/

கொரோனா தொற்று பற்றிய காம்யூவின் பார்வை : அலான் டி பாட்டன்

ஜனவரி 1941-ல், ஆல்பர்ட் காம்யூ ஒரு வைரஸைப் பற்றி கதையை எழுதத் தொடங்குகிறார். அது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கட்டுப்பாடற்று பரவுகிறது. அல்ஜீரிய கடற்கரையில் உள்ள ‘ஓரான்’ எனும்  “ஒரு சாதாரண நகரத்தின்” மக்கள்தொகையில் பாதியை  அழித்துவிடுகிறது. 1947 இல் வெளியிடப்பட்ட “பிளேக்” (The Plague) நாவல் போருக்குப் பிந்தைய காலத்தின் மிக முக்கியமான ஐரோப்பிய நாவலாக கருதப்படுகிறது.

புத்தகத்தின் துவக்கத்திலேயே ஒரு திகில்காற்று எங்கும் அலைந்துகொண்டிருப்பதை உணரமுடிகிறது. மாறாக நகரத்தில் வசிப்பவர்கள் வழக்கமானவர்களாக பணத்தை நோக்கிய இயற்கையிலிருந்து விலகிய தங்கள் வாழ்க்கையில் மும்முரமாக  இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு திகில் கதையின் பரபரப்புடன், அந்த பேரச்சம் எங்கும் வேகமாக பரவத் தொடங்குகிறது. கதைசொல்லி, டாக்டர் ரீயூ, ஒரு செத்த எலியைக் காண்கிறார். பின்னர் மற்றொன்று; அடுத்து இன்னொன்று. விரைவில் ஒரு தொற்றுநோய் ஓரானைப் சிறைபிடிக்கிறது. இந்த நோய் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு என்று நகரின் எல்லா தெருக்களுக்குள்ளும் நுழைந்து பீதியை கூட்டுகிறது.

காம்யூ இந்த நாவலை எழுதுவதற்காக ‘பிளேக்’ நோயின் வரலாற்றிற்குள் தன்னையே மூழ்கடித்துக் கொண்டிருக்கவேண்டும். அந்த அழிவின் இருண்மை 14 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏறத்தாழ 50 மில்லியன் மக்களை கொன்றதையும், 1630-ல் இத்தாலிய பிளேக், லோம்பார்டி மற்றும் வெனெட்டோ பகுதிகள் முழுவதுமாக 2,80,000 பேரைக் ஆட்கொண்டு கொன்றதை பற்றியும் அவர் படித்தார். மேலும் 1665 இல் லண்டனின் பெரிய பிளேக் (Great Plague of London) பற்றியும் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் சீனாவின் கிழக்குப் கடலோர பகுதியில் உள்ள நகரங்களை நாசப்படுத்திய பிளேக் பற்றியும் அவர் படித்தறிந்தார்.

காம்யூ ஒரு குறிப்பிட்ட பிளேக் பற்றியோ அல்லது சிலர் அடையாளப்படுத்துவதைப்போல பிரான்சில் நாஜி ஆக்கிரமிப்பு பற்றிய உருவகக் கதையாகவோ இந்நாவலை எழுதவில்லை. அவை சாராம்சமாக அறிவிக்கும் ஒன்றைத்தான் தன் கருப்பொருளாக எடுத்துக்கொண்டார்.  உண்மையில், வரலாற்றில் நாம் கொள்ளைநோய்கள் என சுட்டும் நிகழ்வுகள் யாவும் ஒரு பிரபஞ்ச சூழ்நிலையின் வெளிப்பாடுகள் மட்டுமே; ஒரு நிரந்தர விதியின் நாடகீய சந்தர்ப்பங்கள் மட்டுமே என்று அவர் நம்பினார்; எல்லா மனிதர்களும் எந்த நேரத்திலும் ஒரு வைரஸால் அழிக்கப்படும் அபாயம் உள்ளது; எந்த காரணத்தொடர்பும் அற்று ஒரு விபத்தோ அல்லது நம் சக மனிதர்களின் செயல்களோகூட எந்த ஒரு தனிநபரையும் ஆட்கொண்டுவிடும் பாதுகாப்பற்ற நிலைதான் எங்கும் நிலவுகிறது. எல்லா மனிதர்களும் பாதுகாப்பற்றவர்கள்தான்.

ஓரான் மக்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நகரத்தின் நான்கில் ஒரு பங்கு மக்கள்  இறந்தபிறகும்கூட அது தங்களுக்கு நடக்காது என்பதற்கான காரணங்களை  கற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொலைபேசிகளுடனும் விமானங்களுடனும் செய்தித்தாள்களுடனும் வாழும் நவீன மனிதர்கள். 17 ஆம் நூற்றாண்டின் லண்டனிலோ அல்லது 18 ஆம் நூற்றாண்டின் கேண்டனிலோ (Canton, China) உயிர்விட்ட பாவப்பட்ட மனிதர்களைப்போல இவர்கள் நிச்சயமாக இறக்கப் போவதில்லை.

நாவலின் ஒரு இட்த்தில் கதாப்பாத்திரங்களுக்கு இடையிலான உரையாடல் இப்படிச் செல்கிறது : “இது பிளேக் ஆக இருக்க வாய்ப்பே இல்லை. மேற்கில் அது எப்போதோ ஒழித்துக் கட்டப்பட்டுவிட்டது.”

“உண்மைதான். இது எல்லோருக்குமே தெரியும்.” காம்யூ அதற்குமேல் இன்னொன்றையும் சேர்க்கிறார். “இறந்துபோனவர்களைத் தவிர”.

மரணத்தை பொறுத்தவரை, காம்யூவின் பார்வையில், ​​​​வரலாற்றில் எந்த முன்னேற்றமும் நடந்தேறியிருக்கவில்லை. நாம் நம் பாதுகாப்பின்மையின் பலவீனத்திலிருந்து தப்பவே முடியாது. உயிருடன் இருப்பது எப்போதும் நமக்கு ஒரு இடர்நிறைந்த நெருக்கடியாகவே இருக்கும்; அது உண்மையிலேயே தவிர்க்கவே முடியாத “அடிப்படை நிலை”. பிளேக் இப்போது இருக்கிறதோ இல்லையோ, ஆனால் எப்போதும் இருக்கும் ஒரு பிளேக் நம்மை சுற்றிக்கொண்டேதான் இருக்கிறது – நம்மை திடீர் மரணத்திற்கு ஆளாக்கக்கூடிய ஒன்றை, நம் வாழ்வை சடுதியில் பொருளற்றதாக மாற்றிவிடக்கூடிய அந்த நிலையை நாம் பிளேக் என கொள்வோமேயானால்.

வாழ்வின் இந்த அம்சத்தைதான் காம்யூ “அபத்தம்” (absurdity) என்று குறிப்பிடுகிறார். இந்த அபத்தத்தை அடையாளம் காண்பதும், அங்கீகரிப்பதும் நம்மை விரக்திக்கு இட்டுச்செல்லாது,  நம் இதயத்தை மென்மையாக்கி இந்த நாடகத்தின் துயரநகைச்சுவையை புரிந்துகொள்ளச் செய்து மீட்சி அளிப்பதோடு, ஒழுக்கவாதத்திலிருந்தும் தீர்ப்பளிப்பதிலிருந்தும் விலகி மகிழ்ச்சியையும் நன்றியுணர்வையும் நோக்கி நம்மை பயணிக்கச் செய்ய வேண்டும்.

“பிளேக்” நாவல் வெறும் பதட்டத்தை மட்டும் நமக்கு அளிப்பதில்லை. ஏனென்றால் பதட்டம் என்பது ஆபத்தான, ஆனால் குறுகிய கால நிலையில் பரிணமிப்பது-அதாவது எப்படியும் இறுதியில் அதிலிருந்து நாம் பாதுகாப்படைந்துவிடுவோம்- அதற்கான வழியை கண்டடைந்துவிடுவோம் என்னும் நிலைகளில் தற்காலிகமாக எழுந்தமைவது. ஆனால் ஒருபோதும் நாம் பாதுகாப்பாக இருக்க முடியாது என்னும் இன்றியமையாத ’அபத்த’ நிலையில் காம்யூ நமக்கு ஒன்றை பரிந்துரைக்கிறார். நாம் நமது பாவப்பட்ட சக மனிதர்களை நேசிக்க வேண்டும். நம்பிக்கைக்கும், விரக்திக்கும் உணர்வொழுகாமல் துயரை மட்டுப்படுத்தும்படி உழைப்பை மட்டும் மேற்கொள்ளவேண்டும். வாழ்க்கை விருந்தோம்பலை அளிக்கும் நல்வாழ்வுமையம், மருத்துவமனை அல்ல. அதாவது பிரச்சனைகளைத்தேடி தீர்வுகளை கண்டறிவதை விடுத்து அமைதியையும் நிம்மதியையும் உருவாக்க முயற்சிக்கும் இடம். 

நாவலில், தொற்றுநோயின் உச்சத்தில், வாரத்திற்கு 500 பேர் இறக்கிறார்கள். அப்போது​​ பேனலோக்ஸ் என்று அழைக்கப்படும் கத்தோலிக்க பாதிரியார் ஒரு பிரசங்கத்தை வழங்குகிறார்; ‘இந்த கொள்ளை நோய் மனிதர்களின் ஒழுக்கக்கேட்டிற்காக கடவுள் அளிக்கும் தண்டனை’ என்கிறார். மாறாக டாக்டர் ரீயூ ஒரு குழந்தை இறப்பதை கவனிக்கும்போது வேறு ஒரு புரிதலை அடைகிறார்: துயர் காரணத்தொடர்பற்று தோராயமாகவே பகிர்ந்தளிக்கப்படுகிறது, அதில் எந்த ஒரு தர்க்கநியாயமும்/அர்த்தமும் இல்லை, அது வெறும் அபத்தம் மட்டும்தான், இதுவே துயர் பற்றி ஒருவர் சொல்லக்கூடிய ஆகக்கரிசனமான வார்த்தையாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது.

டாக்டர் ரீயூ தன்னைச் சுற்றியுள்ளவர்களின் வேதனையை குறைக்க அயராது உழைக்கிறார். ஆனால் அவர் ஒன்றும் நாயகன் அல்ல. “இது எதுவுமே வீரதீரத்தையோ, திறமையை பறைசாற்றுவதையோ பற்றியது அல்ல” என்கிறார் அவர் “இது ஒரு அபத்தமான யோசனையாகக்கூட தோன்றலாம், ஆனால் பிளேக்கை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி, அதை கண்ணியத்துடன் எதிர்கொள்வதுதான்.”

இன்னொரு பாத்திரம் கண்ணியம் என்றால் என்ன என்று கேட்கிறது. “நான் என் வேலையைச் செய்வது,” என்று டாக்டர் ரீயூ பதிலளிக்கிறார்.

இறுதியில், ஒரு வருடத்திற்கும் மேலான போராட்டம் முடிவுறுகிறது; பிளேக் மறைகிறது. ஊர் மக்கள் எல்லோரும் கொண்டாட்டத்தில் திளைக்கிறார்கள்; துன்பம் தீர்ந்துவிட்டது, இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்று எண்ணுகிறார்கள். ஆனால் “இது உறுதியான வெற்றியாக இருக்க முடியாது என்று டாக்டர் ரீயூ அறிந்திருந்தார்” என்று காம்யூ எழுதுகிறார்.

“இந்த பயங்கரத்திற்கு எதிராக என்ன செய்தோம் என்பதற்கும், சந்தேகத்திற்கிடமின்றி மீண்டும் மீண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான சான்றாகவே இது அமைய முடியும்.”

அவர் இப்படி தொடர்கிறார், பிளேக் “ஒருபோதும் இறப்பதில்லை”; அது படுக்கையறைகளிலும், பாதாள அறைகளிலும், பெட்டிகளிலும், கைக்குட்டைகளிலும், பழைய காகிதங்களிலும் பொறுமையாகக் காத்துக்கொண்டிருக்கிறது”. ஒரு நாள் அது மீண்டும் “தன் எலிகளைத் தூண்டிவிடும், நல்ல திருப்தியடைந்த நிம்மதியான   நகரத்திற்குள் உலவவிடும்”.

கோவிட் தொற்றுகாலத்தில் மிகச்சிறப்பான தொற்றுநோயியல் நிபுணர்களால்கூட செய்ய முடிந்திராத அறிவுறுத்தலை அப்போதே காம்யூ வழங்கிருப்பது அவருக்கு  மாந்திரீகம் தெரியும் என்பதாலல்ல, அவர் மனித இயல்பை சரியாக அறிந்திருக்கிறார். நமக்கு தெரியாத ஒன்று அவருக்கு தெரிந்திருந்தது. “ஒவ்வொருவரும் தனக்குள்ளேயே அதை, அந்த பிளேக்கினை கொண்டுள்ளனர், ஏனென்றால் யாரும், இந்த உலகில் யாருமே அதற்கு எதிர்ப்பு சக்தி கொண்டவர் அல்ல”.

தென்னவன் சந்துரு

வங்கித் துறை ஊழியரான தென்னவன் சந்துரு கலை இலக்கியம் சார்ந்த கட்டுரைகளில் ஈடுபாடுடையவர். மொழிபெயர்ப்பாளர். நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.