விழைவில் திரள்வது : ஜனார்த்தனன் இளங்கோ

Bar tailed Godwit (பட்டைவால் மூக்கன்)

அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் பறவை ஆராய்ச்சியாளரான ஸ்காட் வீடென்சால்(Scott Weidensaul) பறவைகளின் வலசையைப்(migration) பற்றி தொடர்ச்சியாக கள ஆய்வு செய்பவர். அவர் ஒரு பேட்டியில் மற்ற பறவைகளைக் காட்டிலும் தொலைதூரம் வலசை செல்லும் பறவைகளிடம் காணக்கிடைக்கும் அசாதாரணமான திறன்களைப் பற்றி விரிவாக விளக்குகிறார். அதன் அபரிதமான ஆற்றல், தலைகீழாக மாற்றமடையக்கூடிய உடல், முற்றிலும் பரிச்சயம் இல்லாத இடங்களுக்கேற்றவாறு தம்மை தகவமைத்துக்கொள்ளும் பண்பு என்று அதன் பல்வேறு குணநலன்களும் எவ்விதம் மனிதர்களை விட மேம்பட்டதாக இருக்கிறது என்றும், அவற்றில் பெரும்பாலனவை நம்மால் புரிந்துகொள்ளாத மர்மமாகவே இன்றுவரை இருப்பது பற்றியும் அவர் வியப்புடன் குறிப்பிடுகிறார். இதற்கு உதாரணமாக அவர் குறிப்பிடும் பறவை ‘Bar tailed Godwit’. தமிழில் பட்டைவால் மூக்கன் என்று அழைக்கப்படுகிறது. கரையோரத்தில் வாழும் உள்ளான்(waders) இனத்தை சேர்ந்த பறவை இது. சாமணத்தை(tweezers) போன்ற மெலிதான நீண்ட மூக்கு; அழுந்திய தலை;  நாம் கடற்கரையில் பாதத் துணிகளை லேசாக பற்றிக் கொண்டு கால் நனைக்கச் செல்வது மாதிரியான நடை. ஓரடி அளவிலான சிறிய உடல். என்றாலும் அசாத்தியமான தொலைவிற்கு பறக்கும் ஆற்றல் கொண்ட ஒரு பறவை இது. ஒவ்வொரு வருடமும் தன் கோடைகாலத்தை வடதுருவத்தில் உள்ள அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திலும்,  குளிர் காலத்தை தென்துருவத்தில் உள்ள ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்தை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளிலும் செலவிடுகிறது. உலகின் மிகப்பெரிய பசிபிக் பெருங்கடலின் இருபுறமும் உள்ள இப்பகுதிகளுக்கும் இடைப்பட்ட தொலைவு என்பது சுமார் பத்தாயிரம் கிலோமீட்டர்கள்.

இவற்றின் முதன்மையான வாழிடம் என்பது தென்துருவத்தில் உள்ள கடற்கரைப் பகுதிதான். ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் இவை அங்கிருந்து இனப்பெருக்கத்திற்கென்று கிளம்பி ‘Tundra‘ எனப்படும் வடதுருவப் பகுதிக்கு செல்கிறது. அங்கு தனக்கென இணையைத் தேர்ந்தெடுத்து, முட்டையிட்டு குஞ்சு பொரிந்தவுடன் கோடை முடியும் சமயத்தில் கிளம்பி தென்துருவத்திற்கு மீண்டும் வந்து சேர்கிறது. பின்பு அடுத்த ஆண்டும் கோடை துவங்கும்போது வட துருவத்தை நோக்கிய தன் பயணத்தை மீண்டும் துவங்குகிறது. இவ்வாறு பிறந்தது முதல் ஒவ்வொரு வருடமும் இடைவிடாமல் இந்த இரண்டு இடங்களுக்கும் மாறிமாறி வலசை செல்கிறது. நீண்ட தூரம் வலசை செல்லும் Arctic Tern, Pacific Golden Plover போன்ற பிறவகை பறவைகள் பொதுவாக தம் பயணத்தின் இடையே இரண்டு அல்லது மூன்று இடங்களில் நிறுத்தி இளைப்பாறுவது வழக்கம். எனினும் அதற்கு மாறாக இந்த பட்டைவால் மூக்கன் பறவை மட்டும் பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவிலான இந்த பெரும்பயணத்தை இடைநில்லாது மேற்கொள்ளப் பழகியிருக்கிறது. இவை இயல்பிலேயே கரையோரத்தில் வாழும் பறவைகளாக இருப்பதால் கரையைத் தவிர்த்து கடலின் வேறெந்த பகுதியும் அவற்றிற்கு எந்தவையிலும் உதவியாக இருப்பதில்லை. அதனால் இவற்றால் கடல் வாழ் பறவைகளைப் போல நடுக்கடலில் இளைபாறவோ, உணவை தேடிக் கொள்ளவோ இயலாமல் போகிறது. நடுக்கடல் என்பது இவற்றிற்கு பாழும் கடல் தான்.

இதை ஈடுகட்டும் பொருட்டு இவை பயணத்திற்கு முன்னால் அபரிதமான அளவில் உண்ணத் துவங்குகிறது. தம் இயல்பான எடையில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மடங்கு பெரிதாகிறது. புரதத்தையும், சர்க்கரையையும் ஒப்பிடும்போது கொழுப்பில் இருந்து இரண்டு மடங்கு கூடுதல் எரிசக்தி கிடைப்பதால் இவை தம் உடலில் கொழுப்பு சக்தியை மட்டும் பிரத்யோகமாக தேக்கிவைக்கிறது. ஒருபுறம் இந்த பெருக்கும் பருவம் நடைபெறும் அதே சமயம் இதன் உடல் மறுபுறம் சுருங்கவும் செய்கிறது. பறக்கும் போது தேவைப்படாத அதன் இரைப்பை, குடல் போன்ற உள்ளுருப்புகள் பயணச் சுமையை எளிதாக்குவதற்காக அபரிதமான அளவில் சுருங்கிவிடுகிறது. இதன்மூலம் உடலின் உபரி எடை குறைந்து பறப்பது எளிதாகிறது. அதே சமயம் பறப்பதற்கு அத்தியாவசியமான அதன் இறகுப் பகுதியின் எலும்புகளும், ஆக்சிஜன் குறைந்த உயர்வானத்தில் சுவாசிப்பதற்காக அதன் இதயமும் இறுகி கெட்டியடைகிறது. அவை பறக்கத் துவங்கும் முன் கிட்டத்தட்ட நீரால் உப்பிய பலூன் போல மாறிவிடுகிறது. தற்போதைய உலகில் வாழும் எந்தவொரு உயிரினத்திலும் இவ்வளவு அபரிதமான மாறுபாடுகள் நிகழ்வதில்லை என்றும் எதிர்காலத்தில் மனித உடலின் திசு வளர்ச்சியிலும், சுவாசத்திலும் மேம்பாட்டுகான ஆராய்ச்சிகள் இவ்வாறான பறவைகளை அடிப்படையாகக் கொண்டே இருக்குமென வீடென்சால் கருதுகிறார்.

பசிபிக் பெருங்கடலின் நீல வானத்திற்கும் நீலக் கடலிற்கும் நடுவில் விரிந்துசெல்லும் இந்தப் பயணம் கிட்டத்தட்ட பத்துநாள் வரை நீடிக்கிறது. ஒட்டுமொத்த நீல நிறத்திற்குள் புகுந்து அதைக் கிழித்து வெளியேறுவதை போல; பாலைநிலத்தின் சூன்ய வெளியை ஒருவர் பத்துநாள் இடைவிடாமல் முன் சென்று கடப்பதைப் போல. மொத்த உடலும் உள்ளமும் முன்னால் செல்வதை மட்டும் குறியாகக் கொண்டு அசைவென்றே மாறி அப்பறவை இந்த அசாத்தியமான பயணத்தை ஒவ்வொரு முறையும் நிறைவு செய்கிறது.

ஸ்காட் வீடென்சால்

இந்த நீண்டதூர வலசைப் போக்கு சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் கடைசி பனிக் காலம் முடிவுற்ற காலகட்டத்தில் தோன்றியிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. அக்காலகட்டத்தில் தான் வட துருவத்தில் உள்ள ஆர்டிக் பனித்தகடுகள் உருகி அங்கு பெருமளவிலான நிலப்பரப்பு புதிதாக வெளித் தோன்றுகிறது. பனி நீங்கி சூரிய ஒளி விழத் துவங்கியதும் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள அந்த புதிய நிலப் பகுதியில் புதுவகையான தாவரங்களும், அதைத் தொடர்ந்து பலவகை பூச்சிகள், பாக்டீரியாகள் உள்ளிட்ட பலவகை உயிரினங்களும் பல்கிப் பெருகத் துவங்குகிறது. இந்த அபரிதமான உணவு வாய்ப்புகளும், கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வரை தினசரி நீளும் இருபத்திநான்கு மணிநேர சூரிய வெளிச்சமும் பறவைகளின் இனப்பெருக்கத்திற்கான கச்சிதமான சூழலை உண்டாக்குகிறது. வலுவான பறவைகள் இந்த இடத்திற்கு வரிசையாக அணிவகுத்து வரத் துவங்குகிறது. பட்டைவால் மூக்கன் இந்த அணிவரிசையின் முதலிடத்தில் இருந்திருக்கிறது.

வலசைக்கான காரணமாக ஆய்வாளர்கள் பொதுவாக முன்வைக்கும் பருவநிலை மாற்றம், வாழிடப் போட்டி, உணவுப் பற்றாக்குறை போன்ற எதுவும் இந்தப் பறவையைப் பொருத்தவரை திருப்திகரமான விளக்கமாக இல்லை. ஏனென்றால் அதன் பிரத்யோக வாழிடமான ஆஸ்திரேலிய, நியூசிலாந்து கடலோரப்பகுதியில் அன்றிலிருந்து இப்போது வரை கடுங்குளிர் காலம் என்பது இல்லை. அங்கு வருடம் முழுவதும் மிதமான தட்பவெப்ப சூழலே. அபரிதமாக இல்லையெனினும் உணவுத் தட்டுப்பாடு என்பதும் நிச்சயம் இல்லை. அதுபோல இரையாக்கும் எதிர் உயிர்கள்(predators) ஆபத்து இருந்தாலும் அந்த அச்சுறுத்தல்கள் அவை தற்காத்து கொள்ளக் கூடிய அளவிலேயே இருந்திருக்கிறது. ஆகையால் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை அந்த இடத்தில் அதன் இனம் நீடிப்பதற்கு எதிரான அதீதமான சூழல் எதுவும் ஏற்படவே இல்லை. இப்படி இயல்பான சூழலில் இருந்தும் ஒரு பறவை இப்படியான ஒரு நீண்டதூர வலசையை ஒரு தண்டனை போல தொடர்ந்து நிகழ்த்துவது ஆச்சரியமானது.

ஏனெனில் அங்கு பிறந்து மூன்று மாதங்களேயான ஒரு சிறு பறவையும் அவ்வளவு நீண்ட வசசையை மேற்கொண்டாக வேண்டும் என்பது எல்லா வகையிலும் சவாலானது. அவை அதிவிரைவாக தின்று, செரித்து தம்முன் விரிந்திருக்கும் நீல சமுத்திரத்தை குறுக்கு வெட்டாக கடக்கவேண்டும். அங்கு தயார் படுத்திக் கொள்ள சாவகாசமான நேரம் என்பதும் அவற்றிற்கு இல்லை. ஏனெனில் வடதுருவப் பகுதியில் கோடைக்கு பிறகான குளிர் என்பது உறைபனியை உண்டாக்குவது. அதனால் கோடைக்காலம் முடிவதற்குள் அவை எப்படியேனும் அங்கிருந்து கிளம்ப வேண்டும். இல்லாது போனால் அங்குள்ள உணவுப் புதையல் வெகுசீக்கிரத்தில் மறைந்து, எப்போதைக்கும் வெளியேற முடியாதபடி அந்த சுரங்கத்தின் கதவுகள் மொத்தமாக அடைபட்டுவிடக்கூடும். கிட்டத்தட்ட பற்றியெரித் துவங்கும் மருத்துவமணையில் இருந்து தனியே தப்பித்து மூன்று வயதுக் குழந்தை மாராத்தான் ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெற்று வீடு திரும்புவது போல.

ஆகையால் ஒவ்வொரு சிறு பறவைக்கும் இந்தப் பயணம் என்பது இடையில் ஒரு கணமும் நிறுத்த முடியாத ஒருவழிப் பாதை என்பதில் சந்தேகமில்லை. பாதியில் விலகிவிடவே முடியாத இந்த வாழ்க்கைப் பந்தயத்தில் கைவிடுதல், திரும்பி செல்லுதல் போன்ற சாத்தியக் கூறுகளே இல்லை. அதுபோக அவற்றிற்கு எந்த முன்னனுபவமும் இல்லை. இடையில் இளைப்பாற எந்த வழியும் இல்லை. நடக்கத் தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே அதன் பெற்றோர் அதைத் தனியே விட்டுவிட்டு கிளம்பிச் சென்றுவிடுவதால் துணை என்பதும் இல்லை. ஆரம்பகாலத்தில் இந்த கொடும் பயணத்தை வெற்றிகரமாகக் கடந்த இளம் பறவைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்திருக்கிறது. ஏனென்றால் பத்தாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் இப்பறவையின் வலசை செயல்பாட்டில் இன்றளவும் பத்தில் எட்டு மட்டுமே வெற்றிகரமாக தென்துருவத்திற்கு திரும்புகிறது. இவ்வளவு நீண்ட வலசையை பூர்த்திசெய்வது ஏதோவொரு வகையில் அதன் அடுத்த தலைமுறை வாழ்வதற்கான குறைந்தபட்ச தகுதியாக ஆகிவிட்டிருக்கிறது. அதே சமயம் இத்தகைய வலசைச் செயல்பாட்டை கைக்கொள்ளாமல் இருந்திருந்தால் இந்த இனம் இன்றளவும் இதே எண்ணிக்கையில் நீடித்திருக்குமா என்பதும் சந்தேகமே.

தற்போதைய வாழ்நிலையில் இருந்து மேம்பட்ட விஷயங்களுக்கான இயல்பான விழைவே இப்பறவையை இத்தகையதொரு நீண்ட வலசையை நோக்கி தனிச்சையாக நகர்த்தியிருக்கிறது என்னும் பரிணாமவியலாளர்களின் ஒருவகை ஊகம் இங்கு ஆர்வமூட்டுவது. அதாவது தம் வாழ்விடத்தில் உள்ள மொத்த திரளும் இயல்பான வாழ்க்கையை கைக்கொண்டிருக்கையில், அதை தன்னால் இயன்ற சிறிய அளவில் மீறும் சொற்ப எண்ணிக்கையிலான பறவைகள் அந்த இனத்தின் சராசரி ஆற்றலின் எல்லையை நாளடைவில் சிறிது சிறிதாக நகர்த்துகின்றன. ஒரு கட்டத்தில் தற்போதைய தன்னிறைவான வாழ்நிலையிலேயே நீடித்து எதிர்காலத்தில் இனத்தொடர்ச்சியை இழந்துவிடுவதன் ஆபத்தில் சிக்கிக் கொள்வதா, அல்லது தம்மால் கட்டுப்படுத்தக்கூடிய ஆபத்தான, அதே சமயம் நீண்ட கால நோக்கில் பயணளிக்கக் கூடிய வலசையில் துணிந்து ஈடுபட்டு அதன் மூலம் அடுத்த தலைமுறையை இன்னும் வெற்றிகரமாக நீடிக்கச் செய்வதா என்னும் தேர்விற்கு அவை இயல்பாக வந்தடைகிறது. சந்தேகமின்றி அவை பிந்தைய வாய்ப்பைத் தேர்ந்தெடுத்து படிப்படியாக அதன் சராசரி ஆற்றலும் தற்போதைய இந்த நிலையை எட்டி இருக்கிறது. மனிதர்கள் நாம் ஒவ்வொருவரும் உச்சபட்சமாக இயன்ற செயலை முழுவீச்சில் செய்வதற்கான அறைகூவலாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

இந்த நீண்ட வலசைப் பயணத்தை அது தொடர்ந்து மேற்கொள்வதால் அடைந்திருக்கும் ஆற்றலும் அசாதாரணமானது. இப்பறவை தம் வாழ்நாளில் மொத்தமாக பறக்கும் தொலைவைக் கணக்கிட்டால் ஏறக்குறைய புவியில் இருந்து நிலவைத் தொட்டுவிட்டு அங்கிருந்து மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்கும் என்று வீடென்சால் குறிப்பிடுகிறார். அதாவது சுமார் ஐநூறு கிராம் எடையுள்ள பறவை தன் வாழ்நாள் மொத்தமாக சுமார்  நான்கு லட்சம் கிலோமீட்டர்கள் பறந்து முடித்திருக்கும். ஒப்புநோக்க அறுபது கிலோ எடையுள்ள ஒரு சராசரி மனிதர் தம் வாழ்நாளில் அதிகபட்சமாக நடக்கும் தொலைவு எண்பதாயிரம் கிலோமீட்டர்கள் இருக்கலாம். காந்தி தம் வாழ்நாளில் குறைந்தபட்சமாக சுமார் மூன்று லட்சம் கிலோமீட்டர்கள் நடந்திருப்பார் என்பதையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலம்.

புவியின் பருவநிலை மாற்றத்தை வெற்றிகரமாக எதிர்கொள்வதில் பல வகைகளிலும் பறவைகள் பிற எல்லா உயிரிங்களுக்கு முன்னோடியாகச் செயல்படமுடியும் என்று வீடென்சால் போன்ற பல ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர். பட்டை வால் மூக்கன் போன்ற பறவைகளின் அபரிதமாக ஆற்றலை அறியும்தோறும் மனிதன் பரிணாம வளர்ச்சியின் முன்னேற்றத்திற்கு ஈடான அல்லது அதைத் தாண்டிய அளவிலான முன்னேற்றம் பிற இனங்களிலும் நாம் இன்னும் அடையாளம் காணாத வகைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதென்றே ஊர்ஜிதமாகிறது. நாள்தோறும் மனித இனம் தெரிந்தும் தெரியாமலும் உருவாக்கி வீசுகின்ற தீப்பற்றிய வளையங்களில் சிக்காமல் சில பறவை இனங்கள் இன்னும் வெற்றிகரமாக தாண்டிச் செல்லவே செய்கின்றன. இங்கு மனித இனத்தின் வாழ்க்கைக் காலம் முடிவுற்ற பின்னரும் பறவைகள் எஞ்சியிருக்கும் என்றும், அவற்றின் படபடக்கும் இறகுகளுக்கு கீழே இப்புவி தொடர்ந்து சுழலும் என்றும் கற்பனை செய்து கொள்வது பொருத்தமாக இருக்குமென்று தோன்றுகிறது.

***

ஜனார்த்தனன் இளங்கோ

ஜனார்த்தனன் இளங்கோ, மென்பொருள் பொறியியலாளர். சொந்த ஊர் திருவாரூரைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி. இலக்கியம் தவிர தத்துவம், கட்டிடக்கலை, பறவையியல் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு.

உரையாடலுக்கு

Your email address will not be published.