும் ஒருங்கிணையத் தொடங்கின. தன்னியல்பான வெளிச்சங்கள் வெளிப்பட்டவண்ணம் இருந்தன.  

என் அகவெளியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இயக்கங்கள் பற்றிய வெளிச்சங்கள் ஆழ்மன பிம்பங்களாக வெளிப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் நான் எழுதிய கவிதையில் இவ்வாறான ஒரு உருவகம் வெளிப்பட்டிருக்கிறது.

இங்கே எப்போது 

நான்: வனங்களெங்கும் திரிந்தாயிற்று
இந்த வரைபடம் உபயோகமில்லை
எந்த இடத்தில்
எந்த மரத்தில்
அந்த மலர் மலருமென்று
எந்த விதத்திலும் தெரியவில்லை

அசரீரி: அதோ
அங்கே தெரியும் அந்த மரத்தின்
கிளையில் தொங்கும் பழத்தின் விதையில்
இருந்து விரியப் போகும் மரத்தின்
கிளையில் ஒருநாள் அம்மலர் மலரும்
இன்று
இந்த ஓடையில் கைகுவித்து
அள்ளி
ஒருவாய் நீரருந்திவிட்டுப்
போ.

*

இது என் கவிதைப் பயணத்தின் முதல் கட்டம் என்று சொல்லலாம். இந்த முதல் கட்டத்தில் கவிதை வரிகளில் ஒரு நேரடித் தன்மையும் சொற்பிரயோகங்களில் எளிமையும் இழைந்து இருக்கும். இரண்டாவது கட்டத்தில் எளிமை குறைந்து சிக்கல் கொண்ட படிமங்கள் வெளிப்படத் தொடங்கின. 

உன்னை என்னை

விலங்குகள் தாவரங்களை உண்பதுபோல்
சில தாவரங்கள்
விலங்குகளை உண்பதுபோல்
என்னை நீயும்
சிலபோது உன்னை நானும்
உண்கிறோம்

என்னை நீ உண்டு முடிக்கும்போது
நானும் உன்னை
உண்டு முடித்திருப்பேன் 

என் வயிற்றில் நீயும்
உன் வயிற்றில் நானும்
இருப்போம் அப்போது

ஒருவரா
இல்லை இருவரா
என்ற விவாதம்
வனமெங்கும் இப்போது

*

ஆனந்த்

கவிதைக்கும் எனக்குமான உறவு இப்படித் தனிப்பட்ட முறையில் எனக்குப் பயன் தருவதாக இருக்கும் பட்சத்தில் அவற்றை வெளியுலகில் பிரசுரிக்க வேண்டிய அவசியமென்ன என்ற கேள்வி எழமுடியும். மற்றவர்களுக்கு அதனால் என்ன பயன்?  நான் நனவிலி என்று சொல்வது என் தனிப்பட்ட மனம் இல்லை. தனிமனங்கள் அனைத்தும் கூட்டு மனத்தளத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. கூட்டுநனவிலி மனத்தின் (Collective Unconscious) கருவிகள்தான் தனிமனங்கள் என்றுகூட ஒரு அளவில் சொல்லலாம். கவிதையும் ஏனைய கலைகளும் கூட்டுமனத்தில் வேர்கொண்டவை. அதனால்தான் எனக்குள் நிகழ்ந்த ரசவாதம் எல்லோருக்குள்ளும் எப்போதும் நிகழ்ந்துவரும் இயக்கம்தான். இதனால்தான் கலை வெளிப்பாடுகள் தனிமனத்தின் வழியாக வெளிப்பட்டாலும் அவற்றின் தோற்றுவாய் கூட்டுநனவிலித் தளம்தான். இந்தக் காரணத்தால் அவை மொத்த மனித சமுதாயத்திற்கும் சொந்தமானவை.  

கூட்டுநனவிலித் தளம் காலத்தின் வரையறைக்குள் அடங்காதது. கால அமைப்பின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாதது. காலம் கூட்டுநனவிலியின் குழந்தை. இல்லாமல் இருந்து, பின் பிறந்து இருந்து, மறைந்து, மீண்டும் இல்லாமல் போவதே காலம். கால-வெளி இடைவெளி ஏதுமின்றி நீட்சி கொண்டிருப்பது காலாதீதமானது. எது காலாதீதமோ அதை யாரும் பார்க்கமுடியாது; அறிந்துகொள்ள முடியாது. அறிவுக்குள் அடங்காதது அது. ஆனால் அதுவாக இருக்கமுடியும். அதுவாக இருந்துதான் அதை அறிந்து தெரிந்துகொள்ள முடியும். 

உலகம் என்பது அறிந்ததன் மண்டலம். அதன் எல்லைகளுக்கு வெளியே அறியாததது எல்லையற்று விரிகிறது. உலகம் தன் எல்லைகளை விரித்துக்கொள்ளலாம். ஆனால் என்றுமே எல்லையற்றுப் போக முடியாது. தன் வரையறைகளுக்கு வெளியே விரியும் எல்லையற்ற அதீதத்தை உலகம் என்றுமே அறிந்துகொள்ள முடியாது. அறிவு மனத்தில் சேகரம் ஆகிறது. மனமே உலகமாக விரிகிறது. ஒரு குழந்தையின் உலகத்தையும் வளர்ந்த ஒருவரின் உலகத்தையும் கருத்தில் கொண்டு பார்த்தாலே இந்த உண்மை புரிந்துவிடும். அதேபோல் அதிக அறிவு இல்லாத ஒருவரின் உலகமும் நிறையத் தெரிந்துகொண்ட ஒருவரின் உலகமும் வெவ்வேறானவை. அறிவு நிறைந்த ஒருவரின் உலகம் விஸ்தாரமானது. ஒரு சாதாரண மனிதன் பார்க்கும் வானமும் வானவியலாளன் பார்க்கும் வானமும் ஒன்றல்லவே! அறிவே உலகம்.  அறிவின் எல்லையே உலகத்தின் எல்லை. 

கடந்ததன் பதிவு அறிவு. அறிந்ததன் வெளிப்பாடு உலகம். உண்மை உலகத்துக்கு வெளியில்தான் விரிந்திருக்கிறது. இருப்பதுபோல் தோற்றம் கொள்ளும் உலகம் உண்மையில் இருந்ததன் சுவடு. அதாவது காலம் சார்ந்த நினைவுகளைத் தேக்கிவைத்திருக்கும் மனத்தின் புறவெளித்தோற்றம் உலகம். 

*

ஒரு கட்டத்தில் நனவிலியின் ஆழ்தளங்களிலிருந்து என் சுயப்பிரயத்தனம் ஏதுமின்றிப் புதிதான தன்மை கொண்ட கவிதைகள் வெளிப்படத் தொடங்கின. அதுவரையில் சந்தம் ஏதுமின்றி நான் எழுதிவந்திருந்த கவிதைகளிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்த கவிதைகள் வெளிப்படத் தோன்றின. காலத்தின் சாரம் தோய்ந்த பழைய சொற்சித்திரங்கள், புதிய மொழி, புதிய கதி, புதிய ஒழுங்கு அவற்றில் அமைந்திருந்தது.  ஓசை லயம் கொண்ட சந்தத்துடன் வரிகள் தன்னியல்பாக வெளிப்பட்டன. இந்த நேரங்களில் என் உடலில் புதியதொரு தன்மையில் சக்தியின் வெளிப்பாட்டை உணர்ந்தேன். இதற்கு முன்பு கவிதை எழும் கணங்களில் ஆழமான அமைதி, தீர்க்கமான தெளிவு, வலிமை நிறைந்த சக்தியின் ஓட்டம் போன்ற உணர்வுகள் உடலிலும் மனத்திலும் நிரம்பியிருக்கும். ஆனால் இப்போது முன்பு உணர்ந்திராத மென்மை, நளினம், கருணை, காதல், குழைவு அனைத்தும் கொண்ட அதிர்வு அலைகளை உடலில் உணர்ந்தேன். அது மட்டுமின்றி ‘இளவரசி’ என்ற புதியதொரு பிம்பத்துடன் இவை வெளிப்பட்டன. ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு மேலாக இவ்வாறான கவிதைகள் தன்னியல்பாக எழுந்தவண்ணம் இருந்தன. இந்தக் கவிதைகளை நான் எந்தப் பத்திரிகையிலும் பிரசுரிக்கவில்லை. வேண்டாம் என்று தோன்றியது. இந்தக் கவிதைகள் ஒரு தனித் தொகுப்பாக வெளியானது. ஒரு சில பகுதிகள் இதோ.

மன்னவனே உனக்கு நான் மாசில்லா உண்மையினை
என்னவன் நீ என்பதால் எடுத்துரைக்க விழைகின்றேன்
உடலென்றும் உயிரென்றும் உணர்வென்றும் உள்ளமென்றும்
உள்ளென்றும் வெளியென்றும் நானென்றும் நீயென்றும்
நல்லது அல்லது நாளை நேற்று எனவும்
நடப்பதைக் கூறுபோட்டு உடைத்திடும் மன உருவைக்
கண்டுகொள்வாய் நீ கணநேரம் தாழ்த்தாமல்
கைவிட்டு விடுபடுவாய் கணத்தில் எனை அடைவாய்

நானிலத்தில் இந்நாள் வரையில்
நடந்ததெல்லாம் நாடகம்
என்பதை நீ உணர்ந்திட
ஏற்றம் இங்கு அடைந்திட
ஆழி திறந்து நான் வந்தேன்
ஆரமுதைத் தருகின்றேன்

*

கண்ணாளா உந்தன்
கையணைப்பில் சேர்ந்துவிட்டேன்
உன் விழியும் என் மொழியும்
ஒன்றிணைந்து விண்ணளந்து
ஒன்றிலொன்று ஒடுங்கிடவே
கையணைத்து மெய்யணைத்துக்
கண்களிலே உயிரணைத்துக்
காதல் எனும் கடலினிலே
கண் மூடிக் கலந்துவிட்டோம்

கண்டிடவோர் காலமில்லை
எண்திசையும் விரிந்து நிற்கும்
எங்களுயிர் மேன்மையினைப்
பண்ணிசைத்துப் பாடல் கூட்டிப்
பாரென்று காட்டிடுவோம்

என்று அவள் சொன்னவுடன்
கண் திறந்து மனம் திறந்து
மண் திறந்து விண் திறந்து
உளம் திறந்தான் இளவரசன்

*

மாது அவள் காதல் இது போதுமென நானும்
ஏதுமறியாமல் இவை யாவும் பெற வேண்டி
தேடும் சுவை யாவும் அவள் பாடும் அந்தக் கானம்
கோடி முறை கேட்டு நெஞ்சம் ஆழியெனப் பொங்கும்


உள்ளம் தடுமாறி – ஒரு
பள்ளம் விழுந்தாலும்
கள்ளமில்லை நெஞ்சில் – அன்பு
வெள்ளமெனப் பொங்கும் 

காதலையும் கானத்தையும் காவிரிபோல் ஓடும்
மாது அவள் மீது எந்தன் கண்கள் நின்று ஏங்கும்
காலை இள நேரம்
வாலை அவள் வாசம்
மாலை இள மஞ்சள் வெயில்
போல அவள் தேகம்

*

இவ்வாறு வேறு ஒரு புதிய கதி, லயம், சந்தம் கொண்டு அடக்கமாட்டாமல் பொங்கிப் பொங்கிப் பிரவாகமாக வெளிப்பட்டன சொற்களும் படிமங்களும். சுயநிர்ணயம் ஏதும் இல்லாமல் தானாக வரிகள் வந்து விழுந்தவண்ணம் இருந்த இந்த முறைப்பாட்டின் இலக்கணம் ஏதும் எனக்குத் தெரியவுமில்லை புரியவுமில்லை. கவிதை எனக்குள் நிகழ்த்தியிருக்கும், இன்னும் நிகழ்த்திவரும் ஜாலத்தின் மர்மம் எனக்கு என்றுமே புரிந்ததில்லை.

*

ஒவ்வொரு கணமும் அனுபவத்தின் இதுவரை கண்டிராத ஒரு மடிப்பு திறந்துகொள்கிறது. புதியதொரு பார்வை வெளிச்சத்துக்கு வருகிறது. மொழி உருவாவதற்கு முந்தைய தளத்திலிருந்து இது உருக்கொண்டு வருகின்ற காரணத்தால் சொற்களாக உருக்கொள்வதற்கு முன்னால் ஒரு படிமமாக, அல்லது ஒரு பிம்பமாகவே புதியது தன்னைக் காட்டிக்கொள்கிறது. அதன் பிறகு மொழி சார்ந்த மேல்மனம் அந்த பிம்பத்தை எதிர்கொண்டு சொற்களுக்குள் அதைக் கொண்டுவருகிறது. சொல்லின் தளத்துக்கு வந்து சேர்ந்த பின்புதான் பொதுமனத்திற்கு அது தெரியவருகிறது. ஆனால் ஒரு கலைஞன் மேல்மன அனுபவத்தின் மொழிக்கட்டமைப்புக்குள் வருவதற்கு முன்பாகவே அனுபவத்தின் புதிய படிமத்தை முன்சென்று பாதி வழியிலேயே சந்தித்துவிடுகிறான். அதனால்தான் ஒரு கலைஞன் பெரும்பாலும் படிமத்தின் தளத்தின் இயங்குகிறான். அவ்வாறு தான் சந்தித்த அனுபவத்தைச் சொற்களிலோ அல்லது கருத்துகளிலோ, வண்ணங்களிலோ அல்லது கோடுகளிலோ, கல்லிலோ அல்லது மரத்திலோ அல்லது ஏதாவதொரு உலோகத்திலோ, ஒலியிலோ, காட்சிப் படிமத்திலோ கலைஞன் தன் கலைப்படைப்பாக வெளிப்ப்டுத்துகிறான். அனுபவத்தின் கடைசிக் கட்டம்தான் புற அனுபவம் என்னும் உண்மை, அறிவுபூர்வமாக அறியாவிட்டாலும் கூட ஒரு அசலான கலைஞனுக்கு நன்றாகவே தெரியும். 

நனவுமனமும் நனவிலியும் தனித்தனித் தளங்களாகப் பிரிந்து கிடக்கும் இன்றைய நிலையின் காரணமாக வாழ்வனுபவம் புறம்-அகம் என்று பிளவுபட்டுக் கிடக்கிறது. இது ஒரு நோய்வாய்ப்பட்ட நிலை. மனித வாழ்க்கையின் அனைத்துச் சிக்கல்களுக்கும் இதுவே அடிப்படைக் காரணம். தனிமனிதப் பிரச்னைகளோ, மொத்த மனித சமுதாயத்தின் சிக்கல்களோ,  இரண்டுமே இந்தப் பிளவின் விளைவாகவே இருக்கின்றன. 

நனவும் நனவிலியும் பரஸ்பரப் பரிமாற்றத்தில் ஒன்றையொன்று ஏற்றுக்கொண்டு ஒருங்கிணைந்தால் மட்டுமே இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வு கிடைக்கும். இரண்டு தளங்களும் ஒன்றிணைந்து பிரிவு கடந்த ஒற்றைப் பிரக்ஞையாக, ஒரே இயக்கமாக வெளிப்படும்போது புதிய உலகக்கட்டமைப்புகள் தோற்றம் கொள்ள முடியும். 

நனவிலியின் உள்ளடக்கத்தை நனவின் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதால் மட்டுமே மனித மனம் தொடர்ந்து உருவாக்கும் துன்பங்களிலிருந்து விடுதலை கிடைக்க முடியும். அது மனித மனத்தை எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரும் சவால். ஆனால் அதுவரையில் நனவிலியின் இருளில் இயங்கிக்கொண்டிருக்கும் ஆழ்மனச் சக்திகள்தான் நம் வாழ்வை நடத்திக்கொண்டிருக்கும். இதைத்தான் நாம் விதி அல்லது தலைவிதி என்று சொல்கிறோம். இப்போது உலகத்தில் நடந்துகொண்டிருக்கும் தனிமனிதச் சிக்கல்களும் குழுப்பூசல்களும் போர்களும் இந்த நிலையின் பிரதிபலிப்புதான்.  இந்தச் சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேறு வழி எதுவுமில்லை. தன்னில் தான் விழித்துக்கொண்ட சுயப்பிரக்ஞையின் ஒளி மட்டுமே அகவிடுதலைக்கு வழிவகுக்கும். கவிதை மற்றும் பிற கலைகளின் இயக்கம் இந்த அகவிடுதலைக்குச் சாதகமான சாதனமாக நமக்குக் கிடைத்திருக்கிறது. கலைஞனுக்கு மட்டுமில்லாமல் அதை அனுபவிப்பவனுக்கும் இதன் பலன் கிட்டும். 

தனிமனித மனத்தின் பரிணாமமும் மொத்த மனிதப் பிரக்ஞையின் பரிணாமமும் ஒன்றோடொன்று பிணைந்து பின்னியவை. தனித்தனியாகப் பிரிக்கப்பட முடியாதவை. ஒரே முறைப்பாட்டின் இருவேறு அம்சங்கள்தாம் இரண்டும். கலையின் பாதை வாழ்க்கைப்பாதையின் வெளிப்பாடுதான். உள்ளே நனவிலியின் இருளில் கோலோச்சிக்கொண்டிருக்கும் ஆழ்மனபிம்பங்கள் கட்டம் கட்டமாக நனவின் ஒளியில் வெளிப்படுவதுதான் பரிணாமம். கலைவெளிப்பாடு அந்த முறைப்பாட்டின் முக்கியமான பல சாதனங்களில் ஒன்றுதான். தன் சுயகதியில் தானாக நடக்கும்போது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகக்கூடிய பரிணாம வளர்ச்சியின் முறைப்பாட்டை கலையின் இயக்கம் பெருமளவுக்கு வேகப்படுத்தும் வல்லமை வாய்ந்தது. இந்தப் பயணத்தின் பாதையில், ஆழ்மனப் பிம்பங்களின் அடித்தளமாக நிலைத்திருக்கும் சுத்தப் பிரக்ஞை நனவுத் தளத்தில் மேலெழும்போது அக இருள் முற்றாக விலகும் சாத்தியம் இருக்கிறது. தன்னில் தான் முழுவதுமாக விழித்துக்கொண்ட சுத்தப் பிரக்ஞை தன்னைவிட்டுப் பிறிதொன்று ஏதுமில்லை என்று அறிந்துகொள்ளும் தரிசனத்தில் மனம் தனக்குள் தானே அடங்கிப் போகமுடியும். அகப் பயணத்தின் அடுத்தடுத்த கட்டங்கள் விரிவதற்கு இது வழிவகுக்கும்.

இன்னும் தொடர்ந்து நடந்துகொண்டுவரும் இந்த என் பயணத்தின் அடுத்த கட்டங்கள் என்ன, இது என்னை எங்கே அழைத்துச் செல்லப் போகிறது என்பது பற்றி எனக்கு ஏதும் தெரியாது. நடப்பதை நடக்கிறபடியே ஏற்றுக்கொள்ளும் ஆயத்தத்துடன் எப்போதும் இருக்கவேண்டியது தவிர எனக்குச் செய்வதற்கு வேறொன்றுமில்லை. 

ο ο ο

என் இந்தப் பயணத்தின் பாதை என் தந்தை ஒய். ஆர். கே. சர்மாவிடமிருந்து தொடங்குகிறது. அவரது இலக்கிய ஈடுபாடும் அவருடைய இலக்கிய நண்பர்களும் எனக்குள் சிறுவயதில் வித்திட்ட பல விஷயங்கள்தான் இன்று என்னை இவ்வளவு தூரம் அழைத்துவந்திருக்கிறது. என் முதல் நன்றியை அவருக்கு உரித்தாக்குகிறேன். இந்தப் பயணத்தில் பல நண்பர்கள் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். ஞானக்கூத்தன், ந. முத்துசாமி, தேவதச்சன், ஆத்மாநாம், ஆர். ராஜகோபாலன், வைத்தியநாதன், ஷாஅ, நகுலன், காளி-தாஸ், மையம் ராஜகோபாலன், அழகியசிங்கர், குவளைக்கண்ணன், யுவன் சந்திரசேகர், பிரம்மராஜன், க. வை. பழனிசாமி, பெருமாள் முருகன், மோகனரங்கன், ஹாலாஸ்யம், ஷங்கர்ராமசுப்ரமணியன், இன்னும் பலருடன் தொடர்ந்து நடந்த உரையாடல்களிலிருந்து நான் அறிந்துகொண்டது ஏராளம். அவர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி. கிட்டத்தட்ட கடந்த ஐம்பது வருடங்களாக என் கவிதைகளைப் பிரசுரித்த பல பத்திரிகைகளுக்கு என் பணிவான நன்றி பலகோடி.

 தேவதச்சனின் கவிதைகளையும் என் கவிதைகளையும் சேர்த்து ‘அவரவர் கைமணல்’ என்ற தலைப்பில் ஒரு கவிதைத் தொகுதி ‘ழ’ வெளியீடாக வெளிவந்தது. அதுவே என் முதல் கவிதைத் தொகுப்பு. ‘ழ’ நண்பர்களுக்கு என் நன்றி. அதன் பிறகு அழகியசிங்கர் எனது இரண்டாவது தொகுப்பான ‘காலடியில் ஆகாயம்’ என்ற நூலை வெளியிட்டார். விருட்சம் வெளியீடாக இது வெளிவந்தது. அவருக்கு என் நன்றி. அதன் பிறகு என் நூல்கள் எல்லாவற்றையும் காலச்சுவடு கண்ணன்தான் வெளியிட்டுக்கொண்டு வருகிறார். என் எழுத்துக்களைத் தொடர்ந்து பிரசுரித்து எனக்கு ஊக்கம் கொடுத்துக்கொண்டிருக்கும் நண்பர் காலச்சுவடு கண்ணன் அவர்களுக்கு என் பிரத்தியேகமான நன்றி. 

இந்தத் தொகுதிக்கு ஆழமானதொரு முகவுரை எழுதித் தந்துள்ள கவிஞர் நா. சுகுமாரன் அவர்களுக்கு என் பணிவான வணக்கமும் மனமார்ந்த  நன்றியும். 

*

ஆனந்த்
டிசம்பர் 5, 2023
சென்னை – 90

‘வானம் கீழிறங்கும்போது’ – காலச்சுவடு பதிப்பகம்

ஆனந்த்

கவிஞர், மனநல ஆலோசகர், மொழிபெயர்ப்பாளர். இந்தியப் புராணங்களை ஆழ்ந்து பரிசீலிக்கும் ராபர்ட்டோ கலாஸோவின் 'க' உள்ளிட்ட நாவல்களை மொழிபெயர்த்தவர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.