மேரி ஆலிவர் கவிதைகள்

தமிழில் : ஜனார்த்தனன் இளங்கோ

1. அடுத்த முறை

அடுத்த முறை நான் என்ன செய்வேனென்றால்
எதுவும் சொல்வதற்கு முன் 
பூமியை பார்க்கப் போகிறேன்.
வீட்டிற்குள் நுழைவதற்குமுன் கொஞ்சம் நின்று
ஒரு நிமிடம் சக்கரவர்த்தியாக மாறி
வீசும் தென்றலையோ அல்லது அசையாமல் நிற்கும் காற்றையோ
நன்றாகக் கவனிப்பேன்.

யாரும் என்னுடன் பேசும்போது
பழியோ, பாராட்டோ அல்லது வெட்டிப் பேச்சோ
அந்த முகத்தை கவனிப்பேன்,
வாய் எப்படி வேலைசெய்கிறதென்று
அங்கு ஏதும் சுருக்கங்களோ,
குரலை வெளிக்கொண்டுவந்ததற்கான அறிகுறியோ
தென்படுகிறதா என்று.

எப்படியிருந்தாலும் நான் மேலும் தெரிந்துகொள்வேன் —
தயார் நிலையிலெருந்து உயர்ந்தெழுகிறது பூமி,
வனத்திலும் நீரிலும் உள்ள ஒவ்வொரு இலையையும் இறகையும்
கண்டடைகிறது காற்று, 
ஒவ்வொரு மனிதரிலும்
உடைகளுக்கு அடியில் சுடர்விடுகிறது உடல்
ஒளியைப்போல.

2. ஏதேனும் எழுத நினைக்கிறேன் மிக எளிமையாக 

ஏதேனும் எழுத நினைக்கிறேன்
மிக எளிமையாக
அன்பைப் பற்றி
அல்லது வலியைப் பற்றி
அதாவது
நீங்கள் படிக்கத்தான் செய்கிறீர்கள் என்றாலும்
அதை உணர்வீர்கள்
மேலும் படிக்கும்தோறும்
அதை உணர்ந்தபடி இருப்பீர்கள்
போலவே என்னுடைய கதையாக இருந்தாலும்
அது பொதுவான ஒன்றாக இருக்கும்
தனியொருவரைப் பற்றியதாக இருந்தாலும்
அது உங்களுக்கும் தெரிந்ததாக இருக்கும்
முடியும்போது
நீங்கள் யோசிப்பீர்கள் –
இல்லை நீங்கள் உணர்வீர்கள் –
இவ்வளவு நேரமும்
நீங்கள்தான் அந்த வார்த்தைகளை அடுக்கிக்கொண்டிருந்தீர்கள் என்றும்,
எப்பொழுதும்
உங்கள் இதயத்தில் இருந்து நீங்கள்
சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகள்தான் அவை என்றும்.

3. விருந்தினர்

உதாரணத்திற்கு, என்னுடைய அப்பா,
முன்னொரு சமயம் இளமையாக,
நீலக் கண்களுடன்இருந்தபோது
வீடு திரும்பினார்
இருப்பதிலேயே இருட்டான இரவுகளுள் ஒன்றில்
வாசல்படியில் நின்று தட்டுகிறார்
கதவை மூர்க்கத்துடன்
அவருக்கு பதிலளிக்க வேண்டுமென்றால்
நான் தயாராக இருக்கவேண்டும்
மெழுகைப்போன்ற அவரின் முகத்திற்கும்
கசப்பில் வீங்கியிருக்கும்
அவருடைய கீழுதட்டிற்கும்

எனவே நீண்ட காலம்
நான் பதிலளிக்கவில்லை
ஆனால் படுக்கையில் புரண்டபடி உறங்கினேன்
அவருடைய தட்டும் ஓசைக்கு மத்தியில்.
கடைசியாக அந்தவொரு இரவு வந்தது
என் படுக்கையை விட்டு எழுந்து
கூடத்தை நோக்கி தடுமாறியபடி சென்றேன்
விரியத் திறந்தது கதவு

எனக்குத் தெரியும் நான் காப்பாற்றப்பட்டேன் என்றும்
அவரைத் தாங்க முடியும் என்றும்
மோசமாகவும் வெறுமையாகவும்
வெகு சொற்பமானக் கனவுகள்கூட
அவருள்ளே உறைந்த நிலையில்,
அற்பத்தனமும் போய்விட்டிருந்தது.
அவரை வரவேற்று வீட்டின் உள்ளே
வரச்சொல்லி
விளக்கை ஏற்றினேன்,
அவருடைய காலியான கண்களைப் பார்த்தபோது
முடிவாக அவற்றில் நான் கண்டது
ஒரு குழந்தை எதை விரும்ப வேண்டும் என்பதையும்
உரிய நேரத்தில் நாங்கள் அளித்திருந்தால்
அன்பு அவரை என்ன செய்திருக்கக்கூடும் என்பதையும்.

***

ஜனார்த்தனன் இளங்கோ

ஜனார்த்தனன் இளங்கோ, மென்பொருள் பொறியியலாளர். சொந்த ஊர் திருவாரூரைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி. இலக்கியம் தவிர தத்துவம், கட்டிடக்கலை, பறவையியல் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு.

உரையாடலுக்கு

Your email address will not be published.