ஒன்று விட்ட சித்தப்பா
நம்பியிருந்த நிலம்
அவனை
தலைகுப்புறக் கவிழ்த்துவிட்டது.
சாக்கடைக்குள் உருளவில்லையாயினும்
ஓரமாய்ச் சரிந்து விட்டான்.
வாந்திக்குள் விழுந்து கிடக்கும்
நாற்றத்தைத் தேடி யார் வருவார்கள்?
அவனே கண்விழித்து
அவனே கை ஊன்றி
அவனே எழுந்தால்தானே உண்டு?
ஆனால் கதை அப்படியில்லை
ஒரு ஆட்டோவுக்குள்ளிருந்து
5 பேர் ஓடி வந்தனர்
வரவே மாட்டேன் என்கிற முகத்தை
தூக்கிக் கொண்டு
அவன் மனைவி வந்திருந்தாள்
அதில் ஒருவர்
ஒன்று விட்ட சித்தப்பாவாம்
கண்ணீர் வழிய வழிய
அவன் மோவாயில் கொஞ்சி
கூப்பாட்டில் வினவுகிறார்
“ஐயோ…ராசா! உனக்கு என்னதான் வேணும்னு சொல்லு…”
இங்கு கொட்டிக் கிடக்கும்
இவ்வளவில்
ஒன்றைக் கூட கேட்க மாட்டேன்
ஆனாலும் சித்தப்பா
என்னை ஒரு முறை இப்படிக் கேளேன்.
OOO
மனிதன் தன்னை மறக்கத் தேவையான பொருட்கள்
ஸ்வீடன் போய் வந்த நண்பன்
ஸ்வீடன் போக முடியாத நண்பர்களிடம்
கதை கதையாய்ச் சொல்லிக் கொண்டிருந்தான்
ஸ்டோக்ஹோம் நகரில் ஒரு ஹோட்டல்…
ஹோட்டல் என்றால் கல்லும் மண்ணும் சேர்த்துக் கட்டியதல்ல
முழுக்க முழுக்க ஐஸ் கட்டிகளாலானது..
ஐஸ் ஹோட்டலில் ஒரு ஐஸ் பார்..
ஐஸ் மீது நடந்து சென்று
ஐஸ் மீது அமரலாம்.
கதவும், ஜன்னலும் ஐஸ்…
டேபிளும், சேரும் ஐஸ்…
அலங்காரங்கள் அத்தனையும் ஐஸ்
கிண்ணங்கள் எதுவும் கண்ணாடியல்ல
அவையும் முழுக்க முழுக்க ஐஸ்
கிண்ணம் கொஞ்சம் உருகினாலும்
எறிந்து விட்டு
இன்னொரு கிண்ணம்
அதுவும் உருகினால்
அடுத்த கிண்ணம்
ஐஸ் கிண்ணத்தில்
ஐஸ்ஸை உடைத்துப் போட்டு
அதனுள் மதுவை ஊற்றி…
பணியாளர் யாவரும்
ஐஸ் மனிதர்களா
என்று அவன் சொல்லவில்லை
இருந்தாலும் இருக்கலாம்
கேட்டுக் கொண்டிருந்த
நண்பர்களில் ஒருவனுக்கு
திறந்த வாய் மூடவில்லை
ஒரு யானையைக் கட்டிவைக்கும் அளவு
திறந்த வெளி
இன்னொருவன்
அவனே ஒரு அதிசயம்
அவனை எந்த அதிசயங்களாலும்
அசைத்து விட முடியாது
அவன்
தன் சிகரெட் கங்குக்குள்
எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறான்
மூன்றாமவன் இருக்கிறானே
அவன் கொஞ்சம் பாவம்
ஒரு வியாதி என்று கூட சொல்லலாம்
எல்லாவற்றையும் முந்திக் கொண்டு
அவனுள் ஒரு தத்துவம் உதித்து விட்டது
பிறகென்ன
தத்துவம் பெரும்பாலும்
கலங்கிய கண்களோடுதான் வருகிறது
OOO
இரத்தக்களரியான ஒரு வாழ்த்து
பண்டிகைக் காலம் வந்துவிட்டது
பொந்துக்குள்ளிருந்து வெளியே
தலைநீட்டும் பிராணியைப் போல
மெல்ல
எட்டிப் பார்க்கிறது உன் வாழ்த்து
பண்டிகைக் காலமெனில்
யாரும்
யாரை நோக்கியும் புன்னகைக்கலாம்
யாரும்
யாருக்கும் பரிசளிக்கலாம்
யாரும்
யாரிடமும் இனிப்பை எடுத்து நீட்டலாம் அல்லவா?
பண்டிகைக் காலம் வந்துவிட்டது
கழுதை வாலில்
பட்டாசு கொளுத்திக் கொண்டாடும்
சேட்டைக்கார சிறுவர் கூட்டம்
அப்படியொன்றும்
முற்றாக ஒழிந்து விடவில்லை.
நாம் இப்போது
ஒரே கிரகத்தில் வாழும் இருவரா அன்பே?
OOO
காதலே! காதலே!
நிகழ்ச்சி முடிந்து கிளம்புகையில்
“ என்னை பஸ் ஸ்டாண்டிலாவது இறக்கி விடுகிறாயா? “ என்று
உறுமினாள் என் காதலி
அரங்கின் வாயிலில்
இன்னொரு காதலி கை நீட்டினாள்
இவளைக் கண்டதும் அவள்
முகத்தைத் திருப்பிக் கொள்வாள்
என்று நினைத்தேன்
அதிசயமாக
இருவரும் பின்னிருக்கையைப் பகிர்ந்து கொண்டனர்.
“ வீட்டிற்கு இரண்டு கி.மீ முன்பாகவே
இறங்கிக் கொள்வேன்”
என்கிற உத்தரவாதத்தோடு
ஒருத்தி முன் இருக்கையில் ஏறிக் கொண்டாள்.
“ பின் சீட்டில் தாராளமாக
மூன்று பேர் உட்காரலாமே? “
என்கிற உரிமைக்குரலோடு
இன்னொருத்தி வந்து சேர்ந்தாள்.
கண்ணாடியில் பியர் நுரை வழிந்திறங்கிய போதுதான்
கூரை மீது
ஒரு சாகசக்காரி அமர்ந்திருப்பதை
அறிந்து கொண்டேன்.
கார் சென்று கொண்டிருக்கிறது
யாரும் இதில்
இறங்குவது போலில்லை.
நானும்
நிறுத்துவேன் என்று தோன்றவில்லை.
ஆனால்
எங்கு செல்வது?
அதுவும் எனக்குத் தெரியவில்லை.
OOO
சந்தைச் சத்தத்திற்கிடையில்…
சந்தைக்கடை விரிப்பில்
காய் கறிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன
ஒரு பெண்
சரியான சில்லறைக்கு
வியாபாரத்தை முடித்து விட்டுக் கிளம்புகையில்
“நண்றிணே…”
என்று சொல்லி விட்டு நகர்கிறாள்
வாழைத் தண்டுக்கும்
பத்து ரூபாய்க்கும்
சரியாகப் போய் விட்டது
உபரியாய் வீற்றிருக்கும்
‘நன்றி’ யை கண்டு களிக்க
இதோ….
கடவுள் வந்து கொண்டிருக்கிறார்.
OOO
இசை
கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.
நன்றி : தமிழ் விக்கி