குறைவாக எழுதியதற்கென ஒரு நோபல் பரிசு இருந்திருந்தால் அது வேன்வில்டு காவாவுக்குத்தான் கிடைத்திருக்கும். காவாவின் வாழ்நாளில் அவர் எழுதி வெளியிட்டதெல்லாம் ஒரு சிறிய புத்தகமும் சில கட்டுரைகளும் தான். அச்சிறிய புத்தகத்திலும் பாதிக்கும் மேல் எழுத்தாளர்களின் பெயர்களும் புத்தகங்களின் தலைப்புகளுமே இடம்பெற்றிருந்தன. அதேசமயம் அவர் வார்சாவிலுள்ள இட்டிஷ் எழுத்தாளர் சங்கத்திலும் P.E.N. குழுமத்திலும் கூட உறுப்பினராக இருந்தார்.
இட்டிஷ் எழுத்தாளர் சங்கத்தில் விருந்தினராக செல்வதற்கு எனக்கு நுழைவுச்சீட்டு கிடைத்தபோது காவா ஏற்கனவே அங்கு பல ஆண்டுகளாக இருந்து வந்தார். ஒரு விசித்திர மனிதராக அறியப்பட்டு வந்த அவர் உள்ளதிலேயே மிகவும் கறாரான விமர்சகரும் கூட. இட்டிஷ் மொழியின் செவ்வியல் இலக்கியவாதிகளாக அறியப்பட்ட ஷோலோம் அலெய்க்செம் மற்றும் பெரெட்ஸ் ஆகியோரை திறன் குறைந்தவர்களாக மதிப்பிட்ட காவா மென்டல் மொசெரை முற்றிலும் திறனற்றவராக அறிவித்தார். ஷோலோம் ஆஸ்ச் -ஐ பொறுத்தவரை அதிகம் சாதித்திருக்கக்கூடிய ஆனால் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத இளைஞன் என்றார். என் சகோதரன் ஐ.ஜே. சிங்கர் மற்றும் என் நண்பன் ஆரோன் ஜெய்ட்லின் இருவருமே தொடக்கநிலை எழுத்தாளர்கள் என்ற அளவுக்கே அவரால் பொருட்படுத்த முடிந்தது. ஒரு பள்ளிக்கூட ஆசிரியரைப் போல காவா அவரவர் திறனுக்கேற்ப மதிப்பெண்கள் இடுவது வழக்கம், அவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட மதிப்பெண் இரண்டே முக்கால். என் சகோதரனை குறித்து காவாவிடம் வாதிட இயலாது ஆனால் நான் அறிந்த வட்டத்தில் ஒரு மேதைக்கு மிக அருகில் வரக்கூடியவன் ஜெய்ட்லின் மட்டுமே. நான் அவனை எட்கர் ஆலம், லெர்மொன்டோவ் மற்றும் ஸ்லோவேக்கி போன்ற முன்னோடி கவிஞர்களுடன் ஒப்பிட்டு பேசினேன். ஆனால் காவாவுக்கோ இந்த முன்னோடி கவிஞர்களைப் பற்றியே உயர்வான எண்ணம் இருக்கவில்லை. அவர் அனைவரிடமும் குறைகள் கண்டார். காவா சொல்லி வந்தது என்னவென்றால் நமது நாகரிகமும் கலாச்சாரமும் தோன்றி ஒரு ஐந்தாயிரம் வருடங்களுக்குள் தான் ஆகியிருப்பதால் இலக்கியம் இன்னமும் அதன் வளர்ச்சிப்பாதையின் தொடக்கப்புள்ளியில் அதாவது தன் குழந்தைப்பருவத்தில்தான் இருக்கிறது. ஒரு முழுமையான இலக்கிய மேதை தோன்ற இன்னுமொரு ஐந்தாயிரம் வருடங்கள் எடுத்துக் கொள்ளலாம். பதிலுக்கு நான் கலை என்பது அறிவியலைப் போன்று வெளியிலிருந்து வரும் தகவல்களையோ பிறரின் பங்களிப்பையோ சார்ந்திருப்பதல்ல என்பதால் ஒவ்வொரு கலைஞனுமே ஆரம்பத்திலிருந்தே துவங்க வேண்டியுள்ளது என்று வாதிட்டேன். ஆனால் காவா அதற்கு “கலை தன்னளவிலேயே வளர்நிலை மாற்றங்களும் தேர்வுகளும் கொண்டது, அதற்கென உயிரியல்பூர்வமான ஒரு வளர்ச்சிப்பாதை உண்டு” என்றார்.
வார்சா இட்டிஷ் எழுத்தாளர் சங்கத்தில் இப்படியொரு கறாரான விமர்சகர் இருக்கக்கூடும் என்பதே நம்பமுடியாததாக இருந்தது. வாரம்தோறும் இட்டிஷ் நாளிதழ்களில் வெள்ளியன்று இலக்கிய பகுதியில் வெளியாகும் மதிப்புரைகளில் விமர்சகர்கள் குறைந்தது அரை டஜன் புதிய திறமைகளை வெளிக்கொணர்ந்து வந்தனர். காவா எந்த அளவுக்கு கறாராக இருந்தாரோ அவர்கள் அந்த அளவுக்கு சலுகை காட்டினர். கடைசியில் அவர் எனக்கு 0.003 என்ற அளவில் மதிப்பெண் வழங்க முற்பட்ட பின்னர் (என்னைப்போன்ற கத்துக்குட்டிக்கு இது சற்று தாராளமான புகழ்மொழிதான்) எங்களிடையே இலக்கியம் குறித்து பல உரையாடல்கள் நிகழ்ந்தன. காவா என்னிடம் தால்ஸ்தாயின் போரும் அமைதியும் நாவல் குறித்து சொல்லும்போது அதிலுள்ள விவரணைகளும் உரையாடல்களும் துல்லியமாகவும் செறிவாகவும் உள்ளபோதிலும் நாவலின் ஒட்டுமொத்த வடிவம் தேர்ச்சியின்றி இருப்பதாக சுட்டிக் காட்டினார். தால்ஸ்தாயைக் காட்டிலும் தஸ்தேவஸ்கிக்கு மேலான பார்வை உள்ளது ஆனால் அவரது வெற்றிகரமான படைப்பு ஒன்றே ஒன்றுதான் – குற்றமும் தண்டனையும். ஷேக்ஸ்பியரின் மதிப்போ அவரது கவிதைகளில் – அதிலும் அவரது நாடகங்களில் வரும் சொனெட் (Sonnets) வடிவ கவிதைகளில் அந்தளவு கவித்துவம் இல்லை. மற்றபடி ஒரு தொடக்கநிலையாளர் என்ற அளவில் ஹோமரை வாசிக்ககூடிய எழுத்தாளராக காவா ஏற்றுக்கொண்டார். ஹெய்ன் வெறுமனே ஓசையெழுப்பும் ஒரு பகட்டான எழுத்தாளர் என்றார். அவருடைய சிறிய புத்தகத்தில் வெறும் பெயர் உதிர்ப்புகளாக மட்டுமே நின்றுவிடாமல் இட்டிஷ் மொழிக்கு மொழிபெயர்ப்பின் மூலம் வந்தடைய வேண்டிய அறிவியல் மற்றும் இலக்கிய படைப்புகளை முழுவதுமாக பட்டியலிட்டிருந்தார். இட்டிஷ் எழுத்தாளர்கள் இதற்காக அவரை தங்கள் மோசமான எதிரியைப் போல வசைபாடினர், அதேசமயம் அசலான மொழிபெயர்ப்பாளர்களோ இதை வரவேற்றனர். காவா இட்டிஷ் எழுத்தாளர் சங்கத்திலிருந்தே தூக்கிவீசப்பட வேண்டும் என்று சில இலக்கியவாதிகள் ஆசைப்பட, சிலர் அவரை ஆதரிக்க, இன்னும் சிலரோ விவாதிக்கப்பட வேண்டிய அளவுக்கு காவா சொல்லும் எதையும் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றனர்.
காவாவை ஒரு கோமாளியாக சித்தரிப்பதில் விதியின் பங்கும் அவருடைய பங்கும் சமமாகவே இருந்தது. குள்ளமான மெலிந்த மனிதரான காவா பேசும் போது உதட்டோரமாக வளைந்து ஒரு சிறுவனுக்குரிய உச்சரிப்பில் பேசுவார். அவரை போலிசெய்து கிண்டலடிப்பதில் எழுத்தாளர் சங்கத்தில் உள்ள பலரும் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவருடைய அதிரடியான விமர்சன கருத்துக்கள், அறிவியல் சொற்றொடர்களை அவர் பிரயோகிக்கும் விதம், சம்மந்தமில்லாமல் அற்ப விஷயங்களுக்கும் விதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பேசும் முறை ஆகியன அவர்களுக்குரிய கச்சாபொருட்களாக இருந்தன. காவாவை பொறுத்தவரை ஃப்ராய்டு ஆழமான புரிதல்லற்றவர் நீட்சேவோ ஒரு தத்துவவாதியாக ஆக வாய்ப்புள்ளவர் மட்டுமே. இலக்கிய உலகில் உலவிக்கொண்டிருப்பவர்கள் காவாவுக்கு ஒரு பட்டப்பெயர் இட்டிருந்தனர் – டியோஜீன்ஸ்*
காவா குறைந்த வருமானத்திலேயே வாழ்ந்து வந்தார். அவருக்கு கிடைத்து வந்த ஒரே வருமானம் இட்டிஷ் பதிப்பகங்களில் பிழைதிருத்துநர்கள் கோடை விடுமுறைக்கு சென்றுவிடும் போது அவர்களுக்கு மாற்றாக பணிபுரிவதிலிருந்து கிடைப்பது மட்டும்தான். எவ்வாறிருப்பினும் தட்டச்சு செய்பவர்கள் அவருடைய திருத்தங்கள் எதையும் பொருட்படுத்துவதில்லை. ஏனெனில் இலக்கணம் குறித்தும் வாக்கிய அமைப்பு குறித்தும் அவருக்கென சொந்தமாக சில கருதுகோள்கள் இருந்தன. அவர் மொத்த கலைக்களஞ்சியத்தையும் பல்வேறு அகராதிகளையும் அச்சகத்திற்கு கொண்டு வந்து அலசினார். காவாவின் திருத்தங்கள் அனைத்தையும் செயல்படுத்த வேண்டுமெனில் தினசரி செய்தித்தாளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறைதான் வெளியிட முடியும் என பதிப்பாசிரியர்கள் கருதினர்.
காவா ஒரு வயது முதிர்ந்த பிரம்மச்சாரி என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை. வேன்வில்டு காவாவைப் போன்ற ஒருவரை எந்த பெண்தான் திருமணம் செய்திருக்க முடியும்? வெயில்காலமானாலும் பனிக்காலமானாலும் அவர் ஒரே வெளுத்துப்போன வட்டத்தொப்பியும் முட்டிவரை நீளும் கோட்டும் இறுக்கமான கழுத்துப்பட்டையும் அணிந்து வலம்வருவார். அவரது உள்பாக்கெட்டில் கடிகாரத்திற்கு பதிலாக ஒரு காலமானியை (Chronometer) வைத்திருப்பதாக என்னிடம் சொன்னார்கள். யாரேனும் மணி கேட்டால் “ஐந்து மணி ஆக இன்னும் ஒரு நிமிடமும் இருபத்தியொரு நொடிகளும் உள்ளன” என்பார். பிழைதிருத்தம் செய்யும்பொழுது கடிகாரம் பழுதுபார்ப்பவர்கள் அணியும் ஒரு பூதக்கண்ணாடியை பயன்படுத்துவார். காவா ஐந்தாவது தளத்தில் அமைந்திருந்த ஒரு சிறிய மாடி அறையில் வாழ்ந்து வந்தார். அதன் அனைத்து சுவர்களும் புத்தகங்களால் நிரம்பியிருந்தன. எழுத்தாளர் சங்கத்திற்கு அவரது வருகைகளின் போது அங்குள்ள உணவகத்தில் அவர் எதையும் சாப்பிடுவதில்லை, ஒரு தேநீர் கூட அருந்தியதில்லை. பஜார் தெருவில் கருப்பு ரொட்டியும் வெண்ணையும் பழங்களும் சகாய விலைக்கு கிடைக்கும் ஓரிடத்தை அவர் கண்டறிந்து வைத்திருந்தார். அவரது துணிகளை அவரே சலவைசெய்து கொள்கிறார் என்றும் அவற்றை அவரது நூலகத்தில் உள்ள கனமான புத்தகங்களைக் கொண்டு தேய்த்துக் கொள்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இருந்தபோதும் அவரது உடைகளில் ஒருபோதும் கறை இருப்பதில்லை. சவரம் செய்யும் கத்தியை ஒரு கண்ணாடி துண்டில் கூர்மையாக்கும் நடைமுறையை அவர் கண்டறிந்து கடைபிடித்து வந்தார். மதநோக்கில் அல்லாமல் அவர் தனக்கென உருவாக்கிக் கொண்ட உலகியல் பார்வையின் அடிப்படையில் பார்த்தால் வேன்வில்டு காவாவை ஒரு துறவியென்றே சொல்லிவிடலாம்.
திடீரென ஒருநாள் எழுத்தாளர் சங்கம் ஒரு பரபரப்பான செய்தியால் உலுக்கப்பட்டது. காவா திருமணம் செய்துகொண்டார். அதுவும் யாரை? அழகான ஓர் இளம்பெண்ணை. இட்டிஷ் எழுத்தாளர் சங்கத்தில் இச்செய்தி என்னமாதிரியான அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கக் கூடும் என்பதை அறிய ஒருவருக்கு அச்சங்கத்தின் கிசுகிசு வரலாறு பற்றி தெரிந்திருக்க வேண்டும். முதலில் அனைவருமே இதை ஒரு கேலி என்றே நினைத்தனர். ஆனால் சீக்கிரத்திலேயே அது உண்மை என்பது தெளிவானது. அதற்குள்ளாக பிழைதிருத்துநர்களும் தட்டச்சாளர்களும் செய்தித்தாள்களில் தங்கள் வாழ்த்துக்களை வெளியிட்டனர். ஒருநாள் காவா தான் தினசரி எழுத்தாளர் சங்கத்திற்கு வரும் துல்லியமான அதே நேரத்தில் – அதாவது பதினொரு மணி பதினேழு நிமிடங்களுக்கு தன் மனைவியை கூட்டிக்கொண்டு வந்தார். அவளோ தன் இருபதுகளின் பிற்பகுதியில் இருப்பவளாக தோன்றினாள், நாகரிகமான உடை அணிந்திருந்தாள். குட்டையான கரிய கூந்தலுடன் நகங்கள் மெருகேற்றப்பட்டிருந்தன. போலந்து இட்டிஷ் இரு மொழிகளுமே நன்றாகவே பேசினாள். அன்றைக்கு சங்கத்தில் இருந்தவர்களால் வாயைப் பிளந்து வேடிக்கைப் பார்க்க மட்டுமே முடிந்தது. காவா தனக்கும் தன் அன்புக்குரியவளுக்கும் இரண்டு காபியும் சில கேக்குகளும் ஆர்டர் செய்தார். சரியாக பனிரெண்டு மணி பதினேழு நிமிடங்களுக்கு அந்த ஜோடி கிளம்பியவுடன் சங்கம் பரவசத்துடன் ரீங்கரிக்கத் தொடங்கியது. உடனடியாக அங்கேயே பல்வேறு விளக்கங்களும் கோட்பாடுகளும் உருவாக்கப்பட்டன. எனக்கு அவற்றில் ஒன்று மட்டும்தான் நினைவில் உள்ளது – காவா உடலுறவில் அற்புதங்கள் நிகழ்த்தக்கூடிய ஒரு இட்டிஷ் ரஸ்புடினாக (Rasputin) இருக்கலாம். ஆனால் இக்கோட்பாடு சுத்த அபத்தமென உடனடியாக நிராகரிக்கப்பட்டது. எழுத்தாளர் சங்கத்தில் உள்ள ஒவ்வொரு ஆணும் பிற ஆண் உறுப்பினர்களை ஆண்மையற்றவர்களாகவே கருதி வந்தனர். இதில் காவா மட்டும் விதிவிலக்காக முடியாது.
வாரக்கணக்கில் இட்டிஷ் எழுத்தாளர் சங்கம் இப்புதிரை அவிழ்ப்பதில் பரபரப்பாக இருந்தது, ஆனால் எந்த விடை கிடைத்தாலும் கிடைத்த வேகத்திலேயே அது தோல்வியை தழுவியது. நான் காவாவிடம் நட்பாக இருப்பதை சில எழுத்தாளர்கள் அறிவார்கள், என்னைக் குறித்த காவாவின் மதிப்பீட்டில் சிறுபுள்ளி அளவுக்கு முன்னேற்றம் வேறு இருந்ததால் அவர்கள் என்னிடம் மேலதிக தகவல்களை எதிர்பார்த்தனர். ஆனால் நானும் பிறரைப் போலவே திகைப்பில்தான் இருந்தேன். காவாவை அணுகி அவரிடம் தனிப்பட்ட கேள்விகளை கேட்கும் அளவுக்கு யாருக்கும் துணிவிருக்கவில்லை. அச்சிறிய மனிதனிடம் எப்போதும் இருந்துவந்த ஒருவித பெருமிதம் யாரையும் நெருங்கவிடவில்லை.
பின்னர் சில காரியங்கள் நடந்தன. நான் சந்திக்க சென்றிருந்த ஒரு தோழியின் வீட்டில் புலாவா நகரத்தை சேர்ந்த அவளது தோழி வந்திருந்தாள். புலாவாவில் இட்டிஷ் புத்தகங்கள் வெளியாகும் ஒரு பெரிய அச்சகம் இருந்தது. அந்நகர மக்களும் தங்கள் ஊரில் சில எழுத்தாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் இருப்பதை பெருமையாக பேசிக் கொண்டனர். புலாவாவை சேர்ந்த இந்த பெண் திருமதி காவாவின் தோழியாக இருந்தாள், ஒருநாள் மாலை நான் அங்கு சென்றிருந்த போது அவர்கள் இருவரும் என் தோழியின் வீட்டிற்கு வந்திருந்தனர். இது எதிர்பாராத விதமாக நடந்துவிட்ட அதிர்ஷ்டம் தான். மர்மத்தின் பகுதியாக இருந்துவந்த ஒரு நபருடன் மேஜையில் அமர்ந்து நான் இரவுணவை அருந்தினேன். அவள் சாதுர்யமும் புத்திசாலித்தனமும் உடையவளாக தோன்றினாள், அவளுடைய நடத்தையில் மர்மமான எதுவும் தென்படவில்லை. நாங்கள் அரசியல், இலக்கியம், புலாவாவில் உள்ள இலக்கிய குழு ஆகியவற்றை பற்றி பேசினோம். இரவுணவுக்கு பின் மற்ற இரு பெண்களும் பாத்திரங்களை சுத்தம் செய்ய சென்றுவிட திருமதி காவா ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு என்னிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தாள். நான் அவளிடம் சொன்னேன், “உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன், மிகவும் தனிப்பட்ட விஷயமாக இருந்தால் தவறாக எடுத்துகொள்ள வேண்டாம். ஒருவேளை உங்களுக்கு விருப்பமில்லையெனில் நீங்கள் பதில் சொல்லக்கூட..”
“நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்று எனக்கு தெரியும்” அவள் இடைமறித்தாள். “நான் ஏன் காவாவை திருமணம் செய்துகொண்டேன். அனைவருமே என்னிடம் அதைத்தான் கேட்கிறார்கள். நான் உங்களுக்கு ஏனென்று சொல்கிறேன். நான் நேற்று பிறந்தவளல்ல, எனக்கு ஆண்களை தெரியும், ஆனால் துரதிர்ஷடவசமாக நான் சந்திக்க நேர்ந்த எல்லா ஆண்களுமே சலிப்பூட்டக்கூடியவர்களாகவே இருந்தனர். யாருக்கும் சொந்த கருத்து என்பதே கிடையாது. அவர்கள் அனைவருமே இளைஞர்கள் பெண்களிடம் சொல்லும் வழக்கமான சொற்களையே பேசினர். செய்தித்தாள்களில் வரும் தலையங்கங்களை கிட்டத்தட்ட சொல்லுக்குசொல் அப்படியே ஒப்பித்து விமர்சகர்கள் பரிந்துரைத்த அனைத்து புத்தகங்களையும் வாசித்தனர். சிலர் என்னை திருமணம் செய்யக்கூட முனைந்தனர், ஆனால் முதல் சந்திப்பிலேயே என்னை கொட்டாவி விடச் செய்யும் ஒரு ஆணிடம் என்னால் எப்படி சென்று வாழ முடியும்? ஒரு ஆணுடனான உரையாடல் என்பது எனக்கு மிகவும் முக்கியம். வசீகரமான ஆண்மகனாக இருக்க வேண்டும் என்பது உண்மைதான் ஆனால் கண்டிப்பாக அதுமட்டும் போதுமானதல்ல. பின்னர் நான் வேன்வில்டு காவாவை சந்தித்தபோது சிறுவயது முதல் நான் எதிர்பார்த்திருந்த அனைத்து தகுதிகளும் அவரிடம் இருப்பதைக் கண்டேன் – அறிவும் சொந்த கருத்துக்களும் கொண்ட ஒரு நபர். நான் பனிரெண்டு வயது முதல் சதுரங்கம் ஆடி வருகிறேன் காவா ஒரு அற்புதமான சதுரங்க ஆட்டக்காரர் என்பதை நீங்களும் அறிவீர்கள் என நம்புகிறேன். அவர் தன் நேரத்தை அதற்கு ஒப்புக்கொடுத்திருந்தால் ஒரு கிராண்ட் மாஸ்டராக ஆகியிருக்க முடியும். அவர் வயதானவர் என்பதும் ஏழை என்பதும் மறுப்பதற்கில்லை ஆனால் நான் எப்போதுமே பணக்காரர்களை எதிர்பார்த்தவளல்ல. ஒரு ஆசிரியையாக பணிபுரிவதால் என் தேவைகளை நானே கவனித்துக் கொள்வேன். அவரது எழுத்து குறித்து உங்களுக்கு என்ன கருத்து இருக்கிறதோ தெரியாது ஆனால் நான் அவரை ஒரு மிகச்சிறந்த எழுத்தாளராகவே காண்கிறேன். என் அருகாமையில் அவர் தொடர்ச்சியாக எழுத்தில் ஈடுபட்டு நல்ல படைப்புகளை கொண்டு வருவார் என்றும் நம்புகிறேன். அவ்வளவுதான் என்னால் சொல்ல இயலும்.”
திருமதி காவாவின் ஒவ்வொரு சொல்லிலும் உறுதிப்பாடு தெரிந்தது. காவாவைப் பார்த்து நகைக்காமல் அவரது நடத்தைகளை கேலி செய்யாமல் அவரைப்பற்றி ஒருவர் பேசுவதென்பது அதுதான் முதன்முறை. நான் காவாவை அறிவேன் என்றும் அவரது புலமை மற்றும் உறுதியான கருத்துக்கள் மீது எனக்கு எப்போதுமே மதிப்பு இருப்பினும் சில சமயங்களில் அது அதீதமாக தோன்றுவதுண்டு என்றேன் அவளிடம். அதற்கு அவள், “அவர் அசலானவர். எப்போதுமே ஆர்வத்தை தூண்டாத ஓர் அற்பமான கருத்தை சொல்பவரல்ல. இட்டிஷ் மொழியில் எழுதுவதுதான் அவரது ஒரே பிரச்சனை. வேறு மொழியாக இருந்திருந்தால் அவர் ஏற்றுக்கொள்ளப் படுகிறாரோ இல்லையோ இந்நேரம் பரவலாக அறியப்பட்டு பாராட்டப்பட்டிருப்பார்.”
அடுத்தநாள் நான் எழுத்தாளர் சங்கத்திற்கு வந்து என் சகாக்களிடம் திருமதி காவாவை சந்தித்தது பற்றியும் அவள் சொன்னவற்றையும் தெரிவித்த போது அனைவரும் ஏமாற்றமே அடைந்தனர். அதில் ஒருவன் கேட்டான், “காவாவைப் போன்ற ஒருவரை ஒருபெண் எவ்வாறு காதலிக்க முடியும்?” நான் அவனுக்கு வழக்கமான பதிலையே சொன்னேன்: “யார்யார் காதலிக்கப்பட வேண்டும் யார் வேண்டியதில்லை என்பதை இதுவரை எவரும் தீர்மானிக்கவில்லை.”
அதன் பின்னர் கொஞ்ச நாட்களில் திருமதி காவாவை நான் சந்தித்த வீட்டிற்கு செல்வதை நிறுத்திக் கொண்டேன், எழுத்தாளர் சங்கத்திற்கு காவாவின் வருகையும் திருமணத்திற்கு பின்பு வெகுவாக குறைந்துவிட்டிருந்தது. அவரைப்பற்றி கேள்விப்பட்ட ஒரே செய்தி பிழைதிருத்துநர்களுக்கு மாற்றலாக செல்லும் வேலையையும் அவர் விட்டுவிட்டார் என்பதுதான். அவர் இந்தப் பெண்ணுடன் இருக்கும் காலத்தை சரியான வகையில் செலவிட்டு உருப்படியாக ஏதேனும் எழுதுவார் என்று நான் நம்பத் துவங்கியிருந்தேன். அவருடைய இலக்கிய நுண்ணுணர்வு குறித்து எனக்கு எந்த சந்தேகமுமில்லை. பிறரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கும் ஒருவர் சரியான சூழல் அமைகையில் தன்னிடமிருந்தும் சிறந்தவற்றையே எதிர்பார்ப்பார்.
ஆனால் அதன்பிறகு நிகழ்ந்த ஒரு வினோதமான சம்பவத்தை நாற்பது வருடங்கள் கழித்து இன்னமும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒன்றிரண்டு வருடங்கள் ஓடியிருந்தன, மும்மாத இதழ் ஒன்றுக்கு ஆசிரியராகியிருந்த என் நண்பன் ஆரோன் ஜெய்ட்லின் என்னையும் துணை ஆசிரியராக இணைத்துக் கொண்டான். நாங்கள் முதல் இதழுக்கு இட்டிஷ் இலக்கியம் குறித்தோ அல்லது பொதுவாக இலக்கியம் குறித்தோ ஒரு முக்கியமான கட்டுரையை கொண்டுவருவதாக இருந்தோம், அதற்கு நான் ஜெய்ட்லினிடம் காவாவின் பெயரை பரிந்துரைத்தேன். முதலில் ஜெய்ட்லினுக்கு இந்த யோசனை பிடிக்கவில்லை. “இத்தனை நபர்கள் இருக்கும் போது காவாவா?” அவன் கேட்டான். “முதலாவதாக இதை எழுதிமுடிக்க அவருக்கு ஒன்றிரண்டு வருடங்கள் ஆகிவிடும். இரண்டாவதாக அப்படியே எழுதிவிட்டாலும் அனைவரை குறித்தும் இடித்துரைப்புகள் இருக்கும். இது ஆரம்பத்திலேயே நமக்கு கெட்ட பெயரை உண்டாக்கிவிடும்.” நான் சொன்னேன், “அப்படி ஒரு முடிவுக்கு வரவேண்டாம். அவர் திருமணத்திற்கு பிறகு மாறியிருப்பதாக நினைக்கிறேன். ஒருவேளை உள்ளபடியே அவர் அனைவரையும் கிழித்தெடுத்தாலும் நாம் அடிக்குறிப்பில் அவருடன் உடன்படவில்லை என்பதை தெரிவித்து விடலாம். இதழின் தொடக்கத்திலேயே ஒரு அதிரடியான முற்றிலும் எதிர்மறையான கட்டுரையுடன் வெளிவருவது நமக்கும் உதவக்கூடும்.”
நீண்ட பேரத்திற்கு பின் ஒருவழியாக ஜெய்ட்லினை இந்த முயற்சிக்கு சம்மதிக்க வைத்துவிட்டேன். அவன் விதித்த நிபந்தனைகள் இரண்டு. பெரும்பாலும் இறுதியில் நாம் அவருடன் உடன்படவில்லை என்ற அடிக்குறிப்பை வெளியிடவும் குறிப்பிட்ட தேதிக்குள் கட்டுரையை அளிக்கவும் காவா சம்மதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஜெய்ட்லின் இத்தனை தூரம் இறங்கி வந்ததே எனக்கு மகிழ்ச்சி. எப்படியோ காவா எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தக்கூடும் என்று என் உள்ளுணர்வு சொல்லியது.
அடுத்தநாள் காவா எழுத்தாளர் சங்கத்திற்கு வந்ததும் நான் எங்கள் திட்டத்தை முன்மொழிந்தேன், அவர் இதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் கேட்டார், “நிஜமாகவே நீங்கள் என்னை பிரதான கட்டுரை எழுத சொல்கிறீர்களா? இட்டிஷ் இலக்கியத்திலிருந்து நான் பல ஆண்டுகளாக தள்ளி வைக்கப்பட்டுள்ளேன். காவாவின் பெயர் எங்கும் உச்சரிக்கப்பட்டதல்ல. திடீரென நீங்கள் என்னை தெரிவு செய்துள்ளீர்கள்.”
ஜெய்ட்லினும் நானும் அவர்மீது மெருமதிப்பு வைத்துள்ளதாக காவாவிடம் உறுதியளித்தேன். எழுத்தாளர்களிடமிருந்து சாத்தியமில்லாததையெல்லாம் எதிர்பார்க்க வேண்டாமென்று மன்றாடி கேட்டுக் கொண்டேன் அதேசமயம் அவரது கட்டுரையில் நாங்கள் எவ்வித திருத்தமும் செய்யமாட்டோம் என்றும் வாக்குறுதி அளித்தேன். மிகவும் மோசமான சந்தர்ப்பத்தில் நாங்கள் கட்டுரையுடன் உடன்படவில்லை என்ற அடிக்குறிப்பை மட்டும் வெளியிட வேண்டியிருக்கும், அவ்வளவுதான்.
மிகுந்த தயக்கத்திற்கு பின்பு காவா கட்டுரையை அளிக்க சம்மதித்து எனக்கு கெடு தேதி ஒன்றையும் அளித்தார். எந்த சந்தர்ப்பத்திலும் கட்டுரை ஐம்பது பக்கங்களுக்கு மிகாமல் இருக்குமென்றும் உறுதியளித்தார். அவரது இலக்கிய வாழ்க்கையில் இக்கட்டுரை ஒரு திருப்புமுனையாக அமையக்கூடும் என்ற என் முன்னுணர்வை காவாவிடம் தெரிவித்தேன். காவா தோளை குலுக்கி தனது வழக்கமான நிராகரிக்கும் தொனியில் சொன்னார், “காலம் பதில் சொல்லும்.”
காவா தன் கைப்பிரதியை வழங்குவதற்கான தேதி நெருங்கிக் கொண்டிருந்தது ஆனால் அவரிடமிருந்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. அவர் எழுத்தாளர் சங்கத்திற்கு வருவதையும் ஒட்டுமொத்தமாக நிறுத்திவிட்டார், இதை கட்டுரை எழுதுவதில் அவர் மும்முரமாக இருப்பதன் அறிகுறியாக நான் எடுத்துக் கொண்டேன். ஒருநாள் அவரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் தன் கைப்பிரதியை அளிக்க இரண்டு வாரம் காலநீட்டிப்பு கேட்டார். கட்டுரை எவ்வாறு உருவாகி வருகிறது என்று கேட்டதற்கு, “ஐம்பது பக்கங்களுக்கு கொஞ்சம் அதிகமாக வரலாம்.” என்று மன்னிப்பு கேட்கும் தொனியில் கூறினார்.
“எவ்வளவு அதிகம்?” நான் கேட்டேன்.
“ஒன்பதரை பக்கங்கள்”
ஜெய்ட்லின் என்மீது கோபப்படுவான் என அறிவேன். ஐம்பது பக்கங்கள் என்பதே சற்று அதிகம்தான். ஆனால் அதேசமயம் நல்ல படைப்பாக இருந்தால் வாசகர்களும் விமர்சகர்களும் எந்தளவு நீளத்தையும் ஏற்றுக் கொள்வார்கள். ஒருகணம் காவாவவிடம் கட்டுரையின் சிறுபகுதியை கேட்டுப்பர்த்தாலென்ன எனத் தோன்றியது ஆனால் நான் பொறுமையிழப்பதை வெளிக்காட்ட வேண்டாம் என முடிவு செய்து அடக்கிக் கொண்டேன். நடந்தவற்றை நான் ஜெய்ட்லினிடம் கூறியபோது அவன் சொன்னான், “எனக்கென்னமோ காவா ஐம்பத்தி ஒன்பதரை பக்கங்களுக்கு பதில் ஐம்பத்தி ஒன்பதரை வரிகளை கொண்டு வந்து நம்மை கலங்கடிப்பார் எனத் தோன்றுகிறது.”
குறித்த தேதியும் வந்தது, நான் காவாவை எழுத்தாளர் சங்கத்தில் சந்தித்தேன். அவர் கைப்பிரதியை கொண்டுவந்திருந்தார். அது சரியாக ஐம்பத்தி ஒன்பதரை பக்கங்கள்தான். அதில் நிறைய அடித்தல் திருத்தல்கள் இருப்பதை காண முடிந்தது மேலும் ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்திலிருந்தும் கூட பல்வேறு மேற்கோள்கள் இருந்தன, இட்டிஷ் இதழை அச்சடிக்கும் இயந்திரத்திற்கு இதுவொரு இடராக அமையலாம். அதுவுமில்லாமல் காவா சிறிய எழுத்துகளில் வரிகளை மிகவும் நெருக்கி எழுதியிருந்ததால் கைப்பிரதியில் உள்ள ஐம்பத்தி ஒன்பதரை பக்கங்கள் அச்சில் என்பது பக்கங்கள் வரலாம் என்று பட்டது. அவர் சொன்னார், “நீ இதை இங்கே படித்துப் பார்க்க கூடாது என்ற நிபந்தனையுடன் தருகிறேன், வீட்டிற்கு சென்று தனியாக படித்துப் பார். அதன்பிறகே நீ ஜெய்ட்லினிடம் தர வேண்டும்.”
நான் கைப்பிரதியை எடுத்துக்கொண்டு எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக வீட்டிற்கு ஓடினேன். ஜெய்ட்லிட்னிடம் நான் எண்ணியது சரிதான் என்று நிரூபிக்கும் ஆவலில் இருந்தேன். வாசிப்பறைக்குள் நுழைந்ததுமே சோபாவில் பாய்ந்து வாசிக்கத் துவங்கினேன். மூன்று நான்கு பக்கங்கள் வாசித்தவரை அனைத்துமே என்னை கவர்ந்தது. காவா பொதுவாக இலக்கியத்தின் பண்புகளில் ஆரம்பித்து அதிலிருந்து குறிப்பாக இட்டிஷ் இலக்கியத்திற்கு சென்றிருந்தார். மொழிநடை சரியாக இருந்தது, வாக்கியங்கள் செறிவாக சிறிய அளவில் அமைந்திருந்தன. அந்த முதல் ஐந்து பக்கங்களை வாசித்ததைப்போன்று எந்த கைப்பிரதியையும் நான் அனுபவித்து வாசித்ததில்லை. ஆறாவது பக்கத்தில் காவா “இனக்கலப்பற்ற எழுத்தாளர்” என்பது குறித்து ஏதோ எழுதியிருந்தார். அவர் இந்த பதத்தை மேற்கோள் குறிகளுக்குள் குறிப்பிட்டிருந்தார், இது பொதுவாக திறனை மதிப்பிடுவதற்காக அல்லாமல் பந்தய குதிரைகளை வகைப்படுத்தும் பதமாக பயன்படுத்தப்படுவது. இதில் வினோதமான விஷயம் என்னவென்றால் பிற மொழிகளைக் காட்டிலும் இட்டிஷ் மொழியில் மட்டும் இந்த வழக்காறு மனதின் படிநிலைகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
தொடர்ந்து வாசித்ததில் காவா இந்த கடன் வாங்கப்பட்ட வழக்காற்றுக்கு அவசியமில்லாத நீண்ட விளக்கத்தை அளித்திருந்தது வியப்பாக இருந்தது. இது நிச்சயமாக கவனச்சிதறல் தான், காவா சம்மதிக்கும் பட்சத்தில் இப்பகுதியை வெட்டிவிடலாம். ஆனால் நான் தொடர்ந்து வாசிக்க வாசிக்க மேலும் குழப்பத்திற்கு ஆளானேன். காவா குதிரைகள் பற்றி ஒரு முழுநீள கட்டுரை எழுதியிருந்தார் – அரேபிய குதிரைகள், பெல்ஜிய குதிரைகள், பந்தயக் குதிரைகள், அப்பலூசா* (Appaloosa) குதிரைகள். நான் இதுவரை கேள்வியேபட்டிராத பெயர்களை வாசித்தேன். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. “ஒருவேளை இது கனவாக இருக்கலாம்,” எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். கொடுங்கனவிலிருந்து விழித்துக் கொள்ளும்பொருட்டு கன்னங்களை கிள்ளிப் பார்த்தேன். வேன்வில்டு காவா விரிவான ஆய்வுகள் செய்து பல்வேறு புத்தகங்களை மேற்கோள் காட்டி குதிரைகளை பற்றி அக்கட்டுரையை எழுதியிருந்தார். அவற்றின் உடற்கூறியல், உடல் செயல்பாடு, நடத்தை மற்றும் அதன் பல்வேறு துணை இனங்கள் என விரிவான தரவுகள் அளித்திருந்தார். ஆதார நூற்பட்டியலுங் கூட இறுதியில் இணைக்கப்பட்டிருந்தது. “அவருக்கென்ன பைத்தியமா?” என்னை நானே கேட்டுக் கொண்டேன். “இது ஏதேனும் பழிவாங்கும் செயலா?” இந்த கைப்பிரதியை ஜெய்ட்லினிடம் காண்பிக்கும் எண்ணமே எனக்கு நடுக்கத்தை உண்டாக்கியது. இதை எக்காலத்திலும் பதிப்பிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் அளித்த வாக்குறுதியை மீறி காவாவிடம் கைப்பிரதியை திருப்பியளிக்க வேண்டியிருக்கும். இத்தனை வேதனையிலும் எனக்கு அச்சமயம் வாய்விட்டு சிரிக்க வேண்டும்போல இருந்தது.
நீண்ட தடுமாற்றத்திற்கு பின் ஜெய்ட்லினிடம் கைப்பிரதியை அளித்தேன். காவா “இனக்கலப்பற்ற எழுத்தாளர்” என்ற பதத்தை விவரிக்கத் துவங்கும் பக்கங்களை வாசிக்கும் போது அவனிடம் ஏற்பட்ட கசப்பான முகபாவனைகளை என்னால் என்றைக்குமே மறக்க முடியாது. அப்போது தன் மஞ்சள்நிற புருவங்களை உயர்த்தியவன் அதன்பிறகு வாசித்து முடிக்கும்வரை கீழிறக்கவேயில்லை. சிறிது நேரத்திற்கு அவன் முகத்தில் வெறுப்பும் ஏளனமும் கலந்திருந்தன. தலைவலியை குணப்படுத்த வந்த நோயாளிக்கு புற்றுநோய் என்று அறியநேர்ந்த மருத்துவரின் துயரத்தைப் போன்ற ஒன்றை அவன் கண்களில் பார்த்தேன். பிறகு என்னிடம், “நான் என்ன சொன்னேன்? காவாவிடமிருந்து நீ வேறென்ன எதிர்பார்க்க முடியும்?” என்றான்.
எனக்கு வேறு வழியிருக்கவில்லை. கைப்பிரதியை திருப்பியளிக்க சென்றிருந்தேன். காவாவிடம் அவர் ஏன் அப்படி செய்தார் என்று கேட்டு தயவுசெய்து ஏதேனும் விளக்கமளிக்குமாறு மன்றாடினேன். அவர் அங்கேயே சிறிதுநேரம் முகம் வெளிறிப்போய் அமைதியாக உட்கார்ந்திருந்தார். பின்னர் “இட்டிஷ் இலக்கியத்திருந்து நான் விலக்கப்பட்டிருப்பதாக முன்பே சொன்னேன். எழுதச்சொல்லி இனிமேல் என்னிடம் வரவேண்டாம். இனிமேல் உங்கள் இதழ் இல்லாமல் என் நாட்களை கழிக்க வேண்டியிருக்கும்.“ ஒருகணம் திருமதி காவாவை அழைத்து எனக்கு நிகழ்ந்த கொடுமையை தெரிவிக்க மிகுந்த உந்துதல் எழுந்தது ஆனால் அவளுக்கு இக்கட்டுரை குறித்து நிச்சயம் தெரிந்திருக்கும், அவள் பெரும்பாலும் தன் கணவரின் செயலுக்கு நியாயம் கற்பிக்கவே செய்வாள். சில வருடங்களுக்கு நாம் ஒருவகை பார்வைக்கு பழகிவிட்டால் அது பிறவற்றை மறைத்து விடலாம்.
இந்த சம்பவத்திற்கு பிறகு காவா என்னிடம் பேசுவதை நிறுத்திவிடவில்லை. நாங்கள் இருவருமே இதைப் பற்றி குறிப்பிடாமல் இயல்பாக பேசி வந்தோம். பல மாதங்களுக்கு நான் நடுஇரவில் எழுந்தமர்ந்து யோசிப்பதுண்டு: இது தன்னைத் தானே பகடி செய்துகொள்ளும் செயலா? அல்லது ஒருவகை கிறுக்குத்தனமா? அப்படியானால் என்ன மாதிரியான கிறுக்குத்தனம்? மனச்சிதைவு நோயா? சித்த பிரமையா? வயோதிகத்தின் மந்தபுத்தியா? ஒன்று மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும்: காவா இந்த ஒன்றுக்கும் உதவாத கட்டுரையை எழுத நிறைய வாசிப்பும் உழைப்பும் செலவிட்டிருக்கிறார். இட்டிஷ் இலக்கிய வட்டாரத்தில் உள்ள எவருக்கும் குதிரைகள் மீது எவ்வித ஆர்வமும் இருந்ததில்லை. மனிதர்களின் பல்வேறு நிலைகளிலான செயல்களுக்கு எவ்வித நோக்கமும் இல்லாமல் இருக்கலாம் என்ற முடிவுக்கு இந்த இளம் வயதிலேயே நான் வந்தடைந்துவிட்டேன். அதேசமயம் புனைவிலோ ‘நோக்கம்’ என்பது எப்போதும் அதை சிதைப்பதாகவே அமையும்.
1935 இல் நான் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த போது P.E.N. குழுமத்தின் இட்டிஷ் பிரிவு எனது முதல் நாவலான Satan in Goray ஐ வெளியிட்டது. அதன் நிர்வாக குழு பிழைதிருத்தவும் ஒரு முன்னுரை எழுதவும் காவாவை நியமித்திருந்தது. அவர் என் புத்தகத்தில் எண்ணற்ற பிழைகளை கண்டுபிடிப்பார் என்றும் முன்னுரையில் அவருடைய விசித்திரமான எண்ணங்களை வெளியிட பயன்படுத்திக் கொள்வார் என்றும் அச்சத்தில் இருந்தேன். ஆனால் அவர் பிழைதிருத்துவதில் விசேஷமாக எந்த சிரமத்தையும் கொடுக்கவில்லை, முன்னுரையிலும் சொல்லவேண்டியதை மட்டும் சொல்லி கச்சிதமான வடிவில் எழுதியிருந்தார். இல்லை, காவா ஒன்றும் கிறுக்கல்ல. குதிரைகள் மீதான ஆய்வுக்கட்டுரையே அவருடைய கிறுக்குத்தனத்தின் இறுதி ஆட்டமாக இருந்திருக்க வேண்டும். அதன்பிறகு சில நாட்களில் நான் அமெரிக்கா வந்துவிட்டேன்.
நான் இப்போதும் சிலசமயம் காவாவின் இந்த வினோத செயலுக்கான அர்த்தத்தை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் அந்த செயலுக்கு ஏதேனும் அர்த்தம் இருக்கும்பட்சத்தில் அது தற்போது காவா இருக்குமிடமான நமக்கு அப்பாலுள்ள வெளியில்தான் இருக்க முடியும்.
****
டியோஜீன்ஸ் – கிரேக்க தத்துவவாதி, அவரது சமூக விமர்சன நோக்கிற்காக அறியப்பட்டவர்.
அப்பலூசா – ஓர் அமெரிக்க குதிரை இனம்.
மூலம்: Collected Stories (Isaac Bashevis Singer: Classic Editions)
டி.ஏ. பாரி
டி.ஏ. பாரி, அவ்வப்போது சில ஆங்கில சிறுகதைகளை மொழியாக்கம் செய்து வருகிறார். பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட்டு வரும் இவர் ஈரோட்டில் வசிக்கிறார்.