/

திருவயிற்றின் கனி : ஆசை

மாயக் கனி

பரிசுத்த மரியே
உன் கனி விலக்கிய
இடத்தில்
எனைக்
கொண்டுபோய் வை

புனித இருள்
சூழ்ந்த கனி
மனமில்லா
மாயக் கனி
அக்கனி
எனை
ஆக்குநீ

000

மகிமைக்கு ஒரு ஹோசானா

தூக்கம் கலைந்து
ஏதோ ஒன்று அழைப்பதுபோல்
உணர்வெழுந்து
வெளியே வந்து பார்க்கிறேன்

அருகிலுள்ள சந்துமுனையில்
ஓர் உருவம்
முழுவதும் பனியால்
ஆனது

அரையிருட்டு
அரைவெளிச்சம் பரப்பும்
தூரத்துத் தெருவிளக்கொளியிலும்
அடங்கிய மினுமினுப்பில்
ஒளிர்ந்தது
அப்பனி

கால்மறைத்த
அங்கி
முகம் பார்க்க
வலுவில்லை

அதற்குள் போய்
அப்படியே பொருந்திக்கொள்ள வேண்டும்
மகிமைக்குள் நின்று
உலகையே பார்க்க வேண்டும்
என்று ஆசை

இடமிருக்கும்தான்
சற்றும் கலையாதுதான்

ஆனால்
மகிமைக்குள் போய் நின்றால்
தாங்குவேனோ
என்று அச்சம்
நடுங்கிக்
குலைகிறேன்

பனிமறைய
குளிர் உணர்த்தி
மகிமை
இப்போது என் இதயத்தில்
இடம்பெயர்கிறது

பனியாலான குருத்தோலை
செய்து
அதற்குச் சொல்வேன்
ஒரு ஹோசானா

000

கர்த்தரின் நரிமிரட்டல்

கர்த்தரே 
துரோகத்தின் இவ்விழிகளை
உமக்கே காணிக்கையாக்குகிறேன்
அவற்றின் உறக்க நிலையையும்
விழிப்பு நிலையையும்
சீர்ப்படுத்தும்

கர்த்தரே 
பொறாமையின் இந்நாசியை
உமக்கே காணிக்கையாக்குகிறேன்
அதன் உள்மூச்சையும்
வெளிமூச்சையும்
நேர்ப்படுத்தும்

கர்த்தரே 
துர்ச்செய்திகளை
அவாவுறும் இச்செவிகளை
உமக்கே காணிக்கையாக்குகிறேன்
அவற்றின் உட்செல்லும் எதுவும்
உள்ளேயே தங்கிவிடாதபடிக்குப்
பார்த்துக்கொள்ளும்

கர்த்தரே 
அடங்கா இந்நாவை
உமக்கே காணிக்கையாக்குகிறேன்
அவற்றின் சுவையரும்புகள்
தத்தம் நஞ்சுக்கு சுருண்டுவிடாதபடிக்கு 
வருடிவிடும்

கர்த்தரே 
வன்மத்தின் இவ்விதயத்தை
உமக்கே காணிக்கையாக்குகிறேன்
தன் நாளங்களை
வெடிக்கச் செய்யா மட்டுக்குச்
சீராய்க் குருதியோட
வழிப்பண்ணும்

கர்த்தரே 
பெருந்தீனியின் இவ்வயிற்றை
உமக்கே காணிக்கையாக்குகிறேன்
அது உப்பிவிடாத படிக்கும்
வற்றிவிடாதபடிக்கும்
ஆகாரக் காற்றை
அனுசரித்து
அனுப்பும்

கர்த்தரே 
துளை வேறுபாடு காணா
இக்காம வக்கிரக் குறியை
உமக்கே காணிக்கையாக்குகிறேன்
அதன் நீட்டித்தலையும்
சுருங்குதலையும்
நிதானப்படுத்தும்

கர்த்தரே 
மறுகன்னங்களை ஒருபோதும்
விட்டுவிடா இக்கைகளை
உமக்கே காணிக்கையாக்குகிறேன்
அவை விடுவித்த வாதையையும்
திரும்பிவந்த வாதையையும்
ஆற்றுப்படுத்தும்

கர்த்தரே 
துன்மார்க்கத்தின் இக்கால்களை
உமக்கே காணிக்கையாக்குகிறேன்
அவை நடந்து திரட்டிய
நோவையெல்லாம்
நீவிவிடும்

கர்த்தரே 
என் பாவங்கள் ஒவ்வொன்றையும்
நேர்கொண்டு 
என்னைப் பார்க்கச் செய்தீர்
என்னைவிடவும்
பரிதாபத்துக்குரிய குழந்தைகள்
அவை என்று 
என்னைக் காணச் செய்தீர்

அவை
எனை நீங்கிச் சென்றுவிடாதபடிக்கும்
அவை

எனை விழுங்கிக் கொன்றுவிடாதபடிக்கும்
உம் மடியில்
எடுத்துப்போட்டுத்
தூங்கப் பண்ணும்
அம்மட்டுக்கு
அடுத்தவருக்கும் அனுகூலம்

உம்
தடவிக்கொடுத்தலின்
நரிமிரட்டலில்*
ஒரே நேரம்
ஆயிரம் கிலுகிலுப்பை
குலுக்கியதுபோல்
அத்தனை குழந்தையும்
உறக்கத்தில்
சிரிக்கக் காண்பீர்

(நரிமிரட்டல் = குழந்தைகள் தூக்கத்தில் அழுதலும்
சிரித்தலும்)

000

சிறிய சிலுவையுடன் ஒரு தேவாலயம்

ஒருநாள் காலை கடற்கரையில்
நடைப்பயிற்சி போன கையோடு
தேவாலயத்துக்குள் நுழைந்த நான்
சுவரில் அந்தரத்தில் நிறுத்தப்பட்டிருந்த
சிலுவையைப் பார்த்தேன்

’இவ்வளவு பெரிய சிலுவையை
இவ்வளவு நாள்
சுமந்தது போதும் ஏசுவே
அதன் மேல் அறையப்பட்டு
இவ்வளவு நாள்
நின்றது போதும் ஏசுவே
தேவாலயம் விட்டு
வெளியே வாரும்
வெளியே வாரும்
வெளியே வாரும்’
என்று கூப்பிட்டேன்

மூன்றாவது அழைப்பில்
கண் திறந்துவிட்டார்
மும்முறை மறுதலிப்புகளைப்
பார்த்தே நொந்துபோனவரல்லவா அவர்

அட ஆணிகளையும்
ஒவ்வொன்றாகக் கழற்ற ஆரம்பித்துவிட்டார்
அட இறங்கிவந்தும்விட்டார்
ஆண்டவரே
உம் லாசரேஸ் அற்புதம்
உமக்கு என்வழியே
கைம்மாறு செலுத்திவிட்டதோ

அவரை அழைத்துப்போய்
வாசலில் விற்கும்
கையளவு சிலுவைகளுள் ஒன்றை
வாங்கித் தந்தேன்
‘சின்னதாக எல்லாம்
சிலுவை இருக்குமா’
என்று மாய்ந்துமாய்ந்து கேட்டார்

புன்னகையுடன் ஆமோதித்துவிட்டு
காற்றுவாக்கில் அவரை நடந்துவிட்டு
வரச் சொன்னேன்

காற்றில் நீரறியும் குச்சிபோல்
அந்தச் சிலுவையைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு
அதிசயித்தவாறே அவர் நடந்துபோனபோது
கடற்கரைக் காற்றின் வருடல்
அதனை ஒரு குருத்தோலையாய் மாற்றிவிடக்
கண்டேன்

அப்புறம் அந்தக் குருத்தோலையே
பாட ஆரம்பித்தது
 ‘ஓசானா தாவீதின் புதல்வா – ஓசானா ஓசானா ஓசானா
மாமரி வயிற்றினில் பிறந்தவரே – மா
முனிசூசைக் கரங்களில் வளர்ந்தவரே
மானிடர் குலத்தினில் உதித்தவரே – எம்
மன்னவரே எழுந்தருள்வீரே – ஓசானா…’

ஓசானாவின் ரீங்காரத்துக்குத்
தலையைச் சிறிதாய் ஆட்டிக்கொண்டே
கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்

பின் கடல் மேல் நடக்க ஆரம்பித்தார்

நான் பார்த்த கோணத்தில்
அடிவானத்தில்
அப்போதுதான் எழுந்த
ரத்தம் தகித்த சூரியனை
குருத்தோலை
கிழித்துப் போட்டது

தொலைவில் அங்கே
சிறிய ஏசுகளுக்கும்
சிறிய சிலுவைகளுக்கும்
சிறிய குருத்தோலைகளுக்குமான
ஒரு தேவாலயம்
உருவாகிக்கொண்டிருந்தது

அதை நோக்கி அவர்
நடந்துகொண்டிருந்தார்

000

ஆசை

ஆசிரியர் குறிப்பு : இயற்பெயர் ஆசைத்தம்பி. கவிஞர். பத்திரிக்கையாளர்.  'சித்து’ (2006), ‘கொண்டலாத்தி’ (2010), ‘அண்டங்காளி’ (2021), ‘குவாண்டம் செல்ஃபி’ (2021) ஆகிய கவிதை நூல்களின் ஆசிரியர். க்ரியா அகராதியில் (2008) துணையாசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபட்டுவரும் ஆசை காந்தி பற்றி ‘என்றும் காந்தி’ (2019) எனும் நூலையும் வெளியிட்டுள்ளார்.

1 Comment

  1. தடவிக்கொடுத்தலின்
    நரிமிரட்டலில்*
    ஒரே நேரம்
    ஆயிரம் கிலுகிலுப்பை
    குலுக்கியதுபோல்
    அத்தனை குழந்தையும்
    உறக்கத்தில்
    சிரிக்கக் காண்பீர் இவ்வரிகள் போதும் இக்கவிதைகள் பைபிளாக நன்றி

உரையாடலுக்கு

Your email address will not be published.