தனிமை என்னும் பணியிடம்- கல்பற்றா நாராயணன்

தமிழில்- அழகிய மணவாளன்

 1

 ஒரு மனிதனுக்கு பாகற்காய் சுவையான உணவாக ஆக சாதாரணமாக முப்பது முப்பத்தைந்து வயது ஆகவேண்டும். கசப்பு இனிப்பைவிட சுவையுள்ளதாக ஆக கடந்துசெல்லவேண்டிய இருண்ட, நெருக்கடியான பாதைகளை அவன் அப்போது கடந்துவிட்டிருப்பான். என் முப்பத்தைந்து வயதில்தான் என் முதல் கவிதையை இலக்கிய இதழ்களுக்கு அனுப்புகிறேன். அப்போது

கப்பலிலிருந்து பறந்து உயரும் பறவைகளைப்போல

அவனுடைய பறத்தல்கள் வேறெந்த வழியும் இல்லாமல் திரும்பி

அவனிலேயே அமைய ஆரம்பித்திருந்தன.

முப்பத்தைந்து வயதில் தங்களின் சிறந்த கவிதைகளை எழுதிமுடித்து  ஆசுவாசமடைந்தவர்கள் உண்டு. கி.மு 1600 வரை மனிதன் விரல்களால்தான் எண்ணிக்கொண்டிருந்தான். எவ்வளவு பெரிய எண்ணாக இருந்தாலும் அதில் பூஜ்யத்திலிருந்து ஒன்பது வரை உள்ள வரிவடிவங்கள் மட்டுமே இருக்கிறது. லத்தீன் மொழியில் விரல்களை குறிக்கும் digitic என்ற வேர்சொல்லிலிருந்து digit என்ற சொல் உருவானது. ஒன்பது என்ற எண்ணிற்கு பிறகு உள்ள எண்களுக்கு வெவ்வேறான வரிவடிவங்கள் இருந்திருந்தால் பூமியில் கணிதமே தோன்றியிருக்காது. எல்லா அர்த்தங்களுக்கும் தனித்தனி சொற்கள் இருந்திருந்தால் உருவகங்களே தோன்றியிருக்காது. ஒன்று பிறிதொன்றை பிரதிநிதித்துவப்படுத்தவே இல்லை என்றால் குறியீடுகளே உருவாகியிருக்காது. மொழி எந்த பிசிரும் அற்ற முழுமையுடன் இருந்திருந்தால் கவிதை தோன்றியிருக்காது. கொஞ்சம் கொஞ்சமாக, சீராக நிகழ்ந்தபடியே இருக்கும் பண்படுதலின் கடைசிப்படிதான் கவிதையா?

2

ஒருவகையில் கவிதை என்பதே கழிவிரக்கத்தின் வெளிப்பாடுதானோ? செய்யவேண்டியதை செய்யவேண்டிய தருணத்தில் செய்யாமல் இருந்தவனின் மொழியா? ‘ அனைத்தையும் தாமதமாகச்செய்வதுதான் உன் தோல்வி’ இது வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனோனின் கவிதைவரி. அந்த கவிதைவரியில் வெளிப்படும் யதார்த்தத்தை, அந்த கவித்தன்னிலையை அவரது சுயத்தைவிட வாசகர்களான நாம் பிரநிதித்துவப்படுத்துகிறோம்  என்ற தைரியத்தில்தானே வைலோப்பிள்ளி அப்படி எழுதினார்?  ’அப்படி செய்திருக்க தேவையில்லை’, ’அப்படி சொல்லியிருக்க வேண்டாம்’ ’ நான் எப்படிப்பட்டவனாக ஆகிவிட்டேன்’, ’ வேறொருவகையில் நிகழ்ந்திருந்தால்?’ போன்ற எத்தனை கவலைகள் கவிதைகளாக ஆகியிருக்கின்றன. எவ்வளவு  உதாரணங்களை வேண்டுமானாலும் காட்டமுடியும்.  பெரும்பாலான கவிதைகளும் ஒருவகையான பெருமூச்சுகள்தான்.

எதிரே வந்த நண்பனிடம்

உரையாடாமல் அப்படியே போயிருந்தால்

சற்றுமுன் வந்த பஸ்ஸில் போயிருக்கலாம்

தாகமெடுத்தது, வழியில்

தண்ணீரை தேடாமலிருந்திருந்தால்

கூட்டத்தின் முன்வரிசையிலேயே இடம் கிடைத்திருக்கும்.

சும்மா பார்த்து நின்றிருக்காமல் இருந்திருந்தால்

விற்றுதீர்வதற்கு முன்பே வாங்கியிருக்கலாம்

                                               – யூமா வாசுகி

       தமிழ்நாட்டில் ஒரு கவியரங்கில் யூமா வாசுகி இந்த கவிதையை வாசித்ததும் நான் அதிர்ந்துவிட்டேன். என் வாழ்க்கைக்கதையைத்தான் அவர் மிக லாவகமாக வாசிக்கிறார். நுட்பமாக சொன்னால் அது என் யதார்த்தம். வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனோனை வாசிக்கும்போது இப்படி முள்ளில் சிக்கிக்கொண்ட தருணங்கள் எத்தனை! கவிஞர் ஒளப்பமண்ணயின் ‘கிறுக்கன்’ ‘குட்டிமாளுவின் கதை’ போன்ற கவிதைகளில் நான் இப்படி சிக்கிக்கொண்டிருக்கிறேன். அந்த கவிதைகள் ’ வேறுவிதமாக நிகழ்ந்திருந்தால்’ என்ற எண்ணத்தின் தீவிரமான பரிணாமங்கள்.

’குட்டிமாளுவின் கதை’ கவிதையில் ஒரு தம்பதியினருக்கு அதிகபட்ச சிரமங்களுக்குபின் ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. அவனின் அவளின் காத்திருப்புகளெல்லாம் அவனுக்காகத்தான். அவனை பார்த்துப்பார்த்தும், அவனை கையிலேயே வைத்திருந்தும் ஆசை தீரவில்லை. எங்கிருந்து திரும்புவதும் அவனை பார்ப்பதற்காகத்தான். அவனிடமிருந்து கொஞ்சம் அகன்றுசென்றாலும் அதில் ஏதோ தவறு இருக்கிறது என்று எண்ணச்செய்தான். தினமும் ஆபிஸிற்கு கிளம்பும்போது கணவன் மனைவியிடம் நினைவுபடுத்துகிறார். ‘ இவனுக்கு குறும்பு அதிகம், குழந்தையை நன்றாக பார்த்துக்கொள்’. அவனை பார்த்துக்கொள்ளும் பாக்கியம் கிடைத்தவளிடம் அவன் அதை சொல்லவேண்டுமா? அந்த தந்தை மகனை நினைத்து உவகைகொள்ளும்போதெல்லாம் ’குழந்தையிடம் இன்னும் எச்சரிக்கையுணர்வுடன் இரு’ என்று தன் மனைவியிடம் சொல்லவேண்டும் என்று தோன்றியது.  

ஆனால் ஒரு நாள் வேலைசெய்த களைப்பில் தளர்ந்து தூங்கிவிட்ட தாய் உறக்கத்திலிருந்து எழும்போது, அவர் தூங்கும் முதல்சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இத்தனை நாட்களாக அருகிலேயே நின்ற விதி வென்றுவிடுகிறது. தன் அக்குளில் உறங்கிக்கொண்டிருந்த மகனை எங்கும் காணமுடியவில்லை. வீட்டை தொட்டபடி ஆற்றங்கரை. நதிக்கு மிக நெருக்கமாக உள்ள வீட்டில் வாழும் அன்னையர்கள் தூங்கலாமா? பதறிச்சென்று பார்க்கிறார். ஆற்றில் மிதந்துகிடக்கும் மகனை காண்கிறாள்.

‘தூங்கிக்கொண்டிருந்திருக்கிறேன். ஐயோ, தண்ணீரில் கிடக்கிறான்.

மூச்சுவிட எவ்வளவு சிரமப்பட்டிருப்பான்? அப்போது நான் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறேன்.

ஊஹும், இனி நான் பூமியிலிருக்கும்வரை எனக்கு உறக்கமே இல்லை.

கடைசியாக கண்மூடுவதுவரை அவளுக்கு இனி துயில் இல்லை. உறக்கம் ஒரு பிழையான செயல் அல்ல. ஆனாலும் அதில் தன்னலம் இருக்கிறது. ஒருவகையான கண்டுகொள்ளாமை உண்டு, பாவம் உண்டு. நல்லதூக்கம் என்ற சொல்லில் மேலே சொன்ன எல்லாமே உண்டு. ஆற்றுநீரில் அவன் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும்போது அவள் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறாள். அவள் மதிமறந்து உறங்கிய கணம் அவன் இல்லாமலாகிவிட்டான்.

 என் சொந்த வாழ்க்கையில் ‘அப்படி நிகழ்ந்திருக்காவிட்டால்’ என்று நிகழ்ந்தபின் தோன்றிய பாவம்நிறைந்த கணங்கள்தான் என் வாழ்க்கையில் கண் இமைகளை கொஞ்சநேரம்கூட மூடமுடியாத  கணங்கள். ’குட்டிமாளுவின் கதை’ என்ற இந்த கவிதையில் எந்த சம்பவங்களும் இல்லை, அதில் அகப்பட்டிருக்கும் ‘நான்’தான் அந்த கவிதையின் எடையை அதிகரிக்கிறது.

ஆயிரத்தியொரு இரவுகளில் ஒரு இரவில் ஷெஹ்ராஸாத் சொன்ன கதை கதைகேட்டுக்கொண்டிருக்கும் சுல்தானின் கதையைத்தான். வாழ்க்கையில் முதன்முறையாக அவன் தன்னைத்தானே எதிர்கொள்கிறான். அதில் தான் யார் என்று அறிந்ததும் அவனுக்கு அவனை கொஞ்சம்கூட தாங்கிக்கொள்ளமுடியவில்லை. கதையில் அவன் அகப்பட்டுக்கொண்டான். அதன்பிறகு அவன் முன்பு கேட்டகதைகளை பின்னால்போய் கேட்கத்தொடங்கியிருக்க வேண்டும். ஆயிரத்தி ஒன்றாவது இரவு பச்சாதாபத்தால் தளர்ந்த அவன் ஷெஹ்ராஸாத்திடம் நாம் திருமணம் செய்துகொள்ளலாமா? என்று கேட்கிறான்.

ஷெஹ்ராஸாத்தும் சுல்தானும்

ராமாயணத்திலும் ஒருவரின் சுயம் தன்னைத்தான் எதிர்கொள்வதன் மறக்கமுடியாத தருணம் உண்டு. ராமனைத்துறந்து காட்டில் வாழும் சீதை மீண்டும் அயோத்தியின் அரண்மனையில் நுழைகிறாள். அங்கு நடக்கும் அஸ்வமேத யாகத்திற்கு வந்த வால்மீகியும், அவரது சீடர்களும் தன் மகன்களான லவனும் குசனும் ராமாயணக்கதையை கதையை உணர்வுப்பூர்வமாக பாடுக்கொண்டிருக்கிறார்கள். அதன்பிறகு நிகழ்ந்தது குமாரன்ஆசான் எழுதிய ’சிந்தாவிஷ்டயாய சீதா(சிந்தையில்மூழ்கிய சீதை)’ என்ற காவியத்தில்  ஒரே ஒரு செய்யுளில் விவரிக்கப்பட்டிருக்கிறது. ” ‘ வருந்தவேண்டாம் பெண்ணே , வா’ என்று அழைத்த வால்மீகி முனிவரின் தாமரைப்போன்ற பாதங்களை பார்த்தபடி குனிந்ததலையுடன் மௌனமாக சபையின் மறுமுனைக்கு வருகிறாள். மக்கள் சூழ குற்றவுணர்வால் தளர்ந்தமுகம்கொண்ட கணவனை காண்கிறாள். அப்படியே மண்நீங்கினாள்”

நான் தனித்தவன் என்பதால் நீங்கள் தனியர்கள் அல்ல என்று கவிஞன் சொல்வதில்லை. நான் தனித்தவன் என்பதால் நீங்களும் தனியர்கள்,  அதனால் நீங்கள் தனியர்கள் அல்ல என்றுதான் சொல்கிறான். ஒவ்வொரு தனிமனிதனிலும் உள்ள குற்றவுணர்வின் தாளமுடியாத எடையை தானே சுமக்கும் மீட்பனைப்போன்ற மனஅமைப்பு வேறு யாருக்கு இருக்கிறது? என்று கவிஞன் தன் ஒவ்வொரு கவிதை வழியாகவும் கேட்கிறான். ஒவ்வொரு கவிதைக்கு பிறகும் கிருஸ்துவின் தோற்றம் மேலும் அழகானதாக ஆகிவிடுகிறது.

    ஒளப்பமண்ண எழுதிய ‘ கிறுக்கன்’ என்ற கவிதை நாம் மேலே விவரித்த ‘குட்டிமாளுவின் கதை’ என்ற கவிதையை போன்றதுதான். செல்ல மகனை கொஞ்சிக்கொஞ்சி நிறையாமல் அவனை மேலே தூக்கிவீசி, கீழேவரும்போது பிடித்து, மீண்டும் மேலே எறிந்து கீழே வரும்போது பிடித்து விளையாடுகிறார் தந்தை. ஒரு கணநேர கவனமின்மையில் (உறக்கத்தில்)  கீழே வரும் அவனை பிடிக்கமுடியாமல் ஆகிவிடுகிறது. தான் ‘ கைவிட்ட’ குழந்தை நிலத்தில் விழுந்து துடித்தபடி இறந்துவிடுகிறது. மகனை கைவிட்ட தந்தையின் சுயம் அமையவில்லை. (’கைவிடுதல்’ என்ற சொல்லுக்கு நான் எழுதும் கவிதை அகராதியில் கொடுத்திருக்கும் அர்த்தம் ஒளப்பமண்ணயின் கிறுக்கன் என்ற கவிதைதான்) அன்றுமுதல் அவரின்  மூளையை ஊமைப்பூதம் சாப்பிட ஆரம்பித்தது. (ஆழமான வாழ்க்கைநெருக்கடிகளால் அல்லது மானசீகமான உளநெருக்கடிகளால் யாரிடமும் உரையாடாமல் முற்றிலும் தனக்குள்ளேயே ஒடுங்கிக்கொண்டவர்களை மிண்டாப்பூதம்(ஊமைப்பூதம்) கைப்பற்றிவிட்டது என்று சொல்லும் வழக்கம் கேரளத்தில் உண்டு). அவர் கஞ்சிகுடிக்க தலையைக்குனிந்தால் பாத்திரத்தில் தன் குழந்தை. கண்களை மூடிப்படுத்தாலும் கண்களுக்குள்ளே குழந்தை. இன்று அவர் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு ஊரில் இருக்கும் பைத்தியம். ‘ சின்ன சிவப்புஎறும்பின் குட்டியும் நசுங்கிவிடக்கூடாது என்பதால் மண்ணில் உற்றுநோக்கி கால்வைத்து நடப்பது யார்? எந்த ஊரைச்சேர்ந்தவன் என்று யாருக்கும் தெரியாத கிறுக்கன்.  இந்த கிறுக்கனின் கதையை கவிஞன் எப்படி அறிந்தான் என்ற கேள்விக்கு அதை அறியாவிட்டால் அவன் என்ன கவிஞன் என்று பதில் சொல்லலாம். வாசகனின் அந்தரங்கமான தனி அனுபவங்களும் தோல்விகளும் சேர்ந்துதான் அந்த படைப்பை  தீவிரமானதாக ஆக்குகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்த நல்ல கவிதையளவுக்கு நல்ல கதைக்கு சாத்தியமில்லை. கதையிலோ நாடகத்திலோ வாசக பங்கேற்பு குறைவுதான். கவிதையில் கவிஞனைப்போல வாசகனும் முதலீடு செய்கிறான். தொல்பழங்காலத்தில் நாம் உயரமான இடங்களில் வாழ்ந்தோம் என்பதாலா, அல்லது உயரம்தான் நமக்கு பாதுகாப்புணர்வை அளிக்கிறது என்பதாலா உயரத்திற்கும் தாழ்விற்கும் இன்று நாம் உருவகிக்கும் அர்த்தம் கிடைத்தது?

ஒரு மனிதனுக்கு எத்தனை வகையான தன்வரலாறுகள்? அமங்கலமான சந்தர்ப்பங்களை எதிர்கொண்ட எந்த நபரின் சுயசரிதையும் பைபிளில் உள்ள யோபின் கதையாக(Book of job) ஆகலாம். துயரம்நிறைந்த வாழ்க்கைச்சந்தர்ப்பங்களை எதிர்கொள்ளும் யாருடைய கதையும் பாவம் செய்தவனின் சுயசரிதையாக ஆகிவிடும். தன் பாவங்களால் அவன் அலைக்கழிவான். அவனின் வாழ்க்கைக்கதை தன் நடத்தைகளால் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஆதம்-ஏவாள் கதையாக ஆகிவிடும். அதுவரை பூமி ஒரு மலர்வனமாகத்தான் இருந்தது. இன்று தன் மூலமாகத்தான் இந்த துயரங்கள் என்றும், இந்த தனிமை தன்னால்தான் என்பதையும் அவன் அறிகிறான்.

’இப்படி நிகழ்ந்ததற்கு காரணம் நான்தான்’ என்ற தனிமையுணர்வை கவிஞர் பி.குஞ்ஞிராமன்நாயர் பலவகையில் வெளிப்படுத்த முயன்றிருக்கிறார். அவரைப்பொறுத்தவரை இந்த தாளமுடியாத தனிமையை பகிர்ந்துகொள்வதற்கான, அந்த இருட்டை வெளிச்சமாக ஆக்கும் வொர்க்‌ஷாப் போன்றது கவிதை. அவரின் ‘குளித்து தொழாமல்’ என்ற கவிதையில் ஒரு பகுதி:

‘ கோவில்நடையில் தனித்து நிற்கிறேன்.

 தாமதித்துவிட்டேன், பூஜை முடிந்துவிட்டது.

 என் நிழல்பட்டு  

 கோவில்நடையில் சிதறிக்கிடக்கும் குன்றிமணியும் கறுத்துவிட்டது’

  பி.குஞ்ஞிராமன்நாயர் பல கவிதைகள் வழியாக வீசிப்பார்த்தார். ஆனால் கச்சிதமாக இலக்கில் பட்டது ‘களியச்சன்’ என்ற நெடுங்கவிதை வழியாகத்தான். அந்த கவிதை ஒரு கதகளி கலைஞனின் வீழ்ச்சியின் கதை. குற்றம்சுமக்கும், அனைத்தையும் இழந்தவனின் கதைதான் தன்னுடைய வாழ்க்கை என்பதை குஞ்ஞிராமன்நாயர் கண்டுகொண்டதன் பதிவு அல்லவா அந்த கவிதை. அந்த கவிதையில் தன்னகங்காரத்தால் கதகளிஆசிரியருடனான உறவில் விரிசல் உருவாகிறது, அதுதவிர வேறு பல காரணங்களாலும் கதகளி குழுமங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த கலைஞனின் சுயம் வழியாக தன் கவிமனம் தன்னில் வெளிப்படுவதைவிட இன்னும் அதிகமாகவே வெளிப்படுகிறது என்பதை அவர் உணர்கிறார். (அப்படி அல்லாமல் வேறு எந்தவகையிலும் வகுத்துக்கொள்ளமுடியாத தன்னிலை). குஞ்ஞிராமன் நாயரின் வாழ்க்கைக்கதையை அவர் கவிதைவரி வழியாகவே இப்படி தொகுக்கலாம். ” கடும் தமஸை நோக்கி நான் கொஞ்சம்கொஞ்சமாக நகர்ந்தேன்” ( ’ இப்படி நிகழ்ந்ததற்கு நான்தான் காரணம்’ என்ற தனிமையை நீங்களும் பகிர்ந்துகொள்ளமுடியுமா என்று கேட்ட திருடனிடம் ‘இல்லை’ என்று அவன் மனைவியும் குழந்தைகளும் அவனை ‘கைவிட்ட’னர். அவன் பின்னர் கவிஞனாக ஆனான். அவனின் தாளமுடியாமலான தனிமை பின்னர் ராமாயணமாக ஆனது. ராமாயணத்தில் எவ்வளவு தனியர்கள்! அகல்யை முதல் சீதைவரை)

   3

(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: இடப்பள்ளி ராகவன் பிள்ளை(1909-1936) மலையாளத்தின் கற்பனாவாத கவிஞர்களில் முதன்மையானவர். பிறந்த ஊர் எரணாகுளம் மாவட்டத்தில் உள்ள இடப்பள்ளி. அவர் பிறந்த சில வருடங்களிலேயே தாய் இறந்துவிடுகிறார். அவர் குடும்பம் ஏழ்மையானது. தந்தை வேறு ஒரு பெண்ணை மணம்புரிந்துகொள்கிறார். அந்த பெண்ணுக்கு இடப்பள்ளி ராகவன்பிள்ளையை சுத்தமாக பிடிக்கவில்லை. வீட்டின் மானசீகமான நெருக்கடிகளையும், பொருளியல் இக்கட்டுகளையும் மீறி பல்வேறு நபர்களின் உதவியுடன் பத்தாம் வகுப்பு வரை படிக்கிறார். பின் இடப்பள்ளியில் உள்ள வெவ்வேறு செல்வந்தர் வீடுகளில் டியூடராக பணியாற்றினார். தான் சொல்லிக்கொடுக்கும் ஒரு வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண்மேல் காதல் உருவாகிறது. அதை அறிந்த பெண்வீட்டார் அவரை மிரட்டி இடப்பள்ளியிலிருந்தே வெளியேறச்செய்துவிடுகிறார்கள். கொஞ்ச காலம் திருவனந்தபுரத்தில் உள்ள சில வாரஇதழ்களில் பணியாற்றினார், மளிகைக்கடையில் கணக்கு எழுதினார். அவர் பணியாற்றிய கேரளகேசரி இதழ் நின்றுவிடுகிறது. கொல்லம் சென்று  அங்கு ஒரு வழக்குரைஞரின் உதவியாளனாக சேர்கிறார். அவர் காதலித்த பெண் திருமணம்செய்துகொள்ளும் செய்தியை அறிந்ததும் தற்கொலை செய்துகொள்கிறார்.

இடப்பள்ளி ராகவன்பிள்ளையின் நெருங்கிய நண்பர் கவிஞர் சங்கம்புழா         கிருஷ்ணபிள்ளை. நண்பர் தற்கொலைச்செய்தியை அறிந்த சங்கம்புழா ‘ரமணன்’ என்ற இரங்கல்காவியத்தை எழுதுகிறார். ’ரமணன்’ அதீதமான கற்பனாவாத அம்சம் கொண்ட படைப்பு என்றாலும் மலையாளியின் நுண்ணுணர்வை ஆழமாக பாதித்த படைப்பு, அதை வாசித்து தற்கொலைசெய்துகொண்டவர்களும் உண்டு. அது மலையாள இலக்கியத்தின் முதன்மையான செவ்வியல் படைப்பாக ஆகிவிட்டது.) 

கொல்லத்திலிருந்து இலக்கிய அமைப்பாளர் மது கவிஞர் இடப்பள்ளி ராகவன்பிள்ளையின் நினைவுவிழாவிற்கு அழைத்தபோது இடப்பள்ளியிலிருந்தல்லவா அழைப்பு வரவேண்டும் என்று ஆலோசித்தேன். இல்லை. இடப்பள்ளி ராகவன்பிள்ளைக்கு இடப்பள்ளி வலிநிறைந்ததாகத்தான் இருந்தது. இடப்பள்ளியில் அவரின் குழந்தைப்பருவ நினைவுகள் கொண்ட இடங்கள் அவரை அறிந்திருக்கவில்லை. அவரைப்பொறுத்தவரை இடப்பள்ளி ‘எந்த வகையான பரிவுணர்வும் இல்லாத’ உலகமாக இருந்தது.

 இடப்பள்ளி ராகவன்பிள்ளை வாழ்க்கையால் அல்ல மரணத்தால் அழிவின்மை அடைந்தவர். அவர் எப்போதும் மரணத்தின் மணிமுழக்கத்தை கேட்டுக்கொண்டிருந்தவர். அவரின் புகழ்பெற்ற ‘மணிமுழக்கம்’ என்ற கவிதையில் மட்டுமல்ல, அவரின் ஆரம்பகட்ட கவிதைகளிலும் வாழ்க்கையைவிட தான் சார்ந்திருக்கவேண்டியது மரணத்தை என்ற ஆழமான நம்பிக்கை அவருக்கு இருந்தது. அவரின் பெரும்பாலான கவிதைகளை மரணவாக்குமூலம் என்று சொல்லிவிடலாம். சொந்த ஊரிலிருந்து விரட்டப்பட்டு திருவனந்தபுரம் போய் அங்கிருந்து பின் கொல்லத்திற்கு இடம்பெயர்ந்தார். அங்கு ஒரு வழக்கறிஞரின் உதவியாளராக வேலைசெய்தார். அங்குதான் அவர் தற்கொலை செய்துகொண்டார். அந்த மரணம் நாடகீயமானது. இடப்பள்ளி ராகவன்பிள்ளை மணமகன் போல வெள்ளைப்பட்டு வேட்டி சட்டையுடன் மரத்தில் தூக்குமாட்டி தொங்கிக்கிடக்கிறார். கழுத்தில் மாலை போட்டிருந்தார். முதலில்  மாலையிடவேண்டியது அவள்தானே, அந்த கடமையை அவள் நிறைவேற்றியிருக்கிறாள். அவர் மணமகனாக ஆகிவிட்டார். அவளுக்கான மாலையை பக்கத்தில் வைத்திருந்தார். அதற்கு பக்கத்திலேயே கடைசிவாக்குமூலம். நாம் கண்ணால் பார்க்கமுடியாத மணமகள் மரணம்தான் என்று நினைக்கத்தான் எனக்கு விருப்பம். ‘கண்ணே, நான் வந்துவிட்டேன், இதோ வாசித்து முடிக்கப்போகிறேன், இந்த மணிதீபத்தின் சுடரை நானே ஏற்றிவிடுகிறேன்’ என்ற கவிதையில் அவர் கண்ணே என்று அழைப்பது  மரணத்தைதான்.

இடப்பள்ளி ராகவன்பிள்ளையின் துல்லியமான முதல்நினைவு சின்ன வயதிலேயே இறந்துகிடந்த அவரின் அன்னையாகத்தான் இருக்கவேண்டும். இறந்துவிட்ட அந்த தாய்தான் அவரை கொஞ்சியிருக்க வேண்டும். இடப்பள்ளி ராகவன்பிள்ளையின் நினைவு(ரத்தசாட்சி) மண்டபத்தை தொட்டபடி இருக்கும் ஐம்பதுபேர் உட்கார வசதியான வளாகத்தில்தான் அந்த நினைவுச்சடங்கு நடந்தது. அந்த அரங்கிற்கு அருகிலேயே கொல்லம் நகரத்தின் பொதுமயானம். எரியும் உடல்களிலிருந்து வெளிவரும் புகையால் அவையில் இருப்பவர்களில் சிலர் மூக்கை மூடிக்கொள்கிறார்கள். இடப்பள்ளி ராகவன்பிள்ளை இறந்து எழுபத்தைந்து வருடங்களாகிவிட்டது என்றாலும் நேற்று நிகழ்ந்த நினைவுக்கூட்டம்  மரணத்திற்கான இரங்கல்கூட்டம்போல தீவிரமாக இருந்தது. தன் காதல் நிறைவேறாததற்கு காரணமான சமூகத்தால் உருவான அந்நியத்தன்மையை, தனிமையைத்தான் இடப்பள்ளி ராகவன்பிள்ளை எழுதினார். அப்படிப்பட்ட சமூகத்தில் தன்  வாழ்க்கையையே ஒருவகையான விடைபெறலாக ஆக்கி  அதிலிருந்து விடுதலை அடைகிறார். அவருடையது ”வேறுவகையில் நிகழ்ந்திருந்தால்?” என்ற அரசியல் இல்லை, ” வேறுவகையில் நிகழாவிட்டால்?” என்ற அரசியலுக்கு அதீதமான வலி. தனிமை என்ற சொல்லுக்கு தன் வாழ்க்கையின் எடையை அளித்து செறிவாக்கினார் இடப்பள்ளி ராகவன்பிள்ளை.

ஈரோடு பெருந்துறையை சேர்ந்த அழகிய மணவாளன், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். நாவல் கலை பற்றிய மலையாள நாவலாசிரியர் பி.கே.பாலகிருஷ்ணனின் விமர்சன நூலை "நாவலெனும் கலைநிகழ்வு" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இலக்கியத்திற்கு அப்பால் நிகழ்த்துகலையான கதகளியில் அவருக்கு ஆர்வமுண்டு.

உரையாடலுக்கு

Your email address will not be published.