/

நாடாப்புழுவின் கதை : மரியோ வர்கோஸ் யோஸா

தமிழில் : ஜனார்த்தனன் இளங்கோ

மரியோ வர்கோஸ் யோஸா(Mario Vargas Llosa, பிறப்பு: 28 March, 1936) புகழ்பெற்ற எழுத்தாளர், பத்திரிக்கையாளர், அரசியல் செயல்பாட்டாளர். பெரு நாட்டைச் சேர்ந்த இவர் ஸ்பானிஷ் மொழியில் 30-க்கும் அதிகமான நாவல்களை எழுதிக் குவித்துள்ளார். இதைத்தவிர பல்வேறு நாடகங்களையும், கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த முதன்மையான எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். இலக்கியத்திற்கான நோபல் பரிசால் 2010-ஆம் ஆண்டு இவர் அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரில்கேவின் புகழ்பெற்ற ‘Letters to a Young Poet’ கடிதத் தொகுப்பை அடியொற்றி யோஸா 1997-ஆம் ஆண்டு எழுதிய நூல்தான் ‘Letters to a Young Novelist’. இந்நூலில் எழுதத் துவங்கும் ஒருவருக்கு புனைவாக்கச் செயல்பாட்டில் எடுத்துரைக்க வேண்டிய விஷயங்களை கடித பாணி கட்டுரைகளின் வழியாக அவர் தன் தனிப்பட்ட அனுபவங்களுடன் இணைத்து விவரிக்கிறார். இதில் இடம்பெற்றுள்ள ஒரு கட்டுரையின் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அன்பு நண்பருக்கு,

உங்களுடைய கடிதத்தை வாசித்தவுடன் நான் மிகவும் பரவசமடைந்தேன். ஏனெனில் ஜெனரல் ஓட்ரியாவின்(General Odría) சர்வாதிகாரத்தினால் புகைபடிந்திருந்த லிமா நகரில் எழுத்தாளனாக வேண்டும் என்னும் அனல் கொதித்துக் கொண்டிருந்த என் பதினைந்து வயது இளமைக்காலத்தை அதில் கண்டேன். அச்சமயம் எழுத்தாளனாக வேண்டும் என்ற வேட்கை மேலிட, அசலான படைப்புகளை உடனடியாக படைத்துவிட வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் ஏற்பட்டிருந்தது. எனினும் இந்த இலட்சியத்தை எவ்விதம் வரித்துக்கொள்ளவேண்டும் என்றும், அதற்காக என்ன செய்ய வேண்டும் என்றும் தெரியாமல் நான் மனமுடைந்து போயிருந்தேன். ஃபாக்னர், ஹெம்மிங்வே, மால்ராக்ஸ், பசோஸ், காம்யூ, சார்த்தர் போன்ற எழுத்தாளர்களால் தாக்கமுற்று, அதே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் படைப்புகளை நானும் எப்படி எழுதுவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன்.

இவர்களுள் யாருக்காவது கடிதம் எழுதி, எழுத்தாளனாக என்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடம் இருந்து அறிவுறை பெறவேண்டும் என்று பலசமயம் எனக்குத் தோன்றியதுண்டு. எனினும் என்னுடைய கூச்ச சுபாவத்தாலும், அப்படியே எழுதினாலும் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள் என்ற என் தவறான முன்முடிவாலும் அதைச் செய்யாமல் விட்டிருந்தேன். பெரும்பாலான நாடுகளில் இலக்கியம் என்பது பெருவாரியான மக்களால் பொருட்படுத்தப்படாமல், ஒரு இரகசிய இயக்கத்தைப்போல இன்றளவும் தொடர்வதனால் இளம் தலைமுறையினரின் எழுத்து சார்ந்த லட்சியங்கள் பெரும்பாலும் முளைவிடும் போதே நசுக்ககப்படுகிறது.

எனக்கு கடிதம் எழுதியதன் வழியாக நீங்கள் இந்தக்கொடிய நோயில் இருந்து தப்பித்துவிட்டீர்கள். நீங்கள் மேற்கொள்ளப் போகும் சாகசத்திற்கு இது ஒரு நல்ல தொடக்கம். வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும், கண்டிப்பாக நீங்கள் இந்த சாகசப் பயணத்தில் நிறைய அற்புதங்களை எதிர்நோக்கியிருப்பீர்கள் என்று யூகிக்கிறேன். எனினும் அவ்வளவு எதிர்பார்ப்புகளை கொண்டிருக்க வேண்டாம் என்றே என் அனுபவத்தில் இருந்து கூறுவேன். அதுபோல இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிலான வெற்றியும் உங்களுக்கு கிடைக்கப் போவது இல்லை என்று நான் எச்சரிக்க விரும்புகிறேன். உங்கள் வெற்றிக்கு நேரடியான எந்தத் தடையும் இல்லை. எனினும் எழுதுவதை பதிப்பித்து வெளியிடுவதில் உங்களுக்கு ஆர்வம் மேலிடத் துவங்கினால், சமூகத்தில் எழுத்தாளராக நிலைபெறுவதில் கிடைக்கப்பெறும் பரிசுகளும், அங்கீகாரங்களும், புகழும் ஒரு தனித்த ஈர்ப்பை உங்களில் ஏற்படுத்திவிடுவதை கண்டுகொள்வீர்கள். இந்தப் பரிசுகளும் அங்கீகாரங்களும் பெரிதும் தற்செயலானவை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஏனென்றால் அவை பெரும்பாலான சமயம் தகுதியானவர்களை விட்டு விடாப்பிடியாக நழுவிச் சென்றுவிடுகிறது. மறுபுறம் தகுதியில்லாதவர்களை நோக்கி அவை அபிரிதமாக சென்று சேர்ந்த வண்ணம் இருக்கிறது. அதனால் இலக்கியத்தைப் பொறுத்தவரை வெற்றியை குறிக்கோளாகக் கொள்பவர்கள் அவர்கள் கனவை உண்மையில் எட்டுவதே இல்லை. அத்தகையவர்கள் இலக்கியக் குறிக்கோளையும் புகழுக்கான வேட்கையையும் குழப்பிக் கொள்கிறார்கள். வெகு சொற்பமானவர்களின் பொருளாதாரத் தேவையைத்தான் இலக்கியத்தால் பூர்த்தி செய்ய இயலும். இந்த இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது.

தங்கள் திறன் முழுமையாக வெளிப்பாடு கொள்வதுதான் இலக்கியத்தை வாழ்க்கையாகக் கொள்பவர்கள் அடையும் ஆகச்சிறந்த வெகுமதி. இந்த செயல்பாட்டில் இருந்து கிடைக்கப்பெறும் வேறு எந்தவொரு பயனும் அதற்கு ஈடாகாது. இலக்கியத்தை வாழ்க்கையாகக் கொள்வதில் பல நிச்சயமின்மைகள் உள்ளது, எனினும் ஒன்றை உறுதியாகக் கூறுவேன் : தனக்கு நிகழ்ந்தவற்றிலேயே மிகச் சிறந்த விஷயம் இலக்கியம் தான் என ஒரு எழுத்தாளர் உள்ளூர உணர்கிறார். அவரைப் பொறுத்தவரை எழுதுவது ஒன்றுதான் வாழ்க்கையை வாழ்வதற்கான ஆகச்சிறந்த வழி.  அதிலிருந்து கிடைக்கப்பெறும் சமூக, பொருளாதார, அரசியல் லாபங்கள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.

எழுத்தாளனாக ஆவது எப்படி என்னும் கேள்விக்கு மிகச் சிறந்த தொடக்கப் புள்ளி புனைவாக்கம் தான். சந்தேகத்தாலும், அகவயமான பண்பினாலும் மூடுண்டதால் புனைவாக்கச் செயல்பாடு என்பது திட்டவட்டமானதாக இல்லாமல் மர்மமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் புனைவாக்கத்தைப் பற்றி நாம் தர்க்கப்பூர்வமாக விளக்குவதையோ, அதைச்சுற்றி கற்பனாவாதிகள் உருவாக்கியுள்ள மதநம்பிக்கைக்கு நிகரான மூடநம்பிக்கைகளையும், தம்பட்டங்களையும் நிராகரிப்பதையோ இது எந்த வகையிலும் தடுக்கக்கூடது. எழுத்தாளன் என்பவன் கடவுள் தேர்ந்தெடுத்த ஒருவன் என்றோ, அவன் அசாத்தியமான பேரருளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதன் என்றோ, அவன் எழுதிய வார்த்தைகள் தெய்வீகமானவை என்றோ, அது மனிதன ஆன்மாவை உய்விக்கும் என்றோ, அந்த எழுத்தாளர் (மாட்சிமை பொருந்திய தன் எழுதுகோளின் துணையால்) சாகாவரம் பெற்று நித்தியமானவன் ஆகிவிடுவான் என்றோ சொல்வதெல்லாம் இந்த வகையான மூட நம்பிக்கையில் இருந்து வருவது தான்.

இன்றைய காலகட்டத்தில் யாரும் புனைவாக்கத்தையோ அல்லது வேறெந்த கலை உருவாக்கதையோ பற்றி இப்படிப் பேசுவது இல்லைதான். எனினும் என்னதான் இவ்வளவு மேட்டிமையோடு அது விதியின் வசம் முடிச்சிடப்படவில்லை என்றாலும், புனைவாக்கச் செயல்பாடு என்பது இவ்விதம் தெளிவற்றதாகவே கருதப்படுகிறது: அதாவது முன்தீர்மானிக்கப்பட்ட மூட்டமான ஒரு தோற்றுவாயின் வழியாக குறிப்பிட்ட சில மனிதர்கள் தம் மொத்த வாழ்வையும் புனைவாக்கச் செயல்பாட்டிற்காக ஆனைக்கினங்கியதுபோல மேற்கொள்ளத் துவங்குகின்றனர். ஏனென்றால் இப்படியான செயல்பாட்டினால் தான் அவர்கள் தன் வாழ்க்கையை வீணடித்துவிடோம் என்ற பயமின்றி, தன் ஆகச் சிறந்த சுயத்தை கொடுப்பதன் வழியாக தன்னளவில் திருப்தியடைகின்றனர்.

ஃப்ளாபர்ட்

திறமையையும் திறமையின்மையையும், விறுப்புகளையும் வெறுப்புகளையும் ஒவ்வொருவருக்கும் வினியோகம் செய்யும் ஒரு குறும்புக்கார தெய்வீகத்தினால் கருவிலேயே ஒரு மனிதரின் எதிர்காலம் முன்தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்னும் கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதே போல ஒருவரின் எதிர்காலம் என்பது முழுக்க முழுக்க அவருடை தனித்த விருப்புறுதியின்(free will) வெளிப்பாடு -சுதந்திரமான ஒரு தேர்வு- என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. சார்த்தர் போன்ற பிரெஞ்சு இருத்தலியல்வாதிகள் இப்படி நினைத்தார்கள், நானும்கூட ஆரம்பத்தில் இந்தக் கருத்தில் நம்பிக்கை கொண்டிருந்தேன். இலக்கியத்தை வாழ்க்கையாகக் கொள்வது என்பது விதியினாலோ, மரபணுவிலேயே எழுதப்பட்டது எனறோ நான் நம்பவில்லையென்றாலும், ஒழுக்கமும், விடாப்பிடியான முயற்சியுமே மேதமையை உருவாக்கிவிட முடியும் என்று நான் நம்பினாலும் – சுதந்திரமான விருப்புறுதியைக் கொண்டு மட்டுமே ஒரு மனிதனின் எதிர்காலத்தை வரையறுத்துவிட முடியாது என்று நினைக்கிறேன். சுதந்திரமான விருப்புறுதி அத்தியாவசியமான ஒன்று தான், ஆனால் இலக்கியச் செயல்பாட்டைப் பொருத்தவரை அது இரண்டாம் நிலையிலேயே உள்ளே வருகிறது. முதல் நிலை என்பது ஒருவரின் குழந்தைப் பருவத்திலோ, வளரிளம் பருவத்திலோ உள்ளார்ந்து பொதிந்துவிட்ட அகவயமான விருப்பம் தான். இது நிகழ்ந்தால் மட்டுமே, தர்க்கரீதியான தெரிவு அந்த விழைவை வலுப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். மாறாக தர்க்கரீதியான தெரிவினால் ஆதியிலிருந்து புத்தம்புதிதாக எதையும்  ஒருவருக்குள் உருவாக்க முடியாது.

என்னுடைய இந்த அனுமானம் சரியென்றால் முதலில் ஒரு மனிதர் தன்னுடைய குழந்தைப்பருவத்தில் தான் வாழும் உலகத்தில் இருந்து வேறுபட்ட வகையில்  மனிதர்களை, சூழ்நிலைகளை, உலகங்களை கற்பனை செய்வதில் அளவில்லா விருப்பம் கொள்கிறார். இந்த மனச்சாய்வுதான் பின்னாளில் அவர் இலக்கியத்தை வாழ்க்கையாகக் கொள்வதற்கான முதல் அறிகுறி. அதே நேரம், நிகழுலகத்தில் இருந்து விடுபட்டு கற்பனைக்கு செல்லும் இந்த மனச்சாய்விற்கும், இலக்கியச் செயல்பாட்டில் அசலாக ஈடுபடுவதற்கும் இடையில் உள்ள கருந்துளையை மிகப்பெரும்பாலானவர்கள் கடப்பதே இல்லை. இது இயல்பானதும் கூட. உண்மையில் இந்த இடைவெளியைக் கடந்து வார்த்தைகளின் மூலம் உலகங்களை உருவாக்குபவர்களே எழுத்தாளர்களாகின்றனர். இந்த சிறுபாண்மையினர்தான் சார்த்தர் குறிப்பிடுவதுபோல தங்கள் ஆன்மாவின் சுதந்திரமான விருப்பத்தை ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தேர்வு செய்து அதை வலுவாக செயல்படுத்துகின்றனர். அவர்கள் தம் கற்பனையில் ரகசியமான உலகங்களளை உருவாக்குவதில் ஆரம்பத்தில் திருப்தியடைந்திருந்தாலும், ஒரு கட்டத்தில் அதன் உந்துசக்தியால் எழுதுவதற்கான முக்கியத்துவத்தை கண்டடைந்து அதற்கு தகுந்தார்போல தங்கள் வாழ்க்கையை அடுக்கிக் கொள்கிறார்கள். இந்த கடினமான, சிலிர்ப்பூட்டும் இடத்தில்தான் நீங்கள் தற்சமயம் இருக்கிறீர்கள்.  உங்களை நீங்களே ஆச்சரியப்படுத்திக்கொள்ளும், கற்பனையில் காணும் விஷயங்களில் இருந்து தாண்டிச் செல்லப் போகிறீர்களா, அவற்றை எழுத்தில் கொண்டுவரப் போகிறீர்களா என்று நீங்கள் இப்போது முடிவு செய்ய வேண்டியுள்ளது. அப்படி புனைவாக்கத்தை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஒரு முக்கியமான அடியை எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று சொல்வேன். இதன்மூலம் எதிர்காலத்தில் நீங்கள் எழுத்தாளர் ஆகிவிடுவீர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனினும் இலக்கியத்திற்கு ஒப்புக்கொடுக்கவும், அதில் நீங்கள் விரும்பியதை நிகழ்த்தவேண்டி உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் முடிவுசெய்வதுதான் எழுத்தாளராக உங்கள் முன் இருக்கும் ஒரே வழி.

இலக்கிய ஆர்வத்திற்கான, கதைகளையும் உலகங்களையும் கற்பனை செய்வதற்கான இந்த மனச்சாய்வின் ஊற்றுக்கண் எது? ஒத்துழையாமை என்று எனக்குத் தோன்றுகிறது. தன் வாழ்வில் இருந்து வேறுபட்ட ஒரு கனவுலகிற்கு சஞ்சரிப்பவர் மறைமுகமாக வெளிப்படுத்துவது எது? முதன்மையாக தன் வாழ்க்கையின் மீதான விமர்சனத்தையும் எதிர்ப்பையும் தான். கூடுதலாக இவற்றை தங்கள் கற்பனையின் மூலம் பதிலீடு செய்வதற்கான விழைவவையும் அவர் சேர்த்தே வெளிப்படுத்துகிறார். அப்படி இல்லாமல் நடைமுறையில் திருப்தியடைந்த ஒருவர் எதற்காக எந்த பிரயோஜனமும் இல்லாத, ஆடம்பரமான கனவுலகில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளப் போகிறார்? அதுபோல வாழ்க்கையை அவ்வாறே எடுத்துக் கொள்ள உடன்படாத ஒருவர், எந்த காரணத்தை முன்னிட்டும் வேறுவேறு வாழ்வுகளையும், மனிதர்களையும் தன் திறமையைக்கொண்டு உருவாக்கலாம். அது மதிப்பிற்காவோ, அவமரியாதைக்காகவோ, பெருந்தன்மைக்காகவோ, சுயநலத்திற்காகவோ, அல்லது புரிந்துகொள்ள சிக்கலான ஏதோ ஒன்றிற்காகவோ அல்லது சும்மாகவேனும் அவர் அப்படிச் செய்யலாம். காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏனெனில் என்னைப் பொறுத்தவரை இலக்கியத்தை நோக்கி இழுக்கும் இந்த விசை எந்த மாதிரியான பண்புடையது என்பது முக்கியமில்லை. மாறாக இங்கு முக்கியமனது எதுவென்றால் இந்த பண்பு காற்றாலைகளை வளைக்கும் அளவிற்கான வலுவை அவரில் உருவாக்குகிறதா என்பது தான்.  அதாவது இறுகி கெட்டிப்பட்டு போன புறவயமான இந்த உலக வாழ்க்கையை தம் கைநேர்த்தியால், நுட்பமாக, குறைந்தகாலமே நீடிக்கக் கூடிய ஒரு புனைவு வாழ்க்கையாக மாற்றிவைப்பதற்கான வலிமை அவருக்கு இருக்க வேண்டும்.

அதுபோல அருவமான இந்த புனைவுலக வாழ்க்கை மிகக் குறுகியகாலமே நீடிப்பதாக இருந்தாலும், அதை உண்டாக்குபவரின் தனிவாழ்க்கையை, அகநிலையைச் சார்ந்து இருந்தாலும், ரத்தமும் சதையுமான மனிதர்களின் அசல் வாழ்க்கையின் மேல் அது நீண்ட-கால விளைவை ஏற்படுத்தவே செய்கிறது.

அன்றாட வாழ்க்கையை கேள்விக்குட்படுத்தும், இலக்கியச் செயல்பாட்டை தழைக்கவைக்கும் இந்த ரகசிய காரணமானது இலக்கியத்திற்கு அந்தந்த காலகட்டத்திற்கான தனித்துவமான ஒரு பார்வையை வழங்கச் செய்கிறது. புனைவில் விவரிக்கப்பட்ட வாழ்க்கை என்பது அதை கற்பனை செய்தவர்கள் வாழ்ந்ததோ, வாசித்ததோ, அனுபவித்ததோ கிடையாது. மாறாக அது அவர்களால் வாழ முடியாததால் பின்னப்பட்ட கற்பனையாக வாழ்க்கை. ஆழமான உண்மையை வெளித்தோற்றத்திற்கு புலப்படாமல் மறைத்துவைத்திருக்கும் பொய் தான் புனைவு. அது வரலாற்றின் வெளிப்பாடு இல்லை, மாறாக அதற்கு நேர் எதிரான ஒன்று. அது நடைபெறாதவற்றின் கற்பனை வடிவம், நடைமுறை வாழ்க்கையால் திருப்தி செய்ய முடியாத லட்சியங்களின் எழுத்து வடிவம். ஆண்களும் பெண்களும் தம்மைச் சுற்றி சூழ்ந்திருக்கும் வெறுமையைக் கண்டுபிடித்து, அதை நிரப்புவதற்காக தாங்களே உருவாக்கிக்கொண்ட பேய்கள் தான் புனைவு. 

அதுபோல இந்த கலகத்தன்மை என்பது வெளிப்படையானது இல்லை. பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இந்த தன்னுணர்வே இருப்பதில்லை. தங்கள் எழுத்திற்கு வேர் இதுதான் என்று அறிந்தால் அவர்கள் பெரிதும் ஆச்சரியத்திற்கு உள்ளாவார்கள். ஏனினில் அவர்கள் பொதுவாழ்வில் எந்த கலகத்தையும் எதிர்ப்பையும் வெளிக்காட்டுவதில்லை. அவர்களுடைய கலகம் என்பது முழுக்க முழுக்க அமைதியான வழியின் பாற்பட்டது. ரத்தமும் சதையுமான வாழ்க்கைக்கு எதிராக, ஆவியாக மறைந்துபோகும் புனைவு வாழ்க்கையை உருவாக்குவதில் என்ன தீங்கு இருக்கப் போகிறது? இதிலென்ன ஆபத்து இருக்கிறது? முதல் பார்வைக்கு அப்படி எதுவும் இல்லாதது போலத் தோன்றும். அதாவது வெறும் விளையாட்டு போல. நடைமுறை வாழ்க்கையின் எல்லைக்குள் வாராத வரை விளையாட்டு என்பது ஆபத்தில்லாததாகத் தானே இருக்க வேண்டும்? ஆனால் டான் குவிசாட்டை எழுதிய செர்வான்டஸும்(Cervantes), மேடம் போவரியை எழுதிய ஃப்ளாபர்ட்டும்(Flaubert) தங்கள் நடைமுறை வாழ்க்கையை தங்களின் புனைவு வாழ்க்கையைபோல அமைத்துக் கொள்ள முயன்றதன் விளைவாக தாளமுடியாத அல்லல்களைச் சந்தித்தனர். அதனால் புனைவை இந்தவிதத்தில் எதிர்கொள்ளும் ஒரு எழுத்தாளர் பெரும் ஏமாற்றதிற்கு உள்ளாவார் என்பது நிச்சயம்.

செர்வான்டஸ்

புனைவாக்கச் செயல்பாடு என்னும் விளையாட்டு உண்மையில் சாதுவானது அல்ல. புனைவு திருப்தியின்மையின் விளைகனியான இருந்தாலும், அது தன்னளவில் அசௌகர்யத்தை தோற்றுவிப்பது. நான் மேலே குறிப்பிட்டதைப் போன்ற ஒரு நாவலைப் படிக்கும் ஒரு வாசகர் அந்த வாசிப்பின் வழியாக ஒரு மகத்தான வாழ்க்கையை வாழ்கிறார். அவ்விதம் வாழ்ந்தபடியால் அவருடைய உணர்திறன் பலமடங்கு கூர்மையடைந்து, அதே நிலையில் குறைபாடுகள் நிறைந்த, எல்லைக்குட்பட்ட தன் அன்றாட வாழ்க்கைக்கு திரும்புகிறார். நாவலாசிரியர் புனைந்த வாழ்க்கையோடு ஒப்பிடும்போது தம் அன்றாட வாழ்க்கை எவ்வளவு சாதாரணமாகவும் தட்டையானதாகவும் இருக்கிறது என்ற உண்மை அப்போது அவர் முகத்தில் வந்து அறைகிறது. அசலான இலக்கியம் ஏற்படுத்தக்கூடிய இந்த அசௌகரியத்தின் விளைவாக அவர் சில நேரங்களில் தம்மையறியாமல் அமைப்புகளை, அதிகாரத்தை, தன் வாழ்க்கைச் சூழலில் நிலவும் மூடநம்பிக்கைகளை எதிர்க்கத் தலைபடுகிறார்.

இதனால் தான் ஸ்பானிய காலனிய அரசாங்கம்(Spanish Inquisition) புனைவு இலக்கியங்ககளை மிகக் கறாராக தணிக்கை செய்தது.  அவற்றை அமெரிக்க காலனிகளில் சுமார் முன்னூறு ஆண்டுகள் தடை செய்தும் வைத்திருந்தது. புனைவு வாசிப்பானது கடவுள் நம்பிக்கைகளில் இருந்தும், வழிபாட்டில் இருந்தும் மக்களை நீக்கிவிடும் என்ற மத அடிப்படைவாத அரசுக்கே உரிய தீவிரமான அச்சம் காரணமாக அது அப்படிச் செய்தது. காலனியாதிக்கத்தை போல, மக்களின் வாழ்க்கையை தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முனையும் எந்த அரசாங்கமும் இவ்விதம் புனைவின் மீது அதிதீவிரமான கண்காணிப்பும் தணிக்கையும் கொண்டிருக்கும். அப்பாவித்தனமாக தெரியும் இலக்கியச் செயல்பாடு என்பது ஒருவகையில் தம்மைக் கட்டுப்படுத்தும் தளைகளில் இருந்து விடுவித்துக்கொள்ளும் சுதந்திரத்தின் செயல்வடிவம் தான். இதன் காரணமாகத்தான் எல்லா அடிப்படைவாதிகளும், சர்வாதிகாரிகளும் தொடர்ந்து புனைவை கட்டுக்குள் வைக்க முயல்கின்றனர்.

மன்னிக்கவும், எடுத்துக்கொண்ட விஷயத்தில் இருந்து கொஞ்சம் விலகிச் சென்றுவிட்டேன். உங்கள் ஆழத்தில் ஒரு வலுவான விழைவு தோன்றி அந்த விருப்புறுதியைச் செயலாக்கும் பொருட்டு  இலக்கியத்திற்கு உங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்க முன்வந்திருக்கிறீர்கள். அதற்கு அடுத்து என்ன?

உங்கள் விழைவு அடிமைத்தனத்திற்கு சற்றும் குறையாத ஒரு வாழ்க்கைக்கே உங்களை கொண்டுசெல்லும். இன்னும் விளக்க வேண்டுமென்றால் தம் உடல் எடையில் கவலை கொண்ட பத்தொன்பதாம் நூற்றாண்டின் மகளிர், மெலிதான வடிவழகை தக்கவைக்கும் பொருட்டு செய்த ஒன்றையே நீங்களும் செய்திருக்கிறீர்கள்: ஒரு நாடாப் புழுவை விழுங்கியிருக்கிறீர்கள். இந்த மோசமான ஒட்டுயிரியை தம் குடலுக்குள் அடைக்கலம் கொடுத்து வளர்த்த யாரையாவது நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? அம்மாதிரியானவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களெல்லாம் அழகுக்கு தன் வாழ்வை அர்ப்பணித்த நடிகைகள், செல்வசீமாட்டிகள். அறுபதுகளில் பாரீசில் வாழ்ந்த என் நெருங்கிய நண்பர் ஜோஸ் மரியா ஒரு ஸ்பானிய இளம் ஓவியர், திரைப்பட இயக்குனர். அப்போது அவர் இந்த ஒட்டுயிரியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தார். இந்த நாடாப்புழு ஒரு உயிரினத்திற்குள் சென்றுவிட்டால் அந்த உயிரினத்தோடு ஒன்றாகக் கலந்து அதிலிருந்து தனக்குத் தேவையான எல்லா உணவையும் உரிஞ்சி எடுத்துக்கொண்டு செழித்து வளர ஆரம்பிக்கிறது. அப்புழு அந்த உடலை சிறைபிடித்துவிடுகிறது என்றே சொல்லலாம். அதன் பிறகு அதை உடலில் இருந்து வெளியேற்றுவது மிகக்கடினம். இதனால் ஜோஸ் மரியா அபரிதமாக உணவு உட்கொள்ள வேண்டியிருந்தாலும் தொடர்ந்து மெலிந்தபடியே இருந்தர். அப்படி அதன் பசிக்கு தொடர்ந்து உணவளிக்காமல் போகும்பட்சத்தில் அவர் தாங்கவியலா உடலுபாதைக்கு ஆளானார். அவர் புசித்ததும், பருகியதும் அந்த புழுவின் ஆதாயத்திற்காக மட்டுமே. ஒருமுறை பாரில் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் இப்படிச் சொன்னார்: “நாம் இருவரும் சேர்ந்து எவ்வளவோ செய்கிறோம். நாடகங்கள் பார்க்கிறோம், அருங்காட்சியங்களுக்கும், புத்தகக் கடைகளுக்கும்  செல்கிறோம். புத்தகங்கள், சினிமா, அரசியல், நண்பர்கள் என்று பலமணி நேரம் உரையாடுகிறோம். இதையெல்லாம் உன்னைப் போலவே நானும் என் மகிழ்ச்சிக்காக செய்கிறேன் என்று நீ நினைக்கலாம். ஆனால் அது தவறு. நான் இது எல்லாவற்றையும்  நாடாப்புழுவிற்காக மட்டும்தான் செய்கிறேன். என் மொத்த வாழ்க்கையும் நான் எனக்காக வாழவில்லை, எனக்குள் குடிகொண்டிருக்கும் அந்த ஒன்றிற்காகவே செய்கிறேன். நான் அதன் வேலையாள் என்பதைத் தாண்டி வேறெதுவும் இல்லை.”

ஒரு எழுத்தாளரின் வாழ்க்கையை தம் உடலில் நாடாப்புழுவை தேக்கிவைத்திருந்த என் நண்பர் ஜோஸ் மரியாவின் வாழ்க்கையோடு ஒப்பிடவே விரும்புகிறேன். இலக்கியத்தை கைக்கொள்வது என்பது விளையாட்டோ, பொழுதுபோக்கோ அல்ல. அதைத் தவிர பிற எல்லாவற்றையும் அது விலக்கும். எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிவிடும். எப்போதும் அதற்கு அவசரமான முன்னுரிமை கொடுக்கவேண்டியிருக்கும். அது ஒருவகையில் எழுத்தாளர் தன் விருப்புறுதியால் சுதந்திரமாக தெரிவு செய்கிற ஒரு சிறைவாசம். அது தன் இரையை(இந்த இரைகள் அதிர்ஷ்டசாலிகள்) அடிமைகளாகவே மாற்றியமைக்கிறது. ஜோஸ் மரியாவின் நாடப்புழுவைப் போல இலக்கியம் அதைத் தேர்வுசெய்யும் ஒருவரின் நிரந்தரமான அங்கமாகிறது. அவரின் மொத்த இருப்பையும் மிச்சமில்லாமல் கைப்பற்றிக்கொள்கிறது. நீங்கள் அதற்காக செலவிடும் நேரம் என்பது அதிகரித்த வண்ணம் இருப்பது. அதோடு நீங்கள் செய்யும் பிற எல்லாவற்றிற்குள்ளும் அது இயல்பாக கசிந்துவிடுகிறது. நாடாப்புழு அது வாழும் உயிரினத்தை உண்டு வளர்வதுபோல புனைவாக்கச் செயல்பாடு எழுத்தாளரின் வாழ்க்கையை உண்டு வளர்கிறது. ஃப்ளாபர்ட் சொல்வது போல ‘எழுதுவது என்பது வாழ்வதற்கான இன்னொரு வழி’ தான். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால் இந்த பணியை மேற்கொள்பவர்கள் எழுதுவதற்காக வாழ்வதில்லை. அவர்கள் உயிர் வாழ்வதே எழுதுவதற்காகத்தான்.

எழுத்தாளரின் படைப்பூக்கப் பணியை ஒரு நாடாப்புழுவோடு ஒப்பிடுவது புதிய விஷயமல்ல. அமெரிக்க எழுத்தாளர் தாமஸ் உல்ஃப் தன் புனைவாக்கப் பணியை ஒரு புழுவுக்கு புகலிடம் கொடுப்பதோடு ஒப்பிட்டு எழுதியிருப்பதை சமீபத்தில் வாசித்தேன்.

ஒரு மதத்திற்குள் நுழைவதைப் போல இலக்கியத்திற்காக தம் ஒட்டுமொத்த ஆற்றலையும், நேரத்தையும், உழைப்பையும் கொடுப்பதற்கு தயாராக இருப்பவர்கள் தான் உண்மையில் ஒரு எழுத்தாளர் ஆவதற்கான தகுதியை அடைகின்றனர். அத்தகையவர்களால் மட்டும்தான் தங்கள் படைப்பின் வழியாக காலத்தை கடந்து நிற்க முடியும். புத்திசாலித்தனம், திறமை போன்ற மர்மமான விஷயங்கள் பூரணமான நிலையில் நேரடியாக ஒருவரின் வாழ்க்கையை வந்தடைந்து விடுவதில்லை. குறைந்தபட்சம் எழுத்தாளர்களைப் பொறுத்தவரை அப்படியில்லை. இசைக்கலைஞர்களிலும், கவிஞர்களிலும் வேண்டுமானால் அப்படியான சில விதிவிலக்குகள் இருக்கலாம். (ரிம்பார்ட் அல்லது மொசார்ட் போல). எனினும் பல ஆண்டுகால விடாப்பிடியான, ஒழுக்கமான உழைப்பிற்கு பின்னர் தான் அது ஒருவரை வந்தடைகிறது. எழுதத் துவங்கியதுமே சீரிய நாவல்களை எழுதிவிடும் அதிமேதாவித்தனமான எழுத்தாளர் என ஒருவரும் இல்லை. எல்லா மகத்தான நாவலாசிரியர்களும் துவக்கத்தில் பயிற்சி எழுத்தாளர்களாக இருந்தவர்களே. அவர்களிடத்தில் அரும்பிய திறமை வளர்ச்சியடைய அவர்களுக்கு நீடித்த பயிற்சியும், செயலாக்கமும் இன்றியமையாததாக இருந்திருக்கிறது. மகத்தான எழுத்தாளர்கள் எல்லோரும் தங்கள் திறமையை பயின்று மேம்படுத்த வேண்டியிருந்தது என்பது எழுத ஆரம்பிப்பவர்களுக்கு உண்மையில் மிகுந்த தன்னம்பிக்கையும் மனநிறைவும் அளிக்கும் விஷயம் இல்லையா?

இலக்கியத் தேர்ச்சியை பயின்று அடைவதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆர்வமிருப்பின் உங்களுக்கு இரண்டு நூல்களை பரிந்துரைப்பேன். முதலாவது ஃப்ளாபர்ட் தன் காதலிக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. அந்த காலகட்டத்தில் தான் அவர் தன்னுடைய மிகச் சிறந்த படைப்பான மேடம் போவரியை எழுதினார். என்னுடைய முதல் நூலை எழுதிக் கொண்டிருந்த போது இதை நான் வாசித்தேன். அச்சமயம் இந்நூல் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. இரண்டாவது ஆக்கம் வில்லியம் பரோஸ் எழுதிய ஜன்கி(Junky). அவர் எழுதிய நாவல்கள் எதுவும் என்னை வசீகரித்ததில்லை, எனினும் சுயசரிதை வடிவிலான அவருடைய இந்த முதல் நூல் அவர் எப்படி போதைப்பழக்கதிற்கு அடிமையாக இருந்து, அதிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு இலக்கியத்திற்கு திரும்பினார் என்று விவரிக்கிறது. இலக்கியச் செயல்பாடு எப்படி ஒரு எழுத்தாளரின் வாழ்க்கையை மொத்தமாகக் கைக்கொள்கிறது என்றும் அது அவர் வாழ்வின் பிற விஷயங்களில் எவ்விதம் ஊடுருவுகிறது என்றும் இந்த நூலின் வழியாக நீங்கள் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஆனால், நண்பரே என்னுடைய இந்தக் கடிதம் நான் உத்தேசித்த அளவை விட சற்று நீண்டுவிட்டது. எனவே நான் இந்த இடத்தில் நிறுத்திக் கொள்கிறேன்.

அன்புடன்,
மரியோ வர்கோஸ் யோஸா.

ஜனார்த்தனன் இளங்கோ

ஜனார்த்தனன் இளங்கோ, மென்பொருள் பொறியியலாளர். சொந்த ஊர் திருவாரூரைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி. இலக்கியம் தவிர தத்துவம், கட்டிடக்கலை, பறவையியல் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு.

உரையாடலுக்கு

Your email address will not be published.