/

அகழ் : நூல் அறிமுகங்கள்

தரூக் : கார்த்திக் பாலசுப்பிரமணியம்

கார்த்திக் பாலசுப்பிரமணியம் எழுதிய தரூக் நாவலை காகிதத்தின் உறையில் சுற்றி வைக்கப்பட்ட மிட்டாய் என்று நான் கூறினால் மிட்டாயின் சுவையை அறிவதற்கு முதலில் காகிதத்தினை அகற்றும் நுட்பத்தையோ இல்லையென்றால் பொறுமையையோ நீங்கள் அடைந்திருக்க வேண்டும். விதையின் வீரியம் மேலிருக்கும் தோலின் கடினத்தன்மையோடு பந்தப்பட்டது.

முதல் சில அத்தியாயங்கள் அப்படியான தடையைக் கொடுக்கின்றன. துகிலுரிப்புக்குப்பின் இருக்கும் மிட்டாயை உடனடியாக அப்படியே வாயிலிட்டு சுவைத்தால் மேற்பகுதியில் ஒரு சுவையும் உள்ளே வேறொரு சுவையும் இரண்டும் கலக்கும்போது மூன்றாவதாக இன்னொரு சுவையும் கிடைக்கும். வாயிலிட்டுக்கு கொள்வதற்கு முன்பாக மிட்டாயின் மேற்பகுதியையும் உள்பகுதியையும் தனித்தனியாக பிரித்து சுவைத்தால்? அப்படியும் சிலர் இருக்கிறார்கள். சுவைக்கலாம்… அதுவும் ஒரு அனுபவம், ஒன்றாக சுவைப்பதும் இன்னொரு விதமான அனுபவம் இதில் கூடுதலாக அந்த மூன்றாவது சுவை. நிச்சயம் இது எல்லோர் நாவிலும் ஒரே மாதிரியான தினுசில் இருக்காது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் – பிரகடனத்தோடு நாம் திருப்பதியடைந்து கொள்கிறோம். தீதும் நன்றும் பிறர் தரா வாரா என்பதை மறந்து விடுகிறோம். பிழைப்பின் பொருட்டு இடம் விட்டு இடம் நகர்ந்து செல்லும்போது பிரகடனங்கள் வழியாக சமரசத்திற்கு உள்ளாகும் மனிதர்கள், தங்களுக்கு விளையும் உளவியல் பாதிப்புகள் மீதான அக்கறை எந்தளவிற்கு என்பதிலிருந்து அவர்களது எதிர்கால அகவாழ்வின் வளம் கட்டமைக்கப்படுகிறது.

பழங்குடிகளை பாதுகாக்கப்பட்டவர்களாக அழிவின் விளிம்பில் நிற்ப்பவர்களாக ஆக்கியதின் பெரும்பங்கு குடியேற்றம், அதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். ஆனால் பொதுவாக இந்நிலைமைக்கு பின்னால் இருக்கும் நிதர்சனம் இன்றையக் காலக்கட்டத்தில் நிலையான பூர்வக் குடிகளின் சதவீதம் குறைந்து விட்டது என்பதே. பூர்வக்குடிகள் என்று பிளிறும் உரத்தக் குரலுக்கு பின்னால் இருக்கும் சரித்திரத்தின் உண்மைத் தன்மையை பின்னோக்கி ஆராய்ந்து பார்த்தோமேயானல் அவர்களும் இடம் நகர்ந்து வந்தேறியக் குடிகளாகவே இருப்பார்கள்.

தரூக் யாதும் ஊரே யாவரும் கேளிர் பிரகடனத்தின் உண்மையைத் தன்மையை ஆராய்கிறது. பரிச்சியமில்லாத புதிய மண்ணில் மறைந்திருக்கும் நிதர்சனத்தின் வெளிச்சத்திலிருந்து வாழ்க்கைக்கு நேரும் லாப நஷ்ட விகிதாச்சாரங்களை பேசுகிறது.

நியூ வேல்ஸ் பகுதியின் பழங்குடிகளான தரூக் இனம் நினைவுச் சின்னமாக்கப்பட்பதற்கு மட்டுமல்ல பல்வேறு நாடுகளின் பூர்வக் குடிகளும் தன் வாழிடத்திலேயே அகதிகளாக நிராகரிக்கப்பட்டதற்கு பிரிட்டிஷரின் குடியேற்ற பேராசை வெறியே அஸ்திவாரம். பிரிட்டிஷார் மட்டுமல்ல உலகில் பேராசையின் வெறி எங்கு வெளிப்பட்டாலும் அதன் தீராதப் பசிக்கு எளியவர்களின் உயிர்களும் உரிமைகளும் உடைமைகளுமே முதல் இலக்கு.

ஆஸ்திரேலியாவின் பூர்வக்குடிகளை அகற்றிவிட்டு குடியேற்றங்கள் அமைக்கும் பிரிட்டிஷரின் சரித்திரம் ஒரு சுவையாகவும், நிகழ்காலத்தில் பிழைப்பின் / மாற்றத்தின் பொருட்டு தற்காலிகமா/ நிரந்தரமாகக் குடியேறுபவர்களின் மீதான நிராகரிப்பு உருவாக்கும் அழுத்தங்கள் இன்னொரு சுவையாகவும் கார்த்திக் தனித்தனி அத்தியாயங்கள் வழியாக பரிமாறிச் செல்கிறார். ஆனால் வாசிப்பில் இவை இரண்டையும் தவிர்த்து மூன்றாவதாக ஒரு சுவையும் உண்டாகிறது.

காசிம்: தீதும் நன்றும் பிறர் தரா வாரா என்பதை மறந்துவிடுவதால் அவன் மீதான அழுத்தம் அவனுடைய அங்கமாக மாறிவிடுகிறது. அதிலிருந்து விடுபடும் முகாந்திரங்கள் குறித்து அவன் யோசிப்பதுக்கூட கிடையாது. தன்னுடைய கரத்தை எங்கிருந்தோ நீளும் எதிரியின் கரம் என்று நினைத்துகொண்டு அதனுடன் பயத்துடன் போராடி தன்னையே மாய்த்துக் கொள்பவன்.

ஃபர்ஸானா: காசிமை தனது கணவனாக மட்டுமல்ல அவனைத் தன்னுடைய குழந்தையாக, அக்குழந்தையின் ஒவ்வொரு கேவலுக்கும் புரியாத மொழிக்கும் துல்லியமான அர்த்தத்தையும் தீர்வையும் அறிபவள். குளிர்ச்சியான மனுஷி. ஆனால் காசிம் அறியாதவனாக இருக்கிறான். அவன் மீது அழுத்தம் கரத்தின் வலிமையை குறைப்பதற்கு நீளும் அன்புக் கரங்களையெல்லாம் தட்டி விடுகிறான். ஃபர்ஸானா எதிலிருந்தும் தன்னை எளிதாக மீட்டெடுத்துக்கொள்வாள். அது அவளது தனித்த இயல்பு, காசிம் அவளது வாழ்வின் நினைவு படிமம் அவ்வளவே.

ஜெட்டா: காசிமின் பெண் தோழி. அழகுடன் புரிதலும் சேர்ந்த மனைவி அமைந்தாலும் பெண் தோழிகளின் வசீகரம் அடியாழம் வரை பாய்ச்சலை நிகழ்த்தும். துரதிருஷ்டவசமாக அது வாழ்க்கையோட்டத்தில் சில காலத்திற்கு மட்டுமேயான இதம் என்பது ஒருவகையில் ஏமாற்றம், என்றாலும் நிலைமை கைமீறிச் செல்வதற்கு பதில் உணர்வின் அத்துமீறல்கள் என்றேனும் அடங்கி போவதில் இழப்பில்லை. ஜெட்டா தன்னுடைய பாதையில் இழந்தது அதிகமென்பதால் அவளிடமிருந்து வெளிவரும் உணர்வும் உணர்ச்சியும் ஆவேசத்துடன் எதிரில் இருப்பதையெல்லாம் தனக்கானதாக்கிக் கொள்வதற்கு வேகம் கொள்கிறது. தெளிவும் உறுதியும் கொண்ட ஜெட்டா பயம் குழப்பம் பதட்டம் நிறைந்த காசிமை தேர்வு செய்வது தவறான முடிவு மட்டுமல்ல எதிர்கால வாழ்வின் மீது குற்றவுணர்ச்சியும் நிகழ்த்த வல்லது.

காசிம் என்கிற புள்ளியோடு இணைந்து முக்கோண வடிவத்தை உருவாக்கும் முயற்சிக் கைக்கூடாமல் ஃபர்சனா – ஜெட்டா புள்ளிகள் தனித்து விடப்படுகின்றன.

நிலமும் காத்திருக்காது விருப்பமான பெண்ணும் காத்திருக்க மாட்டாள். சிறந்தவைகள் எதுவும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. ஆளுமை செய்வதற்கான திணவுடன் இங்கு காத்திருப்பவர்களுக்கு பஞ்சமில்லை. காலம் கடந்து தெளிவடைந்து ரெபேக்காவைத் தேடி வரும் வில்லியமிற்கும் தெரியவில்லை தனக்காக எதுவும் யாரும் காத்திருக்கப் போவதில்லையென்று.

தனிமனிதனின் நிழல் வடிவம் சரித்திரத்தின் தின்மையோடு எவ்வாறு பந்தப்பட்டுள்ளது என்பதை நாவலில் கையாளப்பட்டுள்ள பலவிதமான நுட்பங்கள் வழியாக எடுத்தியம்பும் கார்த்திக் பாலசுப்பிரமணியத்திற்கு அவரது அக-புற ஆய்வும் அனுபவமும் அடிப்படை என்பது வெள்ளிடை மலை.

பல்வேறு பழங்குடி பிரிவுகளுடன் தொன்மையான சுவடுகளை உள்ளடக்கிய நிலப்பரப்பான அஸ்திரேலியா 17ஆம் நுற்றாண்டின் துவக்கத்தில் போர்சுகீசிய மாலுமியின் (பெட்ரோ பெர்னாண்டசு தெ க்யூரோசு-1606) மூலம் உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிரிட்டிஷ் அரசு குடியேற்றத்திற்கான புதிய நிலப்பரப்பின் ஆதிக்கத்தை உறுதி செய்வதற்காக நியூ வேல்ஸ் பகுதியில் தங்களுக்கு இடைஞ்சல் தரும் பூர்வக்குடிகளை அழிக்க பெரியம்மை நிணத்தை பயாலஜிக்கல் வெப்பனாக பயன்படுத்தியதா? அப்படி உபயோகிக்கும் / மாற்றக்கூடிய வல்லமையை பிரிட்டன் பெற்றிருந்ததா?

பொதுப்படையாகவே எல்லா சாதியிலும் மதத்திலும் விரவியிருக்கும் சில பூர்வாங்க குணங்கள் அரசியல் ரீதியானவை. காசிமின் தந்தை இப்ராஹிம் மண் மீதான ஆசையில் நிலங்களையும் வீடுகளையும் சொந்த ஊரில் வாங்கிக் குவிக்கும் தனது ஆசைக்கு பின்னால் உள்ளடங்கியிருக்கும் அரசியலை அவரே விளக்குகிறார்;

“நம்ம ஊரும் அந்தத் தெருவும் புதுசா கட்டிண ஈரச்செவர் மாதிரி ஒரு செங்கல் உருவினாலும் செவர் உளுந்துரும் நம்ம தான் வாங்கிக்கணும், அவசியப்பட்டா நமக்குள்ளதான் வித்துக்கணும்.”

ஜெட்டா அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிரானவள், தனது இன்ப நுகர்ச்சியின் பொருட்டுக்கூட தனது முதுகைத் தரையில் கிடந்தாமல் காசிமின் மீதேறி ஆளுமை செய்பவள், அவள் பெண்களை தாழ்மைப்படுத்தும் வார்த்தைகளை மறந்தும் பயன்படுத்த மாட்டாள். உணவுக்கடையில் சுற்றித் திரியும் சீகல்களை வேட்டை நாய் மூலம் ஊழியர் ஒருவர் விரட்கிறார். ஜெட்டாவிற்கு கோபம், காசிமை அழைத்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து செல்கிறாள்;

“இந்தப் பறவைகள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இங்கே இருக்கின்றன. நீ வரும் முன்னே, ஏன் நான் வரும் முன்னேயிருந்து அவை இங்கேதான் இருக்கின்றன. நேற்று வந்த நாய் அவற்றை துரத்தி குறைத்து விரட்டுகிறது.” அவளது தேசத்தை அனுபவிக்கும் பிரிட்டிஷரின் மீதான அதிகாரக் கோபம் என்பதாக இதை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இவ்வரிகளின் இறுதி வாக்கியமாக அவளிடமிருந்து வெளிப்படுகிறது “பெட்டை நாய்” . ஜெட்டா அப்படிக் கூறுவளா? ஆம் என்றால் அவள் பொய்மையின் மீதான கதாபாத்திரமாகவே உதிர்ந்து விடுவாள். ஒருவேளை இது எழுத்தாளரின் கவனிக்குறைவா? இல்லை… ஆண் மனதில் வழமையாக மேலோங்கும் படைப்பாற்றல் பிறழ்வா?

வாசிப்பினால் விளையும் எல்லா தருக்கங்களையும் மீறி தரூக் – நாவல் உள்ளங்கையில் பிரியத்துடன் அமர்ந்துக்கொள்ளும் மழமழப்பான கல், அதுமட்டுமல்ல வண்ணமிழந்த பூர்வக்குடிகளின் தொன்மையான ஒவியத்தின் அடையாளத்தைக் காட்டும் படிமம், அது தற்போது கரையொதுங்கி இருக்கிறது.

காலச்சுவடு வெளியீடு

மஞ்சுநாத்
கட்டுரையாளர்

சீர்மை : க.அரவிந்த்

தமிழிலக்கியத்தின் தலைசிறந்த குறுநாவல்களில் ஒன்று ‘சீர்மை’. க.அரவிந்த் அவர்களின் கன்னி முயற்சி. முதல் படைப்பே மிகக் காத்திரமாக அமைந்து, அதன் செறிவான மொழி நடையும், கதையின் களமும், கருவும், நம்மை நிறுத்தாமல் வாசிக்க வைத்து நமக்குள் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நான்கே அத்தியாயங்கள். எண்பதே பக்கங்கள். கென் வில்பரின் வாழ்விலிருந்து ஒரு கீற்று தான் இந்த குறுநாவல்.

இரண்டாம் உலகப்போர் முடிந்து அதன் கசப்பிலிருந்து மானுடம் மீண்டு வந்து கொண்டிருந்த காலம். அமெரிக்கா வியட்னாம் மீது பல ஆண்டுகளாக போர் தொடுத்துக் கொண்டிருக்க, அமெரிக்க நிலத்தில் கருப்பர்கள் தங்களது உரிமைக்காக போராடிக் கொண்டிருந்தனர். ஹிப்பி கலாச்சாரம், தொழில்நுட்ப புரட்சி, கிழக்கு ஆன்மீகவாதிகள் மேற்கு நோக்கி படையெடுத்தல் என ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தால் கென் வில்பரின் ஆரம்ப கால வாழ்வு கட்டமைக்கப்படுகிறது.

எதன் மீதும் பிடிப்பின்றி, தனியனாக, தத்துவத்திலும் அறிவுத்துறையிலும் ஈடுபாடு கொண்டு, புத்தகங்கள் எழுதி புகழடைந்த கென் வில்பர் வாழ்வினுள் நுழைகிறாள் த்ரேயா. கண்டதும் காதல். உடனே திருமணம். தேன்நிலவுக்கு ஹவாய் தீவுகள் புறப்பட வேண்டிய தம்பதிகள். ஆனால் வாழ்வு தடம் புரண்டு, மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு, த்ரேயாவுக்கு கேன்சர் நோய் என்று தெரிய வருகிறது.

கொலராடோ, கலிஃபார்னியா, நியூயார்க், ஹவாய் போன்ற அமெரிக்க நிலப்பரப்புகளில், தீவுகள், ஏரிகள், மலைகள் என புறக்காட்சிகள் கண் முன்னே விரிய, புத்தர், ரமணர், சிக்மண்ட் ஃபிராய்ட் என அகக் கொந்தளிப்புகள் மறுமுனையில் சுழல்கிறது. வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில், தேனுக்கும் நஞ்சுக்கும் நடுவில், கயிற்றின் மேல் தத்தளித்து நகர்கிறது கதை. சில சமயங்களில் புனைவை விட நம்ப முடியாத சம்பவங்களால் நிறைந்து விடுகிறது நிஜ வாழ்க்கை. கென் வில்பர், த்ரேயாவின் வாழ்க்கை அதற்கு ஒரு சான்று.

கதையின் தலைப்பு ‘Symmetry’ அதாவது சீர்மை என்ற சொல்லுக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில், ஆண் – பெண், மேற்கு- கிழக்கு, வாழ்க்கை – மரணம், அறிவியல் – ஆன்மீகம், விருப்பு – வெறுப்பு, மேன்மை – கீழ்மை என பல குறுக்குவெட்டு சித்திரங்களை காண்பித்தபடி நுண்ணிய தளங்களில் பயணிக்கிறது கதை. மரணத்தை பற்றிய கேள்விகளும் விசாரணைகளும் நமது தத்துவங்களுக்கு புதிதல்ல என்பதால் நம்மால் கென் வில்பர் மற்றும் த்ரேயாவின் தத்தளிப்புகளை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு மார்பகத்தை இழந்து, கர்ப்பமடைந்து பின் கருக் கலைந்து, கேன்சர் கீமோதெரபி சிகிச்சையால் உருக் குலைந்து த்ரேயா நிற்க, கென் வில்பரோ போதை பழக்கம் ஏற்பட்டு கீழ்மையின் பாதாளத்துக்கு சென்று த்ரேயாவை அடித்து உதைக்க, அவர்களது உறவு வன்முறைக்குள் சிக்கி சீரழிகிறது. வாழ்வுக்கு வெளியே சோதனைகள் செய்து தரவுகள் சேகரிப்பதை காட்டிலும், வாழ்வையே சோதனைக் களமாக்கி மீள்வதால், இக்கதை வாழ்வின் மீதான நம்பிக்கையை, அன்பின் முக்கியத்துவத்தை மானுடத்துக்கு மீட்டுத் தருகிறது.

உலகில் உள்ள அறிவுத்துறைகள் அனைத்தையும் இணைத்து ‘A brief history of Everything’ எழுதியவர் கென் வில்பர். ஆனாலும் அவர் தனது வாழ்க்கை சம்பவங்களில் அறிவின் எல்லைகளை காண நேரிட்டு, அறிவின் போதாமைகளை உணர்ந்து, ஊழ் முன்பாக கையறு நிலையில் தவித்து நின்று, பின்னர் அன்பின் வழி முன்நகர்வதுதான் இந்த கதையின் உச்சம். தமிழின் மிகச் சிறந்த குறுநாவல்களான வாடிவாசல், அடி, கிடை, ஆட்டம், கதாநாயகி வரிசையில் நிச்சயம் ‘சீர்மை’யை சேர்த்து விடலாம். அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய குறுநாவல்.

ஆசிரியர் க.அரவிந்த் மென்பொருள் துறை வேலையை விட்டு விலகி, தற்சமயம் முழு நேர ஆசிரியராக அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். ‘சீர்மை’ குறுநாவல் தமிழினி வெளியீடாக கிடைக்கின்றது.

வெற்றி ராஜா
கட்டுரையாளர்

மகாகவி பாரதியார் – வ.ரா

1944ல் வெளியாகிய இந்நூல் பாரதியாரின் வாழ்க்கை பற்றி நம்பகத்தன்மையுடன் பேசக்கூடிய சொற்ப நூல்களில் ஒன்று. நூலின் முதல் அத்தியாயமே ஒரு நாவலுக்கான கதைகூறல் முறையுடன் தொடங்குகிறது. வ.ரா பாரதியார் உடன் இருந்தவர் என்ற முறையில் சில தருணங்களை மட்டுமே எழுதுகிறார். அவற்றில் ஒரு ‘தேர்வு’ உள்ளது. பாரதி பற்றி ஏதும் தெரியாமலே நாம் பாரதிக்கு அளிக்கும் ஒரு சித்திரம், இதை வாசிக்கையில் பெரிதும் வேறுபடுவதில்லை. சமரசமற்ற நேர்மையும் அந்நேர்மையாலே அவர் கொள்ளும் கோபமும் மீற முடியாத ஆணைகளை இடும் ஆகிருதியும் என்றே நூல் முழுக்க பாரதி வருகிறார். ‘ராஜஸ’ குணம் என்று சொல்லலாம். ஒரு குடியின் தலைவனாக காவிய நாயகனாகவே பாரதியை இந்நூலில் பார்க்கமுடிகிறது.

பாரதியைத் தவிர இதில் வரும் அரவிந்தர், வ.வே.சு அய்யர், சுரேந்திரநாத் ஆர்யா போன்றவர்கள் இந்நூலுக்குள் கதைப்பின்னலை உருவாக்குகிறார்கள். முக்கியமாக பாரதி, அரவிந்தர் மற்றும் தெலுங்கரான சுரேந்திரநாத் ஆர்யா. ஒரு சமஸ்தானத்தின் கவியாக இருந்து காசி சென்று பாதியிலேயே திரும்பி வந்து பள்ளி ஆசிரியராகி இதழில் எழுதி பாண்டிச்சேரிக்குள் தஞ்சம் அடைந்த பாரதி, ஏழு வயதில் இங்கிலாந்து சென்று ஐ.சி.எஸ் இல் தேறி பரோடா ராஜ்யத்தில் பணி புரிந்து இதழில் எழுதி சிறை சென்று பாண்டிச்சேரிக்குள் வரும் அரவிந்தர், ‘இந்திய நாட்டின் குடி’ என்ற அர்த்தத்தில் ஆர்யா என்பதை பெயரில் சேர்த்துக்கொண்டு ஆறுவருட கடுங்காவல் தண்டனைக்கு பிறகு தொற்று நோய் ஏற்பட்டு டேனிஷ் கிறித்துவ பாதிரிமார்களால் உதவிசெய்யப்பட்டு கிறித்துவ மதத்திற்கு மாறி அமெரிக்காவுக்கு செல்லும் சுரேந்திரநாத் ‘ஆர்யா’. கரமசோவ் சகோதரர்கள் நாவலின் மூன்று சகோதரர்கள் போல பாரதி, அரவிந்தர், சுரேந்திரநாத் ஆர்யா தாஸ்தாவெஸ்கியின் ‘கிளாசிக்’ கதாபாத்திரங்களாய் தெரிகிறார்கள்.

நூலின் இறுதியில் ராஜாஜி பாரதி பற்றி எழுதிய ‘அச்சமில்லை’ என்ற கட்டுரை அளிக்கப்பட்டுள்ளது. அது உண்மையில் பாரதியாரை ஒரு நிமித்தமாக வைத்து ராஜாஜி செய்த வேதாந்த உபன்னியாசம் போலவே உள்ளது. ஆனால் வ.ரா அதற்கு இப்படி எதிர்வினை ஆற்றுகிறார், “ ராஜாஜி சமீபத்தில் எழுதியிருக்கும் ‘அச்சமில்லை’ என்ற சிறு புத்தகத்தில், பாரதியார் தேசபக்தராக வாழ்கையைத் துவக்கி, கவியாக மலர்ந்து, இறுதியில் பக்குவமான வேதாந்தியாகப் பழுத்திருக்கிறார் என்பது போலக் குறிப்பிட்டிருக்கிறார்….. பாரதியார் ஆத்ம விசாரம் செய்யும் கழைக் கூத்தடியல்லர். அவர் சாகாவரம் கேட்டால், அது இந்த மண்ணில் கீர்த்தியோடு வாழவேண்டும் என்பதற்காகத்தான். விரைவில் பரலோக யாத்திரை சித்திக்க வேண்டும் என்று ஜெபம் செய்துகொண்டிருக்கும் சோம்பேறிகளின் கூட்டத்தைக் கண்டால் பாரதியார் சீறி விழுவார். ” ராஜாஜி அந்த கட்டுரையில் மையமாக எடுத்துக்காட்டும் ‘அச்சமில்லை அச்சமில்லை’ பாடலில் வேதாந்த சாரம் ஏதும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், “காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொருளாய் மாண்பார்ந்திருக்கும், வகுத்துரைக்க வொண்ணாதே.”, “தன்மையொன்றிலாததுவாய்த் தானே ஒரு பொருளாய்த் தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே.” போன்ற வரிகளை வேறெப்படியும் புரிந்து கொள்ளமுடியாது. வ.ரா, “ எனவே, தோல்வி மனப்பான்மையின் மூலமாக யாரும் வேதாந்தியாகப் பழுக்கவேண்டாம் என்று ஹிந்துக்களின் நூற்றாண்டு அடிமை வாழ்வு அவர்களை எச்சரிக்கை செய்கிறது…. பாரதியார் ஆஷாடபூதி வேதாந்தியே அல்லர். அவர் மகாகவி; இணையற்ற கலைஞன்; உலகத்தை ஆண்டு அனுபவிக்க வந்த உத்தமன். எனவே ராஜாஜி போன்றவர்கள் செப்பிடு வித்தை செய்து பாரதியாரை வேதாந்தச் சிமிழிலே அடைக்க வேண்டாம்.” என்கிறார். இது தேசவிடுதலைக்காக போராடிய அரவிந்தர் மெல்ல தன்னை ஆன்மீகதிற்கு மடை மாற்றிக்கொண்டதை அருகிலிருந்து கண்டதன் எதிர்வினையா என்று தெரியவில்லை. வ.ரா அரவிந்தரை ஒரு வழிப்பாட்டு உணர்வுடன்தான் பார்க்கவருகிறார். உண்மையில், அரவிந்தரை பார்க்கவே பாண்டிச் சேரிக்கு செல்கிறார். அவர் கண்களின் முன்னே அரவிந்தர் மெல்ல ஆன்மீகத்திற்குள் தன்னை உள்ளிழுத்துக் கொண்டிருக்க வேண்டும். ராஜாஜிக்கு அவர் அளிக்கும் எதிர்வினை என்பது வேதாந்தம் செயலின்மைக்கு இட்டுச்செல்லும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்தது என்று தோன்றுகிறது. ஆனால் வ.ரா தங்கியிருந்த அதே அரவிந்தர் பங்களாவில் அதே காலகட்டத்தில் அரவிந்தர் வேதாந்தம் செயலின்மையை வழிமொழிவது அல்ல என்று ‘Essays on the Gita’ கட்டுரைத் தொடரில் எழுதிக்கொண்டிருந்தார்.

வ.ரா இந்நூலில் சொல்லும் சில விஷயங்கள் பாரதியின் உருவத்தை ஆளுமையை துலங்கச் செய்கிறது. பாரதிக்கு சற்று வழுக்கைத் தலை அதை மறைக்க அவர் அரும்பாடுபடுவது, பேசிகொண்டிருக்கும் போதே சட்டென பாடுவது, குரலுக்கு அகார சாதகம் செய்வது, பேசும்போது ‘அச்சா’ என்று சொல்வது, சீட்டாட்டத்தில் சதுரங்கத்தில் கொள்ளைப் பிரியம் வைத்திருப்பது, பிரியம் மட்டுமே வைத்துக்கொண்டு அவற்றை ஆடத் தெரியாமல் தோற்பது போன்றவை ‘மகாகவி’ என்ற கவசத்தை நாமும் அவரும் கழட்டி சற்று ஆசுவாசப் படுத்திக்கொள்ளும் தருணங்கள். பாரதி பற்றி நல்ல நாவல் என நவீன இலக்கியத்தில் ஏதும் இல்லாத நிலையில் இந்நூல் புனைவுக்கு நிகராகவே வாசிப்பு இன்பத்தை அளிக்கிறது. புனைவுகளிலேயே ‘தேர்வுகள்’ இருக்கும் போது இந்நூலில் உள்ள தேர்வை குறையாக சொல்ல முடியாது.

சாகித்திய அகாதெமி வெளியீடு

சியாம்
எழுத்தாளர்/மொழிபெயர்ப்பாளர்

உரையாடலுக்கு

Your email address will not be published.