நான் ஒரு புனிதரை பற்றி சொல்லப் போகிறேன்! நம்மிடம் அவர்களின் மனஉறுதி இல்லை, அவர்களின் எண்ண ஓட்டங்களை நம்மால் புரிந்து கொள்ளவும் முடியாது! ஆனால் நான் சொல்லப் போவது என் சொந்த மாமனாருக்கு நடந்ததை பற்றித்தான்.
நான் ஒரு சிறுவனாக இருக்கும்போதே குஸ்மிர் நகரின் ரப்பியை பின்தொடர்பவனாக இருந்தேன் – அவரை விட தகுதியானவர் வேறு யார் இருக்க முடியும்? என் மாமனார் ராசேவ் நகரில் வாழ்த்து வந்தார். நான் அங்கு குடியேற நேர்ந்தது. செல்வந்தரான அவர் தன் வீட்டை கச்சிதமான முறையில் நடத்தி வந்தார். உதாரணத்திற்கு உணவு நேரத்தில் நடப்பதை மட்டும் கவனிப்போம். நான் கைகளை கழுவி பிரார்த்தனை செய்து முடித்த பின்பே என் மாமியார் அப்பங்களை ஓவனிலிருந்து எடுப்பார். ஏனெனில் அப்போதுதான் அவை புதிதாகவும் சூடாகவும் இருக்கும்! அவர் அதற்கான நேரத்தை மிகத் துல்லியமாக கடைப்பிடித்தார். என் சூப்பில் அவர் வேகவைக்கப்பட்ட முட்டைகளை இட்டார். இதுமாதிரியான ஆடம்பரங்களுக்கு நான் பழகியிருக்கவில்லை. என் சொந்த வீட்டிலோ ரொட்டித்துண்டுகளை இரண்டு வாரத்திற்கு முன்பே சுட்டுவைத்து விடுவார்கள். அதில் பூண்டை தடவி சாப்பிட்டுவிட்டு குளிர்ந்த கிணற்று நீரில் கைகழுவிவிடுவதே என் வழக்கம்.
ஆனால் என் மாமனார் வீட்டில் ஒவ்வொன்றும் ஆடம்பரமாக இருந்தன – கதவுகளுக்கு பித்தளை கைப்பிடிகள், செம்பு பாத்திரங்கள். பாதங்களை வைக்கோல் மிதியடியில் தேய்த்துவிட்டே வீட்டு நிலையை கடக்க வேண்டும். சிக்கரித்தூளில் காபி போடுவது குறித்துதான் எத்தனை அங்கலாய்ப்புகள்! என் மாமியார் ஒரு மிஸ்னகிடு1 (Misnagids) குடும்பத்திலிருந்து வந்தவர் – ஹசிடுகளின்2 (Hasids) எதிர்தரப்பு – மிஸ்னகிடுகளை பொருத்தவரை இந்த உலகின் இன்பங்களும் முக்கியமானதே.
என் மாமனார் ஒரு நேர்மையான யூதர், ஒரு தல்மூத்3 (Talmud) அறிஞர். அதே சமயம் மர வியாபாரத்திலும் கணக்குகள் பார்ப்பதிலும் ஈடுபட்டிருந்தார். அவருக்கு காட்டில் சொந்தமாக ஒரு குடில் இருந்தது, கொள்ளையர்கள் அச்சம் இருப்பதால் அங்கு போகும்போது ஒரு துப்பாக்கியுடன் இரண்டு நாய்களையும் கூட்டிக்கொண்டு செல்வார். அவருக்கு கணிதத்தில் மடக்கைச்சமன்பாடுகள் அளவுக்கு தேர்ச்சியுண்டு, அதுபோக தன் சுத்தியலால் ஒரு மரப்பட்டையை தட்டிப் பார்த்தே உள்ளிருக்கும் தடிமனை சொல்லிவிடக்கூடியவர். சதுரங்க விளையாட்டில் நல்ல பரிச்சயம் உண்டு. ஓய்வு நேரங்களின் போதெல்லாம் அவர் ஏதேனும் ஒரு புனிதநூலை வாசித்தார். “இதயத்தின் கடமைகள்” எனும் நூலை அவர் எப்போதுமே தன் பாக்கெட்டில் வைத்திருந்தார். வெள்ளி முலாமிட்ட பொன்னிற கைப்பிடி கொண்ட நீண்ட குழலில் புகைப்பிடிப்பார். பிரார்த்தனைக்கான சால்வையை தன் கைப்பையில் வைத்திருப்பார், தோலுரையிட்ட மறைநூல்கள் தனியாக வெள்ளிப்பேழைகளில் அடுக்கப்பட்டுக்கும்.
பொதுவாக அவரிடம் இரண்டு பிரச்சனைகள் இருந்தன. முதலாவதாக அவர் ஒரு தீவிரமான மிஸ்னகிடு (Misnagid). தீவிரமென்ன தீவிரம், அவர் பற்றியெரிந்தார் என்றே சொல்ல வேண்டும். ஹசிடுகளை “அபவாதிகள்” என்று விமர்சித்த அவர், அவர்களின் புனிதரான பால் ஷெம் (Baal Shem) ஐ பற்றியே இழிவாக பேசத் தயங்கியதில்லை. முதன்முறை அவர் அவ்வாறு பேசக் கேட்டபோது நான் நடுங்கிவிட்டேன். பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு ஓடிவிடலாம் என்றே தோன்றியது. ஆனால் குஸ்மிரின் ரப்பியோ விவாகரத்துக்கு எதிரானவர். நீ உன் மனைவியையே திருமணம் செய்திருக்கிறாய், மாமனாரை அல்ல. மேலும் அவர் மோசஸின் மாமனார் ஜேத்ரோவும் கூட ஒரு ஹசிடு அல்ல என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஜேத்ரோ பின்னாளில் ஒரு புனிதராக ஆனார். ஆனால் இவ்வாறு யோசிப்பது குதிரைகளுக்கு முன்பாக வண்டியை நிறுத்துவது போன்றது…
என் மாமனாரின் இரண்டாவது பிரச்சனை அவருடைய கட்டுக்கடங்காத கோபம். பிற தார்மீக பலவீனங்கள் அனைத்தையும் அவரால் வெற்றிகொள்ள முடிந்தது, இந்த ஒன்றைத் தவிர. ஒரு வியாபாரி தான் வாங்கிய கடனை இறுதிபைசாவரை சரியான காலத்திற்குள் திருப்பியளிக்காவிட்டால் உடனே அவனை மோசடிக்காரன் என்றுகூறி அவனிடம் அதற்குபிறகு எந்த கொடுக்கல் வாங்கலும் வைத்துக் கொள்ளமாட்டார். டவுனில் இருக்கும் செருப்பு தைப்பவனிடமிருந்து அவருக்கென்று பிரத்யேகமாக செய்யப்பட்ட காலணிகள் கொஞ்சம் இறுக்கமாகவோ அல்லது தளர்வாகவோ அமைந்துவிட்டால் அவனை இரக்கமே இல்லாமல் திட்டி தீர்த்துவிடுவார்.
அனைத்துமே கச்சிதமாக இருக்க வேண்டும். யூத வீடுகள் என்பது கிறிஸ்துவ சபைகள் அளவுக்கே சுத்தமாக இருக்க வேண்டும் என்று அவரது மண்டையில் பதிவாகியிருந்தது. மனைவியிடம் வீட்டிலிருக்கும் தட்டுகள் பானைகள் ஆகியவற்றை தான் சோதனையிடுவதை வலியுறுத்தினார். அதில் எங்கேனும் சிறுகறை தென்பட்டாலும் கோபத்தில் வெடித்தார். அவரை பற்றிய கிண்டல் ஒன்றுண்டு: ஒருமுறை உருளைக்கிழங்கு துருவும் கருவியில் அவர் ஓர் ஓட்டையை கண்டுபிடித்துவிட்டார்! அவருடைய குடும்பம் அவரை நேசித்தது, நகரம் அவரை மதித்தது. ஆனால் அளவு மீறிய கோபத்தை எந்த அளவுதான் மனிதர்களால் பொறுத்துக் கொள்ள முடியும்? அனைவருமே அவருக்கு எதிரிகளானார்கள், வியாபாரத்தில் கூட்டாளிகள் விலகிக் கொண்டார்கள். என் மாமியாரும் கூட இதற்குமேல் பொறுக்க முடியாது எனும் நிலைக்கு வந்துவிட்டிருந்தார்.
ஒருமுறை அவரிடம் ஒரு பேனா இரவல் வாங்கியிருந்தேன். அதை உடனே திருப்பியளிக்க மறந்துவிட்டேன். இந்நிலையில் ஒருநாள் அவர் லுப்ளினுக்கு கடிதமெழுத நினைத்து பேனாவை தேடினார். பேனா என்னிடமிருப்பதை நினைவுகூர்ந்து அதை அவசரமாக திருப்பிக் கொடுத்தேன். ஆனால் அதற்குள்ளாக அவருக்கு வந்த கோபத்தில் என் கன்னத்திலேயே அறைந்துவிட்டார். ஒரு தந்தை தன் சொந்த மகனை அடிப்பதென்றால் அது வேறு விஷயம். ஆனால் ஒரு மாமனார் தன் மருமகனை இவ்வாறு அடிப்பது என்பது இதுவரை கேள்விப்படாதது! இச்சம்பவத்தால் என் மாமியார் மனம்நொந்து உடல்நலம் பாதிக்கப்பட்டார். என் மனைவி வேதனையில் கண்ணீர்விட்டாள். நான்கூட அந்த அளவுக்கு வருத்தப்படவில்லை. என்ன பெரிதாக நடந்துவிட்டது? ஆனால் என் மாமனாரும் நடந்ததை எண்ணி தன்னைத்தானே மிகவும் வருத்திக் கொள்வதை கவனித்தேன். எனவே அவரிடம் சென்று சொன்னேன். “மாமா, இதுபற்றி அதிகம் யோசிக்க வேண்டாம். நான் உங்களை மன்னித்து விட்டேன்.”
என்னிடம் குறைவாக பேசுவதை அவர் ஒரு நெறியாகவே கடைப்பிடித்து வந்தார். ஏனெனில் எல்லாவற்றைப் பற்றியும் தெளிவான திட்டமிடல் கொண்டவர் அவர், நானோ சற்று மனம்போன போக்கில் செயல்படுபவன். என் மேல்கோட்டை கழற்றினால் அதை எங்கே போட்டேன் என்பதுகூட நினைவிருக்காது. என்னிடம் நாணயங்கள் தரப்பட்டால் அதை கண்டிப்பாக தொலைத்துவிடுவேன். என்னதான் ராசேவ் சிறிய கிராமமாக இருந்தாலும் சந்தையை கடந்துசென்றாலே மீண்டுவர எனக்கு வழி தெரியாது. வீடுகள் அனைத்தும் ஒரேமாதிரியாக இருக்கும், அதில் வசிக்கும் பெண்களையோ நான் பார்த்ததுகூட கிடையாது. நான் தொலைந்து போய்விட்டால் ஏதேனும் வீட்டுக் கதவை தட்டி, “என் மாமனார் இங்கு வசிக்கிறாரா?” என்று கேட்பேன். வீட்டுக்குள் இருப்பவர்கள் எப்போதுமே மெல்லிய சிரிப்பை அடக்கிக்கொண்டுதான் பேசத் தொடங்குவார்கள். கடைசியில் ஒரு முடிவெடுத்தேன், இனிமேல் வீட்டிலிருந்து நேராக ஜெபக்கூடத்திற்கும் மீண்டும் வீட்டிற்கும் வருவதைத் தவிர வேறெங்கும் செல்வதில்லை என்று. பின்னர் சில காலம் கழித்துதான் என் மாமனாரின் வீட்டருகிலேயே ஒரு அடையாளம் இருப்பது உறைத்தது: ஆழமான வேர்களும் நல்ல தடிமனும் கொண்ட குறைந்தது இருநூறு ஆண்டுகள் வயதுள்ள மிகப்பெரிய மரம் ஒன்று வீட்டின் பக்கவாட்டில் நின்றது.
எவ்வாறிருப்பினும் ஏதேனும் ஒரு காரணத்துக்காக எனக்கும் என் மாமனாருக்கும் சச்சரவு வந்துகொண்டேதான் இருந்தது, அவரும் என்னை தவிர்த்து வந்தார். ஆனால் பேனா சம்பவத்திற்கு பின்பு அவர் என்னை நெருங்கினார். “பாருச், நான் என்ன செய்யட்டும்?” அவர் பேசலானார். “நான் கோபத்தை அடக்கத் தெரியாதவன். கோபத்தின் பாவம் உருவ வழிபாட்டின் பாவமளவுக்கே தீங்கை விளைவிப்பது என்று தெரியும். பல ஆண்டுகளாக கோபத்தை கட்டுப்படுத்த முயன்று வருகிறேன், ஆனால் அது மேலும் மோசமடைந்தே வருகிறது. நான் நரகத்தில் வீழ்ந்துக் கொண்டிருக்கிறேன். உலகியல் விஷயங்களிலும் கூட இது மோசமானதுதான். எதிரிகள் என்னை அழிக்க நினைக்கிறார்கள். சாப்பாடுகூட கிடைக்காமல் வீட்டில் நான் தனித்து விடப்படுவேனோ என்று பயப்படுகிறேன்.”
நான் ஒரு யோசனை சொன்னேன், “மாமா, என்னுடன் வாருங்கள், நான் உங்களை குஸ்மிரின் ரப்பி சாக்கேளிடம் கூட்டிப் போகிறேன்.”
அவரது முகம் சுருங்கியது. “உனக்கென்ன பைத்தியமா?” என்று கத்தினார். “அற்புதங்கள் நிகழ்த்தும் ரப்பிகளை நான் நம்புவதில்லை என்று உனக்குத் தெரியாதா!”
நான் என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன். முதலாவதாக அவர் என்னை திட்டிவிட்டு எப்போதுமே அதுபற்றி பின்னர் வருந்தவும் செய்வார். இரண்டாவதாக தேவையில்லாமல் ஒரு புனிதரைப் பற்றி அவதூறு பேச ஆரம்பிப்பார், அதை நான் விரும்பவில்லை.
அதன்பிறகு நடந்ததுதான் நம்பமுடியாததாக இருந்தது. மாலை பிரார்த்தனைக்கு பின் என்னை அழைத்து சொன்னார், “பாருச், நாம் குஸ்மிர் போகிறோம்.” நான் திகைத்து நின்றேன். சரி, அதுபற்றி யோசித்து பயனில்லை.. அவர் முடிவெடுத்துவிட்டார், உடனே பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தோம். அது பனிக்காலமாக இருந்ததால் நாங்கள் சக்கரங்களற்ற பனிச்சறுக்கு குதிரைவண்டி ஒன்றை அமர்த்திக்கொள்ள வேண்டியிருந்தது. பனி முழங்கால் அளவுக்கும் அதிகமாக பெய்திருந்ததால் சாலை ஆபத்து நிறைந்ததாக இருந்தது, காடுகளெங்கும் நரிகள் உலவின, வழிப்பறி கொள்ளையர்களுக்கோ குறைவில்லை. ஆனால் நாங்கள் உடனடியாக கிளம்ப வேண்டியிருந்தது. என் மாமனாரின் சுபாவம் அப்படித்தான். என் மாமியாரோ அவருக்கு மூளை குழம்பிவிட்டது என்றே முடிவுகட்டிவிட்டார். அவர் தன் கம்பளி கோட்டை அணிந்து ஒருஜோடி ஓவர்ஷுக்களையும் (Overshoes) போட்டுக்கொண்டு வந்தார். பயணத்திற்கான விசேஷ பிரார்த்தனை பாடலை ஜபித்தார். எனக்கு இந்த மொத்த விவகாரமும் பெரும் சாகசமாக இருந்தது. நான் குஸ்மிர் நகருக்கு என் மாமனாரை கூட்டிக்கொண்டல்லவா போகிறேன்? என்னைவிட மகிழ்ச்சியானவர் வேறுயாரிருக்க முடியும்? ஆனால் ஒருபக்கம் பயத்தில் நடுங்கவும் செய்தேன், அங்கு என்ன நடக்க போகிறதென்று யாருக்குத் தெரியும்!
பயணத்தின் போது என் மாமனார் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. வழிமுழுக்க பனிப்பொழிவு இருந்தது. கடந்துவந்த வயல்வெளிகள் எங்கிலும் சுழன்றிரங்கும் பனித்துகள்களால் நிரம்பியிருந்தன. தத்துவவாதிகள் ஒவ்வொரு பனித்துகளும் தனித்துவமான வடிவம் கொண்டது என்று சொல்கின்றனர். ஆனால் ஒரு பனித்துளி தன்னளவிலேயே முழுமையானது. சொர்க்கத்திலிருந்து சுழன்றிரங்கும் அது அவ்வுலகின் அமைதியை தன்னுள் ஏந்திவந்து நம்மிடையே திகழ செய்கிறது. கபாலாவை (Cabala) பொறுத்தமட்டில் வெண்மை நிறம் கருணையை குறிப்பது, சிவப்பு நிறமோ நெறிகளை குறிக்கிறது.
இன்றைக்கெல்லாம் பனி சாதாரண விஷயமாக ஆகிவிட்டது, அதிகபட்சம் ஒன்றிரண்டு நாட்களுக்குமேல் பொழிவதுமில்லை. ஆனால் அந்நாட்களில் பனி ஒருமாதம்கூட தொடர்ந்து இடைவிடாமல் பொழியும்! காற்றால் ஒதுக்கி குவிக்கப்பட்ட பனித்திரள்கள் மலைகளாக குவிந்திருக்கும், சமயங்களில் வீடுகளே புதைந்துவிடும். அனைவருமே தோண்டித்தான் வெளியேற வேண்டியிருக்கும். சொர்க்கமும் பூமியும் இணைந்து ஒன்றாக ஆகிவிட்ட நாட்கள் அவை. வயதானால் ஒரு முதியவரின் தாடி ஏன் வெண்ணிறம் கொள்கிறது? இவையெல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடைய விஷயங்கள்தாம். இரவுகளில் நாங்கள் கொலைவிலங்குகளின் ஊளைகளை கேட்டோம்… அல்லது அவை வெறுமனே காற்றின் சப்தமாக இருந்திருக்கலாம்.
நாங்கள் ஒரு வெள்ளிக்கிழமை மதியத்தில் குஸ்மிரை வந்தடைந்தோம். என் மாமனார் ரப்பிக்கு வணக்கம் சொல்ல அவரது வாசிப்பறைக்கு சென்றார். அவருக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது. அது பனிக்காலம் தீவிரம் கொள்ளும் சமயம் என்பதால் ரப்பியின் சீடர்கள் குறைந்த அளவே வந்திருந்தனர். நான் வரவேற்பறையில் காத்திருந்தேன், என் சருமம் குளிரில் சிலிர்த்துக் கொண்டிருந்தது. என் மாமனார் இயல்பிலேயே விடாப்பிடியானவர். ரப்பி சாக்கேளிடம் நிச்சயம் எதிர்த்து பேசியிருப்பார். முக்கால் மணிநேரம் கழித்து அவர் வெளிவந்தபோது நீண்ட தாடிக்கு மேலிருந்த அவரது முகம் வெளுத்திருந்தது, அடர்ந்த புருவங்களிடையே அவரது கண்கள் நிலக்கரியைப் போல் கனன்று கொண்டிருந்தன.
“இன்று மட்டும் சப்பாத்4 (Sabbath) தினமாக இருந்திருக்காவிட்டால் நான் இப்போதே வீட்டுக்கு கிளம்பியிருப்பேன்,” என்றார்.
“என்ன நடந்தது மாமா?” நான் கேட்டேன்.
“உன் அதிசய ரப்பி ஒரு முட்டாள்! ஒன்றும் தெரியாதவர்! அவர் மட்டும் வயதானவராக இருந்திருக்காவிட்டால் அவரது பக்கவாட்டு கிருதா முடியை (Sidelocks) பிய்த்து எறிந்திருப்பேன்.”
என்னுள் ஆழமான கசப்பை உணர்ந்தேன், நான் அவரை இங்கு கூட்டி வந்திருக்கவே கூடாது. குஸ்மிரின் ரப்பி சாக்கேளைப் பற்றி இம்மாதிரி பேசுவதென்றால்!
“மாமா, ரப்பி உங்களிடம் என்ன சொன்னார்?” நான் பொறுமையாக கேட்டேன்.
“அவர் என்னை துதிபாட சொல்கிறார்,” என் மாமனார் தொடர்ந்தார். “எட்டு நாட்களுக்கு நான் சந்திக்கும் அனைவரிடமும் துதிபாட வேண்டுமாம், அவன் ஒரு மோசமான திருட்டுப்பயலாக இருந்தாலும் சரி. உன் ரப்பிக்கு கொஞ்சமாவது நுண்ணுணர்வு இருந்திருந்தால் நான் துதிபாடுவதை மோசமாக வெறுப்பவன் என்று தெரிந்திருக்கும். அதுபற்றி யோசித்தாலே எனக்கு அருவருப்பாக உள்ளது. என்னை பொறுத்தவரை துதிபாடுபவன் ஒரு கொலைகாரனை விடவும் மோசமானவன்.”
“மாமா, அதாவது..” நான் சமாதானம் சொல்ல முயன்றேன், “துதி பாடுவது மோசமான செயலென்று ரப்பிக்கு தெரியாதா என்ன? என்னை நம்புங்கள், அவர் இதை தெரிந்தேதான் சொல்கிறார்.”
“என்ன தெரியும் அவருக்கு? ஒருபாவம் இன்னொன்றை அழித்துவிடாது. அவருக்கு இறைவிதிகளை பற்றி ஒன்றும் தெரியவில்லை.”
நான் முழுவதுமாய் உடைந்துபோய் அங்கிருந்து விலகிவிட விரும்பினேன். அதுவரை சடங்கு குளியலுக்கு சென்றிருக்கவில்லை ஆதலால் அங்கு சென்றேன். என் மாமனாரைப் பற்றி ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன், அவர் இதுவரை சடங்கு குளியலுக்கே சென்றதில்லை. எதனாலென்று தெரியவில்லை. அது மிஸ்னகிடுகளின் வழக்கமாக இருக்கலாம். அல்லது ஒருவேளை அவரது அகங்காரம் அதை தடுத்திருக்கலாம். பிற மனிதர்கள் முன்னிலையில் ஆடையில்லாமல் இருப்பதென்பது அவருடைய மாண்புக்கு அப்பாற்பட்ட செயல். சடங்கு குளியலறையிலிருந்து நான் வெளிவருகையில் சப்பாத்துக்கான மெழுகுவர்த்திகள் ஏற்கனவே ஏற்றிவைக்கப்பட்டிருந்தன. அந்தி சாய்வாதற்கு வெகுநேரம் முன்பே ரப்பி சாக்கேள் சப்பாத் மெழுகுவர்த்திகளை தானே ஏற்றிவைத்துவிடுவார். இதற்காக அவர் தன் மனைவியைகூட எதிர்பார்ப்பதில்லை.
நான் பிரார்த்தனை அறைக்குள் நுழைந்தேன். ரப்பி வெள்ளை தொப்பி அணிந்து தன் வெண்ணிற அங்கியில் நின்றிருந்தார். அவருடைய முகம் சூரியனைப் போல பிரகாசித்தது. அவர் நம்மைவிட மேலான உலகில் இருப்பதை ஒருவர் தெளிவாக காண இயலும். “இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள், அவரது நன்மைக்காக நன்றி செலுத்துங்கள், என்றுமுள்ள அவரது கருணைக்காக நன்றி செலுத்துங்கள்..” அவர் பாடியபோது சுவர்கள் அதிர்ந்தன. ரப்பி கைகளை தட்டியும் கால்களால் தரையில் உதைத்தும் தாளமிட்டபடி பாடினார்.
வெகுசில சீடர்களே அங்கிருந்தனர். ஆனால் அவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், புனித கடமைகளை ஆற்றுபவர்கள், அவர்கள் ஒவ்வொருவரும் ரப்பிக்கு தனிப்பட்ட முறையில் நெருக்கமானவர்கள். அவர்கள் அனைவரும் இணைந்து பாடியதில் பிரார்த்தனை முழக்கங்கள் விண்ணகத்தை முட்டுவதை என்னால் உணர முடிந்தது. புனித சப்பாத்துக்கு அவ்வாறான ஒரு தொடக்கத்தை குஸ்மிரிலும் கூட அதுவரை நான் அனுபவித்ததில்லை. அந்த ஆனந்த பரவசம் எந்தளவுக்கு தீவிரமானதென்றால் அதை நீங்கள் கைகளால் தொட்டுணர்ந்துவிட முடியும். அவர்கள் அனைவரது கண்களும் பரவசத்தில் மின்னின. என் மனம் மிகவும் இலகுவாகி கால்கள் தரையிலிருந்து பறப்பதாக உணர்ந்தேன். நான் ஒரு ஜன்னலருகே பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். பனி அனைத்தையும் மூடியிருந்தது – சாலைகள், பாதைகள், வீடுகள் எல்லாம் மறைந்துவிட்டிருந்தன. மெழுகுவர்த்திகள் பனியில் எரிவதுபோல் தோற்றமளித்தன. சுவர்க்கமும் பூமியும் இணைந்து ஒன்றாகியது. நிலவும் நட்சத்திரங்களும் கூரையை தொட்டன. அன்றைய வெள்ளிக்கிழமை மாலை குஸ்மிரில் இல்லாதவர்களால் அவ்வுலகை ஒருபோதும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாது…
நான் என் மாமனாரை பார்த்தேன். அவர் ஒரு மூலையில் தலை சாய்த்தபடி நின்றிருந்தார். அவரது முகத்தில் எப்போதுமிருக்கும் இறுக்கம் மெலிதாக தென்பட்டாலும் தற்போது அவர் வேறொரு மனிதராக, சற்றே அடக்கமானவராக தெரிந்தார். பிரார்த்தனைகள் முடிந்து நாங்கள் உணவருந்த ரப்பியின் மேசைக்கு சென்றோம்.
ரப்பி வெண்பட்டாலான அங்கியை அணிந்திருந்தார், அதில் வெள்ளி ஜரிகையும் பூக்களாலான சித்திர வேலைப்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. சப்பாத் விருந்துக்கு முந்தைய சடங்கின் பகுதியாக அவர் தன் நூலகத்தில் தனியாக அமர்ந்து மிஷ்னா (Mishnah) மற்றும் சோஹார் (Zohar) இல் இருந்து சில அத்தியாயங்களை வாசித்தார். மூத்த சீடர்கள் இருக்கைகளில் அமர்ந்திருக்க என்னைப் போன்ற இளையவர்கள் நின்றிருந்தோம்.
ரப்பி சில வாக்கியங்களை உச்சரித்தபடி தனியறையிலிருந்து வெளிவந்தார். அதன்பிறகு திராட்சை ரசத்தையும் சப்பாத்துக்கான வெண்ணிற ரொட்டியையும் ஆசிர்வதித்து பிரார்த்தனை பாடலை பாடினார். ஒரு ஆலிவ் பழம் அளவுக்கு ஒருவாய்தான் சாப்பிட்டிருப்பார். அதற்குள்ளாக சப்பாத் மேசையில் பாடப்படும் பாடல்களை பாட ஆரம்பித்துவிட்டார். அது வெறுமனே பாடுவது அல்ல! அவரது உடல் முன்னும் பின்னும் அசைந்தாடியது, புறா குனுகுவதுபோல அவரது குரல் எழுந்தது.. தேவதைகளின் பாடல் அவ்வாறுதான் ஒலிக்கும். இறைவனுடன் எந்த அளவுக்கு ஐக்கியமாகி விட்டாரென்றால் அவருடைய ஆன்மா கிட்டத்தட்ட உடலிலிருந்து வெளியேறிவிட்டதுபோல் தோன்றியது. அங்கிருந்த அனைவருமே அந்த புனித ஆத்மா வேறெங்கோ சொர்க்கத்தில் சஞ்சரிப்பதை உணர்ந்தனர்.
அவர் எந்த அளவுக்கு உயரங்களை எட்டினார் என்பது யாருக்குத் தெரியும்? அதை எவ்வாறு வர்ணிக்க முடியும்? தல்மூதில் சொல்லப்பட்டிருப்பது போல, “இதுமாதிரியான ஆனந்தத்தை பார்த்திராதவர்கள் இதுவரை ஆனந்தத்தையே பார்த்திராதவர்கள் ஆவார்கள்.” அவர் ஒரே சமயம் குஸ்மிரின் சபையிலும், மேலே இறைவனின் மன்றத்திலும், பறவையின் கூட்டிலும், மகிமையின் சிம்மாசனத்திலும் வீற்றிருந்தார். அந்த பேருவகைநிலையை கற்பனை செய்வதுங்கூட கடினம். நான் என் மாமனாரை பற்றியோ அல்லது என்னை பற்றியோகூட மறந்துவிட்ட நிலையில் இருந்தேன். நான் இனிமேலும் பாருச் நகரிலிருந்து வந்த ராசேவ் அல்ல – உடலற்ற வெறும் இன்மை. நாங்கள் ரப்பியின் மேசையிலிருந்து விடைபெறுவதற்கு நள்ளிரவு ஒருமணி ஆகிவிட்டது. அத்தகைய ஒரு சப்பாத் விருந்து இதுவரை நடந்ததில்லை இனிமேல் நடக்கப்போவதுமில்லை – ஒருவேளை மீட்பரின் வருகையின்போது நடக்கலாம்.
ஆனால் நானொரு முக்கியமான விஷயத்தை தவறவிடுகிறேன். ரப்பி நெறிகளைப் பற்றி விளக்கமளித்தார். அவர் சொன்ன விஷயம் என் மாமனாருடனான சந்திப்பின்போது அவர் பேசியவற்றுடன் தொடர்புடையது. “ஒரு யூதன் மதப்பற்று இல்லாதவனாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?” ரப்பி கேட்டார். அவரே தொடர்ந்தார், “மதப்பற்று இருப்பவனாக நடிக்க வேண்டியதுதான். இறைவனுக்கு நல்ல நோக்கங்கள் தேவையில்லை. செயல்களே கணக்கிடப்படுகின்றன. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே முக்கியம். ஒருவேளை உங்களுக்கு கோபம் வருகிறதா? தாராளமாக கோபப்படுங்கள், ஆனால் அதேசமயம் அன்பான வார்த்தைகளுடன் நட்பாகவும் நடந்து கொள்ளுங்கள். போலியாக நடிப்பது பற்றி பயப்படுகிறீர்களா? சரி நீங்கள் வேறொருவராக நடிப்பதால் மட்டும் என்ன ஆகிவிடும்? நீங்கள் யாருக்காக வேடமிடுகிறீர்கள்? பரலோகத்தில் உள்ள பிதாவுக்காக. அந்த புனிதரின் பெயரால் சொல்கிறேன், அவர் நமது உள்நோக்கங்களை அறிவார், உள்நோக்கங்களுக்கு பின்னாலுள்ள உள்நோக்கங்களையும் அவர் அறிவார். அதுவே முக்கியம்.”
ரப்பியின் உபதேசங்களை எவ்வாறு எடுத்துச் சொல்வது? அவர் வாயிலிருந்து முத்துக்கள் உதிர்ந்தன என்றே சொல்ல வேண்டும், அதன் ஒவ்வொரு சொல்லும் தீயைப் போல கனன்று இதயத்தை துளைத்தன. சொற்கள் மட்டுமல்ல அவரது குரலும் உடல்மொழியும் இணைந்து உண்டாக்கிய உணர்வு அது. சாத்தானை வெறும் மனவுறுதியால் மட்டும் வென்றுவிட முடியாது என ரப்பி சொன்னார். சாத்தானுக்கு உடல் கிடையாது, அது பிரதானமாக பேச்சின் ஊடாகவே வேலை செய்கிறது என்பதை அனைவருமே அறிவார்கள். அதற்கு உங்கள் நாவை அளிக்காதீர்கள் – அதனை வெற்றிகொள்ளும் வழி அதுதான். உதாரணத்திற்கு பீயரின் மகன் பாலம்மை எடுத்துக் கொள்ளுங்கள். அவன் இஸ்ரேலின் குழந்தைகளை சபிக்க எண்ணினான். ஆனால் இறுதியில் தன்னைத்தானே கட்டாயப்படுத்தி தன் நாவாலேயே அவர்களுக்கு வாழ்த்து கூறினான், இதனால் அவன் பெயர் பைபிளில் இடம்பெற்றுள்ளது. ஒருவன் தீமைக்கு தன் நாவை அளிக்காத நேரங்களில் அமைதியாக இருந்துவிட வேண்டும்.
நான் ஏன் சுற்றிவளைத்து கொண்டிருக்க வேண்டும்? என் மாமனார் மூன்றுவேளையும் சப்பாத் விருந்தில் கலந்துகொண்டார். அதன்பிறகு சப்பாத் இரவின்போது ரப்பியிடம் விடைபெறும் பொழுது அவரது வாசிப்பறையில் ஒருமணிநேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தார்.
வீட்டிற்கு வரும் வழியில், “மாமா, நீங்கள்..?” என்று நான் பேச்சை தொடங்கியபோது அவராகவே பதிலளித்தார், “உனது ரப்பி ஒரு மகத்தான மனிதர்.”
ராசேவ் நகருக்கு திரும்பி வரும் சாலை ஆபத்துகளால் நிறைந்திருந்தது. அது மத்திய பனிக்காலமாக இருந்தாலும் விஸ்துலா ஆற்றின் பனிக்கட்டிகள் அதற்குள்ளாக விரிசலிட்டிருந்தன, பஸ்கா (Passover) பண்டிகையின்போது நடப்பதுபோல அவை ஆற்றின்வழி மிதந்து சென்றன. இத்தனை குளிருக்கும் நடுவிலே இடியும் மின்னலும் வேறு. ஐயமே வேண்டியதில்லை, இதற்கெல்லாம் சாத்தானே காரணம்! நாங்கள் செவ்வாய்க்கிழமை வரை ஒரு விடுதியில் தங்க நேர்ந்தது – அங்கு ஏற்கனவே பல மிஸ்னகிடுகள் தங்கியிருந்தனர். யாராலும் தங்கள் பயணத்தை தொடர முடியவில்லை. வெளியே பனிப்புயல் வீசிக் கொண்டிருந்தது. புகைப்போக்கி வழி கேட்கும் காற்றின் ஊளை சப்தம் அனைவரையும் நடுங்க வைத்தது.
மிஸ்னகிடுகள் எப்போதும் ஒரேமாதிரி தான். இவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. ஹசிடுகள் குறித்து அவதூறுகளை பொழிய ஆரம்பித்தனர் – ஆனால் என் மாமனார் அமைதி காத்தார். அவர்கள் அவரை தூண்டிவிட முயற்சித்தனர் ஆனால் அவர் அதில் ஈடுபட மறுத்துவிட்டார். ஒவ்வொன்றாக அவரிடம் கொண்டுவந்தனர்: “இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” அவர் சாதுரியமாக எல்லாவற்றையும் தவிர்த்து தன் மென்போக்கையே கடைப்பிடித்தார். “ஏன் இப்படி மாறிவிட்டீர்கள்?” அவர்கள் கேட்டனர். அவர் ரப்பி சாக்கேளிடமிருந்து வருவது தெரிந்திருந்தால் அவரை துளைத்தெடுத்திருப்பார்கள்.
இதற்கு மேலும் நான் உங்களிடம் என்னவென்று சொல்வது? என் மாமனார் ரப்பி சொன்ன அறிவுரையை பின்பற்றினார். மனிதர்களிடம் சடாரென கோபத்தில் வெடிப்பதை நிறுத்தினார். கண்கள் கோபத்தில் கணன்றபோதும் பேச்சு நிதானமாகவே இருந்தது. சிலசமயம் யாரையேனும் அடிப்பதற்காக புகைக்குழலை உயர்த்தினாலும் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக பேசி நகர்ந்துவிடுவார். என் மாமனார் மாறிவிட்டார் என்பதை அறிந்துகொள்ள ராசேவ்வின் மக்களுக்கு நீண்ட நாட்கள் ஆகவில்லை. அவர் தன் எதிரிகளுடன் சமாதானம் செய்துகொண்டார். வீதியில் ஓடித்திரியும் எந்த சிறு குழந்தையுடனும் கன்னத்தை கிள்ளி கொஞ்சிபேசினார். தண்ணீர் சுமந்து வருபவன் வீட்டிற்குள் நுழைகையில் சிறிது நீரை சிந்திவிட்டால் என் மாமனார் இப்போதெல்லாம் கோபத்தை காட்டிக்கொள்வதில்லை, அது அவருக்கு மிகுந்த எரிச்சலூட்டும் செயலாக இருந்த போதிலும். “எப்படி இருக்கிறாய், யோண்டில்?” அவர் கேட்பார். “உனக்கு உடம்பு சரியில்லையா என்ன?” இயல்பாக அல்ல மிகுந்த பிராயத்தனுத்துடன்தான் அதை செய்கிறார் என்பதை ஒருவர் உணர முடியும். அதுவே அதனை மதிப்புமிக்க செயலாக ஆக்குகிறது.
கொஞ்ச காலத்தில் அவரது கோபம் முற்றிலுமாகவே மறைந்து போனது. ரப்பி சாக்கேளை வருடத்திற்கு மூன்று முறை சந்திக்க ஆரம்பித்தார். நம்ப முடியாத அளவுக்கு நல்லியல்புகள் கொண்டவராகவும் பழகுவதற்கு இனியவராகவும் மாறினார். ஆனால் பொதுவாக பழக்கங்கள் அப்படித்தான் – நீங்கள் அதை முறித்தால் அது அப்படியே நேரெதிராக மாறிவிடும். மோசமான பாவத்தைகூட நற்செயலாக மாற்றிவிடமுடியும். முக்கியமான விஷயம் என்னவென்றால் செயல்படுவது தான், யோசித்துக் கொண்டிருப்பதல்ல. அவர் சடங்கு குளியலுக்கும் வரத் தொடங்கினார். பின்னாளில் வயதானபோது அவருக்கென்று தனியாக சீடர்கள் அமைத்தனர். இவையெல்லாம் ரப்பி சாக்கேளின் இறப்பிற்கு பின்பு நடந்தவை. என் மாமனார் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார், “நீங்கள் ஒரு நல்ல யூதனாக நடந்துகொள்ள முடியாவிட்டால், நல்ல யூதனாக நடியுங்கள். ஏனெனில் நீங்கள் ஒன்றை நடித்தால், நீங்கள் அதுவே தான். இல்லையென்றால் ஒரு மனிதன் எதற்காக நடிக்க ஆசைப்பட வேண்டும்? உதாரணத்திற்கு மதுவிடுதியில் இருக்கும் ஒரு குடிகாரனை எடுத்துக் கொள்ளுங்கள். அவன் ஏன் வெறொருவனாக நடிக்க வேண்டும்?”
ரப்பி ஒருமுறை கூறினார்: “ஏன் ‘தவறு செய்ய இச்சிக்காதே’ என்பது பத்து கட்டளைகளில் கடைசியாக சொல்லப்பட்டிருக்கிறது? ஏனெனில் முதலில் ஒருவன் தவறுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். அதன்பிறகே அவற்றை செய்ய அவனுக்கு ஆசை எழாமல் இருக்கும். விருப்பங்கள் தானாக வற்றும்வரை ஒருவன் காத்திருந்தால் அவனால் ஒருபோதும் புனிதத்தன்மையை எட்ட முடியாது.”
இது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் மகிழ்சியான மனிதனாக நடியுங்கள். மகிழ்ச்சி தானாக பின்னர் வந்துசேரும். நம்பிக்கையும் அவ்வாறுதான். எல்லாம் தவறாக நடந்தாலும் நீங்கள் நம்புவதாக பாவனை செய்யுங்கள். நம்பிக்கை பின்னர் வந்துசேரும்.
***
மூலம்: A Piece of advice. The Spinoza of Market Street and other stories தொகுப்பிலிருந்து.
ஆங்கில மொழியாக்கம்: Martha Glicklich & Joel Blocker
மிஸ்னகிடு1 – ஒரு யூதப்பிரிவு, பிரதானமாக ஹசிடுகளின் எதிர் தரப்பு
ஹசிடு2 – மரபான யூதப்பிரிவு
தல்மூத்3 – யூதத்தின் மைய சமய நூல்களில் ஒன்று
சப்பாத்4 – ஓய்வு மற்றும் வழிபாட்டிற்கான வாரநாள். யூதர்களை பொறுத்தவரை வெள்ளிக்கிழமை மாலை முதல் சனி அந்தி சாய்வது வரை.
டி.ஏ. பாரி
டி.ஏ. பாரி, அவ்வப்போது சில ஆங்கில சிறுகதைகளை மொழியாக்கம் செய்து வருகிறார். பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட்டு வரும் இவர் ஈரோட்டில் வசிக்கிறார்.
மிகவும் அருமையான கதை மொழிபெயர்ப்பு சிறப்பு வாழ்த்துகள்….