/

அகழ் : நூல் அறிமுகங்கள்

காச்சர் கோச்சர் – விவேக் ஷான்பாக்

ஆங்கில மொழியாக்கம் வழியே உலகளவில் கவனம் பெற்ற விவேன் ஷான்பாக்கின், கன்னட குறுநாவலான காச்சர் கோச்சர், 2017ம் வருடம் கே.நல்லதம்பியால் தமிழில், யாளி திட்டத்தின் நல்கையோடு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் பரவலாக பாராட்டப்பட்ட நூல் இது.

காச்சர் கோச்சர் ஒரு குடும்பத்தின் கதை. ஒரு கீழ் நடுத்தர வர்க்க குடும்பம் குறுகிய காலத்தில், நேர்மையான வழியிலும் நேர்மையில்லாமலும்  பண வசதிபெறுகிறது; ஒரு சிக்கலான இயக்கத்துக்குள் பொருந்துகிறது. உள்ளுக்குள்ளேயே நொதிக்கிறது. கன்னட செவ்வியல் ஆக்கமான “ஒரு குடும்பம் சிதைகிறது” எனும் தலைப்பின் எதிரொலி போல இருக்கிறது, காச்சர் கோச்சர்.

காச்சர் கோச்சர் என்பது அர்த்தமில்லாத ஒரு சொற்றொடர். “கன்னா பின்னா” என்றோ அல்லது “கச்சா முச்சா” என்றோ நாம் பேச்சுவழக்கில் சொல்வது போல. இடியாப்பச் சிக்கல் என பொருள் கொள்ளலாம். ஒரு குடும்பம் இடியாப்பச் சிக்கலாகும் கதை.

குடும்பத்தின் வேர்கள் ஒரே நேரத்தில் உயிரியலிலும் கலாச்சாரத்திலும் கலந்திருக்கின்றன. உயிரினங்களிலேயே மனிதன் தான் மிக நீளமான குழந்தை பருவம் உடையவன். குடும்பம் எனும் அமைப்பின் பாதுகாப்பில்லாமல் பரிணாமத்தில் நாம் இவ்வளவு தூரம் வளந்திருக்க முடியாது. உயரிய மதிப்பீடுகளும் குடும்பத்தில் உற்பத்தியாகின்றன. சுரண்டலும் அங்கேதான் கற்பிக்கப்படுகிறது. மகளுக்குக்கெனவே ஒரு அப்பா பசியையும் அவமானத்தையும் ஏற்றுக் கொள்கிறார். இன்னொரு அப்பா மகளையே ஆணவக் கொலை செய்கிறார்.

குடும்பத்தை பிணைக்கும் அறுக்க முடியாத முடிச்சுகள் மீதே, காச்சர் கோச்சர் கவனம் கொண்டிருக்கிறது. “சோனா மசாலா” குடும்பத்தில் ஒருவரையொருவர் வதைத்தபடியே இருக்கிறார்கள். “வானத்தில் தோட்டாவை சுட்டு போருக்கு அழைப்பு விடுக்கும்” சூழல்தான் குடும்பத்தில் நிலவுகிறது. எனினும் அது இயங்குகிறது. அந்த இயக்கத்துக்கு பாதிப்பு வரும்போது ஒருவரை பலி கொடுக்கவும் துணிகிறது.

இக்குறுநாவல் கச்சிதமான வடிவில் இருக்கிறது. அவல நகைச்சுவை மிகுந்த மினிமலிச நடை. செறிவான உருவகங்கள். துல்லியமான அவதானிப்புகள். குறைவான கதாபாத்திரங்களே இடம்பெற்றுள்ளார்கள்.  அசோகமித்திரனை பலவிதங்களிலும் நினைவூட்டுகிறது. மாலதி போல கதாபாத்திரத்தின் பெயர்களில்கூட நெருங்கிய ஒற்றுமை. “மணல்” குறுநாவல் காச்சர் கோச்சருக்கு ரொம்ப பக்கத்தில் வரக்கூடியது. குடும்பத்தில் ஒவ்வொருவரும் தனித்தனியே இருப்பதை -மணற் துகள்கள் போல- அசோகமித்திரன் விவரிக்கிறார். விவேக் ஷான்பேக் இன்னொரு நிலையை எழுதுகிறார். ஒவ்வொன்றும் ஒட்டிக் கொண்ட இடியாப்பச் சிக்கல். காச்சர் கோச்சர்.

அசோகமித்திரனின் உலகில் பொதுவாக காணக்கூடிய பொறுமை ஷான்பேக்கின் மனிதர்களிடம் இல்லை. செல்வமே, நிதானத்தை அழிக்கிறது. சோனா மசாலா குடும்பத்திடம் இவ்வளவு செல்வம் சேராமல் இருந்திருந்தால் கதைசொல்லி இலக்கற்ற சோம்பேறியாகி இருக்க மாட்டான். அவன் சகோதரி மாலதி, கணவனை பிரிந்துவந்திருக்க மாட்டாள். எனில் அசோகமித்திரனுடைய மனிதர்கள் செல்வந்தர்களானால் என்னவாகும் எனும் கேள்வியே இந்நூலில் பரிசீலிக்கப்பட்ட மாதிரி இருக்கிறது.

குடும்பம், செல்வம் இவ்விரண்டு விசைகளுமே தவிர்க்கமுடியாதவை. இரண்டுமே பல நேரங்களில் அநீதிக்கு கண்ணை மூடிக் கொள்பவை. கதைசொல்லியின் சித்தப்பாவான வெங்கடாசலமே தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவி வழி நடத்துபவர். அதனாலேயே மொத்த குடும்பமும் அவருடைய எல்லா தீமைகளையும் காண மறுக்கிறது. அவரை வழிபடுகிறது. நம் பெரும்பான்மை சமூகம் ஒரு அடிப்படைவாதத் தலைவரை வழிபடுவதைப் போல.

பழங்குடி அம்சமான தற்காப்புணர்வே குடும்பத்திலும் ஜாதியிலும் மதத்திலும் இருக்கிறது. ஏழ்மைக் காலத்தில் கதைசொல்லியின் அம்மா தன் சிறிய வீட்டை எறும்புகளிடமிருந்து காப்பாற்ற போராடுகிறாள். அந்த எறும்புகளை கொல்வதில் அவள் கைக்கொள்ளும் மூர்க்கமே பின்னாட்களில் குடும்பத்தை இணைத்திருப்பதிலும் வெளிப்படுகிறது. எறும்புகளின் ஆக்கிரமிப்பை மருளச் செய்கிற ஒரு போர்க்காட்சி போல ஷான்பேக் எழுதியிருக்கிறார்.  

விமர்சகர்கள் பலரும் இதை செக்காவிய ஆக்கம் என்று வகுக்கிறார்கள். செகாவ் சிறுகதை மேதை. ஆனால் நாவலாசிரியர் அல்ல. காச்சர் கோச்சரையும் நாவல் என்று சொல்ல முடியாது. இறுதி அத்தியாயங்களில் திடுக்கிடச் செய்யும் மர்மக் கதையாக நூல் மாறுகிறது. விவேக் ஷான்பாக் “தேஷ் கலா” எனும் இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்திருக்கிறார். இந்நூலையும் தேர்ந்த எடிட்டர் என வடித்திருக்கிறார். ஸ்ரீநாத் பெரூரின் ஆங்கில மொழியாக்கத்திலும் ஷான்பேக்கின் நேரடி பங்களிப்பிருப்பதாக சொல்கிறார்கள். அதனாலேயே உலக அரங்கில் அது தன் இடத்தை எளிதில் அடைந்தது. ஒரு எழுத்தாளருக்கு எடிட்டிங் திறன் எவ்வளவு பெரிய பலம் என்பதை உணர்வதற்கு இந்நூல் ஒரு சான்று.  எல்லா தேர்ச்சிகளை நேரடியாக உணரும்படிக்கு மொழிபெயர்ப்பும் சிறப்பாய் அமைந்திருக்கிறது.

காச்சர் கோச்சர் மொழியிலும் வெளிப்பாட்டிலும் நவீனமான ஓர் ஆக்கம். அதே நேரம் அசலான ஓர் இந்திய நூல். சமகால வாழ்க்கை அனுபவங்களை ஒரு புனைவாசிரியன் திறம்பட எழுதுவதற்கான ஒரு நல்ல மாதிரி என்றே இந்நூலை குறிப்பிடலாம். அந்த கோணத்தில் தமிழ் சூழலில் இது முக்கியமாய் பேசப்பட வேண்டும்.

காலச்சுவடு வெளியீடு

விஷால் ராஜா
“திருவருட்செல்வி” நூல் ஆசிரியர்

000

நீலகேசி – சிவசங்கர் எஸ்.ஜே

சமீபத்தில் ஒரு கான்வாசில் வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தபோது, சில அடுக்குகள் பச்சையும் பொன்னும் மாற்றி மாற்றி தீட்டினேன். எதேச்சையாக அதில் பட்டின் சாயல் வந்துவிட்டது. உடனே ஏதோ ஒரு மாயாஜாலத்தை உருவாக்கிய உணர்வெழுந்தது. அதை தொட்டுப் பார்க்கத் தோன்றியது. சில நாட்கள்  கழித்து சுப்திகா எம்மின் “அலைகளால்” என்ற புகைப்படக் கண்காட்சியில் பார்த்த மஞ்சள் பொன்னிற புடவையொன்றின் படம் அதே உணர்வை ஏற்படுத்தியது. நீலகேசியை சிவசங்கர் எஸ்.ஜே. பட்டு நீலத்தின் விவரணையோடு தொடங்குகிறார்.

பொன் நீலத்திலிருந்து ‘எனிக்கொரு சரித்ரம் இல்லடா பொன்னுமோனே’ என்ற குரலுடைய கனவாக நீலகேசி தொடங்குகிறது. கொடைவிழா சம்பவங்கள் ஒரு ஆய்வாளனின் ஆவணப்படுத்தலாகவும், அந்த ஆவணப்படுத்தலே கதையாகவும் தொடர்ந்து விரிகிறது. ஒரு சிறுமழையாக, முதல் கனவிற்கு சில பதில்களை சொல்லும் உரையோடு முடிகிறது. சாதிக் கொலையொன்றில் பல கதைவடிவங்களை பதிவுசெய்யும் நீலகேசி, சிவசங்கர் தன் பின்னுரையில் சொல்வது போல சாதிக்கான நிவாரணமான இணக்கத்தை முன்வைக்கிறது. 

எனக்கு இச்சமயத்தில் நீலகேசியில் பட்டு நீலமே மிக அணுக்கமாகப் படுகிறது. சமீபமாக உண்மையை எழுதுதல் என்ற கருத்தாக்கம் குறித்து நிறையவே யோசிக்கத் தோன்றியிருக்கிறது. நேரடியாக உலகை நம் பார்வையிலிருந்து, நம் பார்வையின் எல்லா கோளாறுகளுடனும், அப்பட்டமாக சித்தரிப்பதில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. ஆனால் அந்தக் கவர்ச்சி சீக்கிரமே மங்கிவிடுகிறது. நாம் உலகை பல பார்வைகளில் இருந்தே பார்க்கிறோம். காதல் நமக்கு இன்னொரு ஜோடிக் கண்களை வழங்குவதாலேயே அற்புதம் நிறைந்ததாக இருக்கிறது. அந்த மகிழ்ச்சியின் முன் இந்த ஒற்றைப்படை உண்மை அவ்வளவு மின்னுவதில்லை.

நீலகேசியில் இந்த அற்புதமே நிகழ்ந்திருக்கிறது. நமது பார்வையின்  எல்லைகளுக்கு மேல் ஒரு நிகழ்வைக் காண  முடிகிற அற்புதம். பல கதைகளால் நெய்யப்பட்ட, பட்டு நீலத்தின் ஒளி. அறிதல் என சொல்லப்படும் அனுபவம் எந்த ஒரு அளவிலும் நமக்கு வாய்க்கும்போது நிகழும் மகிழ்ச்சி அதுவே. நீலகேசியின் இறுதிப் பகுதியை வாசிக்கும்போது சில எதிர்கருத்துகள், கேள்விகள் மனதில் தோன்றியபடி இருந்தாலும், அதில் தொனிக்கும் அறிதலின் அல்லது இணக்கத்தின் மகிழ்ச்சி மனம் நிறையச் செய்வது.

சமகாலம்-வரலாறு-நினைவு இவற்றை ஒன்றின் வழி இன்னொன்றைப் பார்த்தறியும் ஒரு கதவாக நீலகேசி இருக்கிறது. ஆய்வுப் புனைவென அமைந்திருக்கிற இதில் கதைகள் மெய்யாகவும், கதை சொல்கிற கேட்கிற நிகழ்வுகள் கதையாகவும் அமைந்திருப்பதால், நம்மில் உருவாகும் உணர்வுகளும் மெய்-புனைவு என்ற இரு நிலைகளை தொடர்ந்து யோசிக்கச் செய்கின்றன. இது வழியாக நாம், நமது, பிறர் என இயல்பாகப் புழங்கும் விசயங்களை யோசிக்க இட்டுச் செல்கிறது.

நீலகேசியின் வடிவத்தை, ஓவியர் செசான் செயிண்ட் விக்டோர் மலையை வரைந்த ஓவியங்களோடு ஒப்பிடலாம். நமக்கும் ஓவியத்துக்கும், நமக்கும் வண்ணங்களுக்கும், நம் உணர்வுகள் வழி நாம் அறிவதற்கும் – அவற்றைக் காட்சிப்படுத்துவதற்குமான உறவை சில வகைகளில் மீள் வரையறை செய்தவர் என்று செசானை சொல்லலாம். செசான் அந்த மலைகளின் உண்மையை வரைய முயன்றார் என்று யோசித்தால், அது அவற்றை அப்படியே புகைப்படம் போல பிரதியெடுப்பதாக இருக்கவில்லை. நாம் காணும்-அறியும் விசயங்களை பல வழிகளில் காட்சிப் படுத்தலாம் – நேரடியாக; அதைச் சுற்றி இருப்பவற்றைப் பேசுவதன் வழியாக; அதை நாம் அறிந்த வடிவங்களிலும் தர்க்கங்களிலும் பொருத்தி விவரிப்பது வழியாக. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் இடையில் உண்மையை விவரிப்பதற்கான ஏக்கம் நமக்குள் நிறைந்திருக்கிறது. அது நாம் மட்டுமே அறிந்த உண்மையாகவோ நம்மால் அறியவே முடியாத உண்மையாகவோ இருக்கலாம்.

செசான் கிட்டத்தட்ட இருபதாண்டுகள் காலத்தில் இதையே முயற்சித்தார். ஒளியைத் தீட்டுவதன் வழி, தூரிகையை முடிந்தவரை லேசாகப் பயன்படுத்துவதன் வழி, செசான் மீண்டும் மீண்டும் மவுண்ட் செயிண்ட் விக்டோரில் எதை வரைய முயன்றார்? அதை வெறும் உண்மை என்று சொல்லிவிட முடியுமா? மலையை மலை பற்றிய நம் அறிதலுக்கு வெளியே எப்படி பார்ப்பது? பாறையை வெறும் பாறையாக – சிசிஃபஸோ அல்லது சார்த்தரின் இருத்தலியல்வாதமோ இல்லாமல்- எப்படி பார்ப்பது? அடையாளமில்லாத இடத்தில் ஒவ்வொன்றையும் எப்படி சந்திப்பது?

அடையாளம் என்ற வார்த்தை தனிப்பட்ட, சமூக எனும் இரு நிலைகளிலும் கனத்த அர்த்தங்கள் கொண்டதாய் மாறியிருக்கிறது. உண்மை, அடையாளம் போன்றவை தொடர்புடையவை என நாம் கண்டறிந்திருக்கிறோம். நீலகேசியின் ஆய்வு இதைக் குறித்த செறிவான பார்வையை வழங்குகிறது.கதைசொல்லியை ஆய்வாளனாக, கதாபாத்திரமாக, அமைதியாக கதை சேகரிப்பவனாக பல பார்வைகளில் அறியத் தருவதன் வழியாக சிவசங்கர் நமக்கு ஒரு முழுமையான அனுபவத்தை வழங்குகிறார். அறிதல் தரும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்கும் ஒன்றாக அந்த அனுபவம் இருக்கிறது.

நீலம் வெளியீடு

எல்.ஜே.வயலட்
“ஊதா ஸ்கர்ட் கதைகள்” நூல் ஆசிரியர்

000

ராம மந்திரம் – வைரவன் லெ. ரா.

சமகால தமிழ் படைப்பாளிகளில் நம்பிக்கை அளிக்கும் படைப்பாளிகளில் ஒருவரான வைரவனின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு “ராம மந்திரம்”. முதல் தொகுப்பான பட்டர்-பி தொகுப்பில்  கலாச்சார செறிவு கொண்ட குமரி வட்டார மொழியின் வாயிலாக கதை பரப்பை கட்டமைத்தார். “ராம மந்திரம்” தொகுப்பில் தன் நிலத்தின் செல்வாக்கிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மாறுபட்ட கதைக்களங்களை எழுதியுள்ளார்  பட்டர்-பி தொகுப்பில் ஆச்சிகளின் கதைகள் நிறைந்திருந்தன, ராம மந்திரம் தொகுப்பில் அனுபவ கதைகளும், விவிலியத்தின் தாக்கம் கொண்ட கதைகளும் முதன்மையாய் உள்ளன.

பன்னிரண்டு சிறுகதைகள் கொண்ட இந்த தொகுப்பில் உள்ள கதைகள் இருத்தலியல் கேள்விகளை விவிலிய பெயர்களை கொண்டும், விவிலிய விழுமியங்களை கொண்டும் அணுக முற்படுகின்றது. இந்த தொகுப்பில் உள்ள கதைகளில் தன் மகனின் நோய் தீர்க்க அவதிப்படும் ஒரு தாய்,  தன் தொழிலுக்காக ஊமையாய் நடிக்கும் பாலியல் தொழிலாளி, தன்னை தீயிற்கு இரையாக்கி அவதியுறும் பெண் என மூன்று வெவ்வேறு பாத்திரங்களுக்கு மேரி என்ற பெயர் உள்ளது, தவிர விவிலிய தத்துவ அம்சம்  எதுவும் இந்த கதைகளில் வெளிப்படவில்லை. இருந்தும் லூக்கா 5:8 என்ற கதை என்னை மிகவும் ஈர்த்தது. ஆந்தையன் என்ற ஐ விட்னஸ் தொழில் செய்யும் ஒருவனை பற்றிய கதை. அவனின் செயல்கள் அவனை ஒரு தருணத்தில் ஆசிர்வதிக்க பட்டவனாகவும், ஒரு தருணத்தில் பாவியாகவும் உணர செய்கின்றன. ஒளிக்கும் , இருளுக்கும் இடையில் மாட்டி கொண்டவனை இறுதியில் ஆட்கொண்டது தேவனா, சாத்தான என்பது கதையின் இறுதியில் போதிக்கப்படுகின்றது . கதை மாந்தரின் உளதத்தளிப்புகளை சீராய் பதிவு செய்ததன் வழியாக இந்த கதைகள் குறிப்பிடப்பட வேண்டிய இடத்தை அடைகின்றது.

இந்த தொகுப்பில் உள்ள தேர்ப்பாடை  என்ற கதை இசக்கியம்மை ஆச்சியை பற்றியது. மகன்களால் கைவிடப்படும் ஆச்சி பேரனின் உற்ற தோழி ஆகிறாள், பேரனனிடம் ஒரு உரையாடலில் தன்னை தேர்ப்பாடை அமைத்து, சில குறிப்பிட்ட ஒப்பனைகள் செய்து இறுதி சடங்கை செய்யுமாறு கோரிக்கை வைக்கிறாள். அவள் மரணித்தபின் பேரன் அதை செய்தானா இல்லையா என்பது மீதிக்கதை.

இந்த தொகுப்பில் உள்ள  “கருளிடை பொழி மருது” குற்ற பின்னணியை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை, அந்த கதையின் வடிவம் இவரின் மற்ற கதைகளை விட வித்தியாசமானது, ஒரு மனிதனுடைய கடந்த காலத்தின் கதையையும், நிகழ் காலத்தின் கதையையும் ஒரே கதையில் சொல்ல பட்டுள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால் கதை ஆரம்பமாவது கடந்த காலத்தில், அடுத்த பத்தி நிகழ் காலத்தின் கதை பேசுகின்றது, இவ்வாறு கடந்த காலமும், நிகழ் காலமும் ஒவ்வொரு பத்தியில் மாறி மாறி சொல்ல பட்டு கொண்டே வருகின்றது, வருங்காலத்திற்கான எதிர்பார்புகளுடன் கதை நிகழ் காலத்தில் முடிவடைகிறது. கடந்த காலத்தின் கதை, கதைசொல்லி ஏன் குற்றவாளி ஆனான் என்பதை விளக்குகின்றது, நிகழ்காலத்தின் கதை அவன் தூயோனாக மாற்றம் பெறுவதை சித்தரிக்கின்றது.

இந்த கதையை வாசித்து முடிக்கையில் புகைப்பட நெகடிவ் சுருள்களை உருவாகும் இருட்டு அறையில் நுழைந்ததை போன்ற அனுபவத்தை தந்தது. காரணம் ஒவ்வொரு பத்தியில் உள்ள கதையும் ஒரு புகைப்படத்தில் அடைக்கும் அளவிற்கான காட்சிகளை மட்டும் கொண்டுள்ளது. கடந்த காலத்தின் காட்சியும் நிகழ்காலத்தின் கட்சியும் இணையும் ஒரு புள்ளி இந்த கதையில் உள்ளது. சிறுகதையில் நிகழ்ந்த ஒரு நல்ல முயற்சி என்றே இந்த கதை எண்ணுகின்றேன்.

இன்றைய சூழலில் இயங்கும் எழுத்தாளர்களின் அகசிந்தனையில் காட்சி ஊடகத்தின் பாதிப்பு அதிகம் உள்ளது. இதனால் அவர்களின் புனைவு மொழியும், புனைவு சித்தரிப்புகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வைரவன் அத்தகைய அலையில் சிக்கவில்லை என்பதை இவரின் படைப்புகள் தீர்க்கமாய் உரைக்கின்றன.

யாவரும் வெளியீடு

இளம்பரிதி
கட்டுரையாசிரியர்

உரையாடலுக்கு

Your email address will not be published.