/

அகழ் : நூல் அறிமுகங்கள்

ஆத்ம சகோதரன் – தாவித் தியோப்

2021ம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசு வென்ற பிரெஞ்சு நாவலான “ஆத்ம சகோதரன்” தமிழில் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தியால் 2022ல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாவலாசிரியரான தாவித் தியோப், புக்கர் வென்ற முதல் பிரெஞ்சு எழுத்தாளர். அவ்விருதை வென்ற முதல் ஆப்பிரிக்க வம்சாவளிக்கூட. இந்நூல் நேரடியாக பிரெஞ்சிலிருந்தே தமிழுக்கு, பிரெஞ்சு பிரசுர அமைப்பொன்றின் திட்ட உதவியுடன்(PAP Tagore), மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இச்சிறுநாவல்,முதல் உலகப் போரை மையப்படுத்தியது. ஜெர்மானியர்களுக்கு எதிராக பிரான்ஸ் சார்பில் ஐரோப்பாவில் போரிட்ட ஆப்பிரிக்க இனக்குழுவான செனகலை சேர்ந்த இளைஞன் அல்ஃபா நிந்தியாயேவின் கதையை சொல்கிறது. அவனுடைய நீண்ட தன்னுரை போல, நனவோடை உத்தியில் எழுதப்பட்டிருக்கிறது.

போரில், சகோதரனுக்கும் மேலான தன் நண்பன் மதெம்போ தியோப்பின் இறப்புக்கு பின், தனியே சிந்திக்க ஆரம்பித்துவிட்டதாக அல்ஃபா நம்மிடம் அறிவிக்கிறான். சிந்திக்கத் தொடங்கியதும் அவன் பைத்தியமாகிவிடுகிறான். போர்க்களத்தில் வீரர்கள் எல்லோரும் தற்காலிக பைத்திய நிலையில் இருப்பதாகவும், தான் நிரந்தர பைத்தியத்தை தேர்வு செய்திருப்பதாகவும் குறிப்பிடும் அல்ஃபா போரிடுவதற்காக யுத்தக்களத்துக்கு செல்வதில்லை. நீலக் கண்களுடைய எதிரிகளில் ஒருவனை கொல்லவேண்டும்; அவன் கையை வெட்டி கொண்டு வர வேண்டும் – இதுவே அவனுடைய தினசரி திட்டம்.

அல்ஃபா “எனக்கு தெரிந்துவிட்டது.” என்றும் “எனக்கு புரிந்துவிட்டது” என்றும் அடிக்கடி  சொல்கிறான். கிட்டத்தட்ட ஒரு சிறுவன், பெரியவனாகிவிட்டதை அறிவிப்பது போல. ஆனால் அவன் தெரிந்துகொண்டதையும், புரிந்துகொண்டதையும் இன்னொருவர் அறிய முடியாததால் சிந்தனையானது சுதந்திரத்துடனும் தனிமையுடனும் சம்பந்தப்பட்டதாக மாறுகிறது. ஒரு ரகசிய சிந்தனையாளனாகி, இறுதியில் மனநல விடுதியில் சேர்க்கப்படுகிறான்.

இந்நூல் காலனிய ஆதிக்கத்தின் மீதான விமர்சனமாகவும் வாசிக்கப்படுகிறது. காலனிய ஆட்சியில் பணிச் சுமையை எதிர்கொள்ள முடியாத ஆப்பிரிக்க ரப்பர் தோட்டத் தொழிலாளிகளின் கைகள் வெட்டப்பட்டிருக்கின்றன. இந்நாவலில் ஓர் ஆப்பிரிக்கன் வெள்ளையர்களின் கைகளை வெட்டுகிறான். ஆனால் இது பழி தீர்த்தலின் கதையல்ல.

அல்ஃபா போரில் எதிரி நாட்டினரையே துன்புறுத்துகிறான். ஆனால் சொந்த படையும் அவனை அஞ்சுகிறது. ஆப்பிரிக்க காட்டுமிராண்டித்தனம் என வெள்ளைக்கார ஜெனரல் நினைக்கிறார். “தெய்ம்” எனும் அமானுட சக்தியால் பீடிக்கப்பட்டிருப்பதாக அவன் இனக்குழுவினர் கருதுகிறார்கள். அல்ஃபாவோ தான் சிந்திப்பதாக சொல்கிறான். நாவல் இந்த மர்மத்தையே மையமாக வரித்திருக்கிறது.

தேசம் உட்பட எல்லா அதிகார நிறுவனங்களுக்கும் வன்முறை தேவையாக இருக்கிறது. ஆனால் அது ஆணைக்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டியிருக்கிறது. முதல்முறை அல்ஃபா கையை வெட்டிக் கொண்டு வரும்போது வீரன் என்று புகழப்படுகிறான். அடுத்தடுத்த நாட்களிலேயே எல்லோரும் பதறுகிறார்கள். ஜெனரல் அவனை தண்டிப்பதற்கான வாய்ப்பைத் தேடுகிறார். கையாளப்படக்கூடிய வன்முறை என ஏதுமில்லை என்பதே வாசிப்பில் தோன்றுகிறது.

நாவலின் மொழி பாடல்த் தன்மையோடிருக்கிறது. ஆரம்ப அத்தியாயங்கள் உருவகக் கதைக்குரிய செறிவுடன் அமைந்திருக்கின்றன. பிற்பாடு தேவதைக் கதை கூறுகள் மேலெழுகின்றன. ஒரு தன்னிறைவு சமூகம், நவீன உலகுடன் உறவுக் கொள்ளும்போது ஏற்படும் அடிப்படை முரணும் சுட்டப்படுகிறது. வெவ்வேறு மெல்லிய இணைப்புகள் வழியாகவும் மொழித் தீவிரம் மற்றும் விழிப்பினாலும் இச்சிறுநாவல் ஓர் ஒட்டுமொத்த உணர்வை அறிய வைக்கிறது. நாவல் எனும் வடிவத்தின் அடிப்படையே, இந்த ஒட்டுமொத்த உணர்வுதான். இத்தகைய நூல்களை வைத்து நாவல் பற்றிய நம் புரிதல்களை பரிசீலிக்கலாம். நாவலை எடைக் கல்லில் அளவுப் போடுகிற அபாயத்தை தவிர்க்கலாம்.

வரையறையைவிட வெளிப்படுத்துதலில் அக்கறை கொண்டிருப்பதே இந்நாவலின் கலை மதிப்பு. பிடிபடாத, ஆனால் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும், இருட்டு நாவலில் குடிக் கொண்டிருக்கிறது. அது வன்முறையின் இருட்டு. ஓர் இனக்குழு தன் அடையாளத்தை இழப்பதன் இருட்டு. போரின் பேராசையின் இருட்டு. வாழும் மனிதர்களை ஆவிகள் கைப்பற்றுவதன் இருட்டு. சிந்திப்பதன் இருட்டு. பைத்தியத்தின் இருட்டு. தாயை இழப்பதன் இருட்டு.  அல்ஃபா சொல்வதுப் போல, எல்லா ரத்தத்தையும் கருப்பு நிறமாக மாற்றுகிற இருட்டு.

காலச்சுவடு வெளியீடு. பக்கம் 112, ரூ:150

விஷால் ராஜா
“திருவருட்செல்வி” நூல் ஆசிரியர்

௦௦௦

பச்சை ஆமை – விஜய ராவணன்

‘பச்சை ஆமை’ குறைந்த பக்கங்களுடன் எழுதப்பட்ட நாவல். நெடுங்கதை வடிவத்திற்குள்ளோ அல்லது குறுநாவல் வடிவத்திற்குள்ளோ இதைப் பொருத்துவதை விட ‘நாவல்’ என்று அடையாளப்படுத்துவதே பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில், நாவலைக் கால மாற்றத்தின் வடிவம் என்று சொல்லலாம். இந்தக் கதையும் கால மாற்றத்தைப் பேசுவது தான்.

தென் சீனக் கடலில், ஹாங்காங்கில் இருக்கும் அபெராடீன் தீவில் வசித்து வந்த ‘டாங்கா’ என்ற பழங்குடி மீனவர்களில் வாழ்கையைப் பற்றிய கதைதான் நாவலின் களம். மீனவர்களின் வாழ்க்கை தமிழில் வெவ்வேறு பின்னணிகளில் எழுதப்பட்டுள்ளன; உடனே நினைவுக்கு வருவது கடல்புரத்தில். ‘பச்சை ஆமை’ தமிழுக்கு முற்றிலும் அறிமுகமற்ற வாழ்கையைப் பேசவில்லை எனினும் கதை நிகழும் களமும் காலமும் தமிழில் இதுவரை எழுதப்படாத ஒன்று.

எதற்கு ஹாங்காங் பின்னணியில் இந்த வாழ்க்கை சொல்லப்படவேண்டும் என்ற கேள்வி எழுவது இயல்பானதே. இவ்நாவலில் வரும் தொன்மக் கதைகள் இதுவரை நாம் வாசித்து அறியாதவை. அந்த நிலத்தின் மனிதர்களின் நம்பிக்கைகள் சடங்குகள்,வாழ்க்கை முறைகள், அவர்கள் சிந்திக்கும் முறைகள் அனைத்துமே முற்றிலும் வேறானவை. இவற்றை எழுத வெவ்வேறு நிலப்பரப்புகள் தேவையாக உள்ளன. அந்த வகையில் இந்த நாவல் தேர்வு செய்த நிலப்பரப்புக்கு நியாயம் செய்கின்றது.

ஓர் எழுத்தாளர் தான் வளர்ந்த, தான் அறிந்த நிலப்பரப்பில் இருந்து ஒரு கதையை எழுதும் போது மிக நுட்பமாக அவதானிப்புகள் எழுத்தில் திரண்டு வரும். இவற்றை எழுதுவது தான் கலை என்பது ஒரு சாராரின் வாதமாக இருக்கிறது. புதிய களங்களை வைத்து எழுதுவது வெறுமே வாசிப்புச் சுவாரஸ்யத்தை முதன்மை படுத்த மட்டுமே என்ற நம்பிக்கையும் ஒரு சாராரிடம் நிலவுகிறது. இந்த இரண்டிலும் ஓரளவு உண்மை இருந்தாலும், ஆசிரியரின் சொந்த தேடலுக்கு, நிலப்பரப்பு எந்த வகையில் உதவுகின்றது என்பதைப் பொறுத்தே அதன் கலைத்தன்மை தீர்மானிக்கப்படுகிறது. புதிய படிமங்களை உருவாக்கி மேலும் கற்பனைகளை விரித்துச் செல்ல புதிய நிலப்பரப்புகள் தேவையாகவே உள்ளன.

விஜய ராவணன் காட்டும் மரப்படகுகள் நிறைந்த பழுப்பு நிற உலகம், அங்கே சிற்றலை மீது அசைந்து கொண்டிருக்கும் மூங்கில் தொப்பிகள் அணிந்த மனிதர்களின் வாழ்க்கை, அவர்களது நிலை இல்லாத தன்மை போன்றவை நமக்கு அளிக்கும் விந்தையான சித்திரம் புதிய படிமங்ககளை அளிக்கின்றன. படகிலேயே பிறந்து படகிலேயே வளர்ந்து, கடற்கரையில் பிரதானமாகச் சஞ்சரித்து எப்போதாவது மத்திய நிலப்பரப்புக்கு வரும் மனிதர்கள் ‘பச்சை ஆமை’ என்ற குறியீட்டு படிமத்துக்குள் கச்சிதமாக அமைந்து போகிறார்கள்.

பச்சை ஆமை உயிரனம் தனித்துத் தனிமையில் கடலில் வாழக்கூடியது, அதற்கு எதிரிகளும் அதிகம். கடலில் இருந்து கரைக்கு வரும் போதெல்லாம் அது வெவ்வேறு உயிரினங்களால் பந்தாடப்படுகின்றது. இங்கிருக்கும் டாங்கா பழங்குடி இனத்தவர்க்கும் நிகழ்வதும் அதுவே. இந்த நாவலில் ஒரு பண்பாடு மெல்ல மெல்ல கடற்கரைக்குள் ஒரு சிற்பி அமிழ்ந்து தொலைந்து போவது போலக் காணாமல் போகும் ஒரு சோகச் சித்திரம் உள்ளது. அதனைக் குறைந்த எண்ணிக்கைக்குள் எழுதுவது கடினமானதே; அதை விஜயராவணன் வெற்றிகரமாகச் செய்துள்ளார் என்பது இவ்நாவலை கலைப்படைப்பாக ஆக்குகிறது. நிகழ்காலத் தொடர்ச்சியில் சம்பவங்களை விவரிப்பது நாவல் வாசிப்பிற்குக் கொஞ்சம் இடையூறு செய்கின்றது என்பதை மட்டும் ஓர் எதிர்மறை அம்சமாகச் சுட்டலாம்.

சால்ட் வெளியீடு. தொடர்பு 93630 07457

அனோஜன் பாலகிருஷ்ணன்
“பேரீச்சை” உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

௦௦௦

தங்க மயில்வாகனம் – தமிழ்நதி – சிறுகதைத் தொகுப்பு

‘தங்க மயில்வாகனம்’ தமிழ்நதியின் சிறுகதைத் தொகுப்பு. பத்துக் கதைகள் அடங்கியது. இக்கதைகள் வெவ்வேறு தளத்திலானவை என்றாலும் பொதுவாகப் பேசும் ஒற்றை விஷயம், “ஞாபகங்கள் ஒரு போதும் இறப்பதில்லை, ஓடிப் போவதுமில்லை”. தமிழ்நதியில் கதைகள் அந்த ஞாபகங்களைச் சிதலமடைந்த வீடுகளிலிருந்தோ, பழைய உறவுகளை மீள வந்து சந்திப்பதன் மூலமோ, நிலப்பரப்பை, வாழ்நிலையை ஒப்பிடுவதன் வழியாகவோ, மாய யதார்த்த நிகழ்வுகள் வழியாகவோ, கனவுகள் வழியாகவோ, இழந்த காதல் நினைவுகள் வழியாகவோ, மூத்தவர்க்குச் செய்யும் சேவகங்கள் வழியாகவோ, சடங்குகள் சம்பிரதாயங்கள் வழியாகவோ, மனித நேயத்தின் வழியாகவோ அதை மீள மீள மீட்டிக் கொள்கின்றன.

“அப்பாவின் புகைப்படம்”, “முதியோர் கிராமம்” “துருவங்கள்” “வேகம்” “எனது தலைக்குள் ஒரு பறவை வாழ்கிறது” போன்ற கதை ஒரு வகையிலானவை. இரு பெரும் நிலப்பரப்பின் முரண்களைக் காலநிலை, கலாச்சார மாறுபாடு, தட்ப வெட்பநிலை தலைகீழ் மாற்றங்கள், சப்தங்கள், சலனங்கள், இயந்திரகதியான வாழ்வியல் ஆகிய பகுப்புகள் ஊடு நுட்பமாகக் கடத்தும் கதைகள். தமிழ்நதியின் கதைகள் இலங்கை நிலப்பரப்பை கொண்டாடுகின்றன. “முகவாயை கையில் தாங்கியபடி யாருடைய வருகைக்காகக் காத்திருக்கும் முதிய மனுசியின் சாயலை ஊர் கொண்டிருந்தது” என்று அதன் மீது இரக்கப்பட்டு ஏக்கம் கொள்கின்றன. அதே நேரம் கனடா நிலப்பரப்பின் தட்பவெப்பம், உணர்ச்சி மரித்த வாழ்க்கை, ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கை கொள்ளாத மனித உறவுகள் அவை கொண்டு வரும் சலிப்புகள் சிக்கல்கள் இதையும் உற்று நோக்குகின்றன.

தொகுப்பில் குறிப்பிட்டுச் செல்லும் படி பல கதைகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை “எனது தலைக்குள் ஒரு பறவை வாழ்கிறது”, “உயிர் காற்று”, “துக்கம்” ஆகியவை. மிகக் கச்சிதமாய், நுட்பமாய் எழுப்பட்டிருக்கின்றன. உயிர் காற்றுப் படுக்கையில் வாழ்க்கையைக் கழிக்கும் மூத்த உயிரைக்குச் சேவகம் செய்பவர் கதை. புலம் பெயர்ந்த இடத்தில் கண்ணுக்கு எட்டிய தொலைவில் வாழும் வீட்டில் நிகழும் மரணம் கண்ணுறும் மனுஷியின் மன அலைவுகள் அதில் பதிவாகியுள்ளன. வாழ்க்கை, மனிதர்களை எப்படி மாற்றிமாற்றிப் போடுகிறது என்பதை “இயந்திரத்தனமான வாழ்க்கை, மாநகரங்கள் வாழ்பவர்களைக் காலப்போக்கும் வரண்ட மனிதர்கள் ஆக்கிவிடும் போலிருக்கிறது” என்று அவர் வரிகளிலேயே சொல்லலாம்.

சாதி சமூக மற்றும் இன வேறுபாடுகள் மனித உறவுகள் மீது கொண்டு வந்து வைக்கும் நிர்பந்தங்களைச் சிக்கல்களைச் சொல்லும் கதைகளும் தொகுப்பில் உண்டு. தங்க மயில்வாகனம் பேசும் சாதி சமூக வேறுபாட்டோடு வேறொரு சாயலும் சேர்ந்திருந்தால் அந்தக் கதை இன்னும் வேறொரு தளத்துக்குச் சென்றிருக்கும்.

தமிழினி வெளியீடு.

லாவண்யா சுந்தரராஜன்
“அறிதலின் தீ” உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.