அவள் எந்தவிதமான கவர்ச்சியுமற்றவள். தூங்கி வழியும் முகம். எப்போதுமே கலைந்த தலை நேர்த்தியில்லாமல் உடுத்தியிருப்பாள். அவள் பயன்படுத்தும் ஆடைகளின் நிறங்கள் அவள் கருமையை மேலும் அடர்த்தியாக்கியது. அவளுடைய குரல் ஒருபோதும் மென்மையாகவோ இனிமையாகவோ எவரிடத்திலும் ஒலித்ததேயில்லை. குடித்துவிட்டு சண்டையிடும் கணவன் பெருமாளிடம் அவள் எப்படி நடந்துகொள்வாளோ கத்துவாளோ பேசுவாளோ அப்படியேதான் பிள்ளைகளிடமும் இருப்பாள். குறிப்பாக அவள் தன் பெண்குழந்தை நிர்மலாவை வெறுத்தாள். காரணம் அவள் கணவனை அப்படியே உரித்துவைத்திருந்தாள். அதற்காக அவள் மூத்த மகன் வெங்கடேசின் மீது அளவுகடந்த அன்போடிருந்தாள் என்று அர்த்தமில்லை. அவள் அவனையும் திட்டிக்கொண்டும் அடித்துக்கொண்டும்தான் இருப்பாள். இவளிடமிருந்து தப்பிக்கவே அவன் வீட்டை விட்டு தூரமாக, கூப்பிட்டால் கேட்காத தொலைவில் விளையாடிக்கொண்டிருப்பான். யாராவது அவனிடம் “உங்கம்மா கூட்டாங்கடா” என்றால், சட்டென ஒருநொடி அவன் கண்ணில் வந்துபோகும் வெறுப்பை பலர் கவனிக்கத் தவறியதில்லை. இன்னும் பள்ளிக்கூடம் போகத் தொடங்காத நிர்மலா எப்போதும் வாசலிலேயே மண்ணையும் சில உடைந்த பொம்மைகளையும் வைத்து விளையாடிக்கொண்டிருக்கும். அச்சிறு பிஞ்சுகளின் மனதில் தன் தாயைப் பற்றிய எந்தவித நல்ல நினைவுகளும் இல்லை.
அவள் கணவன் கூலிவேலை செய்துகொண்டிருந்தான். இன்ன வேலை என்றில்லாமல் கட்டிட சம்பந்தமான எந்த வேலைக்கும் போவான். வேலையில்லாத நேரங்களில் கூட சரியாக குளித்துவிட்டு சாப்பாட்டுப் பையை எடுத்துக்கொண்டுபோய் இரண்டு ஊர் தள்ளியிருந்த அம்மன் கோவிலின் திண்ணையில் உட்கார்ந்திருப்பான். மாலைவரை கதைபேசுவதுமாக தூங்குவதுமாக இருந்துவிட்டு மாலை சரியாக ஆறுமணிக்கு வீட்டிற்கு வருவான். இது அவளுக்கும் தெரிந்துதான் இருந்தது. அவள் எப்போதும் கணவன் தன்னுடன் இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதேயில்லை. சண்டை நடக்கும்போதெல்லாம் அவர்கள் இருவருமே மறக்காமல் சொல்லும் வார்த்தைகள், “இன்னா பாவம் பண்ணனோ உன்ன கட்டிகினேன்”.
அவள் தன் வீட்டு வாசலில் ஒரு பாதாம் மரம் நட்டு வைத்திருந்தாள். அவர்கள் அந்த இடத்தை வாங்கி, சுற்றி வேலி போட்டு சிறியதாக ஒரு குடிசைப்போட்டு வாழத்தொடங்கிய போது வாசலில் வேலியோரம் எங்கிருந்தோ கொண்டுவந்த பாதாம் கன்றை நட்டுவைத்தாள். அப்போது அவளுக்கு மகள் பிறந்திருக்கவில்லை. மகனும் கைக்குழந்தையாக இருந்தான். அந்த மரகன்றின் அருகில் தான் அவர்கள் குளிப்பது, பாத்திரம் கழுவுவது, துவைப்பது என அனைத்து நடக்கும். மகள் பிறந்து வளர ஆரம்பிக்கும்போது கன்று மரமாகி ஒரு குடையைப் போன்று நிழல் தந்துகொண்டிருந்தது. அருகே யார் வந்தாலும் அந்த மரத்தின் அடியிலேயே வண்டியை நிறுத்திவிட்டுச் சென்றனர். அவ்வபோது பெண்கள் அதன் அடியில் உட்கார்ந்து கதை பேசினர். அவள் யாரையம் எதுவும் சொன்னதில்லை.
அந்த பாதாம் மரத்தைத் தவிர்த்து அவளுக்குப் பிடித்த இன்னொன்று அவளுடைய கொலுசு. வழக்கத்தைவிட அதிக கனமாகவும் மணிகள் கொண்டதாகவும் இருக்கும். அதன் ஓசை அவளின் இருப்பை சுற்றியிருக்கும் அனைவருக்கும் தெரியப்படுத்திகொண்டேயிருக்கும். அதே சமயம் அவளைத் தவிர்த்து அந்த வீட்டிலிருந்த மற்ற மூவருக்குமே அந்த கொலுசின் ஓசை எரிச்சலையே தந்தது. தூரத்திலிருந்து மெல்ல மெல்ல அதிகரித்து அருகே வரும் கொலுசின் ஓசையை கண்டு அந்த குழந்தைகள் அஞ்சினர். அவள் கழுத்தில், காதில், மூக்கில் என எந்த ஆபரணமும் அணிந்திருக்கவில்லை. அவைகளை பெருமாள் கேட்டபோதெல்லாம் மறுப்பேச்சின்றி கழட்டிக்கொடுத்திருந்தாள். ஆனால், அவள் கொலுசை மட்டும் எக்காரணம் கொண்டும் கழட்டிக் கொடுக்கவேயில்லை. அவன் கேட்டும் அடித்தும் மிரட்டியும் கெஞ்சியும் பார்த்துவிட்டான். அதற்காக பலமுறை அவர்களுக்குள் பெரிய சண்டைகள் வந்துள்ளன. அவளுக்கும் ரத்தம் வந்திருக்கிறது. அவன் மண்டையும் உடைந்திருக்கிறது.
“அப்புடி இன்னாடி அந்த கொலுசுல உனுக்கு. எவன் நெனப்புல அத மாட்டிகினு சுத்திகினு இருக்கற. ரெண்டு காலயும் வெட்டி உன்ன உக்கார வெக்கறன் பாரு” என்று அவன் கத்திய அன்று அடுப்பிலிருந்த கொல்லிக்கட்டையை எடுத்துகொண்டு வந்து அவன் வாயிலேயே வைத்துவிட்டாள்.
அதுவொரு மாலை நேரம். அவள் பெண் குழந்தை வழக்கம்போல் வெளியே மண்ணில் விளையாடிகொண்டிருந்தது. அப்போது அவள் வீட்டின் அருகில் வந்த சன் டிவிக்காரன், வெளியே நின்றிந்தபடி, “ஏம்மா” என்று குரல்கொடுத்தான். உள்ளேயிருந்து எட்டிப்பார்த்தவள் மீண்டும் உள்ளே சென்று சிறிது நேரத்தில் கையில் பணத்துடன் அமைதியாக வெளியே வந்தாள். அவன் பணத்தை வாங்க கையை நிட்டினான். அவள் பணத்தைத் தராமல் அவன் கண்களைப் பார்த்து, “நீ என்ன பைத்தியம்னு சொன்னியாமே” என்று கேட்டாள். அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே வரும்போதே குரல் உடைந்தது. அவளையும் மீறி கண்ணில் வழிந்த நீரைச் சட்டென அதைத் துடைத்துகொண்டு ஆவேசமானாள். அவன் பயந்து பின்வாங்கினான். வார்த்தைகள் குழைந்து வெளியேறியது. அருகிலிருந்த ஒருசிலர் என்னவென்று எட்டிப்பர்த்தனர்.
“ஏம்மா… எனுக்கு இன்னா வேற வேலையில்லையா?”
“நீதான் சொன்னன்னு எங்கூட்டுக்காரரு சொன்னாரு.”
“உங்கூட்டுக்காரன்தான் அப்படி சொல்லிகினு திரியறான்” என்று கோபமாக சொன்னவன் சட்டென அவன் மேல் பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்து அவள் கணவனுக்கு போன் செய்து ஸ்பீக்கரில் போட்டான். அதற்குள் பக்கத்தில் வேலை பார்த்துகொண்டிருந்தவர்களும் அக்கம்பக்கத்து ஆட்களும் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அவள் கணவன் போனை எடுத்து “அலோ… சொல்லு சன் டிவிக்காரே” என்றான்.
“நான் இன்னாமோ உன் வூட்டமாவ பைத்தியம்னு சொன்னன்னியாமே” என்று கோபமாக கேட்டான்.
அவன் லேசாக சிரித்தபடியே, “அட… அது ஒரு பைத்தியம், அது பேச்செல்லாம் ஒரு பேச்சுன்னு” என்றான். சட்டென போனை அனைத்த சன் டிவிக்காரன் அவளைப் பார்த்து “கேட்டுகினியா” என்றான். அவள் கண்கள் கலங்கியிருந்தன. அவள் இயந்திரத் தனமாக பணத்தை நீட்டினாள். அவன் அதை அவளிடமிருந்து பிடுங்கிக்கொண்டு புலம்பியவாறு வேகமாக நகர்ந்தான். வேடிக்கைப் பார்த்தவர்கள் விலகும்வரை அவள் அங்கேயே நின்றுகொண்டிருந்தாள்.
அவளுக்கு அது பழகத்தொடங்கிவிட்டது. அவன் ஊர் முழுக்க இப்படி கதையளக்கத் தொடங்கி வெகு நாட்கள் ஆகிவிட்டன. சிலரிடம் பைத்தியம் என்றான். சிலரிடம் அவளுக்கு யாரோ செய்வினை வைத்துவிட்டாதாக சொன்னான். சிலரிடம் அவளுக்கு மூளை வளர்ச்சி குறைவு என்றான். தான் குடிப்பதற்கும் இவ்வாறு அல்லல்படுவதற்கும் அவளே காரணம் என்று விதவிதமான கதைகளை அவிழ்த்துவிட்டான். காலப்போக்கில் மெல்ல மெல்ல ‘அது ஒருவேளை உண்மையாக இருக்குமோ’ என்று ஊர் நம்ப ஆரம்பித்தது. இதனால், அவன் மீதும் குழந்தைகள் மீதும் ஒரு கரிசனம் ஊர் முழுக்க உருவாகியிருந்தது. அவன் குடித்துவிட்டு வந்து கத்தும்போதும் சரி அல்லது எங்காவது விழுந்துகிடக்கும்போதும் சரி, அவன் மீது பரிதாபமே பலருக்கு எழுந்தது.
இவளையும் யாரும் வெறுக்கவில்லை. உண்மையில் பலருக்கு அவள் மீது சிறிது அச்சம் இருந்தது. அவள் குழந்தைகளை எதாவது செய்துவிடுவாளோ என்றுதான் பெரும்பாலும் அஞ்சினர்.
அவள் அனைத்தையும் சகித்துகொண்டு வாழ ஆரம்பித்துவிட்டாள். அவளது சிறு சிறு ஆசைகளும் தேவைகளும், அது கிடைக்காத நேரத்தில் அவளுக்குள் ஏற்படும் கோபங்கள் அவளை ஒரு பைத்தியமாக மாற்றுவதை அவள் விரும்பவில்லை. அதன் பொருட்டு அவள் குழந்தைகள் அவளைவிட்டு விலகுவதை கண்டு அஞ்சினாள். அவளை முழுவதுமாக புரிந்துகொண்ட ஒன்றாக அவள் நட்டு வைத்த பாதாம் மரம் மட்டுமே இருந்தது. அவள் குளிக்கும்போதும் துவைக்கும்போது பாத்திரங்கள் கழுவும்போதும் அதனிடம் மட்டும் மனம் விட்டு பேசினாள். பலநேரம் அது அவள் பேசுவதை அது தலையாட்டிக் கேட்டது. தன் இலைகளை அவள் தலைமீது உதிர்த்து அவளுக்கு ஆறுதல் சொன்னது. அவளுக்கு அதுமட்டுமே பிடித்த ஒன்றாக இருந்தது. ஆனால், அவள் தனியாக மரத்துடன் பேசுவது அவள் கணவனுக்கு மேலும் வசதியாக போய்விட்டது. அவன் சொல்வது உண்மைதான் என குழந்தைகளும் சாட்சி சொல்ல ஆரம்பித்திருந்தன.
***
கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழையும்போது, உத்திரத்தில் தொங்கிக்கொண்டிருந்த அவள் கால்கள் அவன் முகத்தில் இடித்தன. ஒருநொடி அவன் மிரண்டு பின்வாங்கினான். பிறகு ‘அய்யோ’ என்று கத்தினான். மார்பில் அடித்துக்கொண்டான். தூரத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் ஒருவாறு என்னவென்று ஊகித்துவிட்டனர். வேகமாக ஓடிவந்து அவனை சூழ்ந்தனர். உயிர் போய் வெகு நேரமாகியிருந்தது. அவன் ஆடிக்கொண்டிருந்த கால்களை இறுகப்பற்றிக் கொண்டு கதற ஆரம்பித்தான். அருகிலிருந்தவர்கள் அவனை விலக்கி இழுத்துச் சென்றனர். பக்கத்துவீட்டுக்காரர் காவல் நிலையத்திற்கு போன் செய்ய, இன்னொருவர் அவள் அம்மாவிற்கு தகவல் சொல்ல வேகமாக வண்டியை இயக்கினார்.
காவலர்கள் இருவரும், அவள் அம்மாவும் இருவேறு திசைகளிலிருந்து ஒரே சமயத்தில் வந்து சேர்ந்தனர். அவள் இரண்டுகைகளிலும் இரண்டு பிள்ளைகளை பிடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்துக்கொண்டே வந்தாள். அங்கிருந்தவர்கள் குழந்தைகளை விடவில்லை. அவள் உள்ளே சென்று தன் மகளைப் பார்த்து கதறினாள். முகத்தில் அடித்துக்கொண்டு அழுதாள். அவனைப் பிடித்துகொண்டு, “கொன்னுட்டியேடா பாவி” என்று உலுக்கினாள். குழந்தைகள் அழத் தொடங்கின. பெரியவன் மட்டும் திமிரிக்கொண்டு உள்ளே புக முயற்சித்தான். அவனை இழுத்துப்பிடித்து அடக்கினர்.
காவலர்கள் தங்கள் கடமையை தொடங்கினர். பிரேத்ததை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெருமாள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான். குழந்தைகளை வைத்துகொண்டு கிழவி அங்கேயே கதறிகொண்டிருந்தாள். ஊர்க்காரர்கள் சிலர் காவல் நிலையத்திற்கு சென்றனர்.
இத்தனை நாட்கள் அவன் உருவாக்கிய பொய்கள் ஒரு பேருருவம் கொண்டு அவனை காக்க அவன் முன் நின்றது. பெரும்பாலானோர் அவனுக்கு ஆதரவாக சாட்சியளித்தனர். அவளுக்கு புத்தி சரியில்லை என்றனர். பைத்தியம் என்றனர். மனநிலை பேதளித்துவிட்டது என்றனர். அவள் கொல்லிக்கட்டையால் கணவனின் வாயில் சூடு வைத்ததும் குழந்தைகளை அடித்ததும் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டது. அதற்கேற்றாற்போல் போஸ்ட் மார்ட்டத்திலும் எந்த தடயமும் அவனுக்கு எதிராக இல்லை என்றே வந்தது.
பிரேதம் திரும்ப கொண்டுவரப்பட்டப் போது ஓரளவிற்கு எல்லாம் தயாராக இருந்தது. தன் பெண்ணை அடித்துக் கொன்றுவிட்டார்கள் என்று கிழவி மட்டும் ஒப்பாரி வைத்துகொண்டிருந்தாள். ஊர்காரர்கள் யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. குழந்தைகள் கொஞ்சம் நேரம் அழுதன. பிறகு அமைதியாகிவிட்டன. கூட்டம் மெல்ல அதிகரித்தது. ஒரு மர பெஞ்சில் அவள் உடல் கிடத்தப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டன. பாதாம் மரத்தின் நிழல் அவள் உடலைப் போர்த்தியிருந்தது. மேலும் மரம் அசையாமல் அனைத்தையும் கவனித்துகொண்டிருந்தது. வந்தவர்கள் கிசுகிசுப்பாக பல கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர். அதில் சில உண்மைகளும் இருக்கத்தான் செய்தன. ஒருசிலர் அவள் கணவனை நம்பவில்லை. அவர்கள் மட்டும் குழந்தைகளை நினைத்து கவலைப்பட்டனர். அவள் கணவனின் முகத்தில் எந்தவித கவலையும் இல்லை என்பதையும் அவன் அழுகையில் தெரிந்த போலித்தனத்தையும் ஊரார் உணர்தேயிருந்தனர். ஒருவேளை இவளிடமிருந்து கிடைத்த விடுதலையின் பொருட்டாக இருக்கலாமென சிலர் பேசிக்கொண்டனர்.
சடங்குகள் மெதுவாக அமைதியாக நடந்தன. ஒருவழியாக அனைத்தும் முடிந்து அவள் உடலை பாடையில் தூக்கி வைத்த அந்தநொடி, காற்று வேகமாக வீச அதுவரை அமைதியாக இருந்த மரம் வேகமாக அசையத் தொடங்கியது. வந்திருந்த அனைவருக்குமே ஆச்சர்யமாக இருந்தது. அவளுடைய அம்மா மட்டும் அடித்துகொண்டு அழுதாள். அதைப் பார்த்து பெண் குழந்தையும் அழத் தொடங்கியது. பையன் அழலாமா வேண்டாமா என்ற குழப்பதிலேயே இருந்தான்.
எல்லாம் முடிந்து இரண்டு நாட்கள் அவன் சோகமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டான். பிறகு மீண்டும் தன் பழைய வேலைகளைக் காட்ட ஆரம்பித்தான். இந்தமுறை தன் மனைவி தன்னை தனியாக விட்டுவிட்டு போய்விட்டாள் என்று கதை சொன்னான். குழந்தைகளை எப்படி ஆளாக்குவேன் என்று புலம்பினான். இதையும் சிலர் நம்பினர். பதினாறாம் நாள் காரியம் முடியட்டும் என்று அவன் மாமியார் காத்திருந்தாள். குழந்தைகளை கூட்டிக்கொண்டு போய்விட வேண்டுமென்று அவள் எண்ணம். தன் மகள் கடைசியாக கேட்டது அவளுக்கு நினைவிருந்தது, “இவன் என்ன எதுனா செஞ்சிடுவான் போல இருக்குது. எனக்கு எதுனா ஆச்சுனா, என் புள்ளங்கள இவன் கிட்ட மட்டும் உட்டுடாதமா” என்று மகள் சொன்னதைக் கேட்டு கிழவி கலங்கினாள்.
கிழவிதான் அங்கு தங்கியிருந்து ஆக்கிப் போட்டாள். குழந்தைகளுக்கு எதுவும் தெரியவில்லை. அதுகள் எப்போதும்போல் சுற்றித் திருந்தன. அவன் மாலையில் குடித்துவிட்டு வந்து மாமியார் சமைத்து வைத்தைத் தின்றுவிட்டு அவளிடமே சண்டைப் போட்டான். அவள் ஒவ்வொரு நாளாக எண்ணிக்கொண்டிருந்தாள். பதினாறாம் நாள் காரியத்திற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்தே அவன் தன் நாடகத்தை நடத்த ஆரம்பித்திருந்தான். தன்னிடம் செலவு செய்ய பணம் இல்லை. காரியம் செய்யப் போவதில்லை என்றான். விட்டுவிட முடியாதே என்று கிழவி பதறினாள். விட்டுவிட மாட்டாள் என்று தான் அவன் அந்த அஸ்திரத்தை வீசினான். அவளுக்கும் அது தெரிந்தே இருந்தது. அவள் பலரிடம் கெஞ்சி கடன் பெற்று காரியத்தை நடத்தினாள்.
மறுநாள் அவன் மாலை குடித்துவிட்டு தூரத்தில் வரும்போதே வீடு இருண்டிருந்ததை கவனித்தான். அவனுக்கு கோபம் தலைக்கேறியது. வேகமாக வீட்டை நோக்கி வந்தான். அருகே வரவரத்தான் வீடு பூட்டியிருந்ததை கவனித்தான். அக்கம்பக்கத்தில் கேட்டபோது, பிள்ளைகளை அவன் மாமியார் கூட்டிச் சென்றுவிட்டதாக தெரிவித்தார்கள். போதையில் கோபம் தலைக்கேறியது. வேகமாக அவன் மாமியாரின் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றான்.
அவன் வரவை அவள் எதிர்பார்த்துதான் இருந்தாள். தயாராகவே சொந்தக்காரர்கள் சிலரை வரவழைத்திருந்தாள். பெருமாள் வருவதை தூரத்திலேயே கவனித்தவள் அருகே விளையாடிக்கொண்டிருந்தப் பிள்ளைகளை உள்ளே விரட்டி அனுப்பினாள். அதை கவனித்ததும் அவனுக்கு இன்னும் கோபம் ஏறியது. நடையில் வேகத்தை அதிகரித்தான். அவன் கிழவியை நெருங்கியபோது வீட்டின் உள்ளேயிருந்து சிலர் வருவதை கவனித்தான். யாரென்று உற்று கவனித்தபோது, அவர்கள் கிழவிக்கு அண்ணன் மகன்களும் அவளின் மகனும் இருந்தனர். அவர்களைப் பார்த்ததுமே அவன் சட்டென நிதானமானான். நெருங்கி வந்து அமைதியாக நின்றான். அவர்கள் கண்களை தவிர்த்தான்.
“இன்னா விசயம்” என்றான் அண்ணன் மகன்களில் ஒருவன்.
“புள்ளங்களை அனுப்பு, இட்டுனு போறேன்” என்று எங்கேயோ பார்த்தபடி சொன்னான்.
“அதெல்லாம் உங்கூட அனுப்பமுடியாது. அதுங்க இங்கயே இருந்துகட்டும். நீ நடையக் கட்டு”
“இன்னாது, அது என் புள்ளங்க” என்று இரண்டு அடி முன்னால் வந்து மூன்றாது அடி எடுத்து வைக்க காலை தூக்கியபோது அவன் கண்ணத்தில் பளார் என்று ஒரு அறை விழுந்தது. அவன் இரண்டடி தள்ளி சென்று தள்ளாடியபடி விழுந்தான். கிழவி யாரையும் தடுக்கவில்லை. அவன் மெல்ல எழுந்தான். அமைதியாக அனைவரையும் பார்த்தான். அவன் கண்களில் நீர் வழிந்தது. குரல் உடைந்தபடியே, “என் புள்ளங்கள எப்படி கூட்டிகினு போவனும்னு எனக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினான். அங்கிருந்து நேராக சாராயக்கடைக்கு சென்றான்.
அவன் போவதையே கண்கள் விரியப் பார்த்துகொண்டிருந்தாள் அவனது மகள் நிர்மலா. அம்மா போனதிலிருந்து அவளுக்கு என்னவோ போல் இருந்தது. சொல்லத் தெரியவில்லை. ஒருவேளை அப்பா சொன்னதுபோல் அம்மா இல்லையோ என்ற கேள்வி அவளுக்குள் அவளே அறியாமல் மெல்ல துளிர்த்தது. அவன் சென்றதும், கிழவி அவனைத் திட்டித் தீர்த்து ஓய்ந்தப் பிறகு அவள் மெல்ல கிழவியின் அருகில் வந்து அமர்ந்துகொண்டாள். கிழவி அவளை வாறியெடுத்து மடியில் வைத்துகொண்டு மீண்டும் என்னவோ தனக்குள் பேசத் தொடங்கினாள். கிழவி என்ன சொல்கிறாள் என்றே குழந்தைக்குப் புரியவில்லை. தன் அண்ணனைப் பார்த்தாள். அவன் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். அவள் மெல்ல கிழவியிடன், “ஆயா.. அம்மா மெய்யாலுமே பைத்தியம் இல்லியா” என்றாள். அதைக் கேட்டதுமே கிழவி ‘ஓ’வென்று ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள்.
“பிஞ்சுகிட்ட இன்னாலாம் சொல்லி வெச்சிகிறான் அந்தப் பாவி. அய்யோ இப்புடி சொல்லி சொல்லியே என்புள்ளய கொன்னுட்டானே கடங்காரன். பூமாதிரி வெச்சிருந்தனே என்புள்ளய. இப்படி பைத்தியாகாரி பட்டம்கட்டி கொன்னுட்டானே…” என்று அழத் தொடங்கினாள். சிறிது நேரத்தில் குழந்தையும் அவளுடன் சேர்ந்து அழத் தொடங்கியது. வெங்கடேசன் எழுதுவதை நிறுத்திவிட்டு அவர்களையே பார்த்துகொண்டிருந்தான்.
அவன் சாராயக்கடை நண்பர்களின் உதவியை நாடினான். ஆனால், அவர்கள் அவனுக்கு வேறு ஒரு ஆலோசனை சொன்னார்கள்.
“இப்ப அதுங்கள இட்டுனு வந்து இன்னா பண்ணப்போற, இதான் சாக்குன்னு விட்டொழி. இப்ப நீ இன்னா தெனிக்கும் அதுங்களுக்கு ஆக்கிப் போடப்போறியா. கொஞ்ச நாள் அப்படியே இருந்துட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ. அன்னிக்கு வருங்கல்ல, அப்பப் பேசிக்கலாம்”
இந்த யோசனை அவனுக்கு சரியென்றேபட்டது அவன் மேலும் கொஞ்சம் குடித்துவிட்டு தள்ளாடியபடியே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
காற்று வேகமாக வீச ஆரம்பித்தது. அவன் வீட்டை அடைந்தபோது காற்று மிகபலமாக வீசியது. மின்சாரம் தடைப்பட்டு ஒரே இருட்டாக இருந்தது. பழகிய கால்கள் போதையிலும் வீட்டிற்கு சரியாக வழிகாட்டின. வீட்டை நெருங்கியதும் தூரத்தில் மரத்தின் அருகே ஏதே நிற்பதுபோல் இருக்க, அதன் அருகில் சென்று உற்றுப் பார்த்தான். பிறகு அவன் நிற்க முடியாமல் கீழே விழுந்தான். இரவு முழுக்க காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. மின்சாரமும் வரவேயில்லை.
மறுநாள் காலை, கிழவியின் வீட்டுக் கதவு பலமாகத் தட்டப்பட்டது. சேதிகேட்டு கிழவி மட்டும் வேகமாக ஓடினாள். அவள் சென்றபோது வீட்டைச் சுற்றி கூட்டமாக இருந்தது. வேகமாகச் சென்று எட்டிப் பார்த்தாள். அவன் அந்த மரத்திற்கு புடவைக்கட்டி பூவைத்து வாழை இலையில் அகப்பட்டதையெல்லாம் வைத்து கற்பூரம் கொளுத்தி பூஜை செய்துகொண்டிருந்தான். அருகே இருப்பவர்கள் யாரையும் அவன் கவனிக்கவேயில்லை. எல்லாம் முடிந்து மரத்திற்கு எதிரே உட்கார்ந்து அவன்பாட்டிற்கு பேச ஆரம்பித்தான். பேசினான், சிரித்தான், அழுத்தான். கேள்விகேட்டான், பதில்சொன்னான். பிறகு மரத்தின் அடியிலேயே படுத்துகொண்டான்.
மரம்தான் அவனை ஏதோ செய்துவிட்டது என ஊருக்குள் ஒரு பேச்சு ஓடியது. “மரத்த வெட்டிட்டா ஆளு செரியாயிடுவான்” என்று ஒருவன் சொன்னத்தைக் கேட்டு அவனை வெறிகொண்டு துரத்தினான். ஓடிக்கொண்டிருந்தவன் சட்டென நின்று திரும்பிப் பார்த்தான். “இன்னாது” என்று கத்தினான். பிறகு, “இதோ வரேன் இரு” என்று சொல்லிவிட்டு மரத்தை நோக்கி ஓடினான்.
000
அரிசங்கர்
அரிசங்கர் புதுச்சேரியைச் சேர்ந்தவர். பிரபஞ்சனுக்குப்பின் பாண்டிச்சேரி வாழ்க்கையை எழுதும் குறிப்பிடத்தக்க படைப்பாளியாக அரிசங்கர் கருதப்படுகிறார். பதிலடி, ஏமாளி, உடல், சப்தங்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும், மாயப்படகு, பார்க்காடி, பாரிஸ், உண்மைகள் பொய்கள் கற்பனைகள் மற்றும் மாகே கஃபே ஆகிய நாவல்களையும் வெளியுட்டுள்ளார்.