பூக்கள் : சுரேஷ்குமார இந்திரஜித்

ரவியும் அவன் அம்மாவும் அண்ணாமலை நகர் 2வது குறுக்குத் தெருவில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசிக்கிறார்கள். எதிரே இருந்த இரண்டு வீடுகளும் ஒரே அமைப்பில் கட்டப்பட்டிருந்தன. அந்த இரண்டு வீடுகளிலும் ரயில்வே துறையில் வேலை பார்க்கும் இருவரின் குடும்பங்கள் இருக்கின்றன. இருவரும் இளைஞர்கள். அவர்கள் இருவரும் சகோதரர்களாக இருப்பார்கள் என்று ரவி நினைத்தான். பின்னர்தான் தெரிந்தது இருவரும் நண்பர்கள் என்று. இருவருக்கும் திருமணமாகி மனைவியுடன் இருந்தார்கள். இளந்தம்பதிகள். வெளியே கோயிலுக்குச் செல்லும்போதும் சினிமாவிற்குச் செல்லும்போதும் இரண்டு இளம் தம்பதியரும் சேர்ந்தே செல்வார்கள்.

அந்த இருவரின் மனைவிகளில் ஒருத்தி அழகாக இருப்பாள். இன்னொருத்தி சுமாராக இருப்பாள். அழகாக இருப்பவளின் பெயர் கனகா. அவளின் கணவன் பெயர் ரவீந்தர். சுமாராக இருப்பவளின் பெயர் நந்திதா. அவளின் கணவன் பெயர் அமுதன்.

ரவி தமிழ் முதுகலை முடித்தவன். முனைவர் பட்டத்திற்கு ‘சிலப்பதிகாரத்தில் இசை’ என்ற தலைப்பை எடுத்திருந்தான். அவனுடைய வழிகாட்டி வின்சென்ட் ஆசீர்வாதம் இந்தத் தலைப்பை ரவியிடம் எடுக்கச் சொல்லியிருந்தார்.

வின்சென்ட் ஆசீர்வாதம் வீடு இருக்கும் தெருவில் நுழையும்போது மிருதங்கம் ஒலிப்பது ரவிக்குக் கேட்டது. வின்சென்ட் ஆசீர்வாதம் மிருதங்கம் வாசிப்பார். மிருதங்கத்தின் மேல் தனக்கு ஈர்ப்பு ஏற்பட்ட கதையை அவர் ரவிக்குச் சொல்லியுள்ளார்.

“அபூர்வ ராகங்கள் சினிமா பாலச்சந்தர் டைரக்‌ஷன். அதிலே பாடகியா ஶ்ரீவித்யா வருவார். அவரு உடலமைப்பு வடிவாக இருக்கும்னு சொல்ல முடியாது. ஆனா முகம் அவ்வளவு அழகு. அகலமான, பெரிய, விரிந்த கண்கள். அந்தக் கண்களைச் சந்தித்தவன் மயக்கமடைந்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அந்தப் படத்துலே கமல்ஹாசன் மிருதங்கம் வாசிப்பார். மிருதங்கத்தின் ஒலி ரெண்டு பேருக்கும் இடையிலே சஞ்சரிக்கும். எனக்கு மிருதங்க ஒலி பிடிச்சுப் போச்சு. காரமடை கதிர்வேலுப்பிள்ளை கிட்டே மிருதங்கம் வாசிக்கக் கத்துக்கிட்டேன். கச்சேரியிலே வாசிக்கற அளவுக்கு இல்லை. என் ஆத்ம திருப்திக்காக அப்பப்ப மிருதங்கம் வாசிப்பேன்.”

வின்சென்ட் ஆசீர்வாதம் வீட்டு வாசலில் நின்ற ரவி அழைப்பு மணியை அழுத்தினான். கதவு திறந்தது. வின்சென்ட் ஆசீர்வாதத்தின் மகள் ஜெனிபர் நின்றிருந்தாள்.

“அப்பா மிருதங்கம் வாசிக்கறார்.”

“சத்தம் கேக்குது” என்றான் ரவி.

“உக்காருங்க சொல்றேன்” என்றாள் ஜெனிபர்.

ரவி சோபாவில் உட்கார்ந்தான். ஜெனிபருக்குப் பின்புறம் தட்டையாக இல்லாமல் எடுப்பாக, அளவாக இருக்கும். முன்புறமும் அளவாக எடுப்பாக இருக்கும். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறாள்.

சற்று நேரத்தில் மிருதங்கம் வாசிப்பதை நிறுத்திவிட்டு வின்சென்ட் ஆசீர்வாதம் வந்தார். பெரிய உருவமாக இருந்தார்.

“சிலப்பதிகாரம் படிச்சியா” என்றார்.

“அரங்கேற்றுக் காதை தவிர பிற இடங்கள்லே இசை பத்திய குறிப்புகள் இருப்பதா தெரியலையே.”

“அடியார்க்கு நல்லார் உரையிலே நிறைய விவரங்களும் ஆராய்ச்சிகளும் இருக்கு. நீ அதையும் தேடிப் படிக்கணும். நான் அதைத் தேடி எடுத்துத் தாறேன். நீயும் லைப்ரேரியிலே இருக்கான்னு பாரு. காபி சாப்பிடறியா.”

ரவி “சரி” என்றான். அவர் காபி கொண்டுவரச் சொல்லிக் கத்தினார். சற்று நேரத்தில் காபி வந்தது. சோபாவின் முன்னால் இருந்த டீப்பாயில் காபியை ஜெனிபர் வைத்துவிட்டுச் சென்றாள்.

அரங்கேற்றுக் காதையில், நடன முறைகள், இசை, வாத்தியக் கருவிகள் இடம்பெற்றது குறித்து வின்சென்ட் ஆசீர்வாதம் கைகளை ஆட்டிஆட்டிப் பேசினார். ரவிக்கு எதுவும் புரியவில்லை. வேறு தலைப்பு எடுத்திருக்கலாம் என்று தோன்றியது. அடியார்க்கு நல்லார் உரையை எங்கு தேடுவது என்று நினைத்தான்.

2

ரவி தன் அறையில் படுத்திருந்தான். ஜன்னல் வழியாகப் பார்த்தபோது எதிர் வீட்டில் குடியிருக்கும் ரவீந்தரின் மனைவி கனகாவும் அமுதனின் மனைவி நந்திதாவும் தங்கள் வீட்டு வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். அவன் ஜன்னல் கதவுகளை அடைத்து ஒரு கதவை லேசாகத் திறந்து, அந்த இடுக்கின் வழியே கனகாவைப் பார்த்தான். கனகாவை அவனுக்குப் பிடித்திருந்தது.

கனகாவும் நந்திதாவும் வாசலில் நின்று பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, ஜன்னல் கதவுகளை அடைத்து லேசாகத் திறந்து, அந்த இடுக்கின் வழியே கனகாவைப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டான்.

அமுதனுக்குத்தான் கனகா மனைவியாகியிருக்க வேண்டும். தோற்றப் பொருத்தம் இருக்கிறது. ஆனால், ரவீந்தருக்கு மனைவியாக இருக்கிறாள். இப்படித்தான் வாழ்க்கையில் ஒருவருக்குப் பொருத்தமான மனைவி இன்னொருவருக்கும் அந்த இன்னொருவருக்குப் பொருத்தமான மனைவி வேறொருவருக்கும் அமைந்துவிடுகிறது.

கனகாவும் நந்திதாவும் அவரவர் வீட்டிற்குள் சென்றுவிட்டார்கள். அடியார்க்கு நல்லார் உரையை எங்கு தேடுவது என்று யோசித்துக்கொண்டே ரவி உட்கார்ந்திருந்தான்.

ரவியின் அம்மா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார். முனைவர் பட்டம் பெற அவனுக்கு ஆவல் இருந்தது. போட்டித் தேர்வுகளுக்கும் படித்துக்கொண்டிருந்தான்.

ரவியின் அம்மாவிற்கு வேறு உயர்நிலைப் பள்ளிக்கு மாறுதல் வந்தது. இந்த இடத்திலிருந்து அந்த உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வது தூரமானது என்பதால் பல சிரமங்களை அவனின் அம்மா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த உயர்நிலைப் பள்ளி நகரத்தின் விஸ்தீரணப் பகுதியில் இருந்தது. அந்தப் பள்ளியில் பணிக்குச் சேர்ந்தபின் அந்தப் பகுதியில் வீடு பார்த்து, இந்த வீட்டைக் காலிசெய்து அந்தப் புதுவீட்டிற்குச் சென்றபின் கனகாவை ரவியால் பார்க்க முடியாமல் ஆகிவிட்டது.

3

வின்சென்ட் ஆசீர்வாதத்தின் வீட்டில் ரவி உட்கார்ந்திருந்தான்.

“அடியார்க்கு நல்லார் உரை கிடைக்கவில்லை. நீங்கள் தேடிப் பார்த்தீர்களா” என்றான் ரவி.

“என்னிடமும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். தேடிப் பார்த்தேன். அகப்படவில்லை” என்றார் வின்சென்ட் ஆசீர்வாதம்.

“தலைப்பை மாற்றிவிடுவோம் சார்.”

“மாத்தலாம். வேற என்ன தலைப்பு வைக்கறது. யோசிப்போம்.”

அந்த நேரத்தில் உள்ளறையிலிருந்து ஒரு நடுத்தர வயதுப் பெண் நைட்டியில் தோன்றினாள். ரவிக்கு அவள் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டவள் போல் தோன்றினாள்.

“மரியாள்” என்று கத்தினார் வின்சென்ட் ஆசீர்வாதம்.

பணிப்பெண் எங்கிருந்தோ அவசரமாக ஓடிவந்து அந்த நடுத்தர வயதுப் பெண்ணை உள்ளே கூட்டிச் சென்றாள். “ஜெனிபர் எங்கே போனாள்” என்றார் வின்சென்ட் ஆசீர்வாதம். “தோட்டத்துலே இருக்கா” என்றாள் அந்தப் பணிப்பெண்.

“ஒரு நாளைக்கு எத்தனை காபி குடிப்பீங்க” என்றான் ரவி.

“பத்து காபி வரைக்கும் குடிப்பேன்” என்றார் வின்சென்ட் ஆசீர்வாதம்.

அவன் அந்த நடுத்தர வயதுப் பெண்ணைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தான்.

“என் மனைவிக்கு வாதம் வந்து முடியாமக் கிடக்கு” என்று வின்சென்ட் ஆசீர்வாதம் சொன்னார்.

ஜெனிபர் காபி கொண்டுவந்து வைத்தாள். அவன் வழக்கம்போல் அவளின் சில பாகங்களைப் பார்த்தான்.

காபி குடித்துவிட்டு வெளியே வந்தான். கால் போன போக்கில் நடந்தான். முனைவர் பட்டம் வாங்கியே ஆகவேண்டும் என்று நினைத்தான். அவன் வசிக்கும் இடத்திலிருந்து பஸ்ஸில் வந்து இறங்கி நடந்து வின்சென்ட் ஆசீர்வாதம் வீட்டிற்கு வந்திருந்தான்.

பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான். வழியில் ஒரு சினிமா தியேட்டர் இருந்தது. சினிமா பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று நினைத்தான். கவுண்ட்டருக்குச் சென்று டிக்கெட் வாங்கி தியேட்டருக்குள் நுழைந்தான். நந்திதாவின் கணவன் அமுதனும் ரவீந்தரின் மனைவி கனகாவும் பக்கத்துப் பக்கத்து சீட்களில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். தோற்றப் பொருத்தம் நன்றாக உள்ளது என்று நினைத்தான்.

அவன் முன்பு வசித்த தெருவில் இருக்கும் நண்பன் வாசுதேவனுக்கு போன் பண்ணி நந்திதா, அமுதன், கனகா, ரவீந்தர் குடும்பங்கள் பற்றி விசாரித்தான். வாசுதேவன் சொன்னான்.

“ரெண்டு குடும்பத்துக்கும் ஏதோ பிரச்சினை, சண்டை. வீட்டைக் காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க. ரவீந்தருக்கும் கனகாவுக்கும் விவாகரத்து ஆயிருச்சு. அமுதன்தான் கனகாவை மெயின்ட்டைன் பண்றாரு. இப்படியே இருந்துருவாங்க போல இருக்கு.”

வாழ்வில் இப்படித்தான் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுகிறது என்று தத்துவார்த்தமாக யோசித்துக்கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு போன் அழைப்பு வந்தது. வின்சென்ட் ஆசீர்வாதம் அழைக்கிறார். எடுத்துப் பேசினான். ‘சங்க இலக்கியத்தில் பூக்கள்’ என்ற தலைப்பை அவனுடைய முனைவர் பட்ட ஆய்விற்குத் தேர்வு செய்திருப்பதாகச் சொன்னார். ரவியும் இந்தத் தலைப்பை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டான்.

தியேட்டரில் விளக்குகள் அணைந்தன. திரைப்படம் துவங்கியது.

***

சுரேஷ்குமார இந்திரஜித்

சுரேஷ்குமார இந்திரஜித்  தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதி வருகிறார். ஆண் பெண் உறவுகளின் சிக்கல்கள், காமம், சமூக அவலங்கள் குறித்த கதைக்களங்களில் எழுதி வருபவர்.

தமிழ் விக்கியில்

1 Comment

  1. சிறுகதைகளுக்கும், குறுங்கதைகளுக்கும் வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டிருக்கிற சுரேஷ்குமார இந்திரஜித் சாரின் புதிய சிறுகதை ‘பூக்கள்’.

    கழுகுப்பார்வையாக ஒரு நாவலுக்கான விஸ்தீரணத்தை உள்ளடக்கி, நாலைந்து நபர்களின் க்ளோஸ்அப் காட்சிகளை கொண்ட குறுங்கதைகளின் தொகுப்பாக முழு வடிவம் பெற்றுள்ளது.

    எல்லோர் வாழ்க்கையும், எல்லோருடனும் பின்னிப்பிணைந்துள்ளது. எவரொருவரின் வாழ்க்கை பகுதியை சொல்லும்போது, அதில் மற்றவர்களின் வாழ்க்கை பகுதியும் வந்து போகிறது.
    விட்டுப்போன சொல்லாடல்களும், உணர்வுகளும், பகடியும், கலையாக்கமும் இக்கதையை நிறைவு செய்கிறது.

    இக்கதையில் 3 குடும்பங்களின் வாழ்க்கை சுருக்கம் நாலைந்து பக்கத்தில் செதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவர்களது வாழ்க்கையின் பகுதிகள் வரைந்தும், வரையாமலுமான கோலத்தை கொண்டுள்ளது. வாசகன் தன் அறிதலுக்கேற்ப புள்ளிகளை இணைத்து முழுக்கோலமிட்டுக் கொள்ளலாம். அது ஆளுக்காள் வெவ்வேறு வடிவங்களை அளிக்கக்கூடும். அனுபவம் பெற்ற ‘எலைட்’ வாசகர்களின் இலக்கிய தாகத்தை சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புகள் தீர்த்து வருகின்றன.

    இக்கதை தரும் கிளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் அளவில்லை. சுரேஷ்குமார இந்திரஜித் தொடர்ந்து என்னை நிரப்பிக்கொண்டிருக்கிறார்.

    _ A. கருணாகரன்.

உரையாடலுக்கு

Your email address will not be published.