/

ஓல்டு லவ் : ஐசக் பாஷாவிஸ் சிங்கர்

தமிழில்: டி. ஏ. பாரி

கிட்டதட்ட அன்றைய இரவு முடிந்துவிட்டதென்றும் இனி உறக்கம் வரப்போவதில்லை எனும் சலிப்புடன் ஹாரி பென்டைனர் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்துகொண்டார். அவர் இரவுகளில் நன்றாக உறங்கி பல ஆண்டுகளாகிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு புரோஸ்டேட் அறுவைசிகிச்சை செய்திருந்தாலும் சிறுநீர்ப்பையில் ஏற்படும் தொடர் அழுத்தத்தை அது எவ்வகையிலும் குணப்படுத்தியதாக தெரியவில்லை. அவர் அதிகபட்சம் ஒருமணிநேரம் தொடர்ந்து உறங்குவார், அதற்குள் சிறுநீர் கழிக்க எழும்ப வேண்டியதிருக்கும். அவரது கனவுகளும்கூட இந்த உந்துதலை சுற்றியே அமைந்திருந்தன. படுக்கையிலிருந்து எழுந்து நடுக்கும் கால்களுடன் மெதுவாக நடந்து பாத்ரூமை அடைந்தார். திரும்பி வரும்போது பால்கனிக்கு சென்றார், அவரது வீடு அடுக்குமாடி குடியிருப்பின் பதினோராவது தளத்தில் அமைந்திருந்தது. பால்கனியின் இடதுபக்கம் மியாமியின் வானுயர் கட்டிடங்களை கண்டார், வலபக்கமோ கடலின் ஓயாத இரைச்சல். இரவில் காற்று சற்றே குளிர்ந்திருந்தாலும் புழுக்கம் குறையவில்லை. காற்றில் எண்ணெய் மற்றும் இறந்த மீன்களின் வாடை கலந்து வீசியது. கடற்காற்றின் தென்றலை தன் குளிர்நெற்றியில் அனுபவித்தபடி ஹாரி நீண்டநேரம் அங்கு நின்றிருந்தார். மியாமி கடற்கரை தற்போது பெரிய நகரமாக மாறிவிட்டாலும் சற்று தொலைவில் இருக்கும் சதுப்பு நிலத்தின் அருகாமையையும் அதன் பசுமையின் நீராவியையும் உணரமுடிவதாக கற்பனை செய்தார். சிலசமயம் ஒரு சீகல் பறவை இரவில் விழித்துக்கொண்டு கீச்சிடும். கடற்கரையில் நீண்ட சீலா மீனின் உடலோ அல்லது ஒரு குழந்தை திமிங்கலத்தின் உடலோகூட சமயங்களில் கரையொதுங்குவதுண்டு. ஹாரி ஹாலிவுட்டின் திசையை நோக்கினார். எவ்வித வளர்ச்சியும் அடையாமல் இருந்த இப்பகுதி எப்போது மாறியது? சில ஆண்டுகளுக்குள்ளாகவே கேட்பாரற்று கிடந்த இந்த நிலம் நட்சத்திர விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், உணவகங்கள, பல்பொருள் அங்காடிகள், வங்கிகள் என நெரிசல்மிக்க பகுதியாக மாறிவிட்டது. தெருவிளக்குகளும் நியான் விளம்பரங்களும் வான் நட்சத்திரங்களை மங்கச்செய்துவிட்டன. நடுஇரவிலும் சாலையில் கார்கள் விரைந்தன. விடிவதற்கு முன்பாக இந்த மக்கள் அவசரமாக எங்குதான் செல்கிறார்கள்? இவர்கள் தூங்கவே மாட்டார்களா? இவர்களை இயக்கும் விசைதான் என்ன? ”சரிதான், இது என்னுடைய உலகம் அல்ல. ஒருமுறை நீங்கள் எம்பதை தாண்டிவிட்டால் அதன்பின் பிணத்திற்கு சமம்.”

கைப்பிடி கம்பியில் கையை ஊன்றியபடி அவர் கண்ட கனவை நினைவுகூர முயன்றார். அவரால் நினைவுகூர முடிந்தது ஒன்றே ஒன்றுதான், கனவில் வந்த ஆண்கள் பெண்கள் என அனைவருமே ஏற்கனவே இறந்துவிட்டவர்கள். கனவுகள் இறப்பை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. கனவுகளில் அவருடைய மூன்று மனைவிகளுமே உயிருடன் இருந்தனர், மகன் பில் மற்றும் மகள் சில்வியாவும் அவ்வாறே. நியூ யார்க், போலந்தில் உள்ள அவரது சொந்த ஊர், மியாமி கடற்கரை என அனைத்து நிலங்களும் ஒன்றாக கலந்துவிட்டிருந்தது. அவர் ஒரே சமயம் சின்னப்பையனாகவும் முதிர்ந்த ஆணாகவும் இருந்தார்.

ஒரு நிமிடம் கண்களை மூடினார். ஏன் கனவுகளை நினைவுகூர முடிவதில்லை? எழுபது எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சில சம்பவங்களின் விவரங்களைகூட அவரால் துல்லியமாக நினைவுகூர முடிந்தது, ஆனால் நேற்றிரவு கண்ட கனவு மாயமாய் மறைந்துவிட்டது. ஏதோவொரு மாயசக்தி அதன் தடயங்களை எஞ்சவிடாமல் அழித்துவிடுகிறது. ஒரு மனிதனின் வாழ்வில் மூன்றிலொரு பங்கு நினைவுகள் கல்லறைக்கு செல்லும் முன்பே மறைந்துவிடுகிறது.

சிறிதுநேரம் கழித்து ஹாரி அங்கு பால்கனியில் கிடந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தார். கடலை நோக்கினார், கிழக்கு திசையில் அன்றைய தினம் இன்னும் சற்று நேரத்தில் விடிவதற்காக காத்திருந்தது. ஒருகாலத்தில் காலையில் எழுந்தவுடன் முதல்வேலையாக நீச்சலுக்கு போவதே அவரது வழக்கமாக இருந்தது, அதுவும் குறிப்பாக கோடை காலங்களில்.. ஆனால் தற்போது அம்மாதிரி விஷயங்களில் எல்லாம் அவருக்கு ஆவல் இருக்கவில்லை. செய்தித்தாள்களில் அவ்வப்போது நீச்சல்காரர்களை சுறாமீன் தாக்கியது குறித்தும் இன்னும் சில கடல்வாழ் உயிரினங்களின் தாக்குதலால் மோசமாக பாதிக்கப்பட்டது குறித்தும் செய்திகள் வந்தன. இன்றைய நிலையில் ஒரு வெந்நீர் குளியல் எடுத்துக் கொள்வதே அவருக்கு போதுமானதாக இருந்தது.

அவரது மனவோட்டம் வணிகம் தொடர்பான விஷயங்களின் பக்கம் திரும்பியது. பணத்தினால் அவருக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை என நன்றாகவே அறிவார், இருப்பினும் ஒருவர் எப்போதுமே அனைத்தும் வெறுமையில் சென்று முடியும் தன்மை குறித்து யோசித்துக் கொண்டிருக்க முடியாது. நடைமுறை காரியங்களை குறித்து சிந்திப்பது எளிதாக இருந்தது. பங்குகளும் பத்திரங்களும் உயர்ந்தன அல்லது சரிந்தன. பங்கு ஆதாயங்களும் பிற வருமானங்களும் வங்கியில் செலுத்தப்பட்டு வரி கணக்குக்காக தனியாக கணக்கு புத்தகத்தில் குறித்துவைக்க வேண்டும். தொலைபேசி, மின் கட்டணங்களும் குடியிருப்புக்கான பராமரிப்பு கட்டணமும் செலுத்தப்பட வேண்டும். வாரம் ஒருமுறை ஒரு பெண்மணி வந்து அவரது வீட்டை சுத்தம் செய்து துணிமணிகளை சலவை செய்துவிட்டுப் போவார். எப்போதாவது அவரது உடைகளை உலர் சலவை செய்யவும் காலணிகளை பழுது பார்க்கவும் வேண்டியிருக்கும். பதிலளிக்க வேண்டிய கடிதங்களும் அவருக்கு வந்துகொண்டிருந்தன. அவர் ஆண்டு முழுக்க ஆலயத்திற்கு செல்வதில்லையென்றாலும் யூத புத்தாண்டின் போதும் யோம் கிப்பூர் (Yom Kippur) நோன்பு திருநாளின் போதும் மட்டும் வழிபாட்டு தலத்திற்கு சென்றுவருவார். இதனால் அவருக்கு உதவிக் கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. இஸ்ரேலுக்கு, மரபான யூத பள்ளிகளுக்கு, முதியோர் விடுதிகளுக்கு, மருத்துவமனைகளுக்கு என. ஒவ்வொருநாளும் குப்பையில் தள்ளவேண்டிய ‘அஞ்சல் குவியல்’ அவருக்கு வந்துசேர்ந்தது, தள்ளிவிடுதற்கு முன் குறைந்தபட்சம் அவற்றை ஒருமுறையேனும் திறந்துபார்க்க வேண்டியிருந்தது.

தன் இறுதி ஆண்டுகளை அவர் மனைவியோ அல்லது ஒரு பணிப்பெண்ணோ கூட இல்லாமல் வாழ்ந்துவிட முடிவெடுத்துவிட்டதால் அவருக்கான உணவை அவரே தயாரித்துக் கொள்ள வேண்டியிருந்தது, இரு தினங்களுக்கு ஒருமுறை அருகிலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றுவந்தார். தள்ளுவண்டியை உந்தியபடி அவர் பால், பாலாடைக்கட்டி, பழங்கள், பெட்டியில் அடைத்த காய்கறிகள், இறைச்சி துண்டுகள் போன்றவற்றையும் அவ்வப்போது காளான், ஒரு ஜாடி பீட்ரூட் சூப் அல்லது செறிவாக்கப்பட்ட மீன் உருண்டைகளையும் அவர் வாங்கி வருவதுண்டு. நிச்சயமாக பணிப்பெண் வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவருக்கு வசதியிருந்தது, ஆனால் சில பணிப்பெண்கள் திருடவும் செய்வார்கள். அதுபோக பிறர் அவரை கவனித்துக் கொண்டால் அவர் தன்னை வைத்துக்கொண்டு என்னதான் செய்வார்? யூத திருமுறையில் ஒரு வாசகம் சொல்லப்பட்டிருப்பதை நினைவுகூர்ந்தார், செயலின்மை புத்தி பேதலிப்பதில் சென்று முடியும். சமையலறையில் இருக்கும் மின்அடுப்புடன் போராடுவது, வங்கிக்கு செல்வது, செய்தித்தாள் வாசிப்பது – அதிலும் குறிப்பாக வணிக பகுதி – அதன்பிறகு மெரில் லின்ச்சில் உள்ள அலுவலகத்திற்கு சென்று இரண்டு மணிநேரம் திரைப்பலகையில் தோன்றும் நியூயார்க் பங்கு சந்தையின் குறியீடுகளை பார்த்துக் கொண்டிருப்பது அவரை உயிர்ப்புடன் வைத்திருந்தது. சமீபத்தில் வீட்டில் ஒரு தொலைக்காட்சி பெட்டியும் பொருத்தியுள்ளார், ஆனால் அரிதாகத்தான் அதை பயன்படுத்தினார்.

குடியிருப்பில் இருக்கும் அண்டைவீட்டார் அவர் ஏன் எல்லாவற்றையும் தானே செய்துகொள்கிறார் என்று சந்தேகத்துடன் கேட்பதுண்டு. அனைவருமே அவர் வசதிமிக்கவர் என அறிவார்கள். அவர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டு இலவச அறிவுரைகள் வழங்க எப்போதுமே தயாராய் இருந்தனர்: அவர் ஏன் இஸ்ரேலுக்கு குடிபெயரவில்லை? கோடையில் ஏன் மலைப்பகுதிகளில் இருக்கும் விடுதிகளுக்கு செல்வதில்லை? ஏன் மீண்டும் திருமணம் செய்துகொள்ளவில்லை? ஏன் ஒரு காரியதரிசியை வைத்துக் கொள்ள கூடாது? அவர் ஒரு கஞ்சன் என்றும் பெயர் பெற்றிருந்தார். அவர்கள் அவருக்கு நினைவூட்டியபடியே இருந்தனர் “நீங்கள் எதையும் கொண்டுபோக முடியாது” – ஏதோவோர் அரிய உண்மையை சொல்வதைப் போல. இந்த காரணத்தினாலேயே அவர் குடியிருப்போர் சங்கத்தின் கூட்டங்களுக்கும் விருந்துகளுக்கும் செல்வதை நிறுத்திவிட்டார். அனைவருமே அவரிடமிருந்து எதையேனும் எடுத்துக்கொள்ளவே முயற்சித்தனர், ஆனால் அவருக்கு தேவைப்பட்டால் எவரும் ஒருபைசா கூட கொடுத்திருக்க மாட்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன் அவர் மியாமி கடற்கரையிலிருந்து மியாமி நகருக்கு பேருந்து ஏறியபோது டிக்கெட் விலையில் அவரிடம் இரண்டு சென்ட்டுகள் சில்லறை குறைவாக இருந்தது. அவரிடம் இருந்ததெல்லாம் இருபது டாலர் நோட்டுகள். யாருமே அவருக்கு இரண்டு சென்ட்டுகள் கொடுக்கவோ அல்லது இருபது டாலர் நோட்டுக்கு சில்லறை கொடுக்கவோ முன்வராததால் ஓட்டுநரால் கீழே இறக்கிவிடப்பட்டார்.

உண்மை என்னவெனில் எந்த உயர்தர விடுதியிலும் அவருக்கு தன் வீட்டில் இருப்பதுபோல சௌகரியமாக உணரமுடியவில்லை. அங்கு அளிக்கப்படும் உணவு அவருக்கு திகட்டுவதாகவும் அவருடைய எதிர்பார்ப்பிற்கு மாறாகவும் இருந்தது. உப்பும், காரமும், கொழுப்பும் தவிர்த்த அவரது உணவுமுறையை அவர் மட்டுமே நிர்வகிக்க முடிந்தது. அதுபோக ரயில் மற்றும் விமான பயணங்களும் அவரது உடல்நிலைக்கு ஒத்துவரக்கூடியதல்ல. இந்த வயதில் மறுமணம் செய்துகொள்வதும் சரியாகப் படவில்லை. இளம் பெண்கள் உடலுறவை எதிர்பார்த்தனர், வயதான பெண்கள் மீதோ அவருக்கு துளியும் ஆர்வமில்லை. தற்போதைய சூழலில் அவர் தனியாக வாழவும் சாகவுமே விதிக்கப்பட்டிருந்தது.

கிழக்கு வானம் சிவக்க தொடங்கியிருந்த சமயத்தில் அவர் குளியலறைக்கு சென்றார். அங்கு கண்ணாடியில் தெரியும் தன் உருவத்தை கவனித்தபடி சிறிதுநேரம் நின்றார் – ஒடுங்கிப்போன கன்னங்கள், ஆங்காங்கே வெள்ளைமுடிகளுடன் வெட்டவெளியான மண்டை, துருத்திக் கொண்டு நிற்கும் குரல் வளை, ஒரு கிளியுனுடைய அலகைப்போல வளைந்த மூக்கின் நுனி. மங்கிப்போன நீலக்கண்கள் இரண்டும் சம அளவில் இல்லாமல் மேல்கீழாக இருந்தன, அவை ஒரேசமயம் சோர்வையும் இளைமைத்துடிப்பின் மிச்சங்களையும் பிரதிபலித்தன. அவர் ஒருகாலத்தில் வசீகரமான ஆண்மகனாக இருந்தவர். அவருக்கு மனைவிகளும் காதல் விவகாரங்களும் இருந்தது. காதல் கடிதங்களின் கத்தைகளையும் புகைப்படங்களையும் அவர் எங்கோ எடுத்து வைத்திருந்தார்.

ஹாரி பென்டைனர் பிற புலம்பெயர் மக்களைப் போல பணமோ படிப்பறிவோ இல்லாமல் அமெரிக்காவிற்கு வந்துசேர்ந்தவர் அல்ல. பத்தொன்பது வயதுவரை தனது சொந்த ஊரில் வாழ்ந்த அவர் அங்கு பள்ளிக்கு சென்றிருக்கிறார். அவருக்கு ஹீப்ரு தெரியும் அதுபோக செய்தித்தாள்களையும் உலக விஷயங்களை குறித்த பிற புத்தகங்களையும் ரகசியமாக வாசித்திருக்கிறார். ரஷ்ய, போலந்து மற்றும் ஜெர்மன் மொழிகளிலும் அவருக்கு தேர்ச்சி உண்டு. இங்கு அமெரிக்க வந்தவுடன் அவர் பொறியியலாளர் ஆகிவிடும் நம்பிக்கையில கூப்பர் யூனியன் கல்லூரியில் சேர்ந்தார், ஆனால் ரோசலி ஸ்டெய்ன் எனும் அமெரிக்க பெண்ணுடன் காதலில் விழுந்து அவளையே திருமணம் செய்துகொள்ளும்படி ஆனது, அவளுடைய தந்தை அவரை கட்டுமான தொழிலில் ஈடுபடுத்தினார். ரோசலி தன் முப்பது வயதில் புற்றுநோயால் இறந்துபோய்விட இரண்டு குழந்தைகளுடன் அவர் தனித்து விடப்பட்டார். ஒருபுறம் அவரிடம் செல்வம் சேர்ந்துவந்தாலும் இறப்பு அவரிடமிருந்து பறித்துக்கொண்டே இருந்தது. அறுவைசிகிச்சை நிபுணனான அவரது மகன் பில் (Bill) தன்னுடைய நாற்பத்தியாறாவது வயதில் மாரடைப்பால் இறந்துவிட யூதர்களாக இருக்க விரும்பாத அவனது இரு குழந்தைகள் எஞ்சி நின்றனர். ஒரு கிருஸ்துவ பெண்ணான அவர்களின் அம்மாவோ கனடாவில் எங்கோ வேறொரு ஆணுடன் சென்றுவிட்டாள். ஹாரியின் மகள் சில்வியா தன் அம்மாவுக்கு நேர்ந்தது போலவே அதேவகை புற்றுநோயால் அதே வயதில் பாதிக்கப்பட்டாள். சில்வியா எந்தக் குழந்தைகளையும் விட்டுச் செல்லவில்லை. ஹாரி அதன்பின் தன் வம்சத்தை வளர்த்துக்கொள்ள விரும்பவில்லை, அவரது இரண்டாவது மனைவி எட்னா அவளிடம் ஒன்றிரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் இறுதிவரை மறுத்துவிட்டார்.

ஆம், மரணத்தின் தேவதை அவரிடமிருந்து அனைத்தையும் எடுத்துக்கொண்டு விட்டது. ஆரம்பத்தில் அவரது பேரக்குழந்தைகள் எப்போதாவது கனடாவிலிருந்து அழைத்து அவருக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டைகளும் அனுப்பி வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் அவர்கள் அழைப்பதேயில்லை அவரும் தன்னுடைய உயிலில் அவர்களின் பெயரை நீக்கிவிட்டார்.

ஹாரி சவரம் செய்தபடி ஒரு மெல்லிசை பாடலை வாய்க்குள் முனகினார் – அது எங்கிருந்து வந்தது என்பது அவருக்கே தெரியவில்லை. அது எங்கேனும் தொலைக்காட்சியில் கேட்ட பாடலா, அல்லது பழைய நினைவுகளிலிருந்து எழுந்து வரும் போலந்து பாடலா? அவர் பொதுவாக இசை கேட்பவர் அல்ல பாடுவது அனைத்துமே அபஸ்வரமாக இருக்கும் ஆனால் குளியலறையில் பாடும் வழக்கத்தை மட்டும் இன்னும் விட்டுவிடவில்லை. அவர் மலம் கழிக்க வெகுநேரம் ஆனது. மலச்சிக்கலுக்காக ஆண்டுக்கணக்கில் எடுத்துவரும் மாத்திரைகளால் எந்த பயனும் ஏற்படவில்லை, எனவே ஒருநாள்விட்டு ஒருநாள் அவர் எனிமா எடுத்துக்கொண்டார் – எண்பதுகளில் இருக்கும் மனிதனுக்கு இதுவொரு நீண்ட கடினமான செயல்பாடுதான். அவர் குளியல்தொட்டியில் அமர்ந்தபடி உடலை இலகுவாக்கும் அசைவுகளை மேற்கொண்டார், மெலிந்த கால்களை உயர்த்துவதும் துடுப்பைப் போல கைகளால் நீரில் அலைவதும் என விளையாடினார். இவையெல்லாம் வாழ்வை நீட்டிப்பதற்காக செய்யப்படுபவை, ஆனால் இவற்றை செய்யும்போதே ஹாரி தன்னைத்தானே கேட்டுக்கொண்டார், “ஏன் தொடர்ந்து வாழ வேண்டும்?” அவரது இருப்புக்கு சாதகமான காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா? இல்லை, அவரது வாழ்வுக்கு எந்த அர்த்தமும் இல்லை – ஆனால் குடியிருப்பில் இருக்கும் பிறரது வாழ்வு மாத்திரம் அதிக அர்த்தம் கொண்டுள்ளதா என்ன? அந்த குடியிருப்பு முழுவதுமே வயதானவர்களால் நிறைந்திருந்தது, எல்லாருமே சௌகரியமான நிலையில் இருந்தனர், பெரும்பாலானவர்கள் பணக்காரர்கள். சில ஆண்களால் நடக்க முடியாது, அல்லது கால்களை இழுத்துக்கொண்டு நடந்தனர். சில பெண்கள் ஊன்றுகோலை பயன்படுத்தினர். பலரும் மூட்டுவலியால் அல்லது பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவொரு குடியிருப்பு கட்டிடம் அல்ல, ஒரு மருத்துவ வளாகம் என்றே சொல்ல வேண்டும். குடியிருப்புவாசிகள் இறந்துவிட்டால் அது சில வாரங்கள் அல்லது மாதங்கள் கழிந்தும் அவருக்குத் தெரிவதில்லை. அக்குடியிருப்பு தொடங்கிய காலத்திலிருந்தே அங்கிருப்பவராயினும் அவரால் யாரையும் அடையாளம் காணமுடிவதில்லை. நீச்சல் குளத்திற்கோ சீட்டு விளையாடுவதற்கோ செல்வதில்லை. லிஃப்டிலும் சூப்பர்மார்க்கெட்டிலும் ஆண்கள் பெண்கள் என பலரும் அவருக்கு முகமன் சொன்னாலும் அவர்கள் யாரென்று அவருக்குத் தெரியாது. சமயங்களில் அவரிடம் யாரேனும் கேட்பதுண்டு, “எப்படி இருக்கிறீர்கள் மிஸ்டர் பென்டைனர்?” அவர் தன் வழக்கமான பதிலை அளித்தார், “இந்த வயதில் எப்படி இருக்க முடியும்? கிடைக்கும் ஒவ்வொருநாளுமே பரிசுதான்.”

இந்த கோடை தினம் வழக்கமான நாட்களைப் போலவே தொடங்கியது. ஹாரி சமையலறையில் தனக்கான காலையுணவை தயார் செய்தார், கொழுப்பு நீக்கப்பட்ட பாலுடன் சேர்த்த மொறுமொறுப்பான வறுத்த அரிசியும் கருப்புக் காபியும். சுமார் ஒன்பதரை மணிக்கு லிப்டில் இறங்கி தனக்கு வந்திருந்த அஞ்சல்களை எடுத்துவந்தார். காசோலைகள் வராமல் அவருக்கு ஒருநாளும் கடந்ததில்லை, அன்றைக்கு அவருக்கு பெருந்தொகை வந்திருந்தது. பங்குகள் வீழ்ந்தாலும் நிறுவனங்கள் ஈவுத்தொகையை வழக்கம்போல் அளித்துவந்தன. கட்டிடங்களின் வாடகை, பத்திரங்கள், கிட்டத்தட்ட அவரே மறந்துவிட்ட பல்வேறு வியாபார முதலீடுகள் என ஹாரிக்கு பலவழிகளில் பணம் வந்து கொண்டிருந்தது. ஒரு காப்பீட்டு நிறுவனம் அவருக்கு ஆண்டுத்தொகை அளித்துவந்தது. பல ஆண்டுகளாக சமூக பாதுகாப்பு நிதியத்திலிருந்து அவருக்கு மாதாந்திர காசோலையும் வருவதுண்டு. அன்றைய தினம் மட்டும் மொத்தம் அவருக்கு பதினோராயிரம் டாலர்கள் வருமானம் வந்திருந்தது. இதில் கணிசமான பகுதி வரிசெலுத்த போய்விடும் என்பது உண்மையென்றாலும் கையில் ஐந்தாயிரம் டாலர்களாவது மிச்சமிருக்கும். தொகையை கணக்கிடும் போதே அவர் யோசித்தார், மெரில் லின்ச்சில் இருக்கும் அலுவலகத்திற்கு சென்று பங்குச்சந்தையை கவனிக்கலாமா? இல்லை, அதனால் எந்தப் பயனும் இல்லை. காலையில் பங்குகள் உயர்ந்தாலும் நாள் முடிவடையும்போது நஷ்டத்திலேயே முடியும். “சந்தை பைத்தியக்காரத்தனமானது” தனக்குள் சொல்லிக் கொண்டார். உயரும் சந்தையில் பணவீக்கமும் உயர்கிறது ஆனால் சரியும் சந்தையில் அவ்வாறு நடப்பதில்லை என்பதை மாறாவிதியாகவே கருதி வந்தார். ஆனால் தற்போதோ பங்குகளும் டாலரும் சேர்ந்தே வீழ்கின்றன. சரிதான், இறப்பு தவிர எது குறித்தும் நீங்கள் உறுதியாக சொல்லிவிட முடியாது.

பதினொரு மணியளவில் காசோலைகளை செலுத்துவதற்காக வங்கிக்கு கிளம்பி சென்றார். சிறிய வங்கிதான், அங்கிருக்கும் அனைவருக்குமே அவரைத் தெரிந்திருந்தது, பலரும் முகமன் சொன்னார்கள். அங்கு அவருக்கொரு பாதுகாப்பு பெட்டகம் இருந்தது, அதில் நகைகளும் விலையுயர்ந்த பொருட்கள் சிலவற்றையும் வைத்திருந்தார். மூன்று மனைவிகளிடமிருந்த சொத்துக்கள் முழுதும் அவரை தானாகவே வந்து சேர்ந்திருந்தது, அவர்கள் மூவருமே உயில் எழுதி வைத்திருக்கவில்லை. அவரது மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்பது அவருக்கே தெரியாது ஆனால் நிச்சயம் ஐந்து மில்லியன் டாலர்களுக்கு குறையாமல் இருக்கும். இருப்பினும் வீதியில் செல்லும் எந்த சாமானியனும் அணியக்கூடிய சாதாரண சட்டையும் காற்சாட்டையும் அணிந்தபடியே வெளியே உலாவினார், இரண்டு வருடங்களாக உபயோகித்து வரும் நைந்துபோன தொப்பியும் ஷுவுமே அணிந்திருந்தார். கைத்தடியை ஊன்றியபடி சிறிய அடிகளாக எடுத்துவைத்து நடந்தார். அவ்வப்போது பின்னால் திரும்பி பார்த்துக் கொள்வார், யாரேனும் அவரை பின்தொடரலாம். ஏதேனும் போக்கிரி அவர் பணக்காரர் எனத் தெரிந்து அவரை கடத்த திட்டமிடலாம். பட்டப்பகலில் வீதி முழுக்க மக்களால் நிறைந்திருந்தாலும் இப்போது அவரை இழுத்து ஒரு காரில் தள்ளி எங்கேனும் ஒரு மறைவிடத்திற்கு கடத்திக்கொண்டு போனால் யாரும் தடுக்கப் போவதில்லை. அவரை மீட்பதற்கு யாரும் பணமளிக்கவும் போவதில்லை.

வங்கியில் அவரது வேலை முடிந்தவுடன் வீட்டை நோக்கி திரும்பினார். சூரியன் உச்சியை அடைந்ததில் வெயில் தகித்தது. பெண்கள் கடை முகப்பின் நிழலில் நின்றுபடி ஜன்னல் வழியாக துணிகளை, காலணிகளை, உள்ளாடைகளை, குளியல் உடைகளை நோட்டமிட்டனர். அவர்களின் முகம் தீர்மானமின்மையை காட்டியது – வாங்குவதா அல்லது வேண்டாமா? ஹாரி ஜன்னல் பக்கம் பார்த்தார். அவரால் அங்கு என்ன வாங்க முடியும்? அவர் விரும்பும் எதுவும் அங்கிருக்கவில்லை. இப்போதிலிருந்து மாலை ஐந்து மணிக்கு இரவுணவை சமைக்க தொடங்கும்வரை நிச்சயமாக அவருக்கு ஒன்றுமே தேவையிருக்கவில்லை. வீட்டுக்குச் சென்றவுடன் என்ன செய்வார் என்பது அவருக்கு தெளிவாக தெரிந்திருந்தது – சோபாவில் அமர்ந்து குட்டித்தூக்கம் போடுவார்.

நல்லவேளையாக அவரை யாரும் கடத்திவிடவில்லை, யாரும் பிடித்துவைக்கவில்லை, வீட்டை அடைந்தபோது யாரும் கதவை உடைத்திருக்கவில்லை. குளிரூட்டி வேலை செய்தது, குளியலறையில் இருக்கும் குழாய்களும் சரியாகவே வேலைசெய்தன. அவர் ஷூக்களை கழற்றிவிட்டு சோபாவில் அமர்ந்து இலகுவானார்.

அவர் இன்னமும் பகற்கனவுகள் காண்பவராக இருப்பது வினோதமான விஷயம்தான். எதிர்பாராத வெற்றிகள் கிடைப்பது போலவோ இழந்துவிட்ட ஆற்றல்கள் திரும்ப கிடைப்பது போலவோ அல்லது உடல்வலுமிக்க சாகசங்கள் புரிவது குறித்தோ கற்பனை செய்தார். மனிதமனம் முதுமையை ஏற்றுக் கொள்வதில்லை. அது இன்னமும் இளமையின் அதே விருப்பங்களை வெளிப்படுத்தியது. ஹாரி அடிக்கடி தன் மனதிடம் சொல்வதுண்டு, “கிறுக்குத்தனமாக நடந்து கொள்ளாதே. எல்லாவற்றுக்கும் காலம் கடந்துவிட்டது. இனி எதற்கும் நீ ஆசைப்பட முடியாது.” ஆனால் மனமோ இல்லாதவற்றை நம்பிக்கொண்டிருப்பதை கைவிடுவதேயில்லை. ஒரு மனிதன் தன் நிறைவேறாத ஆசைகளையே கல்லறைக்கு கொண்டு செல்கிறான் என்பது யார் சொன்ன வாக்கியம்?

அவர் சற்று கண்ணயர்ந்த போது கதவருகே சலசலப்பை கேட்டு விழிப்படைந்தார். சற்றே கவனமானார். இதுவரை யாரும் அவரை காண வந்ததில்லை. “நிச்சயம் மரணத்தின் தூதுவனாகத்தான் இருக்க வேண்டும்,” அவர் நிச்சயித்துக்கொண்டு எழுந்து சென்று கதவை அதில் இணைக்கப்பட்ட சங்கிலியின் அளவுக்கு மட்டும் திறந்தார். அங்கு நின்றிருந்தது ஒரு குள்ளமான பெண். சிவந்த கன்னங்கள், மஞ்சள் கண்கள், தூக்கி சீவப்பட்ட பொன்னிற கூந்தலுடன் புன்னகைத்தாள். வெண்ணிற மேலாடை அணிந்திருந்தாள்.

ஹாரி கதவை திறந்ததும் அப்பெண் வெளிநாட்டு ஆங்கில உச்சரிப்பில் பேசத் துவங்கினாள், “உங்கள் தூக்கத்தை கெடுத்துவிடவில்லை என நம்புகிறேன். நான் உங்கள் இடப்பக்க வீட்டில் புதிதாக குடிவந்திருக்கிறேன். என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என்று வந்தேன். என் பெயர் திருமதி. ஏதெல் ப்ரோகில்ஸ். வேடிக்கையான பெயர் இல்லையா? அது என் மறைந்த கணவரின் பெயர். திருமணத்துக்கு முந்தைய எனது பெயர் கோல்ட்மேன்.”

ஹாரி ஆச்சர்யத்தில் கண்கள் விரிய பார்த்தார். அவருக்கு இடப்பக்கம் இருந்தவர் தனியாக வாழும் ஒரு வயதான பெண்மணி. அவளது பெயரை நினைவுகூர்ந்தார் – திருமதி ஹால்பெர்ட். ஹாரி கேட்டார் “திருமதி ஹால்பெர்ட்டுக்கு என்ன ஆயிற்று?”

“எல்லோருக்கும் நடப்பதுதான்,” அவள் கசப்புடன் பதிலளித்தாள்.

“அது எப்போது நடந்தது? எனக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது.”

“அது நடந்து ஏற்கனவே ஐந்து மாதம் ஆகிவிட்டது.”

“உள்ளே வாருங்கள். மக்கள் இறப்பதுகூட சமயங்களில் தெரிவதில்லை,” ஹாரி சொன்னார். “அவள் நல்ல பெண்மணி… எப்போதும் தன்னை சற்று தொலைவிலேயே வைத்திருந்தாள்.”

“எனக்கு அவர்களைப் பற்றி தெரியாது. நான் அவர்களின் மகளிடமிருந்து அபார்ட்மெண்டை வாங்கினேன்.”

“தயவுசெய்து உட்காருங்கள். உங்களுக்கு கொடுப்பதற்கு கூட என்னிடம் எதுவுமில்லை. எங்கோ ஒரு பாட்டில் மது வைத்திருந்தேன், ஆனால்..”

“எனக்கு எதுவும் அவசியமில்லை அதுபோக நான் பகலில் மது அருந்துவதில்லை. நான் புகைக்கலாமா?”

“நிச்சயமாக, நிச்சயமாக.”

அந்தப் பெண் சோபாவில் அமர்ந்தாள். சட்டென ஒரு ஆடம்பரமான லைட்டரை எடுத்து லாவகமாக சிகரெட்டை பற்றவைத்தாள். நகங்களுக்கு சிவப்பு சாயம் அடிக்கப்பட்டிருந்த விரல்களினிடையே ஒரு பெரிய வைர மோதிரம் மின்னுவதை ஹாரி கவனித்தார்.

அவள் கேட்டாள், “நீங்கள் இங்கு தனியாக வாழ்கிறீர்களா?”

“ஆம், தனியாக.”

“நானும் தனியாகத்தான். நாம் என்ன செய்ய முடியும்? என் கணவருடன் இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தேன், ஒருநாள் கூட சண்டை வந்தது கிடையாது. எங்கள் வாழ்வு மேகங்கள் குறுக்கிடாத பிரகாசமான தெளிந்த வானமாக இருந்தது. திடீரென அவர் இறந்ததும் நான் பரிதாபகரமான நிலையில் தனித்து விடப்பட்டேன். நியூயார்க்கின் வானிலை எனக்கு ஒத்து வரவில்லை. நான் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனவே என் மிச்ச காலத்தை இங்குதான் கழிக்க வேண்டும்.”

“நீங்கள் பொருட்களுடன் சேர்த்தே அபார்ட்மெண்டை வாங்கிவிட்டீர்களா?” ஹாரி தொழில்முறையில் கேட்பதுபோல கேட்டார்.

“ஆம் அனைத்துமே. அவர்களின் மகள் துணிகளும் விரிப்புகளும் தவிர எதுவுமே தனக்கு வேண்டாமென்றுவிட்டாள். எல்லாவற்றையும் சேர்த்து சொற்ப விலைக்கே கொடுத்துவிட்டாள். பாத்திரங்களையும் அறைக்கலன்களையும் தனியாக சென்று வாங்குமளவு எனக்கும் பொறுமை கிடையாது. நீங்கள் இங்கு நீண்டகாலமாக இருந்து வருகிறீர்களா?”

அவள் ஒவ்வொரு கேள்வியாக கேட்டுக் கொண்டேயிருந்தாள், ஹாரியும் விருப்பத்துடன் பதிலளித்தார். பார்ப்பதற்கு இளமையாகத் தோன்றினாள் – ஐம்பதுக்கு குறைவாகத்தான் இருக்கும் அல்லது இன்னும் இளையவளாக இருக்கலாம். அவர் அவளுக்கு எழுமிச்சை பாணமும் ஒரு தட்டில் பிஸ்கெட்டுகளும் கொண்டுவந்து மேசையில் வைத்தார். இரண்டுமணி நேரம் ஆகியிருந்தது ஆனால் அவருக்கு நேரம் போவதே தெரியவில்லை. ஏதெல் கால்களை குறுக்காக போட்டு அமர்கையில் ஹாரி அவளது வட்டமான மூட்டுகளை கவனித்தார். அவள் அதற்குள் தன் பேச்சை போலந்து உச்சரிப்புடன் கூடிய இட்டிஷ் மொழிக்கு மாற்றியிருந்தாள். ஒரு நெருங்கிய உறவினரைப்போல அணுக்கத்தை வெளிப்படுத்தினாள். ஹாரிக்குள் இருக்கும் ஏதோவொன்று மகிழ்ந்தது. அது வேறெப்படியும் நிகழ்ந்திருக்க முடியாது ஆனால் எப்படியோ விண்ணுலகம் அவரது ரகசிய ஆசைகளை ஏற்றுக்கொண்டது. இப்போது அவள் பேசுவதை கவனிக்கும் போதுதான் இத்தனை ஆண்டுகளாக தான் எவ்வளவு தனிமையில் இருந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தார். மிக அரிதாகத்தான் அவர் யாரிடமேனும் பேசியிருக்கிறார் எனும் உண்மை முகத்திலறைந்தது. அவள் பக்கத்து வீட்டுக்காரியாக கிடைத்தது கூட நல்லது தான். அவளின் அருகாமையில் அவர் இளமையாகவும் அதிகம் பேசக்கூடியவராகவும் உணர்ந்தார். அவர் அவளிடம் தன் மூன்று மனைவிகள் குறித்தும் குழந்தைகளின் வாழ்வில் நடந்த சோதனைகள் குறித்தும் சொன்னார். தன் முதல் மனைவி இறந்த சமயத்தில் இன்னொரு அழகான பெண்ணை சந்தித்ததை பற்றியுங்கூட குறிப்பிட்டார்.

ஏதெல் சொன்னாள், “நீங்கள் எதுவும் சமாளிக்க வேண்டியதில்லை. ஒரு ஆண் எப்போதுமே ஆண்தான்.”

“எனக்கு வயதாகிவிட்டது.”

“ஆணுக்கு எப்போதும் வயதாவதில்லை. விஸ்துலா (Vistula) ஆற்றின் கரையில் அமைந்த நகரில் எனக்கு ஒரு மாமா இருக்கிறார், எண்பது வயது. அவர் இருபது வயதுப் பெண்ணொருத்தியை மணம்புரிந்தார், அவள் அவருடன் மூன்று குழந்தைகளை பெற்றுக்கொண்டாள்”

“விஸ்துலா ஆற்றின் கரையிலா? என் சொந்த ஊர் அருகேதான் உள்ளது, கோவல் (Kowal) என்று பெயர்.”

“தெரியும். நான் கோவலுக்கு சென்றிருக்கிறேன். எனக்கு அங்கொரு அத்தை இருக்கிறார்.”

அவள் தன் கைக்கடிகாரத்தை பார்த்தாள். “ஒருமணி ஆகிவிட்டது. மதிய உணவு எங்கு சாப்பிடுவதாக உத்தேசம்?”

“எங்குமில்லை. நான் காலையும் மாலையும் மட்டுமே சாப்பிடுவது.”

“ஏதேனும் உணவுக் கட்டுப்பாடா?”

“இல்லை, ஆனால் இந்த வயதில்-”

“வயதை குறித்து பேசுவதை முதலில் நிறுத்துங்கள்!” அவள் கடிந்து கொண்டாள். “நான் ஒன்று சொல்கிறேன். நீங்கள் என் வீட்டுக்கு வாருங்கள் நாம் ஒன்றாக சாப்பிடலாம். எனக்கு தனியாக சாப்பிட பிடிக்காது. என்னை பொறுத்தவரை தனியாக சாப்பிடுவது தனியாக உறங்குவதைக் காட்டிலும் மோசமானது.”

“உண்மையாகவா, எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்த அன்புக்கு நான் தகுதியானவனா?”

“சும்மா வாருங்கள், கண்டதையும் பேசிக்கொண்டிருக்க வேண்டாம். இது அமெரிக்கா, போலந்து அல்ல. என் குளிர்சாதனப்பெட்டி முழுக்க உணவு பொருட்கள் நிறைந்து வழிகிறது. சாப்பிடுவதை விட அதிகளவு நான் குப்பையில் போடுகிறேன், கடவுள் என்னை மன்னிக்க வேண்டும்.”

ஹாரி குறைந்தது கடந்த அறுபது வருடங்களாக கேட்டிராத இட்டிஷ் மொழி பிரயோகங்களை அவள் பேசினாள். அவரின் கையைப்பிடித்து கதவருகே கூட்டிப்போனாள். சில அடிகளே எடுத்துவைக்க வேண்டியிருந்தது. அவர் தன் கதவை பூட்டியபோது அவள் அவளது கதவை திறந்தாள். அவளது அபார்ட்மெண்ட் அவருடையதைக் காட்டிலும் பெரிதாகவும் வெளிச்சமாகவும் இருந்தது. சுவரில் படங்கள் மாட்டப்பட்டிருந்தன, வண்ண விளக்குகள், சின்ன சின்ன அலங்கார பொருட்கள் மிளிர்வுடன் புன்னகைத்தன. ஜன்னல்கள் நேரடியாக கடலை நோக்கி திறந்தன. மேசையில் ஒரு பூச்சாடி நின்றது. ஹாரியின் வீட்டில் எப்போதும் தூசியின் வாடை இருக்கும் ஆனால் இங்கோ காற்று புத்துணர்ச்சியுடன் வீசியது. “அவளுக்கு ஏதோ வேண்டும். அவளிடம் ஏதோ பெரிய திட்டம் உள்ளது,” ஹாரி தனக்குள் சொல்லிக் கொண்டார். அவருக்கு செய்தித்தாள்களில் வாசித்த மோசடி பெண்கள் பற்றி நினைவுக்கு வந்தது, ஆண்களையும் சிலசமயம் பெண்களையும்கூட ஏமாற்றி பெரும்பணத்தை அடித்துவிடுவார்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால் எந்த வாக்குறுதியும் கொடுக்கக் கூடாது, எதிலும் கையெழுத்திட கூடாது எவ்வகையிலும் ஒருபைசா கூட கொடுத்துவிடக் கூடாது.

அவள் அவரை மேசையருகில் உட்கார செய்துவிட்டு சமையலறைக்கு சென்றாள். கொஞ்ச நேரத்திலேயே அங்கிருந்து காபி கொதிக்கும் சப்தமும் புதிய ரொட்டி, பழங்கள் மற்றும் பாலாடைக்கட்டியின் மணம் வந்தது. பல ஆண்டுகள் கழித்து முதன்முறையாக ஹாரி பகல்வேளையில் பசியை உணர்ந்தார். கொஞ்ச நேரத்தில் இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.

அவள் ஒவ்வொரு வாய் சாப்பாட்டிற்கும் இடையே சிகரெட்டை புகைத்தபடி தன் புகார்களை சொல்ல ஆரம்பித்தாள், “ஆண்கள் என் பின்னால் வருகிறார்கள், ஆனால் என்னைப் பற்றி அவர்களுக்கு தெரிந்துகொள்ள வேண்டியதெல்லாம் என்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதுதான். அவர்கள் பணத்தைப் பற்றி பேசத் தொடங்கியவுடன் நான் அவர்களை துண்டித்து விடுவேன். நான் ஏழை அல்ல. இன்னும் சொல்லப்போனால் ஓரளவு பணக்காரிதான். ஆனால் பணத்துக்காக என்னை ஏற்றுக்கொள்ளும் எவரையும் நான் விரும்பவில்லை.”

“நல்லவேளையாக எனக்கும் எவருடைய பணமும் தேவையில்லை,” ஹாரி சொன்னார்.

“ஆயிரம் வருடம் வாழ்வதற்கு போதுமான அளவு என்னிடம் உள்ளது.”

“அது நல்ல விஷயம்.”

இருவரும் தங்கள் நிதி நிலைமை குறித்து விவாதிப்பதில் ஆரம்பித்து பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது, அவள் தன் உடைமைகளை பட்டியலிட்டாள். அவளுக்கு ப்ரூக்ளினிலும் ஸ்டேடன் தீவிலும் கட்டிடங்கள் இருந்தன. பங்குகளும் பத்திரங்களும் வைத்திருந்தாள். அவள் சொன்னவற்றிலிருந்தும் குறிப்பிட்ட பெயர்களை வைத்தும் ஹாரி அவள் உண்மையைத்தான் சொல்கிறாள் என்ற முடிவுக்கு வந்தார். அவளுக்கு இங்கு மியாமியில் ஹாரி பயன்படுத்தும் அதே வங்கியில் சேமிப்பு கணக்கும் பாதுகாப்பு பெட்டகமும் இருந்தது. அவளது சொத்து மதிப்பு ஒரு மில்லியன் அல்லது அதற்கும் மேலாக இருக்கலாம் என ஹாரி மதிப்பிட்டார். அவள் அவருக்கு ஒரு மகளைப் போலவோ அல்லது மனைவியைப் போலவோ நேசத்துடன் உணவு பரிமாறினாள். அவர் என்ன சாப்பிட வேண்டும் என்ன சாப்பிடக்கூடாது என்றெல்லாம் அறிவுறுத்தினாள். இம்மாதிரி அதிசயமெல்லாம் அவருக்கு இளவயதில் நடந்துள்ளது. பெண்கள் அவரை சந்தித்து சீக்கிரத்திலேயே பழகி அதன்பின் பிரிந்து செல்லாமல் இருந்திருக்கிறார்கள். ஆனால் அதுபோன்ற ஒரு விஷயம் இந்த வயதில் நடப்பதென்பது அவருக்கு கனவுபோல இருந்தது. அவர் திடீரெனக் கேட்டார், “உனக்கு குழந்தைகள் உண்டா?”

“எனக்கு ஒரு மகள் இருக்கிறாள், சில்வியா. அவள் பிரிட்டிஷ் கொலம்பியாவில் தன்னந்தனியாக ஒரு கூடாரத்தில் வாழ்கிறாள்.”

“ஏன் ஒரு கூடாரத்தில்? என் மகள் பெயரும் சில்வியாதான். நீ கூட என் மகள் போலத்தான்,” என சேர்த்துக்கொண்டார், ஏன் அப்படிச் சொன்னோம் என அவருக்கேத் தெரியவில்லை.

“சுத்த அபத்தம். வயதில் என்ன இருக்கிறது? எனக்கு எப்போதுமே ஆண் என்னைவிட மூத்தவராக இருப்பது பிடிக்கும். என் கணவர், அவர் ஆத்மா சாந்தி அடையட்டும், என்னைவிட இருபது வயது மூத்தவர். நாங்கள் வாழ்ந்த வாழ்வு ஒவ்வொரு யூதப் பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும் என நான் ஆசைப்படுவது.”

“உனக்கு குறைந்தது இன்னும் நாற்பதுவருட வாழ்வு உள்ளது,” ஹாரி சொன்னார்.
அவள் தன் ஸ்பூனை கீழே வைத்தாள். “எனக்கு என்ன வயதிருக்கும் என நினைக்கிறீர்கள்?”

“சுமார் நாற்பத்தைந்து இருக்கலாம்,” அதைவிட அதிகமாக இருக்கும் என தெரிந்துகொண்டே ஹாரி சொன்னார்.

“அத்துடன் பனிரெண்டை சேர்த்துக் கொள்ளுங்கள். என் வயது கிடைத்துவிடும்.”
“உன்னை பார்த்தால் அப்படித் தெரியவில்லை.”

“என் கணவருடன் எனக்கு நல்ல வாழ்க்கை இருந்தது. அவரிடம் நான் என்ன கேட்டாலும் கிடைக்கும் – நிலவோ நட்சத்திரங்களோ எதுவானாலும் அவருடைய ஏதெலின் முன் அவை ஒரு பொருட்டல்ல. எனவேதான் அவர் இறந்தவுடன் நான் மனச்சோர்வுக்கு ஆளானேன். அதுபோக என் மகளும் என்னை வதைக்கிறாள். மனநல மருத்துவர்களிடம் பெரும்பணத்தை செலவழித்தேன், ஆனால் அவர்களால் என்னை குணப்படுத்த முடியவில்லை. தற்போதுதான் ஒரு நரம்பியல் கோளாறுக்கான காப்பகத்தில் ஏழு மாதங்கள் இருந்துவிட்டு வெளிவந்திருக்கிறேன். பலமுறை நிலைகுலைந்து விழுந்திருக்கிறேன், அதன்பின் வாழவும் பிடிக்கவில்லை. அவர்கள் என்னை பகலிலும் இரவிலும் கண்காணிக்க வேண்டியிருந்தது. அவர் என்னை கல்லறையிலிருந்து அழைத்தபடி இருக்கிறார். நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும், ஆனால் என்னை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.”

“என்ன அது?”

“நீங்கள் என் கணவரை நினைவுறுத்துகிறீர்கள். அதனால் தான் –”

“எனக்கு எண்பத்திரெண்டு,” ஹாரி சொன்னவுடன் நாக்கை கடித்தார். மிக எளிதாக ஐந்து வயதை குறைத்து சொல்லியிருக்கலாம். கொஞ்சநேர அமைதிக்கு பின் சொன்னார், “எனக்கு பத்துவயது குறைவாக இருந்திருந்தால் நீ சொல்வதுபற்றி யோசித்திருப்பேன்.”

மீண்டும் தன் சொற்களுக்காக வருந்தினார். அவரது கட்டுப்பாட்டை மீறி சொற்கள் வந்து விழுந்தன. இன்னொருபக்கம் ஒரு மோசடி வலையில் வீழ்வதான அச்சம் இன்னமும் அவரை தொந்தரவு செய்து வந்தது.

அவள் அவரை கேள்விகளுடன் உற்றுநோக்கி புருவத்தை நெரித்தாள். “நான் வாழ்வதென்று முடிவெடுத்துவிட்டதால் உங்களை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.”

“இது எப்படி சாத்தியமாகும்? எப்படி நடக்க முடியும்?” ஹாரி மீண்டும் மீண்டும் தனக்குள் வினவினார். அவர்கள் திருமணம் செய்துகொள்வது பற்றியும் இரண்டு அபார்ட்மெண்ட்டுகளுக்கும் நடுவே இருக்கும் சுவரை இடித்து ஒன்றாக்குவது பற்றியும் பேசினார்கள். அவரது படுக்கையறை அவளுடையதை ஒட்டியே இருந்தது. அவள் தன் நிதிநிலையை முழுமையாக அவரிடம் தெரியப்படுத்தினாள். அவளின் சொத்து மதிப்பு ஒன்றரை மில்லியன் வந்தது. ஹாரி அவளிடம் ஏற்கனவே தன் சொத்து மதிப்பை சொல்லியிருந்தார். அவர் கேட்டார், “இத்தனை பணத்தை கொண்டு நாம் என்னதான் செய்வது?”

“என்ன செய்வதென்று எனக்கும் தெரியவில்லை,” அவள் பதிலளித்தாள், “ஆனால் ஒன்றாக நாம் உலகை சுற்றலாம். டெல் அவீவிலோ (Tel Aviv) திபேயாவிலோ (Tiberia) ஒரு அபார்ட்மெண்ட் வாங்கலாம். அங்குள்ள வெந்நீர் ஊற்றுகள் முடக்கு வாதத்திற்கு மிகவும் நல்லது. என்னருகே நீங்களும் நீண்ட காலம் வாழ்வீர்கள். நிச்சயம் நூறு வயதோ அதற்கு அதிகமாகவோ உங்களுக்கு ஆயுள் உண்டு.”

“எல்லாம் கடவுளின் கையில் உள்ளது,” ஹாரி தன் சொற்களை கண்டு தானே ஆச்சர்யப்பட்டார். அவர் மதநம்பிக்கை கொண்டவரல்ல. கடவுள் குறித்தும் அவரின் அருள் குறித்துமான ஐயங்கள் இத்தனை ஆண்டுகளில் அவருக்கு அதிகரித்தே வந்துள்ளன. அவர் அடிக்கடி சொல்லும் ஒன்றுண்டு, ஐரோப்பாவில் யூதர்களுக்கு நிகழ்ந்ததை கண்டபின்பும் ஒருவர் கடவுளை நம்புகிறார் எனில் அவர் முட்டாளாகத்தான் இருக்க வேண்டும்.

ஏதெல் எழுந்து நின்றதும் அவரும் எழுந்தார். இருவரும் கட்டியணைத்து முத்தமிட்டனர். அவர் அவளை மேலும் நெருக்கியதில் அவருள் இளமையின் துடிப்பு எங்கிருந்தோ எழுந்து வந்தது.

அவள் சொன்னாள், “மணமேடை விதானத்திற்கடியில் நாம் நிற்பது வரை காத்திருங்கள்.”

ஹாரி இதே சொற்களை இதே குரலில் முன்னரே கேட்டிருப்பதை சட்டென உணர்ந்தார். ஆனால் எப்போது? யாரிடம் கேட்டது? அவரது மூன்று மனைவிகளுமே அமெரிக்காவில் பிறந்தவர்கள் ஆதலால் இந்த சொற்களை சொல்லியிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை கனவில் கேட்டிருப்பாரோ? கனவில் எதிர்காலத்தை முன்னரே கண்டுவிட முடியுமா? அவர் தலைகவிழ்ந்து இதுபற்றி யோசித்தார். நிமிர்ந்த பார்த்தபோது அவர் பெரிதும் வியப்படைந்தார். அந்த சில வினாடிக்குள்ளாகவே அவளது தோற்றம் உடல்மொழி அனைத்தும் மாறியிருந்தது. அவள் அவரிடமிருந்து நகர்ந்து சென்றதைக்கூட அவர் கவனிக்கவில்லை. அவளின் முகம் புத்துணர்ச்சியை இழந்து சுருங்கிப்போய் சட்டென வயது கூடியிருந்தது. அவளது கூந்தல் திடீரென கலைந்திருப்பதாக அவருக்குத் தோன்றியது. அவள் அவரை திரும்பி சோகமான அதேசமயம் திடமான பார்வையுடன் அவரை பார்த்தாள். நான் அவளை அவமதித்துவிட்டேனா என்ன? அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் பேசுவதை அவராலேயே கேட்க முடிந்தது, “ஏதேனும் பிரச்சனையா? உனக்கு உடம்பு சரியில்லையா?”

“இல்லை, நீங்கள் தற்போது உங்கள் இடத்திற்கே சென்றுவிடுவது நல்லது,” அவளது குரல் அன்னியமாகவும், பொறுமையிழந்தும் சற்றே கண்டிப்புடனும் ஒலித்தது. அவர் அவளிடம் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்துக்கான காரணத்தை கேட்க விரும்பினார், ஆனால் அவர் எப்போதோ மறந்துவிட்ட (அல்லது எப்போதுமே மறந்துவிடாத) சுயகௌரவம் அவரை தடுத்தது. பெண்களிடம் உறவு குறித்து நாம் எப்போதுமே எதையும் உறுதியாக சொல்லிவிட முடியாது. இருந்தாலும் அவர் கேட்டார், “நாம் மீண்டும் எப்போது சந்திக்கலாம்?”

“இன்றைக்கு அவ்வளவுதான். ஒருவேளை நாளைக்கு..” சிறிது தயக்கத்திற்கு பின் சொன்னாள்.

“நல்லது, நான் போய்வருகிறேன். உணவுக்கு நன்றி.”

கதவுவரை வந்து வழியனுப்பக்கூட அவள் வரவில்லை. அவரது அபார்ட்மெண்டுக்கு வந்ததும், சரிதான், அவள் மனதை மாற்றிக்கொண்டு விட்டாள் என நினைத்தார். அவருக்கு அவமானமாக இருந்தது – தன்னைக் குறித்தும் அவளைக் குறித்தும் கூட. அவள் அவரிடம் விளையாடுகிறாளா என்ன? யாரேனும் பொறாமை பிடித்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அவரை முட்டாளாக்க செய்த ஏற்பாடா? அவரது அபார்ட்மெண்ட் பாதி காலியாக காட்சியளித்தது. இன்றைக்கு இரவுணவு வேண்டாமென முடிவெடுத்தார். வயிற்றில் ஒருவித அழுத்தத்தை உணரமுடிந்தது. “இந்த வயதில் இப்படியொரு முட்டாள்தனத்தை செய்திருக்கக் கூடாது” அவர் முணுமுணுத்தார். சோபாவில் அமர்ந்தவர் அப்படியே தூங்கிவிட்டார், மீண்டும் அவர் கண்விழித்தபோது வெளியே இருட்டியிருந்தது. ஒருவேளை அவள் மீண்டும் என் வீட்டு அழைப்புமணியை அடிக்கலாம். அல்லது நான் அவளை அழைக்க வேண்டுமா? அவள் தன் தொடர்பு எண்ணை கொடுத்திருந்தாள். அவர் தூங்கியிருந்தாலும் களைப்பாகவே உணர்ந்தார். அவருக்கு பதிலளிக்கவேண்டிய கடிதங்கள் இருந்தன, ஆனால் காலைவரை எல்லாவற்றையும் ஒத்திவைத்தார். பால்கனிக்கு சென்றார். அவர் வீட்டு பால்கனியின் ஒருபக்கம் அவளது பால்கனியை பார்த்திருந்தது. அவர்கள் அங்கு சந்திக்கலாம், அவளுக்கு இன்னமும் ஆர்வம் இருக்கும்பட்சத்தில் அங்கிருந்தபடி உரையாடகூட செய்யலாம். கடல் கொந்தளித்து நுரைத்தது. தூரத்தில் ஒரு சரக்கு கப்பல் சென்றது. ஒரு ஜெட் விமானம் வானில் சீறிப் பாய்ந்தது. தெருவிளக்குகளோ நியான் விளம்பரங்களோ மங்கச் செய்யாத ஒரு ஒற்றை நட்சத்திரம் மேலே உதித்தது. ஒரு நட்சத்திரத்தையேனும் ஒருவர் காணமுடிவது நல்ல விஷயம்தான். இல்லையெனில வானம் என ஒன்றிருப்பதையே ஒருவர் மறந்துவிடக்கூடும்.

அவள் ஒருவேளை தோன்றக்கூடும் என்ற நம்பிக்கையில் அவர் பால்கனியில் அமர்ந்து காத்திருந்தார். அவள் என்ன யோசித்துக் கொண்டிருப்பாள்? ஏன் திடீரென அவள் மனநிலை மாறியது? ஒருகணம் காதலில் இருக்கும் மணப்பெண்போல அதிகம் பேசுபவளாகவும் நெருக்கத்துடனும் இருந்தாள், மறுகணமே அந்நியமாக மாறிவிட்டாள்.

ஹாரி மீண்டும் தூங்கிவிட்டார், கண்விழித்தபோது மாலை வெகுநேரம் கடந்திருந்தது. அவருக்கு தூக்கம் வரவில்லை, கீழே சென்று நியூயார்க் பங்குச்சந்தையின் நிலவரங்களுடன் வந்திருக்கும் மாலை செய்தித்தாள்களை பார்க்கவே விரும்பினார், ஆனாலும் அறைக்குள் சென்று படுத்துக்கொண்டார். ஒரு கிளாஸ் தக்காளி ஜூஸ் குடித்துவிட்டு மாத்திரையை விழுங்கினார். அவரையும் ஏதெல்லையும் ஒரு சிறிய சுவர்தான் பிரித்து வைத்திருந்தது, ஆனால் சுவர்களுக்கு அதற்கே உரிய ஆற்றல் உண்டு. ஒருவேளை இந்தக் காரணத்தால்தான் சிலர் கூடாரங்களில் வாழ விரும்புகின்றனர் என்று யோசித்தார். அன்றைய தீவிர எண்ணங்களும் கவலைகளும் தூங்கவிடாமல் செய்துவிடும் என எண்ணிய அவர் சீக்கிரத்திலேயே உறக்கத்தில் ஆழ்ந்தார். நெஞ்சில் லேசான அழுத்தத்துடன் அவருக்கு விழிப்பு தட்டியது. என்ன நேரம் ஆகிறது? கைக்கடிகாரத்தை பார்த்தபோது அவர் இரண்டேகால் மணிநேரம் தூங்கியிருப்பதாக காட்டியது. அவர் கனவு கண்டிருந்தார் ஆனால் அதை நினைவுகூர முடியவில்லை. பகல்நேர கொடுங்கனவுகளுக்கே உரிய அச்சம் மட்டும் அவரிடம் தங்கியிருந்தது. அவர் தலையை உயர்த்தினார். அவள் தூங்கியிருப்பாளா அல்லது விழித்திருப்பாளா? அவளது அபார்ட்மெண்டிலிருந்து ஒரு சத்தத்தையும் அவரால் கேட்க முடியவில்லை.

மீண்டும் தூங்கிய அவர் இம்முறை இடைநாழியில் பலர் ஓடுவதன் இரைச்சலும் பேச்சு சத்தமும் கதவுகள் சாத்தப்படும் ஓசையும் கேட்டு எழுந்து கொண்டார். அவருக்கு எப்போதுமே தீ பற்றிய அச்சம் இருந்தது. முதியோர் காப்பகங்களில், மருத்துவமனைகளில், விடுதிகளில் தீ விபத்தின் போது வயதானவர்கள் பலியான பல சம்பவங்களை அவர் செய்தித்தாள்களில் படித்திருக்கிறார். அவர் படுக்கை விட்டெழுந்து செருப்பும் மேலாடையும் அணிந்தபடி ஹாலுக்கான கதவை திறந்தார். அங்கு யாரும் இருக்கவில்லை. அது அவரின் கற்பனையா? கதவை சாத்திவிட்டு வெளியே பார்க்க பால்கனிக்கு சென்றார். இல்லை, தீயணைப்பு வீரர்களுக்கான எந்தத் தடயமும் இல்லை. தாமதமாக வீட்டுக்கு வருபவர்கள், இரவுநேர கேளிக்கைவிடுதிக்கு செல்பவர்கள், குடித்துவிட்டு சலம்புவதை மட்டுமே காண முடிந்தது. சில குடியிருப்புவாசிகள் தங்கள் அபார்ட்மெண்டை கோடை காலத்தில் தென் அமெரிக்கர்களுக்கு உள்வாடகைக்கு விட்டிருந்தனர். ஹாரி மீண்டும் படுக்கைக்கு சென்றார். கொஞ்சநேரம் அமைதியாக இருந்தது. இடைநாழியில் மீண்டும் இரைச்சல் சப்தம் கேட்டது, ஆண்கள் பெண்களின் குரல்கள் கேட்டன. ஏதோ நிகழ்ந்துள்ளது, ஆனால் என்னவாக இருக்கும்? மீண்டும் வெளியே சென்று பார்த்துவர உந்துதல் எழுந்தது, ஆனால் அவர் எழவில்லை. அங்கேயே பதற்றத்துடன் படுத்திருந்தார். திடீரென சமையலறையில் இருந்த வீட்டுபோனில் மணி ஒலிப்பது கேட்டது. அவர் போனை எடுத்தபோது ஒரு ஆண்குரல் “ராங் நம்பர்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தது. ஹாரி சமையலறையின் விளக்கை போட்டிருந்தார் அதன் ஒளியில் கண்கூசியது. குளிர்சாதனப்பெட்டியை திறந்து இனிப்பு தேநீர் இருந்த ஜாடியிலிருந்து அரை கிளாஸ் விட்டுக்கொண்டார், தாகத்தினாலா அல்லது தன்னை திடப்படுத்திக்கொள்ள அவ்வாறு செய்தாரா என்பதை அவரே அறியவில்லை. விரைவிலேயே சிறுநீர் கழிக்க வேண்டியிருந்ததால் பாத்ரூமுக்கு சென்றார்.

சரியாக அதே சமயத்தில் வீட்டின் அழைப்புமணி அடித்தது. திருடர்கள் கட்டிடத்திற்குள் புகுந்துவிட்டனரா? இரவுநேர வாயிற்காப்பாளர் ஒரு வயதானவர், நிச்சயம் கொள்ளையர்கள் நுழைந்தால் தடுத்திருக்க முடியாது. ஹாரிக்கு கதவை திறக்க செல்வதா வேண்டாமா என ஒரே குழப்பமாக இருந்தது. கழிப்பறை முன் நின்றபடி அவர் நடுங்கினார். சட்டென அவர் மனதில் மின்னியது பூமியில் இது என் இறுதி நிமிடங்களாக இருக்கலாம். “இறைவனே என்மீது கருணை காட்டுங்கள்,” அவர் வேண்டினார். அப்போதுதான் கதவின்வழி வெளியே பார்ப்பதற்கு ஒரு துளை இருப்பது நினைவுக்கு வந்தது. அதை எப்படி மறந்து போனேன்? அவருக்கே ஆச்சர்யமாக இருந்தது. எல்லாம் முதுமையின் தாக்கமாக இருக்க வேண்டும்.

அவர் சத்தமில்லாமல் கதவருகே சென்று துளையின் மேலிருந்த மூடியை திறந்து வெளியே பார்த்தார். நரைத்த கூந்தலுடன் இரவு உடை அணிந்து ஒரு முதியவள் நின்றிருந்தாள். அவருக்கு அடையாளம் தெரிந்தது, அது வலதுபக்கம் பக்கத்துவீட்டில் இருப்பவர். ஒருநொடியில் அவருக்கு அனைத்தும் புரிந்துவிட்டது. அவளுக்கு பக்கவாதம் வந்த கணவர் இருக்கிறார், அவருக்கு ஏதோ நேர்ந்துவிட்டது. அவர் கதவை திறந்தார். அந்த முதிய பெண்மணி ஒரு கடிதத்தை நீட்டினார்.

“தொந்தரவுக்கு மன்னிக்கவும் மிஸ்டர் பென்டைனர், இடதுபக்க அபார்ட்மெண்டில் இருக்கும் பெண் உங்கள் கதவருகே இக்கடிதத்தை விட்டுச் சென்றிருக்கிறாள். அதன்மீது உங்கள் பெயர் உள்ளது.”

“எந்தப் பெண்?”

“இடப்புறம் இருப்பவள். அவள் தற்கொலை செய்துகொண்டாள்.”

ஹாரி பென்டைனர் தன்வயிறு உள்ளிழுக்கப்படுவதை உணர்ந்தார், சில நொடிகளிலேயே அது பாறையைப்போல் இறுகியது.

“பொன்னிற கூந்தல் உடையவளா?”

“ஆம்.”

“என்ன செய்தாள்?”

“ஜன்னல் வழியாக குதித்துவிட்டாள்.”

ஹாரி கையை நீட்டியதும் முதியவள் கடிதத்தை கொடுத்தாள்.

“இப்போது அவள் எங்கே?” அவர் கேட்டார்.

“அவர்கள் எடுத்து சென்றுவிட்டனர்.”

“இறந்துவிட்டாளா?”

“ஆம். இறந்துவிட்டாள்.”

“அடக் கடவுளே!”

“இத்துடன் இங்கு நடக்கும் மூன்றாவது சம்பவம் இது. அமெரிக்காவில் மக்களுக்கு கிறுக்குபிடித்து விடுகிறது.”

ஹாரியின் கைநடுக்கத்தில் கடிதம் காற்றில் சிக்கியதுபோல் படபடத்தது. முதியவளுக்கு நன்றி கூறிவிட்டு கதவை சாத்தினார். இரவு மேசையில் வைத்திருந்த தன் மூக்குகண்ணாடியை தேடிப் போனார். “விழுந்துவிடக் கூடாது,” தன்னைத்தானே எச்சரித்தபடி நடந்தார். “இந்நிலையில் இடுப்பெலும்பு உடைந்தால் என் கதி அவ்வளவுதான்.” தடுமாற்றத்துடன் படுக்கையை அடைந்து இரவு விளக்கை போட்டார். ஆம் மூக்குகண்ணாடி அவர் வைத்திருந்த இடத்திலேயே இருந்தது. அவருக்கு தலைசுற்றுவதுபோல் இருந்தது. சுவர்கள், திரைச்சீலைகள், அலமாரி, கடிதம் என அனைத்தும் தொலைக்காட்சியில் வரும் மங்கலான காட்சிபோல மின்னிமின்னி மறைந்தது. நான் குருடாகிவிட்டேனா என்ன? தலைசுற்றல் நிற்கும்வரை சற்றுநேரம் அமர்ந்து காத்திருந்தார். கடிதத்தை திறந்து பார்க்கவே அவருக்கு சக்தி இருக்கவில்லை. அக்குறிப்பு பென்சிலில் எழுதப்பட்டிருந்தது, ஒழுங்கில்லாத வரிகளில் மோசமான எழுத்துப்பிழைகளுடன் இட்டிஷ் மொழியில் இருந்தது.

டியர் ஹாரி, என்னை மன்னித்துவிடுங்கள். நான் என் கணவர் இருக்கும் இடத்திற்கே செல்ல வேண்டும். மிகுந்த சிரமம் இல்லையெனில் என் ஆத்மாவுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். அங்கு நான் உங்களுக்காக பிரார்த்திப்பேன்.
ஏதெல்

அவர் கடிதத்தையும் கண்ணாடியையும் இரவுமேசையில் வைத்துவிட்டு விளக்கை அணைத்தார். கட்டிலில் படுத்ததும் ஏப்பமும் விக்கலும் வந்தபடி இருந்தன. உடல் வெட்டி இழுத்ததில் மெத்தை ஸ்பிரிங்குகள் அதிர்ந்தன. சரிதான், இனி நான் எதற்கும் ஆசைப்படமாட்டேன், ஓர் உறுதிமொழி எடுப்பவனின் தீவிரத்துடன் முடிவுசெய்தார். குளிரடிப்பதுபோல் தோன்றியதால் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டார்.

மயக்கத்திலிருந்து வெளிவந்தபோது காலை எட்டு மணியை கடந்திருந்தது. எல்லாம் ஒரு கனவா? இல்லை, கடிதம் மேசையில் வீற்றிருந்தது. அன்றைக்கு ஹாரி பென்டைனர் அஞ்சல்களை எடுக்க கீழிறங்கி செல்லவில்லை. தனக்கான காலையுணவை தயாரிக்கவில்லை, குளிக்கவோ உடைமாற்றிக்கொள்ளவோ கூட எழவில்லை. பால்கனியில் கிடந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து தூங்கியபடியே அந்த இன்னொரு சில்வியாவைப் பற்றி யோசித்தார் – ஏதெல்லின் மகள் – பிரிட்டிஷ் கொலம்பியாவில் தனியாக ஒரு கூடாரத்தில் வாழ்பவள். அவள் ஏன் அத்தனை தொலைவு ஓடிப்போனாள்? தனக்குள் வினவினார். தந்தையின் இறப்பு அவளை விரக்தியில் தள்ளியதா? அவள் அம்மாவை பொறுத்துக்கொள்ள முடியவில்லையா? அல்லது அந்த வயதிலேயே மனித எத்தனங்களின் அர்த்தமின்மையை உணர்ந்து துறவியாகிவிட முடிவெடுத்தாளா? அவளின் முயற்சி தன்னைத்தான் கண்டடைவதா, அல்லது கடவுளை கண்டடைவதா? கிழவரின் மனதில் ஒரு சாகசமிக்க யோசனை உதித்தது: பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பறந்துசெல்லலாம், வன்பாலை நிலத்தில் அந்த இளம்பெண்ணை கண்டறிந்து அவளை சமாதானப்படுத்தலாம், அவளுக்கு ஒரு தந்தையாக இருக்கலாம், இறுதியாக சாத்தியமெனில் அவளுடன் இணைந்து ஆழ்ந்து சிந்திக்கலாம் ஒரு மனிதன் ஏன் பிறக்கிறான் என்றும் அவன் ஏன் இறந்தே ஆகவேண்டும் என்றும்.

000

மூலம்: Old Love – Collected Stories (Isaac Bashevis Singer: Classic Editions)

டி.ஏ. பாரி

டி.ஏ. பாரி, அவ்வப்போது சில ஆங்கில சிறுகதைகளை மொழியாக்கம் செய்து வருகிறார். பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட்டு வரும் இவர் ஈரோட்டில் வசிக்கிறார்.

1 Comment

  1. மிக அழகிய சிறுகதை. மொழிபெயர்ப்பாளர் டி ஏ பாரிக்கு அன்பும் வாழ்த்தும்.

    ஷங்கர்ராமசுப்ரமணியன்

உரையாடலுக்கு

Your email address will not be published.