அன்பின் பழுப்பு : ஜீவன் பென்னி

ஒரு பிரார்த்தனையின் காய்ந்த வடிவம்,
ஒரு பழுப்பு இலையின் சாயலுடையது தான்.

I
அன்றைய மெட்ராஸின் ஜெமினி சர்க்கிள் முழுவதுமாக ஏற்பட்டுக்கொண்டிருந்த வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தவும், மெட்ராஸின் சாலை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமான பெரிய திட்டமாகவும் 1971ல் அன்றைய முதல்வரின் நேரடியான வழிகாட்டுதலிலும், கட்டுப்பாட்டிலுமாகத் துவங்கிய மெட்ராஸின் முதல் மேம்பாலமும், இந்தியாவின் அப்போதைக்கான நீண்ட மேம்பாலமாக திட்டமிடப்பட்டிருந்த ஜெமினி மேம்பாலக் கட்டுமானப் பணிகள் 1972ன் தொடக்க காலத்தில் தீவிரகதியில் நடந்து கொண்டிருந்தது. தெற்கில் இராமநாதபுரத்தின் கீழக்கரையைப் பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபர்களின் ETE எனும் ஒருங்கிணைந்த கட்டிட நிறுவனத்தின் பெரிய பிரிவான ‘வெஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்சன் அண்டு இண்டஸ்ட்ரீயல் நிறுவன’த்தால் மொத்தமான ஒப்பந்த அடிப்படையில் அதன் பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருந்தன. இவர்களுக்கிடையில் சில சிறிய ஒப்பந்தக்காரர்களும், ஏஜென்ஸிகாரர்களும் வேலைகளைப் பிரித்து உள் ஒப்பந்த அடிப்படையில் இரவும் பகலும் ஓய்வின்றி வேலை செய்து கொண்டிருந்தார்கள். மேம்பால பணிகளில் ஒவ்வொரு மேம்படுத்தும் நிலைகளும், விவரங்களும் விரிவான தகவல்களாக நேரடியாக முதல்வருக்குச் சென்று கொண்டிருந்தது.

0
மழை சிறிய தூறல்களாக விட்டு விட்டு விழுந்து கொண்டிருந்த ஒரு இரவில் அந்த பிரம்மாண்டமானப் பாலம் கட்டுமானப் பணியில் பதினைந்து அடிக்கும் மேலான உயரம் கொண்ட நான்கு பெரிய தூண்கள் அமைப்பதற்கான கம்பிகள் கட்டும் வேலைக்கென அவற்றைச் சுற்றிலுமாக சேர்த்துக் கட்டப்பட்டிருந்த சவுக்கு மற்றும் இரும்புக்குழாய் சாரங்கள் பாரங்கள் தாங்காமல் திடீரென ஒன்றன்பின் ஒன்றாகச் சரிந்து விழுந்தன. அதில் நின்றபடி வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்களும் அதன் கீழ்பகுதிகளில் கம்பி கட்டிக்கொண்டிருந்த பணியாளர்கள் என ஒன்று சேர்ந்து அனைவரும் இடிபாடுகளுக்குள் சில விநாடிகளில் மூழ்கிப் போனார்கள். பயமும் பதட்டமும் நிறைந்திருந்த வேலையாட்கள் தங்களுக்குள்ளாகவே இணைந்து ஒருவரையொருவர் இழுத்தும், தூக்கியும் நிலைமையை ஒருவாறு சமாளித்துக்கொண்டிருந்தனர். அடுத்தடுத்த சாரங்களும் தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக விழுந்ததால் நிலைமை மிகவும் மோசமானது. நிலைகுலைந்து மேலிருந்து தூக்கி வீசப்பட்ட பூவண்ணனும், கண்ணப்பனும் மற்றுமொரு பணியாளனும் அருகினில் தூண்களுக்காக எடுத்து வைத்திருந்த பெரிய குழிக்குள், கம்பிகளின் கூர்மையான இடிபாடுகளுக்குள் மாட்டிக்கிடந்தனர். சிறிய, பெரிய காயங்களுடனும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிய முடியாமல் அச்சத்துடன் ஓடவும், பெருங்குரலில் அலறவும் பணியாளர்களில் பெரும் பகுதியினர் துவங்கினர்.

இரவு நேரத்தில் பணிபுரிவதற்கான தொழில்நுட்பமும், பாதுகாப்பு வழிமுறைகளின் விரிவான அடுக்குகளும் சரியாகப் பராமரிக்கப்படாத, பின்பற்றிடாத அந்த நாட்களில் இது போன்ற விபத்துகளினூடான அவசர நிலைமைகளைக் கையாளும் திறன்களும், நம்பிக்கைகளும் அற்றிருந்த நிறுவனப் பொறியாளர்களும்,பிற ஊழியர்களும் திகைத்து நின்றனர். தங்களுக்குள்ளாகவே பாதுகாப்பு அரண்களை அமைத்த படி ஒவ்வொருவரையும் இழுத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். குழிகளுக்குள்ளிருந்து வரும் அவலக்குரல்கள் அந்த இருளில் அச்சத்தையும், இரக்கத்தையும் அங்கு நெரூடலாக உருவாக்கிக்கொண்டிருந்தன. அந்தக் குரல்களைப் பின்தொடர்ந்து தேடிச்சென்றவர்கள், அதனுள் விழுந்து கிடந்தவர்களின் நிலையைப் பார்க்க முடியாமல் முழுவதுமான நடுக்கத்துடன் மனம் கலங்கி நின்றனர். சிலரை கைகளால் மேலிழுத்து மேட்டுப் பகுதிகளில் ஏற்றிவிட்டனர்.

சிறுசிறு தூரல்கள் பெரும் மழையென பெய்யத் துவங்கியிருந்தன. ஆழமான குழிகளுக்குள்ளிருந்து, உடல்களில் கம்பிகள் குத்தியபடி அகோரமாகக் கிடந்த உடல்களிலிருந்து மெல்லிய முனகல்கள் விட்டு விட்டுக் கேட்டுகொண்டிருந்தன. கயிறுகளைக் கட்டிக்கொண்டு குழிகளுக்குள்ளிறங்கி அந்த மூன்று உடல்களையும் பெரும் துயரங்களுடன் தூக்கி வந்து மேடான பகுதியில் கிடத்தினர். அவ்வுடல்கள் ஒரு பொதியைப் போலத் தரையில் கிடந்தன. பூவண்ணனைத் தவிர மற்ற இருஉடல்களிலும் அசைவுகளில்லை. இரவின் மௌனத்தைக் கலைத்துக் கொண்டு வந்த மருத்துவமனையின் வெள்ளை நிற அவசர ஊர்திகள் குழிக்குள்ளிருந்த தூக்கிவந்து கிடத்தியவர்களையும், பெரிய காயங்கள் ஏற்பட்டு அலறிக்கொண்டிருந்தவர்களில் சிலரையும் ஏற்றிக் கொண்டு அரசு மருத்துவமனை நோக்கி விரைந்தது. மழைகளுக்கிடையில் அரைநிலவின் சன்னமான ஒளி அந்தச் சாலையில் தவித்துக் கிடந்த மனிதர்களுக்குள் படர்ந்து கிடந்தது.

குழிகளுக்குள்ளிருந்த தூக்கிச் சேர்த்திருந்த மூன்று பணியாளர்களில் கண்ணப்பன் அந்த இடத்திலேயே இறந்திருந்தான். அவனது ஒடுங்கிய முகத்தில் கசப்பின் ஒரு துளி சலனம் விடுபடாமல் அப்படியே ஒட்டிக்கொண்டிருந்தது. கண்கள் மேல்நோக்கி குத்திட்டு நின்றிருந்தன. மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவசர ஊர்தியில் மற்றொருவன் இறந்து போனான். இரண்டு கண்களிலும் முழுவதுமானக் காயங்களுடன், வலது கையின் பெரும்பகுதியை இழந்தவனுமான பூவண்ணன் தனதுயிரின் கடைசிச் சொட்டைத் தனக்குள் பத்திரப்படுத்தி வைத்திருந்தான். தனது உயிர்நண்பனைக் கடைசியாகப் பார்க்க முடியாத தன் துர்பாக்கியமான நிலையை வெறுத்துக்கொண்டவன் போல சுயநினைவில்லாமல் மருத்துவமனையில் அசைவற்றுக் கிடந்தான். அதிர்ச்சியிலும், அச்சத்திலும் விட்டு விட்டு வரும் நடுக்கமொன்று அவனுடலில் பரவி வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த நடுக்கம் அந்த மருத்துவமனை முழுமைக்குமாக ஒரு பயத்தை உருவாக்கிக்கொண்டிருந்தது.

0
பெரிய நிறுவனம் அவர்களின் உள் ஒப்பந்தத்தில் கீழிருந்த உதிரி நிறுவனத்தின் பெரும் கவனக் குறைவுகளின் விளைவாகவே இந்த விபத்து நடந்திருந்ததாகவும் அது குறித்த தீவிர விசாரணையை முடுக்கி விட்டிருப்பதாகவும் முதல்நிலை அறிவிப்பாகச் சொன்னது. மனித உடல் காயங்கள் மற்றும் உடலுறுப்பு இழப்புகளின் விவரங்களைக் குறைத்தும், இறந்தவரின் எண்ணிக்கையை ஒன்று எனவும், நிறுவனக் கட்டுமானப் பொருட்களின் சேதாரங்களை மிக அதிகமாகவும் நிர்ணயித்து விபத்து குறித்து விரிவான அறிக்கையொன்றை அரசுக்குத் தாக்கல் செய்தது. விபத்து பற்றி மறுநாள் தினசரிகளில் சிறிய அளவில் பெட்டி செய்திகள் மட்டுமே வெளியாகியிருந்தன.

பெரிய நிறுவனம் திரை மறைவில், தனக்கு கீழிருந்த அந்த உதிரி நிறுவனத்தை வேறு பகுதிகளில் நடந்து கொண்டிருக்கும் தங்களது வேலைக்காக உடனடியாக மாற்றிக்கொண்டது. இறந்தவர்களுக்கும், உடலுறுப்புகளை இழந்து நிரந்த ஊனமானவர்களுக்குமான இழப்பீட்டுத் தொகை நீண்ட நெடிய அலைச்சலுக்குப் பிறகு, மறைமுகமாக நிறைய்ய கைகளுக்கும் சென்று விட்ட பிறகான மீதி சொற்பமானதாக பயனாளர்களை அடைந்தது. அரசுக்கான பெரிய கனவுத்திட்டத்தில், இத்தகைய சிறிய பற்சங்களின் இழப்புகளும், வலிகளும், விடுபடல்களும் எந்தவிதத்திலும் கவனிக்கப்படுவதாகவும், அக்கறை கொள்வதாகவும் இருப்பதில்லை. நிலைமைகள் அவசர அவசரமாகச் சரி செய்யப்பட்டு மீண்டும் புதிதான பற்களைக் கொண்டு நிரப்பப்பட்டு அரசின் கனவுப்பணிகள் தீவிரகதியில் சீராக்கப்பட்டன.

II
வண்டலூருக்கு அருகிலிருந்த ஓட்டேரிக்குச் சற்று வெளியில் வறண்டு கிடந்த நிலத்தில் முளைத்திருந்த சில கூரை வீடுகளில் ஒன்றினுள் காரைச் சுவரில் மாட்டியிருந்த கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தில், ஒடுங்கிய முகம் கொண்ட ஒருவனின் மென் சிரிப்பு பரவியிருந்தது. சட்டகத்திற்குள்ளிருந்த அவனது கண்கள் ஒரே நிலையில் உலகை வெறித்துக்கொண்டிருந்தன. அருகினில் தடித்த, தலை சற்றுச் சரிந்தவாறு குனிந்தபடி பார்வை உறைந்த படியிருந்த பெண்ணொருத்தியின் பழையதான புகைப்படமும் இருந்தது. இரண்டு புகைப்படத்திலும் கண்ணாடிக்கு மேலாக நெற்றியில் பொட்டு வைத்து, மாலைகள் போடப்பட்டிருந்தன. உலகத்தை விட்டுச் சென்றிருந்த அவர்களின் சில ஞாபகங்களில் ஒரு வடுவை சதா நினைவில் கொள்வதைப் போலவே அவற்றைத் துடைத்து வைத்திருந்தாள் வசந்தி. அதற்கு முன்பாக நீட்டிக்கொண்டிருந்த சிறிய கட்டையில் அகழ் விளக்கொன்று சின்ன ஒளியில் மினுங்கிக்கொண்டிருந்தது. அருகில் பழைய ரூபாய் தாள்கள் நிறைந்த சற்று தடித்த கட்டு ஒன்றுமிருந்தது. காற்றில் அந்நோட்டுகள் படபடத்துக்கொண்டிருந்தன.

வசந்தி தன் அப்பாவின் மெல்லிய சிரிப்பு படர்ந்திருந்த ஒடுங்கிய முகத்தைப் பார்த்தபடியே கைகளைக் குவித்து எதையோ முனங்கிக்கொண்டிருந்தாள். ஒரு வேண்டுதலின் நீட்சியடைந்த வடிவத்தில் அது இருந்தது. சற்று கறுத்த மெலிந்த தேகம். மென்மையான பார்வைகள் கொண்ட சாந்தமான கண்கள். முதலில் அம்மாவையும் சில மாதங்களுக்கு முன்பாக அப்பாவையும் இழந்து நிற்கும் அவளின் முகத்தில் பரவியிருக்கும் சோக ரேகையின் தடிமனான வரைபடமொன்றிற்குள் மென்சிரிப்பின் கோடு ஒன்று எப்போதும் அவளிடம் வெளிப்பட்டபடியிருந்தது. பழைய கத்தரிப்பூ நிறச்சேலையொன்றை மிகவும் கச்சிதமாகக் கட்டியிருந்தாள். ஒரு நளினத்தில் அவளது இயல்பில் மென்மையும், சிரிப்பும் சேர்ந்து கூடிக்கிடந்தன. நெருக்கமாகத் தான் கட்டிய மல்லிகைச் சரமொன்றை பின் தலையின் முடியில் சொருகியிருந்தாள். அந்த சிறிய காரை வீட்டிற்குள் ஒரு மகிழ்வின் வாசனையை அது பரப்பிக்கொண்டிருந்தது. புகைப்படத்திற்குள்ளிருந்தவர்களும் அவ்வாசனைகள் நிரம்பியிருந்த அந்த நாளை அனுபவித்துக் கொண்டிருப்பது போலிருந்தது.

இரண்டு மூன்று வீடுகளுக்கு அருகிலிருந்த வீட்டின் வாசலிலமர்ந்து வசந்தியை சற்று உரத்த குரலில் அழைத்துக் கொண்டிருந்தான் பூவண்ணன். பார்வைகளின்றி காற்றில் இடது கையையைத் தொடர்ச்சியாக அசைத்து ஈக்களை விரட்டியபடியிருந்தான். அது ஒரு அன்னிச்சை செயலாக அவனுள் மாறியிருந்தது. அவனது வலது கை மேல் முட்டியுடன் பாதியில் முடிந்திருந்தது. நினைவுகளில் கொஞ்சம் பிழையிருப்பது மாதிரி அடிக்கடி உடலையும், வாயையும் அசைத்தபடியே இருந்தான். வசந்தி சிரித்தபடி, அவன் முன்னால் திருநீறு காகிதத்தை நீட்டி, ‘எடுத்துக்கோங்க பா’ என்றாள். காற்றைத் தடவியபடி நீண்ட அவனது இடது கையைப்பிடித்து காகிதத்தில் வைத்து பிறகு அதை எடுத்து அவனது நெற்றியின் நடுவில் வைத்து விட்டாள். பார்வையற்ற அவனது கண்களிலிருந்து கண்ணீர் வடியத்துவங்கியது. இடது கையைத் தூக்கி அவளை ஆசிர்வதிப்பதற்கு கொண்டு வந்த போது பாதி வரை இருந்த வலது கை தானாகத் தூக்கிக் கொண்டு நின்றது. ‘நல்லாயிரும்மா’ என்றான். மெல்லிய புன்னகையில் வசந்தி வெட்கப்பட்டு குழைந்து நின்றாள்.

ஏற்கனவே நிச்சயத்திருந்து, அப்பாவின் திடீர் மரணத்தால் தடைபட்டிருந்த அவளது திருமணம் குறித்து மீண்டும் பேசி நாள் குறிப்பதற்காக அடுத்த தெருவிலிருந்த மாப்பிளை வீட்டார் இன்று அவளது வீட்டிற்கு வருவதாக இருந்தது. விபத்தில் இறந்த அப்பாவிற்கான இழப்பீட்டுத் தொகை நேற்று அவளது கைகளுக்குக் கிடைத்திருந்ததன் தகவல்கள் மாப்பிளை வீட்டாருக்கும் போய் சேர்ந்திருந்தது.

‘தனது கல்யாணத்திற்கான அவளது அப்பாவின் சேமிப்புத் தொகையில் கொஞ்சம் அவரது இறுதி சடங்கிற்கும் மற்றவைகளுக்கும் செலவாகிவிட்டதாக’த் தனது மென்மையாக குரலில் வசந்தி சொல்ல ஆரம்பித்தாள். ‘அவரின் சேமிப்பின் மீதியையும் நேற்று கிடைத்திருந்த இழப்பீட்டுத் தொகையையும் ஒன்று சேர்த்து வைத்திருப்பதாகவும். அதில் ஒரு பகுதியை வீட்டின் ஓலைக் கூரைகளை மாற்றிச் செப்பனிடுவதற்ககெனத் தனியாக எடுத்து வைத்திருப்பதையும், மீதியை இரண்டு பங்கிட்டு ஒன்றைக் கல்யாணச் செலவிற்காகவும், மீதியை அவர்களுக்கும் தந்துவிடுவதுமாகவும்’ அப்பாவின் நீண்டநாள் நண்பரான பூவண்ணனிடம் சொல்வதைப்போலவே எல்லோர் முன்பாகவும் பொதுவில் சொல்லிக்கொண்டே மாப்பிளை மூர்த்தியையும் பார்த்துக் கொண்டாள் வசந்தி. மூர்த்தி வாயைத் திறக்கவில்லை, முகத்தை மட்டும் ஒரு முறை சுருக்கிப் பார்வையை ஒழுங்கு செய்தான். பூவண்ணன் ‘சரி சரி’ என்பதைப்போல பார்வையற்ற தனது கண்களை விரித்துத் தலையை இரண்டு மூன்று முறை ஆட்டினார். அவரின் கடைவாயில் சிறிய சிரிப்பின் ஒரு வரி பதுங்கிக் கிடந்தது. வசந்தியின் சொற்களை அவர் பெரிதும் விரும்பினார்.

‘மாப்பிளையும் பொண்ணுமாக இதே வீட்டில் தான் இருக்கப் போவதாகவும் எனவே வீட்டைச் சீர்படுத்திக் கொள்வதில் எந்த பிரச்சனையுமில்லையென்றும், மாப்பிள்ளையிடம் பணத்தைக் கொடுத்து விட்டால் அவனே அதை முன்னின்று கவனித்து முடித்துக் கொடுத்திடுவான்’ என்று மாப்பிளை வீட்டார்கள் சொன்னார்கள். மேலும் கல்யாணத் தேவைக்கென கொஞ்சம் எடுத்துக்கொண்டு மீதிப்பணம் முழுவதையும் வரதட்சனையாகத் தங்களிடம் கொடுக்க வேண்டுமெனவும் சொன்னார்கள். அவளது அப்பா இருக்கும் போது பேசிய தொகை வேறானதென்றாலும் இப்போது வேறு வழியில்லை என்பதையும் அழுத்திச் சொன்னார்கள். வசந்தியும் மூர்த்தியும் அனுதாபங்கள் வழிந்திடும் சாயலில் ஒருவருக்கொருவர் தங்களுக்குள்ளாகக் கெஞ்சிக் கொண்டிருப்பதைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இரு வீட்டிற்குமான சொற்ப எண்ணிக்கையிலான உறவுகளின் தொடர்ச்சியான பேச்சுக்களும், காரணங்களும், சிரிப்புகளும்,பதில்களுமான உரையாடல்களின் கடைசியில் சற்று தடித்த பழைய ரூபாய் தாள்கள் கட்டின் ஒரு கனத்த பகுதி அவளது வருங்கால மாமனாரின் கைகளுக்குள் வந்து சேர்ந்திருந்தது. அவரதை உற்சாகம் நிறைந்த முகத்துடன் திருப்தி வரும் வரை திரும்பத்திரும்ப எண்ணிக்கொண்டிருந்தார். திருமணத்திற்கான செலவு வரைவுகள் மிகச் சிக்கனமானதாகவும் இருவீட்டாரும் பிரித்து பகிர்ந்து செய்து கொள்ளும் படியும் பேச்சில் ஒப்பந்தமானது. வசந்தி எல்லோருக்கும் மீண்டும் ஒரு முறை வணக்கம் சொல்லி அந்த சிறிய சபையினர் முன்னிலையில் மாப்பிள்ளையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் எழுந்து கொண்டாள். வரக்கருப்பட்டி கலந்த காபித்தண்ணிர் எல்லோருக்கும் வழங்கப்பட்டது. கிளம்பும் போது வாசலருகில் நின்று வசந்தியிடம் சிரித்தபடிச் சொல்லிவிட்டு சென்றான் மூர்த்தி.

0

அவர்கள் சென்ற பிறகு உதிர்ந்து கிடந்த தனது மல்லிகைப் பூக்களில் சிலவற்றை எடுத்துத் தன் உள்ளங்கையில் வைத்து வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து வெகு நேரம் பார்த்தபடியிருந்தாள் வசந்தி. அப்பூக்களிலிருந்த மனம் மூர்த்தியின் அருகாமையிலான நெருக்கத்தின் வாசனையை அவளின் நாசிக்குள் நுழைத்தது. இன்று அதிகாலையிலேயே உதிரி மல்லிகைப்பூக்கள் நிறைந்த பொட்டலமொன்றை ஒரு சிறுவனின் கைகளில் கொடுத்து வசந்தியிடம் சேர்த்திருந்தான் மூர்த்தி. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறிடும் ஒரு மகிழ்வின் எல்லையற்ற தன்மையை ஒவ்வொரு இழையாய் அவள் அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

ஓட்டேரியில் சிவப்புக் கூரை ஓடுகளும், செங்கல்களும் செய்யும் சிறிய கம்பெனியில் மணல் மிதிக்கும் வேலைக்குச் சென்று வந்த பொழுதுகளில் மூர்த்தி அவளுக்கு அறிமுகமானான். அவனது சிறிய கண்களில், பயந்து கொள்ளும் சுபாவம் தெரிந்தது. அரும்பிய மீசையினூடான கறுப்பு முகம் கொண்ட ஒடிசலான உடலமைப்பு. பெரிய காலர் கொண்ட வெந்தய நிற டெரி காட்டன் சட்டையும், கால் முடியும் இடத்தில் பரந்திருக்கும் பெல்பாட்டம் பேண்டும் அணிந்து கொண்டு தினந்தோறும் அவளது பின்னால் வந்து கொண்டிருந்தான். ஒரு ஏக்கத்தில் தெரிந்திடும் முகபாவனைகளுடன், அவளது தலைமுடியின் குஞ்சங்கள் ஆடும் பின்புறத்தைப் பார்த்த படியே சாலையில் நடந்து வந்து தெரு பிரியும் முனையில் நின்றுவிடுவான். கருவேலம் மரங்கள் நிறைந்த அச்சாலையிலிருந்து இறங்கி அவளது தெருவிற்குள் கடைசியாகத் திரும்பும் போது கொஞ்சம் நின்று திரும்பி அவனை ஒரு முறை பார்த்து விட்டே பிறகு நடையைத் துவங்குவாள் வசந்தி. மூர்த்தி, அவளது அந்தக் கடைசிப் பார்வையின் வசீகரத்தில் கிறங்கிக்கிடந்தான்.

அந்த சிறிய ஊரில் ஒருவருக்கொருவர் நல்ல அறிமுகமும் பழக்கமுமிருந்தது. ஒரே பிரிவைச்சேர்ந்தவர்களின் வகையறாக்களால் பெரும்பாலும் அந்தப் பகுதி நிறைந்திருந்தது. மூர்த்தியின் வீட்டுக்காரர்கள் வசந்தியை பெண் கேட்டு வந்த போது விசாரித்ததில், எல்லோரும் வெவ்வேறு காலத்தில் வடதமிழகத்தின் சில பகுதிகளிருந்து இந்த நிலப்பரப்பிற்குப் பஞ்சம் பிழைப்பதற்கும், பிற வேலைகளுக்குமாகப் புலம்பெயர்ந்திருந்தது தெரியவந்தது. சிறிய நிகழ்வாகத் திருமண நிச்சயத்தையும், தேதியையும் குறித்து மகிழ்ச்சிகள் நிரம்ப பேசி முடித்திருந்தனர். மூர்த்தியும் வசந்தியும் இளமையின் கனவுகளுடன் மிதந்து கொண்டிருந்தனர்.

மகளது திருமணத்திற்கான பணத் தேவைகள், கையிருப்பிற்கும் மேலாக வருவதை வசந்தியின் அப்பா தனது நண்பன் பூவண்ணனுடன் சேர்ந்து கணக்கிட்டு அந்தத் தொகையை அடைவதற்கான முயற்சியில் வேலை தேடி அலைந்த சமயத்தில் தான் அந்த பிரம்மாண்டமானப் பாலம் கட்டுமானப் பணியில் ஏஜென்சி மூலமாக வேலை கிடைத்தது. அதில் தான் தங்களை ஈடுபடுத்தி இரவு பகலாக வேலை செய்து வந்தனர். கடைசியில் உடம்பெல்லாம் கம்பிகள் குத்திக் கிழித்துப் பிணமாகவும், உடலுறுப்புகளிழந்தும் வீடு வந்து சேர்ந்தனர். துயரங்கள் பரவி வசந்தி நிலைகொள்ள முடியாமல் மயங்கிச் சரிந்து போனாள்.

எல்லாவற்றையும் ஒரு முறை தனது மனத்திரையில் ஓடவிட்டு ஆசுவாசம் அடைந்தவளாக பெரும் மூச்சொன்றை விட்டாள் வசந்தி. பெரும் துயரங்கள் நிரம்பிய அந்தப் பொழுதுகளில் மூர்த்தி அவளுக்குப் பெரிய ஆறுதலாக இருந்ததை வசந்தி தனது மனதின் இரகசிய அறைகளிலிருந்து எடுத்துப் பார்த்தாள். சற்று பயந்த சுபாவம் கொண்ட அவன் யாருக்கும் தெரியாமல் சில கடுதாசிகளையும், சிறுசிறு பொருட்களையும் அவளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தான். சிலமுறை கருவேலம் மரங்கள் சூழ்ந்த பகுதிகளில் சந்திக்கும் வாய்ப்புகளில் நம்பிக்கையாய் பேசி அவளது அழுகையையும் துயரத்தையும் கைமாற்றிப் பகிர்ந்து கொண்டான். துயரத்தின் ஒரு முனையில் அமிழ்ந்து கிடந்த அவளை கை கொடுத்துத் தூக்கி விட்டான். அதிலிருந்த துளிர்த்த மீதி நம்பிக்கையைத் தான் தனக்கான மீதி வாழ்க்கை முழுவதற்குமானதாக மனதிற்குள் சொல்லிக்கொண்டாள். நினைவு திரும்பியவள், மாலை கடந்து உருவாகியிருக்கும் மெல்லிய இருள் அப்பிக்கிடந்த வீட்டைப் பார்த்தாள். எழுந்து திரியைத் திருப்பி விளக்கைப் பற்ற வைத்தாள். புகைப்படத்திற்கு முன்பாக அணைந்திருந்த அகழ் விளக்கை சரிசெய்து பற்ற வைத்துத் திரியைச் சற்று வெளியே இழுத்து விட்டாள். அது சிறிய ஒளியில் மினுங்கத்துவங்கியது. வசந்தியின் கண்களில் அந்த ஒளி பரவிக்கொண்டிருந்தது.

III.
வசந்திக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. தன்னிலிருந்து பிரிந்து வந்திருந்த அந்த சிசுவின் பால்மணக்கும் வாடையில், அதுவரை தான் அனுபவித்திருந்த இழப்புகளின் எல்லா வலிகளிலிருந்தும் விடுதலையாகி மனம் நெகிழ்ந்து கிடந்தாள். பூவிதழினும் மெல்லியதான வடிவத்தில், சற்று ஒடுங்கிய முகமும் சிறிய கண்களுமாக தனது அப்பாவே தனக்கு மகனாகப் பிறந்திருப்பதாக நினைத்துப் பூரித்து மகிழ்ந்தாள். அழுகையும் ஆச்சர்யமுமாக மூர்த்தியிடம் திரும்பத்திரும்ப அதை சொல்லிய படியேயிருந்தாள். பார்வையற்ற பூவண்ணன் குழந்தையை இடது கையால் தடவி முகர்ந்தான். வந்திருக்கும் புதிய உயிரிலிருந்து தனது நண்பனின் பழைய வரைபடத்தை மனதிற்குள் முழுவதுமாக வரைந்து பார்த்தான். நிஜத்தில் வாழ்வின் வேர்களை யாருக்கும் தெரியாமல் இறைவன் எப்படி பிணைத்திருக்கிறான் என்பதன் புதிரை அதிசயமாக உணரத்துவங்கினான். மெல்லிய அதன் விரல்களைத் தொட்டுப் பிடித்து, காலம் முழுவதுமாகக் காத்துக்கொண்டிருந்த ஒருவனுக்கான மொத்த பிரியத்தையும் அக்குழந்தையினுள் ஏற்றிவிட்டான். நொறுங்கிய குரலில் தன் நண்பன் குறித்து அக்குழந்தையிடம் அவன் பேச ஆரம்பித்த போது அதன் சிறிய முந்திரிக்கண்கள் அவனது கருத்த, சுருக்கங்கள் விழுந்த முகத்தை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தது. தனக்கான சிறிய ஞாபகங்களின் வரிசையில் அந்த முகத்தை நிரந்தரமாகச் சேமித்துக்கொண்டது. தனது சிறிய பாதங்களின் மென்மைகளைக் கொண்டு அவனது துண்டான வலது கையின் முனையிலிருக்கும் நிரந்த வலியைத் தொட்டுப்பார்த்தது. சிசுவின் உரசலில் பூவண்ணன் கரைந்து போகத்துவங்கினான். உணர்வுகளின் ஒரு பெரும் குவியல்களினூடாக வசந்தியும், மூர்த்தியும், பூவண்ணனும், குழந்தையும் ஒரு புள்ளியில் உடைந்து அழுவது போலிருந்தது அந்த நொடி.

IV.
கர்த்தரை செபித்துக்கொண்டிருந்த கைகளுக்கு அருகில் உடலைக் கிடத்தி சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். ஆட்களின் நடமாட்டம் குறைவாகயிருந்த அந்த நடைமேடையில் மதிய வெய்யிலின் உஷ்ணம் பரவி தவழ்ந்திருந்தது. இருப்புப் பாதைகளின் கம்பிகளில் அது பிரதிபலித்தது. மதிய உணவை முடித்திருந்த அந்த பார்வையற்ற ஜோடி சிறிய நிழலுக்குள் தங்களது உடலை சுருக்கியபடி உட்கார்ந்திருந்தனர். ஓரமாகயிருந்த அவர்களது ஒரு பையில் விற்பனைக்கான பென்சில், பேனா மற்றும் இதரவைகளின் கட்டுகளுக்கிடையில் துறுத்தியபடி வெளியே தெரிந்த சிறிய நாய் பொம்மையொன்றை அவன் வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவர்களது குழந்தைக்காக வாங்கி வைத்திருப்பார்கள் என நினைத்துக் கொண்டான். எப்படி ஒரு தாய்க்கு தன் குழந்தையின் மீதான பாசம் முழுவதுமாக மாறி வெறுப்பாக துளிர்த்துக் கொள்கிறது என தனக்குள்ளாகவே கேள்வி கேட்ட படி கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டான். வெய்யில் அவனது காலின் வழியா ஏறிக்கொண்டிருந்தது. அத்தனை பாசம் பொங்கிய மனதுடன் வளர்த்த தன் பிள்ளையை, கண் கொண்டு பார்ப்பதையே அருவருப்பாக உணர்வதான நிலைமைக்கு உள்ளாக்கும் இந்த இயற்கையின் பூடகமான மாற்றங்களை என்னவென்று சொல்வது எனத் தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தான். நிலைகொள்ள முடியாத கோபமும், குழப்பமும், எரிச்சலும் அவனை முழுவதுமாக நிலைதடுமாற வைத்தன. கண்களை இறுக மூடிய படி கிடந்தாலும் அதற்குள் தனது தாயின் முகமும், தங்கையின் முகமுமே மாறி மாறி வந்து கொண்டிருந்தன. அவனால் அவர்களை வெறுப்பினூடாக பார்க்கவே முடியவில்லை. ஆனால் அவர்கள் ஏன் தன்னை இவ்வாறு ஒரே அடியாக வெறுத்து ஒதுக்குகிறார்கள் என்பதை அவனால் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியவில்லை. புகை படிந்த நினைவுகளுக்குள் மீண்டும் மீண்டும் நுழைந்து திரும்பிக்கொண்டிருந்தான். அது முழுவதும் அழுகையும், வெறுப்பும், இரக்கமற்ற கேள்விகளும், துயரங்களுமாகவே நிறைந்திருந்தது. மூடிய கண்களின் வழியே கண்ணீர் எல்லையற்று பெருகி வழிந்து கொண்டிருந்தது. விசும்பல்கள் கூடி தன்னிலையில்லாமல் தொடர்ச்சியாக உடல் நடுங்கினான். அருகிலிருந்த பார்வையற்ற பெரியவர் அவனது கேவல்களால் மனமுடைந்து அவனைத் தடவி தொட்டுப் பார்த்தார். சட்டை நனைந்திருந்தது.

“உன் பிரச்சனைகள் இனி ஒவ்வொன்றாகச் சரியாகும், அழாதே, தேவனே உண்மையான அரவணைப்பு, உன் சங்கடங்களை அவனிடம் சொல்லு” என்றார்.

அவன் அமைதியிழந்து கிடந்தான். வெறுப்புகளை மறப்பதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருந்தான். அவனிடம் பேசுவதற்கென ஒருவர் கிடைத்திருப்பதை மிகவும் ஆதரவான ஒன்றாக நினைத்தான். சற்று நகர்ந்து அவரருகில் தன்னைச் சரிசெய்து கொண்டு அமர்ந்தான்.

“எல்லா துன்பங்களுக்குமான வரையறைகள் இங்கு ஒன்று தான், கர்த்தரை நெருக்கமாக அடைந்து கொள்வதற்கான வழியை அதுவே நமக்கு உருவாக்கித் தரும்” அவரே தொடர்ந்து சொல்லிய படி இருந்தார்.

அவனது விம்மல்கள் சன்னமான குரலில் மாறியிருந்தது. அவரது பார்வையற்ற மனைவி விற்பனைக்கான பென்சில், பேனாக்கள் நிறைந்த கவர்களை ரப்பர்களால் சுற்றி தயார் செய்து பையில் போட்டுக்கொண்டிருந்தாள்.

“ஒருவர் நம்மை வெறுக்கின்ற போதும் அவர்களுக்காகவும் சேர்த்து நாம் ஜெபிக்க வேண்டும் அதுவே அன்பின் அசலான நிலைத்தன்மை” என தழுதழுக்கும் குரலில் சொன்னார். இப்போது அவன் அவருக்கு மிகஅருகில் வந்து அவரது இடது தோளில் சாய்ந்து கொண்டான்.

“ஒருவருக்கென ஒருவர் பரஸ்பரம் தேவையாக இருக்கின்ற இந்த உலகில், உனது தேவைக்கும், உனக்கான தேவைக்குமான நபர்களை நீ நிச்சயமாக எதிரெதிரே சந்திக்கவே செய்வாய், அதுவே உண்மை” தீர்க்கமான குரலில் சொன்னார். அவனுக்கு மீண்டும் அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.

“நான் யாருக்கும் இங்கு தேவைற்றவனாக இருக்கிறேன். எனக்கு வாழ்வதற்குப் பிடிக்கவில்லை” என அழுதபடியே சொன்னான். குரலில் கொஞ்சம் இழுவைக் கூடி வந்தது.

“அழாதே, என்னை விடவா நீ துன்பங்களை அடைந்து விடப்போகிறாய். எனது கண்முன்னே எனது நண்பனை பலி கொடுத்திருக்கிறேன், அதே விபத்தில் என் இரண்டு கண்களையும், வலது கையையும் இழந்திருக்கிறேன். வாழ்வின் மீதான நம்பிக்கைகள் முழுவதையும் இழந்து வெறுமையில் மனப்பிறழ்வு கண்டு தற்கொலை வரை சென்று திரும்பியிருக்கிறேன். வாழ்வு அதன் இரகசியங்களை நமக்கான வேதனைகளிலேயே கட்டிக்கொடுக்கிறது.”

துளிர்த்த அழுகையில் தொண்டையைச் செருமியபடி அவரே தொடர்ந்தார்,
“இறந்த எனது நண்பனின் மகளுக்குப் பிறந்த குழந்தையில் எனது நண்பனையே பார்த்தேன். என் வாழ்வில் வழிநெடுக முளைத்திருந்த துயரங்களையும், வேதனைகளையும் கடந்து செல்வதற்கு.. மென்மையான அக்குழந்தையின் பாதங்களே போதுமானதாக இருந்தது. ஒரு நொடியில், ஒரு நிகழ்வில் எனது வாழ்வை மாற்றிக்காண்பித்த அந்த அதிசயத்தை நீ நம்பாமலும் போகலாம் ஆனால் அது தான் உண்மை. உனக்கும் நடக்கும் காத்திரு…”

அவன் அவரது வலது கையின் துண்டிக்கப்பட்ட முனையைத் தடவிய படி, கொஞ்சம் துணுக்குற்று “நான் நம்புறேன் தாத்தா, நீங்கள் எனக்காகவும் வேண்டிக்கொள்ள வேண்டும்” என்றான். சிறு அமைதியின் தன்மையில் அவனது சொற்களிருந்தன.

“நான் முறையான கிறுஸ்துவனல்ல, இங்கு எல்லாமே ஒன்று தான், நாம் தான் நமக்கு தகுந்தாற் போல பெயர்களை வைத்துக் கொண்டிருக்கிறோம். பரவாயில்லை அதில் ஒன்றும் பிரச்சனையில்லை” என்றவர் மேலும் ‘கதையைக் கேளு’ என்று சொல்லத்துவங்கினார்.

“மூன்றரை வயது வரை அந்தக் குழந்தையின் மீது என்னிடமிருந்த எல்லா அன்பையும் கொட்டி வைத்திருந்தேன். பார்வைகள் இல்லையென்றாலும் அதன் ஒவ்வொரு அசைவையும் என் நுண்ணுணர்வைக் கொண்டு உணர்ந்து வைத்திருந்தேன். அவனை என்னிடம் கொடுத்து விட்டுத் தான் அவனது அம்மா வீட்டு வேலை செய்வாள், ஒரு துளி அழுகையிருக்காது. நான் தான் அவனை எனது ஒரு கையிலேயே தடவியபடி கவனித்துக் கொள்வேன். ஒவ்வொரு நிகழ்விலும் நெருக்கமாகி அக்குழந்தையின் இரண்டாவது தாயாகவே நான் மாறியிருந்தேன். திடீரென ஒரு நாள் அவனது தந்தை, அவனுக்கு திருவள்ளூர் அருகில் புதிதாக முளைத்திருக்கும் பெரிய கம்பெனியொன்றில் ஒப்பந்த அடிப்படையில் வேலை கிடைத்திருப்பதாகவும், அவர்களனைவரும் குடும்பத்துடன் மொத்தமாக அங்கு சென்று குடியேறப் போவதுமாகச் சிரித்தபடியே செய்தியாகச் சொன்னான். நான் அதிர்ந்து மனமிறுகி குறுகிப்போய் விட்டேன்.” என்றபடி கொஞ்சம் நிறுத்தி மூச்சு வாங்கிக்கொண்டார். அவரது பார்வையற்ற மனைவி வெளியை வெறித்த படி கர்த்தருக்கான பாடலொன்றை முனகிக்கொண்டிருந்தாள்.

ஆர்வம் தாங்காத மென் குரலில் அவசரமாக “அப்புறம் என்னாச்சு” என்றான்.

“சில நாட்களில் அவர்கள் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டார்கள். நான் மீண்டும் இரண்டாவது முறையாக மனப்பிறழ்வு கொண்டு தடுமாறத்துவங்கினேன். அக்குழந்தையின் மென்மையை எனது இருண்ட விழிகளை மூடியபடி தேடிக்கொண்டிருந்தேன். நெடும் நாட்கள் சாப்பிடவில்லை, தூக்கமுமில்லை ஒரு சிறு குன்றின் அமைதியைப் போல உறைந்து போயிருந்தேன். எந்தவிதத் தொடர்புமற்று திடீரென மறைந்து போய்விட்ட அந்தக் குழந்தையின் நினைவுகளால் நான் துயருற்றுக் கிடந்தேன். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு குழந்தைக்கான இந்தப் பிரிவில் நான் இவ்வளவு துயரமடைவதற்கான காரணங்கள் ஆரம்பம் முதல் முழுவதுமாகவும்,சரியாகவும் தெரியாது. அக்குழந்தையுடனாக எனக்குள் பிண்ணிக்கொண்டிருக்கும் நெடும் தொடர்பென்பது எனது எல்லா நரம்புகளிலும் இரத்தங்களிலுமான வாழ்வோடு ஒரு விசித்திரத் தன்மையின் புதிர் நிறைந்தது. அதைத் தான் நான் ஒவ்வொரு நாளும் அனுபவித்துக் கொண்டிருந்தேன். அதிலிருந்து ஒரு போதும் என்னால் அறுத்துக் கொண்டு வெளியே வரவே முடியவில்லை. எனது முதல் மனைவி எனது புதிய புதிய செய்கைகளால் மிகவும் பயந்து போனாள். நான் பார்வைகளை இழந்து விபத்திற்குள்ளானதிலிருந்தே எனக்கும் அவளுக்குமான உறவில் சீரான தன்மை அறுந்து போயிருந்தது. எங்களுக்கு குழந்தையில்லாததும் அதற்கு கூடுதலான ஒரு காரணம். பிறகு ஒரு நாள் அவளும் என்னைத் தனிமையில் விட்டு விட்டுச் சென்றுவிட்டாள். தற்கொலைக்கென ரயில் தண்டவாளத்தில் விழப்போன போது இவளது சுற்றத்தார்கள் தான் என்னைக் காப்பாற்றினார்கள் – என்ற படி பார்வையற்ற தனது இரண்டாவது மனைவியை நோக்கி கை நீட்டிய போது தனது பழைய கறுப்பு கண்ணாடியைக் கழற்றி கண்ணீர் பரவியிருந்த, தழும்புகள் நிறைந்த கண்களையும் முகத்தையும் கைகளால் மொத்தமாக வழித்து எடுத்தார். முழுவதுமாக அந்த முகத்தைப் பார்த்த போது, சில நொடிகள் அவனது விழிகள் அசைவற்று நின்றிருந்தன. உயிர் நரம்பின் தனித்தத் துடிப்பை உணர்வது போலிருந்தது அவனுக்குள். மிகச்சில நொடிகளில் அவனுக்குள் பரவி எல்லையற்ற ஒரு வெளிக்குள் அவனது மனது அலைந்து கொண்டிருந்தது. அவனுக்கு அம்முகத்தை எங்கேயோ எப்போதோ பார்த்து சிரித்து, தொட்டு உணர்ந்த நன்கு பரிட்சயமான முகம் மாதிரி தெரிந்தது. கணக்கற்றத் தன் ஞாபகங்களின் குவியல்களிலிருந்து சிலவற்றை தனியாக எடுக்க முயன்று ஒரு கட்டத்தில் தளர்ந்து போனான். ஒரு வேளை அவர் சொல்லிக்கொண்டிருந்த நிகழ்வுகளால் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுக் கிடந்ததால் தனக்குள் அப்படி தோன்றியிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான். அவர் தொடர்ந்தார்,

“இவளது சுற்றத்தார்கள் தான் என்னைப் பார்த்துக் கொண்டார்கள். நான் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைகளை மறந்து இயல்பிற்குத் திரும்பினேன். இவளது கணவன் இவளை விட்டு பிரிந்து சென்ற போது, வயதிற்கு வந்த பெண்குழந்தையொன்றும் இவளுக்கு இருந்தது. நான் இவர்களை மனதார ஏற்றுக் கொண்டேன். இது தான் இப்போது வரையிலான எனது கதை. எங்களுக்கு நான்கு வயதில் பேத்தியொருத்தி வீட்டில் இருக்கிறாள், பெரிய வாயாடி! அவளிடம் பேசிய படியும், அவளைத் தொட்டுத் தடவிக்கொண்டும் மீதி வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவற்றை விற்றுப் பிழைக்கிறோம். அன்பில் எந்தக் குறைவுமில்லை. நாம் கடந்து போக வேண்டிய துயரங்களுக்குள்ளிருக்கும் ஒவ்வொரு நூலிழைகொண்ட நரம்பும் அதற்கு இணையான வேறொரு நிகழ்விற்கான மகிழ்ச்சிகளின் பாதைகளையே ஏற்படுத்திக் கொடுக்கும். நாம் உறுதியாக நம்ப வேண்டும் அவ்வளவு தான். வாழ்வின் புதிர் என்பதும், முழுமை என்பதும் எதிர்பாராத ஒரு தருணத்தில் நாம் சந்திக்கப்போகும் ஆச்சரியத்திலும், விபத்திலும் தான் புதைந்திருக்கிறது. நீ உன்னை முழுவதுமாக விரித்துக் கொள்வதிலும், சுருங்கிக் கொள்வதிலும் தான் அவற்றின் சாத்தியங்களும், போதாமைகளும் உருவாகின்றன. உன் எல்லா நிலைகளும் இங்கு மாறக்கூடியவையே….நம்பிக்கையோடு இரு” என்று முடித்தார். அவனது முதுகைத் தட்டிக் கொடுத்தார். வெய்யில், நடைமேடையின் கூரையில் அடித்துக் கொண்டிருந்தது. அவன் கொஞ்சம் தடுமாற்றத்துடன் இருந்தான். பேசுவதற்கு முன்பாகவே அவனது உதடுகள் அசைந்து கொண்டிருந்தன. மனதிற்குள் படர்ந்திருக்கும் அலைச்சலின் ஒரு வடிவத்திற்கு மிக அருகிலான சாயலைப் போலிலிருந்ததது.

‘நீங்கள் சொன்னதில் அடித்தளமாக தூய அன்பின் வடிவமொன்று இருந்தது, இப்பொழுது நான் எதிர்பார்த்துக் காத்திருப்பதும் அதற்குத் தான்…” என்று முடிக்க முடியாமல் அழத் துவங்கினான். குரலில் பெண்மையின் மெல்லிய நளினமும், ஏக்கமும் தனியாகத் தெரிந்தது.

“மகனை வெறுக்கும் அம்மாவை, அண்ணனை வெறுக்கும் தங்கையை நீங்கள் இது வரை பார்த்திருக்க வில்லையென்றால் என்னைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றான். அவரது மனைவி இரயிலின் வருகையை உறுதிபடுத்திக் கொண்டு அவர்களருகில் வந்தாள். அவன், அவர்களைத் தனது இரு கைகளால் பிடித்தபடி இரயிலில் ஏறுவதற்காத் தயாராகிக் கொண்டான்.

“அப்படி என்ன பிரச்சனைகள் உங்களுக்குள்..” என்ற போது சென்னை சென்ட்ரலுக்கான புறநகர் இரயில் ஒன்று வந்து நின்றது. ஒரு பெட்டியில் ஏறி வலது புறமாக வாசலுக்கருகில் காலை நீட்டிய படி உட்கார்ந்து கொண்டனர். வரப்போகும் எல்லா நிறுத்தங்களும் இடது புறமானதென்பதால் இந்த உத்தியை அவர் சொன்னார். அவரது மனைவி தனது விற்பனைப் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு மெதுவாக அசைந்து விற்பனைக்காக முன்னோக்கி நகரத்துவங்கியிருந்தாள்.

“அப்படி என்ன பிரச்சனைகள் உங்களுக்குள்..” மீண்டும் கேட்டார்.

“எனது ஏழாவது வயதில் என் தந்தை அவரோடு வேலை பார்த்த பெண்ணொருத்தியோடு வீட்டை விட்டு ஓடிப்போனார். சில நாட்களாகவே வீட்டில் அம்மாவோடு தொடர்ச்சியாகச் சண்டைகள் நடந்து கொண்டு தான் இருந்தது. இரண்டாவதாகப் பிறந்திருந்த தங்கைக்கு வயது இரண்டு என நினைக்கிறேன். தொட்டியில் அழுதபடியிருக்கும் அவளை அம்மா கவனிக்காமல் வீட்டின் ஒரு மூலையில் தன்னைக் கிடத்திக் கொள்வாள். நான் தான் தங்கையைத் தூக்கிக் கொண்டு சென்று அம்மாவிடம் கொடுப்பேன். அம்மா அவளைத் தட்டிக் கொடுத்த படி அப்பாவிற்கு பதில் சொல்வாள். அதில் கொஞ்சம் பொறுமையின் தன்மையிருக்கும். அப்பாவின் குரல் போலக் கத்தி அடங்காமல் அவரை சமாளிப்பாள். முழித்தபடி மடியில் கிடக்கும் தங்கையின் பாதத்தை நான் தடவியபடி கூசிவிடுவேன் குணடு கண்ணங்கள் நெளிய அவள் பிரமாதமாகச் சிரிப்பாள். அப்பா மீண்டும் கத்தும் போது வெடுக்கென பயந்து உள்ளொடுங்குவாள். நான் அம்மாவின் தோள்களைப் பிடித்துக் கொள்வேன்.” என்று அவன் சொல்லி முடிக்கும் போது, அடுத்த நிறுத்தத்தில் வண்டி நின்று கிளம்பியது. அவரது மனைவி விற்பனைக்காக அடுத்த பெட்டிக்கு செல்வதாகவும், முடித்து விட்டு திரும்புவதாகவும் சொல்லிச் சென்றாள்.

“அப்பா அம்மா பிரச்சனை எல்லா வீட்டுலையும் தான இருக்கு, பாத்துக்கலாம்” என்றவரை அவசரமாகத் தடுத்துத் தொடர்ந்தான்.

”அம்மா, அருகிலிருந்த சிறிய கம்பெனியொன்றில் துப்புரவு வேலைகளுக்கான பிரிவில் முதல் நிலை மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தாள். சின்ன நிலையில் தொடங்கி இங்கு வந்து நின்றிருந்தாள். ஆனால் அப்பா, அவளை அலுவலக மேலாளரோடு தொடர்பு படுத்தி பேசினார். எனக்கு அந்த வயதில் அது குறித்து ஒன்றும் தெரியாது. அவர்களது நிறைய பேச்சுக்கள் சண்டையின் போது எனக்குப் புரியவில்லை தான். ஆனால் அப்பா வீட்டை விட்டுப் போன பிறகும் அம்மா எப்போதும் போல் தான் இருந்தாள். எங்களை நன்றாகப் பார்த்துக் கொண்டாள். நான் கவனித்த வரை அவளது நடவடிக்கைகளிலும் , பண்புகளிலும் எந்தவொரு மாற்றமுமில்லை.” என்றவன் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து விட்டு பிறகு தொடர்ந்தான். அவர் அவனது அசைவை கைகளால் உணர்ந்து தலையை ஆட்டிய படி கேட்டுக் கொண்டு வந்தார். அவனது இதயம் கொஞ்சம் சீரற்றிருந்ததை அவர் உணர்ந்திருந்தார்.

“ சில வருடங்களில் எனக்குள் தான் மாற்றம் உருவாகி வந்தது. முதலில் குரலில் கொஞ்சம் பெண்மையின் சாயல் வந்திருந்தது. அந்த காலகட்டத்தில் வீட்டிற்குள் மிகவும் சொற்பாக பேசிச் சமாளித்தேன். வெளியில் எல்லோரும் கிண்டல் செய்தனர். இது தான் எனது முதல் அவமானம். எப்போதும் என்னைச் சுற்றி சுற்றி வரும் என் தங்கை இந்த விசயத்தை அம்மாவிடம் சொன்னாள். அவள் விசாரித்த போது நான் அழுதபடி நின்றிருந்தேன். அம்மா அருகிலிருந்த மருத்துவரிடம் இரண்டு நாளுக்குப் பிறகு அழைத்துச் சென்றாள். மருத்துவர் என் உடல் முழுவதுமாகப் பரிசோதித்து விட்டு, ஒரு காகிதத்தை நீட்டி சத்தமாக வாசிக்கவும், பாடவும் சொன்னார். நான் அவ்வாறு செய்த போது எனக்கே என் குரலின் மாற்றங்கள் தெரிந்தன. அம்மா தலையில் கையை வைத்து உட்கார்ந்திருந்தாள், கூட வந்திருந்த என் தங்கை பெரிதாகச் சிரித்தாள். எனக்கு அவமானமாகயிருந்தது. நான் கூனி குறுகிய படி நின்றேன்.” என்றவன் அவரை நோக்கி ‘இதற்கு நான் எப்படி நேரடியான காரணமாவேன்’ என கத்தினான். அருகிலிருந்த பயணிகள் அவனை ஒரு முறை வியந்து பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டனர்.

“எனக்குப் புரிகிறது, உன் வேதனைகள் மிகக் கொடியது தான், ஆனால் நீ தனிமை பட்டுக் கொள்ள வேண்டாம், நாங்களிருக்கிறோம்” என்றார். அவன் மெலிதாக அழுதபடியே தொடர்ந்தான், “மருத்துவர் என்னையும், தங்கையையும் வெளியே அமரச் சொல்லி விட்டு, அம்மாவிடம் நிறைய்ய நேரம் பேசிக்கொண்டிருந்தார். நான் அருகிலிருந்த பெண்ணொருத்தியின் ரவிக்கையின் மீது கவனத்தைக் குவித்தேன். அன்றிலிருந்து அம்மா என்னிடம் சரியாகப் பேசுவதில்லை. அவள் என்னை அணைத்துக் கொள்ள வேண்டும், ஆறுதல் படுத்த வேண்டும், என்னை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்து உருகினேன் ஆனால் அது நடக்கவில்லை. எனக்கான ஒவ்வொரு நிலையிலும் அன்பைப் பொழிந்து கொண்டிருந்தவள் திடீரென அதை நிறுத்திய வன்மத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் அவளுக்கு ஒவ்வாத சதைப்பிண்டமாக மாறியது எப்படி..? பள்ளிக்கும் செல்லவிடாமல் தடுத்து விட்டாள். வீட்டில் என்னைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் முனுமுனுப்பில் என்னைச் சபித்தாள். என் சாவுக்காக அவள் ஏங்கிக்கொண்டிருப்பதாகவே எனக்குப்பட்டது. எனக்குப் பதிமூன்று வயது நிறைவடைந்திருந்த போது உணர்ச்சிகளின் பெரும் விழிப்பில் குழப்பத்தில் நான் தவித்துக் கொண்டிருந்தேன். எனது ஏக்கங்கள் பல்கிப்பெருகி என்னை முழுவதுமாக முழ்கடிக்கத்துவங்கியிருந்தன. எனது தங்கையின் உடைகளின் மீதும் அணிகலன்கள் மீதும் கவர்ச்சி கூடி வந்தது. உள்ளறைக் கதவை மூடிக்கொண்டு அதை அணிந்து கொள்ளும் ஏக்கத்தில், அதன் அளவு போதாமைகளால் வியர்த்து தத்தளித்துக் கொண்டிருந்தேன். திடீரெனக் கதவைத் தள்ளித் திறந்து உள்ளே நுழைந்த என் தங்கை அலங்கோலமான என்னுடைய நிலையைப் பார்த்து விட்டு அதிர்ச்சியில் அம்மாவைக் கத்திக் கூப்பிட்ட படி ஓடினாள், நான் வேண்டாம்..ப்ளீஸ் அம்மாவிடம் சொல்லாதே என்று பெண் பிள்ளையொன்றின் சினுங்களைப் போலான நளினத்துடன் அவளது பின்னால் ஒடிச்சென்றேன். அம்மா என்னைக் கோபத்துடன் அறைந்து கீழே தள்ளினாள். நான் ஒரு புழுவைப் போல எனது அவமானத்துடன் சுருண்டு கிடந்தேன். அதிலிருந்து எனது தங்கையும் என்னிடம் பேசுவதுமில்லை, என் முகத்தைப் பார்ப்பது மில்லை.”

அவர் நீட்டியிருந்த கால்களை மடக்கிய படி “எல்லாம் தீர்க்கக் கூடியது தான், நீ ஒன்னும் கவலைப்படாதே” என்றார். அடுத்தடுத்த நிறுத்தங்களில் ஏறியிருந்தவர்களால் பெட்டி நிறைந்திருந்தது. வாசலின் ஓரத்தில் அவன் அமர்ந்திருந்தான். எதிர் காற்று அவனது சிகையைச் சிக்கலாக்கிக் கொண்டிருந்தது. அது அவனது தற்போதைய மனதின் சிக்கலுற்ற ஒரு அடையாளம் போலவேயிருந்தது. அவனே தொடர்ந்தான், “வீட்டின் தனிமையில் என் நிலைமை இன்னும் மோசமாகியது. மனதின் இறுக்கத்தை அத்தனிமை பலமடங்கு அதிகரித்தது. ஒவ்வொரு உணர்ச்சிகளுக்குள்ளும் புகுந்து அதன் கணக்கற்ற வழிகளில் சுற்றித்திருந்தேன். அம்மாவும், தங்கையும் என்னைப் பார்க்கும் மோசமான விதத்தை தாங்க முடியாமல் ஒவ்வொரு நாளுமாக எல்லாவகையிலும் பலவீனமாக உணரத்துவங்கினேன். வெறுப்புகளைக் கக்கும் அவர்களிடம் அன்பையும் ஆறுதலையும் கேட்டு மன்றாடிக்கொண்டிருந்தேன். அவர்களது உதாசீனங்கள் தான் எனக்கே எனது மீதான அருவருப்பையும், வெறுப்பையும் ஆழமாகக் கொண்டுவந்தது. எங்கு சென்று சேர்வதெனத் தெரியாமலும், விளங்கிக்கொள்ள முடியாமலும் அடரிருளில் நின்றிருந்தேன்.” அவனது கோபங்கள் கடைசி வார்த்தையில் நிலைகொண்டிருந்தது. அவனது கலங்கிய கண்கள் ஒரு புள்ளியில் வெறித்துக்கிடந்தன.

“பிரச்சனைகளை சொல்லிவிட்டாய் பிறகு எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார், நீ நிம்மதியாகி விடு” என்று சொல்லும் போது, அவன் மெலிதாகச் சிரித்தபடி தொடர்ந்தான், “இன்று அதிகாலையே எழுந்து விட்டேன். அம்மாவும் தங்கையும் தூங்கிக் கொண்டிருந்தனர். உணர்ச்சிகளின் பெருங்குழப்பத்திலேயே முழிப்பு வந்தது. எப்போதும் பூட்டியிருக்கும் உடை அலமாரி திறந்து கிடந்தது. மெதுவாக சென்று அம்மாவின் உள்ளாடையையும், ஜாக்கெட்டையும் எடுத்து வந்து போட்டுப் பார்த்தேன். நளினத்தில் கொஞ்சம் நிம்மதி கலந்து வந்தது. பிறகு பாவடையையும், சேலையையும் சத்தமில்லாமல் எடுத்து வந்து கட்டிக் கொண்டிருந்தேன். பாவாடையைக் கட்டி விட்டு சேலையைச் சுற்றிக்கொண்டிருந்த போது பின் தலையில் மொத்தமாக பெரிய அடி ஒன்று விழுந்தது. நிலைதடுமாறி கீழே விழுந்த போது அம்மா பின்னால் நிற்பதைப் பார்த்தேன். நான் போட்டிருந்த அவளது உடைகளை வலுக்கட்டாயமாக உருவப்பார்த்தாள், நான் அவளது கையைக் கடித்து விட்டு எழுந்து கைலியைச் சுற்றிக் கொண்டேன். வாயைக் கைகளால் பொத்தியவாறு பார்த்துக் கொண்டிருந்த தங்கை அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள். அம்மா பெரிய கம்பொன்றை எடுத்து வந்து அவளால் முடிந்த மட்டும் என்னை அடித்தாள். எனது இருப்பை மிகப் பெரிய பாவமாகச் சொன்னாள். நான் அவமானத்தால் சுருண்டு கிடந்தேன். எனது இருப்பிற்கான வலியை அவர்கள் உணரவில்லை, எனது இல்லாமையில் அதை அவர்களுக்கு உணர வைப்பேன்”

அவனது இதயத்தின் ஓட்டம் சீரற்ற வேகத்தின் தன்மையிலிருந்தது. பெரிதாகக் கூக்குரலிட்டு அழத்துவங்கியவுடன் சற்று நிதானமற்ற தொனியில் சரிந்து பெட்டியிலிருந்து ஒரு நொடியில் விலகினான். எச்சரிக்கையாகவே இருந்த அவர் தனது இடது கையால் அவனை இழுத்துப்பார்த்தார். துண்டாக்கப்பட்ட வலது கையால் கம்பியை பிடிக்க முடியாமல் போகவே வலுவில்லாமல் அவனுடனே அவரும் விரைந்து கொண்டிருந்த இரயிலிருந்து வீழ்ந்தார். பயணிகளிடமிருந்து பெரிய கூச்சலும் குழப்பமும் எழவே ஒருவன் சங்கிலியை இழுத்தான்.

கம்பிகளில் மோதி, உணர்ச்சிகளால் நிரம்பியிருந்த அவனது தலை தெறித்துக் கிடந்தது. ஒவ்வொரு சில்லிலும் அன்பிற்காக ஏங்கிக்கொண்டிருந்த துயரத்தின் வடிவம் சிவப்பு நிறத்தில் படர்ந்திருந்தது. பார்வையற்றவனின் உடல் கொஞ்ச தூரம் வரை இழுத்துச் சென்று சரிந்து கிடந்தது. பேரதிர்ச்சியிலும் அச்சத்திலும் விட்டு விட்டு வரும் நடுக்கமொன்று அவனுடலில் கடைசியாகச் சில நொடிகள் இருந்து மறைந்தது. பெரும் கூட்டத்தில், கணவனது பெயரைக் கத்தியபடியே, சற்றே மயக்க நிலையில் உடல்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள் அவரது பார்வையற்ற மனைவி.

‘பூவண்ணா..பூவண்ணா..’ என்ற அழைப்பிற்குப் பதிலேதுமில்லாது சூழ்ந்திருந்த வெறுமையில், யாரையோ அணைத்துக் கொள்ள விரிப்பதைப் போலக் கைகளை விரித்து பெருங்குரலில் ஓலமிட்டு அழத்தொடங்கினாள். மேகக்கூட்டங்களில்லாது மாலையில் விரிந்திருந்த நீலவானம் முழுவதுமாக அவள் மீது படிந்துகொண்டிருந்தது.

V
இன்றும், சலனமற்ற இரவின் மையப்பகுதிகளில், அந்த இருப்புப்பாதைகளின் ஓரங்களில் சற்று சரிந்தவாறு தங்களதுடல்களைக் கிடத்தி, கால்களை நீட்டியபடி உட்கார்ந்து கொண்டு அவர்களின் தீர்ந்திடாதப் பெரும் வாழ்வின் முடிவற்ற கதைகளைப் பேசிக்கொண்டிருக்கும் பழுப்பு நிறத்தின் புகை படிந்த சாயல்களை நீங்கள் பார்க்க முடியும். அடர் அன்பினாலும் அதன் சாம்பலினாலும் உருவாகி வந்திருக்கும் அடர் நிறப்பழுப்பு அது.

ஜீவன் பென்னி

ஜீவன் பென்னி, தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர். சிற்றிதழ்கள், இணையை இதழ்களில் கவிதைகள் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.