/

குழந்தைக் கதைகள் – ஐசக் பாஷவிஸ் சிங்கர்

தமிழில் : டி.ஏ.பாரி

ஐசக் பாஷவிஸ் சிங்கருக்கு 1978ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தன் நோபல் ஏற்புறையில் அவர் ஏன் இட்டிஷ் மொழியில் எழுதுகிறார் என்றும் ஏன் குழந்தைகளுக்கு எழுதுகிறார் என்றும் குறிப்பிட்டார். குழந்தைகள் என அவர் உத்தேசிப்பது விமர்சன சூழலால் மழுங்கடிக்கப்படாத முன்முடிவுகளற்ற வாசகனைத்தான் என்பதை அவர் உரையில் காணலாம். கதைகள் எதன்பொருட்டு எழுதப்படுகின்றனவோ அதை கொண்டாடும் வாசகர்களாகவே குழந்தைகளை காண்கிறார். குழந்தைகளுக்காக எழுதுவது பற்றி அவர் சொன்னது:

நான் குழந்தைகளுக்காக எழுத துவங்கியமைக்கு ஐநூறு காரணங்கள் உள்ளன, நேரம் கருதி இங்கு பத்தை மட்டும் குறிப்பிடுகிறேன்.

1. குழந்தைகள் புத்தகங்களை வாசிக்கின்றனர், மதிப்பிடுவதில்லை. அவர்கள் விமர்சகர்களை குறித்து கவலைப்படுவதில்லை.

2. குழந்தைகள் தங்களை அடையாளம் காண்பதற்காக வாசிப்பதில்லை.

3. தன்னை குற்றவுணர்விலிருந்து விடுவித்துக் கொள்ளவோ, புரட்சியாளனாக காட்டிக் கொள்ளவோ அல்லது அந்நியபடுதலிலிருந்து தப்பிக்கவோ அவர்கள் வாசிப்பதில்லை.

4. உளவியல் விசாரனைகளால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

5. சமூகவியல் ஆய்வுகளோ அவர்களுக்கு எரிச்சலூட்டுவது.

6. அவர்கள் காஃப்காவையோ ஜேம்ஸ் ஜாய்சையோ புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை.

7. அவர்கள் இன்னமும் பலவற்றை நம்புகின்றனர். கடவுள், குடும்பம், தேவதைகள், பேய்கள், மந்திரவாதிகள், குட்டிச்சாத்தான்கள், தர்க்கம் (Logic), தெளிவு, நிறுத்தற்குறிகள் (punctuation) இன்னும் இதுபோன்று காலாவதியாகிவிட்ட விஷயங்கள்.

8. அவர்களுக்கு சுவாரசியமான கதைகள் பிடிக்கும், பொழிப்புரைகளோ வழிகாட்டி வாக்கியங்களோ அடிக்குறிப்புகளோ அல்ல.

9. ஒரு புத்தகம் சலிப்பூட்டினால் அவர்களால் வெளிப்படையாக கொட்டாவி விடமுடியும். வெட்கமோ சுயபிம்பம் குறித்த அச்சமோ அவர்களிடம் இருப்பதில்லை.

10. தங்கள் ஆதர்ச எழுத்தாளர் மனிதகுலத்தை மீட்டெடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. அவருக்கு அத்தகைய ஆற்றல்கள் இல்லை என நன்றாகவே அறிவார்கள். அதுபோன்ற குழந்தைத்தனமான கற்பனைகள் பெரியவர்களிடம் மட்டுமே உண்டு.

000

சிலேத்தா எனும் ஆடு

வழக்கமாக ஹனூக்கா (Hanukkah) – தீபத் திருநாள் பண்டிகை சமயத்தில் கிராமத்திலிருந்து நகரத்துக்கு செல்லும் சாலை பனியால் மூடப்பட்டிருக்கும் ஆனால் இந்த வருடமோ குளிரின் தாக்கம் அவ்வளவாக இல்லை. பண்டிகை நெருங்கிவிட்ட போதிலும் பனிப்பொழிவின் அளவு குறைவாக உள்ளது. பெரும்பாலான நேரம் சூரியன் பிரகாசித்தது. வறண்ட வானிலையால் இவ்வருடம் குளிர்கால தானியங்களின் அறுவடை சுமாராகத்தான் இருக்கும் என விவசாயிகள் கவலையுற்றனர். புதிய புல் முளைத்தது. அவர்கள் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பி வைத்தனர்.

கம்பளி ஆடைகள் தைப்பவனான ரோவனுக்கு அது மிகவும் மோசமான வருடம். நீண்ட தயக்கத்திற்கு பின் அவன் சிலேத்தா எனும் தன் ஆட்டை விற்றுவிட முடிவுசெய்தான். வயதான அந்த ஆடு கொஞ்சமாகத்தான் பால் கொடுத்து வந்தது. நகரத்தில் இருக்கும் கசாப்புக்காரன் பேவல் அதற்கு எண்ணூறு ரூபாய் விலை சொல்லியிருந்தான். அந்தப் பணம் மட்டும் கிடைத்தால் பண்டிகைக்கான மெழுகுவர்த்திகள், காய்கறிகள், அப்பம் சுடுவதற்கான எண்ணெய், குழந்தைகளுக்கான பரிசுப்பொருட்கள் மற்றும் பண்டிகை காலத்தில் வீட்டுக்குத் தேவையான எல்லாவற்றையும் வாங்கிவிடலாம். ரோவன் தன் மூத்தப் பையனான ஆரோனிடம் ஆட்டை நகரத்துக்கு கூட்டிப்போக சொன்னான்.

ஆரோனுக்கு ஆட்டை பேவலிடம் கூட்டிப் போவதென்றால் என்ன அர்த்தம் என்று தெரியும். இருந்தாலும் தந்தை சொல்லை மீற முடியாது. செய்தியை கேள்விப்பட்டதும் அவனது தாய் லியா கண்ணீர்விட்டாள். ஆரோனின் இளம் தங்கைகள் அன்னாவும் மிரியமும் கதறி அழுதனர். ஆரோன் தன்னுடைய கம்பளி கோட்டை அணிந்து கொண்டான். தலைக்கு தொப்பியும் காதை பாதுகாக்கும் கவசமும் அணிந்திருந்தான். சிலேத்தாவின் கழுத்தில் கயிறு கட்டப்பட்டது. பயணத்தின் போது உணவுக்காக கொஞ்சம் ரொட்டியும் வெண்ணெயும் எடுத்துக் கொண்டான். ஆரோன் அன்று மாலைக்குள் ஆட்டை ஒப்படைக்க வேண்டும், இரவு கசாப்புக்காரனின் இடத்திலேயே தங்கிவிட்டு மறுநாள் காலை பணத்துடன் திரும்புவதாகத் திட்டம்.

ஆரோன் ஆட்டின் கழுத்தைச் சுற்றி இருக்கும் கயிறை லேசாக இறுக்கி புறப்பட தயார்படுத்தினான். அக்குடும்பம் ஆட்டிடம் கடைசியாக விடைபெற்ற போதும் அது எப்போதும்போல பொறுமையாகவும் நன்னடத்தையுடனும் நின்றது. தன் சிறிய வெண்தாடி கொண்ட முகத்தை இடமும் வலமும் ஆட்டியது. சிலேத்தா மனிதர்களை நம்பியது. அவர்கள் எப்போதுமே உணவு கொடுப்பார்கள் என்றும் எந்த தீங்கும் செய்யமாட்டார்கள் என்றும் அதற்குத் தெரியும்.

ஆரோன் சிலேத்தாவை நகரத்துக்கு செல்லும் சாலைக்கு கூட்டி வந்ததும் அது ஆச்சர்யத்தில் திகைத்து நின்றது. இதுவரை அத்திசையில் அது கூட்டிவரப்பட்டதே இல்லை. அது கேள்வியுடன் திரும்பி அவனைப் பார்த்தது, “என்னை எங்கே கூட்டிக்கொண்டு போகிறாய்?” என்றது அதன் முகம். ஆனால் சிறிது நேரத்துக்குபின் ஒரு ஆடு கேள்விகள் எல்லாம் கேட்கக்கூடாது என்று முடிவுக்கு வந்துவிட்டதுபோல் தோன்றியது. அச்சாலை அதற்கு புதியதுதான். அவர்கள் புதிய வயல்களையும் புல்வெளிகளையும் ஓலைக்கூரை வேயப்பட்ட குடிசைகளையும் கடந்து சென்றனர். அவ்வப்போது சில நாய்கள் அவர்களை துரத்தி வந்தன, ஆரோன் தன் குச்சியை வைத்து அவற்றை விரட்டிவிட்டான்.

கிராமத்திலிருந்து கிளம்பும்போது நன்றாகவே வெயில் அடித்தது. ஆனால் இப்போது வானிலையில் திடீர் மாற்றம். கிழக்கு திசையின் நீலவானில் பெரிய கார்மேகங்கள் தோன்றி சட்டென வானம் முழுக்க பரவ ஆரம்பித்தது. அதனுடன் சேர்த்து குளிர்காற்றும் வீசியது. காகங்கள் கூக்குரலிட்டபடி தாழப் பறந்தன. முதலில் மழை பெய்யும் என்றே தோன்றியது ஆனால் பின்னர் எதிர்பாராத விதமாக கோடையில் நடப்பதுபோல் ஆலங்கட்டிகள் பொழிய தொடங்கின. நேரம் மதியத்தைக்கூட கடந்திருக்கவில்லை, அதற்குள்ளாக அந்தியைப்போல் இருட்டிவிட்டது. கொஞ்ச நேரத்தில் ஆலங்கட்டிகள் பனிப்பொழிவாக மாறிவிட்டன.

இந்த பனிரெண்டு வயதில் ஆரோன் இதுவரை பலவிதமான வானிலைகளைப் பார்த்திருக்கிறான், ஆனால் இது போன்றதொரு பனிப்பொழிவை அவன் கண்டதில்லை. பனிப்பொழிவு அத்தனை அடர்த்தியாக இருந்ததில் பகலின் வெளிச்சத்தை முற்றிலுமாக எடுத்துக் கொண்டது. விரைவிலேயே அவர்களின் பாதை பனியால் மூடியது. காற்று ஐஸ் கட்டியைப்போல் குளிர்ந்தது. நகரத்துக்கு செல்லும் சாலை குறுகலாகவும் காற்று பலமாகவும் வீசியது. ஆரோனுக்கு தான் எங்கிருக்கிறோம் என்பதே தெரியவில்லை. அவனால் பனியை கடந்து பார்க்கவும் முடியவில்லை. விரைவிலேயே குளிர் அவனது கம்பளி கோட்டைத் தாண்டி ஊடுருவியது.

முதலில் சிலேத்தா வானிலை மாற்றத்தால் கவலைப்பட்ட மாதிரியே தெரியவில்லை. அதற்கும் பனிரெண்டு வயது ஆகியிருந்ததால் பனிக்காலத்தைப் பற்றி நன்றாகவே தெரியும். ஆனால் நேரம் செல்ல செல்ல அதன் கால்கள் பனியில் அமிழ்வது அதிகரித்தபடியே வந்தது. அது தலையை திருப்பி ஆரோனை ஆச்சர்யத்துடன் நோக்கியது. அதன் மெல்லிய கண்கள் “நாம் ஏன் இத்தகைய பனிப்புயலில் வெளியே இருக்கிறோம்?” என கேட்பதுபோல் இருந்தது. விவசாயிகள் யாரேனும் மாட்டு வண்டியில் வரக்கூடும் என ஆரோன் எதிர்பார்த்தான், ஆனால் யாரும் வரவில்லை.

பனிப்பொழிவின் அடர்த்தி அதிகரித்தது. அளவில் பெரிய பனித்துகள்கள் சுழன்றிரங்கி தரையில் வீழ்ந்தன. இதற்கிடையே ஓர் உழப்பட்ட வயலில் நடப்பது போன்ற மென்மையை ஆரோன் தன் பூட்ஸ்களுக்கு கீழே உணர்ந்தான். எங்கோ சாலையை தவறவிட்டுவிட்டோம் என்பது புரிந்தது. அவன் தொலைந்துவிட்டான். அவனுக்கு திசைகள் எதுவும் புரியவில்லை. கிராமம் எந்த திசை, நகரம் எந்த திசை என தெரியாமல் குழம்பினான். காற்று பலமாக வீசி ஊளையிட்டது. சுழல்காற்றில் பனி மேலேழுந்து சுழன்றது. பனிச்சுழல்களை பார்ப்பதற்கு குட்டிச்சாத்தான்கள் வயல்வெளியில் ஓடிப்பிடித்து விளையாடுவதுபோல் தோன்றின. தரையிலிருந்து வெண்புழுதி மேலெழுந்த சமயத்தில் சிலேத்தா நின்றது. அதனால் அதற்குமேலும் நடக்க முடியவில்லை. தன் இடக்காலின் குளம்புகளை பிடிவாதமாக மண்ணில் ஊன்றி நின்றபடி கதறியது. தன்னை வீட்டுக்கு கூட்டிப்போகும்படி கெஞ்சுவதுபோல் இருந்தது அதன் கதறல். கொம்புகளில் பனி படர்ந்திருக்க அதன் வெண்தாடியிலிருந்து பனித்துளிகள் சொட்டின.

ஆரோன் நெருங்கிவரும் ஆபத்தால் கலங்கிவிடவில்லை. ஆனால் உரிய பாதுகாப்பான இடத்தை கண்டுபிடிக்கவிட்டால் பனியில் உறைந்தே செத்துவிடுவோம் என்பது மட்டும் தெரிந்தது.  இது சாதாரண புயலல்ல. ஆளைக் கொல்லவரும் பெரும் பனிப்புயல். பனிப்பொழிவின் உயரம் இப்போது முட்டியை தொட்டது. அவன் கைகள் மரத்துவிட்டன, கால்விரல்களையோ அவனால் உணரக்கூட முடியவில்லை. மூச்சு விடத் திணறினான். மூக்கு மரக்கட்டையைப்போல் உறைந்திருந்தது, அதன்மீது பனியைக் கொண்டு தேய்த்தான். சிலேத்தாவின் கதறல் இப்போது அழுகையை போல் ஒலிக்க ஆரம்பித்தது. அது பெரிதும் நம்பிக்கை வைத்திருந்த மனிதர்களே இப்போது அதை பெரும் சிக்கலில் மாட்டவைத்து விட்டனர். ஆரோன் தனக்காகவும் அந்த வெள்ளந்தியான விலங்குக்காகவும் கடவுளிடம் பிரார்த்திக்க தொடங்கினான்.

திடீரென சிறிய குன்றுபோன்ற உருவம் அவன் கண்களுக்கு புலப்பட்டது. என்னவாக இருக்கும் என அவனுக்கு ஒரே ஆச்சர்யம். இவ்வளவு பனியையும் யார் மலைபோல் குவித்து வைத்திருப்பார்கள்? அவன் சிலேத்தாவை இழுத்தபடி அதன் அருகே சென்றான். நெருங்கும்போதே அது ஒரு பெரிய வைக்கோற்போர் என்பது அவனுக்கு தெரிந்துவிட்டது. அது முழுமையாக பனியால் மூடப்பட்டிருந்தது.

காப்பாற்றப்பட்டு விட்டோம் என்பதை ஆரோன் உடனடியாக உணர்ந்தான். பெரு முயற்சியுடன் அவன் பனிக்குள் முன்னேறி சென்றான். அவன் கிராமத்துவாசி என்பதால் என்ன செய்யவேண்டும் என்பதை தெளிவாக அறிவான். வைக்கோற்போரை அடைந்தவுடன் அவனும் சிலேத்தாவும் தங்கும் அளவுக்கு ஒரு பொந்தை உருவாக்கினான். வெளியே எவ்வளவு குளிரடித்தாலும் வைக்கோற்போருக்குள் எப்போதும் கதகதப்பாகவே இருக்கும். அதுபோக வைக்கோல் சிலேத்தாவுக்கு உணவும் கூட. வைக்கோலை முகர்ந்ததும் அது திருப்தியுடன் சாப்பிட ஆரம்பித்தது. வெளியே பனி தொடர்ந்து பெய்தது. சீக்கிரத்திலேயே ஆரோன் தோண்டிய நுழைவுப்பாதையை பனி மூடிவிட்டது. தற்போது அவர்களின் மறைவிடத்தில் காற்றே இல்லை ஆனால் இருவரும் சுவாசிக்க காற்று வேண்டுமே? ஆரோன் வைக்கோலை குடைந்து ஜன்னல் போன்ற ஒரு அமைப்பை உருவாக்கினான். அது மூடிவிடாமல் கவனமாக பார்த்துக் கொண்டான்.

சிலேத்தா தன் பங்கை சாப்பிட்டு முடித்தவுடன் முட்டிபோட்டு அமர்ந்தது, மனிதர்கள் மீதான நம்பிக்கையை அது திரும்ப பெற்றுவிட்டதுபோல் தெரிந்தது. ஆரோன் தான் எடுத்து வந்திருந்த இரண்டு ரொட்டிகளையும் வெண்ணெய்யும் சாப்பிட்டான் ஆனால் இத்தனை அலைச்சல்களுக்குப் பின் அவன் இன்னமும் பசியாகவே உணர்ந்தான். சிலேத்தாவை நோக்கியபோது அதன் மடி நிறைந்திருப்பதை கவனித்தான். அவன் அதனருகே சென்று படுத்தான், அவன் அதனிடமிருந்து பால் கறக்கும்போது அதை நேரடியாக வாயில் பீய்ச்சுவதற்கு ஏற்றவாறு வசதியாக படுத்துக் கொண்டான். அது சுவையாகவும் இனிப்பாகவும் இருந்தது. சிலேத்தாவுக்கு இந்த மாதிரி பால்கறந்து பழக்கமில்லை, ஆனால் அது முரண்டு பிடிக்கவில்லை. மாறாக அது ஆரோனுக்கு ஆவலுடன் பரிசளிக்க விரும்பியதாகவே தோன்றியது. ஏனெனில் அவன் அதை ஒரு அருமையான மறைவிடத்திற்கு கூட்டி வந்திருக்கிறான். அந்த மறைவிடத்தின் சுவர்கள், தரை, மேற்கூரை எல்லாமே உணவாலானது!

ஜன்னல் வழியாக வெளியே நடக்கும் களேபரத்தை ஆரோனால் ஓரளவு கிரகிக்க முடிந்தது. காற்று பெருமளவு பனியை அடித்துக் கொண்டு வந்தது. முழுக்க இருட்டிவிட்டது, இரவு அதற்குள்ளாக வந்துவிட்டதா அல்லது அது புயலினால் ஏற்பட்ட இருளா என அவனால் யூகிக்க முடியவில்லை. நல்லவேளையாக வைக்கோற்போருக்குள் குளிரவில்லை. உலர்ந்த வைக்கோலும் புல்லும் தரையில் கிடந்த காட்டுப்பூக்களும் கோடை சூரியனின் வெம்மையை வெளிப்படுத்தின. சிலேத்தா அடிக்கடி சாப்பிட்டது. மேலும் கீழும் இடம் வலம் என நாலாபக்கமும் அது வைக்கோலை உருவி மேய்ந்தது. அதன் உடலில் இன்னமும் ஒரு விலங்கின் வெம்மை இருந்தது, ஆரோன் அதை கட்டி அணைத்துக் கொண்டான். அவனுக்கு எப்போதுமே சிலேத்தாவை பிடிக்கும் என்றாலும் இப்போது அவள் ஒரு தங்கையைப்போல் ஆகிவிட்டாள். அவன் தன் குடும்பத்திலிருந்து துண்டிக்கப்பட்டு தனியாக இருக்கிறான், அவன் பேச விரும்பினான். சிலேத்தாவிடமே பேசத் துவங்கினான். அவன் கேட்டான் “சிலேத்தா, நமக்கு  நடந்தது பற்றி என்ன நினைக்கிறாய்?”  

“ம்ம்மே,” சிலேத்தா பதிலளித்தாள்.

“இந்த வைக்கோற்போரை மட்டும் கண்டுபிடித்திருக்காவிட்டால் நாம் இந்நேரம் உறைந்த மரக்கட்டையாக ஆகியிருப்போம்,” ஆரோன் சொன்னான்.

“ம்ம்மே,” என்பதே ஆட்டின் பதில்.

“இப்படியே பனி தொடர்ந்து பெய்தால் நாம் நாட்கணக்கில் இங்கு தங்க வேண்டியிருக்கும்,” ஆரோன் விளக்கினான்.

“ம்ம்மே,” சிலேத்தா கத்தினாள்.

ம்ம்மே  என்றால் என்ன அர்த்தம்?” ஆரோன் கேட்டான். “நீ தெளிவாக பேசினால் நல்லது.”

“ம்ம்மே, ம்ம்மே,” சிலேத்தா முயன்றாள்.

“சரி, ம்ம்மே என்றே இருக்கட்டும்,” ஆரோன் பொறுமையாக சொன்னான். “உன்னால் பேச முடியாது. ஆனால் உனக்கு எல்லாம் புரிகிறது என நான் அறிவேன். எனக்கு நீயும் உனக்கு நானும் வேண்டும். சரியா?”

“ம்ம்மே.”

ஆரோனுக்கு தூக்கம் வந்தது. அவன் கொஞ்சம் வைக்கோலை சுருட்டி ஒரு தலையனை செய்து அதில் படுத்து தூங்கி விட்டான். சிலேத்தாவும் கூட தூங்கிவிட்டாள்.

ஆரோன் கண்விழித்தபோது அவனுக்கு பகலா இரவா எனத் தெரியவில்லை. அவனது ஜன்னலை பனி அடைத்திருந்தது. அடைப்பை நீக்க அவன் கைகளால் குடைந்தான். ஆனால் முழு கை நீளத்திற்கு குடைந்த பின்பும் வெளிப்புறத்தை அவனால் எட்டமுடியவில்லை. அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த குச்சி அவனிடமிருந்தது. அதைக் கொண்டு உடைத்ததில் ஜன்னல் ஒருவழியாக வெளிக்காற்றுக்கு திறந்துகொண்டது. வெளியே இன்னும் இருள் விலகியிருக்கவில்லை. பனி தொடர்ந்து பொழிய காற்று ஓலமிட்டது. முதலில் ஒரு குரலிலும் பின்னர் பல குரல்களிலும். சிலசமயம் காற்றின் ஓலம் பிசாசுகளின் சிரிப்பொலியாய் ஒலித்தது. கொஞ்ச நேரத்தில் சிலேத்தா விழித்துக் கொண்டாள். ஆரோன் அவளுக்கு முகமன் சொன்னான். அவள் பதிலளித்தாள், “மம்மே.” ஆம், சிலேத்தாவின் மொழியில் இருப்பது ஒரே ஒரு சொல்தான், ஆனால் அதற்கு பல அர்த்தங்கள். தற்போது அவள் சொல்வது என்னவென்றால், “இறைவன் அளிக்கும் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் – வெயில், குளிர், பசி, நிறைவு, ஒளி, இருள்.”

ஆரோனுக்கு கண்விழிக்கும் போதே பசியிருந்தது. அவன் தன் உணவை தீர்த்துவிட்டான், ஆனால் சிலேத்தாவிடம் நிறையவே பால் இருந்தது.

மூன்று நாட்களுக்கு ஆரோனும் சிலேத்தாவும் வைக்கோற்போரில் இருந்தனர். ஆரோனுக்கு சிலேத்தாவை முன்பிருந்தே பிடிக்கும் என்றாலும் இந்நாட்களில் அவளை மேலும் மேலும் விரும்பினான். அவள் அவனுக்கு பாலூட்டி அவனை கதகதப்பாக வைத்திருக்க உதவினாள். பொறுமையாக நடந்துகொண்டு அவனுக்கு துணையிருந்தாள். அவன் அவளுக்கு பல கதைகள் சொன்னான், அவள் எல்லாவற்றையும் செவிகூர்ந்து கேட்டாள். அவன் அவளை முதுகில் தட்ட அவள் அவன் கைகளையும் முகத்தையும் நக்கினாள். அதன்பிறகு அவள் சொன்னாள், “மம்மே,” அவனுக்கு அதன் அர்த்தம் தெரியும், நானும் உன்னை விரும்புகிறேன்.

முதல்நாள் அளவுக்கு அடர்த்தியாக இல்லாவிட்டாலும் மூன்று நாட்களும் தொடர்ந்து பனி பெய்தது. காற்ற சற்றே ஓய்ந்திருந்தது. சிலசமயம் ஆரோனுக்கு கோடைக்காலம் என்ற ஒன்றே இல்லாதது போல் தோன்றியது. நினைவறிந்த காலம்முதல் பனியே தொடர்ந்து பொழிவதான மயக்கம். அவனுக்கு அம்மா அப்பா தங்கைகள் இருந்ததும் நினைவில்லை. அவன் ஒரு பனிக்குழந்தை, பனியிலிருந்து பிறந்தவன். சிலேத்தாவும் அவ்வாறே.  வைக்கற்போருக்குள் மிகவும் நிசப்தமாக இருந்ததில் அவன் காதுகள் ரீங்காரமிட்டன. ஆரோனும் சிலேத்தாவும் இரவு முழுதும் பகலில் பெரும்பகுதியையும் தூக்கத்திலேயே கழித்தனர். ஆரோனின் கனவுகளை பொறுத்தவரை அவை எப்போதுமே வெயில் காலத்தை சுற்றியே இருந்தன. பச்சை வயல்களை, பூத்து நிறையும் மரங்களை,  தெளிந்த சிற்றோடைகளை, பாடும் பறவைகளை அவன் கனவு கண்டான். மூன்றாம் நாள் இரவில் பனி முழுமையாக நின்றுவிட்டது. ஆனால் ஆரோனுக்கு இருளில் வீட்டைத்தேடிப் போவதற்கு தைரியம் வரவில்லை. வானம் தெளிவுற்று, நிலவு பிரகாசித்தது. நிலவின் வெளிச்சத்தில் பனிமூடிய வெளியெங்கும் வெள்ளிப்பட்டென மின்னியது. ஆரோன் வைக்கோலை நீக்கி வெளிவந்து உலகை நோக்கினான். எங்கு பார்த்தாலும் வெண்மையும் அமைதியும் படர்ந்திருந்தன. அவனுக்கு கனவுலகின் சொர்க்கத்தில் சஞ்சரிப்பதுபோல இருந்தது. நட்சத்திரங்கள் பெரிதாகி அருகில் வந்தன. கடல் அலைகளில் நீந்துவதுபோல நிலவு வானில் நீந்தியது.

நான்காம் நாள் காலை பனிச்சறுக்கு குதிரைவண்டிகளின் (Sleigh) மணியோசை ஆரோனுக்கு கேட்டது. வைக்கோற்போர் சாலையிலிருந்து ரொம்பவும் விலகியிருக்கவில்லை. பனிச்சறுக்கு வண்டியில் வந்த விவசாயி அவனுக்கு வழிகாட்டிவிட்டுப் போனார். அவர் சுட்டிய திசை கசாப்புக்காரன் பேவல் இருக்கும் நகரத்தை நோக்கி அல்ல, கிராமத்தில் இருக்கும் வீட்டை நோக்கி. ஆரோன் வைக்கோற்போரில் இருக்கும்போதே முடிவு செய்துவிட்டான், இனி ஒருபோதும் சிலேத்தாவை பிரியப் போவதில்லை.

புயலின்போது ஆரோனின் குடும்பமும் நண்பர்களும் அவனையும் ஆட்டையும் பலவாறாக தேடி அலைந்தனர். ஆனால் அவர்களுக்கு எந்தத் தடையமும் கிடைக்கவில்லை. அவர்களை இழந்துவிட்டோம் என்றே அஞ்சினர். ஆரோனின் அம்மாவும் தங்கைகளும் கண்ணீர்விட அவனது அப்பா யாருடனும் பேசாமல் மனம் தளர்ந்தவராய் காணப்பட்டார். திடீரென பக்கத்துவீட்டுக்காரார் ஒருவர் செய்தியுடன் ஓடிவந்தார். ஆரோனும் சிலேத்தாவும் கிராமத்து சாலையில் தூரத்தில் தென்பட்டனர்.

மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் கொண்டாடியது. அவர்கள் அதிர்ஷ்டவசமாக ஒரு வைக்கோற்போரை கண்டடைந்த சம்பவத்தையும் சிலேத்தா பாலூட்டியதையும் ஆரோன் குடும்பத்திடம் விளக்கினான். ஆரோனின் தங்கைகள் சிலேத்தாவை கட்டியணைத்து முத்தமிட்டனர். நறுக்கிய கேரட்டுகள், உரித்த உருளைக்கிழங்கு என தனியாக ஒரு விருந்தே சிலேத்தாவுக்கு படைக்கப்பட்டது. அவளும் ஆவலுடன் எல்லாவற்றையும் சாப்பிட்டாள்.

சிலேத்தாவை மீண்டும் விற்பனை செய்வது குறித்து அதன்பிறகு யாரும் யோசிக்கவில்லை. குளிர்காலம் முழுவீச்சில் வந்துவிட்டதில் கம்பளி ஆடை தைப்பவனான ரோவனின் சேவை கிராமத்தினருக்கு தேவைப்பட்டது. ஹனுக்கா பண்டிகை தினங்களில் ஆரோனின் அம்மாவால் தினமும் மாலையில் அப்பம் சுட முடிந்தது. அதில் சிலேத்தாவுக்கும் பங்குண்டு. சிலேத்தாவுக்கு தனியாக கொட்டில் இருந்தபோதிலும் அவள் அடிக்கடி சமையலறை பக்கம் எட்டிப்பார்ப்பதுண்டு. கொம்புகளால் கதவை முட்டும் சத்தம் கேட்டதும் எப்போதுமே அவள் உள்ளே அனுமதிக்கப்பட்டாள். மாலைப்பொழுதுகளில் ஆரோன், மிரியம், அன்னா மூவரும் ஒன்றாக அமர்ந்து தாயம் விளையாடினர். சிலேத்தா அடுப்பின் அருகே அமர்ந்து குழந்தைகள் விளையாடுவதையும் ஹனுக்கா மெழுகுவர்த்திகள் காற்றில் துடிப்பதையும் வேடிக்கை பார்த்தபடி இருப்பாள்.

அவ்வப்போது ஆரோன் அவளிடம் கேட்பதுண்டு, “சிலேத்தா, நாம் ஒன்றாக கழித்த மூன்று நாட்கள் உனக்கு நினைவுள்ளதா?”

சிலேத்தா கொம்புகளால் தன் கழுத்தை உரசுவாள், வெண்தாடி கொண்ட தலையை ஆட்டிவிட்டு, தன் வழக்கமான ஒற்றை ஒலியை எழுப்புவாள். அது அவளின் அனைத்து எண்ணங்களையும் வெளிப்படுத்தியது, அவளுடைய முழுமையான அன்பையும்.

ஹனூக்கா (Hanukkah) – யூதர்களின் தீபத் திருநாள் அல்லது ஒளி விழா. வழக்கமாக டிசம்பர் இறுதியில் எட்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

மூலம்: Zlateh the Goat – Stories For Children (Isaac Bashevis Singer: Classic Editions)

000

ஒளியின் ஆற்றல்

இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் வார்சாவில் (Warsaw) யூதர்கள் அதிகமாக வாழும் சேரிப்பகுதியில் நாஜிக்கள் குண்டு வீசியபோது ஒரு சிறுவனும் சிறுமியும் அங்கிருந்த இடிபாடுகளின் நடுவே ஒளிந்துகொண்டனர். சிறுவனுக்கு பதினான்கு வயது, டேவிட் என்று பெயர். இன்னொருவள் பெயர் ரெபேக்கா, வயது பதிமூன்று.

அது பனிக்காலம் என்பதால் வெளியே கடும்குளிர் இருந்தது. பாதி இடிந்த நிலவறை ஒன்றில்தான் அவர்கள் மறைந்திருந்தனர். வாரக்கணக்கில் ரெபேக்கா இருளிலேயே இருந்தாள், டேவிட் மட்டும் சில நாட்களுக்கொருமுறை வெளியே போய் உணவு தேடிக்கொண்டு வந்தான். குண்டுவீச்சில் எல்லா கடைகளும் நாசமாக்கப்பட்டிருந்தன. டேவிட் சிலசமயம் மக்கிப்போன ரொட்டித்துண்டுகளையோ டப்பாவில் அடைக்கப்பட்ட உணவையோ அல்லது மண்ணில் புதைபட்ட ஏதேனும் உணவுகளை எடுத்துவந்தான். இடிபாடுகளின் ஊடே திரும்ப மறைவிடத்திற்கு வருவதென்பது ஆபத்தான விஷயம். சமயங்களில் சுவர்கள் இடிந்து விழுந்தால் அவன் உயிருக்கே ஆபத்தாகிவிடும். ஆனால் அவனும் ரெபேக்காவும் பசியில் இறந்து போய்விடாமல் இருக்க ஆபத்துகளை சந்தித்துதான் ஆக வேண்டும்.

அன்றைய தினம் பனி உச்சத்தில் இருந்தது. ரெபேக்கா கையில் அகப்பட்ட துணிகளையெல்லாம் உடலில் சுற்றிக்கொண்டு தரையில் அமர்ந்திருந்தாள். இருந்தாலும் அவளால் குளிரை பொறுக்க முடியவில்லை. டேவிட் வெளியே சென்று பல மணிநேரம் ஆகியிருந்தது. ரெபேக்கா இருளில் அவன் வருகையின் ஓசைக்காக செவிகூர்ந்து காத்திருந்தாள். ஒருவேளை அவன் திரும்பி வராவிட்டால் அவளுக்கு அன்றைய தினம் இறப்பு நிச்சயம்.

திடீரென பலமாக மூச்சு வாங்கும் சப்தமும் ஒரு மூட்டை கீழே விழும் சப்தமும் கேட்டது. டேவிட் திரும்பி வந்துவிட்டான். ரெபேக்காவால் கத்தாமல் இருக்க முடியவில்லை, “டேவிட்!”

“ரெபேக்கா!”

இருட்டிலேயே இருவரும் கட்டியணைத்து முத்தமிட்டு கொண்டனர். பின்பு டேவிட் சொன்னான், “ரெபேக்கா, நான் ஒரு புதையல் எடுத்துட்டு வந்திருக்கேன்.”

“என்ன மாதிரி புதையல்?”

“பாலாடைக்கட்டிகள், உருளைக்கிழங்கு, உலர்ந்த காளான்கள், ஒரு பாக்கெட் நிறைய மிட்டாய்கள்… இதுபோக உனக்கு ஒரு ஆச்சர்யம் உண்டு.”

“என்ன ஆச்சர்யம்?”

“பிறகு சொல்கிறேன்.”

கொள்ளைப் பசியில் இருந்ததால் இருவரும் பேசுவதற்கே நேரம் இருக்கவில்லை. வேகவேகமாக உருளைக்கிழங்குகள், காளான்கள் கொஞ்சம் பாலாடைக்கட்டிகளையும்  சாப்பிட்டனர். கடைசியாக ஆளுக்கொரு மிட்டாய். சாப்பிட்டதும் ரெபேக்கா கேட்டாள், “இப்ப என்ன நேரம், பகலா இரவா?”

“இரவு வந்துருச்சுன்னு நினைக்கிறேன்,” டேவிட் சொன்னான். அவன் ஒரு கைக்கடிகாரம் வைத்திருந்தான், அதைப் பார்த்து பகலா இரவா என்பதை சொல்லிவிடுவான். வாரத்தில் என்ன கிழமை என்ன மாதம் என்பதெல்லாம் கணக்கு வைத்திருந்தான். சிறிதுநேரம் கழித்து ரெபேக்கா மீண்டும் கேட்டாள், “என்ன ஆச்சர்யம் சொல்லு?”

“ரெபேக்கா, இன்னைக்குத்தான் ஹனுக்காவின் (தீபத் திருநாள்) முதல்நாள், எனக்கு ஒரு மெழுகுவர்த்தியும் சில தீக்குச்சிகளும் கிடைச்சுது.”

“இன்றிரவு ஹனுக்காவா?”

“ஆமாம்.”

“அடக் கடவுளே!” ரெபேக்கா சந்தோஷத்தில் துள்ளினாள்.

“நான் ஹனுக்கா மெழுகுவர்த்தியை ஏற்றப் போகிறேன்,” டேவிட் சொன்னான்.

அவன் தீக்குச்சியை உரசியதும் ஒளி பிறந்தது. ரெபேக்காவும் டேவிட்டும் தங்கள் மறைவிடத்தை ஒருகணம் நோட்டம்விட்டனர் – செங்கற்கள், உடைந்த குழாய்கள், மேடுபள்ளங்கள் நிறைந்த தரைத்தளம். ரெபேக்கா கண்களை சிமிட்டினாள். உண்மையில் பலவாரங்களில் முதன்முறையாக அப்போதுதான் டேவிட்டை முழுமையாக பார்க்கிறாள். பரட்டைத் தலையும் அழுக்கு நிறைந்த சட்டையுமாக நின்றான். ஆனால் கண்களில் மகிழ்ச்சி மின்னியது. இத்தனை இடர்பாடுகள் உணவு தட்டுப்பாடுக்கு இடையிலும் டேவிட் சற்றே வளர்ந்துவிட்டதுபோல் தோன்றியது. தன் வயதைக்காட்டிலும் மூத்தவனாக வளர்ந்த ஆண்மகனாக தெரிந்தான். போர் சூழ்ந்த இந்த வார்சா நகரிலிருந்து மட்டும் தப்பிக்க முடிந்தால் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக அந்த இளம் வயதிலேயே அவர்கள் முடிவு செய்திருந்தனர். குண்டு வீசப்பட்ட நாளில் டேவிட்டின் பாக்கெட்டில் ஒரேயொரு வெள்ளி நாணயம் இருந்தது. திருமண நிச்சயத்திற்கு அடையாளமாக டேவிட் அந்நாணயத்தை ரெபேக்காவுக்கு அளித்திருந்தான்.

ஹனுக்கா தீபத்தின் முன்னிலையில் டேவிட் வாழ்த்துப்பாடலை உச்சரித்ததும் ரெபேக்கா “ஆமென்” என்றாள். இருவருமே தங்கள் குடும்பத்தை இழந்திருந்தனர், கடவுளிடம் கோபம்கொள்ள அவர்களுக்கு பல நியாயமான காரணங்கள் இருக்கவே செய்தன. ஆனால் தீபத்தின் ஒளி அவர்கள் மனதில் அமைதியை உண்டாக்கியது. சுற்றிலும் நிழல்களால் சூழப்பட்ட அச்சிறிய ஒளிக்கீற்று மறைமுகமாக ஒரு செய்தியை சொல்லிற்று: தீமை இன்னும் இவ்வுலகை முழுமையாக ஆட்கொண்டு விடவில்லை, நம்பிக்கையின் சிறுதுளி மிச்சமிருக்கிறது.

கொஞ்ச நாட்களாகவே வார்சாவிலிருந்து தப்பிப்பது குறித்து டேவிட்டும் ரெபேக்காவும் யோசித்து வந்தனர். ஆனால் எப்படி? அப்பகுதி முழுவதும் நாஜிக்களால் இரவும் பகலும் கண்காணிக்கப்படுகிறது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஆபத்தானதுதான். ரெபேக்கா தப்பியோடும் திட்டத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தாள். அவள் அடிக்கடி சொல்வாள், கோடையில் தப்பிப்பது எளிதாக இருக்குமென்று. ஆனால் டேவிட் நன்றாகவே அறிவான், இந்த இக்கட்டான சூழலில் அதுவரை உயிர் பிழைத்திருப்பது கடினம். பார்டிசன்ஸ் (Partisans) என்று சொல்லப்படக்கூடிய நாஜி ஊடுருவலை எதிர்த்து போராடும் இளம் ஆண்களும் பெண்களும் அடங்கிய குழு காட்டின் உட்பகுதியில் எங்கோ பதுங்கியிருந்தனர். டேவிட் அவர்களை சென்றடைய விரும்பினான். அந்நேரம் ஹனுக்கா தீபத்தின் ஒளியில் ரெபேக்கா தன் இழந்த உத்வேகத்தை சட்டென திரும்ப பெற்றவளாய் உணர்ந்தாள். அவள் சொன்னாள், “டேவிட், நாம் கிளம்பலாம்.”

“எப்போது?”

“உனக்கு எது சரியான நேரம் என படுகிறதோ அப்போதே”

“இதுவே சரியான நேரம்,” டேவிட் சொன்னான். “என்னிடம் ஒரு திட்டம் உள்ளது.”

டேவிட் தன்னுடைய திட்டத்தை ரெபேக்காவிடம் முழுமையாக விவரித்தான். திட்டத்தில் பல அபாயங்கள் இருந்தன. நாஜிக்கள் அந்த சேரிப்பகுதியை முழுக்க முள்வேளியிட்டு அடைத்திருந்தனர். அதுபோக சுற்றியிருக்கும் உயரமான கூரைகளில் ஆயுதமேந்திய காவல்வீரர்களும் நின்றனர். நாசாமாக்கப்பட்ட அப்பகுதியிலிருந்து வெளியேறும் அனைத்து வழிகளிலும் இரவுநேரத்தில் தேடுதலுக்கான ஒளிவிளக்குகள் சுழன்று கண்காணித்தன. ஆனால் இடிபாடுகள் நடுவே அலையும்போது டேவிட் பாதாள சாக்கடையின் திறப்பு ஒன்றை பார்த்து வைத்திருந்தான். அது அவர்களை மறுபுறம் சேர்க்கக் கூடும். உயிருடன் தப்பிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே டேவிட் ரெபேக்காவிடம் சொன்னான். சாக்கடைநீரில் அவர்கள் மூழ்கிவிடக்கூடும் அல்லது குளிரில் உறைந்து போகலாம். பாதாள சாக்கடை எங்கும் பசித்த எலிகள் வேறு அலைகின்றன. ஆனால் ரெபேக்கா ஆபத்தை எதிர்கொள்ள ஒப்புக்கொண்டாள், பனிக்காலம் முடியும்வரை நிலவறையில் தங்கியிருப்பதென்பது சாவை நிச்சயமாக ஏற்றுக்கொள்வது தான்.

ஹனுக்கா மெழுகுவர்த்தி துடித்து அணைவதற்குள் டேவிட்டும் ரெபேக்காவும் தங்களுக்கு தேவையான சில பொருட்களை சேகரித்தனர். அவள் மீதமிருக்கும் உணவை ஒரு கைக்குட்டையில் சுற்றிக் கட்டினாள், டேவிட் சில தீக்குச்சிகளையும் இரும்புகுழாய் ஒன்றை ஆயுதமாகவும் எடுத்துக் கொண்டான்.

பெரும் ஆபத்துகளின் போது மனிதர்கள் வழக்கத்துக்கு மாறான மனஉறுதியை அடைந்து விடுகின்றனர். சற்று நேரத்திற்கெல்லாம் ரெபேக்காவும் டேவிட்டும் இடிபாடுகளின் நடுவே முன்னேறிக் கொண்டிருந்தனர். கைகளாலும் முட்டிகளாலும் தவழ்ந்து செல்லும் அளவுக்கு குறுகலான சந்துகளில் அவர்கள் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் சற்றுமுன்பு சாப்பிட்ட உணவும் ஹனுக்கா தீபம் அவர்களுள் எழுப்பிவிட்டிருந்த புத்துணர்ச்சியும் அளித்த உத்வேகத்தில் தொடர்ந்து முன்னேறினர். கொஞ்ச நேரத்தில் தான் ஏற்கனவே பார்த்து வைத்திருந்த பாதாள சாக்கடைக்கான திறப்பு இருக்கும் இடத்தை டேவிட் கண்டுகொண்டான். அதிர்ஷ்டவசமாக சாக்கடை உறைந்துபோய் இருந்தது, அதிக குளிரால் எலிகளும் ஓடிவிட்டிருந்தன. எனவே அவர்கள் முன்னேறுவதற்கு எவ்வித தடையும் இருக்கவில்லை, சிலநூறு அடிகளுக்கொருமுறை ஓய்வு எடுத்தும் சுற்றிலும் ஓசைகளை கவனித்தபடியும் சென்றனர். தூரம் செல்ல செல்ல அவர்களின் வேகம் குறைந்து எச்சரிக்கையுணர்வு கூடியபடி வந்தது. இருவரும் ஓரிடத்தில் திடீரென நின்றனர். மேலிருந்து டிராம் வண்டியின் மணியோசை கேட்டது. அவர்கள் சேரிப்பகுதியின் மறுபுறத்திற்கு வந்துவிட்டிருந்தனர். இப்போது அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் சாக்கடையிலிருந்து வெளியேற ஒரு வழியை கண்டுபிடித்து நகரத்தை விட்டே சீக்கிரம் ஓடிவிட வேண்டும்.

அந்த ஹனுக்கா இரவில் பல அதிசயங்கள் நடந்தன. எதிரி விமானங்கள் தாக்கக்கூடும் என அஞ்சியதால் நாஜிக்கள் எல்லா விளக்குகளையும் அணைத்து வைத்திருந்தனர். குளிரின் தாக்கத்தால் காவல் வீரர்களும் குறைவாகவே இருந்தனர். இதனால் டேவிட்டும் ரெபேக்காவும் ஒருவழியாக பாதாள சாக்கடையிலிருந்து வெளியேறி யாருக்கும் தெரியாமல் நகரத்தை விட்டே தப்பிவிட முடிந்தது. விடிவதற்குள் காட்டை அடைந்தனர். அங்கு அவர்கள் ஓய்வெடுக்கவும் ஒருவாய் சாப்பிடவும் நேரம் அமைந்தது.

பார்டிசன்கள் இருக்குமிடம் வார்சாவிலிருந்து வெகுதொலைவு என்று சொல்ல முடியாது. இருப்பினும் டேவிட்டும் ரெபேக்காவும் அவர்களை சென்றடைய ஒரு வாரம் ஆனது. கைவிடப்பட்ட தானிய கிடங்குகளிலோ அல்லது பண்ணை வீடுகளிலோ பகல்நேரங்களில் பதுங்கியிருந்துவிட்டு இரவில் மட்டும் நடந்தனர். நாஜிக்களிடமிருந்து தப்பி ஓடும் பார்டிசன்களுக்கு உள்ளூர் மக்கள் ரகசியமாக உதவுவதுண்டு. எப்படியோ டேவிட்டுக்கும் ரெபேக்காவுக்கும் ஒருதுண்டு ரொட்டி, சில உருளைக்கிழங்குகள், ஒரு கேரட் அல்லது அவர்களால் முடிந்த ஏதோவொன்று என அவ்வப்போது உள்ளூர் மக்களின் உதவியால் கிடைத்து வந்தது. அவர்கள் ஒரு கிராமத்தில் ஒரு யூத பார்டிசனை சந்தித்தனர், அவரோ தான் சார்ந்திருந்த குழுவுக்கு உணவு வாங்கிப்போக வந்திருந்தார். ஹகானா (Haganah) எனும் அமைப்பை சேர்ந்தவர். போலந்தில் நாஜி ஆக்கிரமிப்பு பகுதிகளிலிருந்து யூத அகதிகளை மீட்டு அவர்களை இஸ்ரேலுக்கு அனுப்பும் பணியை அந்த அமைப்பு செய்து வந்தது. டேவிட் மற்றும் ரெபேக்காவை காட்டில் அலைந்து கொண்டிருந்த பிற பார்டிசன்களிடம் அவர் கொண்டு சேர்த்தார். ஹனுக்காவின் கடைசிநாள் என்பதால் பார்டிசன்கள் அன்று மாலை எட்டு மெழுகுவர்த்திகள் ஏற்றினர். ஓக்மரத்தின் அடியில் உட்கார்ந்து சிலர் ஹனுக்கா விளையாட்டை (Dreidel) விளையாட சிலர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர்.

பார்டிசன்களை சந்தித்த நாள்முதல் டேவிட் ரெபேக்காவின் வாழ்க்கை கதைப்புத்தகங்களில் வருவதுபோல அப்படியே மாறிவிட்டது. மேலும் மேலும் அகதிகள் அவர்களுடன் இணைந்துகொண்டே வந்தனர்,  எல்லோருக்கும் இருந்த குறிக்கோள் ஒன்றுதான் – இஸ்ரேலில் குடியேற வேண்டும். எப்போதுமே பேருந்து அல்லது ரயில்களில் பயணம் செய்தனர் என்று சொல்ல முடியாது. வெகுதூரம் நடக்க வேண்டியிருந்தது. மாட்டுத் தொழுவங்களில், எரியூட்டப்பட்ட வீடுகளில் என எதிரியின் கண்களில் படாமல் தப்பிக்க எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஒளிந்திருந்தனர். அவர்கள் தங்கள் இலக்கை அடைய செக்கோஸ்லோவாக்கியா, ஹங்கேரி, யூகோஸ்லாவியா போன்ற நாடுகளை கடக்க வேண்டியிருந்தது. யூகோஸ்லாவியாவின் கடற்கரை பகுதி ஒன்றில், நள்ளிரவில் ஹகானா குழுவை சேர்ந்த ஒருவனுடன் சிறிய படகு ஒன்று அவர்களுக்காக காத்திருந்தது. சொற்ப உடைமைகளுடன் அகதிகள் அனைவரும் அதில் ஏறிக் கொண்டனர். நாஜிக்கள் ஏற்கனவே யூகோஸ்லாவியாவை கைப்பற்றி இருந்ததால் இவையெல்லாம் படுரகசியமாக நடந்தேறின.

படகில் ஏறியதும் அவர்களின் ஆபத்துகள் எல்லாம் முடிந்துவிடவில்லை. வழக்கத்திற்கு மாறாக வசந்தகாலத்திலும் கடல் கொந்தளிப்புடன் இருந்தது. அச்சிறிய படகு நீண்ட பயணங்களுக்கு உகந்ததல்ல. அப்படகை உளவறிந்த நாஜி விமானங்கள் அதை குண்டுவீசி மூழ்கடிக்க முயன்றன. அதிர்ஷடவசமாக அவர்களின் படகு தப்பித்துக் கொண்டது. இன்னொருபக்கம் ஆழங்களில் பதுங்கியிருக்கும் நாஜி நீர்மூழ்கி கப்பல்களையும் அவர்கள் தப்பிக்க வேண்டும். கடவுளிடம் வேண்டுவதைத் தவிர அகதிகளுக்கு வேறு வழியிருக்கவில்லை, இம்முறை கடவுள் அவர்களின் பிரார்த்தனைக்கு செவிகொடுத்தார் என்றே சொல்லவேண்டும், ஏனெனில் அவர்கள் ஒருவழியாக பத்திரமாக தரையிறங்கினர்.

இஸ்ரேலின் யூதர்கள் அளித்த நேசமிகு வரவேற்பில் அவர்களின் அனைத்து துக்கங்களும் மறைந்து போயின. புனித நிலத்தை அடைந்த முதல் அகதிகள் என்பதால் அவர்களுக்கு என்னென்ன உதவிகள் செய்யப்பட முடியுமோ அனைத்தும் செய்யப்பட்டன. ரெபேக்காவும் டேவிட்டும் மிகவும் உடல் மெலிந்துவிட்டிருந்தாலும் அடிப்படையில் ஆரோக்கியமாக இருந்ததால் சீக்கிரத்திலேயே மீண்டுவிட்டனர். இஸ்ரேலில் அவர்களை திறந்த மனத்துடன் ஏற்றுக்கொள்ளும் உறவுகள் அமைந்தன. இருவரும் கொஞ்சநாள் ஓய்வுக்கு பின்பு வெளிநாட்டினருக்கு நவீன ஹீப்ரு மொழி சொல்லித்தரப்படும் சிறப்பு பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். டேவிட் ரெபேக்கா இருவருமே ஒழுக்கமான மாணவர்கள். பள்ளிக்கல்வி முடிந்தவுடன் டேவிட் பொறியியல் பயில சென்றான். மொழியிலும் இலக்கியத்திலும் சிறந்து விளங்கிய ரெபேக்கா டெல் அவீவில் படித்தாள். ஆனால் இருவருமே வார இறுதிகளில் சந்தித்துக் கொண்டனர். ரெபேக்காவுக்கு பதினெட்டு வயது ஆனதும் இருவருக்கும் திருமணம் நடந்தேறியது. டெல் அவீவின் புறநகர் பகுதியில் தோட்டத்துடன் கூடிய ஒரு சிறியவீட்டை அமைத்துக் கொண்டனர்.

எட்டு வருடங்கள் கழித்து டேவிட்டும் ரெபேக்காவும் ஒரு ஹனுக்கா மாலையில் இந்தக் கதையெல்லாம் சொல்லக் கேட்டேன். அவர்களின் சிறிய தோட்டத்து வீட்டில் ஹனுக்கா மெழுகுவர்த்திகள் சுடர்ந்து கொண்டிருக்க ரெபேக்கா எங்கள் அனைவருக்கும் ஆப்பிள் பானத்துடன் அப்பங்களை பரிமாறினாள். நானும் டேவிட்டும் அவர்களின் குட்டிப்பையன் மெனாஹீம் எலைசருடன் ட்ரைடல் (Dreidel) விளையாடிக் கொண்டிருந்தோம். மரத்தாலான அந்த ட்ரைடல் பகடையை பற்றி டேவிட் சொன்னான். அது போலந்தின் காடுகளில் அந்த ஹனுக்கா மாலையில் பார்டிசன்கள் பயன்படுத்திய அதே ட்ரைடல் பகடைதான். ரெபேக்கா என்னிடம் சொன்னாள், “டேவிட் மட்டும் அந்த மெழுகுவர்த்தியை எங்கள் மறைவிடத்திற்கு கொண்டு வந்திருக்காவிட்டால் இந்நேரம் எங்களுக்கு இந்த வாழ்வு அமைந்திருக்காது. அச்சிறிய ஒளிக்கீற்று நாங்கள் அறியாமலேயே எங்களுள் இருந்த நம்பிக்கையையும் வலிமையையும் விழிப்படைய செய்தது. எங்களுக்கு நடந்ததையும் நாங்கள் அற்புதங்களால் காப்பாற்றப்பட்டதையும் மெனாஹீம் எலைசர் புரிந்து கொள்ளும் வயது வரும். அப்போது இந்த ட்ரைடல் பகடையை அவனிடம் ஒப்படைப்போம்.”

மூலம்: The Power of Light – Stories For Children (Isaac Bashevis Singer: Classic Editions)

***

டி.ஏ. பாரி

டி.ஏ. பாரி, அவ்வப்போது சில ஆங்கில சிறுகதைகளை மொழியாக்கம் செய்து வருகிறார். பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட்டு வரும் இவர் ஈரோட்டில் வசிக்கிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.