பெய்யெனப் பெய்யும் பிழை : வெற்றிராஜா

ஒரு ஆண்மகன் தனது வக்கிர புத்தியால் ஒரு பெண் அணிந்திருக்கும் ஆடையை உருவி, அவளை நிர்வாணமாக்கி அவமதிக்க முயற்சிப்பது இந்திய நிலத்துக்கு முற்றிலும் புதிதல்ல. கெளரவர் சபையில் கர்ணன் கொக்கரிக்க, துச்சாதனன் துகிலுரித்த காலம் துவங்கி, தமிழக சட்டசபையில் அரங்கேறிய இழிவான சம்பவம் வரை, ஆணினம் பெண்ணுக்கு இழைக்கின்ற அநீதிகள் என்றும் முடிவின்றி தொடர்கிறது. கல்வி கற்று, சட்டம் பயின்று, சபையேறும் பெண்களுக்கே மோசமான நிலமையென்றால், விளிம்பு நிலை பெண்களின் கதி? 

புதுமைப்பித்தனின் ‘விபரீத ஆசை’ சிறுகதையில், இறந்து போன நண்பனின் பிணத்தின் அருகில் அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் நண்பனின் மனைவியின் ஆடையை உருவி, அவள் மீது மிருகமாய் பாய்ந்து புணர்கிறான் கதைசொல்லி. பிணத்தின் அருகில் புணர்வது ஒரு வகை பிறழ்வு என்றால், அதன் அடுத்த கட்டம், பிணத்தையே புணர்வது. ஜெயமோகனின் ‘சடம்’ சிறுகதையில், இறந்து சில நிமிடங்களே ஆன இளம் பெண்ணின் பிணத்தை புணர்கிறான், கீழ்மையிலும் கீழ்மையான ஒரு போலீஸ்காரன். இவ்வித அதீத வன்முறைகளின் நீட்சியாக, புணர்ந்த பிணத்தின் உடலை கிழிப்பது, கொடூரமாய் சிதைப்பது, எரிப்பது, உடலை வெட்டி சூட்கேஸில் அடைப்பது போன்ற மனப்பிறழ்வுகளை விவரிப்பது என்னால் ஆகாத காரியம். டில்லி இரவுப்பேருந்தில் கற்பழித்து தாக்கப்பட்டு இறந்த யுவதியும், கொல்கத்தாவில் கொல்லப்பட்ட மருத்துவ மாணவியும், மணிப்பூர், ஹரியானா, உத்தர பிரதேசம், பெங்களூர், புதுவை, சென்னை மற்றும் தமிழக புறநகர்களில் அதிகரிக்கும் கற்பழிப்புகள், மது, போதைப்பொருட்கள், சிறார் பாலியல் வன்கொடுமைகள், ஆணவ கொலைகள், குடும்ப வன்முறைகள், திருமண விவாகரத்துகள் யாவும், இந்திய சமூகம் ஒரு சிக்கலான உளவியல் நிலையை நோக்கி நகர்வதையே காட்டுகிறது.

காற்றில் மிதந்து வரும் பழைய பாடல் ஒன்றை கேட்டு நின்று, நெஞ்சத்தில் நினைவுகள் கிளற, விழிகளில் நீர் திரள, புதைத்து வைத்த துயரங்கள் பொங்கி அழுகின்ற அன்னையை பார்த்து இளைய தலைமுறை கேலியாய் கேட்கக்கூடும். அப்படியென்ன பெரிய சோகத்தை அனுபவித்து விட்டதாக கண்ணீர் சிந்துகிறாய்? ஐரோப்பாவை போல இரண்டு உலகப்போர்களை சந்தித்தாயா? ஜப்பானை போல இரண்டு அணுகுண்டுகள் தலையில் விழுந்ததா? யுத்தத்தில் மட்டுமே ரத்தமும், சாவுகளும் சாத்தியம் என்று எண்ணுபவர்களால் கேட்கப்படும் புரிதலற்ற கேள்விகள். ராணுவத்திலாவது ஆயுதங்களும், கவசங்களும், பயிற்சிகளும் முன்கூட்டியே தரப்படுகிறது. போரில் ஊனம் அடைந்தால் பென்ஷன் உண்டு. இறந்தால் பதக்கம் உண்டு. போர் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் துவங்கி முடிவது. ஆனால் ஒரு பெண் அவள் பிறந்த வீட்டில் இளவரசியாக வாழ்ந்த பின், கண்களில் கனவுகளை சுமந்து, மெல்லிய கலக்கத்துடன் நிராயுதபாணியாக புகுந்த வீடு நுழைகிறாள். வீதியில் அவளை மொய்க்கும் விழிகள் விநோதமானவை. சமூகத்தில் அவள் சந்திக்கும் மிருகங்கள் விதவிதமானவை. பிறப்பிலிருந்து இறப்பு வரை அவள் எதிர்கொள்ளும் போர்கள் நுட்பமானவை.

மதுவும் போதையும் தலைக்கேறி சுயத்தை இழந்த சாத்தானின் கைகளில் சிக்கும் மனைவி ஒரு விளையாட்டு பொம்மையாகி விடுகிறாள். முரட்டு கரத்தால் தலைமுடியை இழுத்து சுழற்ற, கொத்தாக கூந்தல் பிய்ந்து அவன் கையில் வந்து விடுகிறது. அவளது முகத்தை சுவற்றில் மோதி, கன்னத்தில் அறைய, உதடுகள் கிழிந்து குருதி தெறிக்கின்றது. குத்து பட்டு உடைந்து உதிரும் பற்களை அவள் மௌனமாக பொறுக்கிக் கொள்கிறாள். மயங்கி தரையில் விழும் கர்ப்பிணியின் வயிற்றில் அவன் ஓங்கி உதைக்கும்போது, வலியின் அதிர்வுகளை பெறுவது அவள் மட்டுமல்ல, கருவில் நடுங்கி ஒடுங்கும் அடுத்த தலைமுறையும் கூட. பெண்களுக்கு ரத்தம் புதிதல்ல. பருவம் அடைந்த காலம் முதல், அவள் மாதம் மூன்று நாட்கள் குருதிப்புனலில் நீந்துபவள். பிரசவ வலி கடந்து சிசுவை வெளியே எடுத்து தொப்புள் கொடி அறுப்பவள். சிசேரியனால் கிழிபட்ட உடலை தையல் போட்டு மீண்டெழுபவள். காந்தி தனக்குள் இருந்த பெண்மையின் மனோபலத்தை உணர்ந்ததால், வன்முறைக்கு மாற்றாக அகிம்சையின் மீது நம்பிக்கை வைத்து முன்நகர்ந்துள்ளார். இரத்தம் தோய்ந்த காயங்களை விட வன்மமும் விஷமும் தோய்ந்த சொற்கள் கொடிது. பெண்ணின் அந்தரங்க உறுப்புகள் மற்றும் அவளது உறவுகளை குறிப்பிட்டு வீசப்படும் கீழ்தர வசைகளை கேட்பது நரக வேதனை. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு. குடும்ப குருக்ஷேத்திரத்தில் தினமும் போரிட்டு, உடலும் மனமும் நைந்து, புத்தி பேதலித்து, ஆன்மா சிதைந்து கடைசியில் பெண் நடைபிணமாகி விடுகிறாள். பெண்ணின் மனதை புரிந்து கொள்ளாத ஆண் ஒரு நடைபிணத்தை புணர்ந்தபடிதான் எஞ்சிய நாட்களை கழிக்கிறான்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இரண்டு முறை மத்திய நிதி மந்திரியாக பதவி வகித்தவர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. சென்னையில் இவரது பெயரில் ஒரு சாலையே (TTK Road) உள்ளது. இவரது பேரன் டி.டி.ரங்கநாதன், மதுவுக்கு அடிமையாகி இறந்தவர். இருபது வயதில் ரங்கநாதனை மணந்து இளம் விதவையானவர் சாந்தி ரங்கநாதன். ஒரு குடி நோயாளி இருக்கும் வீட்டில் அனைவருமே ஒரு கட்டத்தில் மனநோயாளி ஆகி விடுகிறார்கள். குடி, போதை, எய்ட்ஸ் போன்ற நோய்களால் சமூகத்தில் உருவாகும் சிக்கல்களை தீர்க்க அமெரிக்கா சென்று, அதற்கான சிகிச்சை முறைமைகளை பயின்று வந்து சென்னை அடையாரில் T.T.K மருத்துவமனை துவங்கினார். எண்பதுகளில் இது போன்ற போதை மறுவாழ்வு மையங்களில் வயதான ஆண்கள் மட்டுமே சேர்ந்தனர். ஆனால் இன்று இளைஞர்களும், மாணவர்களும், பெண்களும் மது போதைக்கு அடிமையாகும் சதவீதம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

சாதி, மதம், மொழி, இனம், பணம், கல்வி, கட்சி, கொள்கை என பல வகை சித்தாந்தங்கள் சமூகத்தை பிரித்தாலும், மது போதைக்கு முன்பாக மானுடமே சமமாகி விடுகிறது. சாராயத்தை எல்லா சாதிகளும் ஒன்றாய் கூடி குடித்து களியாட்டம் போடுகின்றன. மதுவின் மகுடி இசைக்கு மதம், மனம் இரண்டும் மயங்கி ஆடுகின்றன. எந்த குலத்தில் பிறந்தாலும், குடித்த பின் சாக்கடை மலத்தில் நீந்திடத் தடையில்லை. கோத்திரம் எதுவானாலும் மூக்கு முட்ட குடித்து விட்டு மூத்திரம் போவதே சாத்திரம். ஏழைகள், நடுத்தர வர்க்கம், பணக்காரர்கள் அவரவர் வசதிக்கு ஏற்ப சரக்குகளை தேடியலைகிறார்கள். தமிழகத்தில் சென்னை, சேலம் என்று படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தி இந்தியாவுக்கே முன்மாதிரியாய் திகழ்ந்த காலங்கள் போய், இன்று டாஸ்மாக் இல்லாத கிராமங்களை தேடி கண்டுபிடித்து அங்கே புதிய கிளைகள் திறக்கப்படுகின்றன. மது விலக்கு நிகழாமல், அதிக விற்பனைக்கான மது இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. 

மேற்கத்திய நாடுகள் மது, போதை, விவாகரத்து, குடும்ப வன்முறையின் விளைவுகளை சென்ற நூற்றாண்டிலேயே எதிர் கொண்டதால் அவற்றிலிருந்து விடுபட்டு வெளியே வரத் துவங்கிவிட்டன. மது போதை உற்பத்தி செய்கின்ற நிறுவனங்களின் அடுத்த இலக்கு மக்கள்தொகை பெருகி வரும் சீனா, இந்தியா போன்ற நாடுகள். குறிப்பாக இளையவர்கள், மாணவர்கள். மிக முக்கியமாக, சம்பாதிக்கும் பெண்கள். நம்மை சுற்றி ஒரு நுட்பமான நுகர்வு கலாச்சார வலைப்பின்னல் உருவாகி விட்டதை நாம் அறியும் முன்னரே அதன் பாதிப்புகள் கைமீறி விடுகிறது. தமிழகத்தில் நிகழ்ந்த மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்களே சாராயம் குடித்து விட்டு, காவல்துறை பெண் அதிகாரிகளிடம் அத்துமீறிய செயல்தான் இன்று நம்மை சூழ்ந்துள்ள அவல நிலையின் சான்று. 

பெண்களை கீழ்த்தரமாய் சித்தரித்து சமூகத்தை சீரழிக்கும் முக்கிய காரணியாக இந்திய சினிமா உள்ளது. இணையத்தில் சமீபத்தில் வெளியான நீதிபதி ஹேமா கமிட்டியின் ரிப்போர்ட்டில் மலையாள திரைத்துறை பற்றிய இருண்ட பக்கங்கள் அதிர்ச்சியை அளிப்பவை. மாலிவுட்டை பின்பற்றி கோலிவுட், டோலிவுட், பாலிவுட் அனைத்தும் தத்தமது சாக்கடையை சுத்தம் செய்வதே நலம். எம்ஜிஆர் உயிருடன் இருந்த போதே சீழ் பிடித்த சினிமாக்களை விமர்சித்தவர் ஜெயகாந்தன். அவர் எழுதிய ‘சினிமாவுக்கு போன சித்தாளு’ முக்கியமான ஒரு படைப்பு. கிராமத்திலிருந்து நகரத்துக்கு வருகின்ற MGR ரசிகனும், அவனை தொடர்ந்து MGR ரசிகையாகும் அவனது புது மனைவியும், சினிமா பார்க்கும் மோகத்தால், குடி பழக்கத்தால், மதி கெட்டு, விபச்சாரம் வரை சென்று புத்தி பேதலிக்கும் உளவியல்களை விவரிக்கின்ற கதை. #Me Too விவகாரத்தில் சிக்கிய ஹாலிவுட் தயாரிப்பாளர் Harvey Weinstein மீதான Investigative Journalism தொடர்ந்து அவரை சிறைக்கு தள்ளிய உண்மை சம்பவங்களை வைத்து ஹாலிவுட்டில் எடுத்த படம் விருதுகளை குவித்துள்ளது. தமிழக #Me Too வில் சிக்கிய பிரபலங்களை பற்றிய பத்திரிக்கை விசாரணையோ அல்லது கேரள ஹேமா கமிட்டி ரிப்போர்ட்டில் உள்ள உண்மை சம்பவங்களை வைத்து படம் எடுக்கும் சூழலோ சாத்தியமோ இங்கு உள்ளதா?

உலகெங்கும் தோன்றிய தொல்குடிகளும், இந்திய தொன்மங்களும் ஆண் பெண் இருவரையும் சமமாக வைத்தே தரிசனங்களை துவங்கின. வேட்டை யுகத்தில் ஆண்கள் புரிந்த தியாகத்தை குறிக்கும் Menhir, நடுகல், கல்தூண், நெடுங்கல், குன்றுகள் போன்றவற்றை லிங்கமாகவும், பெண்களின் பங்களிப்பை போற்றி உருவான Cyst, குழிகள், குகைகள் போன்ற வடிவங்களை யோனியாகவும் உருவகித்து, பின் இரண்டையும் இணைத்து, மாற்று பாலினத்துக்கும் இடமளித்து, Singularity நோக்கி நகர்ந்த ஆதி மனதின் கற்பனை வியப்பான ஒன்று. ஆனால் காலப்போக்கில் பெண்ணினம் பின்னே தள்ளப்பட்டு, சமூகங்கள் ஆண் மையமாக மாறின. ஐரோப்பிய தத்துவ ஞானிகள் பெண்களை நுகர்வு பொருளாக கருதி சமூக அடுக்கின் கீழ் நிலையில் வைத்தனர். இந்த அழுத்தத்தை தாள முடியாமல் எதிர்த்து குரல் கொடுத்த பெண்களை, பேய் பிசாசுகள் என முத்திரையிட்டு வேட்டையாடி (Witch Hunt) கொன்று குவித்தனர். இரண்டாயிரம் ஆண்டுகளாக அடக்கி வைத்த ஆசைகளும், ஒடுக்கப்பட்ட குரல்களும் எழுந்த போதெல்லாம், பெண்களுக்கு ஹிஸ்டீரியா நோய் என்று கூறி உயிருக்கே ஆபத்தான சிகிச்சைகள் தரப்பட்டது. எண்பதுகளில் மருத்துவர்களும் உளவியல் நிபுணர்களும், Hysteria என்பது நோய் அல்ல என அதிகாரபூர்வமாய் அறிவித்து, மெடிக்கல் மேனுவலில் இருந்து ஹிஸ்டீரியாவை நீக்கினர். 

பெண் உரிமையும் சுதந்திரமும் நமது அன்னைகள் பல தலைமுறைகளாய் போராடிப் பெற்றது. வலியும், வேதனையும், குருதியும், தியாகமும் நிறைந்த சரித்திரப்பாதை அது. குடி போதை, கும்மாளம், கட்டற்ற காமமே சுதந்திரம் என கருதாமல், நமக்கு கிடைத்த வரங்களையும், வாய்ப்புகளையும் லட்சியத்தை நோக்கி செலுத்துவதே நம் முன்னோர்க்கு நாம் செய்யக்கூடிய நியாயம். பெண் கல்வி மறுக்கப்பட்டபோது போராடி மருத்துவரான முத்துலட்சுமி, அவரால் உருவான அடையார் கேன்சர் ஹாஸ்பிடல், அதை நிர்வகித்த டாக்டர் சாந்தா, வறுமையில் பிறந்து கணவனை இழந்து ஆபத்தான கதிரியக்க ஆய்வுகள் செய்து டபுள் நோபல் பரிசு பெற்ற மேரி க்யூரி, அவரது மகள் பியேர் க்யூரி, மிகப் பெரிய அரசுகளை, கட்டமைப்புகளை எதிர்த்து போராடிய Annie Besant, மேடம் ப்ளவட்ஸ்கி, தன் முகத்தில் உமிழப்பட்ட எச்சிலை துடைத்து கையேந்தி சமூக பணி செய்த அன்னை தெரசா என பல நூறு ஆதர்சங்கள் நம் முன் உள்ளனர்.

இன்று Pan-India கலாச்சாரத்தில், பல துறைகளிலும் ஆண்களை மட்டுமே முதன்மைபடுத்துகின்ற போக்குகளின் நடுவே ஜமா, கொட்டுக்காளி போன்ற படைப்புகள் நம்பிக்கையும், இலக்கிய வாசிப்புக்கு நிகரான அனுபவத்தையும் தருகின்றன. குறிப்பாக ஜமா படத்தின் இறுதியில் வரும் ‘கர்ண மோட்சம்’ காட்சி பல வகை சாத்தியங்களை திறக்கிறது. கர்ணன் அர்ஜுனனிடம் மன்னிப்பு கேட்டிருந்தால், ஆண்களுக்கு மத்தியில் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. கர்ணன் திரெளபதியிடம் மன்னிப்பு கோரியிருந்தால், அவனை மன்னிக்கக் கூடிய மனநிலையும் முதிர்ச்சியும் அவளுக்கு இருந்திருக்குமா என்பதும் கேள்விக்குறி. ஆனால் கர்ணன் பாத்திரம் பேரன்னை குந்தியின் காலில் விழுந்து மன்னிப்பு கோரி சாகும்போது ‘ஜமா’ என்னும் படைப்பு வேறொரு தளத்துக்கு உயர்கிறது. ஒரு பெண் நிறைய நகைகளுடன் நள்ளிரவில் வீதி வழியே சென்று பாதுகாப்பாக வீடு திரும்பும் போதுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றார் காந்தி. அப்படி ஒரு சமூகத்தை நாம் செயல்படுத்த இயலாத வரை, கர்ணன்கள் குந்தியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதை தவிர வேறு வழியில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக ஆணினம் பெண்ணினத்துக்கு இழைத்த அநீதிகளுக்கு அதுவே மீட்பு. 

வெற்றிராஜா

புதுச்சேரியைச் சேர்ந்த வெற்றிராஜா தற்சமயம் இங்கிலாந்தில் வசித்துவருகிறார். மதிப்புரைகள், விமர்சனம், புனைவுகள், அல்புனைவுகள் என்று பரந்த தளத்தில் எழுதிவருகிறார்.

6 Comments

  1. அருமையான கருத்துகளை சிறப்பாக சொற்களில் அமைத்துள்ளார்

  2. Very gripping and Well presented. பதைப்பதைப்புடன் வாசித்து முடித்தேன். ‘ஜமா’ தமிழ் படமா? Need to watch. Thanks for this article.

  3. ‘பெய்யெனப் பெய்யும் பிழை’ – அருமையான தலைப்பு. கமலா தோல்வி. மீண்டும் ட்ரம்ப். காலம் செய்த கோலமடி. கடவுள் செய்த குற்றமடி.

  4. அக்கறையடன் பெண்ணினத்துக்கு இழைத்த அநீதிகளைத் தேர்வாய்ந்து தொகுத்து அமைத்த கட்டுரைக்கு மிக்க நன்றி. பெண்ணைப் பிழையாய்க் கருதும் சமூகத்தின் முகத்தில் பெய்யெனப் பெய்த தூற்று உமிழ் மாற்றம் தருமா? துடைத்தெறியுமா? தேவை மாற்றம். மன்னிப்பல்ல!

  5. மது மற்றும் போதைப்பொருளின் பேரழிவு விளைவுகளை ஒவ்வொருவரும் படித்து புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு.ஆல்கஹால் மற்றும் போதைப்பொருளால் ஏற்படும் பல்வேறு மூல காரணங்களையும் அவற்றின் விளைவுகளையும் எழுத்தாளர் கவனத்துடன் பட்டியலிட்டுள்ளார்.
    வரலாற்றின் மூலம் அவர் விளக்கிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது.
    சுருக்கமாகச் சொன்னால், சாட்டை அடி.

  6. Raja,

    I like the revolutionary topic you’ve chosen this time. Sometimes when we watch rajini, kamal, vijay movies movies like for e.g, bigil, mahanadhi, dhrishyam, and old rajini movies where there will always be mother and sister sentiments, like Baasha.. something goes on in our nerves.. like we get a satisfaction of kicking culprits in society.. but after few days that spark will vanish.. it needs lot of courage to stand up against injustice to our own sisters, mother.

    “மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! as a title for this work would have been great!

    We need thousands of Barathiyaar in this era.

    Your work was powerful and I hope this piece of work reaches millions of people. Thank you for writing. I didn’t know the history of ttk road and their family details. Good to learn.

    One thing I observed was, Jeffrey estein’s name from Hollywood was taken as reference but this article left it to the audience to relate to the names whom we know in our society.
    I’ve not watched Jama movie yet. So didn’t quite understand the references. Will watch and read rhis once again.

    As someone who has seen family members going through the struggles, you sometime get psychology disturbed, get angry. It is important for everybody to stand up against violence, injustice to women.

    I wish this is just the beginning of your work. You’ll continue to write more.

உரையாடலுக்கு

Your email address will not be published.