இசை கவிதைகள்

கார் எனில் மயில்

“மயில் தோக விரிச்சு நிக்குது”
என்றாள்.

“மயிலா…. எங்கே… ?”
என்றேன்
திகைத்தபடி.

“எங்கும் “
என்றாள்
சிரித்தபடி.

OOO

இதில் மறைஞானம் ஒன்றுமில்லை தம்பி!

நான் பிறக்கும் போதே
பாதி மின்னலோடு பிறந்தேன்
மின்னும் எதனுடனும்
சட்டெனப் பின்னிக் கொள்கிறது
என் மின்னல்

நீ பிறக்கும் போதே
பாதி மலரொடு பிறந்தாய்
மலரைக் காண்கையில்
அவிழ்வது அதுதான்

அவள் கொஞ்சம்
அந்திப் பொன்
அந்தி அந்தியில் கரைந்து கொண்டிருக்கிறது

அவனே எண்ணிக் கொண்டிருக்கும்படி
அப்படியில்லை அவன்
கண்ணீர்தான் கண்ணீரை
அணைத்துக் கொள்கிறது

இரண்டு பாதிகள்
வட்டம் காணும் திருநாளில்
வந்து நிற்கிறது
பெளர்ணமி

OOO

களம் பல கண்டவரின் கடைசிச் சொற்கள்

அவர் வீட்டிலிருந்து கிளம்புகையில்
இனி யோசிக்க ஒன்றுமில்லை
என்கிற முடிவுக்கு வந்திருந்தார்

ஆனால்
வழியெங்கும் யோசித்துக் கொண்டே வந்தார்

அந்தப் பாலத்தின் மீது நின்று கொண்டு
மேலும்
ஒரு மணி நேரம்
தீவிரமாக யோசித்தார்.

இனி யோசிக்க ஒன்றுமில்லை
என்பது உறுதியானவுடன்
“ கடைசியில் எல்லாம்
சாதாரணக் காதல்கதைகள் தானா?” என்று
குனிந்தவாக்கில்
ஏரித் தண்ணீரை நோக்கிக் கேட்டார்.
பிறகு
அவ்வளவு உயரத்திலிருந்து
அதற்குள் பாய்ந்தார்.

“ கடைசியில் எல்லாம் சாதாரணக் காதல் கதைகள்தான்”
என்று சொல்லியிருக்கலாம்.

இப்போது பாருங்கள்….
நாம் திரும்பவும்
முதலிருந்து யோசிக்க வேண்டியிருக்கிறது.

OOO

ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை

நீ
தலைகுனிந்து வணங்குகையில்
சுடர்
விளக்கிலிருந்து
உன் கன்னங்களுக்குத் தாவுகிறது.

தீ இனிது;
கன்னங்கள் இனியன;
உயிர் சுவையுடையது;

தீ நின்று எரியட்டும்!

தீயை வாழ்த்துகிறோம்!
கன்னங்களைப் புகழ்கிறோம்!

கன்னங்களில் எரிகிற தீயே !
உன்னைத் தொழுகிறோம்.

OOO

டிவி பார்க்கையில் ஆழமாக சிந்தித்தல் தீங்கு விளைவிக்கும்

இரண்டு நாட்களாக  வானம்
மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில்
மாலையிலிருந்து மழை விட்டுவிட்டு
பெய்யத் துவங்கலாம்.

எப்போது விடும்
எப்போது பெய்யும்
என்பதைச்  சொல்ல முடியாது
எங்கு பெய்யும், எங்கு விடும் என்பதையும்

சில இடங்களில் மிதமான மழையும்
சில இடங்களில் கன மழையும்
சிலதில் அதி கன மழையும்
ஓரிரு இடங்களில்
மிக அதி கனமழையும் கொட்டக் கூடும்

தாழ்வான பகுதிகளில். வசிப்போர் பத்திரமான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மண் சரிவு காரணமாக
சாலையில் திடீர் பள்ளங்கள் உருவாக
வாய்ப்புண்டு

புயல் காரணமாக
மரங்கள் அடியோடு சாய வாய்ப்புண்டு
மேலும்
மரத்தடியில் நின்றால்
மின்னல் தாக்கவும் வாய்ப்புண்டு.

மேக வெடிப்பும் நிகழலாம் என்று நம்பப்படுகிறது

மின் கம்பிகள் பற்றி எரியும்
அறுந்து விழும்

உணவுப் பொட்டலங்கள் தயார் நிலையில் உள்ளன
ஹெலிகாப்டர்கள் பழுதானால் உடனடியாக சரி செய்யப்படும்

எதுவெல்லாம் நிகழ வாய்ப்பிருக்கிறதோ,
அதுவெல்லாம் நிகழ் வாய்ப்புண்டு

ச்சீ, என்ன இது குழந்தை மாதிரி…
வானிலை அறிக்கைக்குப் போய்
யாராவது அழுவார்களா செல்லமே?

இசை

கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.

நன்றி : தமிழ் விக்கி

உரையாடலுக்கு

Your email address will not be published.