வானிருள் தளிபொழி : அரிசங்கர்

1.

சதிஷ் வேகமாக ஓடிவந்து வீட்டிற்குள் ஒளிந்துகொண்டதை அவன் அம்மா தேன்மொழி பாத்திரம் கழுவிக்கொண்டே கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். எதையோ செய்துவிட்டு வந்திருக்கிறான் என்று அவளுக்குத் தெரிந்தாலும் அவனை அழைத்து எதுவும் கேட்காமல் தனது வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஏற்கனவே தலைக்குமேல்  இருக்கும் ஆயிரம் பிரச்சனைகளுக்கு மத்தியில் இவன் இழுத்துவரும் சச்சரவுகள் அவளைச் சலிப்படையச் செய்திருந்தன. பிரச்சனை தன்னிடம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டாள். சதிஷ் இன்னும் மூச்சு வாங்கிக்கொண்டிருந்ததை அவள் கவனித்தாள். அவன் அப்பா உயிரோடு இருந்தவரை எல்லாம் சரியாக இருந்ததுபோன்ற ஒரு நினைப்பாவது இருந்தது. ஆனால், இப்போது அவள் பார்த்துப் பார்த்து வீட்டையும், குடும்பத்தையும் சரியாக வைத்திருந்தாலும் ஆயிரம் ஓட்டைகள் எப்போதும் அவள் கண் முன்னால் விழுந்துகொண்டேயிருந்தன.

சதிஷ் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். ஒல்லியான சுறுசுறுப்பான பையன். கோதுமை நிறம். எப்போதும் படிய தலைவாரிக்கொண்டு தான் ஒரு அம்மா வளர்ப்பு என்பதைப் பேச்சிலும், நடைத்தையிலும் எதிரிலிருப்பவர்களுக்கு தெரியப்படுத்திக்கொண்டேயிருப்பான். அவன் அம்மா தேன்மொழியும் கிட்டத்தட்ட அதேமாதிரிதான். பெரும்பாலும் அமைதியாகவே இருப்பாள். அதே சமயம் அவளுடைய உக்கிரத்தைக் காலனி சிலமுறை சந்தித்துள்ளது.

அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தத் தருணம் வந்தது. அந்தக் காலனியின் மத்தியில் இருக்கும் சின்னப்பொண்ணு என்ற கிழவி அவள் வீட்டுற்கு முன் வந்து கத்த  ஆரம்பித்திருந்தாள். தேன்மொழி ஓரக்கண்ணால் தன் மகனைக் கவனித்தாள். அவன் இன்னும் தன்னை மறைத்துக்கொண்டான். அவள் சாவகாசமாக எழுந்து வெளியே சென்று கிழவியைப் பார்த்து, ‘இன்னாத்துக்கு இங்க வந்து கத்திக்கினு இருக்க’ என்றாள்.

“ஏன் கேக்கமாட்டே, புள்ள ஒன்னு பெத்து வெச்சிகிறியே புள்ள, அது இன்னா பண்ணுச்சுன்னு கேளு.”

தேன்மொழிக்கு எரிச்சலாக வந்தது. இந்தக் கிழவியை அனுப்பிவிட வேண்டுமென்று  நினைத்தாள். “இப்ப இன்னான்னு சொல்றதா இருந்தா சொல்லு இல்லனா எடத்த காலிபண்ணு” என்று எரிந்துவிழுந்தாள். அதற்குள் காலனிக்குள் இருந்த மற்றவர்கள் வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருந்தனர். ஆனால், யாரும் மத்தியஸ்தம் செய்ய முன்வரவில்லை. இரண்டு காரணங்கள். ஒன்று சலிப்பான அவர்களின் அன்றாடங்களில் இதுபோல் நிகழும் சிறு சச்சரவுகளை வேடிக்கை பார்ப்பது என்பது அவர்களின் பொழுதுபோக்குகளில் ஒன்று. மாற்றொன்று அங்கிருந்த யாரிடமும் கிழவியைச் சமாளிக்கும் திறன் இல்லை.

கிழவி தனக்கு நேர்ந்ததை ஒப்பாரி வைப்பதுபோலச் சொல்ல ஆரம்பித்தாள்.

“ஒமொவன், பந்தடிக்கறன்னு காய வெச்சிருந்த மொளகாய  பூரா காவாயில தள்ளிவுட்டான். ஒழுங்கு மரியாதயா முன்னூறு ரூபாய எடுத்து வையீ!”

தேன்மொழி எதுவும் பேசவில்லை. வேகமாக உள்ளே சென்று பணத்தை எடுத்துக்கொண்டு வந்து கிழவியின் கைகளில் திணித்துவிட்டு உள்ளே சென்று தன் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள். அவளிடம் சிறு புலம்பலோ கோபமோ தென்படவில்லை. ஆனாலும் சதிஷ்க்கு பயமாக இருந்தது.  இப்போது இல்லையென்றாலும் இன்று இரவுக்குள் இதற்காகத் தனக்கு நிச்சயம் அடி கிடைக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. அவன் மறைந்திருந்த அதே இடத்தில் அப்படியே உட்கார்ந்துகொண்டான். சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. கிழவி கேட்டவுடனேயே தூக்கிக் குடுத்துடணுமா. கிழவியும் அவ மவனும் கொஞ்சநஞ்ச கூத்தா அடிக்கறாங்க, ஆம்பள இல்லாத வூடாச்சேன்னு அந்த கெழவிக்கு எதுனா இருக்குதா என்று சுற்றியிருந்தவர்கள் பேசிக்கொண்டது தேன்மொழியின் காதுகளில் விழுந்தன.

அந்தக் காலனியில் மொத்தம் பதிமூன்று சிறிய வீடுகள் இருந்தன. தெருவின் மத்தியில் இருந்தது அந்த பெரிய மஞ்சள் வண்ண பழைய வீடு. அந்த வீட்டை ஒட்டிய வலது புறத்தில் ஒரு சிறிய சந்து இருந்தது. அது நேராகச் சென்று இடது புறம் திரும்பி உடனே வலது புறம்திரும்பினால் அந்த மஞ்சள் வீட்டின் பின்புறம் வரும். அங்குதான் அந்தக் காலனி இருந்தது இடதுபுறம் வரியாக கட்டப்பட்டிருந்த தொகுப்பு வீடுகள். கீழே ஆறு மேலே ஆறு வீடுகள். எதிரே வலதுபுறத்தில் ஒரே ஒரு சிறிய சிமெண்ட் ஷீட் போட்ட வீடு. அதில்தான் தேன்மொழியும் அவள் மகன் சதிஷும் குடியிருந்தனர். அந்த வீட்டிற்கு சற்றுத் தள்ளி இரண்டு கழிவறைகளும், இரண்டு குளியலறைகளும் இருந்தன. மொத்த பதிமூன்று வீட்டிற்கும் அவைகள் மட்டும்தான்.  மீதியிருந்த இடங்களில் ஆங்காங்கே வசதிப்பட்ட இடங்களில் தங்கள் சைக்கிள்களையும், இருசக்கர வாகனங்களையும் நிறுத்திக்கொள்வர். அந்த இடத்தின் மற்றொரு பக்கம் புதர்கள் மண்டிக் கிடக்கும். சிறுவர்கள் அங்குதான் விளையாடுவார்கள்.

தேன்மொழி சமைத்து முடித்துவிட்டு சதிஷை அழைத்தாள். அவன் இன்னும் அதே இடத்தில்தான் இருந்தான். அம்மாவின் குரலில் கோபம் இல்லாததால் மெல்ல எழுந்துவந்தான். எதாவது கேட்பாள் என்று பயந்துகொண்டேயிருந்தான். அவள் எதுவும் பேசாமல் அமைதியாக அவனுக்கும் தட்டில் சோற்றைப் போட்டு அவன் முன் வைத்தாள். அவள் சிந்தனை வேறு எங்கோ இருந்ததைப் புரிந்துகொண்டு அவன் சாப்பிட ஆரம்பித்தான். அவன் சாப்பிட்டு முடித்ததும் அழைத்து தன் அருகில் உட்காரவைத்துக்கொண்டு அவனிடம் அன்பாகப் பேசினாள்.

“அம்மா எவ்ளோ கஷ்டப்படறேன்னு பாக்கறல்ல. கொஞ்சம் அம்மாவோட கஷ்டத்த புரிஞ்சி நடந்துக்கோடா. நீ பெரிய பையனா வளந்துட்டே சரியா.”

அவன் எதுவும் சொல்லவில்லை. அமைதியாகத் தன் அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.

காலையிலிருந்து இருட்டிக்கொண்டிருந்த வானம் அன்று பின்மதியம் பொழிய ஆரம்பித்தது. மழை பெய்ய ஆரம்பித்துவிட்டால் அந்தக் காலனி அமைதியாகிவிடும். அனைவரும் கதவைச் சாத்திக்கொண்டு அடங்கிவிடுவர். மின்சாரம் நின்றுவிட்டால் அனைத்து வீடுகளும் பகலில்கூட இருளில் மூழ்கிவிடும். அந்த வீடுகளின் வடிவமைப்பு அப்படி. வெளிச்சம் வேண்டுமென்றால் கதவையும், ஜன்னலையும் திறக்க வேண்டும். ஆனால், மழை நீர் வந்துவிடும். அதன் காரணமாக மழை நிற்கும் வரை இருளில் சிறிய விளக்கை ஏற்றி வைத்துகொண்டு எதாவது கதை பேசிக்கொண்டு உட்கார்ந்திருப்பர். இன்று அவர்களுக்குத் தேன்மொழியும், கிழவியும் அகப்பட்டுக்கொண்டனர். வெளியே சென்றவர்கள்கூட மழையில் நனைந்துவிட்டு வந்தால் உடனே வீட்டின் உள்ளே சென்றுவிட முடியாது. வெளியே இருக்கும் சிறிய இடத்தில் முழுக்க துவட்டிக்கொண்டு உடை மாற்றிக்கொண்டுதான் உள்ளே போக முடியும். மழைக்காலத்தில் யார் வந்தாலும், போனாலும் தெரியாது.

மழை இதோ விட்டுவிடும் அதோ விட்டுவிடும் என்று காலனி முழுக்கக் காத்திருந்தது. மழை விட்டமாதிரி இல்லை. லேசாக நிற்பது போல் ஜாடை காட்டிவிட்டு மீண்டும் வெளுத்தது. விட்டுவிட்டு வந்து கொண்டிருந்த மின்சாரமும் முழுவதுமாக நின்றுவிட்டது. இனி மழை நின்றால்தான் வரும். மண்ணெண்ணெய் விளக்குகளும், மெழுகுவர்த்திகளும் வீட்டை சிறிது வெளிச்சமாக்கின. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இரவு உணவை முடித்துப் படுத்துவிட வேண்டுமென்ற எண்ணத்தில் அனைத்து வீடுகளிலும் வேலைகள் நடந்தன. தேன்மொழி இரவுக்கும் சேர்த்தே சமைத்திருந்தாள். அதனால், எதுவும் செய்யாமல் விட்டத்தைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள்.

வழக்கமாக எதாவது பேசிக்கொண்டேயிருக்கும் சதிஷ் அமைதியாகவே இருந்தான். அவன் மதியம் அம்மா சொன்னதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தான். அம்மா என்ன சொல்கிறாள். இனிமேல் விளையாடக்கூடாது என்கிறாளா அல்லது பிரச்சனைகள் செய்யக்கூடாது என்கிறாளா அல்லது தன்னையும் வேலைக்குப் போகச் சொல்கிறாளா ? சதிஷுக்கு எதுவும் புரியவில்லை.

“வாடா வெளக்கு அமுங்கறதுக்குள்ள சாப்பிட்டுறலாம்” என்று தேன்மொழி அழைத்தாள்.

இருவரும் சாப்பிட்டு முடித்தனர். மழையின் வேகம் குறைந்திருந்தது.

“அம்மா ஒன்னுக்கு” என்றான்.

“அங்கலாம் போவாத, இங்கயே வெளிய போயிட்டு வா” என்றாள்.

அவன் திரும்பி வந்ததும் அவள் குடையை எடுத்துக்கொண்டுச் சென்றாள். வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. வந்தபோது நனைந்திருந்தாள். எரிச்சலுடன் உடைகளை மாற்றிக்கொண்டு அவன் அருகில் வந்து படுத்துக்கொண்டாள். இரவு முழுக்க மழை பெய்துகொண்டே இருந்தது. ஏதேதோ சத்தங்கள். சதிஷுக்கு எப்போது தூங்கினோம் என்றே தெரியவில்லை. காலையில் எழுந்தபோது மழை விட்டிருந்தது. மெல்ல எழுந்து வெளியே வந்தபோது காலனி முழுக்க சிறு சிறு கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். சதிஷ் மெல்ல நடந்துச் சென்று தன் அம்மாவின் அருகில் நின்றுகொண்டான். தேன்மொழி தன் அருகிலிருந்த பெண்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தாளே தவிர அவள் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. தன் அருகில் சதிஷ் வந்து நின்றதைக்கூட அவள் கவனிக்கவில்லை. பக்கத்திலிருந்த மாடிவிட்டு செல்வி அக்காதான் தேன்மொழியிடம் அவள் மகன் வந்து நின்றுகொண்டிருப்பதை சுட்டிக்கட்டினாள். அவள் வேகமாக சதிஷை இழுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றாள். மழை பெய்து அந்த இடம் முழுவதும் சேறாக மாறியிருந்ததால் வேகமாக நடக்க முடியவில்லை. வாசலில் இருவரும் கால்களை கழுவிக்கொண்டு உள்ளே சென்றனர். உள்ளே வந்ததும் சதிஷ் அம்மாவிடம்,  “இன்னாச்சிமா” என்றான்.

“இதப்பாரு நான் சொல்றவரைக்கும் நீ வூட்டவிட்டு வெளியேவே வரக்கூடாது. செரியா” என்று கோபமும் பதற்றமும் கலந்த தொணியில் சொன்னாள். சதிஷிற்கு பயம் வந்தது. எதுவும் பேசாமல் தலையாட்டினான். தேன்மொழி வெளியே போகத் திரும்பியபோது, “அம்மா” என்றான்.

“இன்னாடா?”

“ஆய் வருது.”

2.

சதிஷோடு சேர்த்துத் தேன்மொழியும் வீட்டிலேயே இருந்தாள். அதிகாலை லேசான தூரல் மட்டுமே இருந்தபோது மாடியில் கடைசி வீட்டில் இருந்த வாட்ச்மேன் தாத்தா அலறியடித்துக்கொண்டு வீட்டு உரிமையாளரின் கதவை வேகமாகத் தட்டினார். அவரின் பெண் தூக்கக் கலக்கத்தோடு வந்து கதவைத் திறந்தாள். இவரைப் பார்த்ததும் எரிச்சலோடு “இன்னா தாத்தா காலங்காத்தால” என்றாள். பெரியவருக்குப் பயத்தில் வார்த்தைகளே வரவில்லை. அவர் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு வேகமாக சந்துப்பக்கம் ஓடினார். அவளுக்கு எதுவும் புரியவில்லை. கைகளை உதற முயற்சித்தாள். அதற்குள் பெரியவர் சந்தின் மத்தியில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிணத்தைக் காட்டினார். அவள் அலறிக்கொண்டு உள்ளே ஓடினாள். சில நிமிடங்களில் வீட்டின் உரிமையாளர் அவர் மனைவி பதற்றத்தோடு ஓடிவந்தனர். அவர்கள் பின்னாலேயே காலனிக்காரர்கள் சிலரும் என்னவோ ஏதோ என்று ஓடி வந்தனர். பார்த்தவர்கள் அனைவரும் விநோதமான ஒலிகளை எழுப்பினர். வீட்டு உரிமையாளர் மட்டும் மெல்ல பிணத்தின் அருகில் சென்றார். போகும்போது ஈரத்தரை வழுக்கி விழப்பார்த்தார். பின்னாலிருந்து யாரோ ‘சந்துல வழுக்குதுன்னு எத்தினியோ வாட்டி சொல்லியாச்சி’ என்றார். உரிமையாளரின் மனைவி பின்னால் திரும்பி அவரை முறைத்தாள். மெல்ல பிணத்தின் அருகில் சென்றவர், அது யாரென்று உற்றுப் பார்த்தார். பின்னாலிருந்து யாரோ உயிர் இருக்குதா என்றனர்.

“கெடக்கறதப் பாத்தா எப்பயோ போயிட்டிருக்கும்.”

முகம் முழுக்க ரத்தமாக இருந்தது. ஆனால், அது யாரென்று அவர் சுலபமாக அடையாளம் கண்டுகொண்டார். மெல்ல நிமிர்ந்து, “கடைசி வூட்டு கெழவியோட மவன்” என்றார். இதைக்கேட்டதும் பின்னாலிருந்த ஒருவர் வேகமாக கிழவி வீட்டை நோக்கி ஓடினார். உரிமையாளர் காவல் துறைக்கு தகவல் தர வீட்டின் உள்ளே சென்றார். போகும்போது “போலிஸ் வர வரைக்கும் யாரையும் கிட்டவுடாத” என்று தன் மனைவியிடம் சொல்லிவிட்டுச் சென்றார். இதை ஏன் தன்னிடம் சொன்னார் என்று விநோதமாகப் பார்த்தாள் அவர் மனைவி.

காவல்துறை வருவதற்கு முன்பே கிழவி தன்னால் முடிந்தவரை அனைத்தையும் சிந்தித்ருந்தாள். முதலில் இரண்டு கான்ஸ்டேபிள் மட்டுமே வந்தனர். கிழவியை அப்புறப்படுத்திவிட்டு ஆகவேண்டிய வேலைகளை பொறுமையாக ஒவ்வொன்றாக கவனிக்க ஆரம்பித்தனர். எஸ்.ஐ. வந்த போது நன்றாக விடிந்திருந்தது. அவர் வந்த கொஞ்ச நேரத்தில் இன்னும் சில உயர் அதிகாரிகள் அங்கு வந்தனர். விபரம் கேட்ட உயர் அதிகாரிகளுக்கு, கீழ்மட்டக் காவலர்கள் பெற்றிருந்த தகவல்களைத் தெரிவித்தனர்.

“இறந்துகிடந்தவனின் பெயர் முத்து. வயது 29. இந்தக் காலனியில் தன் அம்மா, அப்பாவுடன் வசித்து வந்துள்ளான். சரியான வேலை என்று எதுவும் கிடையாது. அவ்வபோது எதாவது ஒன்றுக்குச் சிறிது காலம் செல்வான். அனைத்து வகையான கெட்ட பழக்கங்களும் உண்டு. மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள். இந்தத் தெருவுக்கு மார்க்கெட் தெருக்கு இடையில் இருக்கும் சிறு சந்தில் நின்றுகொண்டு போக வர இருக்கும் பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொள்வான். இது சம்பந்தமாக இவன் மீது சில புகார்கள் வந்துள்ளது. சில பிரபல ரவுடிகளுடன் இவனுக்கு பழக்கம் இருந்தாலும் எந்தவித பெரிய கிரிமினல் வழக்குகளும் இவன் மீது இல்லை. இந்த மொத்த பகுதியிலும் ஒருவர் கூட இவனைப் பற்றி நல்லவிதமாகச் சொல்லவில்லை.” என்று கான்ஸ்டேபிள் சொன்னதை அலட்சியமாகக் கேட்டுக்கொண்ட உயர் அதிகாரியின் அருகில் வேகமாக வந்து நின்றார் மற்றொரு கான்ஸ்டபிள். அவரை ‘என்ன’ என்பதுபோல் பார்த்தார். “தாக்கப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் அங்க கெடக்குது சார்.” என்றார். காவலர்கள் அனைவரும் வேகமாக அங்கே சென்றனர். அங்கு பாதி முறிந்த நிலையில் ஒரு கிரிக்கெட் பேட் கிடந்தது. அது உடைந்திருந்த பகுதி முழுக்க ரத்தமாக இருந்தது. அதைப் பார்த்துக்கொண்டிருந்தபோதே அவர்கள் பின்னாலிருந்த ஒருவன் “இது சதிஷோட பேட்” என்றான்.

உயர் அதிகாரியோடு இரண்டு காவலர்கள் சதிஷ் வீட்டிற்குள் இருந்தனர். மூன்று காவலர்கள் மற்றும் தேன்மொழியும், சதிஷும் நின்றுகொண்டிருந்தபோது மொத்த வீடும் ஆட்களால் அடைப்பட்டதுபோல் தோன்றியது. உயர் அதிகாரி தேன்மொழியிடம் தன்மையாக அவர்கள் பற்றிய விபரங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். முத்துவைப் பற்றியும் அவனது நடவடிக்கைகள் பற்றியும் தெரிந்தபிறகு, அவர் தேன்மொழியின் தனிமையோடு அதை முடிச்சுப்போட முயன்றார். ஆனால், அவளது இயல்பான பதில்கள் அவருக்கு ஏமாற்றமாக இருந்தன. பிறகு சதிஷிடம் தன் கவனத்தைத் திருப்பினார்.

“உன் பேரு என்ன?”

“சதிஷ்.”

“என்னப் படிக்கற?”

“ஏழாவது.”

“ எங்கப்படிக்கற ?”

“கவர்மெண்ட் மிடில் ஸ்கூல்.”

“ம்… நீ ஒரு கிரிக்கெட் பேட் வெச்சிருந்தியே அது எங்க?” என்று கேட்டதும் சிறிது யோசித்தான். அவர் மீண்டும் அவனிடம், “எப்பவுமே உன் பேட்ட எங்க வெப்ப?”

“அந்தக் கதவுக்குப் பின்னாடித்தான் வெப்பேன்.”

“எங்க கொண்டுவா போ” என்றதும் சதிஷ் கதவுக்குப் பின்னால் பார்த்தான். அதிகாரி தேன்மொழியை ஓரக்கண்ணால் கவனித்துக்கொண்டிருந்தார். அவள் இயல்பாக இருந்தாள். ஒருகொலை நடந்ததற்கான பதற்றம் மட்டுமே அவளிடம் தென்பட்டதே தவிர ஒரு கொலையை மறைப்பதற்கான எந்தவித பதற்றமும் அவளிடம் இல்லை. பேட்டைக் காணாமல் சதிஷ் விழித்தான்.

“என்ன பேட்டக் காணமோ” என்று தேன்மொழியைப் பார்த்துக்கொண்டே அதிகாரி கேட்டார்.

“ஞாபகம் வந்துடுச்சி. பேட்ட முத்து அண்ணா எடுத்துகிட்டுப் போனாரு.”

“எப்போ?”

“நேத்து மதியானம். மழை வரதுக்கு முன்னாடி”

“வீட்டுக்கு வந்தா எடுத்துகிட்டு போனாரு ?”

“இல்ல… அது வந்து…”

“பயப்படாம சொல்லு”

சதிஷ் அவன் அம்மாவைப் பார்த்தான்.

“தைரியமா சொல்லு. யாருக்கும் பயப்படாத”

“நேத்து நான் அங்க விளையாடிட்டு இருந்தேன். அப்போ நான் அடிச்ச பந்து மொளகாயில பட்டு மொளகா கொட்டிகிச்சி. அந்த ஆயா கத்திக்கிட்டே அடிக்க வந்தாங்களா, நான் பேட்ட அங்கயே போட்டு ஓடிவந்துட்டேன்.”

அதிகாரிக்கு அந்த பதில் ஏமாற்றமாக இருந்தது. பிறகு விசாரித்ததில் அந்த பேட்டை விளையாட அந்தக் காலனியில் பலர் எடுத்துச்செல்வர் என்று தெரியவந்தது. முத்துவும் காலனி பசங்களோடு கிரிக்கெட் விளையாடுவான் என்ற கூடுதல் தகவல் கிடைத்தது. அவன் அதை எடுத்துச் சென்றதை வேறு யாரும் பார்த்திருக்கவில்லை. அவன் அதை விளையாட எடுத்துச் சென்றானா அல்லது யாரையாவது அடிக்க எடுத்துச் சென்றானா என்று காவலர்கள் குழம்பினார்கள்.

மேற்கொண்டு காலனிக்காரர்களிடம் விசாரித்ததில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன :

–          போனமாசம் பள்ளிக்கூட மைதானத்தில் வேறு ஒரு கோஷ்டியிடம் முத்துவுக்கு தகராறு ஏற்பட்டிருக்கிறது. அந்த பூசல் முடிவடையாமல் தொடர்ந்திருக்கிறது.

–          மார்க்கெட் தெருவில் இருக்கும் ஒரு ஆட்டோ ஓட்டுநரின் மனைவிக்கு முத்துவுடன் தொடர்பு இருந்திருக்கிறது. அது அவனுக்குத் தெரிந்து போன வாரம் எங்கேயோ சண்டை நடந்ததாகத் தெரிகிறது.

–          இவர்கள் குடும்பம் இங்கு வாடகைக்கு இருந்தாலும், ஊரில் இவர்களுக்கு கொஞ்சம் சொத்து இருக்கிறது. அதன் பேரில் ஏதோ வழக்கு நடக்கிறது. இவர்கள் பாக்கம் தீர்ப்பு வருவதுபோல் இருக்கிறது.

–          முத்துவின் நடவடிக்கையின் பேரில் கிழவிக்கு கடும் அதிருப்தி உள்ளது.

–          முத்துவை அந்தத் தெருவைச் சேர்ந்த ஒருபெண் காதலிப்பதாகவும் அது அந்தக் குடும்பத்தில் பெரும் பிரச்சனையாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் தகவல்.

–          மேலும் இறுதியாக முத்து ஒரு கொலை வழக்கில் முக்கியமான சாட்சி.

3.

ஒருபக்கம் விசாரனைகள் சுற்றிச் சுற்றி நடந்துகொண்டிருந்தது. போலீஸ்காரர்களை விட காலனிக்காரர்கள் பல கோணங்களில் புலன் விசாரனை நடத்தினார்கள். அவர்களின் சந்தேக வளையத்திற்குள் பலர் வந்திருந்தனர். கிழவிகூட செய்திருக்கலாமென்ற கீழ் தளத்தின் மூன்றாவது வீட்டு சைக்கிள் கடைக்காரரின் கோணம் பலரை ஆச்சர்யப்படுத்தியிருந்தாலும் யாரும் அதை மறுக்கவில்லை. மற்றொருபக்கம் தெருவில் பந்தல் போட்டப்பட்டது. தெருவின் இரண்டு பக்கமும் கழிகள் மற்றும் பெரிய கற்களால் மறிக்கப்பட்டன. எதிர்பார்த்ததைவிட கூட்டம் கூடியது. போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இரண்டு கான்ஸ்டபிள் தெருமுனையில் நின்றிருந்தனர். கண்ணாடிப்பெட்டியில் பிணம் வைக்கப்பட்டிருந்தது. ஒப்பாரியும், மேளச் சத்தமும் தெருவாசிகளுக்கு எரிச்சலூட்டின. பலர் வேண்டாவெறுப்பாகவே வந்து நின்றுகொண்டிருந்தனர். யார் செய்திருப்பார்கள் என்ற கேள்வியே வேறு வேறு மாதிரி அனைவரின் பேச்சிலும் இடம்பிடித்திருந்தது.

ஒருபுறம் சடங்குகள் நடக்க ஆரம்பித்தன. மறுபுறம் பிரச்சனைகள் ஆரம்பித்தன. முத்துவின் நண்பர்கள் சில குடித்துவிட்டு ரகளை செய்தனர். சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த காவலர்களைத் தரக்குறைவாக பேசினர். கோபத்தில் அவர்களை நோக்கி நகர முயன்ற இளம் போலிஸை ஒரு வயதான அனுபவமிக்க போலிஸ்காரர் தடுத்து காதில் ஏதோ சொன்னார். அதைக் கேட்டதும் அந்த இளம் போலிஸ் அமைதியானார். சிறிது நேரம் கழித்து ஒவ்வொரு முகத்தையும் உற்றுப் பார்த்து மனதில் பதியவைத்துக்கொண்டார்.

எப்போது பிணத்தை எடுப்பார்கள் என்ற கேள்வியே ஒவ்வொருவரின் மதிலும் இருந்தது. ஒருவழியாக பிணத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்கள். கிழவி சாலையில் புரண்டு தலையிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதாள். பிணம் தெருமுனையைக் கடந்ததும் சில பெண்கள் கைத்தாங்கலாகக் கிழவியை உள்ளே கொண்டுபோக முயற்சித்தனர். அப்போது சாலையின் எதிர்வீட்டுப் பெண் ஜன்னல் வழியாக சொன்னது அங்கிருந்தவர்கள் காதில் நன்றாக விழுந்தது. “மூனு நாளா அந்த மழை பேஞ்சுது. ஆனா இப்பப்பாரு வானத்த எப்படி வெளுத்துப்போயி இருக்குது. டவுன்ல கூட மழையாம் ஆனா இங்க இல்லா பாரேன். நல்லவன் செத்தாத்தானே மழை பெய்யும்.”

மறுநாள் மாலை மீண்டும் மேகம் இருட்டிக்கொண்டு வந்தது. எதையோ யோசித்துக்கொண்டிருந்த சதிஷ் வீட்டைவிட்டு வெளியே வந்தான்.

“எங்கடா போற” என்றாள் தேன்மொழி.

“முக்கியமான வேலையாப் போறேன்” என்று சொன்னவனைத் தேன்மொழி விநோதமாகப் பார்த்தாள். பிறகு மெல்ல எழுந்து அவன் எங்கேப் போகிறான் என்று பார்த்தாள். சதிஷ் கிழவி வீட்டுப் பக்கமாகச் சென்றான். அவன் கிழவி வீட்டிற்குத்தான் போகிறானா அல்லது விளையாடப் போகிறானா என்று அவளுக்கு தெரியவில்லை. குழப்பமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் நேராக கிழவி வீட்டிற்குச் சென்றான். கிழவியின் சொந்தக்காரப் பெண்கள் ஏதோ வேலைகள் செய்துகொண்டிருந்தனர். ஒரு கிழவர் மட்டும் உள்ளே படுத்திருந்தார். அங்கே ஏன் போகிறான் என்று தேன்மொழி குழப்பமாகப் பார்த்தாள். எதாவது வம்பு வளர்க்கப் போகிறான் என்று அவளும் தயங்கியவாறே கிழவியின் வீட்டை நோக்கிச் சென்றாள்.

நேராக கிழவியின் அருகில் சென்று நின்றான் சதிஷ். சிறுவன் என்பதால் அருகில் இருந்தவர்கள் அவனைக் கண்டுகொள்ளவில்லை. கிழவி அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளுக்கு எதுவும் புரியவில்லை அவள் சுயநிலையிலேயே இல்லை. அவனை வெறுமையாகப் பார்த்தாள். சதீஷ் கிழவியை உற்றுப் பார்த்தான். கிட்டத்தட்ட முறைத்தான். கிழவியின் அருகில் வந்த சொந்தக்காரப்பெண் அவனைப் பார்த்து, “இன்னாடா” என்றாள். அவன் எதுவும் பேசுவதற்கு முன் அவனை இழுத்துவந்துவிட வேண்டுமென்று நினைத்த தேன்மொழி அவனை நோக்கிச் சற்று வேகமாக நடந்தாள். அதற்குள் அவன் படபடவென்று பேச ஆரம்பித்தான்.

“என்னால உன் மொளகா போச்சின்னு எங்கம்மா கிட்ட காசு கேட்டு வாங்கன இல்ல, இப்ப உன் பையனால என் பேட் உடைஞ்சிப் போச்சி. அதுக்குக் காசு குடு. எங்கப்பா எனக்குக் கடைசியா  வாங்கிக் குடுத்தது. உடஞ்ச பேட்டு கூடு இல்ல இப்ப.” என்றான்.

கிழவி அசைவற்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் பக்கத்திலிருந்த பெண் அதிர்ச்சியில் வாயைப் பிளந்தாள். வேகமாக வந்த தேன்மொழி அவன் முதுகில் ரெண்டு வைத்து இழுத்துச் சென்றாள். வழக்கமாக அந்த அடிக்கு அழக்கூடியவன் அப்போது அழவில்லை. தேன்மொழி அவனை இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றாள். அவளுக்கு எதுவும் புரியவில்லை. இவன் ஏன் இப்படிச் செய்தான் என்று. தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அதற்குள் விஷயம் காலனி முழுக்க பரவியது. பெரும்பாலானவர்கள் விஷயத்தைக் கேட்டதும் சிரித்தனர். ஒருசிலர் “புள்ளயா வளத்துக்கிறா” என்றனர்.

சிறிது நேரத்தில் மழை தூரத் தொடங்கியது. வெளியே யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு தேன்மொழி எழுந்து வந்தாள். கிழவியின் சொந்தக்காரப் பெண் நின்றிருந்தாள். சண்டைப்போடத்தான்  வந்திருக்கிறாள் என்று தேன்மொழி அஞ்சினாள். மெல்ல அருகில் வந்தவள் தேன்மொழியின் கைகளில் ரூபாய் தாள்களை வைத்து அழுத்திவிட்டு வேகமாக நகர்ந்தாள். ஆங்காங்கே இருந்த காலனிக்காரர்கள் இதை ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். மழை வலுக்க தேன்மொழி வீட்டின் உள்ளே வந்து கதவைச் சாத்தினாள். சதிஷ் ஒரு மூளையில் உட்கார்ந்திருந்தான். தேன்மொழிக்கு கோபமாக வந்தது. வேகமாக அவன் அருகில் சென்று அவனைத் தூக்கி நிறுத்தி “ஏன்டா இப்படிப் பண்ண ?” என்றாள்.

“பேட் போச்சில”

“பேட் போச்சினா, என் கிட்ட கேக்க வேண்டியதுதான?”

“உங்கிட்டதான் கேட்டிருக்கனும். ஆனா உன்னால தான் பேட் போச்சின்னு உங்கிட்ட கேட்டிருந்தா நீ மாட்டிக்குவியே.”

*

அரிசங்கர்

அரிசங்கர் புதுச்சேரியைச் சேர்ந்தவர். பிரபஞ்சனுக்குப்பின் பாண்டிச்சேரி வாழ்க்கையை எழுதும் குறிப்பிடத்தக்க படைப்பாளியாக அரிசங்கர் கருதப்படுகிறார்.  பதிலடி, ஏமாளி, உடல், சப்தங்கள் ஆகிய  சிறுகதைத் தொகுப்புகளையும், மாயப்படகு, பார்க்காடி, பாரிஸ், உண்மைகள் பொய்கள் கற்பனைகள் மற்றும் மாகே கஃபே ஆகிய நாவல்களையும் வெளியுட்டுள்ளார்.

தமிழ் விக்கியில் 

1 Comment

  1. நல்ல சிறுகதை. வாசிப்புனுபவம் மிக்கதாக இருந்தது. சொற்களில் உள்ள எழுத்துப் பிழைகள் சற்றே நெருடலாக இருந்தன. எழுத்துப் பிழைகள் சில இடங்களில் சொற்களை பொருட்பிழையாகவோ அல்லது பொருளற்றதாகவோ மாற்றுகின்றது. சிறந்த ஆக்கமென மகிழ்கிறேன். மகிழ்ச்சி நன்றி.

உரையாடலுக்கு

Your email address will not be published.