/

மனை : குணா கந்தசாமி

கிணற்றுமேட்டில் நின்று தென்னந்தோப்பின் கீற்றுப்பச்சையின் மேல் மின்னலோடிய முற்பகல் வெயிலை வெறித்திருந்தவனுக்கு மேற்குவேலியின் ஓரம் கரிஞ்சியின் தீவிரமான அபயக்குரல் கேட்டது. இடையிடையே இளக்குட்டிகளின் மிரட்சிக்குரல்களும் கேட்டன.  அந்தக்குரல்கள் ஆபத்தை உணர்த்த லுங்கியை இறுக்கக் கட்டியவாறே தோப்பினூடே விர்ரென்று மேற்குவேலியை நோக்கி ஓடினான். இளங்குட்டிகள் வேலிச்சந்தினூடே இந்தப்பக்கம் தாவி மறுபக்கத்தை பார்த்துக் கத்திக்கொண்டிருந்தன.

அந்த மூன்று நாய்களும் சேர்ந்து கரிஞ்சியைப் புரட்டுவதைக் கண்டவுடன் அடிவயிற்றிலிருந்து மிரட்டல் குரல் எழுப்பியவாறே வேலியைத் தாண்டிப் பாய்ந்தான். கரிஞ்சியை விட்டுவிட்டு அவை ஒரே கணத்தில் தலைதூக்கிப் பார்த்தன. ஓட்டத்தினூடே அனிச்சையாய்க் குனிந்து நான்கைந்து ஓடைக்கற்களைப் பொறுக்கி நாய்களை நோக்கி வீசினான். முதலில் வீசிய கல் கறுநாயின் பின்காலில் பட அது கைக் என்று சத்தமிட்டவாறு மேற்கே ஓடியது. கறுப்பு ஓடுவதைக் கண்டு செம்மியும் பம்மியவாறு பின்னகர்ந்து கல்லடிக்குத் தப்பியது. வெள்ளைநாய் மட்டும் நின்று முறைத்தது. அது யாருடையது என்று தெரியும். மனதிலிருந்த அத்தனை வெறுப்பையும் திரட்டி கல்லை வீச அது சரியாக வெள்ளையின் அடிவயிற்றைப் பதம் பார்த்தது. அடியின் வீரியத்தால் சத்தமெழுப்பியவாறு மற்ற இரண்டையும் பின்தொடர்ந்து அதுவும் ஓட்டமெடுத்தது.

கிளுவைமுட்செடி கொப்பில் கயிற்றை நீளம் குறைவாகவிட்டுக் கட்டியிருந்த கிடாய் உடலைச் சிலிர்த்தவாறே நாய்களைப் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தது. கொம்புக்கிடாய். அதனிடம் சென்றிருந்தால் தூக்கிப்போட்டுப் புரட்டியிருக்கும். மரத்தில் கட்டியிருந்த கரிஞ்சி சிக்கிவிட்டது. கயிறும் வலுவான கயிறு. தறித்துக்கொண்டு ஓடுவதற்கும் வழியில்லை. பாவம், இரண்டுமாதச் சினை வேறு. கால்களைப் பரப்பியவாறு தீனமாகக் குரல் எழுப்பியது. தும்பைத் தறித்து கயிற்றிலிருந்து விடுவித்தவன் அதன் நடுக்கத்தையும் அச்சத்தையும் தணிக்க கட்டையான ரோமங்களடர்ந்த உடலைத் தடவிக்கொடுத்தான். ஆனால் நடுக்கமும் கண்களில் மிரட்சியும் குறையவே இல்லை. நிறைய இடங்களில் பற்கடியால் புண்ணாகியிருந்தது. ரோமத்தை பக்குவமாக விலக்கி காயங்களை ஆராய்ந்தான்.  மூன்றும் சேர்ந்து கரிஞ்சியின் கழுத்துக்குக் குறிவைத்திருந்தன. பெரிய ஆபத்தில்லை என்று நினைத்தவாறு மறுபுறமாகப் புரட்டிக் கிடத்தியபோது அடிவயிற்றில் பெருவிரல் நீளத்திற்கு தோல் கிழிந்து குடல் வெளியே துருத்துவதைக் கண்டு நம்பிக்கையில் பின்னம் ஏறபட்டது.

வெகுபாங்காக கரிஞ்சியைத் தூக்கவும் அது தீனமாகக் குரல் எழுப்பியது. இருபது கிலோ இருக்கும். துள்ளுவதற்குக்கூட திராணியற்று பலகீனமாகியிருந்தது. தோப்பினுள் தூக்கிவந்து நிழற்குளிர்ச்சி இருந்த மண்பாங்கான இடத்தில் கிடத்தினான். லுங்கியை உதறி வியர்வையைத் துடைத்தவாறு மேற்கே பார்க்கையில் நாய்கள் மறைந்துவிட்டிருந்தன. கிழக்கே வந்தவன் பால்கேனில் நீரையும் கட்டித்தாரையில் கிடந்த பழைய லுங்கியையும் எடுத்துக்கொண்டான். சாளைக்குள்ளிருந்து தடியூன்றியவாறு வந்த அய்யன் இவனது வேகத்தைக் கண்டு கொடுத்த குரலுக்குப் பதில் சொல்லாமல் மேற்கே விரைந்தான்.

கரிஞ்சியின் தலையைத் தூக்கி நீரில் அதன் வாயை வைத்தபோது குடிக்க மறுத்தது. உள்ளங்கையில் அள்ளி அதன் வாயோரத்தில் நீரைக் குவித்தான். தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டது. நீரை அள்ளி முகத்தில் தெளித்தபோது தலையைத் தூக்கி மெலிதாகச் சிலிர்த்தது. அடிவயிற்றில் பந்துபோல் பிதுக்கிக்கொண்டிருந்த குடலின் அளவு பெரிதாவதைக் கண்டவுடன் மனதுக்குள் வருத்தச்சலனம் எழுந்தது. லுங்கியை கிழித்து போசிநீரில் நனைத்துப்பிழிந்து உதறியவன் குடலை உள்ளே தள்ள முயன்றபோது அது வழுக்கி வழுக்கி வெளியே வந்தது. முழுமையாக உள்ளே தள்ளி துணியால் இறுக்கிக்கட்ட நினைத்தவனின் முயற்சி சாத்தியப்படவில்லை. அவனால் முடிந்தளவு அழுத்தி ஈரத்துணியால் அதன் உடலைச்சுற்றி கட்டிவிட்டு நிமிர்ந்தபோது அய்யன் நெருங்கியிருந்தார்.

“அட என்னாச்சு?”

“மூணு மாசமா அந்த மூணு குக்கலும் காடு காடா சுத்திட்டு இருந்தது. இன்னிக்கு கரிஞ்சிய மாட்டிருச்சு” அவன் கூறியதைக் கேட்டவாறு வருத்தம் தோய்ந்த முகத்தோடு வரப்பில் உட்கார்ந்தார் அய்யன். குரலில் நடுக்கமும் ஆற்றாமையும் தோய்ந்தன.

“த்துவோ.. நம்ம கெரகம், தப்பிக்குமா? இப்படிக் கெடக்கறதப் பாத்தா மொதல் போயிரும்போல”

அவன் அவருக்குப் பதில் சொல்லாமல் மாட்டு டாக்டரை செல்போனில் அழைத்து ஸ்பீக்கரில் போட்டான்.

“என்னாச்சு? கொடலு வெளிய வந்துருச்சா? அது அவ்வளவுதான், இனி வேலைக்காகாது. இன்னிக்கு ஞாயித்துக்கெழமை, கசாப்புக்கடைக்கு சொல்லிவுட்டு தூக்கிட்டுப்போகச் சொல்லுங்க, அசலாவது மிஞ்சும்”

“சார், எதுக்கும் ஒருநடை வந்து பாத்துட்டுப் போயிடுங்களேன்?”

“ஏனுங்க, நா வெளிய பங்ஷன்ல இருக்கறன். இப்ப வரமுடியாது. இருவது வருஷமா நாந்தானே உங்க பண்டம்பாடி பாக்கறன். நாஞ் சொல்லறதுல நம்பிக்கை இல்லீயா? தையல் போட்டாலும் தப்பிக்காது கவுண்டரே. சொல்றதக் கேளுங்க. கறிக்கடைக்குச் சொல்லி ஆகற காசப் பாருங்க”

“சரிங்க சார், பாத்துட்டுச் சொல்றனுங்க” அழைப்பைத் துண்டித்தான்.

“இந்த வொக்காலவோலி இப்படிச் சொல்றானுங்களா? நாயத்தப் பாருங்க நாயத்த” அய்யனிடம் சொல்லியவாறு குனிந்து கரிஞ்சியைப் பார்க்கையில் அதன் கண்கள் சொருகிக்கொண்டிருந்தன. சட்டென்று ஞாபகம் வந்தவனாய் ராசண்ணனை அழைத்தான்.

“கொடலு முட்டிருச்சா, போனமாசம் என்னடத நாய் கடிச்சப்ப புதூர்ல இருக்கற கம்பவுண்டருதா வந்தாரு. ஆனால் கொடல் வெளிய வரல, அங்கங்க தோல் கிழிஞ்சு புண்ணாயிருந்தது. தச்சு மருந்து போட்டதுல வெள்ளாடு தப்பிச்சிருச்சு. இரு… இரு… எதுக்கும் ஒருநடை அவருகிட்ட பேசிட்டுக் கூப்படறன்”

அய்யன் கிடாயை அவிழ்த்து குட்டிகளோடு சேர்த்து ஓட்டிவந்தார். வழக்கமாக அம்மாதான் வெள்ளாட்டுக்குக் காவல்  நிற்பாள். மேலுக்கு முடியவில்லையென்று ஒருவாரமாக முடங்கிவிட்டாள். சமையலே இவன்தான் செய்கிறான். வெள்ளாடுகளை மொத்தமாகக் கொடுத்துவிடலாம் என்ற யோசனையில்தான் ஏற்கெனவே இருந்தான். கிடாயை அங்காத்தாளுக்கு நேர்ந்துவிட்டு வருஷம் நாலு ஆகிவிட்டது. அவனுக்கு முப்பத்தேழும் முடிந்துவிட்டது. கல்யாணம் கைகூடும் என்ற நம்பிக்கை சுத்தமாகக் கழிந்துவிட்டது. கிடாயை விற்று பணத்தை அங்காத்தாளின் உண்டியலில் போட்டுவிடத் தீர்மானித்திருந்தான். ஆனால் தனா இன்னும் மனந்தளராமல் அண்ணனுக்காக பெண் தேடுகிறாள். இவன் இப்படி நிற்பதில் அவளுக்கு மனசு தாளவில்லை. விவாகரத்தான பெண்களின் ஜாதகங்கள் மட்டுமே வருகின்றன. உலக வழக்கம் மாறிவருவது தெரிந்தாலும் அவனுடைய மனசு அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஏனோ ஒரு அசூயை. அவள் தயங்கித்தயங்கிக் கேட்டபோது மறுத்துவிட்டான். “தங்கமாட்ட மருமகளும் மருமகனும் இருக்கறப்ப எனக்கென்ன? நீ சும்மா ஒழப்பிட்டு இருக்காதே, இரண்டாவது கல்யாணம், கொழந்தையோட ஜாதகம் வருது அப்படீங்கற பேச்சே இருக்கப்படாது”

ராசண்ணனின் அழைப்பு திரும்ப வந்தபோது அய்யன் கட்டித்தாரையிலிருந்து சாணி வழிக்கும் டயர் வண்டியை உருட்டிவந்தார்.

”ஆளு வூட்லதான் இருக்காரப்பா. உனக்கு வாட்ஸ்ஏப்புல நெம்பர் அனுப்பிருக்கேன், அவருக்கும் தகவல் சொல்லீட்டேன். நீ போனீன்னா, கையோட கூட்டிட்டு வந்துரலா”

செல்போனை ஜட்டிப்பாக்கெட்டில் சொருகியவாறு அய்யனிடம் தகவலைச் சொன்னான். இருவருமாக ஆளுகொரு கைகொடுத்து கரிஞ்சியைத் தூக்கி சாணிக்கறை காய்ந்த வண்டிக்குள் கிடத்தினார்கள். டயர் வண்டி என்பதால் அலுங்கல் குலுங்கல் இல்லாமல் வந்தது. கட்டித்தாரையின் வேலா மரத்தடியில் படுத்திருந்த அம்மா தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு மறுபடியும் சாய்ந்துகொண்டாள். என்ன ஏது என்றுகூட கேட்கவில்லை. அவளது உலகத்திற்குள் அவளைத் தொந்தரவுபடுத்தாமல் விட்டுவிடுவதுதான் பல சமயங்களில் அவளுடைய பிணிக்கு சரியான மருந்தாக இருக்கிறது.

புல்லட்டை எடுத்துப்போய் கம்பவுண்டரை அழைத்துவந்தபோது பொழுது உச்சிக்கேறி இருந்தது. அய்யன் கட்டித்தாரையில் கூளம் கூட்டிக்கொண்டிருந்தார். லுங்கியை இறுக்கிக் கட்டிக்கொண்ட கம்பவுண்டர் கொட்டகைக்குள் கிடத்தியிருந்த கரிஞ்சியின் கடிதடங்களை ஆராய்ந்தார். அவருக்குக் அய்யனின் வயசிருக்கும். வரும்போது லொடலொடவென்று பேசிக்கொண்டே வந்தவர் வேலையில் இறங்கியதும் மெளனமாகிவிட்டார். பையிலிருந்த சாமானங்களை எடுத்துப் பரப்பியவர் வளையம் போன்றிருந்த ஊசியில் நூலைக் கோர்த்தவாறு கரிஞ்சியின் உடலைச் சுற்றிக் கட்டியிருந்த துணியை அவிழ்க்கச் சொன்னார்.

பந்துபோன்று பிதுக்கி வெளிநின்ற குடலை விரல்களை லாவகமாகக் குவித்து வளைத்து வளைத்து உள்ளே தள்ளியபோது தன்னுடைய தவறு என்னவென்று அவனுக்குத் தெரிந்தது. குடலை முழுமையாக உள்ளே தள்ளி தைக்க ஆரம்பித்தார். கண்களைக் கூர்மையாகக் குவித்து வேலையில் மூழ்கியிருப்பதைக் கண்டு அமைதியாக இருந்தான். அய்யன்தான் அதையும் இதையும் கம்பவுண்டரிடம் சொல்லிக்கொண்டு கரிஞ்சி தப்பிக்காதென்று புலம்பினார்.

”அய்யா, கொஞ்சம் பொலம்பாத இருங்க. ஒண்ணும் ஆவாது. வேலை செய்யும்போது கவனம் மாறக்கூடாது. ஒரு நூல் பிசகுனா ஊசி என்ற விரலக் குத்திரும்” சொல்லிவிட்டு கம்பவுண்டர் மீண்டும் குனிந்துகொண்டார். அந்தப் பேச்சை அய்யன் ரசிக்கவில்லை. மெதுவாக எழுந்து புகையிலையை வாயில் அதக்கியவாறு அந்தப்பக்கமாக நகர்ந்துவிட்டார். சிறிதும் பெரிதுமான காயங்களை எல்லாம் தைத்து களிம்பு போட்டு முடிக்க அரைமணிக்கு மேலாகிவிட்டது.

“கொரவளிலேயே நல்லா மாட்டிருக்கும் போலருக்குது” சாமான்களை பையில் வைத்தவாறு சொன்னவரிடம் கேட்டான்.

“தப்பிச்சுக்குங்களா?”

“தப்பிச்சுக்குமுனுதான் நெனைக்கறன். ரண்டுநாள் கழிச்சு இன்னொருக்கா வந்து பாக்கறன்” கம்பவுண்டர் கிளம்பும்வரை அய்யன் பக்கத்திலேயே வரவில்லை. திரும்ப அழைத்துப்போய் விட்டுவிட்டு வந்தான். எழுநூத்தைம்பது ரூபாய் அதிகமாகப்பட்டது. ஆனாலும் அவசரத்துக்கு வந்ததால் மறுப்பு சொல்லாமல் கொடுத்துவிட்டான்.

அவன் நம்பித்தான் இருந்தான். ஆனால் கரிஞ்சி தப்பிக்கவில்லை. மறுநாள் சாயங்காலம் வரை இலைதழை நீர் எதுவும் எடுக்காமல் கிடந்து செத்துவிட்டது. வடகோட்டு வேலியடியில் வைத்துப் புதைத்தான். அக்கியானமாக இருந்தது. நாய்களை ஏதேனும் செய்யவேண்டும் என்ற வெறி எழுந்தது. அதிலும் அந்த வெள்ளை, தங்கானின் நாய். அவனோடு பேச்சுவார்த்தை நின்றுபோய் வெகுநாட்களாகி இருந்தாலும் ஒரு முடிவோடு அவனுடைய செல்போனுக்கு அழைத்தான்.

“இதாப் பாரு, உன்ற வெள்ளநாயி இன்னும் ரெண்டச் சேத்துக்கிட்டு காடு காடா அலையிது. நேத்து என்ற வெள்ளாட்ட முடிச்சிப்போட்டுது. பதினஞ்சாயிரம் மொதல் போச்சு, ஒழுங்காப் புடிச்சுக் கட்டி வைச்சின்னா ஊருக்குள்ள ஆடு குட்டிக தப்பிக்கும், அதுவுந் தப்பிக்கும்”

”சும்மா ஒளறாத, உலகத்துல என்ற நாய் மட்டுந்தான் வெள்ளையா? எம்மேல இருக்கற பொச்சுக்கடுப்புலயும் பொறாமையிலும் பேசக்கூடாது. என்ற நாய்தான் கடிச்சுதுன்னு நீ நிரூபி. நானே அத ஊஞ்சமரத்துல வைச்சி சுருக்கு விட்டர்றன” பதிலுக்கு தங்கானும் எகிறினான்.

“ஆருக்குடா பொறாமை? சும்மா ஆகாத நாயமெல்லாம் பேசாத…”

இவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே தங்கான் போனை வைத்துவிட்டான். சுர்ரென்று கோபம் வந்தது. தென்னைமர நிழலில் அமர்ந்து எச்சிலைக் காறிக் காறித் துப்பினான். இருவருக்குமான உறவென்பது திரிந்த அமுதம். நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒன்றாய்த் திரிந்த பங்காளிகள். எல்லாவற்றிலும் ஓரணி. கொறங்காடுகளில் சுக்குட்டாய் அடித்து விளையாடுவதாகட்டும், ஊர்க்குளத்தின் புளியமரங்களின் உச்சிக்கு ஏறுவதாகட்டும், ஊரடங்கிய முன்னிரவுகளில் குட்டிச்சுவர்களில் ஒளிந்து திருடன் போலீஸ் விளையாடுவதாகட்டும். அவன் நினைப்பது இவனுக்கும் இவன் நினைப்பது அவனுக்கும் உள்ளங்கை ரேகை போல் அத்துப்படி. தனியான மகிழ்ச்சி என்றோ தனியான துயரம் என்றோ எதுவுமில்லை. மகிழ்ச்சி இரட்டிப்பாய் பெருகியது. துயரங்கள் பாதியாகக் குறைந்தன.

படிப்பிலும் அப்படித்தான். இரண்டு பேருமே சுமாருக்குக் கீழே. மற்ற பங்காளிகள் எல்லோரும் படிப்பில் வேகமாக இருந்தார்கள். படித்து வெளியே போய்விடவேண்டும் என்ற எண்ணம் அவர்கள் தலைமுறையில் முக்கால்வாசிப் பேருக்கு இருந்தது. நீர்ப்பாசனம் வாய்த்துவிட்ட ஒரிரு பண்ணையங்களுக்கு விவசாயம் ஓரளவு லாபகரமானதாக இருக்க பலருக்கும் வரவுக்கும் செலவுக்கும் எட்டாக்கையாகவே வருமானம் இருந்தது. ஒன்று படித்து வேலைக்குப் போகவேண்டும், இல்லையெனில் திருப்பூரில் ஒரு தொழிலைத் தொடங்கவேண்டும். எப்படியிருந்தாலும் படிப்பு முக்கியம். இவனும் தங்கானும் அசட்டையாக இருந்தார்கள். மேல்நிலைப்பள்ளியில் இவர்கள் சோட்டில் ஊருக்குள் ஆணும் பெண்ணுமாய் மொத்தம் பனிரெண்டு பேர். இவர்கள் இருவரைத் தவிர மற்றெல்லோரும் கல்லூரிக்குப் போனார்கள்.

”எல்லோரும் படிச்சுப் போய்ட்டா, விவசாயத்த யாரு பாக்கறது? அப்றம் உலகத்துக்கு சோறு எப்படிக் கெடைக்கும்?, டிகிரிய நாங்க கரஸ்லேயே பாத்துக்கறம்” மற்றவர்களின் கேள்விக்கு ஒரே மாதிரி பதிலைச் சொன்னார்கள். தொலைதூரக் கல்வியில் இளங்கலை வணிகவியல் சேர்ந்ததொடு சரி. ஆர்வம் முழுக்கவும் விவசாயத்தில் திரும்பிவிட்டது. அந்த வருஷம் தேனி போய் சித்துரக மிளகாய் நாற்று வாங்கிவந்து நட்டார்கள். இருவர் தோட்டத்திலும் காய் பீச்சி எடுத்துவிட்டது. தினமும் மூட்டை மூட்டையாய் வேனில் ஏற்றிக்கொண்டு பின்மதியத்தில் ஒட்டன்சத்திரம் சந்தைக்குப் போனவர்கள் தினமும் பை நிறைய பணத்தோடும் உடம்பில் பியர் போதையோடும் திரும்புவார்கள். அந்த வருஷம் ஆளுக்கு நாலைந்து லட்சம் மிளகாயில் மட்டும் லாபம் நின்றது. வருமானத்தைக் கண்டதும் இளமையின் உற்சாகம் இன்னும் அதிகமானது. தக்காளி புகையிலை மக்காணி என்று மாற்றி மாற்றி வைத்தார்கள்.

வெள்ளாமை எடுப்பதோடு சேர்த்து கூடுதல் ஆர்வம் இருவருக்கும் ஆர்வம் காளை வளர்ப்பில் ஏற்பட்டது. கண்ணபுரம், அத்திக்கோம்பை தேர்களுக்குச் சென்று தேடித்தேடி சுத்தமான கன்றுகளாக வாங்கினார்கள். ஜோடி சேர்த்துப் பழக்கப்பட்ட முறுக்கமான காளைகளை நல்ல லாபத்தில் விற்றார்கள். அவர்களுடைய ஒற்றுமையின் மீது கண் திருஷ்டி விழுந்தாலும் அப்போதெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. கோள் மூட்டும் பேச்சுக்களை பரஸ்பரம் சொல்லிச் சிரித்துக்கொண்டார்கள்.

தனாவுக்கு கல்யாணம் ஆனபோது நல்ல செழிப்பு. அவளுக்கு நகையே ஐம்பது பவுன் போட்டான். இவன் தலையெடுக்க ஆரம்பித்தபின் அய்யன் மெதுவாக ஒதுங்கிக்கொண்டார். விவசாயம் சீராக நடந்தாலும் நான்கைந்து வருஷத்திற்குள் காலத்தின் நிறம் வேறொன்றாக மாறிவிட்டதை இருவருமே உணர்ந்தார்கள். படித்து வேலைக்குப் போனவர்களுக்கு சீக்கிரம் திருமணம் கைகூட இவர்களுக்குத் தளுங்கித் தளுங்கிப் போயின. மாப்பிள்ளை படித்து வேலையிருப்பதோடு தோட்டம் தொரவு என சொத்தும் இருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு பெண்ணைப் பெற்றவர்களிடம் இருந்தது. வருகின்ற ஜாதகங்களை இருவரும் பகிர்ந்துகொண்டு பார்த்தாலும் அமையும் வாய்ப்பு துலக்கமாகத் தெரியவில்லை. வயது முப்பதைக் கடந்தபோதுதான் சிக்கலின் ஆழம் புரிந்தது. கல்யாணங்களோடு சேர்த்து குழந்தைப்பேறு, காதுகுத்து என்று அடுத்தவரிசை சுபநிகழ்வுகளில் தலைகாட்ட வேண்டியிருந்தது. தனாவின் அமைதியான திருமண வாழ்க்கையும் ஆணும் பெண்ணுமாய் அவளது அடுத்தடுத்த குழந்தைப்பேறுகளும் திருமணம் கைகூடாத வருத்தத்தைத் தணித்தன.

சில ஜாதகங்களை தங்கான் ரகசியமாக வைக்கத் தொடங்கியபோதுதான் முதல் விரிசல் விழுந்தது. அவனுக்குக் கிட்டத்தட்ட முடிவாகும் நிலைக்குச் சென்ற சில ஜாதகங்களைக் குறித்த விவரம் மற்றவர்கள் சொல்லித்தான் இவனுக்குத் தெரிந்தது. இப்படியொரு எண்ணம் தங்கானுக்கு ஏற்படும் என்று நம்பவே முடியவில்லை. அப்படியா அவர்கள் நட்பு வளர்ந்து  நிலைகொண்டிருந்தது? எல்லாம் இருக்கும்போதே தனக்கு என்னும் சுயநலத்தை மனிதன் மீறமுடியாது என்கிறபட்சத்தில் தனக்கு இல்லாதபோது அதைக் கடப்பதற்கு எள்ளளவும் வாய்ப்பில்லை என்று அவனுக்குப் புரிந்தது. மற்றவற்றைப் போல உடைத்து அவனிடம் கேட்க தனக்கு ஏன் மனம் வரவில்லை என்பது இன்னும் புதிராக இருந்தது. பேச்சைத் தாண்டி எண்ணங்களின் வழியாகவும் மனிதர்களுக்கிடையில் உறவு நிகழும்போலிருக்கிறது.

லதாவின் ஜாதகம் விரிசலை பிரிவாக மாற்றியது. ஒரேநேரத்தில் அது இருவர் கைக்கும் வந்து துரதிரஷ்டவசமாக இருவருக்கும் பத்துப் பொருத்தமும் பொருந்திப் போனது. எப்படியேனும் இதை முடித்துவிடவேண்டும் என்று அய்யனும் தனாவீட்டு மாப்பிள்ளையும் லதாவின் தோட்டத்துக்கு நடையாக நடந்தார்கள். சொத்து, செல்வாக்கு, சொந்தங்களின் வலு என்று தங்கானும் இவனும் ஒரே தரத்தில் இருந்தாலும் எங்கோ தொட்டுத் தொட்டு தங்கானின் குடும்பத்திற்கும் லதாவின் குடும்பத்திற்கும் ஒரு சொந்தம் இருந்ததால் லதா தங்கானுக்கு கைகூடிவிட்டாள்.

அவர்களுடைய திருமணத்தில் தலைகாட்டிவிட்டு வந்த பிறகு தன்னுள் பெருகிய ஏமாற்றம் மற்றும் பொறமையின் முழு வீச்சையும் கண்டான். தங்கானின் முகத்தில் அவ்வளவு சந்தோஷமும் நிம்மதியும். அவர்கள் நட்பிலிருந்த இனிமையான முன்நினைவுகளைக் கொண்டு தனக்குள் பொங்கும் பொறாமையைத் தணிக்க முயன்றாலும் அதில் தோல்வியையே அடைந்தான். எங்கேனும் லதாவைக் கண்டால் அவள் யதார்த்தமாகப் பேசினாலும் அவன் தன்க்குள் ஒரு இழப்புணர்வு எழுவதை உணர்ந்தான்.

பிரச்சனை தன்னிடமே இருந்தாலும் நட்புறவைக் காக்கவேண்டும் என்ற எண்ணம் தங்கானுக்குத் தோன்றவில்லையே. ஒருவேளை இருவரும் எதிரெதிர் நிலையில் இருப்பதால் அது சுமூகத்திற்கு வழிவகுக்காது என்று நினைத்தானோ என்னவோ,  மனமறுகிய சூழலில் நட்புறவு தன்னியல்பாகவே முறிந்துபோனது. கூடவே இரண்டு மூன்று வருஷங்களாக விவசாயமும் சிறப்பாக இல்லை. லதா வந்த நேரமோ என்னவோ, தங்கானுக்கு அது இன்னும் சிறப்பாகப் பொலிந்தது. தோல்வியின் பொறியில் தான்மட்டும் தனித்திருப்பதைக் கண்டு கழிவிரக்கம் கூடிவிட்டது. கசப்பும் சலிப்பும் தொடரவே இதை மீறவிட்டால் தான் அழிந்துவிடுவோமென்று அஞ்சி தன் கவனத்தை தனாவின் குழந்தைகளின் மீது திருப்பிக்கொண்டான். அது கொஞ்சம் ஆசுவாசத்தைக் கொடுத்தது.

நினைவுகளை உதறி எழுந்தவனின் ஞாபகம் நாய்களின் மீது திரும்பியது. என்ன செய்யவேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்தது. அடுத்த இரண்டுநாட்கள் மற்ற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு கொறங்காடுகளுக்குள்ளும் இட்டேறித் தடங்களிலும் நாய்களின் கால்தடம் நோட்டமிட்டான். அந்த வெள்ளை தங்கானுடையது என்று உறுதியாகத் தெரியும். மற்ற இரண்டும் யாருடையதென்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் விட்டு வைத்திருப்பது ஆபத்து. நாய்களுக்கும் நரிகளின் குணம் வந்துவிட்டதை நம்புவதற்குச் சிரமமாக இருந்தது. ஒருவேளை காலம் திரிந்துவிட்டதின் சமிக்ஞையா இது? முன்பு தோட்டத்திற்கு தோட்டம் பட்டிகளும் காவலுக்கு நாய்களும் இருந்தன. இப்போது ஏறத்தாழ எல்லா பண்ணையங்களும் பட்டிகளை இழந்துவிட்டன..

காலம் கலிகாலம் என்பாள் அம்மா. ஆனால் நாய்களின் குணம் எப்போது திரிந்தது என்பதை இவன் ஓரளவு கணித்திருந்தான். பல வருஷங்களுக்கு முன்னால் கோழிப்பண்ணைகள் பெருகியபோதுதான் அது நடந்தது. நோய்கண்டு செத்த கோழிகளை அள்ளிப்போய் பெரியவாய்க்காலில் வீசிவிடுவார்கள். அவற்றில் வாய்வைத்து கவிச்சி ருசி கண்டுவிட்ட நாய்களின் குணம் திரிந்து ஆடுகுட்டிகளை பதம் பார்க்கும் விளையாட்டாக மாறிவிட்டது.

மூன்றும் முற்பகல் பத்து பதினொரு மணி வாக்கில் இந்தப் பகுதியில் சுற்றுகின்றன என்பதைக் கணித்தான். மளிகைக்கடையில் இரண்டு பாக்கெட் ரஸ்க் வாங்கி வந்தவன் கரைக்கப்பட்ட திம்மட் குருணையில் ரஸ்க் துண்டுகளை ஊறவைத்து உலரவைத்தான். மறுநாள் பாலீத்தின் பையில் எடுத்துச்சென்று அவற்றின் வழக்கமான தடத்தில் ஆங்காங்கே போட்டு வைத்தான். சிக்குமா தப்புமா என்று தெரியவில்லை. வாய் வைத்தால் போதும். சோலி முடிந்துவிடும். மூன்று வருஷத்துக்கு முன்னால் ஊரடித் தோட்டக்காரரான குருசாமி வெங்காய நடவு போட்ட காட்டைப் பாதுகாக்க இந்த வேலையைப் பார்த்ததில் ஊருக்குள் ஏழெட்டு நாய்கள் செத்து விழுந்தன. வெளிப்படையாகப் பேசமுடியாத ஆனால் ஊரறிந்த ரகசியங்கள்.

பொறி தப்பவில்லை. மூன்றும் ஊரடிக் குளத்தோரம் செத்துக்கிடந்தன. வாட்ஸ்ஏப் குரூப்பில் நடராஜ் அனுப்பியிருந்த புகைப்படத்தைப் பார்த்தபோது அவற்றின் சடலங்கள் ஒருகணம் அவனை துணுக்குற வைத்தாலும் தனக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை என்று சொல்லிக்கொண்டான். மூன்றும் ஒன்றாக செத்துக் கிடந்ததுதான் அவனை உறுத்தியது. கெரகம் பிடித்தவை சாவிலும் பிரியாமலிருந்திருக்கின்றன. இரண்டாவது நாய் ராமசாமி சித்தப்பனுடையது என்பதும் இன்னொன்று சதாசிவம் மாமனுடையது என்றும் தெரியவந்தது. பொறாமை பிடித்த சிலரின் சதி என்று வாட்ஸ்ஏப்பில் குரல் பதிவு போட்டிருந்தான் தங்கான். சதாசிவம் மாமனிடமிருந்து அழைப்பு வந்தபோது தயக்கத்தோடுதான் எடுத்தான்.

“என்ன மாப்ளே இப்படி பேச்சா இருக்குதே? வெள்ளாடுபோன கோபத்துல் மாப்ள ஏதாவது செஞ்சிட்டீங்களா?”

இல்லையென்று ஒரேயடியாகச் சாதித்தவன் மாமன் தன்னை இப்படி நினைத்துவிட்டது தனக்குச் சங்கடமாக இருக்கிறது என்று இரண்டொரு பழமைகளைச் சேர்த்துப் போட்டான். கடைசியில் கேட்டது தப்பென்று சொல்லி இவனைச் சமாதானம் செய்துவிட்டு போனை வைத்தார் அவர். கொஞ்சநேரத்தில் தங்கானிடமிருந்து இவனுக்குத் வாட்ஸ்ஏப்பில் தனிச்செய்தியில்  நாய்களின் வேலையைப் பார்த்தது இவன்தான் என தனக்கு உறுதியாகத் தெரியும் எனச் சொல்லியிருந்தான். ஆதாரம் இருந்தால் நிரூபிக்கவும் என்று பதில் அனுப்பினான்.

பத்துநாட்கள் மெளனமாகக் கழிந்தன. வெள்ளாடுகளை வைத்திருக்க மனமில்லை. நேர்ந்துவிட்டிருந்த கிடாயை விற்றது மனவுளச்சலைத் தந்தது. அதுவொரு நம்பிக்கையின் அடையாளமாக இருந்தது. அந்த நம்பிக்கையை இப்போது முழுமையாகக் கைவிட்டுவிட்டாலும் மனதில் சலனங்கள் மீந்திருந்தன. விடியற்காலை எழுந்து குளித்து பத்து மைல் தொலைவிலிருந்த கோவிலுக்கு கிளம்பிப்போய் பணத்தை உண்டியலில் போட்டவன் அலங்கார பூஜை பார்த்து தன்னையறிமால் கண்ணீர் சுரந்தான். தன் அறியாப்பிழைகளை மன்னிக்கும்படி இறைஞ்சினான். என்னை ஏன் கைவிட்டாய் என்று மன அரற்றலோடு கேட்டபோது ஆத்தாள் அர்த்தப்புன்னகை பூத்தாள்.

விசேஷநாள். காதுகுத்து, கிடாவெட்டு என்று  மகிழ்ச்சியின் ததும்பல் கோவிலெங்கும் நிறைந்திருந்தது. மொடமொடக்கும் பட்டுப் பாவாடையோடும் சந்தனம் தடவப்பட்ட மொட்டைத்தலையோடும் காதுகுத்தப்படும் வலிக்கு கதறி அழும் பெண்குழந்தைகள். யாரோ இவனிடம் சர்க்கரைப்பொங்கலை நீட்டினார்கள். வாங்கி உண்டவனுக்கு வயிறும் மனமும் குளிர்ந்தது. புல்லட்டில் தெற்கே வரும்போது ஏறுவெயிலின் சூடு தெரியவேயில்லை. நெடுநாளுக்குப்பின் மனதில் ஒரு அமைதி.

மாதாசிங்கன் கோவில் இட்டேறியில் நுழைந்தபோது தங்கானும் லதாவும் ஸ்கூட்டியில் வருவதைக் கண்டான். இவனுடைய வண்டியை சற்றே ஒதுக்கினாலும் தங்கான் வண்டியைக் குறுக்காக வளைத்து நிறுத்தினான். தங்கானின் எண்ணவோட்டத்தைப் புரிந்துகொண்ட லதா தங்கானிடம் ஒழுங்காக வண்டியை எடுக்கும்படி மெல்லிய குரலில் சீறினாள். அவள் இரண்டாவது தடவை மாசமாக இருக்கிறாள் என்று கேள்விப்பட்டிருந்தான். இப்போது  நேரில் பார்க்கையில் இன்னும் சோபைகூடிய தாய்மையின் லட்சணத்தில் மிளிர்ந்தாள். இவன் எதுவும் சொல்லாமலும் வண்டியை அணைக்காமலும் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.

தங்கானிடம் அத்தனை சீற்றம். கொடூரமான கெட்டவார்த்தையில் ஏசினான். லதா இருக்கிறாளே என்று இவன் அமைதியாக இருக்க இவனுக்குப் பொறாமை, பொறாமை என்று அவன் திரும்பத் திரும்ப ஏசினான். நாயைக் கொன்றவன் சமயம் கிடைத்தால் ஆளையும் தீர்த்துவிடுவான் என்று அவன் சொன்னபோது சுருக்கென்று தைத்தது. கோபத்தோடு வண்டியை ஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு இறங்கியவன் வெள்ளைவேட்டியை மடித்துக் கட்டினான்.

“அய்யோ ஏன் இப்படி எல்லாம் உளர்றீங்க, அமைதியா இருங்க”  தங்கானிடம் மறுபடியும் சீறிய லதா இவனிடம் கெஞ்சலாக சொன்னாள்.

“அவிய ஏதோ சொல்லிட்டுப் போறாங்க, நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க மச்சா”

“நீ அந்தால்ல போ” என்றவாறு எதிர்பார்க்காத நொடியில் இவன் மேலே பாய்ந்துவிட்டான் தங்கான். தங்கானைத் தாக்கத் தோன்றாவிட்டாலும் அவனிடமிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆத்தாளின் பூரண அலங்காரப் புன்னகை ஒரு கணம் தோன்றி மறைந்தது. இட்டேறி மணலில் கட்டிப் புரண்டவாறு தாறுமாறாக அடித்துக்கொண்டார்கள். குமுறியவாறே இருவரையும் தடுக்க முயன்றாலும் லதாவால் உள்ளே நுழையவில்லை. அவள் கோபமாக இரைந்தாள்.

“ரெண்டுபேரும் செத்துப்போன ஆட்டுக்கும் நாய்க்கும் அடிச்சிக்கிறீங்களா, இல்லை என்னைக் கட்டறதல இருந்த போட்டிக்கு அடிச்சிக்கறீங்களா?”

அவள் குரல்கேட்டு இவன் தளர்ந்த ஒருநொடியில் நெஞ்சில் அமர்ந்து குரல்வளையை இறுக்க ஆரம்பித்தான் தங்கான். இவனுக்குக் கண்கள் இருண்டன. கரிஞ்சியின் குரல்வளை இப்படித்தானே தவித்திருக்கும்? மூன்று நாய்களும் மரித்துப்போகையில் இப்படித்தான் மூச்சுத்திணறியிருக்கும்? இவையெல்லாம் ஏன் இப்படி நிகழ்கின்றன? இந்த இருண்டகணத்தை எதிர்கொள்ளத்தானா இருவரும் அத்தனை பொற்கணங்களக் கடந்தார்கள்?

பதட்டத்தோடு செல்போனில் யாரையோ லதா அழைத்துக்கொண்டிருப்பது தூரத்துக் குரலாய் கேட்டது. மனதின் மிக நுட்பமான புள்ளியில் உயிர் தன்னை மீட்டுக்கொள்ளும் இறுதி உந்துதலைக் கொடுக்க தன் உயிரின் மொத்த வலுவையும் திரட்டி தங்கானை உந்தித்தள்ள அவன் மல்லாந்து விழுந்தான். அந்த உந்துதலைக் கூட்டி விசையோடு எழுந்தவன் இட்டேறியின் ஓரத்தில் கிடந்த கருங்கல்லைத் தூக்கி தங்கானின் தலைக்குக் குறிவைத்தான்.

“அய்யோ மச்சா, வேண்டாம்” என்று அலறியவாறு செல்போன் நழுவ குறுக்கே விழுந்த லதாவைக் கண்டு உயர்த்திய கருங்கல்லோடு அப்படியே நின்றுவிட்டான்.

“கொல்றா,கொல்லு, ஏ இன்னும் நிக்கறே, நீ கொலகாரன்தானே?”

சீற்றம் தணியாத தங்கான் கண்களைப் பார்த்து உறுமியபோது கல்லை தூரமாக வீசிவிட்டு வண்டியின் ஓரமாக நகர்ந்துவிட்டான் இவன். லதா தங்கானை இழுத்துச்சென்று வண்டியை எடுக்கவைத்தாள். அவர்கள் சென்றபின் சற்றுநேரம் அப்படியே உட்கார்ந்திருந்தவன் பெருமூச்சோடு எழுந்து வேட்டியை உதறிக் கட்டினான். உடம்பெல்லாம் காந்தியது. குத்துப்பட்ட இடத்திலெல்லாம் வலித்தது. கிளம்பியவன் யோசனை வந்தவனாய் வண்டியை நிறுத்திவிட்டு திம்மட் ஊறிய ரஸ்க்கை வீசியிருந்த இடங்களைத் தேடிப்போனான்.  ஏதாவது மீந்து கிடந்தால் எடுத்து அழிக்கவேண்டும் என்று தோன்றியது. சிறுதுணுக்கும் இல்லாதது கண்டு ஒரு துயரார்ந்த நிம்மதி பரவியது.

கழுத்துதான் வலிகுறையாமல் தொந்தரவூட்டியது. கூடுதலாய் ஒரு நிமிஷம் தங்கானின் பிடி நீண்டிருந்தால் செத்திருப்போம் என்று தோன்றியது. தான் எடுத்த கல்லை தங்கானின் தலையில் போட்டிருந்தால்? நினைத்தபோதே முதுகெலும்புக்குள் குளிர் பரவியது. நல்லவேளையாக லதா காத்து நின்றாள். மனதின் லட்சம் கரங்கள் கொண்டு அழிக்க முற்பட்டாலும் அவனுடைய அகத்தினுள் அவளுடைய முகமும் தோற்றமும் தாய்மைப் பூரிப்போடு துலங்கி எழுவதைக் கட்டுபடுத்தமுடியாமல் கேவல் வெடித்தது. அந்தக் கண்ணீர் எரிநெய்யாக விழ வெகுகாலத்திற்கு அணையும் தடயமின்றி தங்கானின் மீதான அவன் பொறாமை கொழுந்துவிட்டு மறுபடியும் எரியத்தொடங்கியது.

    000

குணா கந்தசாமி

சிறுகதை ஆசிரியராகவும், கவிஞராகவும் அறியப்படும் 'குணா கந்தசாமி' சமகாலத்தில் பல்வேறு மதிப்புரை கட்டுரைகளும் எழுதிவருகிறார். கற்றாழைப் பச்சை, புலியின் கோடுகள், உலகில் ஒருவன், மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர் ஆகிய நூல்ககளின் ஆசிரியர்.

3 Comments

  1. குணா கந்தசாமி எழுதிய இந்த சிறுகதைக்கு நன்றி..பொறாமையின் வன்முறை பயங்கரமாக உள்ளது .நாய்கள் மூன்றும் ஓன்றாக மரிப்பது பயங்கரமாக உள்ளது. இவரது எண் இருந்தால் தந்து உதவுங்கள். பேச வேண்டும் போல உள்ளது. நன்றி மாரி மகேந்திரன் இலங்கை எழுத்தாளர்

  2. இந்தச் சிறுகதை ஒளி வடிவில் கிடைத்தால் மிக பயனுள்ளதாக இருக்கும் இந்த எழுத்தாளர்கள் உரையாட விரும்பினால் என்ன செய்வது இவரின் கைப்பேசி எண் கிடைத்தால் மிக எளிமையாக உரையாட முடியும் இவருடைய புத்தகம் மின் நூலாக கிடைத்தால் படிப்பதற்கும் மிக உதவியாக இருக்கும் ஏனென்றால் நான் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி எனக்கு மின் நூலாக கிடைப்பதே படிப்பதற்கான வசதியாக இருக்கும்

  3. வாழ்த்துகள் குணா ! மிக அருமையான கதை. கிராமங்களில் வெகு எளிதாக கண்ணில் படும் மணமாகாத , முதிர்ந்த ஆண்களில் ஒருவனின் அகச்சித்திரம் பல நோக்குகளில் சகல உணர்சிகளும் மிளிர, வெளிக் கொணர்ந்த்திருப்பதே உங்கள் எழுத்தின் வெற்றி! நட்பின் இடைவரும் பெண் எப்படி அவர்தம் உறவில் உக்கிரம் சேர்க்கிறாள் என்பதும், அவளே அதை அவர்களுக்குச் சொல்வதும் கதைகருவிற்கு வலு சேர்க்கின்றன. நன்றி !

உரையாடலுக்கு

Your email address will not be published.