அன்பைப் போல் அழகு
யுத்தத்தைப் போல் பயங்கரம்
உனக்கு நிகழும் எல்லாவற்றையும் அனுமதி
சும்மா போய்க்கொண்டே இரு
இங்கே எந்த உணர்வும் இறுதியானதல்ல.
- ரில்கே
1.
தூய்மையற்ற பொதுக்கழிப்பறைகளுக்கு அருகிலிருக்கும் கடைகளின் அழுக்கடைந்த ஓரங்களில் இரவுகளில் படுத்துக்கொள்வதற்கு இப்பொழுது நன்கு பழகியிருந்தேன். எனது அறைக்குத் திரும்பிச் செல்லும் வழிகளின் ரேகைகளைக் கொஞ்சம் மறந்து எனது இருப்பிடத்தைச் சிலநாட்களாக இங்கேயே மாற்றிக்கொண்டிருந்தேன். தினசரியின் மீதான பயமும், வெறுப்பும், சிலரின் மீதான கோபங்களும் வெகுவாகக் குறைந்து போயிருந்தன. வாழ்வை அதன் போக்கில் நகர்த்திச் செல்வதற்கு ஒரு பிடிப்பும் ஆர்வமும் சில துளிகள் கூடுதலாகியிருந்தன. ஒவ்வொரு விசயத்திற்காகவும் – அதற்கான காரணங்களையும் முறைகளையும் எதிர்பார்க்காமல், வெறுமனே எந்த ஒரு முன்னொழுங்குமில்லாமல் ஒவ்வொரு நாளையும் துவங்குவதற்குப் பிடித்திருக்கிறது. சிறிய ஆறுதலைக் கூட நம்புவதற்கு விருப்பமில்லாமல் ஆகிவிட்ட மனதின் மாற்றத்தை, வெறுமனே கடலை வெறித்துக்கொண்டிருக்கும் சுவாரசியம் நிறைந்ததாக மாற்றிக்கொண்டேன். அதனால் மனிதன், சகமனிதனுக்கு உபயோகப்படாமலிருப்பதன் வலியையும் கொஞ்சம் அனுபவித்திருந்தேன். எதிர்கொண்டு என்னை நெருங்கி வந்திருக்கும் மனிதர்களின் மனங்களை வலுவில்லாமல் முடிந்தவரை இழுத்துத்திரிகிறேன். உயிருடன் நானலைந்து கொண்டிருப்பதற்கு எந்தச் சிறிய காரணமும் என்னிடமில்லை. எனது அம்மாவின் மடியில் சுருள்சுருளான தலைமுடியுடன் குழந்தையாக நான் அமர்ந்திருக்கும் பழைய புகைப்படத்தைத் தான் பார்க்கவேண்டும் என சதா தோன்றிக்கொண்டேயிருக்கிறது. இப்போது அந்தப் புகைப்படம் எங்கிருக்கிறது..? நான் நடந்து கொண்டிருக்கும் இந்த நெடும் பாதைகள் எங்கோ ஓரிடத்தில் முடிவடையக்கூடியவை தானே! ஒவ்வொரு நாளும், முழுவதும் இருட்டுவதற்கு முன்பே பனி படர்ந்திடும் இந்த நகரில் தூங்கிப்போகிறேன். தூக்கம் தான் இப்போதைக்கான எனது ஒரே ஆசுவாசம். கனவுகளில், ஒரு ஆரஞ்சுத்தோட்டத்தின் இலையுதிர்வுகளுக்கு நடுவில் முகம் புதைத்துக் கிடக்கிறேன். அமைதியின் சலனத்தில் சில விரல்கள் எனது உடலெங்கும் வருடியபடி நகர்கின்றன. ஒரு ஆழத்தில் தேங்கிக்கிடக்கும் என் உணர்ச்சிகளின் நினைவுகளை அவை தான் மீட்டெடுத்துக் காண்பிக்கின்றன. வெகுநேரம் தூங்கிவிட்ட சோம்பலும் அசதியும் என் கண்களிலும் முகத்திலும் எப்போதும் பரவிக்கிடக்கின்றன. மேகக்கூட்டங்களினூடான பகல்நேர நீலவானைப் பார்க்கின்ற போது சுருக்கங்களினூடான என் முகம் வெளிறிக்கிடக்கிறது. அருகில் படுத்துறங்கும் சகமனிதனிடம் ‘இந்த நாள் துவங்கிவிட்டதா..?’ எனக் கேட்பதற்கு கொஞ்சம் சங்கடமாகத் தானிருக்கிறது. ‘உண்மையில் இந்த நாள் துவங்கிவிட்டதா….?’
எனக்கானத் தடித்த படுக்கை அட்டையை மிகக்கவனமாக மடித்து அதற்கான இரகசிய இடத்தில் வைத்து விட்டேன். தூய்மையற்ற இந்தப் பொதுக்கழிப்பிடத்தின் கழிவறைகளின் உட்சுவர்களில் எழுதப்பட்டிருந்த எனது அலைபேசி இலக்கங்கள் சில இடங்களில் தெளிவாகவும், சில இடங்களில் தெளிவற்றும் இருக்கின்றன. முதல் வேலையாகத் தெளிவற்ற எண்களை மீண்டும் தெளிவாக எழுதி முடித்தேன். பதியப்படும் எண்கள் ஏதோவொரு விதத்தில் ஏதேனும் ஒரு இணைப்பைக் கொண்டு வருகின்றன. பிரிவிலிருக்கும் ஓருறவை மீண்டும் அழைத்து வரும் நம்பிக்கையை உள்ளடக்கியவை. நகரத்தில் அலைபேசி எண்கள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு தொடர்புக்குள்ளும் ஒரு எண் தீர்க்கமாக இருக்கின்றது. ஒவ்வொரு குற்றத்திற்குப் பின்பாகவும் ஒரு எண் ஒளிந்து கொண்டு வழி நடத்துகிறது. இந்தப் பெருநகரின் உன்னதமான சுகந்தத்தை அனுபவிப்பதற்கு சில தொடர்புகள் அவசியமாகவுமிருக்கின்றன. சில உறவுகளின் இரகசியங்களும் , அதன் நெருக்கங்களும், சந்தோசங்களும், வலிகளும், கண்ணீரும் அலைபேசியின் கதிரலைகளாக இந்தப் பெருநகரம் முழுவதுமாக விரிந்து கிடக்கின்றன.
நீண்ட வெய்யில் காலத்திற்குப் பிறகான இந்தப் பனிக்காலத்தின் காலை வெய்யிலில் முகத்தைக் காட்டியவாறு கடற்கரையின் சிமெண்ட் பென்சில் அமர்ந்தபடி, தார்சாலையில் நகர்ந்து கொண்டிருக்கும் பெரும் மனிதக்கூட்டங்களையும், வாகன வரிசைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நகரை வேடிக்கை பார்ப்பது ஒருவிதத்தில் அதை உளவு பார்ப்பது போலானது தான். எனக்குப் பின்னால் குப்பைகள் படர்ந்திருக்கும் கடற்கரை மணலும் தூரத்தில் விரிந்து கிடக்கும் அலையடிக்கும் நீலக்கடலும் அமைதியில் உறைந்து கிடக்கின்றன. முன்பெல்லாம் வார இறுதி நாட்களில் மட்டும் தான் கடற்கரையில் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது நிலைமை கொஞ்சம் மாறிவிட்டது. எல்லா நாளும் கடற்கரையில் தான் உட்கார்ந்திருக்கிறேன். ஒவ்வொரு அலையையும் பிடித்துப் பிடித்துத் திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கிறேன். துயரத்தின் வலிகள் தாங்கக்கூடியதாக மாறிப்போயிருந்தன. சிறிய பொருளொன்றையும், போலியில்லாத சில வார்த்தைகளையும், அக்கறைகளையும், துரோகத்தின் ஒரு முடிச்சையும் ஞாபகங்களாகக் கொண்டிருப்பதைத் தவிர எனது இந்த வாழ்க்கைக்கு என்ன தெரியும். முடிவில் இங்கு எல்லாமே சிறு ஞாபங்கள் மட்டும் தானா…? பிரிவில் தோன்றியிருந்த கணக்கற்ற வடுக்களை ஆதரவாகத் தடவிக்கொள்கிறேன். நீர்நிறைந்திட்ட என் கண்களின் சிறிய அசைவில் இந்த மாநகரை ஒரு முறை ஆட்டிப் பார்த்தேன். அது சிறிது நடுங்கித் திரும்பியது. நான் உலகத்தைக் கைவிட முடிவெடுத்து கண்களை இறுக மூடிக்கொண்டேன். அது எனக்கு ஒரு எளிய வழி. அடரிருள் எனக்குள் ஊடுருவி கரைந்து போகத்துவங்கியது, அதனுள் என்னுலகம் சிறிய அடர்த்தியற்ற ஒரு ஒளிப்பந்தைப்போல அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. அதிலிருந்து எழும்பிய ஒரு சன்னமான ஒலி என்னை எனது அறைக்கு வழிநடத்தி அழைத்துச் சென்றது.
2.
எப்போதும் போல் ஒரு பத்திலக்க எண் தான் சந்துருவை எண்ணிடம் அழைத்து வந்தது. நெருடலான குரல், சற்று பயம் கலந்திருந்த தொனி கூடவே பதற்றத்தில் தொடர்ச்சியற்ற வார்த்தைகளில் அவன் பேசிக்கொண்டிருந்தான். நான் இன்னொரு வாடிக்கையாளரோடு கைகளை இறுகப்பற்றிக்கொண்டு வெடிப்புகள் நிறைந்த என் பாதத்தைக் கொண்டு அவனது மயிர்களடர்ந்த கால்களை உரசியபடி மீனம்பாக்கம் இரயில்வே நடைமேடையின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தேன். கூட்டமற்ற அந்த இரயில் நிலையம் எப்போதும் எனக்கானச் சில வாடிக்கையாளர்களின் சந்திப்பிற்கான தேர்வான இடமாக மாறியிருந்தது. எதிர்புறமாக நீண்டு கிடக்கும் மலைப்பகுதிகளின் சில மறைவான இடங்கள் எங்களுக்கான எளிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்குப் போதுமானதாகவேயிருந்தது. சந்துருவின் மெல்லிய குரலை, மீண்டும் அவன் அழைத்த போது பிசிறின்றி கேட்க முடிந்தது. பெரும் ஏக்கத்தில் நிறைந்து கிடந்தது அக்குரல். அவனது தேவைகளுக்கான விசாரிப்பாகவும், எனது எண் உண்மையானது தானா? என அறிந்துகொள்வதற்குமானதான அழைப்பாக அது இருந்தாலும். அவனது மென்குரலை எனக்குப் பிடித்திருந்தது. ஆணுக்குப் பிடிக்கும் ஆணின் வசீகரமான மென்குரல். என்னை விட வயதில் நிறைய்ய வேறுபாடு இருக்குமென்று அந்தக் குரல் தான் சொன்னது. அவனை ஆசுவாசப்படுத்தி, நான் செய்யும் சேவைகளை வரிசைப்படுத்தி எனது கிறக்கமான குரலில் சொன்னேன். மறுமுனையில் கேள்விகளில் சாதுர்யம் ஏதுமில்லாமல் இருந்தது. நான் அந்தக் குரலினூடான உணர்ச்சிகளின் வழியாக எனது தனிமையை அந்நொடியே உணரத்துவங்கியிருந்தேன். ஒரு மென் இறகு கொண்டு என் உடலை வருடிக்கொடுத்தது அது. தீவிரமாக அவனது குரலின் ஒரு முனையைப் பற்றிக்கொண்டு அதற்குப் பிறகான நாட்களில் சுற்றித் திரிந்தேன்.
மறு நாள் சந்துரு என்னைப் பார்க்க வந்த போது பவுடர் திட்டுக்களேதும் இல்லாதவாறு என் முகத்தை நன்கு அலங்கரித்துக்கொண்டேன். மலிவு விலையின் வாசனை திரவியத்தைச் சட்டையின் மூலைகளிலும், மேல் பட்டன் பின்புறத்திலும் தேய்த்துக்கொண்டேன். ஒரு விலையுயர்ந்த அழுக்கேதுமில்லாத சீப்பினால் – எனது பணக்கார வாடிக்கையாளர் கொடுத்தது – எனது சுருள் நிறைந்த முடிகளைச் சீவிக்கொண்டு எனது ஜீன்ஸின் பின்புற பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன். எங்களது அடையாளங்களைப் பகிர்ந்து கொண்டோம், இரயில் நிலைய நடைமேடையின் ஒரு முனையில் சந்துரு நிற்பது எனக்குத் தெரிந்தது. வயது இருபதுக்குள் இருக்கும் திரட்சியான உடல்வாகு, நெருக்கமான தலைமுடி, சிறிய பழுப்பற்ற கண்கள், எப்போதும் ஏக்கத்தில் தவிக்கும் அசதியான முகம். அவனது கண்கள் என்னைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டிருந்தன. சிறிய பயத்தின் நடுக்கமொன்று அவனது அசைவுகளில் அப்பட்டமாகத் தெரிந்தது. நான் மெலிதாக உதடுகளை விரித்துச் சிரித்துப் பார்த்தேன். அவனிடம் பதிலில்லை. என்னை நெருங்குவதற்கு அவனுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை. அவனது கண்களில் அசைவுகளில்லை. சிறிய கூட்டத்தின் நெருக்கங்களினூடாக எங்களின் அசைவற்ற அறிமுகம் நடந்து கொண்டிருந்தது. நான் கைகளை ஆட்டத்துவங்கியதும், அவன் பின்புறமாகத் திரும்பி நடக்க ஆரம்பித்தான். இரண்டு முறை மட்டும் மிக அவசரமாகத் திரும்பி என்னைப்பார்த்து விட்டுச் சென்றான்.
நான் அவனைத் திரும்பவும் அலைபேசியில் அழைக்கவில்லை. அவன் என்னிடம் எப்படியும் வந்து சேருவான் என்று எனக்குத் தெரியும். அவனது தனித்த உணர்ச்சிகள் நிரம்பிய உடலைக் கொண்டு முழுவதுமாக என்னைக் கட்டிக்கொள்வான், எனது நெருக்கம் அவனுக்கு தேவையானது தான் என்று அப்போது நான் தீர்க்கமாக நம்பினேன். அவனது வயதிலிருந்த என்னை ஒரு முறை மனக்கண்ணில் திரும்பப் பார்த்துக்கொண்டேன். மாநகர வாழ்வின் சிக்கல்களையும், சூட்சமங்களையும் நானும் கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தேன். அழுக்கில்லாத என் சீப்பை வைத்து ஒரு முறை தலையை வாரிக்கொண்டு, நறுக்கப்பட்ட எனது மீசையைச் சரிசெய்துகொண்டேன். படர்ந்திருந்த உணர்ச்சிக்குவியல்களுக்கு இடையில், சிறிய பாலிதீன் கவரில் சுற்றிய பூச்செடியொன்றை நேற்று வாங்கிவந்து எனது வீட்டின் மாடியின் கைப்பிடிச்சுவருக்கு அருகில் வைத்திருந்தது ஏனோ ஞாபகத்திற்கு வந்தது, அதற்கு இப்போது தண்ணீர் ஊற்ற வேண்டும் என்றும் தோன்றியது.
0
திரும்பவும் சந்துரு அலைபேசியில் என்னை அழைப்பதற்கு ஒரு வாரம் ஆனது. நான் தான் நிறைய்ய பேசிகொண்டிருந்தேன். மறுமுனையில் நீண்ட அமைதியே தொடர்ந்திருந்தது. அவனுக்கு, இது முற்றிலுமாகப் பரிட்சயம் இல்லாதது போலவே எனக்குத் தெரிந்தது. தன்னைச் சுற்றியிருக்கும் நல்லுலகம் இத்தகைய உறவை என்ன நினைக்கும் என்பதையே அவன் நினைத்துக்கொண்டிருக்கிறான் என்றே எனக்குப் பட்டது. நான் அவனை ஆசுவாசப்படுத்துவதற்கு, இந்தத் தன்பாலீன ஈர்ப்பு எவ்வளவு இயல்பானது எனக்கூறி அவனை சமாதானப் படுத்தப்பார்த்தேன். நான் யாரிடமும் இவ்வளவு பேசியதில்லை, அவசியமும் இருந்ததில்லை. ஆனால் சந்துருவின் குரலைப் பற்றிக்கொண்டு வந்த எனக்கு, அவனைப்பார்த்தவுடன் அவனது ஏக்கம் நிறைந்த உடலினுள்ளிருக்கும் ஒவ்வொரு வாசல்களையும் திறந்து அனுபவித்து, உணர்ச்சிகளின் உட்சத்தை நானே அவனுக்கு கொடுக்கவேண்டும் என நினைத்தே பேசிக்கொண்டிருந்தேன். அவனது மென்குரல் என்னை நம்வுவதற்கான ஒரு புள்ளியை அப்போது அடைந்திருந்ததாகவே எனக்குத் தோன்றியது.
சந்துரு என் அருகில் உட்கார்ந்திருந்தான். அவனிடமிருந்த அதிகமான பவுடரின் வாசனை எனக்குத் தனித்து தெரிந்தது. நான் வேர்க்கடலைப் பர்பியை அவனுக்குக் கொடுத்துவிட்டு, எனக்கான சதுரவடிவத்தின் முனையை கடித்து மெல்லத்துவங்கினேன். அவனது உள்ளங்கைகளுக்குள் எனது விரல்களை மெதுவாகத் திணித்து தடவி விட்டேன், அது வியர்த்துக் கிடந்தது.
“என்னிடம் நீ பயப்படுவதற்கு ஒன்றுமில்லை சந்துரு” அமைதியின் இறுக்கத்தை உடைத்து நான் சொன்னேன்.
“நான் பயப்படவில்லை, உனது அருகாமை கொஞ்சம் திகைப்பாகயிருக்கிறது. அவ்வளவு தான்…”
“ம்..ம்..” எனச் சொல்லியபடி,
நான் எனது சட்டையின் ஒரு முனையை கையிலெடுத்து அதில் தடவியிருந்த வாசனையை முகர்ந்து பார்த்தேன்.
அவன் கடலை பர்பியின் கடைசி முனையை வாயில் திணித்துவிட்டு கைகளை ஒரு முறை தட்டிக்கொண்டான்.
“தியாகு, நீங்க எங்க வேலை செய்றீங்க..?” மெலிதான குரலில் துவங்கினான்.
“ இந்த ஏரியாவுல தான் சந்துரு, தனியா சொல்லற மாறி வேலையெதுவும் இல்லை, இந்த வேலை தான்.. ஆமா நீ எங்க வேலை பாக்குற..?”
“கிண்டி சிப்காட்ல..இரும்புக்கான தரச்சான்றிதழ் கொடுக்குற கம்பெனியில.. கான்ட்ராக்ட் பேசிசுல..”
எனது பித்த வெடிப்புகளடங்கிய பாதத்தை சந்துருவின் ஒரு காலின் மேற்புறமாக வைத்து அழுத்தினேன். அவனதைத் தாங்கியவாறு மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டான். கிண்டி இரயில் நிலையத்தின் கழிப்பறைச்சுவர் எனது அலைபேசி எண்ணைக் கொடுத்ததாகச் சொன்னான். முதலில் என்னைப் பார்த்த போதே என் மீது ஈர்ப்பு வந்ததாகவும் ஆனால் பயமும் கொஞ்சம் இருந்ததால் என்னை நெருங்கமுடியவில்லை என்றும் சொன்னான்.
நான் தலை குனிந்தவாறு அவனது கால்களை அழுத்துவதில் கவனத்தைக் குவித்திருந்தேன். எனது கைகளைப்பற்றிக் கொண்டு கண்களை மூடியபடி இருக்கையில் சில நிமிடங்கள் சரிந்து கிடந்தான். நெருக்கத்தின் வாசனை எங்களுக்குள் பரவிக்கொண்டிருந்தது. சில புறநகர் ரயில்கள் நிற்பதும் செல்வதுமாக இருந்தன. நான் உலகை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் அசைவில் எந்த மாற்றமுமில்லை. அது யாருக்காகவும் எதற்காகவும் அக்கறை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
“இந்த உலகத்தில் நீ யாருக்காகப் பயப்படுகிறாய்” – நான் கேட்டேன்.
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு,
“எனக்குள்ளிருக்கும் ஒரு குரலுக்குத்தான்..” என்றவன் கொஞ்சம் நிறுத்தி
“அந்த அடர் பழுப்பு நிற குருவிகள் போல நம்மால் வாழமுடியாது தானே..?”
“தினமும் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்தில்..அந்த அடர் பழுப்பு நிற குருவிகளும்.. நீயும் , நானும், , இந்தத் தண்டவாளத்திற்கருகில் பூத்திருக்கும் பூவும், இங்கு நடந்து கொண்டிருக்கும் எல்லோரும், ஒன்று தான். சிறு அதிசயத்தின் உள்ளொளியை அது எல்லோருக்குள்ளும் வைத்திருக்கிறது. உன் சிறகுகள் உன்னிடம் தானிருக்கின்றன.. வா பறக்கலாம்”
சந்துரு என்னை இறுக்கமாக அணைத்துக்கொண்டான். என் காதுமடலின் கீழே முத்தமிட்டு, பின்கழுத்தில் படர்ந்திருந்த வியர்வையோடு கலந்திட்ட பவுடரின் வாசனையை நீளமாக இழுத்து முகர்ந்தான். நான், என் கண்களை மூடியபடி கிறக்கத்தில் சொருகிக்கிடந்தேன். உலகம் சில முறைகள் அசைவற்றுப் போகின்றன என்பதை நீங்கள் நம்புவீர்களா..?
“உன்னைச் சுற்றியிருப்பது சில உயிர்கள் மட்டும் தான் அவற்றிற்கு ஒரு தேவையும், எதிர்பார்ப்பும் இருக்கிறது. நீ எதை உணர்ந்து கொள்கிறாயோ..அது மட்டும் தான், அந்த நொடி தான் நிஜம். நானும் சில ஆண்டுகளுக்கு முன்பாகத் தனிமைபட்டுத்தான் கிடந்தேன். எல்லோரின் மீதான கோபத்திலும் சுற்றித்திரிந்தேன். இந்த ஓரிணக் கவர்ச்சியிலும் ஏக்கத்திலும் கிடந்து உருகினேன். தனிமையில் நிம்மதியில்லாமல் உழன்று கொண்டிருந்தேன். என்னைத் தேற்றிக்கொள்வதற்கும், என் உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்கும் இங்கு யாருமில்லை. சில நாட்களுக்குள் என்னை நானே தேற்றிக்கொள்ளும் வழிகளைத் தேடிப்பிடித்தேன், எனக்கானச் சில நபர்களைக் கண்டடைந்தேன் அது என்னை ஆசுவாசப்படுத்தியது. எனக்கானத் தீவிரமான வடிகாலாக அது மாறிப்போனது. எனது பணத்தேவைகளையும் அது நிறைவேற்றியது. இப்போது வரை தனித்த உறவாக எதுவும் அமையவில்லை. இயல்பான உறவில் கிடைக்கும் சுதந்திரமான உணர்ச்சியின் லயத்தையும் மகிழ்ச்சியையும் நான் அனுபவித்ததில்லை. முன்பு எனது ஊரில், தொடக்க காலத்தில் கிடைத்திருந்த உறவு என்னை வெறுமனே உடலுக்கெனப் பயன்படுத்தி அணுஅணுவாக ஏமாற்றி வஞ்சித்துக்கொண்டிருந்ததை நான் அறிந்த போது இரும்புகற்களால் அவனை மூர்க்கமாகத் தாக்கிவிட்டு அங்கிருப்பதற்குப் பிடிக்காமல் இந்த மாநகரத்தில் நுழைந்து என்னை மறைத்துக்கொண்டேன். இந்நகரம் என்னை, இங்கிருக்கும் பெரிய கும்பலோடு சேர்த்து மூடிக்கொண்டது. உன் தேவைகள் எனக்குத் தெரியும், உனது மனதை நான் உணர்ந்து கொள்கிறேன். உனது இயல்பான ஆசைகளை நான் மதிக்கிறேன். என்னை நீ முழுவதும் நம்பலாம்…” கொஞ்சம் என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் தெளிவான குரலின் சந்துருவிடம் சொன்னேன்.
“உன்னை மதிக்காத எந்தவொன்றையும் நீயும் மதிக்காதே..அதை திரும்பிக் கூடப் பார்க்காதே..”
அவன் எனது தோலின் மீது சாய்ந்து கிடந்தான். சிறிய மூச்சொலி மெலிதாகக் கேட்டுக்கொண்டிருந்தது. உலகம் இரவை கொண்டுவந்தது. எங்களுக்குள் ஒரு நெருக்கத்தின் பாடலை அது தான் சொல்லிக்கொடுத்தது. மௌனத்தின் சாயலுள்ள ஒரு பூரணத்துவப் பாடலை எனது உடலெங்கும் காதுகளாக்கி நான் கேட்டுக்கொண்டிருந்தேன். சந்துருவும் அதன் ஆழத்தில் கிறங்கிக்கிடப்பது போல் தான் எனக்குத் தோன்றியது. அந்த இரவு முடிந்து போகாது என்று தான் நான் நினைத்திருந்தேன், ஆனால் அது ஒரு விடியலின் பூவைக் கொண்டு எங்களை எழுப்பி விட்டது. மாடியில் ஓரறை கொண்ட அந்த சிறிய வீட்டின் மாடிப்படிகளில் வைத்திருந்த பாலிதீன் செடியில் பூத்திருந்த புதிய பூவொன்றைப் பார்த்தபடி சந்துரு உட்கார்ந்திருந்தான். நான் அவனது தோலின் மீது கைகளைப் போட்ட படி அருகில் அமர்ந்து கொண்டேன். முழுமையான சந்தோசங்களின் வரிகள் எங்களது முகத்தில் பரவிக்கிடந்தன.
“இவ்வளவு இயல்பானதா என் ஆசைகள்” தயக்கமின்றி சந்துரு கேட்டான்.
“நீ தேர்ந்தெடுக்கும் உன் இணையின் மீதான நம்பிக்கையில் இருந்து தான் இது உருமாறுகிறது”
நாங்கள் ஒரு வேர்க்கடலை பர்பியின் முனைகளை இணைந்து கடித்துக் கொண்டோம்.
அந்த சிறிய பூவைப் பறித்து கீழ்வீட்டிலிருக்கும் குழந்தையிடம் சிரித்துக் கொண்டே கொடுத்துவிட்டு கிளம்பினோம்.
அந்தச் சாலை முடிவற்றதாக இருக்குமா…?
3.
நான் ஊரைவிட்டு ஓடி வந்த போது எடுத்து வந்த ஒரே பொருள், எனது அப்பா மற்றும் அம்மாவின் மடியில் சுருள்சுருளான தலைமுடியுடன் குழந்தையாக நான் உட்கார்ந்திருக்கும் பழைய புகைப்படம் மட்டும் தான். அப்பா அதில் கம்பீரமாக உட்கார்ந்திருப்பார். அம்மா மெல்லிய புன்னகையோடு மென்மையான கைகளால் என்னைப் பிடித்தபடி அமர்ந்திருப்பாள். முன்பெல்லாம இந்த மாநகருக்கு வந்த புதிதில் பெரும் பசியில் எனது அம்மாவின் ஞாபகம் முழுவதும் தலைக்கு ஏறி நான் கதறத்துவங்குவதற்கு முன்பானச் சில நிமிடங்கள் அந்த புகைப்படத்தை எடுத்துப் பார்த்து நிம்மதி அடைந்து கொள்வேன். என்னிடமிருந்த இந்த ஓரிணக்கவர்ச்சிப் பழக்கங்கள் தெரிந்த போது அப்பா புளியமரத்தின் பசுங்கிளையைக் கொண்டு என்னைப் பல முறை விலாசியிருக்கிறார். நான் கதறித்துடித்திருக்கிறேன். ஆனால் என் அம்மா ஒரு போதும் என்னை அடித்ததில்லை. இந்தப் பழக்கங்கள் குறித்து நிறைய்ய கேட்டதுமில்லை. அவளைப் பிரிந்து வந்ததற்கு இப்போதும் என்னிடத்தில் பெரிய காரணங்கள் ஏதுமில்லை. அவளது அரவணைப்பை விட்டு வெளியேறியது தான் நான் செய்த தவறுகளில் முதன்மையானது. சாவதற்கு முன்பாக அவளது முகத்தை ஒரு முறை பார்த்து அவளிடம் மன்னிப்பு கேட்டு அழுது தீர்க்க வேண்டும்.
என்னை ஒரு இயந்திரம் போல் பாவித்து, நெருக்கங்களில் வெறுமனே எச்சிலை மட்டுமே பகிர்ந்து கொண்டிருந்த நிறைய்ய வாடிக்கையாளர்களுக்கு நடுவில் இயல்பான உணர்ச்சிக்குவியல்களைப் பங்கிட்டுக் கொள்வதற்கென தனியனாக சந்துரு இருந்தான். எங்களுக்கானத் தனிமையான நேரங்களை வாரயிறுதியில் எனது அறையிலேயே கழித்துக் கொண்டிருந்தோம். உடலின் ஆழத்தினுள் சென்று ஒவ்வொரு முறையும் பரவசத்தில் எதோவொன்றைத் தேடியெடுத்து, கைகளுக்குள் மூடியபடி எனது கிறக்கத்தின் உச்சத்தில் வந்து நின்று கொண்டிருந்த சந்துருவை முழுவதுமாக விரும்பிக்கொண்டிருந்தேன். அவனது தினத்திற்காக, அவனது தொடுதலுக்காக, அவனது குரலுக்காக ஏங்கிக் கொண்டிருந்தேன். சந்துருவின் அறிவுறுத்துதலின் படியே அலைபேசி அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் மிகவும் கவனமாகவும், குறைவாகவுமே பகிர்ந்து கொண்டிருந்தோம். – அவனது அலுவலகம் மற்றும் குடும்பத்தினரிடையே எந்த சந்தேகமும் தொந்தரவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இதைத் திட்டமிட்டிருந்தோம்.- சந்துருவின் தேவைகளை நான் மிகச்சுலபமாகக் கண்டடைந்திருந்தேன். அனுபவத்தின் மூலமாக அவனை முற்றுலுமாக அணைத்துக் கொண்டு ஒரு இளங்கொடியை வளைத்துக்கொள்ளும் லாவகத்துடனும், சூட்சமத்துடனும் அவனுடனான உறவில் நெருங்கிப் பழகிக்கொண்டிருந்தேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு நெருக்கத்தின் வழியாகவும் அவன் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததை வெகுவிரைவிலேயே உணரத்துவங்கினேன். ஆனாலும் அவன் மீதான எனது ஏக்கங்கள் எனக்குப் பிடித்திருந்தன.
4.
நகரம் இரைச்சல்களால் உருவாகி வந்திருக்கிறது. பெரிய அர்த்தங்களை அவை உயிர்வாழவிடுவதில்லை. எல்லோருக்கும் ஒரு தேவையும் அதற்கான உடனடியான காரணமும் கைகளிலிருந்தன. எண்ணற்ற மனித மனங்களின் பல மாற்றங்களைக் கூசாமல் பார்த்துக்கொண்டிருக்கும் அதன் கண்கள் மிகவும் வலிமையானவை தான். அது யாருக்காகவும் தன்னை பலவீனமாக மாற்றிக்காண்பித்ததில்லை. மனித சிக்கல்களும், நெருக்கடிகளும் நகரத்தின் சுபாவத்தை மாற்றவியலாத கரும்பாறையைப் போல உருமாற்றி வைத்திருந்தன. ஒவ்வொரு பிரிவிற்குப் பின்னாலும் இருந்திடும் உண்மையும், நியாய உணர்வும், தேவையும் எங்களின் பிரிவிலும் இருந்தன. நகரம் அவற்றை ரகசியமாகத் தனக்குள்ளேயே தொகுத்து வைத்திருந்தது.
காமம், திரட்சியாக எழும் அலைகளின் சுவாரசியத்தையும் வசீகரத்தையும் படிகளாகக் கொண்டது. ஒரு புள்ளியில் உருக்கொள்ளும் அதன் வீச்சும், மென்மையும், லாவகவும் அமைதியின் சலனமான வனப்பிலானது. இரு உடல்களுக்கான தீண்டுதலிலும், அரவணைப்பிலும் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி உட்சநிலையில் அது ஏற்படுத்தித் தரும் எல்லையற்ற சுகமானது மனதின் மூலமாகத்தான் முழுவதுமாக சுவீகரிக்கப்படுகிறது. நானும் சந்துருவும் எங்களுக்கானச் சுகத்தை, அதன் தனித்த இசையின் லயத்தை மனதிலும் உடலிலும் அனுபவித்துக் கொண்டு இறுக்கமான அணைப்பினூடாக இந்த நகரில் ஒரு மூலையில் கிடந்தோம்.
மலைக்குன்றுகளுக்கிடையிலான மறைவான தாழ்வாரத்திலிருக்கும் எனக்கான ரகசிய இடத்தில் எனது வாடிக்கையாளரோடு என்னுடலைப் பகிர்ந்தபடி நானிருந்தேன். எனது நிர்வாணமான முதுகில் – எனது பணக்கார வாடிக்கையாளர் கொடுத்தது – எனது விலையுயர்ந்த மரச்சீப்பின் பற்களைக் கொண்டு அலையலையாக வருடிக்கொண்டிருந்தான் அவன். என்னுடல் சிலிர்த்துக்கிடந்தது. எனதுடலை இயந்திரத்தின் சாயலில் உருவகித்து அவனது கனத்தை உடம்பை என் பின்புறமாகப் பரப்பி என்னைப்புணர்ந்து கொண்டிருந்தான். வலியில் நான் துடித்துக் கொண்டிருந்தேன். எனக்கு மூச்சு முட்டிக்கொண்டு வந்தது. உடலில் வியர்வைகள் வழிந்து பவுடர் நெடியுடன் பரவிக்கொண்டிருந்தன. அதிர்ச்சியோடும் விரக்தியின் அருவருப்போடும் அந்த தாழ்வாரத்தின் மறைவின் ஒரு முனையிலிருந்து மிகரகசியமாக அசைவில்லாமல் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்த சந்துருவின் கண்களை அப்போது நான் நேருக்கு நேராக எதிர்கொண்டேன். நிர்வாணத்தின் மீது எந்தவித கவர்ச்சியுமற்ற திரட்சியான கசப்புகளை அந்த கண்களில் பார்த்தேன். இதுவரை அக்கண்கள் கண்டிராத காட்சியின் ஒரு வடிவத்தை எந்த வடிவிலும் புரிந்து கொள்ள முடிந்திடாத பெரும் தவிப்பு அக்கண்களில் நிறைந்திருந்தன. அவனது மனதின் குறுகுறுப்பு அவனது இயல்பற்ற அசைவில் எனக்குத் தெரிந்தது. எனது அதிர்ச்சியை உடலில் சமப்படுத்திக் கொள்ள முயன்று கொண்டிருந்தேன். அந்தயிடத்திலிருந்து சந்துரு சில நிமிடங்களில் நகர்ந்திருந்தது எனக்குச் சற்று ஆறுதலாகயிருந்தது.
திரிசூலம் இரயில்வே நடைமேடையின் இறுதியிலிருந்த இருக்கையில் நாங்கள் அமர்ந்திருந்தோம். மௌனத்தின் இருள் எங்களுக்குள் கணத்துப் படர்ந்திருந்தது. எப்போதும் வார இறுதி நாட்களில் மட்டுமே என்னைச் சந்திக்க வரும் சந்துரு – அப்படியாகத் தான் எங்களுக்குள்ளான சந்திப்புகளில் ஒரு ஒழுங்கிருந்தது – அந்த வார நாளில் என்னைத் தேடி வந்திருக்கிறான். எனது அலைபேசி அணைத்துக்கிடந்ததால், எனது அறைக்குச் சென்று திரும்பியிருக்கிறான். முன்பு சொல்லியிருந்த அந்த மலைப் பகுதிகளில் அலைந்து என்னைத் தேடி வலி நிறைந்த என் நிர்வாணத்தை முதல் முறையாகப் பார்த்திருக்கிறான்.
“தியாகு, நீ செய்து கொண்டிருப்பதை விருப்பத்துடன் தான் செய்கிறாயா…?” கூர்மையாக எனது கண்களை நோக்கி கேட்டான் சந்துரு.
“பாதி விருப்பத்துடன்” நிதானமாக அவன் கண்களைப் பார்த்தவாறே சொன்னேன். தலையை இரண்டு முறை மேலும் கீழுமாக மெதுவாக அசைத்துக் கொண்டேன்.
“சனி இரவுகளில் நாம் அனுபவித்துக் கொண்டிருந்தவைகளோடு என்னால் இதை பொருத்திப் பார்க்க முடியவில்லை. நான் பார்த்த இந்த நிர்வாணங்களின் அசைவுகள் என்னை அருவருப்பில் படிந்து போக வைக்கின்றன. நிர்வாணங்கள் அதிர்ச்சிக்குள்ளாக்குபவையாக இப்போது தான் நான் உணர்கிறேன்.” சந்துருவின் குரலில் பரிதவிப்பின் சோகம் அப்பிக்கிடந்தது.
“நிச்சயமாக…நாம் அனுபவித்துக் கொண்டிருப்பதும் இதுவும் ஒன்றல்ல.. நீ இதைக் கொஞ்சம் விளங்கிக் கொள்ள முயல வேண்டும். ஒரு இயந்திரத்தினுடனாக நாம் செய்யும் வேலையும், அதனோடு கொள்ளும் நெருக்கமும் – காதல் உணர்வுகளினூடான மனதுடைய மனிதர்களுடனும் நாம் மேற்கொள்ளும் உறவும் பற்றும் வாழ்வும் முற்றிலும் வேறுபாடுகளுடையது..”
சந்துரு என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். நான் தொடர்ந்தேன்.
“இங்கு, சிலருக்கு நான் வெறும் இயந்திரம் அவ்வளவு தான்.. ஆனால் உனக்கு, காதல் நிரம்பி வழிந்திடும் துணை. அதனால் தான் நமது உறவில், நமது நிர்வாணங்களில் எந்த அருவருப்பையும் நீ உணருவதில்லை. “
“நீ வேறு வேலையைத் தேடிக்கொள்ளலாம் தானே..”
“சந்துரு, நகரத்திற்கு வந்த புதிதில் இதன் இருளடைந்த பாதைகள் எனக்குப் புரியவில்லை. பசியும், ஆண் தேகத்தின் மீதான நெருடல்களான உணர்ச்சிகளின் அவதியும் தவிப்பும் என்னை நிலைகுலைய வைத்தன. தினசரி வேலைகளில் தான் முதலில் தஞ்சம் அடைந்திருந்தேன். என் உழைப்பை முழுவதுமாகச் சுரண்டி விட்டு அவர்கள் தரும் கடைசி ஊழியனுக்கான ஊதியம் எனக்குத் திருப்தியாக இருக்கவில்லை. ஒரு விதத்தில் இந்த நகரம் எல்லோரையும் இயந்திரமாகவோ அல்லது பெரும் இயந்திரத்தின் ஒரு பாகமாவோதான் பார்க்கிறது என்பதை மிக விரைவாக உணர்ந்து கொண்டேன். பணமும் வசதியும் கொண்டவர்களுக்காக, அவர்களின் வாழ்க்கையை எல்லாவிதங்களிலும் மேம்படுத்துவதற்கான ஊழியங்களைத் தான் நாமெல்லோரும் வேலைகளாகச் செய்து கொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது. என் உழைப்புச் சுரண்டப்படுவது ஒரு விதத்தில் அது சார்ந்து இருக்கும் எனது உடலை, மூளையை சுரண்டுவது தான். அப்போது நான் சந்திக்க நேர்ந்த என்னைப் போன்ற மனிதர்களில் சிலர், அவர்களது வாழ்வை அவர்களது உடலைக் கொண்டு மட்டுமே சுதந்திரமாகச் செயல்பட்டு வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. அதன் புதிர்கள் நிறைந்த வழிகளைத் தேடிக்கண்டடைந்தேன். அவற்றின் சூட்சமங்களை ஒவ்வொன்றாகக் கற்றுத் தேறினேன். இப்போது சில பணக்கார முதலாளிகள் என்னிடம் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அவர்களை முழுவதுமாகத் திருப்திபடுத்துகிறேன். என்னளவில் நான் யாரையும் ஏமாற்றுவதில்லை. அவர்களைப்போலவே நானும் அவர்களை ஒரு இயந்திரமாகவே உணர்ந்து கொள்கிறேன். ஊதியங்களைப் பெற்றுக் கொள்கிறேன். எனது வாடிக்கையாளர்களுக்கான குறிப்பிட்ட சில எல்லைகளை உருவாக்கிவைத்திருக்கிறேன். பணக்காரர்களின் குளுமை நிறைந்த அறையுடனோ, சில வாடிக்கையாளர்களின் இந்த மலையினோரங்களிலிருக்கும் வெக்கை நிறைந்த சிறிய தாழ்வாரங்களுடனோ அந்த வேலையும் அதற்கான எல்லையும் முடிந்து போகிறது.”
சந்துரு உன்னிப்பாக என்னைக் கவனித்தபடியே என் சொற்களைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
“இதே வேலை தான் உன்னையும் என்னிடம் கொண்டுவந்து சேர்த்தது, ஆனால் நீ , எனக்கான காதல் நிறைந்த ஒரு பாதி, அப்படித்தான் உன்னைப் பார்க்கிறேன். அதனால் தான் உன்னை எனது அறைக்கு அழைத்துச் செல்கிறேன். நமது சந்தோசங்கள் எல்லையற்றவை. நமது உடல்களின் தேவைகளைத் தாண்டி, காமத்தின் அதீதமான உணர்ச்சிப்பெருக்கைத் தாண்டி ஒரு பெருங்காதலின் அமைதியும், ஆழமான தொடர்பும் நமக்குள் இருக்கின்றன.
நீ வந்த பிறகு, எனது வாடிக்கையாளர்களை வெகுவாகக் குறைத்திருக்கிறேன். மேலும் குறைத்துக்கொள்கிறேன்.
இந்த நகரம் பெரும் இரைச்சல்களால் உருவாகி வந்திருக்கிறது. ஒவ்வொரு குரலையும் பிரித்து அறிவதற்கு நமக்கு காலம் போதாது. உனது நெருக்கமும், காதலும் இல்லையேல், எனக்குள் நிறையும் வெறுமையில் பாறையின் ஒரு கரடுமுரடான அடுக்கைப் போல நான் மாறிவிடக்கூடும்.”
“தியாகு, உன்னைப் புரிந்து கொள்வதற்கு என்னால் முடிகிறது. ஆனால் மறைவுகளில் நான் பார்க்க நேர்ந்த நிர்வாணங்கள் என்னை அமைதியிழக்கச் செய்கின்றன. அருவருப்பின் ஒரு சரடு என்னைச் சுற்றி நெரித்துக் கொண்டிருக்கும் இறுக்கத்திலிருந்து வெளியேறுவதற்கு முயற்சி செய்கிறேன்”
“சந்துரு, எனது சொற்களைப் புரிந்து கொள்வதற்கு, எனக்கான கடந்த காலத்தின் ஒரு பகுதிக்குள் நீ நுழைந்து வாழ்ந்து திரும்ப வேண்டும். அது அவ்வளவு எளிதானதல்ல”
அந்தச் சந்திப்பிற்கு பிறகான முதல் சனிக்கிழமையில், சந்துரு – மிகவும் சோர்வுடன் எனது அறைக்கு வந்திருந்தான். எங்களது உரையாடல்கள் மிகவும் சுருக்கமாகவும் சுவாரசியமில்லாமலும் முடிந்து போயின. தேகங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான முன்செய்கைகளை நான் துவங்கிய போது, சில நிமிடங்களிலே குமட்டிக்கொண்டு வாந்தியெடுத்தான் சந்துரு. நான் அவனதுடலைச் சுத்தம் செய்து விட்டு, தலையை ஆறுதலாகப் பிடித்து ஆற்றுப்படுத்தினேன். காலையில் மிக முன்பாகவே, என்னிடம் சொல்லாமலே அறையிலிருந்து அவன் வெளியேறியிருந்தான். ஏமாற்றத்தின் முதல் ரேகை எனக்குள் அழுத்தமாக ஊடுருவியிருந்தது.
அடுத்தடுத்த நாட்களில் எனது அழைப்பையும் எடுக்கவேயில்லை. குறுஞ்செய்திகளுக்கும் பதிலில்லை. பிறகு வந்த வார இறுதிகளில், நான் அவனை சந்தோசப்படுத்தும் முனைப்பில் சில புதிய கதைகளைச் சொன்னேன். நகரின் புதிய ஏமாற்று வழிகளைத் தெரியப்படுத்தினேன் சுவாரசியமற்றுக் கேட்டுக் கொண்டிருந்த அவனோ, அவனுக்குள்ளிருக்கும் ஒரு குரல், ‘இந்தப் பழக்கத்தினைக் கைவிடு’ என சதா எச்சரித்து கொண்டிருப்பதாகச் சொன்னான். அந்தக்குரல் அவனது அம்மாவின் குரல் போல மென்மையும். குழைவும் கொண்டிருப்பதாகச் சொல்லித் தேம்பி அழத்துவங்கினான். நான், அவனைத் தேற்றும் பொருட்டு அவனைக் கட்டிப் பிடித்து மென்மையின் வனப்புடன் அணைத்துக்கொண்டேன். அவன் எனக்குள்ளாக படர்ந்திருந்தான். பவுடரின் மணம் நெரூடலில்லாமல் எங்களுக்கிடையில் வீசிக்கொண்டிருந்தது. நான் அவனது காதுமடல்களை மென்மையாக வருடியபடி அவனை நிர்வாணமாக்கினேன். அவனது கலங்கிய கண்கள் தரையைப் பார்த்து நின்றிருந்தன. நான், எனது உடைகளைக் களைந்து நிர்வாணமாகத் துவங்கும் போது அவன் குமட்டிக் கொண்டு வாந்தியெடுத்தான். நான் எனது தலையில் அடித்துக்கொண்டு அழுதபடி அறையின் ஒரு மூலையில் சரிந்து கிடந்தேன். விரக்தியின் சலனங்கள் நிறைந்த கணக்கற்ற கீறல்கள் எனதுடலில் பதிந்து போயிருந்தன. கண்விழித்து பார்த்த போது சந்துரு அறையில் இல்லை. அவனது வாசனையை ஒவ்வொரு துளியாக நுகர்ந்து அந்த நாளில் தீவிரமாக ஆசுவாசப்பட்டேன்.
எனது சிறிய வகை அலைபேசியில் குரலழைப்பு மற்றும் குறுஞ்செய்திக்கான வசதிகள் மட்டுமே இருந்தன. வேறெந்த வசதியும் இல்லை. அந்த இரண்டு வகையிலும் தொடர்ந்து முயன்றும் பிறகு சந்துருவைத் தொடர்பு கொள்ளவே என்னால் முடியவில்லை.
5.
சந்துரு என்னைவிட்டுப் பிரிந்து சென்ற சமயத்தில் இந்த மாநகரம் மிகக்கொடிய காடொன்றின் இரக்கமற்ற வரைபடமாக மாறிப்போனது. பாதைகளும், சுற்றியிருக்கும் உயிர் குடிக்கும் விலங்குகளும் மனிதர்களும் எதுவும் எனக்குப் புரியவில்லை. தொடர்ச்சியாக அவனைத்தேடி அலைந்து கொண்டிருந்தேன். அவனது அலைபேசியை அழைத்து அதில் கேட்கும் இயந்திரத்தின் குரலுக்கு என்னை அடிமையாக்கியிருந்தேன். ‘இப்போது உபயோகத்திலில்லை’ என்ற அந்தக் குரல் எப்படியும் எனது அழுகையைச் சொல்லி அவனை என்னிடம் அழைத்து வரும் என நம்பிக் கொண்டிருந்தேன். மூன்று மாதங்கள் முடிந்த பிறகு எனது மனப்பிறழ்வுகளை எனது மனதில் ஒரு ஓரத்தில் அடுக்கிவைக்கப் பழகியிருந்தேன். வாடிக்கையாளர்களை கணிசமாகக் குறைத்துக் கொண்டேன். எனக்கானத் தேவைகளும் இப்போது குறைந்து போயிருந்தன. என்னைச் சுற்றியிருந்தவர்களின் பார்வைகள் என் மீதான அனுதாபத்தைக் குவித்திடும் உடல்நிலைக்கு மாறியிருந்தேன். புகையிலையும், பிராந்தியும் கூட முதல் முறையாகப் பயன்படுத்தத் துவங்கிய காலம் அது தான். ஆனால் அது எனக்கான வடிகாலாக மாறமல் போனது துரதிர்ஷ்டம் தான். அதன் நெருடலான மனம் என்னை மேலும் வெறுப்பேற்றியது. சில முறை எனக்கான வாடிக்கையாளரிடமும் என் பைத்தியத்தின் முகத்தை காண்பிக்க நேர்ந்தது. அது இன்னும் குழப்பத்தை உருவாக்கியது. என் உடலை ஒரு இயந்திரத்தைப் போல உபயோகப்படுத்திக் கொண்டிருந்தவர்கள் கூட என்னைப் புறக்கணிக்கத் துவங்கியிருந்தனர். இந்த மாநகரில் என்னை அழைத்திடும் ஒருவரும் இல்லாமல் போகும் அந்த நாளும் வந்து விட்டதோ என்றெண்ணி நான் துயரமடைந்திருந்தேன். எனது அறையை மறந்து கடைவீதிகளில் படுத்துறங்கி கடற்கரையில் மீதிப் பொழுதுகளை செலவழித்துக் கொண்டிருந்தேன்.
காலம் எல்லாவற்றையும் சரிசெய்கிறது அல்லது சரியாகிவிட்டதைப் போலான ஒரு தோற்றத்தையாவது உருவாக்கிவிடுகிறது. வார இறுதிகளில் மட்டுமே சந்துருவின் நினைப்புகள் மேலெழுந்து என்னை அமுக்கிய படியிருந்தன. தனிமையில் உழன்று எனது சிறிய அறையை விட்டு வெளியேறி அந்த மலைப்பாறைகளினூடே சிறிய விளக்கொளிகளில் மிதந்திடும் குறுகிய பாதைகளில் இலக்கற்று நடந்து திரிந்தேன். பிறகு வாரயிறுதி நாட்களின் மாலைநேரங்களில் தொடர்ச்சியாகக் கடற்கரைக்குச் செல்வதற்குப் பழகிக்கொண்டேன். வெறுமனே மணலில் அமர்ந்து நீலக்கடலைப் பார்த்தவாறு – சந்துருவோடு – பேசிக்கொண்டே, உணர்ச்சிகள் நிறைந்த எனது மனவெளியை கடந்து கொண்டிருந்தேன். சந்துருவின் அடர்ந்த நினைவின் எல்லைகளை முடிந்தவரை சுருக்கிக்கொள்வதற்கு, ஒரு தவம் போல இந்த ஏற்பாட்டைச் செய்து வந்தேன். எல்லாப் பிரச்சனைகளுக்கு இடையிலும் எனது அலைபேசி எண்ணையும், ஜமீன் பல்லாவரத்திற்கு கிழக்காக விரிந்திருக்கும் மலைமேட்டின் குறுகளில் நானிறுந்த அந்த ஒற்றையறை கொண்ட வீட்டையும் சந்துருவிற்காக மாற்றவில்லை. என்றேனும் ஒரு நாள் அவன் என்னைத் தேடி வருவான் என நம்பிக்கொண்டிருந்தேன். அதுவே கடைசியாக நடந்தது.
6.
மூன்றரை வருடங்களுக்குப் பிறகு, சில நாட்களுக்கு முன்னதாக சந்துரு என்னைப் பார்க்க வந்திருந்தான். கையில் அவனது மூன்று வயது பெண் குழந்தையையும் தூக்கிக் கொண்டு வந்திருந்தான். பழகிடாத நடையைக் கொண்டு அவனது விரல் பிடித்து அது மாடிப்படிகளை ஏறி வந்தது. அதன் முகவடிவம் சந்துருவின் திரண்ட சாயலிலிருந்தது. நான் சந்துருவின் கண்களை உற்றுப் பார்த்தவாறே குழந்தையைத் தூக்கிக்கொண்டேன். என் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது, சந்துருவின் கண்களில் எந்த கலக்கமுமில்லை. அதை நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அவன் மீது கோபம் வராதது எனக்கே அதிசயமாகத்தான் இருந்தது. மிக இயல்பாக எனது கைகளைப் பிடித்து நலம் விசாரித்தான். அவனது குழந்தையை என்னிடம் காண்பிப்பதற்காக நிறைய்ய நாள் யோசித்து இன்று கூட்டி வந்ததாகச் சொன்னான். என்னைப் பிரிந்திருந்தாலும் எனது தேடலின் வழியே கண்டடைந்திட முடிந்திடாத ஒரு பிரதேசத்தில் இந்த நகரத்திற்குள் தான் வசித்திருக்கிறான். அவன், தனது வேலையை, இருப்பிடத்தை, நண்பர்களை மாற்றிக்கொண்டதை, திருமணம் செய்து கொண்டதை, என ஏதேதோ தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டேயிருந்தான். நான் அவனது பேச்சை உள் வாங்கிக் கொள்ளவில்லை. இடையில் அவனது அம்மா இறந்ததைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்த போது தான், நான் அவனது சொற்களில் கவனத்தைத் திருப்பினேன். அவனது கண்கள் கலங்கி, மௌனத்தின் ஒரு முனையில் கதறிக்கொண்டிருப்பது எனக்குப் புரிந்தது. அவனுக்குள்ளிருந்த அந்தக் குரல் அவனது அம்மாவின் குரல் தான் என்பதைக் கண்டடைந்த நொடியில் தான் என்னைப் பிரிவதற்கான முடிவை எடுத்ததாக அவன் சொன்ன போது, அவனைத் தட்டிக் கொடுத்து நிலைமையைச் சமாளித்தேன். கடந்த மூன்று வருடமாக அவனிடம் ஏதேதோ கேட்க நினைத்திருந்த எனக்கு அப்போது எதுவும் தேவையாகயிருக்கவில்லை. சில கேள்விகளில், சில பதில்களில், சில காரணங்களில் உறவின் ஒரு முழுமையை அடைந்திட முடியுமென்ற வாதங்களை நம்புவதை நான் கடந்திருந்தேன். நான் குழந்தையை மேலே தூக்கிப்போட்டு, மீண்டும் காற்றில் சிரித்தபடியே கைகளை விரித்து பறந்து வரும் அவளை லாவகமாகப் பிடித்துக் கொண்டிருந்தேன். ஒரு வகையில் வாழ்வு இப்படித்தான் அதன் அர்த்தங்களை நம்மை நோக்கி லாவகமாக நகர்த்துகின்றது. எனது மூன்றரை வருட வலிகளும், சோர்வுகளும் நீங்கியது போல் தானிருந்தது. கடைசியாக அவனது மென்குரலில் மன்னிப்புக் கோரினான்.
“எதற்கு..?”
“உன்னை விட்டுப் பிரிந்து சென்றதற்கு”
“நம் உறவில் அது ஒரு நிலை, அவ்வளவு தான். அதில் சோகமிருந்தாலும், அது மட்டுமே முடிவில்லை..”
“எனக்காக இனிமேல் எப்போதும் காத்திருக்காதே தியாகு, நான் உன்னைவிட்டு வெகு தூரத்திலிருக்கிறேன்.”
“நீ என்னைத் தேடி வரும் நாளில் உனக்காக நான் நிச்சயம் காத்திருப்பேன் அன்பே”
“அந்த பழுப்பு நிற குருவிகள் போல நம்மால் வாழமுடியாது, புரிந்து கொள்வதற்கு முயற்சிசெய். நான் இனி ஒரு போதும் உன்னிடம் திரும்பி வரப்போவதில்லை”
நான் உடனடியாகப் பதிலேதும் சொல்லவில்லை. வெறுமனே சிரித்து வைத்தேன்.
கடைசியாக குழந்தையின் கண்ணத்தில் முத்தம் கொடுத்தவாறே சந்துருவின் கண்ணத்திலும் முத்தமிட்டு அவனை வழியனுப்பினேன். அவன் அந்த எச்சிலற்ற முத்தத்தைச் சிறிய அசௌகரியத்துடன் ஏற்றுக்கொண்டான்.
வெறுமையில், எனது உடல் நடுங்கத்துவங்கியது, எனது அம்மாவின் மடியில் நான் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. கைகளில் எடுத்து வைத்து, என் அம்மாவின் கலங்கமற்ற முகத்தை உள்ளங்கையால் துடைத்து விட்டேன். மாசற்ற அந்த முகத்தைப் பார்த்து மெலிதாகச் சிரிக்கத்துவங்கினேன். ஒரு வலியின் உட்சபட்ச அழகிலிருந்ததது. சிறிய அறை, கணக்கற்ற பொருட்களால் நிரம்பிவழியும் நெருக்கடியில் திணறுவது போலிருந்தது. துவங்கும் ஒரு மீளமுடியாதத் தனிமையின் கூர்மையான அச்சுக்கள் என்னுடல் முழுவதும் தீர்க்கமாக விழுந்து உடலைக் கிழித்து விரிந்து சென்று கொண்டிருந்தது.
7.
இதோ புதிய நாள் துவங்கிவிட்டது. எனது பகுதிகளுக்குச் சுற்றிலுமிருக்கும் ஒவ்வொரு தூய்மையற்ற பொதுக்கழிப்பறைகளின் சுவர்களிலும் வரையப்பட்டிருக்கும் எனது உடலையும், பெயரையும், அலைபேசி எண்ணையும் முற்றிலுமாக அழிக்க வேண்டும். புதிய எண்ணிற்கு மாறியிருந்தேன். அறையையும் மாற்றிக் கொண்டேன். கைவசமிருக்கும் மிகச்சில வாடிக்கையாளர்களின் அரவணைப்பும், ஊதியமும் போதுமானதாக மாறியிருந்தது. அடையாளத்தை மாற்றிக்கொள்ளுதல் நகரத்தில் மிக இயல்பானதும் மிக எளிதானதும் கூட. வாழ்வில், உங்களுக்கு ஒரு முகமூடியில் திருப்தியில்லையெனில் முதலில் அதில் சில திருத்தங்களை மேற்கொள்ளலாம். முடியாத போது முகமூடியையே மாற்றிக் கொள்ளலாம். அழிக்கப்பட்ட தடத்தில் மீண்டும் எனது எண்கள் வேறு நபர்களால் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதையும் சில நாட்கள் வரை உறுதிபடுத்த வேண்டும். என்னிடம் கைவசம் நிறைய்ய நாட்களிருக்கின்றன. எந்த உபயோகமுமற்றதாக அவை மட்டுமே என்னுடனிருக்கின்றன. அந்த பழைய எண்ணின் ஞாபகத்திலிருந்து வெளியேறுவதற்கு அவை பயன்படலாம். சில கிலோ மீட்டர்கள் தாண்டியிருக்கும் நிறைய்ய கழிப்பறைச் சுவர்களையும் ஒருமுறை சென்று பார்த்து வர வேண்டும். நிறைய்ய அலைய வேண்டியிருக்கும். பழைய எண் ஒரு நோயைப்போல என்னுடலில், மனதில் தொற்றிகொண்டிருந்தது. எப்படியாவது, எங்காவது அதைப் பார்க்க வேண்டும் என்பதையே மனது திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தது. நகரத்தில் மனித நெருக்கடிகளுக்குள் அலைதல் ஒரு வேண்டுதலை ஒத்தது தான். கிண்டியை மொத்தமாகச் சுற்றி எழுதி வைத்திருந்தேன். அவை மொத்தமாக அழிக்கப்படுவதற்குக் கூடுதல் நாட்கள் தேவைப்படலாம். ஒரு பிரார்த்தனையின் வடிவத்திலாவது அந்த எண்களை முழுவதுமாக அழிக்கவேண்டும்.
எண்கள் மிக முக்கியமானவை ஒரு தொடர்பை, அதன் ஆத்மயிருப்பை உருவாக்கிக் காண்பிக்கும் வல்லமை ஒவ்வொரு எண்ணுக்கும் உண்டு. அதே போலத் தீடிரெனத் தொடர்புகளை அறுத்துக்கொள்ளும், தங்களது அடையாளங்களைத் தங்களின் கைகளாலேயே முற்றாக அழித்துக்கொள்ளும் எண்களும் அரவணைப்பின் சாயல்களைக் கொண்டவை தான். நான், சற்றேறக்குறைய்ய என்னையே ஒரு முறை முழுவதுமாக அழித்துக் கொள்வதற்கு சமமானது தான் இப்பொழுது நான் செய்ய முற்படுவது. அழுத்தமாக எழுதப்பட்டிருக்கும் நிலையில் இருக்கும் எனது எண்களை முழு பலத்தையும் கொண்டு அழிக்கத்துவங்குகிறேன். கைகள் நடுக்கத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு சுவரில் இலக்கற்று ஓடுகின்றன. ஒரு இழப்பைச் சரிபார்த்துக் கொள்ள கைவசம் உறவென என்னிடம் ஏதுமில்லை. உங்களுக்கோ நானொரு மனிதன் அல்லது இழிவானவன், எனக்கோ.. ஒரு மூலையில் நின்றிருக்கும் சிறிய செடியின் வழுவிழந்த தண்டு பகுதி நான். சரிந்து விழும் நொடியில் எதுவோ என்னைத் தாங்கிப் பிடிக்கின்றன. அவை எனது அம்மாவின் மென்கரங்களோ,சந்துருவின் காதல் கரங்களோ, எனது வாடிக்கையாளரின் மூர்க்கமான இயந்திரக்கரங்களோ எனக்கு அவ்வளவு வெளிப்படையாக எதுவும் தெரியவில்லை. ஆனால் அது என்னைத் தாங்கிப்பிடித்து தரையில் அமரவைத்தது. நான் முழுவதும் சோர்ந்து உலகை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒரு வகையில் அதன் அநாதைத்தன்மையை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பது போலானது தான் அது. அதன் அசைவில் எந்த மாற்றமுமில்லை. அது யாருக்காகவும் எதற்காகவும் அக்கறை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. நான் உலகைக் கைவிடத்துணிகிறேன். கண்களை இறுக்கமாக மூடிக்கொள்கிறேன். அது எனக்கு ஒரு எளிய வழி. சிறிது நேரத்தில் தூங்கிப்போகிறேன். ஆரஞ்சுத் தோட்டத்தின் இலையுதிர்வுகளுக்கு நடுவில் உள்ளே முகம் புதைத்து அசதியில் நான் படுத்துறங்குகிறேன்.
ஜீவன் பென்னி
ஜீவன் பென்னி, தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர். சிற்றிதழ்கள், இணையை இதழ்களில் கவிதைகள் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.
சிறப்பு , எளிய வழியில் நல்லதொரு சிறுகதை தெளிவான நீரோடை போல
சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடித்து வைத்தது நன்று.
அழகு மொழியில் அற்புதமான கதைசொல்லியாக ஜீவன் பென்னியின் இத்தொடக்கம் , புதியபடிமத்தை அறிமுகம் செய்வதாக புலப்படுகிறது,,
வாழ்த்துகள்