/

நான் வீட்டிலிருந்து பணி புரிகிறேன் : காலின் நிஸான்

Courtesy : The Newyorker


(காலின் நிஸான் ஒரு நகைச்சுவை எழுத்தாளர். இது நியுயார்க்கரில் வெளிவந்த அவருடைய ஒரு பகடி நாடகத்தின் மொழிபெயர்ப்பு. வீட்டிலிருந்து பணி புரிவது (Work From Home) பற்றியது)

அவசர சேவை உதவியாளர்: சொல்லுங்கள். என்ன அவசர உதவி தேவை?

ராபர்ட்: வணக்கம். அது வந்து… நான் வீட்டிலிருந்து பணி புரிகிறேன்.

உதவியாளர்: ஒகே சார். உங்களோடு வேறு யாரும் இருக்கிறார்களா?

ராபர்ட்: இல்லை. நான் தனியாகத்தான் இருக்கிறேன்.

உதவியாளர்: (வலுவாக மூச்சை இழுக்கிறார்) நீங்கள் கடைசியாக இன்னொரு மனிதரை பார்த்தது எப்போது?

ராபர்ட்: என் மனைவி. இன்று காலையில் பார்த்த மாதிரி ஞாபகம்.

உதவியாளர்: ஒகே. நாம் முதலில் திரைச்சீலையை சற்று திறந்து வைப்போம். சரியா? கொஞ்சம் வெளிச்சத்தை அனுமதிக்கலாமா?

ராபர்ட்: எவ்வளவு வெளிச்சம்?

உதவியாளர்: கொஞ்சம் இருந்தாலும் போதும்.

ராபர்ட்: ஒகே (திரைச்சீலையை இழுக்கும் ஓசை கேட்கிறது). திறந்துவிட்டேன். (ஓர் இடைவெளி). அட, பிரகாசமாக இருக்கிறது. என் முகத்தில் அதை பிரகாசமாக உணர முடிகிறது.

உதவியாளர்: நல்ல விஷயம். அது அப்படி இருப்பதுதான் வழக்கம். (ஓர் இடைவெளி). நீங்கள் இப்போது என்ன ஆடை அணிந்திருக்கிறீர்கள் என்பதை எனக்கு தெரிவிக்க வேண்டும். சரியா?

ராபர்ட்: அது வந்து… சாதாரண உடைகள்தான்.

உதவியாளர்: வெளியே போகும்போது அணியக்கூடியவையா அல்லது வீட்டுக்குள் அணிகிற உடைகளா?

ராபர்ட்: ஓ.. இருங்கள். பார்த்து சொல்கிறேன். (ஓர் இடைவெளி). பைஜாமாக்கள். நான் பைஜாமாக்கள் அணிந்திருக்கிறேன். என்ன இது? எப்போதோ வழக்கமான உடைகளுக்கு மாறியிருந்தேனே. என்னால் சத்தியம்கூட செய்ய முடியும்… நான் இதை ஜீன்ஸ் பேண்ட் என்று நினைத்திருந்தேன்.

உதவியாளர்: பரவாயில்லை சார். ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்.

ராபர்ட்: கொஞ்சம் இருங்கள். இது சட்டைக்கூட அல்ல. இது வெறும் என் உடம்பு! அடக் கொடுமையே!

உதவியாளர்: நீங்கள் இன்று குளிக்கவில்லை என்று கருதிக் கொள்ளலாமா?

ராபர்ட்: எனக்கு தெரியவில்லை

உதவியாளர்: சரி. நீங்கள் குளியலறைக்கு சென்று உங்கள் துண்டு ஈரமாக இருக்கிறதா என்று பார்த்து வர வேண்டும். சரியா? எனக்காக இதை செய்ய முடியுமா?

ராபர்ட்: சரி.

உதவியாளர்: ஒகே. சிறப்பு.

ராபர்ட்: ஆம், நான் அங்குதான் நடந்து செல்கிறேன். ஒகே. அங்கே வந்துவிட்டேன். என் குளியலறையில் இருக்கிறேன். என் துண்டை பார்க்க முடிகிறது… அதில் ஈரமில்லை. அது காய்ந்த துண்டு.

உதவியாளர்: ஒகே (ம்,ம்ம்,ம்ம்). சரி ஒகே. உங்கள் பெயர் என்ன, சார்?

ராபர்ட்: ராபர்ட் (அடக்கப்பட்ட அழுகையின் ஓசை)

உதவியாளர்: ராபர்ட், என் பெயர் செரிஸ்.

ராபார்: ஹாய் செரிஸ்.

உதவியாளர்: இன்று தொலைபேசியில் அழைத்ததன் மூலம் ஒரு சரியான செயலை செய்திருக்கிறீர்கள், ராபர்ட் (ராபர்ட் லேசாக கேவும் ஓசை). உங்களுக்கு உதவி செய்ய சிலரை சீக்கிரமே அங்கு அனுப்ப போகிறேன். சரியா?இப்போது ஒரு விஷயம். இன்று நீங்கள் ஏதாவது உணவருந்தினீர்களா ராபர்ட்?

ராபர்ட்: என் வாயில் எதையாவது போட்டு நிறைத்துக் கொண்டே இருக்கிறேன்.

உதவியாளர்: இப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா ராபர்ட்? ( மொறுமொறுவென்று ராபர்ட் எதையோ மென்று சவிக்கும் ஓசை). சரி. இன்று நீங்கள் என்ன உணவு உட்கொண்டீர்கள் என்று எனக்கு சொல்ல முடியுமா?

ராபர்ட்: எனக்கு சரியாக தெரியவில்லை. என் மனைவி வேலைக்கு கிளம்பியபோது பிரேக்பாஸ்ட் சாப்பிட்டு ஆரம்பித்தேன். அவள் கிளம்பியதும் ஒரு கிண்ணத்தில் சீரியல் எடுத்ததாக ஞாபகம்.

உதவியாளர்: அது மட்டும்தானா?

ராபர்ட்: அப்புறம் ஒரு மணி நேரம் கழித்தோ அல்லது சற்று பிந்தியோ… ஒரு வாழைப்பழம் சாப்பிட்டேன். வேர்க்கடலை வெண்ணையுடன் சேர்த்து.

உதவியாளர்: வாழைப்பழத்தை வெட்டி துண்டுகளாக்கி கிண்ணத்தில் சாப்பிட்டீர்களா?

ராபர்ட்: இல்லை. அதுதான் யாரும் பார்க்கவில்லையே என்று, நேராக அதை வெண்ணை ஜாடியில் முக்கி சாப்பிட்டேன். (மூச்சுக்குள் பேசுகிறார்). யாருமே பார்ப்பதில்லை.

உதவியாளர்: பிறகு மதிய உணவு சாப்பிட்டீர்களா அல்லது அதுதான் மதிய உணவேவா?

ராபர்ட்: (ஓர் இடைவெளி). இறைச்சி சாப்பிட்ட ஞாபகம் இருக்கிறது. நிறைய இறைச்சி.

உதவியாளர்: இறைச்சி சான்விச் செய்தா?

ராபர்ட்: இல்லை. சான்விச் எல்லாம் இல்லை. வெறும் இறைச்சி துண்டுகள்.

உதவியாளர்: பரவாயில்லை. இன்று ஏதாவது அலுவலக வேலை செய்து முடித்தீர்களா?

ராபர்ட்: தெரியவில்லை. இன்று ஒரு சந்திப்புக்காக ஆவணத்தை தயாரிக்க வேண்டியிருந்தது. நான்.. நான் அதை செய்ய ஆரம்பித்தேன். ஆவணத்தை தயாரிக்க ஆரம்பித்தேன்.

உதவியாளர்: பின்னர் அதை நிறுத்திவிட்டீர்கள். அப்படிதானே?

ராபர்ட்: நான் செய்வதற்கென்றே இணையம் நிறைய மகிழ்ச்சியான விஷயங்களை வைத்திருக்கிறது. எனவே.. எனவே அவற்றை செய்தேன்.

உதவியாளர்: என்ன மாதிரியான விஷயங்கள்?

ராபர்ட்: கீரிப்பூனைகளை பற்றி ஒரு வீடியோ பார்த்தேன்.

உதவியாளர்: ஆவணப்படமா?

ராபர்ட்: ஆமாம். (ஓர் இடைவெளி). அப்புறம் அது என்னை அப்படியே.. அப்படியே வேறு வீடியோக்களுக்கு கொண்டுச் சென்றது.அவை… அவை ஆவணப்படங்கள் அல்ல. வேறு வீடியோக்கள்.

உதவியாளர்: ஒகே. அப்படியென்றால் நீங்கள் போர்னோ படங்கள் பார்க்க ஆரம்பித்தீர்கள் இல்லையா?

ராபர்ட்: ஆமாம்.

உதவியாளர்: கீரிப்பூனைகளிலிருந்து நேரடியாக போர்னோவுக்கு போய்விட்டீர்களா?

ராபர்ட்: ஆமாம். அது சரிதான்.

உதவியாளர்: (ஓர் இடைவெளி). அப்புறம் எவ்வளவு நேரம் வீடியோக்கள் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்?

ராபர்ட்: அது ஒரு பொருட்டல்ல. ஏனென்றால் இப்போது நானே எனக்கான அட்டவணையை உருவாக்கிக் கொள்ளலாம். தெரியுமா? (பலமாக விக்கி விக்கி அழும் ஓசைகள்)

உதவியாளர்: ராபர்ட்? ஒகே, ராபர்ட்… நீங்கள் இப்போது என்னுடன் இணைப்பில் இருக்க வேண்டும் ராபர்ட். சரியா? ஒன்றும் சிக்கல் இல்லை. அவசர சேவை பணியாளர்கள் விரைவில் அங்கு வந்துவிடுவார்கள். அவர்கள் அலுவலகத்துக்கான ஆவணத்தை நீங்கள் தயாரிக்க உதவுவார்கள். உங்களை குளிக்க வைத்து ஆடை மாற்ற வைத்து தயார் செய்வார்கள்.

ராபர்ட்: நன்றி

உதவியாளர்: ஆனால், அவர்கள் வரும்வரை எதுவும் கொரிக்கக் கூடாது. எந்த கீரிப்பூனைகள் வீடியோவும் பார்க்கக் கூடாது. வேறு வீடியோக்களும் கூடாது. சரியா?

ராபர்ட்: நான் வீட்டிலிருந்து பணி புரிகிறேன்.

உதவியாளர்: உஷ்-உஷ்… எனக்கு தெரியும், ராபர்ட்… எனக்கு தெரியும். ( எதையோ கொரித்து மெல்லும் ஓசை. பின்னனியில் ஆம்புலன்ஸ் சைரன் சத்தம்).

உதவியாளர்: நீங்கள் எதையாவது கொரித்துக் கொண்டிருக்கிறீர்களா?

உரையாடலுக்கு

Your email address will not be published.