எனது கடல்கள் : க.கலாமோகன்

ஓவியம் : திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

எனது உடலில்
பல கடல்கள் உள்ளன.
இவைகளில்
அதிக கோலங்கள்
அழிந்த கோலங்களே பல

மொழிக் கடல் என்பது
எனது உடலில்
விழிக்கும் அழியும்

ஓர் கடலில்
நான் ஓடங்களைக் காணவில்லை
மீனவக் கன்னிகளைக் கண்டேன்.

“நீங்களே எனது கவிதைகள்.”

“நாங்கள் கவிதைகளே அல்ல.”

மீண்டும் அவள்கள் கடலில் மறைந்தாள்கள்.

மறைந்த மீனவப் பெண்களது
அனைத்து நிழல்களும்
எனக்குள்

ஓர் கடலில் ஒரு உருவம் தெரிந்தது
அதுவும் ஓர் மீனவப் பெண்
அவள் அசைவில் சிதைவுகள்
நான் அவளை அண்மித்தேன்.

“அம்மா.”

“மகனே.”

“அம்மா.” எனது விழிகளில் கண்ணீர்.

“மகனே, அழாதே.
நான் போரின் கைதி.”

“அம்மா, என்னுடன் வாருங்கள்.
உங்களைச் சுகப்படுத்துவோம்.”

“வருதல் தவறு.
நான் இறந்து விட்டேன். போ! “

நான் விரைவில்
அவளது அருகில் சென்றவுடன்
அவள் உடல் மறைந்தது.

எனது சில கடல்கள்
காற்றால் அடிக்கப்பட்டுக் கொதித்துத்
தனது அருகில் உள்ள வீடுகளைச்
சிறு கடல்கள் ஆக்கின.

எனது மண்வீட்டின் தரை
தண்ணீர் நிலமாக இருந்தது
இந்த நிலத்தில்
எனது சிறு உடலைப்
பிரளவைத்து
நான் வேறு கடலில் விழுந்தேன்.

எனது இந்தக் கடல்களில்
மீன்கள் அல்ல
பிணங்கள் நீந்தின.
இந்தப் பிணங்களது விழிகள்
திறந்தே இருந்தன.
இந்த விழிகளது நோக்கின்
மொழியால்
நான் குருடனாகிப் பின்பு விழித்தேன்.

என்னிடம் ஓர் மொழிக்கடல்
இருந்தது
இது என்னிடம் இப்போது இல்லை
நான் நடுக்கத்துடன் பார்த்த
பிணத்தின் கடல்களது
ஆழத்தில்… இந்தக் கடல்

மொழி என்னிடம் சொல்கின்றது:

“நான் பிணங்களை
எங்கும் செய்பவன்.”

இந்தக் கணத்தில்
எனக்குப் பயம் தருகின்றது
மொழி

க. கலாமோகன்

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்புகளில் தொடர்ந்து இயங்குகி வருகிறார். சிதறுண்ட தன்னிலைக் கூறில், எங்கேயும் தன்னைச் சரியாக பொருத்திக்கொள்ளாத இயல்பில் தத்தளிக்கும் மனங்களை கதைகளாக்கி வருகிறார்

உரையாடலுக்கு

Your email address will not be published.