மாமிச அம்புலி : பச்சோந்தி

குப்புறக் கிடந்த கன்றின் கபாலம் பல்லிளித்தது. அதனிருள் துளைகளில் உள்வெளியாய் எறும்புகள் ஊர்ந்துகொண்டிருந்தன. நேற்றைப் போல் ஊமை வெயிலல்ல ; உச்சிமண்டையில் சுள்ளென்று இறங்கி உடலை மங்கலான காட்சிக்குள் தள்ளியது. பச்சை ரத்த எருமைத் தோல் நுனியெங்கும் ஆணிகள் கோக்கப்பட்டுத் துண்டிக்கப்படா வாலுடன் வெயிலில் காய்ந்தது. அதன்மீது கத்திகளும் எஞ்சிய ஆணிகளும். நீரில் மிதக்கும் பாசிகளாய்த் தோலில் பரவிக்கிடக்கும் ஜவ்வுகள். ஆட்டுத் தொட்டியிலிருந்து எழுநூறு ரூபாய்க்கு வாங்கி வந்த தோலை பச்சைமுத்துவும் கந்தனும் நாய்களின் பற்கடியிலிருந்து பாதுகாத்து இழுத்துப் பிடித்து நிலத்தில் அறைந்துகொண்டிருந்தனர்.

மைதானமெங்கும் விரவிக்கிடக்கும் காய்ந்த தோல்களும் எலும்புகளும். நாயொன்று கவ்வி இழுக்கும் பள்ளத்தில் ஊறும் தோலினை. அங்குமிங்குமாய்ப் பறக்கும் காகங்கள். ஆங்காங்கே தொங்கும் நாக்குடன் நிற்கும் நாய்கள். விளையாட்டு மைதானத்தின் நடுவிலிருந்த படவட்டம்மன் கோயிலில் உருமியும் மேளமும் ஒலித்துக்கொண்டிருக்க, புளியந்தோப்புக் குடியிருப்புகளிலிருந்து குடும்பம் குடும்பமாக நடந்தும் சைக்கிள், பைக், கார் எனப் பல்வேறு வாகனங்களிலிருந்தும் கோயிலுக்கு வந்தவண்ணமிருந்தனர்.

சப்பாத்துகளற்ற கால்களுடன் தோல்மீது ஏறி நின்று ஜவ்வுப் பகுதிகளை அறுக்கத் தொடங்கினார் கந்தன். அஞ்சியபடியே ரத்தத்தில் அழுந்திநின்று அறுக்கப்படாதவற்றைக் கொத்தியிழுக்கும் காகங்களின் கால்கள். அவற்றுள் சில தரையிறங்காமலும் தரையிறங்கியும் தோலை நெருங்கமுடியாமலும் கரைந்தபடியிருந்தன. ரத்தமுறிஞ்சிய ஈக்கள் சற்றெனப் பறந்து ஈரத்தரையை மொய்த்தன. நீக்கி எறிந்த சவ்வுகளைக் கவ்விய நாய் கடிக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் உருட்டிக்கொண்டிருந்தது. கீழே விழுமா என ஏங்கிக் காத்திருக்கும் காகங்கள். அருகில் பாக்கு மட்டையாய்ச் சுருண்டிருக்கும் தோலை வெறுமனே காலில் புரட்டிக்கொண்டிருக்கும் மற்றொரு நாய்.

தன்பக்க ஆணிகளை அடித்துமுடித்து பச்சைமுத்துவின் பக்கம் வந்த கந்தன், தோலின் தளர்வைத் தொட்டுப் பார்த்து “இழுக்குறியா இல்லையாடா படுத்தே கிடக்கு’’ என்றார்.

“பாரு எப்படி இழுத்து அடிச்சிருக்கேன்னு’’ என்றான் பச்சைமுத்து.

“கிழிக்கிற, நீ இழுத்த இழுவையிலதான் இப்படித் தொங்கிக்கிட்டு இருக்காக்கும்“ என்றார்.

“நீ மட்டும் நல்லா மேட்டு நிலத்தில் விரிச்சுக்கிட்ட’’ என்றான்.

“தோதுபடலன்ன சொல்லவேண்டியது தானடா’’ என்று பச்சைமுத்து அடித்திறக்கிய ஆணிகள் ஒவ்வொன்றையும் பிடுங்கி மீண்டும் இழுத்தடித்தார்.

 “எப்பவும் இங்கதான் தோலக் காயப் போடுவமா’’ எனக் கேட்டான் பச்சைமுத்து.

மைதானத்தின் வடமேற்குத் திசையிலுள்ள ஓங்கியுயர்ந்த புதிய குடியிருப்புகளைக் காட்டி, “அங்கதான் காயப்போடுவோம். சேட்டுங்க அங்க ஃப்ளாட் போட்டதால இங்க வந்துட்டோம்’’ என்றார்.

இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் பின்பக்கமிருந்து “சாப்பாடு போடுறாங்க சாமி’’ என்கிற குரல் எழுந்தது. திரும்பிப் பார்த்தால் மஞ்சள் சேலையுடுத்திய பெண் தேக்கிலையில் சாப்பாட்டை ஏந்தியபடி நடந்து சென்றுகொண்டிருந்தார். “சீக்கிரம் போங்க சாமி சாப்பாடு தீந்திடப் போகுது’’ என்று சொல்லியபடியே சென்றார்.

“கைகழுவிட்டு நீ போய் சாப்பிட்டு வா. எங்கையெல்லாம் ரத்தக் கறையா இருக்கு. ஏதாவது ஓட்டல்ல போய்க் கழுவிக்கிட்டு வர்றேன்’’ என்றார்.

நெளிந்த பிஸ்லெரி போத்தலில் எஞ்சியிருந்த தண்ணீரைக் கண்ட பச்சைமுத்து “இதில இருக்கும் தண்ணியில கைகழுவுங்க’’ என்றான்.

“இல்ல. இதுல கறை முழுசாப் போகாது. ஆனா ஓட்டலுக்குப் போய்ட்டு வர்றவரைக்கும் சாப்பாடு இருக்குமா’’ என்கிற சந்தேகத்தை எழுப்பினார்.

“அதுவும் சரிதான். சாப்பாடு வாங்கி வெச்சிட்டுப் போறீங்களா’’ என்றான்.

இதோ வர்றேனு சொல்லிட்டு `சென்ன வட சென்ன கறுப்பத் தமிழ் மண்ண’ மெட்ராஸ் திரைப்பாடலைப் பாடியபடி வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.

சிவப்புத் தோலை மஞ்சளாக்கிப் பின் வெள்ளையாக மாற்றியது வெய்யில். ராட்சசப் பாறையாய் இறுகத் தொடங்கிய தோலில் சுத்தியல், கத்திகள், ஆணிகள், அறுத்தெடுத்த சவ்வுகள், சாணைக்கல் அனைத்தும் கிடந்தன.

காயும் தோலுக்குச் சூரியனைக் காவல் நிறுத்திவிட்டு பச்சைமுத்துவும் கந்தனும் கோயிலுக்குச் சாப்பாடு வாங்கச் சென்றனர். புற்றுக்கோயிலையொட்டி மஞ்சளும் குங்குமமும் பூசப்பட்ட வேப்ப மரத்தின் அருகே இருந்த அண்டாவின் கடைசித் தட்டை முன்சென்றவர் பெற்றுக்கொண்டார். இருவரும் வெறுங்கையுடன் திரும்பி வருவதைப் பார்த்த பூசாரி, சாமி அறைக்குள் இருந்த இரண்டு தட்டுச் சாப்பாட்டை ஆளுக்கொன்றாகக் கொடுத்தார். காயும் தோலை வேடிக்கை பார்த்தபடிச் சாப்பிடத் தொடங்கியபோது, “இந்த அரிசியில் நம்ம பேரு இருக்கும் போல’’ என்றார் கந்தன்.

“டி.எம்.கிருஷ்ணா மிருதங்கம் செய்றவங்களப் பத்தி `செபாஸ்டியன் & குடும்பக் கலை’ னு புத்தகம் எழுதியிருக்கிறாரு தெரியுமா’’ என்றான் பச்சைமுத்து.

“தெரியும். ஆனா, தலைப்பு எனக்குப் பிடிக்கல. கிறிஸ்தவப் பரம்பரையில எங்களையும் சேர்த்துட்டாரு. எத்தனையோ சமூகம் மிருதங்கத்தச் செய்யுறாங்க. எல்லாரையும் செபாஸ்டியன் குடும்பம்னு சொல்றது எப்படிச் சரியாகும்’’.

 “புத்தகம் வெளிவந்தப்ப எதிர்ப்பு வந்துச்சா?’’

“இல்லை. ஆனா, மனசுல ஆதங்கம் இருக்கு.’’

“எல்லாருக்குமா?’’

“எல்லாருக்கும்னு எப்படிச் சொல்றது.? கிறிஸ்த்தவங்க அல்லாதவங்களுக்கு இருக்குமில்ல.’’

“ திடுதிப்புன்னு ஊம வெயிலு அடிக்குதே. இன்னைக்குக் காயாட்டின்னா நாளைக்கும் வருவமா?’’

“வீட்டில ஃபேன் காத்துல காயப் போட வேண்டியதுதான். ஆனா, நாளைக்கி மழை வந்தாலும் வரலன்னாலும் வார இங்கதான காயப்போடணும். காத்தோட்டமாச்சும் இருக்கும்.’’ என்றார்.

மேற்குத் திசை கிறுகிறுக்க “ம்மா’’ என்ற அலறலில் மணிச் சத்தம் குலுங்கக் குலுங்க ஓடிவந்த செவலை மாடு, எருமைத் தோல் சுமந்து வந்த தடித்தத் துணிப்பையின் காய்ந்த ரத்தத்தை மோந்து மோந்து பார்த்தது. அதிருப்தியில் மாட்டின் ஒற்றைக் கண்ணில் கொட்டிய கண்ணீர் மேலும் பெருக்கெடுத்தது. திசைகளைக் குத்திக் குடைந்து நாலாப் பக்கமும் எறிந்த கொம்புகள் நிற்காமல் வெப்பக் காற்றில் அசைந்தாடி அலைக்கழிந்து சனிமூலை நோக்கி ஓடியது. மாட்டின் திசையை வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்த கந்தன் வடமேற்கில் மேய்ந்துகொண்டிருந்த கன்றினருகில் சென்று மாட்டுக்குச் சைகை செய்தார். மாட்டின் வயிறும் தலையும் அசைந்தாடித் தள்ளாடியதில் வடக்கும் கிழக்கும் வடகிழக்கும் கிறுக்குப் பிடித்தன. கண்ணாடிச் சில்லுகளைத் தாண்டி, கருவேல முட்புதர்களைத் தாண்டிப் பாழடைந்த அடுக்குமாடியின் அருகே பிளாஸ்டிக் குப்பைகளை மேய்ந்துகொண்டிருந்த கன்றின் நிழலில் தொலைந்து போனது அம்மாடு.

கண்ணாடிச் சில்லுகள் நிறைந்த மண்தரையெங்கும் ஆடுகளின் ஒலிகள் பெருங்கூட்டமாய்ப் பதிந்தன. சில்லுகளின் நடுநடுவே முளைவிட்டிருந்த கோரைப் புற்களைப் பறித்து மேய்ந்தது ஓர் ஒற்றை ஆடு. அதன் குண்டியைக் கோணியால் அடித்து விரட்டினான் உடலெங்கும் வியர்வை படிந்த சிறுவன். கட்டிலைப் போல் காட்சியளிக்கும் செவ்வக வடிவ இரும்பு மேசையின்மீது கண்கள் சிவந்த இளைஞன் படுத்தபடி வார்த்தைகளைத் தள்ளாடவிடுகிறான். சாலையைக் கடக்க முடியாத ஆடுகள் தள்ளுவண்டியை ஓர் ஆட்டு ஆட்டிவிட்டு வாகனப் புகையில் மறைந்தன. மே தினத்திற்காக ஆடுதொட்டியின் நுழைவாயிலில் கட்டியிருந்த வாழை மரத்தின் எஞ்சிய தண்டைக் கடித்து இழுத்தபடி நுழையும் ஆடு கொசு மிதக்கும் நீரை மோந்து பார்த்துப் புளிச்செனத் துப்பியது.

பாழ்நிலத்தின் வெப்பத்திற்கு பச்சைமுத்துவிடம் குடையைக் கொடுத்துக் காயும் தோலைக் காவல் காத்திருக்கும்படிச் சொல்லிவிட்டுத் தாகத்திற்குத் தண்ணீர் வாங்கச் சென்றார் கந்தன். செல்லும் முன் தோலிலிருந்து நீக்கிய எஞ்சிய சவ்வுகளையும் அள்ளிச் சென்று நாய்களுக்கு வீசியெறிந்தார்.

தண்ணீர் குடித்துவிட்டுக் கையில் தண்ணீர்ப் போத்தலுடன் ஈரம் காயாப் புழுக்கைகளை மிதித்தபடி மைதானத்துக்குள் வந்தார். ஆங்காங்கே முளைத்தெழுந்திருக்கும் கருவேலங் கன்றுகளினிடையே மேய்ந்த செம்மறி ஆடுகளுக்குத் திசைக்கொருவராய்ச் சிறுவர்கள் காவலிருந்தனர். வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்களில் பச்சையம் கொஞ்சம் கொஞ்சமாய்த் தீர்ந்து விறகுத்தன்மைக்கு மாற, இளைப்பாற ஏதுமற்றுக் கருவேலங்கன்றின் அடியில் உட்கார்ந்தபடியே உறங்கிக்கொண்டிருந்தார் முதியவர். அவரிடம் பேச்சுக் கொடுத்தவாறு நிழலைப் பகிர்ந்தார். ஒற்றைக் கிளை தலையைக் கீறியபடி இருந்தது. அதை மேற்கிளைக்குள் மடித்துவைக்க முடியாததால் ஒடித்து எறிய முயற்சித்தார். முடியாமல் போக கீறினால் கீறட்டுமென்று தலைமீதே விட்டுவிட்டு செல்போனில் பாடலை ஒலிக்கவிட்டார் கந்தன்.

“இதென்ன பூச்சிச் சத்தம் போலக் கேட்குது’’ என்றார் முதியவர்.

“இதுதான் டிஜே’’ என்றார் கந்தன்.

“என்னா ஜே’’

“டிஜே’’

“அதாவது எல்லாப் பாட்டையும் ஒரு வகையில் அடக்கி எப்படிவேணுமானாலும் மாத்துறது’’

“ஓஹோ’’

“இதுவந்ததால, இசைக் கலைஞர்களோட வாழ்க்கை திண்டாட்டமாயிடுச்சு’’ என்று `தங்கப் பதக்கத்தின் மேலே’ என்கிற பாடலை பல்லிசை வாத்தியங்களின் பின்னணியில் ஒலிக்கவிட்டார்.

“ஆஹா, இது பாட்டு’’

“எல்லா கல்யாணத்துலையும் இசைக் கச்சேரி நடத்துவதை எல்லாரும் பார்த்திருப்போம். ஆனா, இன்னைக்கு டிஜே மோகம் மக்கள ஆட்டிப்படைச்சிட்டிருக்கு. இதனால, ஏகப்பட்ட இசைக்கலைஞர்கள் வாழ்வாதாரமில்லாம செத்து மடிஞ்சிட்டிருக்காங்க. நிறைய பேர் அவுகவுங்க இன்ஸ்ட்ருமென்ட்களை வித்திட்டுக்கூட வேற வேற வேலைக்குப் போய்க்கிட்டு இருக்காங்க. இந்தக் காலத்துப் பசங்களுக்கு இசைஞானம் இல்லாததுனால் டிஜேயை அதிகமா விரும்புறாங்க. நிகழ்ச்சியில நடக்குற இசைக் கச்சேரிக்குப் பலரும் வருவாங்க. பழைய பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்கும் போது  நிறைய ஞாபங்கள அசபோட்டுப் பார்ப்பாங்க. இதெல்லாம் இப்ப இருக்கவங்களுக்கு தெரியாமப் போயிடுச்சு. இதுக்குக் காரணம் இந்த டிஸ்கோ ஜாக்ன்ற டிஜேதான். அப்படியும் ஒரு சில மண்டபத்தில் போய் ஏன் இசைக் கச்சேரி வெக்க மாட்டிக்கிறீங்கன்னு கேட்டால், கச்சேரி முடிஞ்சதும் சரக்கு அடிக்கிறாங்கப்பா என்று பதில் சொல்றாங்க. ஒரு நிகழ்ச்சி முடிஞ்சதும் சரக்கடிப்பது சகஜமான ஒன்னுதான். ஆனா, ஏன் இசைக் கச்சேரி நடத்துறவங்க குடிக்கிறத மட்டும் இப்படிக் கேள்வி கேக்குறாங்க. அப்படின்னா டிஜே பண்ணுறவங்க சரக்கடிச்சுட்டு வந்து ஆடுறது இல்லையா.’’ என்றார். 

“எங்க காலத்துல கள்ளச் சாராயம் குடிச்சா போலீஸ் துரத்தித் துரத்திப் பிடிக்கும். இன்னைக்கு அரசாங்கத்தக் காப்பாத்துறதே சாராயமாப் போயிடுச்சு’’ என்று பெருமூச்சு விட்டார் முதியவர். 

காய்ந்த ஆட்டுத் தோலினருகே அசைபோட்டுக்கொண்டிருந்தது மாடு. சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். கருஞ்சாம்பலைக் கிளரி ஏதோவொன்றைப் பொறுக்கிக்கொண்டிருந்தாள் ஓர் மூதாட்டி. கரிக்கட்டையாக இருக்கும் என்று நினைத்தார் கந்தன். முன்பொருநாள் வறட்டியாக இருக்குமென்றும் நினைத்திருந்தார். யூகங்கள் அவளின் அருகே சென்ற போது பொய்த்துப் போயின. சுருள் சுருளான கம்பிகளைப் பொறுக்கிக் கோணிப்பையில் சேமித்துக்கொண்டிருந்தாள்.  உள்ளங்கையெங்கும் கருஞ்சாம்பல் படிந்திருந்தது.

பேச்சைத் தொடங்கத் தெரியாமல், கம்பியாம்மா என்றார். கூர்ந்து பார்த்தபடி ஆமாம் என்பது போல் தலையசைத்தார். சூழலை இலகுவாக்க எங்க அம்மா இப்படித்தான் தோப்பு தோப்பாகச் சென்று மட்டை பொறுக்கி வந்து விளக்குமாறு கிழிப்பார் என்றார். மேலும், கள்ளியின் வேர்களில் கொட்டிக் கிடக்கும் வேப்பம் முத்துகளை முதுகு கிழிய பொறுக்கி வந்து சாம்பலில் தோய்த்து வாசலில் காயவைப்பார் என்றார். சிறு புன்னகை ஒளிர்ந்தது. எதற்காகக் கம்பிகளைப் பொறுக்குகிறீர்கள் எனக் கேட்டதற்கு, தெரியவில்லை, கொண்டு போய்க் கொடுத்தால் காசு கொடுப்பார்கள் என்றாள். ஒரு கிலோ எவ்வளவு என்றதும், 200 ரூபாய் என்றாள். எரித்த குப்பைகளைக் கிளரிக் கம்பிகளை எடுப்பீர்களா எனக் கேட்டதற்கு, குப்பைகளில் கிடைத்தவற்றை எரித்து, அதிலிருந்து கம்பிகளைப் பிரித்தெடுப்போம் என்றாள். எதற்காக எரிக்கிறீர்கள் என்றதும், பின்னே ரப்பரை எப்படிக் களையிறது எனக் கேட்டாள். ஓ… கேபிள் வயர்களை எரித்துக் கம்பிகளைச் சேகரிக்கிறீர்களா என்றதும் ஆமாம் என்றாள். நீ என்ன வேலை செய்கிறாய், எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டாள்.

அடுக்குமாடிகளின் மேல் காக்கைக் கூட்டம் இடைவிடாது பறந்தவண்ணமிருந்தன. அக்கட்டடத்தைக் காட்டி

“இதை இடிக்கப் போறாங்க தெரியுமா?’’ எனக் கேட்டார். 

“உனக்கு யார் சொன்னது’’

“இந்த மைதானத்திற்கு விளையாட வரும் பசங்க பேசிக்கிட்டிருந்தாங்க’’

“ஓஹோ’’

“சாலைய விரிவாக்கம் செஞ்சு இந்த மைதானத்தில அப்பார்ட்மென்ட் கட்டப் போறாங்களாம்’’ என்று சொன்னபடி அந்நிறுவனத்தின் கொடிகள் கொக்கைப் போலப் பறந்துகொண்டிருப்பதை விரலால் சுட்டினார். ஆனால்,  மூதாட்டி  அத்திசையைப் பார்க்க மறுத்துவிட்டார்.

“அங்கருந்துதான் வந்திருக்கியா’’ என்றாள்.

“இல்லை’’

“நீ என்ன வேலை செய்யுற’’ என மீண்டும் மீண்டும் வினவினாள். என்ன சொல்வதென்று தெரியாமல் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாகக் கூறிச் சம்பளத்தையும் சொன்னார். அதற்குள் சற்றுத் தொலைவில் இருந்து வந்த மற்றோர் பாட்டி, “உள்ள போனேன்.  எங்க பாத்தாலும் கம்பிகளப் பொறுக்கிட்டு இருக்காங்க. அதான் வந்துட்டேன்’’ என்றாள். இருவரும் பேசத் தொடங்கியதும் அவ்விடத்திலிருந்து கிளம்பிவிட்டார் கந்தன். இரண்டு சிறுவர்கள் காய்ந்த களிமண் நிறைந்த மேடு பள்ளங்களில் பந்தைத் துரத்திக்கொண்டே வெகுதூரம் ஓடிக்கொண்டிருந்தனர்.

*

அடுத்த நாள் காலையில் வெகுசீக்கிரமாகவே மைதானத்தில் தோலில் ஆணியடித்துச் சுத்தியலால் அடித்து மண்ணில் இறக்கிக்கொண்டிருந்தார் கந்தன். பேருந்தில் வந்ததால் கொஞ்சம் தாமதமாகத்தான் வந்தான் பச்சைமுத்து. வழக்கத்தைவிட இன்று பெரிய எருமை விழுந்திருக்கும் போல, பத்துப் பேர் உறங்கும் அளவுக்குப் பரந்துவிரிந்துகிடந்தது. தொட்டியில் தோலின் விலை ஆயிரம் ரூபாய் சொல்லியிருக்கிறார்கள். கந்தன் அடித்துப் பேசி எழுநூறு ரூபாய்க்கு வாங்கி வந்திருக்கிறார்.

“இன்னைக்குப் பெரிய மாடு போல’’ என்றான் பச்சைமுத்து.

“ஆமாம். இன்னைக்குக் கொஞ்சம் பெரிசு மாட்டிக்கிச்சு’’ என்றார்.

“ரேட்டு அதிகமா இருந்திருக்குமே’’

“ஆயிரம் ரூபா சொன்னாங்க. பேரம் பேசி எழுநூறுக்கு வாங்கிவந்துட்டேன்.  அப்படித்தான் இங்க அடிச்சுப் பேசணும். வேற வழியில்லை’’

“ரத்தமும் சாணியும் கலந்து குளம் போல மிதக்குமே’’

“ஆமா. ஒருநாளு வா மச்சான் தோலுக்குப் போய்ட்டு வரலாம்னு என் ஃப்ரெண்டைக் கூட்டி வந்தேன். இங்க அறுக்குறதப் பார்த்துட்டு `பீஃப் சாப்பிடுற மனநிலையே போய்டுச்சு மச்சி’னு சொல்லிட்டான். நா வேற மழை பெய்யுற நேரம் பாத்து அவனக் கூட்டிவந்துட்டேன். சென மாடுகள அறுக்கும் போது வயித்துக் கன்னுக்குட்டியையும் அறுத்திறுக்காங்க. ரத்தமும் சாணியும் சகதியுமா கிடந்துச்சு. வேலை செய்ய ஆட்கள் அன்னைக்குன்னு பார்த்து லீவு ஏதும் போட்டுட்டாங்களான்னும் தெரியல. அதையெல்லாம் தாண்டி அங்க அடிச்ச நாத்தத்தைப் பார்த்து மச்சி இனிமே பீஃபே சாப்பிடமாட்டேன் எனக் கும்புடு போட்டான். இனி ஊர்ல சாப்பிட்டுக்கிறேன். அதுகூட சாப்பிடுவேனான்னு தெரியலனு வெறுத்துப் போயிட்டான்.’’ என்றார்.

“சென மாட்டையுமா அறுப்பாங்க?’’

“எங்காச்சும் கெணத்துல விழுந்தது இல்லாட்டி விபத்துல செத்ததா இருக்கலாம்.’’

“காத்தே இல்ல. பயங்கர புழுக்கமாயிடுச்சு கொஞ்ச நேரத்துல. எங்கையாவது ஓடிடலாம் போல ஆயிடுச்சு. டிஷர்ட்டைக் கழட்டுனதுக்கு அப்புறமா உயிர் வந்திடுச்சு.‘’ என்றார்.

`கண்ணாடி மூக்குத்தி மணிமால உன் கழுத்துக்குப் பொருத்தமடி’ என்று கந்தன் பாடிக்கொண்டிருக்கும் போது அவரின் செல் ரிங்டோன் அடித்தது.

“எங்க இருக்க’’

“தோலுக்கு வந்திருக்கேன். ஏன்னா புயல் வரப் போகுதுன்னு சொல்லிட்டாங்க. இப்ப நம்ம சேஃப்டி பண்ணிவெச்சுருந்தாதான் நல்லா இருக்கும். இல்லன்னா வேலை ஆகாது.’’

“நாளைக்கி வாசிக்கிற இடத்தில் வந்து தரமுடியுமா’’

“எங்கண்ணா’’

“எடம் எங்கன்னு தெரியல, நான் கேட்டுச் சொல்றேன்’’

“சரி’’

“ஏன்னா, வாசிக்கிற இடத்துக்கு வந்தா அப்படியே பேமன்ட்டும் வாங்கிப்ப’’

“சரி எங்கன்னு சொல்லுங்க பாக்குறேன்’’ 

“இந்தா அட்ரெஸ் வாங்கிட்டுப் பேசுறேன். சரியாப்பா’’

“சரிண்ணா’’

சற்று நேரத்தில் புளியந்தோப்பு பிரதான சாலைக்குச் சென்று தண்ணீர்ப் போத்தலும் செவனப்பும் வாங்கி வந்தார் கந்தன்.

“சீக்கிரம் தோல் காய்ஞ்சுடுச்சுன்னா போகும் போது ஒரு எட்டுப் போயி எங்க பெரியப்பாவைப் பார்த்துட்டுப் போகணும். ஒரு காலத்தில் மிருதங்கத் தொழில்ல கொடிகட்டிப் பறந்தவரு. எத்தனையோ பேருக்கு ஆசானா இருந்தவரோட குடும்பம், தொழிலு  நலிவடைஞ்சதும் சின்னாபின்னமாயிடுச்சு. பெரியம்மா இறந்ததும் மக வீட்டில இருந்தாரு. மருமகன் இறந்ததும் நீ வந்ததும்தான் எம் புருஷன் இறந்துட்டாரு, தயவு செஞ்சு நீ போயிடுன்னு சொல்லி சென்னையில ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துட்டாங்க. அவுங்க பெரிய புள்ளதான் வாரத்துக்கு ஒருதடவை போயி அவரப் பார்த்துட்டு வருது’’ என்றார்.

“செபாஸ்டியன் குடும்பக் கலைப் புத்தகத்துல `பிராமணர்களும் கடவுளுதான்; மிருதங்கமும் கடவுளுதான். ரெண்டுமே தூய்மையானதுன்னு சுந்தர் சொல்லும் போது ரெண்டு பேரும் வாய்விட்டுச் சிரிச்சதா ஒரு இடத்துல வந்ததக் கவனிச்சீங்களா?’’ என்றான் பச்சமுத்து.

“இதுல என்ன உள்ளர்த்தம் இருக்கப் போகுதுன்னு நினைக்கிற. பிராமணர்கள் தூய்மையானவங்களா? மிருதங்கத்தச் சொன்னீங்க ஓகே. எவனோ ஒருத்தன் பிராமணர்களும் தூய்மையானவங்கன்னு சொன்னதுக்கு டி.எம்.கிருஷ்ணாவும் சிரிச்சிருக்கிறாருன்னா பாத்துக்கோங்க. அவருக்குத் தெரிஞ்சிருக்கு’’ என்றார்.

இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கையில் கந்தனின் அண்ணன் பையில் நீண்ட நீண்ட வார்களுடனும் ஈயப் போத்தலில் நீராகாரமும் கொண்டுவந்திருந்தார். தொண்டையில் இறங்கி உடலைக் குளிர்வித்த நீராகாரத்தின் அடிச்சோற்றை மென்று தின்றார் கந்தன்.

தூரத்துக் கோரைகளை மேயும் ஆடுகள் தொண்டை அதிர இடைவிடாது கத்தின. ஆமணக்கு, எருக்கஞ்செடி, கருவேல மரங்களிடையே திட்டுத் திட்டாய் முளைத்திருந்தன புட்கள். ஊறிய வார்களை வெளியே எடுத்தார் கந்தன். வெட்டவெளியின் ஓரிடத்தில் பட்டை ஆணியால் வார்களை அடித்திறக்கினார். கறுப்பு வெள்ளை, அடர்பச்சை நிற வார்களின் நுனிகளைப் பிடித்து முடிவற்ற பாம்பைப்போல் இழுத்துக்கொண்டே சென்றார். தரையில் தேய்ந்தபடி விலக்கப்படாக் கற்றை மயிர்களுடன் கிடந்தசைந்தன. இடைவிடாது கதறும் ஆடுகளின் ஒலி மைதானத்தின் வெக்கையைக் கூட்டியது. உலகின் ஒருமுனையை இழுத்து மறுமுனையில் இறுகக் கட்டினார் கந்தன்.

வெயில் சூட்டில் மஞ்சள் தோல் மெதுமெதுவாய் வெள்ளையாய் மாறி விறைப்பாகியது. காய்ந்த தோலை காம்பஸினால் வட்ட வட்டமாகக் கீறலிட்டுக் கத்தியால் கிழித்துத் தட்டுகளாக்கினார். அத்தட்டுகள் முழுநிலாக்களாய் மண்மீது சாய்ந்துகிடந்தன. கறையுற்ற நிலாக்களாய். எஞ்சிய தோல்களில் அடிக்கப்பட்டிருந்த ஆணிகளை உருவிப் பையில் எறிந்தார். இரு சக்கர வாகனத்தில் பாழ்நிலத்தின் மேடுபள்ளங்களில் குலுங்கிக் குலுங்கிச் சென்றன மாமிச நிலாக்கள்.

ஒற்றை விண்மீன் ஒளிரும் கருநீலவானில் வெள்ளைப்பூண்டு நிலா புளியந்தோப்பைச் சதா வலம்வந்தது. ஆடுதொட்டி பேருந்து நிறுத்தத்தில் அழுகிய மாமிச வாசனை முற்றும் நகரை மூழ்கச் செய்தது. அம்பேத்கர் சாலையோரம் குவிக்கப்பட்டிருந்த கட்டட இடிபாடுகளின் நடுவே அங்கும் இங்குமாய்ப் பதுங்கி மோப்பம் பிடித்தபடி இருந்தன நாய்கள். பனியில் நடுங்கும் சதைகளின் நடனத்துடன் பற்களும் கிடுகிடுத்தன.

டிக்காஸ்டர் சாலையிலுள்ள கந்தன்வீட்டு முற்றத்தில் அசைந்தாடியது தென்னை. அந்நிழலில் பலாக்கட்டையை இளைத்துக்கொண்டிருந்தார். எந்திர ஓசையிலிருந்து சில்லுச் சில்லாய்த் தெறித்தன மரத்துகள்கள். வார்மயிர்கற்றைகளைக் கத்தியால் நீக்கிக்கொண்டிருந்தான் பச்சைமுத்து. இரு கால்களினிடையே கட்டையைவைத்துத் தொப்பிகளை மூட்டத் தொடங்கினான் கந்தன். அடித்துமூட்டிய மிருதங்கங்களை சங்கரநாராயணனிடம் கொடுத்து வந்தவன் நள்ளிரவில்தான் உறங்கச் சென்றான். 

காலையில் தோலுக்குக் கிளம்பிக்கொண்டிருந்த கந்தன் வாசலைத் தாண்டும் தருணத்தில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியொன்றில் சங்கரநாராயணன் மிருதங்கம் வாசித்துக்கொண்டிருந்ததை உற்றுக் கவனித்தார். நாராயணனின் முகபாவமும் மிருதங்கம் அடிப்பதும் மாறி மாறி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தன. ஒற்றைக் கண்ணால் அரங்கை உருட்டி உருட்டிப் பார்த்து இசையில் லயித்தார். நேற்று மிருதங்கம் கொடுக்கச் சென்ற போது திருவல்லிக்கேணியில் நாராயணன் தன் வீட்டு வாசலில் மாட்டின் குண்டியைத் தொட்டு வணங்கி மாட்டு மூத்திரத்தை உள்ளங்கையால் பிடித்துக் குடித்துத் தலைமீது தெளித்த காட்சிகள் வந்துவந்து போயின.    

`சீக்கிரம் கிளம்பு மாமா தோலுக்கு நேராச்சு.’ 

***

பச்சோந்தி

பச்சோந்தி தமிழ்க் கவிஞர், பத்திரிகையாளர். கணையாழி, வம்சி, ஆனந்த விகடன், நீலம் ஆகிய நிறுவனங்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் இயங்கும் ஜனசக்தி வார இதழில் பணிபுரிந்து வருகிறார். வேர்முளைத்த உலக்கை, கூடுகளில் தொங்கும் அங்காடி, அம்பட்டன் கலயம், பீஃப் கவிதைகள், கபால நகரம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் 'பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகள்' என்னும் நாட்குறிப்பு நூலும் இதுவரை வெளியாகியுள்ளன.

3 Comments

  1. தகவல்கள், விவரணைகளினூடாக ‘மாமிச அம்புலி’யில் நம்பகமாகவும் திடமாகவும் ஒரு உலகத்தை மொழியில் உருவாக்கியுள்ளார் பச்சோந்தி….சிறுகதையாக மாமிச அம்புலி எங்கே நிற்கிறது?

    • பச்சோந்தியின் கவிதைகள்
      ஒன்றை புதியதாகவும் புதுமையான வார்த்தைகளாலும் தன் கவிதைகளால் ஈர்க்கப்பட்டவர் பச்சோந்தி. அவரின் முதல் சிறுகதை
      அபுனைவு வகை மாமிச அம்புலி ஒரு எதிர்கதை . நலிந்த இசை கலைஞர்களின் மேன்மை இன்மையை மட்டும் எழுதிவர்கள் எழுதிக்கொண்டு இருப்பவர்கள் தான் அதிகம். எதிர்கதை வழியே அசலான மனிதர்களின் வாழ்வை சிறுகதையாக எழுத தொடங்கிருக்கும் பச்சோந்திக்கு வாழ்த்துகள். – தி.காவிரிநாடன்

  2. முதல் சிறுகதை கவிதைகள் எழுதிய நடையில் எழுதி பார்த்திருக்கிறார் நல்ல முயற்சி. சற்றே மூச்சு வாங்குகிறது கதை, பகடிகளுனுடே பயணித்தாலும். ஏதோ ஓன்று
    நெருடுகிறது. வாழ்த்துக்கள்

உரையாடலுக்கு

Your email address will not be published.