உள்ளே வெளியே : சுரேஷ்குமார இந்திரஜித்

அந்தப் பங்களாவிற்குள் சிவகுமார் நுழைந்தான். அந்தப் பங்களாவின் முகப்பும் சுற்றியிருந்த தோட்டமும் அவனுக்கு மலைப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்தப் பங்களாவில் வசிக்கும் பெண் சொல்வதைக் கணினியில் தட்டச்சு செய்யும் வேலை தனக்குப் பொருந்துமா என்ற ஐயம் ஏற்பட்டது

தன் முன்னாள் பேராசிரியரை அவன் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தபோது, “பெண் தமிழ்ப் பேராசிரியர் ஒருவருக்குத் தட்டச்சு செய்யும் ஒருவர் தேவை” என்று சொன்னார். இத்தகைய பெரிய பங்களாவில் அந்தப் பேராசிரியர் இருப்பார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. திரும்பிவிடலாமா என்றுகூட யோசித்தான்.

வாசற்கதவு திறந்தது. ஒரு பெண் நின்றிருந்தார். அவன் சந்தித்த பேராசிரியரின் பெயரைச் சொல்லி, அவர் அனுப்பிய நபரா என்று கேட்டாள். அவன் ஆமாம் என்றதும் அவனை உள்ளே வரச் சொன்னாள். சிவந்த நிறம். அடர்ந்த கூந்தல். ஒல்லியாகவோ தடிமனாகவோ இல்லை. வடிவான உடல். கைகள் வளமையாக இருந்தன. ஒரு கையில் இரண்டு தங்க வளையல்கள். இன்னொரு கை வாட்ச் கட்டுவதற்காக வெறுமனே இருந்தது. அவள் பெண் என்பதால் தனியாக வேலை பார்ப்பது சிரமமாக இருக்குமோ என்று அவனுக்குத் தோன்றியது.

அவள் அவனைச் சோபாவில் உட்காரச் சொன்னாள். அவள் இன்னொரு சோபாவில் உட்கார்ந்துகொண்டாள். அவனைப்பற்றி விசாரித்தாள். அவள் தன் வலது கணுக்காலில் ஒரு கருப்புக் கயிறைக் கட்டியிருந்தாள்.

அவன் தன் வேலை பற்றிக் கேட்டான்.

“இந்த வேலை தற்காலிகமானது. என் மனதிலுள்ள சில நினைவுகளை எழுத்து வடிவில் வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். நான் இரண்டு மாத விடுப்பில் இருக்கிறேன். அதுவரையில்தான் இந்த வேலை. அதன்பின் நான் உங்களுக்கு வேறு வேலை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். காலை பத்து மணிக்கு வரவேண்டும். பதினொன்றரை மணிக்கு டீ,  பிஸ்கட் கிடைக்கும். காலையில் நான் டிக்டேட் பண்ண ஆரம்பிப்பேன். இடையிடையே யோசிக்க நேரம் எடுத்துக்கொள்வேன். மதியம் ஒன்றரை மணியிலிருந்து மூன்று மணிவரை ஓய்வு. பிறகு ஐந்து மணிவரை வேலை. நாலரை மணிக்கு டீ சாப்பிடலாம். என்னுடைய சொந்த வாழ்க்கையை நான் சொல்ல நீங்கள் டைப் அடிக்க வேண்டும். என்னுடைய வாழ்க்கை இப்போதைய ஸ்டைலில் இருப்பதற்கு என் கணவர்தான் காரணம். அவர் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தார். எனக்கு ஒயின் அருந்தும் பழக்கம் உண்டு. நானும் என் கணவரும் சேர்ந்து ஒயின் அருந்துவது வழக்கம். அவர் இறந்துவிட்டார். நான் மட்டும் தனியாக இருக்கிறேன். குழந்தைகள் இல்லை. வேலைக்காரி வந்து செல்வாள். நான் டிக்டேட் செய்யும்போது விருப்பப்பட்டால் ஒயின் அருந்துவேன். நீங்கள் நான் டிக்டேட் செய்யும் விஷயங்களை வெளியில் சொல்லக்கூடாது. காப்பி செய்து எடுத்துக்கொள்ளக் கூடாது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை” என்றாள்.

சிவகுமார் உட்கார்ந்த நிலையிலேயே வீட்டைப் பார்த்தான். பணக்கார வீட்டுக்குரிய அமைப்புடன் வீடு இருந்தது. உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் ஹாலை ஒட்டி இருந்த அறைக்குச் சிவகுமாரைக் கூட்டிச் சென்றாள். வசதியான அறையாக இருந்தது. கம்ப்யூட்டர், அதற்குரிய சேர், படுத்துக்கொள்ள சோபா கம் பெட், நாற்காலிகள், சோபா இருந்தன.

“இதுதான் நம் அலுவலக அறை. அட்டாச்சுடு பாத்ரூம், லெட்ரின் உள்ளது. நான் நடந்துகொண்டும் உட்கார்ந்துகொண்டும் சொல்வேன். ஒவ்வொரு நாளும் நீங்கள் தட்டச்சு செய்வதை பிரிண்ட் அவுட் எடுத்து என்னிடம் கொடுத்துவிடுங்கள். நான் பிழைகள் இருந்தால் குறித்து வைக்கிறேன். அடுத்த நாள் அவற்றைச் சரிசெய்துவிட்டு நம் வேலையைத் தொடருவோம். நான் வாசலில் உள்ள செக்யுரிட்டியிடம் சொல்லிவிடுகிறேன். நீங்கள் காலையில் வாருங்கள்” என்றாள்.

அடுத்த நாள் சிவகுமார் குறித்த நேரத்திற்கு வந்து காலிங் பெல்லை அழுத்தினான். கதவு திறந்தது. அந்தப் பெண் நின்றிருந்தாள். அறைக்கு அழைத்துச் சென்றாள். “நீங்கள் சிஸ்டத்தைத் திறந்துகொள்ளுங்கள். டேபிளில் தண்ணீர் பாட்டில், டம்ளர் இருக்கிறது” என்றாள்.

“தண்ணீர் பாட்டில் நான் கொண்டுவந்திருக்கிறேன். தேவைப்பட்டால் எடுத்துக்கொள்கிறேன்” என்றான். கருப்புப் பேண்டும், வெள்ளை டீ சர்ட்டும் அணிந்திருந்தான். அவள் சுரிதார், துப்பட்டா அணிந்திருந்தாள்.

“நீங்கள் தட்டச்சு செய்யலாம். நான் பேசுகிறேன்” என்றாள்.

“என் தந்தை கணித ஆசிரியராக இருந்தார். மாணவ மாணவிகளுக்குக் கணக்குப் பாடம் எப்போதுமே கடினமானதாக இருக்கிறது. வீட்டில் என் தந்தை டியூசன் எடுப்பார். எனக்கும் கணக்குப் பாடம் சிரமமாக இருந்ததால் நானும் டியூசனில் உட்கார்ந்திருப்பேன்.

என் தந்தைக்குக் கர்நாடக சங்கீதத்தில் ஈடுபாடு உண்டு. எனக்கு ஆரபி என்று பெயர் வைத்தார். இது ஒரு கர்நாடக சங்கீத ராகத்தின் பெயர். பஞ்ச ரத்ன கீர்த்தனைகளில் ஒரு கீர்த்தனை ஆரபி ராகத்தில் அமைந்தது என்று சொல்லுவார். என் அம்மா, ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். இருவருமே இப்போது உயிரோடு இல்லை. என் தாய் தந்தையருக்கு நான் ஒரே மகள். என்னை சிறுவயதில் பார்த்துக்கொள்ள அம்மாச்சி இருந்தார். நான் ஏழாவது படிக்கும்போது அம்மாச்சி இறந்துவிட்டார். என் தாய், தந்தை இருவரும் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். எனக்கு ரெண்டு பேரினால் பிரச்சினை ஏற்பட்டது. பக்கத்து வீட்டு ரகு, சயின்ஸ் டீச்சராகப் புதிதாகப் பள்ளியில் சேர்ந்த கருணாகரன். இரண்டு பேர் மீதும் எனக்கு ஆசை ஏற்பட்டது. அதிலும் கருணாகரன் மீது அதிகமாக ஏற்பட்டது. ஸ்டைலாக இருப்பார். கலர் சட்டை போட்டு பேண்ட்டில் இன் பண்ணி இருப்பார். சுருட்டை முடி. உச்சி எடுத்திருக்க மாட்டார். முடியைத் தூக்கிச் சீவியிருப்பார். பாடம் நடத்தும்போது நான் அவரையே பார்த்துக்கொண்டிருப்பேன். நான் கருணாகரன் சாரைக் காதலித்தேன். அப்படியானால் ரகுவை என்ன செய்வது என்று நினைத்தேன். ஒரே நேரத்தில் இருவரையும் காதலித்தேன். எந்தக் காதல் ருசிகரமானதாக இருக்கிறதோ அந்தக் காதலைத் தொடருவோம். இன்னொரு காதலை டம்மியாக வைத்துக்கொள்வோம் என்று நினைத்துக்கொண்டேன். ஆசிரியரிடம் பணிவாகவும் நடந்துகொள்ள வேண்டியிருப்பதால் காமம் கூடுகிறதா, குறைகிறதா என்று என்னால் தீர்மானம் செய்ய முடியவில்லை. ரகு என் சமவயதுப் பையன். பயந்தவனாக இருந்தான். நினைத்தால் ஆசிரியர் கருணாகரனை வசப்படுத்த முடியும். கைவிரல்களை அழுத்தினால் என் வசமாகிவிடுவார். தவிர எனக்கு மூத்தவர் என்பதால் அவர் பக்குவமாக என்னைக் கையாளக்கூடும். சக மாணவன் அவசரப்படுவான். அப்படியானால் ரகு டம்மி. மனதில் அவனையும் கருணாகரன் சாரையும் மாறிமாறி நினைத்துகொள்ள வேண்டியதுதான் என்று நினைத்தேன்.”

இதையே ஆரபி நிறுத்தி நிதானித்து இடைவெளி விட்டுச் சொன்னாள்.

“இருங்கள். உங்களுக்கு டீ கொண்டு வருகிறேன்” என்று எழுந்தாள்.

சிவகுமாருக்கு இந்தப் பேராசிரியை தன்னுடைய காதல் கதையை மட்டும் சொல்வாளா அல்லது சொந்த வாழ்க்கையையும் சொல்வாளா என்ற ஐயப்பாடு ஏற்பட்டது. காதல் கதை என்றால் சீக்கிரம் முடிந்துவிடுமே, டைப் அடித்து ஆகப்போவது என்ன என்று நினைத்தான்.

ஆரபி டீ, பிஸ்கெட்டுடன் வந்தாள். “சிவகுமார் நீ உன்னைப்பற்றிச் சொல்லு. நீங்கள் என்று உன்னை அழைப்பது செயற்கையாக இருக்கிறது” என்றாள்.

சிவகுமார் குழப்பத்துடன் இருந்தான். இந்தப் பெண் தன்னைக் காமத்தில் வீழ்த்திவிடுவாளோ என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. அவன் டீ குடித்தான். ஆரபி பிஸ்கெட் கொடுத்தாள். வேண்டாம் என்று மறுத்துவிட்டான். ஆரபி சோபாவில் உட்கார்ந்து டீ குடித்தாள்.

சற்று நேரம் அமைதி நிலவியது. செல்போனை எடுத்து சிவகுமார் சற்றுநேரம் பார்த்தான். ஆரபியிடமிருந்து ஏதும் பேச்சு வராத நிலையில், திரும்பிப் பார்த்தான். அவள் சோபாவில் உட்கார்ந்த நிலையில் கண்களை மூடியிருந்தாள். தூங்கிவிட்டாள் என்று சிவகுமாருக்குத் தோன்றியது. ஆரபியின் மார்புகளை அவன் பார்த்தான். பின் தன் நாற்காலிக்குச் சென்று அமர்ந்து செல்போனைப் பார்த்தான்.

தூக்கத்தில் ஆரபியின் மனதில் சிவகுமாரின் பக்கத்தில் அவள் படுத்திருக்கும் காட்சி தோன்றியது. திடுக்கிட்டு விழித்தாள் ஆரபி.

2

சிவகுமார் தன் வாழ்க்கை பற்றிச் சொன்னான். “என் அப்பா அம்மா கிராமத்திலே இருக்கிறார்கள். அப்பா விவசாயம் செய்கிறார். அம்மா ஆரம்பப் பள்ளியிலே டீச்சராக இருக்கிறார். அக்காவைப் பக்கத்து ஊர்லே கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கு. நான் படிப்பு முடிந்ததும் வேலை தேடி இங்கே வந்தேன். மேன்ஷன்லே தங்கியிருக்கேன். ஒரு கம்பேனியிலே வேலை பார்த்தேன். சரியா வரலை. தற்காலிகமானாலும் பரவாயில்லை என்று இந்த வேலைக்கு வந்தேன்.”

“இந்த வேலை முடியட்டும். நான் உனக்கு நல்ல வேலை வாங்கித் தருகிறேன்” என்றாள் ஆரபி.

“ரகு வேறு ஒரு பெண்ணை விரும்புவதை நான் அறிந்தேன். இருவரும் ஒதுக்குப்புறமான சாலையில் அக்கம்பக்கம் பார்த்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். போய்த் தொலைகிறான் என்று நினைத்தேன். கருணாகரன் சாருக்கு மாறுதல் வரப்போகிறது என்று பேசிக்கொண்டார்கள். அது உண்மையாக இருக்கக்கூடாது என்று நினைத்தேன். அவர் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது அவர் பாடம் நடத்துவது எதுவும் என் சிந்தையில் ஏறாது. நான் அவரையே பார்த்துக்கொண்டிருப்பேன். நோட்டுப் புத்தகத்தில் என் கை ஏதாவது படங்கள் வரைந்துகொண்டிருக்கும். ஒருநாள் கருணாகரன் சார் வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போது அந்த நோட்டைக் கொண்டுவரச் சொன்னார். நான் பயந்துகொண்டே நோட்டைக் கொண்டுபோய்க் காண்பித்தேன். அவர் பார்த்துவிட்டு சிரிப்புடன் நோட்டைத் திருப்பிக் கொடுத்தார். எதுவும் சொல்லவில்லை. எனக்குத்தான் அவமான உணர்வு ஏற்பட்டது. அவர் வாத்தியார். நான் மாணவி. என்னுடைய காதலை நான் எப்படி அவரிடம் சொல்வது. அவர் என்னைச் சிறு பெண்ணாகத்தானே கருதுவார் என்ற சிந்தனை ஏற்பட்டது. ஒருநாள் தற்செயலாக நானும் அவரும் பள்ளியில் சந்தித்தோம். அவர் என்னை அருகில் வரச் சொன்னார். “கவனத்தை அங்கே இங்கே சிதற விடாதே. ஒழுங்காகப் படி” என்றார். என் காதலுக்கு அடி கிடைத்ததாக உணர்ந்தேன். இருந்தாலும் அவர் திருந்தி, என்மேல் அவரின் கவனம் திரும்பும் என்று நினைத்து அவர் பார்க்கும்போது முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டேன். துரதிருஷ்டவசமாக அவருக்கு மாறுதல் வந்துவிட்டது. என்னிடம் சொல்லிக்கொள்ளவில்லை. அவர் பள்ளியை விட்டு வேறு ஊரில் பணிபுரியச் சென்றுவிட்டார். என் காதலும் அத்துடன் போயிற்று. காதலிக்க வேறு ஆள் தேடினேன்.

அப்பா வீட்டில் இருக்கும்போது சங்கீதப் பாட்டுகளைக் கேட்டுக்கொண்டிருப்பார். ஒரே இழுவையான பாட்டுகளாக இருக்கும். பாடிய வரிகளையே திரும்பத்திரும்பப் பாடிக்கொண்டிருப்பார்கள். இதை எப்படிக் கேட்கிறார் என்று எனக்குத் தோன்றும். அம்மா காதில் இந்தப் பாட்டுகள் கேட்கிறதா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கும். அவள் தன்போக்கில் தன் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருப்பாள். அப்பாவிற்கு என்னைப் பாட்டு கிளாசிற்கு அனுப்பும் யோசனை ஏற்பட்டது. என்னிடம் கேட்டார். நான் மறுத்துவிட்டேன். அவருக்குக் கோபம் ஏற்பட்டது. என்னைப் பாட்டு கிளாசில் என் விருப்பமின்றி சேர்த்துவிட்டார்.

டீச்சர் பெயர் மங்களம். தோற்றத்திலும் மங்களமாக இருந்தாள். ஏழு பேர் படித்தோம். மூன்று பேர் ஆண்கள். நாலு பேர் பெண்கள். எனக்கு இசையில் நாட்டம் இல்லை. டீச்சர், “சுதியோட பாடணும். சுதி விலகக் கூடாது” என்பாள். எனக்கு சுதியே சேராது. ரங்கநாதன் என்ற மாணவன் அருமையாகப் பாடுவான். நாமம் இட்டிருப்பான். அவன் என் கனவில் வர ஆரம்பித்தான். நான் அவனைக் காதலிப்பதாக உணர்ந்தேன். நான் அவனைக் காதலாகப் பார்ப்பேன். அவன் ஜடம் போல இருப்பான். என்னைப் பார்ப்பதே பாப காரியம் என்பது போல உட்கார்ந்திருப்பான். பாடுவதில் மகா கெட்டிக்காரன். திடீரென்று அவன் வகுப்பிற்கு வருவதை நிறுத்திவிட்டான். அவனுடைய அப்பாவிற்கு டில்லிக்கு மாறுதல் ஆகிவிட்டதாகப் பேசிக்கொண்டார்கள். அவன் இசையைத் தொழிலாகக் கொண்டிருந்தால் முக்கியமான பாடகனாக வந்திருப்பான். எனக்குப் பாட்டு வராது என்று பாட்டு டீச்சர் என் அப்பாவிடம் சொல்லிவிட்டார். அப்பாவும் பாட்டு கிளாசுக்குப் போவதை நிறுத்திவிட்டார்.

நான் கல்லூரியில் சேர்ந்தேன். தமிழ் மேஜர் எடுத்தேன். எனக்கு ஒரு தோழி கிடைத்தாள். அவள் பெயர் புளோரா. அவள் ஆங்கிலம் மேஜர் எடுத்திருந்தாள். ஒருநாள் அவள் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். வீடே வித்தியாசமாக இருந்தது. பொருட்கள் அதனதன் இடத்தில் ஒழுங்காக வைக்கப்பட்டிருந்தன. வீடு பளிச்சென்றும் சுத்தமாகவும் இருந்தது. அவளுக்கு ஒரு அண்ணன் இருந்தான். அவன் பெயர் எலியட்.  புளோராவின் அப்பா ஆங்கிலக் கவிஞர் டி. எஸ். எலியட்டின் வாசகர். அந்தப் பெயரைத் தன் மகனுக்கு வைத்துவிட்டார். புளோராவின் அண்ணன் எலியட் ஆங்கிலப் பையன் போல இருந்தான். மீசை வைத்துக்கொள்ளவில்லை. கூர்மையான நாசி. பளபளக்கும் முகம். புளோராவிடமும் ஆங்கிலத்தில்தான் பேசுவான். எனக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வராது. என்னைத் தாழ்வாக உணருவேன். எலியட் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. ஆங்கிலம் கற்றுக்கொண்டு அவனுடன் உரையாடும் சீமாட்டியாக என்னைக் கற்பனை செய்துகொண்டேன். ஒருநாள் மாடியிலிருந்த புளோராவைப் பார்த்துவிட்டு படியிறங்கி வரும்போது என்னை மறித்துக் கட்டிப்பிடித்து முத்தும் கொடுத்துவிட்டு படியேறிச் சென்றுவிட்டான். நான் உடல் நடுங்கப் படியிலிறங்கினேன். பிறகு ஆட்கள் யாருமில்லாத சமயங்களில் என்னைப் பார்த்தால் எலியட் கட்டிப்பிடித்தான். அப்போது கால் பிறண்டு மாடிப்படியில் உருண்டு தலையில் அடிபட்டு விழுந்தான். அவனை மருத்துவமனையில் சேர்த்தார்கள். இறந்துவிட்டான். புளோராவின் உடனான நெருக்கம் நாளடைவில் குறைந்துவிட்டது.”

3

உண்மையில் எலியட் கால் பிறழ்ந்து மாடிப்படியில் விழுந்து இறக்கவில்லை. ஆரபியை எலியட் கட்டிப்பிடிக்க நெருங்கிபோது அவளுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. ஆரபி அவனைத் தள்ளிவிட்டாள். அவன் மாடிப்படிகளில் விழுந்து, தலையில் அடிபட்டு இறந்தான்.

ஆரபி எலியட்டை நினைத்துப் பார்த்தாள். அந்த நொடியில் அவனைத் தள்ளிவிட வேண்டும் என்று தோன்றியிருக்காவிட்டால் அவன் இப்போதும் உயிருடன் இருந்திருப்பான். அவளும் அவன் இறப்பான் என்று நினைக்கவில்லை. சந்தர்ப்பவசமாக அவன் இறந்துவிட்டான். சில காலம் இதனால் ஏற்பட்ட மனக் குழப்பத்தில் ஆரபி இருந்தாள்.

இன்னும் சற்றுநேரத்தில் சிவகுமார் வந்துவிடுவான். நல்ல பையன். டைப் அடிக்கிற வேலையைத் தரமாகச் செய்கிறான். எளிமையான குடும்பப் பின்னணி உடையவன். பரபரப்பாக வேலை செய்வது இல்லை. ஆரபிக்கு அவனைப் பிடித்திருந்தது. சிவகுமார் முழுக்கைச் சட்டையை பேண்ட்டில் இன் பண்ணித்தான் வருவான்.

வாசலில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. ஆரபி எழுந்து கதவைத் திறந்தாள். வழக்கத்திற்கு மாறாக இன்று அரைக்கைச் சட்டை அணிந்து பேண்ட்டில் இன் பண்ணியிருந்தான். “இன்று நீ ஸ்மார்ட் ஆக இருக்கிறாய்” என்று சிவகுமாரைப் பார்த்து ஆரபி கூறினாள். சிவகுமார் சிரித்துக்கொண்டான்.

இருவரும் அவரவர்கள் அமரும் இடத்தில் அமர்ந்தார்கள். சிஸ்டத்தைத் துடைத்துவிட்டு வேலைக்குத் தயாராகி அவளைப் பார்த்தான்.

“எனக்குப் படிப்பு முடிந்தது. கல்லூரியில் பேராசிரியை வேலை கிடைத்தது. அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார். ஆங்கிலப் பேராசிரியராக வேலை பார்க்கும் ஜவஹர் என்னைப் பெண் பார்க்க வந்தார். எனக்கு அவரைப் பிடித்திருந்தது.

எனக்கும் அவருக்கும் திருமணம் நடந்தது. அவருக்கு ஆங்கில இலக்கியம் நன்றாகத் தெரியும். ஷேக்ஸ்பியரின் மேல் அவருக்குத் தீவிரமான ஈடுபாடு இருந்தது. எனக்குப் பழந்தமிழ் இலக்கியம் தெரியும். ‘கலிங்கத்துப்பரணி’ மீது எனக்குத் தனிப்பட்ட ஈடுபாடு இருந்தது.

அவர் ஷேக்ஸ்பியரின் வாசகங்களைக் கூறுவார். எனக்குச் சரியாகப் புரியாது. நான் ஜெயங்கொண்டாரின் ‘கலிங்கத்துப்பரணி’யிலிருந்து மேற்கொள் சொல்லுவேன். உரையுடன் சொல்லுவேன். சில பாடல்கள் எனக்கு மனப்பாடம்.

விடுமின் எங்கள் துகில் விடுமின் என்றுமுனி

வெகுளி மென்குதலை துகிலினைப்

பிடிமின் என்ற பொருள் விளைய நின்று அருள்செய்

பெடை நவீர் கடைகள் திறமினோ.

இதற்கு என்ன பொருள் தெரியுமா. ‘‘எங்கள் ஆடையை விடுங்கள்’ என்று வெகுளியாகவும் மென் குளறலாகவும் ‘எங்கள் ஆடையைப் பிடியுங்கள்’ என்று உட்பொருள் தொனிக்கத் தலைவனைப் பார்த்துக் கூறும்  அன்னம் நிகர் பெண்களே வந்து கதவைத் திறங்கள்.’

இன்னொரு பாடல் கூறுகிறேன்.

இத்துயில் மெய்த்துயிலே என்று குறித்து இளைஞோர்

இதுபுலவிக்கு மருந்து என மனம்வைத்து அடியில்

கைத்தலம் வைத்தலுமே பொய்த்துயில் கூர்நயனக்

கடை திறவா மடையீர் கடைதிறமின் திறமின்

இதற்குப் பொருள். ‘பாசாங்கானத் தூக்கத்தை மெய்த்தூக்கம் என்று நினைத்து ஊடல் நோய்க்கு இதுவே மருந்து என்று தலைவன் தன் கையை உங்கள் அடிவயிற்றின் கீழ் வைத்தபோதும் பொய்யாகத் தூங்கிக் கூரான கண்களைத் திறவாத பிடிவாதமுடையீர், வந்து கதவைத் திறங்கள்.’

இதுபோன்ற பல கிளர்ச்சி மிகுந்த பாடல்களைக் ‘கலிங்கத்துப்பரணி’யிலிருந்து எடுத்துச் சொல்வேன். என் கணவர் அவற்றை ரசிப்பார். இப்படியாக எங்கள் காதல் வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது. பெரும்பாலும் அந்நேரங்களில் ஒயின் அருந்தியிருப்போம்.

வாசம் ஆர்முலைகள் மார்பில் ஆடமது

மாலை தாழ்குழலில் வண்டு எழுந்து

ஊசல்ஆட விழி பூசல் ஆட உறவு

ஆடுவீர் கடைகள் திறமினோ.

இந்தப் பாடலை நான் வாசிக்கும்போது கிளர்ச்சியுறுவேன். ‘வாசமுடைய முலைகள் தலைவன் மார்பில் ஆட, தாழ்குழலில் சூடிய மாலையிலிருந்து வண்டுகள் எழுந்து ஊசல் ஆட, விழிகள் போர்புரிய உறவாடுவோரே வந்து கதவைத் திறங்கள்’ என்று இதற்குப் பொருள்.

என் கணவருக்கு ஒயின் போதையுடன் காம போதையும் ஏறும். எனக்கும் அப்படித்தான் இருக்கும்.”

பேசும்போது அவள் ஒயின் அருந்திக்கொண்டிருந்தாள். ஒயின் சிகப்பு நிறத்தில் இருந்தது. அவள் உதடுகளும் சிகப்பாக இருந்தன.

4

“எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்தது.

ஜவஹர் கண்களில் நீர் வடிந்துகொண்டிருந்தது. ஒரு கண்ணில் சற்றுப் பார்வைக் குறைவு ஏற்பட்டது. கண் டாக்டர் மணிகண்டனைப் பார்த்தோம். பார்த்த கணத்திலேயே அவர் என் மனதிற்குள் நுழைந்தார். சிரித்த முகம். சிகப்பு நிறம். அவர் செயல்களில் மிடுக்கும் தோரணையும் இருந்தன. ஜவஹரைப் பரிசோதனை செய்து சொட்டு மருந்து கொடுத்தார். ரெட்டினா பலவீனமாக இருப்பதாகக் கூறினார்.

ஒரு விபரீதம் நிகழ்ந்தது. ஜவஹர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, இருட்டில் மின் கம்பத்தில் மோதி கீழே கிடந்தக் கல்லில் விழுந்துவிட்டார். உடலில் பெரிய காயங்கள் இல்லை. கண்களில் பெரிய அடி ஏற்பட்டுவிட்டது. மணிகண்டனிடம் கூட்டிச் சென்றேன். இரண்டு கண்களிலும் உள்ள ரெட்டினா அடிபட்டிருப்பதால் பார்வை இருக்காது என்றார். காயங்களை ஆற்றிவிட்டோம். ஜவஹருக்குப் பார்வை கிடைக்கவில்லை.

சிகிச்சை தொடர்பாக மணிகண்டனிடம் சென்றபோது எனக்கும் அவருக்கும் சிநேகம் ஏற்பட்டது. கட்டிப்பிடித்துக்கொண்டோம். கைகளைப் பற்றிக்கொண்டோம். ஜவஹருக்குக் கண்பார்வை திரும்ப வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டேன். இரண்டு கண்களிலும் உள்ள ரெட்டினா சிதைந்துவிட்டதால், வாய்ப்பு இல்லை என்றார்.

என் வாழ்க்கை கடினமாயிற்று. கண் தெரியாத ஒருவருடன் வாழ்வது மிகவும் துயரமானதாக இருந்தது. நான் விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் பணியிலிருந்து விலகிவிடலாம் என நினைத்தேன். பிறகு வேலையாட்களை நியமித்து அவரைக் கவனித்துக்கொண்டேன்.

கண் தெரியாதவரின் வாழ்வை நினைத்துப் பார்ப்பதே எனக்குக் கஷ்டமாக இருந்தது. ஜவஹர் தடுமாறுவதையும் இருட்டு உலகத்தில் இருப்பதையும் பொருட்களை நிறங்களை இயற்கையாகப் பார்க்க முடியாமல் இருப்பதையும் சோகமாக என்னிடம் கூறுவார். நான் நேசித்த, மோகித்த, என் கணவர் எனக்குப் பாரமானார். துன்பத்தைத் தருபவராக ஆனார். மணிகண்டனுடன் பழகும்போது மட்டுமே மனம் இதமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தது.

மகாபாராதக் கதையில் பிறவிக் குருடனான திருதராஷ்டிரனுக்குக் காந்தாரி வாழ்க்கைப்பட்டாள். திருமணத்திற்கு முன்புதான் அவளுக்குத் தான் திருமணம் செய்துகொள்ளப்போவது பிறவியிலேயே கண் தெரியாத மகாராஜா திருதராஷ்டிரனை என்பது தெரிந்தது. அவள் சபதம் எடுத்தாள். தன் கணவர் காணமுடியாத உலகைத் தானும் காணக் கூடாது என்று தன் கண்களைத் துணியினால் கட்டிக்கொண்டாள். அதேபோல நானும் கண்களைக் கட்டிக்கொண்டு எப்படி உள்ளது என்று அறிய நினைத்தேன். கண்களைக் கட்டிக்கொண்டேன். கண்களின் இருள் பயத்தைத் தந்தது. காந்தாரிக்குப் பணிவிடைகள் செய்வதற்குப் பணிப்பெண்கள் இருந்தாலும், கண் தெரிந்த ஒருத்தி, கண்களைக் கட்டிக்கொண்டு இருளில் இருப்பது எவ்வளவு கொடுமையானது என்று உணர்ந்தேன்.”

5

காந்தாரி தன் கண்கட்டை அவிழ்த்தாள். கதவை அடைத்திருந்தாள். சாளரங்களை மூடினாள். அணிந்திருந்த ஆடைகள் வண்ணமயமாக அமைந்திருந்தன. அவற்றைப் பார்த்தாள். கண்கள் கூசின. அறையிலுள்ள பொருட்கள் மங்கலாகத் தெரிந்து துலக்கமானது. இதுவல்லவோ உலகம் என்று நினைத்தாள். உலகம் காட்சி ரூபம்.

சபையில் தன் மதிப்பை உயர்த்துவதற்காக அவள் எடுத்த திருப்பமான ஒரு முடிவை வாழ்நாள் முழுதும் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. கணவருடன் இல்லாது, தனித்து இருக்கும் வேளைகளில் அவள் எப்போதாவது கண் கட்டை அவிழ்த்துக் காட்சிகளைப் பார்க்கிறாள். திருதராஷ்டிரனைப் பார்க்க நினைத்து அவனுடன் தனித்திருந்த வேளையில் கண் கட்டை அவிழ்த்து அவனைப் பார்த்தாள். இந்தத் திருமணப் பிரேரணைக்கு முன்பாக அவள் கனவில் வைத்திருந்த மணாளன் வேறு. திருதராஷ்டிரன் லட்சணமானவனல்ல. ஆனால் மகாராஜா. காந்தாரி மகாராஜாவின் மனைவி.

வண்ணமயமான துகில்களுடன் படுக்கையில் புரண்டாள். வாழ்க்கை மகிழ்வாக இருப்பதாக நடிப்பதில் அவள் சலிப்புற்றாள். பீஷ்மரின் மனதில் எப்படிக் காந்தார நாட்டு இளவரசியை திருதராஷ்டிரனுக்கு மணம் முடிக்கத் தோன்றிற்று என்று அடிக்கடி காந்தாரி யோசிப்பாள். அறையின் குறுக்கே நடந்தாள். சற்றுநேரந்தான் இந்த விடுதலை. பணிப்பெண் வந்து அழைக்கும்வரை.

படுக்கையில் அமர்ந்து சாளரத்தின் இடுக்கில் பார்த்தாள். அவள் இருப்பது மேல்தளம். கீழே சில படைவீரர்களைப் பார்த்தாள். அழகாகத் தெரிந்தார்கள். சற்றுநேரம் பார்த்துவிட்டு, சாளரத்தை இடைவெளி இல்லாமல் அடைத்தாள்.

அவளுக்கு நீல நிறம் பிடிக்கும். திருமணத்திற்கு முன் நீல நிற ஆடைகளை அவளே தேர்ந்தெடுத்து அணிவாள். இப்போது கண்கள் கட்டுண்டு இருப்பதால், நிறத்தை அவளே தேர்ந்தெடுக்க முடிவதில்லை. நீல நிற ஆடைகளைக் கொண்டுவரச் சொல்லி அணிந்துகொள்வாள். இன்று நீல நிற ஆடைகளை அணிந்திருந்தாள். நீல நிறத்தைப் பார்த்தாள். ‘கண்களிருந்தும் குருடி’ என்று சொல்லிக்கொண்டாள்.

அவள் எடுத்த முடிவு குரு வம்சத்தவர்களுக்கும் ராஜ சபையில் இருப்பவர்களுக்கும் சக அரச வம்சத்தவர்களுக்கும் பிடித்திருந்தது மட்டுமல்ல, அவள் மேல் பெரும் மதிப்பையும் உருவாக்கியது என்பதை அறிவாள். இந்த மதிப்பிற்காகவும் இந்தத் தியாகத்திற்காகவும் அவள் கண்களைக் கட்டிக்கொள்ளும் முடிவை எடுத்தாளா என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். வெளியே பணிப்பெண் நடந்துவரும் ஒலி கேட்டது. அவள் வருவது தெரிவதற்காகவே ஒலிக்கும் தண்டையைக் கால்களில் அணியச் செய்திருந்தாள்.

கதவுக்கு வெளியே இருந்து “மகாராணி” என்று பணிப்பெண் அழைக்கும் குரல் கேட்டது. துணியினால் கண்களை மீண்டும் கட்டிக்கொண்டாள். இருள் சூழ்ந்தது.

6

“என் கணவர் ஜவஹர் படுக்கையில் படுத்திருந்தார். அவருக்குச் செய்வதற்கு வேலை இல்லை. படிப்பதற்கு முடியாது. பாட்டுக் கேட்கலாம். சி.டி. என்றால் எழுந்து சி.டி.யை மாற்றுவதற்கு அவரால் இயலாது. ரேடியோவைப் போட்டுவிடுவேன். ரேடியோவில் ஒலிக்கும் பாட்டுகளைக் கேட்டுக்கொண்டு படுத்திருப்பார். அல்லது நாற்காலியில் உட்கார்ந்திருப்பார். நாற்காலியில் உட்கார்ந்திருந்தால், ஒயின் பாட்டிலையும் கோப்பையையும் அருகில் உள்ள ஸ்டூலின் மீது வைத்திருப்பேன். தேவைப்பட்டால் ஊற்றிக் குடிக்கப் பழகியிருந்தார். ஏதாவது தேவை என்றால் கூப்பிடுவார். என்னாலும் என் இஷ்டப்படி வெளியே எங்கும் செல்ல முடியவில்லை.

ஜவஹர் எரிச்சல் படும் மனிதனாக மாறிப் போனார். அவர்தான் என்ன செய்வார். பாட்டுக் கேட்பதைத் தவிர வேறொன்றும் வேலை இல்லை. படுத்தும் உட்கார்ந்தும் இருளுக்குள் இருந்துகொண்டு ஒருவர் எவ்வளவுதான் நேரத்தைக் கழிக்க முடியும்.

நான் ‘கலிங்கத்துப்பரணி’ பாடல்களைப் படிப்பேன். அவர் கேட்பார். இருவரும் ஒயின் அருந்துவோம். இந்த நிகழ்வு முடிந்தபின் ஏற்படும் ஆண் பெண் இன்பம் சுவாரஸ்யமானதாக இல்லை. பெரும்பாலும் எதுவும் நடப்பதில்லை. எனக்கு மணிகண்டன் நினைவு வரும். அவரை அடிக்கடி சென்று பார்ப்பேன். இருவரும் சேர்ந்து காபி குடிப்போம். வீட்டில் கண் தெரியாத ஜவஹர் இருக்கும்போது என்னால் அதிக நேரம் வெளியே இருக்க முடிவதில்லை.”

ஆரபி ஒயின் அருந்திக்கொண்டே பேசிக்கொண்டிருந்தாள். “நீ நாளை மதியம் உணவு எடுத்துவர வேண்டாம். நாம் இருவரும் சேர்ந்து சாப்பிடலாம். வேலைக்காரி வரவில்லை. நானே சமைக்கிறேன்” என்று சிவகுமாரிடம் சொன்னாள். சிவகுமார் தயங்கிக்கொண்டே தலையாட்டினான்.

ஆரபி பேச்சைத் தொடர்ந்தாள்.

“ஒருநாள் மாடியில் அமர்ந்து இருவரும் ஒயின் அருந்திக்கொண்டே பாட்டுக் கேட்டோம். பிறகு இருவருக்கும் கீழே வரும் எண்ணம் ஏற்பட்டு பாட்டை நிறுத்திவிட்டுக் கீழே இறங்க ஆயத்தமானோம். ஜவஹரின் கால் பிறண்டு மாடிப்படியில் உருண்டு தலையில் அடிபட்டு விழுந்தார். அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். அவர் இறந்துவிட்டார்.”

சிவகுமார் இப்பகுதியைத் தட்டச்சு செய்யும்போது திடுக்கிட்டான். ஒயின் அருந்திக்கொண்டிருந்த அவள் உதடுகள் சிகப்பாக இருந்தன.

அடுத்த நாள் ஆரபியின் வீட்டிற்கு சிவகுமார் வரவில்லை. வேலையிலிருந்து நின்றுவிட்டான்.

***

சுரேஷ்குமார இந்திரஜித்

சுரேஷ்குமார இந்திரஜித்  தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதி வருகிறார். ஆண் பெண் உறவுகளின் சிக்கல்கள், காமம், சமூக அவலங்கள் குறித்த கதைக்களங்களில் எழுதி வருபவர்.

தமிழ் விக்கியில்

3 Comments

  1. நன்றாக இருக்கிறது. இந்தச் சிறுகதைதான் நான் படித்த உங்களுடைய எழுத்து. படிக்கும்போதே காட்சிகளும் தாமாகவே விரிந்தன. வாழ்த்தும் அன்பும்!

    பேராசிரியர். முனைவர்.
    சி.அ.வ.இளஞ்செழியன்
    16-10-24.

  2. உங்களுக்கே உரிய வழக்கமான எழுத்துப்பாணி .காந்தாரியின் தொன்மத்தைச் சற்று எதிர் தொன்மமாக்க முயன்றிருக்கிறீர்கள் .சகுனியால் ,திருதராஷ்டிரனால் தன் கண்களைக் கட்டிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டாள் என்ற பார்வையும் அத்தொன்மத்தில் உண்டு ..
    உங்கள் இந்தக்கதையை கீழிருந்து மேலாகத்தான் முதலில் வாசித்தேன் .பிறகு மேலிருந்து கீழாக .சுவாரஸ்யமான கதை .

  3. வணக்கம் .

    பெரிய பங்களா, தனிமையில் வசிக்கும் பெண் பேராசிரியை ஆரபி, அவருக்கு தட்டச்சு செய்யும் ஒரு இளைஞன் சிவகுமார் என்று ஆரம்பிக்கிறது இந்தக்கதை. மர்மமாக, திகிலாக துவங்கினாலும் பழந்தமிழ் இலக்கியம் கலிங்கத்துப்பரணியின் கிளர்ச்சி மிகுந்த பாடல்களையும் சுகிக்கச் செய்து, மகாபாரத கதாபாத்திரம் காந்தாரியின் மறு ஆக்கமாகவும் விரிகிறது.
    தன் கணவர் காணாத உலகைத் தானும் காணக்கூடாது என்று தன் கண்ணைத் துணியில் கட்டிக்கொண்ட காந்தாரி, வீட்டிற்கு வெளியே கண் கட்டுடனும், வீட்டிற்கு உள்ளே கண்ணை அவிழ்த்தும் வாழ்ந்தாள் … என்று நம்மை திடுக்கிட வைக்கிறார் சுரேஷ்குமார இந்திரஜித்.
    ராமாயண அகலிகைக்கு புதுமைப்பித்தன் விமோசனம் கொடுத்ததை போல், மகாபாரத காந்தாரிக்கு சுரேஷ்குமார இந்திரஜித் கண்ணொளி கொடுத்திருக்கிறார்.
    காலவெளியை இணைக்கும் கதாபாத்திரங்களாக மகாபாரத ‘காந்தாரி’யும் தற்கால ‘ஆரபி’யும் இருக்கிறார்கள். ஆரபியின் கணவன் ஜவஹருக்கு நேரும் முடிவு, ஆரபியை சமகால காந்தாரியாக நம்மை கருத செய்கிறது.
    சுரேஷ்குமார இந்திரஜித் தனது படைப்புகள் ஒவ்வொன்றையும் ஒன்றைவிட மற்றொன்று, மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக உருமாற்றி இலக்கியம் படைத்துக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவரது ‘உள்ளே வெளியே’ சிறுகதை தற்போது உச்சத்தில் இருக்கிறது.

    அகழ் இதழுக்கு நன்றி !

உரையாடலுக்கு

Your email address will not be published.