/

“நிலப் பெருமிதம் மானுடத்திற்கு எதிரானது’’ – முத்துராசா குமார்

உரையாடல் – பச்சோந்தி

நிழற்படம் : சிலம்பரசன்

மதுரை வடமேற்குப் பிராந்தியமான தென்கரையில் பிறந்தவர் முத்துராசா குமார். பிடிமண், நீர்ச்சுழி, கழுமரம் ஆகிய இவரின்  கவிப் பனுவல்களில் இடம்பெற்ற கவிதைகள் தமிழ்ப் பண்பாட்டு வெளியை ஊடறுத்த குரல்வளையின் மறைக்கப்பட்ட உதிரச் சொட்டுகள். அதன் காய்ந்த  தடத்தில் ஒலித்த கடைசிச் சொற்களைத் தேடி அலையும் சிறுவனாக அலைக்கழிகிறார் முத்துராசா. ஹைப்ரிட் கவிதைகள் பெருகிப் போன காலத்தில் தமிழ் நிலத்தின் கடைக்கோடியில் வசிப்பவரும் தம் அன்றாட வாழ்வியலைப் பார்க்கும்  பிரதிப் பிம்பமாய் மொழியில் வெளிப்பட்டிருக்கிறார். விளைநிலத்தில் பறித்து வந்த ஈரம் சொட்டும் காய்கனிகளின் தன்மையுடன் பிடிமண்ணில் வெளிப்பட்ட கவிதைகள் நீர்ச்சுழியில் சில அபாரமான படிமங்களுடன் நவீனத் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கிறார். கல்வி, பொருளாதாரம் ஆகிய அடிப்படைத் தேவைகளின் பொருட்டு நிலத்தைப் பெயர்த்துக்கொண்டு சென்னை போன்ற பெருநகரத்தில் வாழ்ந்தாலும்  ஈத்து சிறுகதைகளையும் கங்கு நாவலையும் வாசிக்கையில் மதுரைப் புறநகரின் நசுக்கப்பட்டோரின் வாழ்வியலிலேயே தோய்ந்து கிடக்கிறார்.

இலக்கியம், சினிமா போன்ற கலை வடிவங்களில் மட்டும் தலித் வாழ்வியலை முன்னிறுத்துபவர்கள் சாதி நீக்கம் கோரித் தவம்கொண்டு இறுதியில் பாசிச இந்துத்துவா சக்திகளுடனும், `நாடகக் காதல்’ புனைக் கட்சிகளுடனும் ஐக்கியமான அரசியலை முன்னெடுக்கின்றனர். பாபாசாகேப் அம்பேத்கர், முனைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரின் அரசியலை முன்னெடுப்பதாகக் கருதிக்கொண்டு கக்கத்தில் அரிவாளுடன் அலையும் சாதி இந்து முற்போக்குவாதிகள் ஒருபுறம் என்றால், சென்னை தலித் – திருநெல்வேலி தலித் – அரியலூர் தலித் – ஆரணி தலித் என்கிற தலித் பிரிவினைகள் மறுபுறம். இன்னும் கூர்மையாகப் பார்த்தால் பறையர் விடுதலைதான் தலித் விடுதலை என்கிற கூச்சல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அப்படியென்றால் பள்ளர் – பறையர்களால் ஒடுக்கப்படும் அருந்ததியர், வண்ணார் போன்றோரின் குரல் இன்னும் எத்தனை காலம் நசுங்கிச் சிதையும் என்று நினைக்கையில் மன உளைச்சலே எஞ்சி நிற்கிறது. இப்படியான சமூகச் சூழலில் `சாதியத்தால் மனிதமற்றுத் திரிந்த காலத்திற்காக மன்னிப்புக் கோருகிறேன்’ என்ற சுயமதிப்பீட்டுடனும், சுயதணிக்கையுடனும் தனித்து நிற்கிறார் கவிஞரும் எழுத்தாளருமான முத்துராசா குமார். தற்போது மனைவியுடன் விழுப்புரத்தில் வசிக்கும் முத்துராசா குமாரிடம் மெய்நிகர்ச் செயலிகள் மூலம் உரையாடினேன்.

– பச்சோந்தி

சோழவந்தானுக்கு அருகிலுள்ள தென்கரை கிராமத்திலிருந்து சென்னைக்கு எப்போது இடம்பெயர்ந்தீர்கள்?

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை முடித்த பிறகு ஒரு வருடம் கழித்துதான் முதுகலை இதழியல் படிப்பைப் பற்றித் தெரிய வந்தது. அமெரிக்கன் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் கௌரிராஜன்தான் கோரிப்பாளையம் நெட் சென்டரில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் விண்ணப்பப் படிவத்தைத் தரவிறக்கம் செய்து கொடுத்தார். 

நானும், மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் சேர எனது நண்பன் வினோத்தும், பணி நிமித்தமாக இன்னும் சில நண்பர்களும் மதுரையில் இருந்து சென்னைக்குக் கிளம்பினோம். பல்வேறு நெருக்கடியால் சென்னையில் என்னால் நிலைகொள்ள முடியவில்லை. ஊருக்குக் கிளம்பிவிட்டேன். பேராசிரியர் கோபாலன் இரவீந்திரன் அரவணைப்புக் கிடைக்க மீண்டும் சென்னை வந்தேன். உடன் வினோத் இல்லை என்பதை மட்டும் ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது…

வினோத்திற்கு என்ன ஆனது? வினோத் பற்றியும் அவருக்கும் உங்களுக்குமான நட்பு பற்றியும் பகிர முடியுமா?

எதைச் சொல்வது எதை விடுவதெனத் தெரியவில்லை. இப்பவும் அவனில்லாத வெறுமை தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது. எனது ஊர் தென்கரை. வினோத் ஊர் சோழவந்தான். இரு ஊருக்கும் நடுவில் வைகையும், பாலமும்தான் இடைவெளி. எனது பதினோராம் வகுப்பில் வினோத் அறிமுகமானான். 

எளிமையாகவும், சுதந்திரமாகவும் இருக்க விரும்பிய வினோத்,  முன்னேற்பாடின்றிப் பயணங்களை மேற்கொள்வான். ஊரை மிகவும் நேசித்ததாலும் நகைச்சுவை உணர்வு அதிகம் என்பதாலும் எல்லோருக்குமே அவனை மிகவும் பிடிக்கும். வாழ்வின் பிரச்சனைகளை அவன் பார்க்கும் விதம் வேறாக இருக்கும். துயரங்களை அசால்ட்டாகக் கடந்து விடுவான்.

இருவருமே ஒரே வகுப்பில் படித்தோம். ஒரே மாதிரியான சுருள் முடித் தோற்றத்தில் ரெட்டைப்பிறவி போன்றுதான் ஊரில் திரிந்தோம். எல்லோரும் அப்படித்தான் சொல்வார்கள். சோழவந்தானிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் இரவு பகலாக நாங்கள் அலையாத, நின்று சிரிக்காத இடம் கிடையாது. மாரியாத்தா கோயில் திருவிழாவில் கைலியுடன் ஆடாத வீதி கிடையாது.

சினிமா மீது தீராத இரசனையும், காதலும் கொண்டிருந்தான். சிறு வயதிலிருந்தே மதுரைக்குச் சென்று முதல்நாள் முதல்காட்சி பார்த்து வந்தவன். மதுரையின் திரையரங்குகள், சினிமாக்கள், கதைகள், பாடல்கள், யுவன் சங்கர் ராஜா குறித்து நிறைய விஷயங்களை எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறான், வாழ்வு குறித்தும். 

ஊரிலிருந்த மூன்று திரையரங்குகளும், வினோத்துடனான உரையாடலும் திரைக் கலை மீது எனக்கிருந்த ஆர்வத்தையும் ரசனையையும் மேலும் அதிகரித்தன. பள்ளி, கல்லூரி முடித்துவிட்டு ஊரிலிருந்த காலத்தில் வாழ்வின் வழி மாறிய பிரச்சனைகளையும் அனுபவித்தோம். ஊரை அத்துவிட்டுச் சென்னைக்குக் கிளம்புவது எங்களுக்குப் படுசிரமமாக இருந்தது. ஒருவழியாக ரயிலேறினோம்.

மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் பாதியில் படிப்பை விட்டு விட்டு, தனியார் திரைப்பட இன்ஸ்டிட்யூட்டில் திரைப்பட இயக்கம் படித்து முடித்தான். ஊர் மாரியம்மன் கோயிலுக்குப் போய்விட்டு உடனே வருவதாக உறுதியாகச் சொன்னான். நான் வேண்டாமென்று எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன். மீறிப்  போனவனை ஊர் மறுபடியும் உள்ளிழுத்துக் கொள்ள அவனும் அதன் ஆழத்துக்குள் சென்றான். பிறகு வினோத் இறந்த செய்தி மட்டுமே வந்தது.

இலக்கிய வாசிப்பின் மீதான ஈடுபாடும், கவிதை எழுத வேண்டுமென்கிற உந்துதலும் எப்போது ஏற்பட்டது?

சோழவந்தான் அரசஞ்சண்முகனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் (ஆலங்கொட்டாரம்) படித்தேன். எங்களது தமிழாசியர் மகாலட்சுமி, மதிப்பெண்கள் தாண்டிக் கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி என்று மாணவர்களை உற்சாகமாய் வைத்திருப்பார். அவரின் மூலமாகத்தான் தமிழ் இரண்டாம் தாளின் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் மீது ஆர்வம் வந்தது. கவிதை என்று எதை எழுதிக்கொண்டு போய்க் காட்டினாலும் பாராட்டுவார். அந்த நாட்களில்தான் கவிதைகள் மீது ஆர்வமும், கவிதைகள் எழுத வேண்டுமென மன உந்துதலும் உண்டானது. அதைச்  சரியாகச் செயல்படுத்துவதற்குள் பள்ளி வாழ்க்கை முடிந்துவிட்டது.

பிறகு அமெரிக்கன் கல்லூரியில் படித்த கணினி மீது துளியும் ஆர்வமில்லாமல் இருந்தது. ஆனால், அமெரிக்கன் கல்லூரியின் வளாகமும், மரங்களும், செங்கட்டிடங்களும், வாசமும், இருளும், கல்லூரிக்குள் கொட்டிக் கிடந்த கலை, இலக்கியம், அரசியல், சினிமா கதைகளும் எனக்குள்ளிருந்த படைப்பாளனை மீண்டும் உயிர்ப்பித்தன.

கவிதைகள் என்ற பெயரில் ஏதேதோ எழுதியிருந்தேன். அதை யாரிடம் காட்டுவதென்று தெரியவில்லை.

கல்லூரியின் Daniel Poor Memorial நூலகத்திற்குச் சென்று நூல்களைப் பார்ப்பதும், புரட்டுவதும் அவ்வப்போது படிப்பதுமாக இருந்தேன். யாருடைய வழிகாட்டலும் இல்லாமல் அலைந்தேன். சில மாதங்களில் கல்லூரியில் உண்டான கலவரச் சூழலால் கல்லூரிப் பருவம் முற்றிலும் தடம் மாறித் தாந்தோன்றியாய் முடிந்து போனது.

உங்களின் வாழ்நிலையை எழுத வேண்டும் என்கிற மனநிலை எப்போது உருவானது. நவீனக் கவிதையின் போக்கு கைவசப்பட்டதாக எப்போது உணரத் தொடங்கினீர்கள்?

சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் துறைக்குள் வந்த பிறகுதான் முறையான வாசிப்புக்குள் நுழைந்தேன். தமிழ்நாட்டின் வெவ்வேறு ஊர்கள், இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்கள், வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்த மாணவர்களுடன் அமர்ந்து படிக்கையில் எதைச் சொல்லப் போகிறேன், எதை எழுதப் போகிறேன் என்ற குழப்பம் இருந்தது. பிறகு எனது நிலத்தைப் பற்றியும், எனது வாழ்வனுபவத்தைப் பற்றியும் சொல்லலாம் என்ற தெளிவு கிடைத்தது. அதற்கான திறப்புகளும், வழிகாட்டல்களும் துறையில் மிகத் தாராளமாய்க் கிடைத்தன. முக்கியமாகத் துறையில் செயல்பட்ட ‘முற்றம்’ நாட்டார் அரங்கக் கலைக் குழு எனக்கு நிறைய தளங்களை அமைத்துக் கொடுத்தது.

என்னைப் பொறுத்தவரையில் நவீனக் கவிதையின் போக்கை ஒரு இடமாகவோ, பொருளாகவோ, சூத்திரமாகவோ நான் பார்க்கவில்லை. அதனால் அதை அடைந்துவிட்டேனா அல்லது அது எனக்குக் கைவசப்பட்டுவிட்டதா எனச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. தொடர்ச்சியாக வாசிக்கிறேன். வாழ்வையும், சமூகத்தையும் கூர்ந்து அவதானிக்கிறேன். அதில் எனது பார்வைகளையும், கோணங்களையும் பிடித்தபடிப் பொருத்துகிறேன். இதுவொரு தொடர் இயங்குதல்தான்.

பிடிமண் என்பதைப் பண்பாட்டுச் சொல்லாக மட்டுமின்றி அரசியல் சொல்லாகவும் கருதுவது எதனால்?

நிலம், மூதாதையரின் வழிபாடு என்பதோடு மட்டும் பிடிமண் என்ற சொல்லை நான் சுருக்கிப் பார்க்கவில்லை. சர்வாதிகார, பெரு முதலாளிகளின் வளர்ச்சித் திட்டங்களுக்காகக் கடல், சமவெளி, மலைகளின் பூர்வக்குடிகளை வெளியேற்றுகையில் அவரவர்களுடைய நிலத்தின் பிடிமண் வழிபாடு என்ற நிலையிலிருந்து போராட்ட அரசியலாக வடிவம் பெறுகிறது.

‘ஒரே நாடு; ஒரே தேசம்; ஒரே தேர்தல்; ஒரே மொழி’ என நம்மை ஆளும் பன்னாட்டு முதலாளிகளின் இந்துத்துவா அரசு சொல்லும்போதும், செயல்படும்போதும் பன்மைத்துவ இந்தியாவின் ஒவ்வொரு நிலப் பிடிமண்ணும் எனக்கு அரசியல் சொல்லாகப்படுகிறது. 

அதே நேரத்தில், கிராமங்களில் நிலவும் ‘நாங்கதான் இந்த ஊரோட அடையாளம், நாங்க மட்டுந்தான் இந்த ஊரோட பெரும, எங்களுக்கு கீழதா எல்லாரும், எல்லாமும்’ என்ற ஆதிக்க மனநிலையை எதிர்க்கும், உடைக்கும் வலுவான அரசியல் சொல்லாகவும் பிடிமண்ணைப் பார்க்கிறேன்.

கட்டக்கால் வேட்டை குறித்த கவிதை ஒன்று நீர்ச்சுழியில் இடம்பெற்றுள்ளது. பன்றி வேட்டையின் அனுபவக் களம் அதன் பின்புலம் குறித்து…

ஊரில் டாப்படிக்கும் இடமாகத் தொன்றுதொட்டு இருந்து வருவது மாவடியான் கோயில். என் வயது ஆட்களுக்கும் அப்படியே. கோபுரமற்ற, வேலிகளற்ற அந்தக் கோயிலைச் சுற்றி முன்பு தோப்புகளும், வயக்காடுகளும், வாய்க்கால்களும், புதர்களும் இருந்தன. பன்றிகளின் வாழ்விடம் அங்குதான். எங்களுக்கான கழிப்பிடங்களும் அங்குதான். இப்போது முழுக்கக் கட்டிடங்களாகிவிட்டது. எனக்கு மூத்தசெட்டு ஆட்கள் கட்டக்கால் வேட்டைக்கு அடிக்கடிச் செல்வது வழக்கம். ஒருமுறை கட்டக்கால் வேட்டைக்குக் கோயிலில் உட்கார்ந்து அவர்கள் திட்டமிடுகையில் சிறுவனாக நான் அருகிலிருந்தது இன்றும் நினைவில் இருக்கிறது. 

உடல்வாகு, கறிப்பாங்கு பொறுத்துக் கூட்டத்திலிருந்து ஒரு பன்றியைத் தேர்வு செய்வது, அதன் மேய்ச்சல் நேரங்களையும், வழித்தடங்களையும் கணிப்பது, ஓட்டத்தை மறிப்பது, சுருக்குக் கம்பி, ஆயுதங்களைத் தேர்வு செய்வது, பன்றியின் உயிரை நிறுத்தி, தீயில் வாட்டி, மஞ்சளிட்டு, வெட்டிச் சுத்தம் செய்து துண்டுகளாக்குவது, கல்லடுப்புக் கூட்டுவது, சட்டி, சமையல் சாமான்கள் தயாராவது என அனைத்து உரையாடல்களிலும் பக்கத்திலிருந்து மிகுந்த ஆர்வமாய் அவர்களின் வாயைப் பார்த்திருக்கிறேன். பன்றி வளர்ப்பவர்களுக்குத் தெரியாமல் வேட்டையை எப்படிச் சாத்தியமாக்குவது என்ற பேச்சும் அடிபடும்.

எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி அன்று அவர்களுடன் வேட்டையில் கலந்து கொண்டேன். ஒவ்வொருவரின் பின்னால் வெறுமனே ஓடியதைத் தவிர நான் எதுவும் செய்யவில்லை. வதியின் ஈரத்தடத்துடன் இருந்த பன்றியை வளைத்து விரட்டினார்கள். நரகல்களும், தூமைத்துணிகளும் கால்களில் மிதிபட டவுசரோடு ஓடினேன்.

அந்த நாளின் மூச்சுவாங்கலும், பன்றியும், மாவடியான் கோயிலும், அதன் வெளியும், மூத்த செட்டு ஆட்களும்தான் ‘கட்டக்கால் வேட்டை’ கவிதையை எழுதியது.

ஊத்து மடை கவிதை வெளிப்படையாக ஆணவக் கொலைபற்றிப் பேசுகிறது. தீமூட்டியும் அனத்தியவளைக் கம்மக்கரையில் புதைத்தது மேலும் கனத்தை உண்டுபண்ணுகிறது. எம்மாதிரியான சூழலில் இக்கவிதையை எழுதினீர்கள்?

வெட்டிக் கொலை செய்தால்தான் ஆணவக்கொலை என்றில்லை. பிள்ளைகளைத் தற்கொலைக்குத் தூண்டி உயிரை மாய்த்துக்கொள்ள வைப்பதும் சிறிதும் நடுக்கமின்றி அதை வேடிக்கைப் பார்ப்பதும் ஆணவக் கொலைகள்தான். அப்படியான உண்மைக் கதைகளைக் கேட்டு வளர்ந்திருக்கிறேன். வளர்ந்தும் பார்த்திருக்கிறேன். அக்கதைகளில் ஒன்று எனக்குள் நெடுங்காலமாய்ப் பதிந்திருந்தது.

கம்மாவின் மறுகாவிலிருந்து கடைசி மடை வரை தாத்தாவோடு நடந்த அந்த மாலையில் வானின் கண் சிவக்க அக்கதை மீண்டும் எனக்குள் தலை தூக்கி ஆடியது.

தலைவெட்டியான் மடை எங்குள்ளது. அம்மடைக்குள் ஏன் இன்னும்  ரத்தச் சொட்டுகள் விழுந்துகொண்டே இருக்கின்றன?

ஊர்க் கம்மாவில் தலைவெட்டியான் என்ற பெயரில் மடை உள்ளது. பெயருக்குப் பின்னாலான கதையைக் கவிதையின் வழி வெவ்வேறு விதமாய் உடைத்து ஒட்டிப் பார்த்தேன். நீரை முன்னிறுத்திய மனித வன்முறைகளும், படுகொலைகளும், ஒடுக்குமுறைகளும், அதிகாரங்களும் இங்கு நிறைய உள்ளன. கிராமங்களில் கம்மா பாசன நீரைப் பகிர்வதில், வாமடை அடைப்பதில், எடுப்பதில் மனிதர்களுக்கிடையே பெரும் போட்டா போட்டியும், பகையும் உள்ளூற நிறைய இருக்கின்றன. அவற்றில் விட்டுக்கொடுத்தல், சகிப்பு குறைவே. அதிகார உளவியலே ஜாஸ்தி. அப்படியாக ஒரு மடையடியில் நீரைப் பகிர்ந்துகொள்வதில் ஒரு கொலை நிகழ அன்றிலிருந்து அது ‘தலைவெட்டியான் மடை’ என்றாகியது. கொலையான ஆள் சத்தமாக, வாசமாக அலைகிறார்.

எழுத்தாளர் பாமாவின் ‘வன்மம்’ நாவலை மிகச் சமீபத்தில் வாசித்தேன். வாமடை விலகுவதில் இரு சாதிகளுக்கிடையே நடந்த கொலை அடுத்தடுத்த கொலைகளுக்கும், கலவரங்களுக்கும் வித்திடுகிறது. தலைவெட்டியான் மடையை நினைத்துக்கொண்டேன்.

கழுமரம் என்னும் ஒற்றைக் கருப்பொருளை மையமாக வைத்துக் கவிதை நூல் எழுதும் கருத்தாக்கம் எப்போது தோன்றியது? 

எனது அம்மா பிறந்த ஊர் மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகிலுள்ள தென்கரை கிராமம். எனது அப்பா பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கு அருகிலுள்ள லாடனேந்தல் கிராமம். எனது தாய் தந்தை வழிக் கோயில்களில் கழுமரமும் அதை வழிபடக்கூடிய முறையும் இருக்கிறது. எனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்தே அதைப் பார்த்து வருகிறேன். தவிர எனது சுற்று வட்டாரக் கிராமங்களிலும் கழுமரங்கள் இருக்கின்றன. சில ஊர்களில் கழுமரங்கள் வழிபாடு இல்லாமல் சிதைந்து கிடக்கின்றன. சில ஊர்களில் அதைப் பராமரித்து வணங்கி வருகின்றனர்.

ஒருமுறை சிவகங்கை மாவட்டம் அரசூர் கிராமத்திற்குக் கிடா வெட்டுக்குச் சென்றிருந்தேன். ஊருக்குள் லாரி நின்றது. கருங்கிடா, பொங்கல் சாமான்கள், மாலை, சூடம், பத்தி, படையல் பொருட்கள், நார்ப்பெட்டிகள், தண்ணீர் கேன்களுடன் செம்மண் மிளிரும் உச்சி வெயிலில் கருவேலங்காட்டுக்குள் நடந்தோம். பயணத்தின் இறுதியில் அத்துவானமாய் நிற்கும் கழுமரத்தை அடைந்தோம். இரு மணிகளோடு கல்லால் செய்யப்பட்ட அந்தக் கழுமரத்தின் பக்கத்திலேயே நடுகல்லொன்று புதையுண்ட நிலையில் இருந்தது. 

கழுமரத்துக்கும் அதன் கூருக்கும் எண்ணெய்க் காப்பு சாட்டப்பட்டது.

நடுகல் எண்ணெயால் குளிர்விக்கப்பட்டவுடன் அதற்குப் பட்டுத்துணி சுத்தி மாலைகள் இடப்பட்டன.

பொங்கல் வைத்துக் கிடா வெட்டி, பூசை செய்து, ஆட்டு வாயில் ஆட்டுக்காலைக் கவ்வக் கொடுத்துக் கழுமரத்திற்குத் தளுகையிடப்பட்டது. பிறகு கறிச்சோறு பந்தி தொடங்கியது. உக்கிரமான வெயில் தணிந்து உஷ்ணம் நிலவிய மாலை வரை அந்தக் கழுமரத்தின் பக்கத்திலேயேதான் இருந்தேன். ஆட்டு ரத்தம் காய்ந்த மண் தடத்தையும், சிங்கார ஜோடனையுடன் நின்ற கழுமரத்தின் காலடியிலிருந்த ஆட்டின் கிறங்கிய கண்களையும், திறந்த வாயின் பற்களையும் பார்த்தபடி அந்தக் கழுமரத்தை விட்டு ஊருக்கு வண்டியேறினேன்.

சிறுவயதிலிருந்து பார்த்துப் புழங்கிய கழுமரம் அந்த வெம்மை நாளிலிருந்து வேறொன்றாய் என்னுள் வேர்விட்டு முளைக்கத் தொடங்கியது. தொல்லியலாய் நிற்கும் கழுமரத்தைச் சமகாலத்தில் ஆட்டிப் படைக்கவும், அதன் கூரினை உற்றுப் பார்க்கவும், கழுமரத்தைப் பிடுங்கித் தலைகீழாய் ஊன்றவும், கழுமரத்தில் அமர வைக்கப்பட்ட மனிதவுடல்கள், அந்த மனிதர்களை ஏற்றிய மனித அகங்களை, காரண காரியங்களை, அரசியலை அகழ எனது கவிமனம் முண்டியது. 

அந்தக் கிடா வெட்டு நாளை ‘கழுமர வேர்’ என்ற தலைப்பில் கவிதையாக எழுதி வைத்துக் கொண்டேன். செக்காணூரணிக்குப் போகும் வழியிலுள்ள சமணர் குன்றான கொங்கர் புளியங்குள மலையுச்சியின் இரவு நேரத்தில் நண்பர்களிடம் அந்தக் கவிதையை வாசித்தேன். அரசூர் வெம்மையும், கொங்கர் புளியங்குள மலையிரவும், அக்கவிதை வாசிப்பும் ‘கழுமரம்’ கவிதைகள் எழுத எனக்குள் பெரும் வேகாளத்தைக் கிளப்பிவிட்டன.

இதற்காகப் பயணம் ஏதும் மேற்கொண்டீர்களா?

பெரிய பயணம் என்று சொல்லிவிட முடியாது. எனது வாழ்வில், நிலப்பரப்பில் உள்ள கழுமரங்கள் அதனோடு இயைந்த மனிதர்கள், சடங்கு முறைகள், உயிரினங்கள், நம்பிக்கைகள், வாய்மொழிக் கதைகள், வேண்டுதல்களை அருகிலிருந்து பார்த்து வருபவன் என்பதால் அவற்றுக்குள் பயணிப்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. தன்னியல்பில் கவிதைகள் உருவாக ஏதுவானதாகவும் இருந்தது. கழுவேற்றம் குறித்து எல்லோருக்கும் தெரிந்த மதுரை மீனாட்சியம்மன் கோயில் சுவரோவியங்கள், சிற்பங்கள், இலக்கியத் தரவுகள் ஒருபுறமிருக்கக் கீழக்குயில்குடி சமணர் மலை, ஆனைமலை, கொங்கர் புளியங்குள சமணர் படுகைகள், திருவேடகத்தின் வைகையோடு ஒன்றியிருக்கும் எனது வாழ்நிலத்தின் புவியியல் தொடர்புகள் இயற்கையாகவே கழுமரம் கவிதைகளை வழிநடத்தியதாக உணருகிறேன்.

குறிப்பிட்டு இதில் சொல்ல வேண்டுமென்றால் முடுவார்பட்டி கழுவடியான் சாமி வழிபாடும், அதன் திருவிழாவும். எனது நண்பரொருவரின் குலதெய்வம் அது. மின்சாரமில்லாப் பேய்மழையிரவில் அந்தக் கோயிலின் சாமியாடியிடம் கழுவடியான் குறித்து ஆழமாகப் பேசப் பேச அவருக்கு அருளேறியது. துருத்திய நாக்கோடுதான் என்னோடு பேசினார். ‘கழுமரம் ரத்தம் கேக்கும்டா இனி அத நோங்காத’ என என்னிடம் எலுமிச்சையைக் கொடுத்து வழியனுப்பினார். நவயானா வெளியீடான S.விஸ்வநாதனின் Dalits in Dravidian Land நூலின் பின்னட்டையில் ஓவியர், சிற்பக் கலைஞர் சந்ரு வரைந்த கழுவேற்றம் ஓவியமும் எனக்கு ஊக்கமாக அமைந்தது.

மதுரைப் புறநகர் கிராம மக்களின் வாழ்வியலை நாட்டார் கதைக்கூறலுடனும் கொஞ்சம் கவி மனநிலையிலும் ஈத்து சிறுகதைகளில் எழுதியிருக்கிறீர்கள். கவிஞர் சிறுகதையாசிரியராகப் பரிணமிக்க வேண்டிய தேவை எந்தப் புள்ளியில் உருவாகியதாக உணர்கிறீர்கள். பாவப்பட்ட ஜனங்களின் கதைகள், வஞ்சனையில்லாத மக்கள், பழிபாவத்திற்கு அஞ்சுபவர்கள் போன்ற சொல்லாடல்கள் கொண்டு இச்சிறுகதைத் தொகுப்பை பிறர் வரையறுப்பது குறித்து உங்களின் பார்வை?

நான் வாழ்ந்த வாழ்வை, பார்த்த வாழ்வைக் கவிதையாக்க நினைக்கும் போது அதன் குருத்தைத் தேடி இறங்குகிறேன். இன்னும் விரித்துச் சொல்வதற்கும் இன்னும் அகண்டு பார்ப்பதற்கும் சிறுகதை வடிவம் எனக்குத் தேவைப்படுகிறது. கவிதை, சிறுகதை, நாவலென வரிசைப்படுத்தி எனது படைப்புலகைக் கட்டமைக்கவில்லை. வாழ்வு நுட்பங்களை அதனதன் இலக்கிய வடிவங்களில், வெவ்வேறான படைப்பு மனநிலையில் எழுதிப் பார்க்கிறேன்.

மதுரைப் புறநகர் கிராமங்களின் சேர்மானம்தான் மதுரை மாநகர். வழமையாக நாம் நினைக்கும் அமைதியான, ரம்மியமான கிராமங்கள் அவை இல்லை. இளங்கொடியின் ரத்தக் கோழையாய்ப் பிசுபிசுக்கும் எளிய மனிதர்கள் மட்டுமே ‘ஈத்து’ தொகுப்பில் இல்லை. இதுதான் மதுரையெனத் தொடர்ந்து காட்டப்படும் ஜனரஞ்சக வெளிச்சத்தில் அந்த கிராமங்களின் சமகாலமும், விமர்சனமும், உதிரி மனிதர்களின் வாழ்வும், சூழலியலும், பாடுகளும், குணங்களும், முரண்களும் தட்டுப்படுவதில்லை.

`மீனாவின் கொரவளைக்கும் காசியின் கால்களுக்கும்’ என்று நீர்ச்சுழி கவிதைத் தொகுப்பைச் சமர்ப்பணம் செய்திருக்கிறீர்கள். யார் இந்த மீனாவும் காசியும்?

மாடுகள், வயக்காட்டு வேலைகளில் மக்கிப்போய்த் தொண்டையில் புற்றுநோய் வந்து மூக்கில் செருகிய பெரியாஸ்பத்திரி வயரோடு எங்கள் மடியில் துள்ளத் துடிக்க உயிர்விட்டார் மீனா அம்மாச்சி. அம்மாச்சி இறந்தவுடன் அவருக்கு நெத்திக்காசு வைக்கச் சில்லரைக்காசு இல்லை. அழுதுகொண்டே பெட்டிக் கடைக்குச் சில்லரை மாத்த ஓடியதை மறக்க முடியவில்லை. உடன்பிறந்தவர்கள் பள்ளிக்கும், வேலைகளுக்கும் போக பன்னிப்பீயையும், மனித மலத்தையும் தலையில் கூடை கூடையாகச் சுமந்து விவசாயக் கூலியாக நிலங்களுக்கு உரமடித்து உழுதவர் காசி தாத்தா.

இப்பவும் சம்சாரியாக ஓடியோடி உழைத்துக்கொண்டிருக்கும் காசியும், ஒரேயொரு கறுப்பு வெள்ளப் புகைப்படத்தில் முகத்தெலும்பு துருத்திப் புன்னகையற்றுப் பார்க்கும் மீனாவும்தான் எனது குடும்பத்தை ஆளாக்கியவர்கள். அவர்களுக்குக் கிடைக்காமல் போன கல்வியை எனக்கும், அண்ணனுக்கும், அக்காளுக்கும் தாராளமாய்க் கொடுத்து அறத்தை வாழ்வின் மூலமாகக் காட்டியவர்கள்.

“சாதியத்தால் மனிதமற்றுத் திரிந்த காலத்திற்காக மன்னிப்புக் கோருகிறேன்” என்று சொல்கிறீர்கள். இது எவ்வாறு நிகழ்ந்தது?

நுட்பமாகவும், வெளிப்படையாகவும் சாதியம் தீவிரமாய்ச் செயல்படும் கிராமங்களில் ஒன்றுதான் எனது ஊரும். ஒரு கிராமத்தின் சாதியக் கட்டமைப்பு அந்த ஊரின் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், திருவிழா, பண்டிகைகள், கேதங்கள், பணியிடங்கள் என எல்லா அடுக்குகளிலும் ஊடுருவியிருக்கும். சுயநினைவோடும், மறதியிலும் கூட அக்கட்டமைப்பு வீரியத்தோடு செயல்படும். அந்தச் சாதிய வெற்றுப் பெருமிதச் சூழலோடுதான் நானும் வளர்த்தெடுக்கப்பட்டேன்; வளர்ந்தேன். பள்ளிக் கல்விக்கும், அன்றாட வாழ்வுக்கும் சம்பந்தமில்லாமல்தான் இருந்தது. சாதிப் பெயரில் நண்பர்கள் குழு அமைத்து விழா, போஸ்டர், பேனர், டீசர்ட், அடிதடி என நண்பர்களோடு சுற்றிக்கொண்டிருந்தேன். இவை எல்லாம் தவறு என எங்களுக்கு உரைக்கவும் இல்லை. தவறென்று யாரும் சொல்லவுமில்லை. மாறாகப் பெருமிதம், அடையாளம், வீரம் என்றுதான் வலுவாய்ப் போதிக்கப்பட்டது. 

அக்காலங்கள் குறித்தான குற்றவுணர்வும், வலியும், வருத்தங்களும் இப்பவும் என்னுள் அதிகமாக இருக்கின்றன. மிகவும் கொண்டாட்டமாக, மகிழ்ச்சியாக, இயல்பான குறும்புகளோடு அந்தக் காலங்களில் இருந்திருக்கலாம் என அடிக்கடி தோன்றும். ‘சாதியத்தால் மனிதமற்றுத் திரிந்த காலத்திற்காக மன்னிப்புக் கோருகிறேன்’ என்ற சொல்லில்தான் ‘கங்கு’ நாவல் முழுமையடைந்ததாக உணர்கிறேன் அல்லது இச்சொல்லில் இருந்துதான் கங்கு உருவெடுத்தது.

மன்னிப்புக் கோரும் மனமாற்றம் எங்கு எப்போது உண்டானது. இந்த மாற்றம் அவ்வளவு எளிதா இல்லை கடினமா? சாதி இந்துச் சமூகமும் தலித் சமூகமும் மனமாற்றத்தை எப்படிப் பார்க்கின்றன?

எனது வாழ்வனுபவத்தின் ஒரு பகுதியும், உண்மைச் சம்பவங்களும், புனைவும் கலந்ததுதான் ‘கங்கு’ நாவல். நாவலை எழுதி முடித்த பிறகும் மனதில் முழுமையும், திருப்தியும், மகிழ்வும் உண்டாகவில்லை. ஏதோவொரு பதற்றமும், நெருடலும்தான் இருந்தன. எனது மனைவி கிருத்தியிடம் இதைப் பற்றி ஏதேதோ பேசினேன். ‘உன் பேச்சு எங்கெங்கையோ அலையிது. எதையெதையோ யோசிக்குது. அதெல்லாம் தேவையில்ல. மன்னிப்புக் கேக்க உள்ளுக்குள்ள மனசு துடிக்குது,. எதப்பத்தியும் யோசிக்காம அந்த மன்னிப்ப அப்படியே வெளிப்படையா கேளு’ எனப் பட்டெனச் சொன்னார். உடனே நாவலின் முதல் பக்கத்தில் ‘சாதியத்தால் மனிதமற்றுத் திரிந்த காலத்திற்காக மன்னிப்புக் கோருகிறேன்’ என்று எழுதினேன். எதிலிருந்தோ விடுபட்டது போல, எதோ கரைந்தது போல, காயத்தில் பக்கு வைத்தது போல அந்தத் தருணத்தில் மனம் லேசாகிவிட்டது.

முற்றிலும் சாதியத்தால் கட்டமைக்கப்பட்ட இந்திய, தமிழ்ச் சூழலில் இந்த மனமாற்றம் கடினம்தான். ஆனால் இந்த மாற்றத்தை உருவாக்க, எளிதாக்க நம்மிடம் அவ்வளவு கருத்தியல்களும், தலைவர்களும், கலை, இலக்கியங்களும் இருக்கின்றன. முக்கியமாக இந்த மனமாற்றத்தை எளிதாக்க அரசியல் எதுவும் தெரியாத சாமானிய மனிதர்களும் நம்மைச்சுற்றி இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது.

இதுவரையில் எடுத்துக்கொண்டால் சாதி இந்துச் சமூகம் இந்த மனமாற்றத்தை வரவேற்கவே செய்கிறது. சமூக அமைப்பிலும், கலை, இலக்கியத்திலும் மிக முக்கியமான, தேவையான தொடக்கமாக இந்த மனமாற்றம் உள்ளது. இது அதிகரிக்க வேண்டுமெனத் தலித் சமூகம் மனமுவந்து வரவேற்கிறது.

கங்கு நாவலில் வரும் ‘பறக் கழுதைக ஒறவு புடிச்சா உப்பு மிளகாய்க்குத்தான் கேடு’ என்னும் சொலவடையின் பின்னுள்ள உளவியல் தாக்குதல் எதனால் நிகழ்ந்தது?

நிறம், உடல் தோற்றம், உடை, பேச்சு, பழக்க வழக்கங்கள், உணவு என்று தலித் மக்கள் மீது பிற சாதியினரால் காலங்காலமாகத் தொடுக்கப்படும் உளவியல் தாக்குதல்களில் சொலவடைகளும் ஒன்று. இவை தலைமுறையாகக் கைமாற்றிவிடப்படுபவை. அன்றாடங்களில், குடும்பங்களுக்குள், சமூக வெளிகளில் மிக எளிமையாக, அனிச்சையாக இத்தாக்குதல் நடத்தப்படுகிறது. தலித் மக்களுடன் நட்புடன் பழகினாலோ, உறவாடினாலோ இயல்பான சாதிய வாழ்வாதாரத்துக்கும், அதனால் கிடைக்கும் அனுகூலங்களுக்கும் ஆபத்து என நாவலில் வரும் சொலவடை கூற முற்படுகிறது. ஆனால், சாதி இந்துச் சமூகம் குறித்துத் தலித் மக்களிடையே இப்படியான சொல்லாடல் இருக்கிறதா என்று பார்த்தால் வெற்றிடமாகத்தான் தோன்றுகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களிடம் சாதி இந்துச் சமூகம் குறித்த கேலி, கிண்டல், நையாண்டி அறவே இல்லை என்பது உண்மைதானா?

அறவே இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அவை,  ஒடுக்கப்பட்ட மக்கள் தன்னியல்பில் சொல்ல இங்கு வெளி இருக்கிறதா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அந்த வெளியும் சாதி இந்துக்களின் கையில்தான் உள்ளது. ஒரு பொது இடத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்தான இழிவான பழமொழிகளைச் சாதி இந்துக்கள் மிகச் சர்வ சாதாரணமாகச் சொல்கின்றனர். ஆனால், சாதி இந்துக்கள் குறித்தான சொலவங்களை ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்குள்ளாக மட்டுமே பகிரக்கூடிய வெளிதான் இங்கு இருக்கிறது.

செக்கானத்துக் கடைகளில் இடைநிலைச் சாதியினர் மாட்டையும் பன்றியையும் ருசித்துத் தின்றதை லெச்சு பல தடவைப் பார்த்ததாக வருகிறது. இயல்பு வாழ்க்கையில் இது நடக்கிறதா இல்லை புனைவா?    

இயல்பு வாழ்வில் நடப்பதுதான். கட்டக்கால் என அழைக்கப்படும் பன்றிக்கறியையும், பெருசு என அழைக்கப்படும் மாட்டுக்கறியையும் தீட்டு, சாமிக்கு ஆகாது எனச் சொல்லிக்கொண்டு இடைநிலைச் சாதிகள் அவற்றைச் சாப்பிடாத நிலை இருக்கிறது. அவற்றை உண்பது தங்களின் சமூக அந்தஸ்துக்கு இழுக்கு என்றும் கருதுகின்றனர். விதிவிலக்காய் வெளிப்படையாக உண்ணக்கூடியவர்களும் உள்ளனர். கமுக்கமாகத் தின்னக்கூடியவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

மாட்டுக் கறியைத் தின்பது சமூக இழுக்கு என்று கருதும் இடை நிலைச் சாதியினர் பெற்ற பிள்ளைகளை ஆணவக் கொலை செய்வதை எவ்வாறு எடுத்துக் கொள்வது?

இது முழுக்க முழுக்கச் சாதிய மனநோய்தான். சுயசாதிப் பற்று, வெறியிலிருந்து இந்நோய் உருவாகிறது. ஆணவக்கொலை செய்தவர்களை நாயகத் தோரணையுடன் பார்ப்பதும், வரி பகிர்ந்து அவர்களுக்காக வழக்கு நடத்துவதும் இங்கு மிக இயல்பாய் நடக்கிறது. அவர்களிடம் துளியளவு குற்றவுணர்வு ஏற்படாதவாறு சாதியச் சமூகம் அவர்களைப் பார்த்துக்கொள்கிறது. அவர்களைப் போல தங்களைப் பாவித்துக்கொள்கிறது. இதன் ஒருவகை வெளிப்பாட்டை ‘இன்ஸ்டா ரீல்ஸ்’களில் பார்க்கலாம். ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் என்பது ஒருபுறமிருக்கத் தனிமனித, சமூக விழிப்புணர்வும், உரையாடல்களும் எல்லாத் தளங்களிலும் மிகத் தீவிரமாய் நடத்தியாக வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

வாயில் அரிவாள் கவ்வியபடிக் கையசைத்து இறங்குபவர் எந்த நடிகரின் அரிதாரத்தைப் பூசியிருக்கிறார்?

அமரன், பெரிய மருது, விருமாண்டி ஆகிய திரைப்படங்களின் கதா நாயகர்கள்.

கங்கு நாவல் வாசித்து முடித்ததும் ஆவணத்தன்மை மேலோங்கி இருப்பதாகத் தோன்றியது. இப்படியான விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

ஒரு படைப்பின் மீது பலவிதப் பார்வைகள் தோன்றுவது இயல்பே. தனிநபரின் வாசிப்பினைப் பொறுத்து இது மாறுபடுகிறது. ‘ஆவணங்களும், புனைவும் சரியாகக் கலந்திருக்கிறது’, ‘இந்த வடிவம் புதுவித வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது’, ‘கலைத்தன்மை சரியாகக் கூடி வந்துள்ளது’, ‘ஆவணத்தன்மையுடன் இருக்கிறது’, ‘பெயர்கள், ஆண்டுகள் வெளிப்படையாக உள்ளன’, ‘கவித்தன்மை விரவியுள்ளன’ இப்படிக் கலவையான பார்வைகள் கங்கின் மீது வருகின்றன. கங்கின் உலகும் அதன் மனிதர்களும், அரசியலும், காலமும் அதன் கூறுகளை, ஆவணங்களைத் தானே உருவாக்கிக் கொண்டன. படைப்பாளியாக முந்தையதிலிருந்து என்னை நானே உடைத்துக்கொண்டு இயங்க விரும்புகிறேன். பார்வைகளை விசாலமாக்க முயல்கிறேன். எடுத்துக்கொண்ட வடிவத்துக்கு எவ்வளவு நியாயமாக வேலை செய்ய முடியுமோ அதைச் செய்கிறேன். அதைச் செய்கையில் மிகுந்த தன்னிறைவையும், மகிழ்ச்சியையும் அடைகிறேன். கங்கு எழுதும்போதும் அப்படித்தான் உணர்ந்தேன். 

2016 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், மந்தைவெளியில் இயங்கிய பரிசல் புத்தக நிலையத்தின் இலக்கிய நிகழ்வில் கவிஞர் நரனைச் சந்தித்து அவரின் `பாம்பை வரைந்தேனா அசதியில் அதன் மீதே படுத்துறங்கி விட்டேன்’ என்னும் கவிதையைப் பகிர்ந்தீர்கள். இப்போது எழுத்தாளராக உங்களின் நூல்களை சால்ட் பதிப்பகத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள். இந்தப் பயணத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கையில் என்ன உணர்கிறீர்கள்?

பல்கலையில் நான் படித்த காலத்தில் நரன் அண்ணனின் படைப்புகள் இதழ்களின் வழி எனக்கு அறிமுகமாகின. பிறகு அவரது நூல்களை வாங்கிப் படித்துவிட்டு அது குறித்து நண்பர்களிடம் நீண்டநேரம் உரையாடியுள்ளேன். சில நேரங்களில் மெசஞ்ஜரிலும் அவரது படைப்புகள் குறித்து எனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளேன். அப்போதிருந்தே மனதுக்குப் பிடித்த ஆதர்சப் படைப்பாளிகளில் ஒருவராகிப் போனார்.

பரிசலில் நடைபெற்ற இலக்கியக் கூடுகையில், ‘பாம்பை வரைந்தேனா அசதியில் அதன் மீதே படுத்துறங்கி விட்டேன்’ என்ற சிறிய கவிதையை மட்டும் வாசிப்பதற்காக அந்தக் கூட்டத்திற்குச் சென்றேன். அக்கவிதை அப்போது எனக்குள் உருவாக்கிய வியப்பு, மயக்கம், ஜாலம் யாவும் இன்னும் குன்றாமல் இருக்கின்றன. எந்தவிதப் பின்புலமுமில்லாமல், லாப நோக்கமற்றுத் தமிழ்ச் சூழலில் படைப்புத் தீவிரத்துடனும், மிகுந்த கலை நுட்பத்துடனும், சுதந்திரத்துடனும், முன்மாதிரியாகவும் இயங்கும் சால்ட் பதிப்பகம் குறித்து நரன் அண்ணன் வைத்திருக்கும் கனவுகளும், செயல்திட்டங்களும் உலகளாவியத் தன்மை உடையவை.

‘எழுத்தும், வேலையும் மட்டுந்தான் காலத்துல நிக்கும் முத்து. எதையும் கண்டுக்காமத் தொடர்ந்து வேலை செய்யனும்’ என அடிக்கடி சொல்வார். வாசகராக அவருடன் பேசிய தருணங்களாகட்டும், முதல் கவிதைத் தொகுப்பான பிடிமண்ணிலிருந்து கங்கு நாவல் வரை சால்ட் வெளியீடாக வந்ததாகட்டும் அனைத்தையும் திரும்பிப் பார்க்கையில் ஆச்சரியமும், மனம் நிறைய சந்தோசக் கண்ணீரும், நெகிழ்ச்சியும்தான் தளும்புகின்றன. 

தனிப்பட்ட வாழ்வு, கலை, இலக்கியம், திரைப்படப் பணிகளில் எனது வழிகாட்டியும், நலம்விரும்பியுமான அவரிடம் படைப்புகள் குறித்தான ஏராளமான ஆசைகளைப் பகிர்ந்துள்ளேன். அதற்கு அண்ணன் கொடுக்கும் அளவில்லா ஊக்கமும், கற்பித்தலும், அன்பு கலந்த அரவணைப்பும் எடுத்துக்கொண்ட பணிகளில் இன்னுமின்னும் உழைக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்வைக் கூடுதலாகவே தருகிறது.

சுயமரியாதைத் திருமணம் செய்த நீங்கள் நாடகக் காதல் என்னும் சொற்றொடரை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சாதியொழிப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், சுகாதாரம், அடிப்படை உரிமைகளைக் கண்டுகொள்ளாமல் அல்லது அவை குறித்தான எவ்வித அறிவுமில்லாததால் ‘நாடகக் காதல்’ என்ற சொல்லாடலை முன்வைத்துத் தேர்தல் வாக்குறுதியினை உருவாக்கி அதைப் பரப்புரை செய்யும் அவல நகைச்சுவை இங்கு நிலவுகிறது. நாடகக் காதல் திரைப்படங்களும் (?) வெளி வருகின்றன. நாடகக் காதல் என்ற சொற்றொடர் நகைச்சுவையாக இருந்தாலும் அதை முன்வைத்து நடக்கும் பிழைப்புவாத அரசியலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சாதி, மதம் மறுத்த காதல்களும், திருமணங்களும் அதையொட்டிய உரையாடல்களும் சுயமரியாதையுடன் தீவிரமாய் நடக்க நடக்க ‘நாடகக் காதல்’ சொற்றொடரைப் பின்பற்றுபவர்கள் இன்னும் பதற்றத்துடனும், பயத்துடனும் அச்சொல்லை உச்சரிக்கின்றனர்.

“எழுத்தாளனுக்கு நிலம் அவசியமில்லை. நிலம் இருந்தால் சொல்வதற்குக் கூடுதல் கதைகள் இருக்கும்” என்று எதன் அடிப்படையில் சொல்லியிருக்கிறீர்கள்?

நிலமற்ற அதாவது எல்லைகளற்ற சூழலில் மனித வாழ்வின் பொது விழுமியங்களைப் படைப்பின் வழியாக ஆழமாகப் பேசலாம். ஆனால் குறிப்பிட்ட நில வரையறையிலிருந்து படைப்புகள் வரும்போது அதன்வழியே அந்த நிலம் சார்ந்த இயற்கை, மனிதர்கள், வாழ்க்கைக் கூறுகள், அரசியலை நுட்பமாகவும், விரிவாகவும், பல்வேறு கோணங்களில் கலைத்துப் போடுவதற்கும், அடுக்குவதற்கும் இன்னும் ஏதுவாக இருக்கும்.

இதைத் தவிர்த்து ஒரு படைப்பாளர் நிலத்தை வைத்து ஆணவமும், அதிகாரமும், வெற்றுப் பெருமையும், பகுமானமும் கொள்வது படைப்புக்கும், மானுடத்துக்கும் எதிரானது.

உங்களின் சமகாலக் கவிஞர்களின் படைப்புகள் குறித்த உங்களின் அவதானிப்பு?

அகம், மனித உறவுகள், அரசியல், எதிரழகியல், நடப்பு வாழ்வின் அன்றாட நுட்பங்கள், அறிவியல், நாட்டாரியல், வட்டார நிலவியல், தொன்மம், வரலாறு என்று எனது சமகாலக் கவிஞர்களின் படைப்புகள் ஒவ்வொன்றும் அதனதன் தனித்தன்மையோடு இருக்கின்றன. எடுத்துக்கொண்ட கவிதைக் களத்தில் ஒவ்வொருவரும் சிறப்பாகவே பயணிக்கின்றனர். வெவ்வேறான சொல்முறை, கட்டமைப்பு, மொழி என ஒரு வாசகனாக அவை எனக்குப் புதுப்புது வாசிப்பனுபவத்தையும், நிறைவையும் தருகின்றன.

பச்சோந்தி

பச்சோந்தி தமிழ்க் கவிஞர், பத்திரிகையாளர். கணையாழி, வம்சி, ஆனந்த விகடன், நீலம் ஆகிய நிறுவனங்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் இயங்கும் ஜனசக்தி வார இதழில் பணிபுரிந்து வருகிறார். வேர்முளைத்த உலக்கை, கூடுகளில் தொங்கும் அங்காடி, அம்பட்டன் கலயம், பீஃப் கவிதைகள், கபால நகரம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் 'பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகள்' என்னும் நாட்குறிப்பு நூலும் இதுவரை வெளியாகியுள்ளன.

3 Comments

  1. இளம் எழுத்தாளர்களின் சமூக பொறுப்பு மகிழ்ச்சி தருகிறது

  2. முத்துராசாவின் எழுத்தும், பார்வையும் என்றும் வெல்க.

  3. நண்பா நம் வாழ்வில் நடந்த நினைவுகள் மீண்டும் சிந்தனையில்.. மீண்டும் அந்த நாட்கள் வருமா
    நன்றிகள் பல…

உரையாடலுக்கு

Your email address will not be published.