1) உள்வாங்குதல்
உன் உலகைப் புரட்டி போடும்
பேரதிர்ச்சியான செய்தி ஒன்றை
நீ அறிந்து கொள்கையில்
உன் புழக்கடையில்
ஆர்ப்பரிக்கும் அலைகளுடன்
கரை மோதிக் கொண்டிருந்த
கடலொன்று திடீரென பல காத தூரம்
உள்வாங்கி கொள்கிறது.
அவ்வளவு ஆழமாக நீளமாக அகலமாக
அகோரமாக வாய் பிளந்து கிடக்கும்
புதை பள்ளத்தின் முன் – முழுவதுமாய்
ஸ்தம்பித்து மூச்சடைத்து நிற்கிறாய்.
மேனியெங்கும் ஏறத் துவங்கும்
நூற்றுக்கணக்கான விஷ எறும்புகள்
உன் விழிகளை அடைந்து
பார்வையை மறைக்கும் முன்
மூர்ச்சித்து விழுகிறாய்.
…………………………………………..
…………………………………………..
………………………………………….
கண்கள் திற..
எழுந்து கொள்.
கானகத்தின் வலுமிக்க எதிரியுடன்
போருக்கு தயாராகும் முள்ளம்பன்றியென
உடலை சிலிர்த்து கொள்.
முன்னே தெரியும் மாபெரும் பள்ளம்
இதயத்தினுள் இடம் மாறி விட்டது
என்றா நினைக்கிறாய்….?!
பரவாயில்லை..
கடலை குடிக்க துவங்கு.
நிதானமாக – கடைசி துளியும் மிச்சமின்றி.
கலைந்து கிடக்கும் கேசத்தை
சரி செய்து கொள்.
இருள் அடர்ந்து இறங்க துவங்குகிறதா..?
ஒன்றும் பழுதில்லை.
காணாமல் போன கடலுக்கும்
நிற்கின்றன பார்…
நெடுவழியெங்கும்
எத்துணை கலங்கரை விளக்கங்கள்..!!
2) பொய்யை வாழ்தல்
ஒரு கனவை வாழ்தலை போல்
அவ்வளவு எளிதல்ல
ஒரு பொய்யை வாழப் பழகுவது.
முதலில் அது பொய்யே இல்லையென
யாருமில்லாத போது
உரக்க சொல்ல வேண்டும்.
பின் – அது உங்கள் வாழ்வில் நுழைவதற்கு முன்
நிகழ்த்தப்பட்ட தினசரி வழமைகளில்
ஒன்று கூட தவறாது
பார்த்து கொள்ள வேண்டும்.
பாகன் தன்னை கட்டி போட்டிருக்கும்
சம்பிரதாயமான சன்ன கயிற்றை
அவிழ்க்கவே முடியாதென
எண்ணும் யானையைப் போல்
அந்த பொய்யை தாண்டிய
வாழ்வே இல்லையென
உங்கள் ஆழ்மனதை
நம்ப செய்ய வேண்டும்.
சற்று ஸ்திரமடைந்த பிறகு
பொய்யை அழைத்து – அதன்
விரிந்த காதுகளில்
‘இனி உன் பெயர் உண்மை’
என மூன்று முறை ஓத வேண்டும்.
ஆயிற்றா…?!
ஆனால் – இந்த முறையான திட்டமிடலில் ஒரேயொரு பிசகு உள்ளது.
இன்னொருவருடைய பொய்யை
நீங்கள் வாழ
இது கொஞ்சம் கூட உதவாது.
3) மாதிரிகள்
இப்பூங்காவின்
எல்லா பச்சைகளுக்கும் நடுவிலும்
காதலர்கள் – கண்கள் பார்த்தபடி
விரல்கள் கோர்த்தபடி
தோள்கள் உரசியபடி.
நான் – என்
மிக பழமையான காதல் ஒன்றை
திரும்பி பார்க்கிறேன்.
நிறுத்தத்திலிருந்து புறப்பட்டு
வெகு தொலைவு சென்று விட்ட
இரயிலின் பின் பக்க விளக்கின்
சிவப்பு ஒளியை – அது
தொடுவானத்திலிருந்து மறையும் வரை
பார்த்து கொண்டே நிற்பது போல்.
எவ்வளவு நிச்சலமான தருணம்..
ஆனால் பாருங்கள்..
நெடிதுயர்ந்த மரத்தின் உச்சியிலிருந்து
உதிரும் இலையை
தன் இணையென நம்பி
அதன் கூடவே
மெல்ல பறந்து தரையிறங்கும்
அந்த சுயம் மறந்த பட்டாம்பூச்சி
என்னை சற்று தொந்தரவு செய்கிறது.
4)காலாதீதம்
சேவற்சண்டை களத்தில்
உதிர்ந்து பறக்கும் இறகுகளின்
எண்ணற்ற ரோம இழைகளென
வாழ்வின் நாட்கள் தொலைந்து
மறைகின்றன – எந்த பயனுமின்றி.
கிளைகள் மீதே வெடித்து மணக்கும்
நாகலிங்க மலர்கள்
வாடி வெளுத்த கண்களென
தரையில் வீழ்ந்திருப்பது போல்
ஆசைகளும் கனவுகளும் அடங்கும்
சில போகித்தும் சில மறந்தும்.
இப்பிறப்பின் வழுக்கும் விளிம்புகளை
தாண்டுவது எவ்வாறு காலாதீதா…?!
அறியப்பட வேண்டிய ஒற்றைப் பொருளை
கண்டடைய போதுமோ
எஞ்சியிருக்கும் சொற்ப ஆயுள்…!!
காலனை காலால் உதைக்க இயலாதவர்கள்
வேண்டுவது எல்லையற்ற காலம்தானே..!
பைரவா…..!
நின் திருப்தியுற்ற நாயின் வாயிலிருந்து
கூரிய பற்களிடை வழிந்து
நிலத்தில் உருண்டு நிற்கும் குருதித்துளியென
உறைந்து போய் நிற்கட்டும்
என் வெளியெங்கும்
இந்த காலமும்.
5) இலக்கு
தாழ்ந்த கிளையில்
இருக்கும் பூவை
சுற்றி சுற்றி வருகிறது
மஞ்சள் நிற பட்டாம்பூச்சி.
செடியின் அடி தண்டை
பற்றிக் கொண்டு
பட்டாம்பூச்சியை பிடிக்க
எம்பி எம்பி குதிக்கிறது பூனை.
புற உலகு குறித்து
எந்த கவனமுமின்றி
வெயிலுக்குள் மறைகிறது பட்டாம்பூச்சி.
இப்போது
பறக்காத அந்த சிவப்பு பூவை
பறித்து விட
தாவி தாவி பாய்கிறது பூனை.
6) அமைதி
நள்ளிரவு காற்று
கண்ணாடி சன்னலின்
திரைச்சீலை விலகுகிறது.
பனிக்கடியில் ஆழ்ந்து
உறங்குகிறது பெரும் மலை.
கருக்கலில் காகங்கள்
கரைகின்றன – இடைவிடாது.
கோவில் வாயிலில்
கனத்த மணியின் நாவு அமைகிறது
சிறிதும் அசைவின்றி.
வட்டமாக வானுயர்ந்து
இராட்சத மரங்கள் மூடி நிற்குமொரு வன நிலம்.
வேர்முடிச்சுகளின் தனிமையில் தியானிக்கிறது
நகர் புகுந்து விட்ட ஆதி குடியின்
கல் தெய்வம்.
மா எரியின் நீல நீர் பரப்பில்
சப்தமின்றி பெய்கிறது பருவ மழை
ஓட்டின் பச்சை தெரிந்து மறைய
அமிழ்ந்து மிதந்து நீந்துகிறது
சின்னஞ்சிறு ஆமை.
குவளை தேநீர் மீது பறக்கும்
நீராவி – காற்றில் வரையும்
அரூப ஓவியத்தை
பார்வை விலக்காது நோக்கியவாறு
சமைந்திருக்கிறார் முதிய புத்த பிட்சு.
எரிந்து அணைந்து கொண்டிருக்கும்
சுடலை சாம்பல் பொடி பறக்க
வந்து விழுகிறது ஒரு மழைத் துளி
அதன் பின்
மற்றுமொரு துளி.
கனவில் சந்தித்தவனிடம் ஐயத்துடன்
இது கனவில்லையே என்கிறாள்.
இல்லை என மெலிதாக தலையசைத்து
சிகை கோதி – கண்கள் மூடி
உறங்கச் செய்கிறான் அவளை.
சம்யுக்தா மாயா
சம்யுக்தா மாயா தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்தவர். தற்போது தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். 2016ல் உயிர்மை பதிப்பகத்தில் இவருடைய "டல்ஹொஸியின் ஆரஞ்சு இரவு" என்கிற கவிதை நூலும் 2023ல் "தீ நின்ற பாதம்" என்கிற இரண்டாவது கவிதை நூல் சால்ட் பதிப்பகத்திலும் வெளிவந்துள்ளது.
ஆழமும், சுவையும் கலந்த கவிதைகள். க.கலாமோகன்