பச்சோந்தி கவிதைகள்

பணிநீக்கக் கால அறுவைச் சிகிச்சைகள்

பணிநீக்கம் செய்வது
அறுவைச் சிகிச்சையின்றி இரைப்பையை மட்டும் பிரித்தெடுப்பது.
நடுத்தெருவில் அம்மணமாக்கி முகக் கவசத்தை இறுக்கிக் கட்டுவது.
மார்க்காம்பில் ஆணியை நிறுத்திச் சுத்தியலால் ஓங்கி ஓங்கி அடிப்பது.

பணிநீக்கம் செய்வது
நெஞ்செலும்பின் கூர்நுனியில் அமிலம் தோய்த்துப் பிறப்புறுப்பில் செருகுவது.
களவாடிய குடும்ப அட்டையை எரியும் சிதையில் ரகசியமாய் எறிவது.
மேய்ச்சல் நிலக் கால்நடைகளை உயிரோடு புதைப்பது
முற்றும் புதைவதற்குள் மின்சாரக் கம்பிகளால் கண்களில் துளையிடுவது.

பணிநீக்கம் செய்வது
புணர்ந்த அசதியில் உறங்குபவரின் முகத்தில் தலையணை வைத்து அழுத்துவது
மேலும் அம்மிக்கல்லால் அடையாளமற்றுப் போகுமளவு சிதைப்பது.
பால்குடி மறவாக் குழந்தைக்குக் கள்ளிப்பாலை ஊட்டுவது.
பிறந்த குழந்தையை விற்று இறந்து பிறந்ததாய்த் தாயிடம் பொய்யுரைப்பது.

பணிநீக்கம் செய்வது
பசியுற்றவரின் முன் எஞ்சிய உணவுகளைப் புதைச்சாக்கடையில் கவிழ்ப்பது
உழைப்பாளிகளின் கண்ணீரையும் சேகரித்து உப்பு விநியோகிப்பது.
கூலி கேட்டு நின்றவரின் உடலை எந்திரத்தால் வகுந்து
சதைகளை மக்கும் குப்பையிலும் எலும்புகளை மக்காத குப்பையிலும் இடுவது.

பணிநீக்கம் செய்வது
எறும்புப் புற்றுக்குள் பெட்ரோல் ஊற்றி எரிப்பது
தப்பிப் பிழைத்தவற்றையும் பிடித்து மீண்டும் கனலில் எறிவது.
தன்னுடைய கல்லறையில் இன்னொருவனைப் புதைப்பது
அவரவரின் மண்டையோடுகளை அவரவர்க்கே கையளிப்பது.


………………………………………………

மேகமுகக் கவசம்

உலகமே வானை இழுத்து இறுக்கி முகக் கவசமாய்  மாட்டிக் கொண்ட தருணத்தில், என் சட்டைப் பையில் கணினியையும் காற்சராயில் சானிட்டைசரையும் திணித்து வீட்டிலிருந்தபடி பணி செய்யுமாறு பணித்தார் முதலாளி.  கனத்தில் பைகள் கிழிந்து போகாதபடி இரு கைகளால் இறுகப் பொத்திக்கொண்டு, அண்ணா சாலை வழி நடந்து வருகையில், வியர்வையில் ஈரமான முகக் கவசத்திற்குள் நாசித் துவாரங்கள் மூச்சுவிடச் சிரமப்பட்டன. நான் மூக்கைக் கழற்றிப் பிழிந்து, சற்று நேரம் அதைச் சூரியனில் காயவைக்க தொப்பியாக அணிந்துகொண்டேன். சற்றுத் தொலைவில் காவலாளியைக் கண்ட பதற்றத்தில் வெண்மேகங்களைப் பறித்து முகக் கவசமாக்கிக் கொண்டேன்.  அவர் வானவில்லின் ஒற்றை நிறத்தை மட்டும் கிழித்து நீட்டினார், மேகங்களில் துளையிட்டு பிடரியோடு இறுகக் கட்டிக் கொண்டேன்.  எனது கண்களால் அவரும் அவர் கண்களால் நானும் மென்மையாகச் சிரித்தோம்.

………………………………..

மஞ்சளை உதிர்த்து, வெள்ளியை உரசும் அம்புலி

அரைகுறை தூக்கத்தில் இருந்தது சூரியன். ஜன்னல் கம்பிகளினூடே மஞ்சளை உதிர்த்து, வெள்ளியை உரசிப் பூசிக்கொண்டிருந்தது அம்புலி. மகளின் வாயிலிருந்து கட்டை விரலைப் பிடுங்கி உதடுகளை ஒன்று சேர்த்து விட்டேன். அவள் சடக்கென்று என்னையே விழுங்கத் தெரிந்தாள். சுதாரித்து, தொலைக்காட்சி மேசையில் மடிக் கணினியைத் திறந்து முதல் நாள் பணியைத் தொடங்கினேன். சொட்டுச் சொட்டாய் விழுந்த துளிகளின் சத்தத்திற்குக் குழாயைத் திருகி அமர்ந்தேன். மடியைக் கேட்டுக் கெஞ்சிய மகளுடன் போட்டியிட்டுக் கழுத்தில் அமர்ந்து தலையை ஆட்டுகிறான் மகன். பார்க்க வேண்டிய கோப்புகளின் எண்ணிக்கை குவிந்துகொண்டே இருக்கையில், இந்தப் பாழாய்ப் போன வைஃபை வேறு மினுக் மினுக்கென்று எரிந்து தொலைகிறது.

பச்சோந்தி

பச்சோந்தி தமிழ்க் கவிஞர், பத்திரிகையாளர். கணையாழி, வம்சி, ஆனந்த விகடன், நீலம் ஆகிய நிறுவனங்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் இயங்கும் ஜனசக்தி வார இதழில் பணிபுரிந்து வருகிறார். வேர்முளைத்த உலக்கை, கூடுகளில் தொங்கும் அங்காடி, அம்பட்டன் கலயம், பீஃப் கவிதைகள், கபால நகரம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் 'பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகள்' என்னும் நாட்குறிப்பு நூலும் இதுவரை வெளியாகியுள்ளன.

1 Comment

உரையாடலுக்கு

Your email address will not be published.