சிங்கள இலக்கிய உலகில் ஓர் இளம் எழுத்தாளராகவும், திரைப் பிரதியாளராகவும் அறியப்பட்டவர் நிலங்க அலெக்சான்டர். அவருடைய ‘ஜெகன்’ நாவலும் ‘மூடப்பட்ட கதைகள்’ சிறுகதைத் தொகுப்பும் இலங்கையின் அரசியல் சமூக திருப்புமுனைகளையும் இன நெருக்கடியையும் தனித்துவமான கண்ணோட்டத்தில் அணுகுகின்றன. ஞாயிறு திவயின பத்திரிகையில் சிந்தனி விக்ரமநாயக்கா நிகழ்த்திய நேர்காணலின் தமிழ் வடிவம் இது. மொ.கு இந் நேர்காணலில் கவனத்தில் கொள்ளப்படும் எழுத்துக்களும் இலக்கியப் படைப்புக்களும் சிங்கள மொழியிலானவற்றையே குறிக்கின்றன.
“வரலாறு என்பது வெறும் கதை. புத்துயிர் பெற முடியாத ஒரு சகாப்தம். நாங்கள் செய்ய வேண்டியது, அந்த வெறுங்கதையைக் கவனமாக ஆராய்ந்து, அதில் சொல்லப்பட்டிருக்காத சமூக அரசியலைப் புரிந்துகொள்வதுதான். பிள்ளைகளைப் பரீட்சைக்குத் தயார்ப்படுத்தும்போது பாடப்புத்தகங்களில் மறைக்கப்பட்டவற்றைப் பற்றித்தான் நாம் அவர்களுக்குச் சொல்ல வேண்டும், அவற்றை பரீட்சையில் கேட்கப் போவதில்லை என்றாலும் கூட.”
தன்னுடைய ‘மூடப்பட்ட கதைகள்’ சிறுகதைத் தொகுப்பில் மேற்கண்டவாறு எழுதுகிறார் நிலங்க அலெக்சாண்டர். பிற எழுத்தாளர்களால் பேசப்படாத, மறக்கப்பட்ட நினைவுகளை சமகால இலக்கியத்திலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் பேசுபொருளாக்கும் நிலங்க அலெக்சாண்டர், ஓர் எழுத்தாளர். திரைப் பிரதியாளர். அவருடனான நேர்காணல் இது.
தற்போதைய சமூக முன்னேற்றத்திற்கு சமகால இலக்கியம் எவ்வாறு பங்களிக்கிறது?
நாங்கள் இருண்ட யுகங்களைக் கடந்து வந்திருக்கிறோம். ஆகவே இருண்ட காலத்தின் எழுத்துக்களில், அந்த இருள் பிரதிபலித்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான (சிங்கள) சமகால எழுத்துக்களில் இந்தப் பிரதிபலிப்பு இருப்பதில்லை. இன்னொன்று இலக்கியம் ஒருபோதும் சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்தாது. அது ஒரு நுட்பமான உந்துதலை அல்லது சமூக முன்னேற்றத்திற்குத் தேவையான ஒரு மெல்லிய அதிர்வை மட்டுமே அளிக்கக் கூடியது. ஆனால் அப்படிக் கூட அல்லாமல் சந்தையில் தவிர்க்க முடியாமல் போட்டியிட வேண்டிய ஒரு பண்டமாக அது ஆகிவிட்டதன் விளைவாக அது நிறைவேற்றி இருக்க வேண்டிய குறைந்த பட்சச் சமூகச் செயல்பாட்டிலிருந்தும் தவறிவிட்டது. வாசகர் எதைக் கோருகிறாரோ அதை வழங்குவதுதான் தற்போதைய இலக்கியச் சூழல். வாசகர்களைப் பொறுத்தவரை தாங்கள் வாழும் அழுத்தம் மிக்க சமூகச் சூழலில் இருந்து தப்பித்துக்கொள்ள, தம்மைக் கற்பனையில் மூழ்கடிக்கும் இலக்கியத்தை நாடுகின்றார்கள். உண்மையில் படைப்புக்களின் மூலம் சமூகம் ஞானத்தைப் பெற வேண்டுமானால், அவை கற்பனையிலிருந்து விலகி, கடுமையான யதார்த்தங்களை எதிர்கொள்ளும் படைப்புகளாக மாற வேண்டும். இதை நான் சோகச் சுவையை அனுபவிப்பதற்காகச் சொல்லவில்லை. புரிதலுக்காகவே சொல்கிறேன். அப்படிப்பட்ட ஒரு சமூகத் தேவை இருக்கும் யுகத்தைத்தான் நாங்கள் கடக்கின்றோம்.
எப்போதாவதுதான், இந்தத் தேவையைப் புரிந்துகொள்ளும் படைப்புகளைச் சந்திக்க நேரிடுகிறது. உதாரணமாக தமிழ் எழுத்தாளர் தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவலைச் சொல்லலாம். இருப்பினும், இம்மாதிரியான படைப்புகள் வெளியாகும்போது, முதலாளித்துவ உலக ஒழுங்குகளால் அழுத்தப்படும் வாசகர்களிடம் அவை பெரிய வரவேற்பைப் பெறுவதில்லை. இன்னொரு பக்கத்தில் சந்தையை மையமாகக் கொண்ட இலக்கியப் படைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் சிலர் நம்புகிறார்கள். இது, நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல், இலக்கியம் ஒரு பண்டமாக மாறியதன் துரதிர்ஷ்டவசமான விளைவு. என்னைப் பொறுத்தவரை சமூகத்தை ஆழமாக காயப்படுத்தக்கூடிய ஒரு புத்தகம் அதிகமாக விற்கும் புத்தகத்தை விட உயர்ந்தது என்றே நம்புகிறேன்.
ஒரு காலத்தில் பேசப்பட்டு பின்னர் நினைவுகளில் மங்கிப்போன நிகழ்வுகளின் தொகுப்பான ‘மூடப்பட்ட கதைகள்’ உங்கள் சிறுகதைத் தொகுப்பின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன?
மூடப்பட்ட கதைகள், என்ற பெயரிலேயே குறிப்பிடுவதைப் போல, இவை இந்த நாட்டின் மைய வரலாற்றால் மறைக்கப்பட்ட கதைகள். எட்டு உண்மைக் கதைகளின் தொகுப்பு இது. இந்த நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் நடந்த குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் சமூக உண்மை நிகழ்வுகளை இக்கதைகள் உள்ளடக்கியுள்ளன. அவற்றில் 1971 கிளர்ச்சி, 1980 ஜூலை வேலைநிறுத்தம், 1981 யாழ் நூலகம் எரிப்பு, 1988/89 அரச பயங்கரவாதம், விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல்கள், போருக்குப் பின் காணாமல் போனவர்கள், போருக்குப் பிந்தைய காலத்தில் முஸ்லிம்களை முதன்மை எதிரிகளாக மாற்றும் முயற்சிகள் என இந்தக் கதைகள் அனைத்தும் இருண்ட காலத்திலிருந்து வந்தவை. இது போன்ற இருண்ட கதைகளை, காலமும் இருளும் என்ற மண்ணுக்குள் புதைந்து விட அனுமதிக்கலாகாது. உதாரணமாக, 1971 கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களின் தளராத துணிவு, 1980 ஜூலையில் ஜே.ஆர்.ஜெயவர்தன போன்ற அரசியல் கொடுங்கோலருக்கு எதிராக நடத்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அஞ்சாத போராளிகள், 1988/89ல் அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்ட தென்னிலங்கை இளைஞர்களின் சளைக்காத வீரம். இழந்த உரிமைகளுக்காக தொடர்ச்சியாகப் போராடிய வடக்கில் உள்ள தமிழ் இளைஞர்களின் தைரியம், இவர்கள் அனைவருமே மிகுந்த மரியாதைக்கு உரியவர்கள். அதனால்தான் “மூடப்பட்ட கதைகள்” என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதினேன். இக்காலத்தில் இதுபோன்ற அரசியல் விழிப்புணர்வுள்ள தலைப்புகளில் படைப்புக்கள் வருவதில்லை. இவை நமது தற்போதைய தலைமுறையினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் தெரிந்திருக்க வேண்டும். இந்த அனுபவங்களை வருங்கால சந்ததியினருக்கு வழங்க இதுபோன்ற கதைகள் எழுதப்பட வேண்டும்.
உங்களுடைய நாவலான “ஜெகன்”, இலங்கையின் வடக்கிலும் தெற்கிலும் ஏற்பட்ட இரட்டைக் கிளர்ச்சிகளை மீள் சமூகத்தின் முன்வைத்துப் பேசுகிறது. அவ்வாறு எழுத நினைத்தது ஏன்?
‘ஜெகன்’ ஓர் இளைஞனைப் பற்றிய கதை. அவனுடைய பெயர்தான் தமிழ். ஆனால் அவனுக்குத் தமிழ் பேசவோ எழுதவோ தெரியாது. அவனைப் பயங்கரவாதி என்று முத்திரை குத்தும் தென்னிலங்கைச் சிங்கள தேசியவாத சமூகத்தில் அவன் வாழ்கிறான். இந்த நாவல் வடக்கின் இன நெருக்கடியை அடிப்படையாகக் கொண்ட ஓர் உருவாக்கம். தென்னிலங்கையின் பார்வையில் இலங்கையின் இன நெருக்கடி எவ்வாறு நோக்கப்படுகிறது என்பதை இதில் நன்கு புரிந்து கொள்ள முடியும். 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையில் கொழும்பு மற்றும் அண்டியுள்ள பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் மீது சிங்களவர்கள் நடத்திய கொடூரத் தாக்குதல்களில் இருந்து கதை தொடங்குகிறது. 1988/89ல் அரச பயங்கரவாதம் தென்னிலங்கை சிங்கள இளைஞர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட கொடூரமான அடக்குமுறை பற்றியும் இது விவாதிக்கிறது. இழந்த தம்முடைய உரிமைகளுக்காகவும், தமிழர்களை இலக்காகக் கொண்ட அரச வன்முறைகளை எதிர்த்தும் ஆயுதம் ஏந்திய வடக்கில் உள்ள இளைஞர்களைப் பற்றியும் பேசுகிறது. இந்த நிலம் தொடர்ச்சியாக மிருகத்தனமான சம்பவங்களுக்கும் அரச அடக்கு முறைக்கும் தளமாக இருந்து வருகிறது. இதனை எதிர்காலத்தினர் தெரிந்துகொள்ள வேண்டும். இலங்கையின் தேசியப் பிரச்சினை பற்றிய சரியான புரிதலைப் பெறுவதற்காகவும், தென்னிலங்கையில் கட்டியெழுப்பப்படும் தமிழர்களுக்கு எதிரான கருத்தியலை விளங்கிக்கொள்வதற்காகவும் அவர்கள் தம்முடைய உணர்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
போர் மனிதாபிமானமற்றது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அதை விடவும் மனிதாபிமானம் அற்றது எதுவென்றால் யார் செய்தாலும் அவர்களுடைய தொடர்ச்சியான அடக்குமுறையும் ஒடுக்குமுறையும்தான். எனவே போரை மட்டும் எதிர்க்காமல் போருக்குக் காரணமான அடக்குமுறையையும் எதிர்க்க வேண்டும். ஒரு தென்னிலங்கை வாசியாக இருண்ட காலங்கள் எனக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியால்த்தான் ஜெகன் நாவலை எழுதினேன். மனித நேயத்தை மதிக்கும் மற்றவர்களுக்கும் இந்த அதிர்ச்சியை கடத்த விரும்புகிறேன். இந்த நினைவுகளை எதிர்காலத்திற்குக் கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்யவும் விரும்பினேன்.
ஒரு தொலைக்காட்சித் திரை எழுத்தாளராக, தற்போதைய சமூக அமைப்பில் உருவாக வேண்டிய படைப்புகள் குறித்து உங்கள் எண்ணங்கள் என்ன? இதற்கு நீங்கள் என்ன பங்களிப்பு செய்கிறீர்கள்?
தொலைக்காட்சி நாடகங்கள் ஒரு கலை வடிவமாகப் பெற்ற பரிணாம வளர்ச்சியைப் பற்றி எனக்கு விமர்சனப் பார்வை உண்டு. ஆரம்ப காலத்திலிருந்தே, அவை கலையை விடவும் வணிக நோக்கங்களிலேயே அதிகமாகச் சாய்ந்துள்ளன. அதனால்தான் சவர்க்கார ஒபராக்கள் (Soap Operas) என்று அழைக்கப்பட்டன. இவை வீட்டில் தங்கியிருக்கும் இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டவை. சவர்க்கார உற்பத்தியாளர்கள் தங்களுடைய விற்பனையை அதிகப்படுத்துவதற்காக இந் நாடகங்களில் அதிகமும் முதலீடு செய்தார்கள். அதனால்தான் சவர்க்கார ஒபராக்கள் என்று பெயர். இலங்கையின் முதல் தொலைக்காட்சி நாடகமான ‘திமுது முது’ கூட நீர் இறைக்கும் இயந்திரங்களைத் தயாரித்த ஜினசேன நிறுவனத்தின் ஆதரவிலேயே தயாரிக்கப்பட்டது. இன்றைக்கு தொலைக்காட்சி நாடகம் மற்றைய கலை வடிவங்களை விடவும் அதிகமும் வணிக விளம்பரக் கருவியாக மாறியிருக்கிறது. அதற்குள் கலை மதிப்பைத் தேடுவது கிட்டத்தட்ட ஒரு நகைச்சுவை தான்.
ஆரம்ப காலத்தில் எங்களுடைய நாட்டில் இரண்டு தொலைக்காட்சிச் சேவைகளே இயங்கின. போட்டி குறைவாக இருந்தது. அதனால், வணிக ரீதியான உந்துதல் இருந்தாலும் கூட உயர் தர தொலைக்காட்சி நாடகங்களை உருவாக்குவதற்கான அதிக நேரமும், உளச் சுதந்திரமும் கிடைத்தன. இன்றைக்கு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. தொலைக்காட்சி சேவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக வணிக மதிப்பைப் பெறுவதற்காக, அவர்கள் வாரம் முழுவதும் தொடர்ந்து ஓடும் நாடகங்களை உருவாக்குகிறார்கள். கடுமையான சந்தைப் போட்டி திடீர் நாடகங்களை உருவாக்கும் போக்கை அதிகரித்துள்ளது. தற்காலத் தொலைக்காட்சி நாடக எழுத்தாளர்களுக்கு தங்களுடைய படைப்புகளில் முதலீடு செய்ய நேரமோ அல்லது சுதந்திரமோ கிடையாது. இதுதான் தரக்குறைவான படைப்புக்களாகக் கருதப்படுவதற்கான உண்மையான காரணம். படைப்பாளரின் பலவீனத்தால் இது நிகழ்வதில்லை. மாறாக சந்தைப் போட்டியினாலேயே நிகழ்கிறது. அதனால்தான் அவற்றில் தரத்தைத் தேடுவது ஒரு நகைச்சுவை என்று சொன்னேன்.
தொலைக்காட்சி நாடகங்களால் சமூக வளர்ச்சியில் அல்லது தனிப்பட்ட பொழுதுபோக்குகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா?
நாடகங்கள் எளிமையான பொழுதுபோக்குகளை வழங்குவதற்காக மட்டுமே உருவாக்கப்படுகின்றன. நடைமுறையில் உள்ள போட்டி காரணமாக, எழுத்தாளர்களுக்கு குறைந்த நேரமும் வரையறுக்கப்பட்ட சுதந்திரமுமே உள்ளது. தவிரவும் ஒவ்வொருநாளும் திரைப்பிரதியை எழுதிக்கொண்டே இருக்கவும் வேண்டும். இம்மாதிரியான அழுத்தங்களால் எப்போதாவது அரிதாகத்தான் நல்ல பிரதிகள் உருவாகின்றன. சில சமயங்களில், கட்டுப்பாடுகள் காரணமாக கதைக்களங்கள் சுருங்கி, ஒத்திசைவையும் இழக்கின்றன. தொலைக்காட்சி, மக்கள் மீது செல்வாக்குச் செலுத்தவல்ல வலுவான ஊடகம், என்றாலும் தொலைக்காட்சி நாடகங்கள் அப்படியான பெரிய தாக்கம் ஒன்றையும் ஏற்படுத்துவதில்லை. பிரதான நடிகரையோ நடிகையையோ இடையில் மாற்றினால் கூட பார்வையாளர்கள் தொடர்ந்தும் நாடகத்தைப் பார்க்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை புற உலக அழுத்தங்களுக்கு ஒரு வடிகாலாக ஓர் எளிய பொழுதுபோக்காக நாடகங்களைப் பார்க்கிறார்கள். உண்மையில் பொழுதுபோக்கை வழங்குவதைத் தவிர வேறெந்த நேர்மறையான தாக்கமும் பார்வையாளர்களிடத்தில் ஏற்பட்டுவிடவில்லை.
ஒரு படைப்பாளியாக, சமகால சமூகத்தில் உள்ள அசமத்துவங்களைக் கையாளும் படைப்புகளில் நீங்கள் திருப்தி அடைகிறீர்களா?
இன்றைக்கு பல அசமத்துவப் பிரச்சினைகள் உள்ளன. இனப்பிரச்சினை அவற்றில் முக்கியமான ஒன்று. இதில் கவனம் செலுத்த வேண்டிய தேவை படைப்பாளிகளுக்கு இன்னமும் இருக்கிறது. தசாப்தங்களைத் தாண்டியும் அந்தத் தேவை தீர்ந்துவிடவில்லை. போர் முடிந்துவிட்டது என்று சிலர் வாதிடலாம். முடிந்த கதையை ஏன் கிளற வேண்டும் என்று கேட்கலாம். ஆனால் ப்ரெக்ட் கூறியது போல், நமக்கு அளிக்கப்படும் அமைதி குறித்து நாம் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். யுத்தம் பௌதீக ரீதியாக முடிவடைந்த போதிலும், நீண்டகால மோதலுக்கு வழிவகுத்த மூல காரணங்கள் அரசியல் ரீதியாக தீர்க்கப்படவில்லை. அதனால் சமூக ஏற்றத்தாழ்வு தொடர்கிறது. உதாரணமாக, போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் கஞ்சியை மட்டுமே நம்பியிருந்த தமிழ் மக்கள், அங்கே இழந்த தமது உறவுகளை நினைவுகூருவதில் இன்னமும் அரச தடைகளை எதிர்நோக்குகின்றனர். அதேபோன்று, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களின் நினைவேந்தல்களை அரசாங்கம் இன்றும் தடுக்கிறது. எனவேதான் போருக்குப் பிந்தைய சிங்கள இலக்கியம் இன நெருக்கடி குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறேன். இதற்கான இலக்கிய ஈடுபாடு இன்னும் அவசியம். அதே நேரம் இந்த சமூக ஏற்றத்தாழ்வுகளை இலக்கியம் மட்டுமே தீர்த்துவிடும் என்றும் நான் நம்பவில்லை. நமக்குத் தேவைப்படுவது ஒழுங்கமைக்கப்பட்ட சமூக இயக்கங்களும் புரட்சிகர தலையீடுகளும்தான். இவை இல்லாமல் இலக்கியம் மட்டுமே சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்துவிடும் என்று நான் நம்பவில்லை.
இன்றைய புதிய தலைமுறையினர் படைப்பாற்றலில் பின்தங்கியிருப்பதாக நினைக்கிறீர்களா?
அப்படி நான் நினைக்கவில்லை. அவர்கள் அதிக எண்ணிக்கையில் யூடியூப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களிலும், இணையத்திலும் புதிய தொழில்நுட்பங்கள் மூலமாக படைப்பாற்றலோடு இயங்குகிறார்கள். நாம் செய்ய வேண்டியது அவர்களின் படைப்புகளின் தரத்தை உயர்த்த உதவுவதுதான். பெரும்பாலும் அவர்களுடைய அனுபவங்களே அவர்களுடைய படைப்புக்களிலும் செலுத்தும், அதிலும் அவர்கள் அதிகார வர்க்கங்களால் உருவாக்கப்பட்ட போர் வெறிக்கு மத்தியிலேயே வளர்ந்தவர்கள். ஆகவே அவர்களுடைய படைப்புக்களுக்கான நமது ஆதரவென்பது நமக்கு முந்தயை தலைமுறையினரின் அனுபவங்களை அவர்களுக்குத் தருவதுதான். எடுத்துக்காட்டாக, 70களின் இடதுசாரி இயக்கங்களுக்குள் நடந்த அரசியல் உரையாடல்கள், X குழு போன்ற குழுக்களுக்குள்ளான அரசியல் மோதல்கள் மற்றும் 80களின் இருண்ட நினைவுகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
சயந்தன்
ஈழத்தமிழ் எழுத்தாளர். புலம்பெயர்ந்து சுவிட்ஸர்லாந்தில் வாழ்கிறார். ஈழப் போரிலக்கியத்தின் முக்கிய பிரதிகளான ஆறாவடு, ஆதிரை, அஷேரா ஆகிய நாவல்களின் ஊடாக வாசகர்கள் மத்தியில் பரந்த அறிமுகத்தைப் பெற்றார்.