/

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்

கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் வாழ்ந்த  வீட்டுக்குள் நுழைந்து சுற்றி பார்த்த பின், அவர் வடிவமைத்த தோட்டத்தை நெருங்கியபோது எனக்குள் பத்தாயிரம் Daffodils மலர்கள் ஆனந்த நடனமாடத்  துவங்கின. பத்து வயதில் வாசித்த Daffodils கவிதை,  வேர்ட்ஸ்வொர்த்தின் Rydal Mount மலை முகட்டு மரக்கட்டைக் குடில் வரை என்னை இழுத்து வருமென்பது நான் கனவிலும் நினையாதது. ஒரு மலரைத் தேடி பலர் எங்கெங்கோ அலைந்து திரிந்த சரித்திரங்கள் உண்டு. மகாபாரதத்தில் திரௌபதி விரும்பி கேட்டதால் சௌகந்திக மலரை பல தடைகள் தாண்டி பறித்து வருகிறான் பீமன். தமிழகத்தின் ‘மாநில மலரான’ செங்காந்தள் (Gloriosa Superba) பூக்களைத் தேடி ராஜபாளையம் வனப்பகுதியில் சுற்றியலைந்ததை ‘தேசாந்திரி’ புத்தகத்தில் பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். ‘கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ?’ என்று கேட்கிறாள் ஆண்டாள். மலைச்சரிவெங்கும் நீலத்தை இறைத்தபடி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்களை தரிசித்தல் அரிதான அழகியல் அனுபவம். மூங்கில் பூக்கள் 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்பவை. ஒரு அதிகாலைப் பொழுதில் கதிரவன் உதித்த கணத்தில், நெய்தல் நிலமான கிழக்கு கடற்கரை சாலை நெடுக பல கி.மீ தூரத்துக்கு கள்ளி மலர்கள் பூத்து நின்ற காட்சியை என்றும் மறவேன். முட்களும் கீறல்களும், கசப்பும் நஞ்சும் நிறைந்த வாழ்க்கை பாதையில் பயணிக்க நேர்ந்தாலும், இறுதியில் மலர்ந்து கனிவதை தவிர மானுடத்துக்கு வேறு வழியில்லை.

சங்க கால கவிதைகளில் சித்திரிக்கபட்டுள்ள நூற்றுக் கணக்கான மலர்களும், Daffodils போன்ற கற்பனாவாத காலத்து கவிதைகளும் இன்றைய நவீன உலகில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம், அது தருகின்ற அனுபவம், அதன் மதிப்பு என்னவாக இருக்கக்கூடும்? நவீன மனங்கள் அனிச்சம், ஆம்பல், குவளை, கொன்றை, காந்தள், தும்பை, மெளவல், வாகை, புன்னை போன்ற மலர்களை எவ்வாறு கற்பனை செய்து உள்வாங்குகிறது? நவீனத்தின் கரங்கள் ஏந்தியுள்ள  தொடுதிரைகளில், விரல் தீண்டும் நொடிப்பொழுதில், காட்சிகள் தொடர்ந்து மாறியபடியே உள்ளன. பிறந்த குழந்தை கூட மொபைல் போன் பார்த்தபடி தாய்ப்பால் குடிக்கிறது. டிஜிட்டல் வாழ்த்து அட்டைகளில் டிஜிட்டல் மலர்கள். புற உலகம் ஒன்று இருப்பதையே மறந்து, சமூக ஊடகங்களின் சுழல்களில் சிக்கி, பல்வேறு செயலிகளில் மூழ்கி மீள முடியாமல், அகம் தத்தளிக்கிறது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட லண்டன் Kew Gardens உள்ளே நிஜ மலர்களுக்கு மாற்றாக செயற்கை மலர்கள் வரத் துவங்கிவிட்டன. செயற்கை செடிகளுக்கு ஒளி, நீர், மண்புழு எதுவும் தேவையில்லை. கண்ணாடி பூக்களின் மீது அமர்ந்திருப்பது செயற்கை வண்டுகள், பட்டாம்பூச்சிகள். வான்கா வரைந்த சூரியகாந்தி தோட்டத்துக்குள் நுழைந்து இன்று நம்மால் மெய்நிகர் அனுபவங்களை (Immersive experience) பெற முடியுமே தவிர, ஸ்பரிசிக்கவோ, வாசத்தையோ உணர இயலாது. நவீன டிசைன்களுக்கு காப்புரிமைகள் உள்ளன. நாளை புதியதொரு தொழில்நுட்பம் வரும்போது கண்ணாடி மரங்கள் மற்றும் மலர்களை உடைத்து நொறுக்கும் (Decommission) ஒப்பந்தங்கள் தரப்படும். ஆனால் இயற்கை செயல்படும் விதமே வேறு. காய்ந்து உதிரும் இலைகளை மண்ணுக்குள் தள்ளி அவற்றை மக்கச் செய்து உரமாக மாற்றிவிடுகிறது. யுகந்தோறும் இயற்கையின் டிசைன் முன்பாக மானுடம் தனது டிசைனை வைத்து போட்டி போடுகிறது. இயற்கையை இயற்கையாகவே ஏற்றுக்கொள்ள, கடவுளை கடவுளாகவே கிரகிக்க அறிவு தயங்குகிறது. தலைக்கு மேலே எங்கும் வியாபித்திருக்கும் சக்தியை காலின் கீழ் அடக்கி ஆள முயற்சிக்கிறது. கடவுளை நகல் செய்யும் முயற்சிகள் தோல்வியில் முடிவதால் தான், விரக்தியில் ‘கடவுளே இல்லை’ என்ற நிராகரிப்பு நிகழ்கிறதா? 

நினைவேக்கங்களை பற்றி அதிகம் எழுதக்கூடாது என்றுதான் விரும்புகிறேன். ஆனால் நவீன உலகம் காண்பிக்கும் மாயாஜாலங்களை தவிர்த்துவிட்டு, மனம் ஏன் நாஸ்டால்ஜியாவை நாடுகிறது? அன்றாடங்கள் தருகின்ற இறுக்கத்தில் இருந்து தப்பித்து, பின்னகர்ந்து ஒரு கள்ளமற்ற குழந்தையுடன் கைகுலுக்க ஏங்குகிறதா மனம்? சமகாலத்தில் வாழ்கின்ற நவீன குழந்தைகள் டிஜிட்டல் தொடுதிரைகளை தடவியபடி தற்சமயம் எதை ரொமண்டிசைஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்? இருபது அல்லது முப்பது ஆண்டுகள் கழித்து அவர்கள் எழுதப் போகின்ற நினைவேக்கங்களில் எந்த மாதிரியான பூக்கள் மலரும்? எவ்வகை படிமங்கள் மேலெழும்? நிச்சயம் ஒரு சுவாரசியமான  எதிர்காலத்தை நோக்கியே நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். 

ஏரிகளின் மாவட்டம் (Lake District) Rydal Mount மலையடிவாரத்தில் ஏரிகள், ஓடைகள், குன்றுகள், அருவிகள், சோலைகள் சூழ வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் வீடு அமைந்துள்ளது. அவரே வடிவமைத்து உருவாக்கிய தோட்டத்தின் வாசலில் தென்பட்ட மரப்பலகையை நோக்கி நகர்ந்தேன். அதன் மீது Daffodils கவிதை பொறிக்கப் பட்டிருந்தது. கவிதை வரிகளை சப்தமாய் வாசித்தேன். பத்து வயது சிறுவனாக இதே கவிதையை வாசித்தபோது எனது குரல் வேறாக இருந்தது. ‘I wandered lonely as a cloud’. நினைவடுக்கில் அமிழ்ந்திருந்த ஒரு அழகிய தோட்டம் மெல்ல எழுந்து வர, சில்லென்று தூறல் துவங்க, வெயிலில் நன்றாக காய்ந்து விட்டிருந்த கனகாம்பர விதைகள் மீது மழைத்துளி முத்தமிட, எனது பால்ய காலம் சரவெடியாய் தெறித்து சிதறியது. 

கைராசி டாக்டர், கைராசி வாத்தியார், கைராசி ஜோசியர் வரிசையில், ஒரு கைராசி தோட்டக்காரனாக நான் பத்து வயதிலேயே புகழடைந்து விட்டேன். நான் தொட்டு பரிசளித்த செடிகள் செழித்து வளர்வதாக அனைவரும் கூறினர். பலரது தோட்டங்களில் கன்றுகளை நடுவதற்கு அழைப்புகள் வந்தன. திறப்பு விழாக்களில் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்களின் ரிப்பன் வெட்டுதல், குத்துவிளக்கு ஏற்றுதலுக்கு இணையாக, எனது கால்ஷீட் எப்போதும் பிஸியாகவே இருந்தது. ஜூஸ், ரஸ்னா, பூஸ்டு என்று நான் எதை கேட்டாலும் கொடுப்பதற்கு தயாராக நின்றனர். முருங்கையோ செம்பருத்தியோ, சரியான கிளையை தேர்ந்தெடுத்து உடைத்து, தேவையான ஆழம் தோண்டி, காற்றடித்தால் சாயாதவாறு, மழையடித்தால் கரையாதவாறு, மண் அணைத்து, சாணி வைத்து, நான் செய்த சடங்குகளை மழலைகள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தனர். எதிர் வீட்டில் நான் வைத்த முருங்கை மரம், சடை சடையாய் காய்த்து புடலை போல் நீள்கிறதென்றும், பக்கத்து வீட்டில் நட்ட பப்பாளி பானை பானையாய் பெரிதாகி பழுத்து தொங்குகிறதென்றும், பின் தெருவில் வைத்த கற்பூரவள்ளி வாழை தேனாக இனிப்பதாக, எனது கைராசி எட்டுத் திக்கும் பரவ, உறவினர்கள் வீடு தேடி ஓடி வந்தனர். சித்தப்பா ஸ்கூட்டரில் அழைத்து சென்று மாங்கன்று நட கோரினார். மாமா வீட்டில் மருதாணி. பாட்டிக்கு துளசி. சொல்லப் போனால் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கனவை தான் நட்டு வைத்து விட்டு வந்திருக்கிறேன்.

எனது கையெழுத்து முத்து முத்தாக இருப்பதாய் பாராட்டி, அதற்கு பரிசாக, வகுப்பின் வருகைப் பதிவேட்டில் மாணவர்களின் பெயர்களை எழுதும் வேலை எனக்கு தரப்பட்டது. கையெழுத்து தவிர கைராசி பற்றியும் கேள்விப்பட்டு, பள்ளியின் தோட்ட பராமரிப்பில் பங்கேற்க சுதந்திரம் அளித்தனர். குறும்படம் எடுத்தவனுக்கு பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர் கிடைத்தது போல, எனது தோட்டத்தின் கனவுகள் சரக்கொன்றை, அசோக மரங்கள், போகன் வில்லா என பல வண்ணங்களில் விரிந்தது. எனது பள்ளியில் ஆறாம் வகுப்பு அமைந்த இடம் ஒரு செவ்வியல் ஓவியத்துக்கு இணையானது. மேலே கீற்று கூரை. கீழே கடல் மண். இடது பக்கம் ஏக்கர் கணக்கில் நீண்ட வயல்வெளி பச்சை. அதன் மேல் விரிந்த வானின் நீலம். சுவர்கள் எதுவும் இல்லாததால் சில்லென்று நுழைந்து வீசும் தென்றல். வலது பக்கம் சித்தானந்தர் கோவில். சற்று தள்ளி ஒரு சுடுகாடு. கோவிலுக்கும் சுடுகாட்டுக்கும் நடுவில் குயில் தோப்பு. பாரதியார் புதுவையில் தங்கியிருந்த போது இந்த குயில் தோப்பில் அமர்ந்து தான் பல கவிதைகளை இயற்றினார். உயர் வகுப்பு மாணவர்களுக்கு லேப் வசதிகளுடன் கான்க்ரீட் கட்டிடம். மழலையரை உள்ளே இழுக்க கிண்டர் கார்டனும் கான்க்ரீட் கட்டிடம். ஆறாம் வகுப்பு மட்டும் தற்காலிக அமைப்பாக, விழிப்பு நிலைக்கும் ஆழ்துயிலுக்கும் நடுவில் மிதக்கும் கனவு போல கீற்று கொட்டகையின் கீழ் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. வயலில் நிகழ்ந்த உழவு வேலைகளையும் நடவு பாடல்களையும், சுடுகாட்டுக்கு பயணித்த பிணங்களையும், அதை போதையில் ஆடிக்கொண்டே அனுப்பி வைத்த மனிதர்களையும், தூவி இறைக்கப்பட்ட பூக்களையும், சிதறுகின்ற சில்லறை காசுகளையும் வேடிக்கை பார்த்தபடி, வகுப்பு பாடங்களுடன் சேர்த்து வாழ்வியல் பாடங்களையும் கற்றோம். ஆங்கில வகுப்பில் வில்லியம் ஷேக்ஸ்பியர், வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், வில்லியம் ப்ளேக் என்று விதவிதமான வில்லியம்களால் எங்களை ஆசிரியர் ஒரு பொற்கொல்லன் போல கவிதை நெருப்பில் சுட்ட கணத்தில், பொன் நிற Daffodils எனக்குள் மலர்ந்தது. 

இங்கிலாந்து மண்ணில் கால் வைத்ததுமே, Daffodils  தேடல்களில் இறங்கினேன். Daffodils கிழங்குகளை அக்டோபர் மாதமே மண்ணுக்குள் புதைத்து விடுகிறார்கள். பனியிலும் குளிரிலும் அவை பூமிக்குள் தவம் செய்து ஆற்றலை பெருக்கி, வசந்தத்தில் எரிமலையாய் வெடித்து எழுகின்றன. நூற்றுக் கணக்கில் Daffodils கிழங்குகளை கண்ணி வெடிகள் போல தோட்டமெங்கும் புதைத்து வைத்து காத்திருந்தேன். வசந்தத்தின் வருகையை அறிவித்து வரவேற்கும் விதமாக, போர் வீரர்களின் வாள் போன்று மண்ணை கிழித்து கீறியபடி டேஃபாேடைல்ஸ் இலைகள் வான் நோக்கி எழுந்தன. சில நாட்களில் பொற்குவியல் சிதறிய வண்ணமாய் மண் எங்கும் மஞ்சள் பூக்கள். நகங்களின் இடுக்குகளில் மண்ணுடன், கால் முட்டி வரை சேறும் புழுதியும் அணிந்து, உடல் மீது மண்வாசனை வீச, நீங்கள் ஒரு மண்புழு போல நிலத்துள் புதைந்து நெளிந்ததுண்டா? புத்தக புழுவும், மண் புழுவும் ஒன்றையொன்று தழுவிக் கொள்ளும் தருணங்கள் மகத்தானவை. 

இயற்கையின் முகம் எத்தனை வசீகரமானதோ அதேயளவு குரூரமானதும் கூட. வேடுவர், மீனவர், உழவர் மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களை, நவீன கட்டிடங்களின் சொகுசு அறைக்குள் அமர்ந்தபடி அலசுபவர்களால் ஒரு போதும் புரிந்து கொள்ளவே முடியாது. காட்டையும் தொல்குடி மரபுகளையும் அழித்து மதங்கள் தங்களை நிறுவிக்கொண்டாலும், காட்டின் மீதான கள்ளக்காதலை நாகரீகங்கள் இன்னும் விடவில்லை. நகரத்தின் கேளிக்கை ரெசார்டுகள் இன்று காடுகள் நோக்கி செல்கின்றன. காட்டு மிருகங்களை தடுக்க மின்சார வேலி நடப்படுகிறது. டயர் கொளுத்தி வீசுகிறார்கள். அன்னாசிப்பழத்தில் வெடிகுண்டு வைத்து தருகிறார்கள். அதை தின்னும் யானைகள் வாய் சிதறி, தும்பிக்கை சிதறி பரிதாபமாய் இறக்கின்றன. மலைவாழ் பழங்குடி மக்களின் வம்சங்கள்   பெருகி, அவர்களுக்கு மிஞ்சிய துண்டு நிலங்களை வைத்துக் கொண்டு வனத்துறைக்கும் மிருகங்களுக்கும் நடுவில் திண்டாடுகிறார்கள். சென்னையில் உள்ள ஏரிகளில் சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. லண்டனில் வாழ்ந்த Beatrix Potter என்னும் பெண் எழுத்தாளர், சிறார் இலக்கியம் படைத்து பெரும் செல்வத்தை ஈட்டியவர். எழுதி சம்பாதித்த மொத்த பணத்தையும் Lake District சென்று, ஏலத்துக்கு வந்த விளைநிலங்களை வாங்கி, விவசாயிகளுக்கே தானமாக அளித்து, அவர்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றி அங்கேயே வாழ்ந்து மறைந்தார். ஏரி நிலங்களை லே-அவுட் போட்டு விற்க துடித்த நிறுவனங்களிடமிருந்து பசுமையை காப்பாற்றிய ‘பெட்ரிக்ஸ் பாட்டர்’ இயற்கை அன்னையின் மனித வடிவம்.  

பிரபஞ்சத்தின் அழகை போற்றி பாடுகின்ற கவிதை வரிகள் காலந்தோறும் தோன்றியபடியே உள்ளது. வேத கால சந்தமாக, சங்க கால பாடல்களாக, சௌந்தர்ய லஹரியாக,  ஜப்பானிய ஹைக்கூவாக, ஐரோப்பிய கற்பனாவாத கவிதைகளாக, புதுக்கவிதையாக அவை இயற்கையின் அம்சங்களை படிமங்கள் வழியாக ப்ரதிபலித்துக் கொண்டே  இருக்கின்றன. கவிதையின் மூலம் பிரபஞ்ச ரகசியங்களை கற்று தருவதால் வள்ளுவர், கபிலர், காளிதாசன், ஒளவை, ஆண்டாள், கம்பன், பாஷோ, வேர்ட்ஸ்வொர்த், பாரதி போன்ற கவிஞர்களை ஆன்மிக வழிகாட்டிகள் என்றும் கூறலாம். ஆன்மிக பயணத்தில் மலர் என்பது குருவுக்கு சமானம். ஞானத்தை அமிர்தமாக ஏந்தியபடி, ஒரு மலர் போன்று காத்திருக்கிறார் குரு. உலகியல் ஆசைகளில் பிணைந்து, பந்த பாச உறவுகளை விட்டு விலக இயலாமல், இதழ்கள் ஒன்றையொன்று நெருக்கமாய் ஒட்டிக்கொண்டு மூடியபடி இருப்பது மொட்டு நிலை. பற்று நீக்கி, இதழ்கள் விரிந்து, உள்ளே சுரக்கும் அமுதை எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி அடுத்தவருக்கு அளிப்பது மலர்ந்த நிலை. 

மலர் விட்டு மலர் தாவும் வண்டு போல, ஒரு கவிதையிலிருந்து மற்றொரு கவிதைக்கு தாவி தேன் சுவைத்தல் வேண்டும். உலகெங்கும் பூக்கள் மலர்கின்றன. பல மொழிகளில் கவிதைகளும் உள்ளன. சில மலர்களில் நிறம் இருக்கும். தேன் இருக்காது. சில மலர்கள் வண்டுகளையே கொன்று தின்று விடும். போலிகளை நஞ்சுகளை தவிர்த்தல் வேண்டும். சில மலர்கள் மலையடிவாரத்தில் சுலபமாக கிடைத்துவிடும். சில மலர்களை தரிசிக்க மலையின் சிகரத்தை ஏறி அடைய வேண்டும். அவை தருவது மலைத்தேன். 

இந்த பிரபஞ்சத்தில் சூரியனும் ஒரு சிறு மலர்தான். காலையில் மொட்டு விரிந்து மாலையில் மூடிக் கொள்கிறது. அதன் கதிர்கள் தேனை சுமந்து பயணித்து பூமியின் மீது தெளிக்கின்றன. 

மகாபாரதத்தில் ஒரு  மாலைப்பொழுதில் அர்ஜுனன் தோள் மீது அன்புடன் சாய்ந்த திரெளபதிக்கு, அவன் அந்தியின் எழில் வண்ணங்களை விவரிக்கிறான். பிறகு காயத்ரி மந்திரம் சொல்ல கிளம்புகிறான். 

‘பாஞ்சாலி சபதம்’ படைத்த பாரதியார், காயத்ரி மந்திரத்தை தமிழில் ரத்ன சுருக்கமாய் உபதேசித்து இருக்கிறார். 

‘செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்- அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக’

வரம் தரும் ஆதி பகவனே,  உன்னை வணங்குகிறோம்.

ஒவ்வொரு நொடியும் நீ பொழிகின்ற பல கோடி கதிர் சுடரில், மிகச் சிறந்த ஒளி எங்கள் புலன்களை, அறிவினைத் தூண்டி வழி நடத்தி செல்லட்டும். 

இந்த பூமியில் உள்ள மொட்டுகள் மலர்வது போல, எங்கள் மனங்களும் உன் ஒளி பட்டு மலரட்டும்.

ஓம் ஓம் ஓம்

வெற்றிராஜா

புதுச்சேரியைச் சேர்ந்த வெற்றிராஜா தற்சமயம் இங்கிலாந்தில் வசித்துவருகிறார். மதிப்புரைகள், விமர்சனம், புனைவுகள், அல்புனைவுகள் என்று பரந்த தளத்தில் எழுதிவருகிறார்.

6 Comments

  1. பூக்கள் இலக்கியத்தில் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றி துடங்கி அவை சூரியனுக்கு நிகரான ஒப்பு உவமையில் முடியும் சுவாரசியமான கட்டுரை. பண்டைய இந்திய இலக்கியத்தில் இருந்து Wordsworth ன் “Daffodils” போன்ற நவீன கவிதை வரை பூக்கள் எவ்வாறு மெய்யுலகையும் புறவுலகையும் இணைக்கிறது என்பதைப் பற்றி இக்கட்டுரை அருமையாக இணைக்கிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் மக்கள் பூக்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதையும் இந்தக் கட்டுரை பேசுகிறது. பூக்களுக்கு பல பயன்பாடுகளும் அர்த்தங்களும் உள்ளன. அவை அழகு மற்றும் அல்லாமல் அறிவு ஆன்மீகம் ஆகியவற்றின் சின்னமாக இருப்பதை. மிகவும் அருமையாக கொணர்ந்துல்லது🌷🌸🌹🌺🌻🌼🏵️💐💠💮🥀☘️❇️

  2. இது கட்டுரை அல்ல, ஒரு கவிதை!
    என்நெஞ்சை அள்ளி விட்டது.

  3. மலர்களின் காதலனுக்கு வாழ்த்துக்கள்.கவிதைக்குரிய மொழி, தகவல்களை இணைக்கும் பாங்கு,அழகியலோடு ஆனமீகமும் சமூக நோக்கும் பார்வை சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தந்தது.

  4. “எனது கையெழுத்து முத்து முத்தாக இருப்பதாய் பாராட்டி, அதற்கு பரிசாக, வகுப்பின் வருகைப் பதிவேட்டில் மாணவர்களின் பெயர்களை எழுதும் வேலை எனக்கு தரப்பட்டது. கையெழுத்து தவிர கைராசி பற்றியும் கேள்விப்பட்டு, பள்ளியின் தோட்ட பராமரிப்பில் பங்கேற்க சுதந்திரம் அளித்தனர். குறும்படம் எடுத்தவனுக்கு பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர் கிடைத்தது போல, எனது தோட்டத்தின் கனவுகள் சரக்கொன்றை, அசோக மரங்கள், போகன் வில்லா என பல வண்ணங்களில் விரிந்தது.” …..I can very well relate to this, during my mechanical engineering days Our professor would often sketch complex diagrams of boilers and combustion engines, which we were required to replicate. In a playful attempt to impress my friends, I began adding doodles of the professor alongside the machinery.

    One day, he noticed my artistic additions 😊. To my surprise, instead of being reprimanded, he encouraged me. From that day forward, he asked me to draw the technical diagrams on the board for the class, instead of he drawing the same.
    The same professor in the final year asked me to design the poster for our mechanical symposium.. which I created in PowerPoint as a novice without knowing the intricacies of resolution for print. This trust lead me to the designer today!

  5. எழுத்தாளர் Daffodils பூவை மிகவும் நேசிக்கிறார் என்று நினைக்கிறேன். அவரது ஆசிரியரால் அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நேர்த்தியின் காரணமாக இருக்கலாம்..
    ஒவ்வொரு மலரின் தன்மையையும் அறியவும் புரிந்துகொள்ளவும் இந்த பதிவு எனக்கு உதவியிருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். எழுத்தாளர் பூக்களுக்கும் ஆன்மீக அம்சங்களுக்கும் இடையிலான உறவை நன்கு இணைத்துள்ளார். எழுத்தாளர் வெற்றி ராஜா எழுதியது போல், இன்றைய தலைமுறையினர் இயற்கையையும் அது கற்பிக்கும் பாடங்களையும் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர். ஒரு பெற்றோராக. இயற்கையின் அழகு மற்றும் சக்தி குறித்து எங்கள் குழந்தைகளுடன் ஆரோக்கியமான விவாதம் நடத்த நாங்கள் முயற்சிக்கவில்லை .செயற்கை பூக்கள் மற்றும் பிற செயற்கை பொருட்களில் நம் குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டுவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம். செயற்கை நுண்ணறிவின் (AI) செல்வாக்கின் காரணமாக வருங்கால சந்ததியினர் எப்படி இருக்கப் போகிறார்கள் என்பதைப் பற்றி நான் கொஞ்சம் கவலைப்படுகிறேன
    வெற்றி ராஜா தனது ஆரம்ப காலத்தில் தனது அண்டை வீட்டார் மற்றும் உறவினர்களுக்கு பல்வேறு மரங்களை நடுவதில் உதவுவதற்கு அதிர்ஷ்டசாலி. ஒவ்வொரு சம்பவத்தையும் அவர் சொல்லியிருக்கும் விதம் மிகவும் அற்புதம்.
    வெற்றி ராஜா அவர்களின் நினைவுகளை நினைவு கூர்ந்து இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை எழுதும் பாதையில் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  6. மலர்களால் ஆசிர்வதிக்கப்பட்டவனே!
    மரங்களால் சுவாசிக்கப்பட்டவனே!
    கபிலனின் பேரனாக, வேட்ர்ஸ் வெர்த்தின்
    சுவர்க்க மடியில் தவழும், பாக்யம் பெற்றவனே !.
    அள்ளிக்கொண்டு வா, அத்தனை இயற்கை அற்புதங்களையும்.

    ஜெயானந்தன்

உரையாடலுக்கு

Your email address will not be published.