பேரிடர் காலத்தில் கிடைக்கும் சாக்லெட்டுகள் : குமாரநந்தன்

அவன் சாவைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டான். ஐம்பது வயது சாக்க்கூடிய வயதில்லைதான் என்றாலும் அவனுக்கு சாவதில் ஒரு ஆட்சேபனையும் இல்லை. திடீரென தான் இறந்துபோனால் என்ன நடக்கும் என யோசித்துப் பார்த்த்தான். எதுவும் புதுமையாக நடக்கப்போவதில்லை. எல்லா சாவு வீடுகளிலும் நடக்கும் அதே உரையாடல்களை ஏதோ தனக்காகவே பேசுவதைப் போல பேசுவார்கள்.

“எப்ப சார் எறந்தாரு? நேத்து கூட பாத்தேன் வண்டியில போயிகிட்டிருந்தார். அப்ப நெனச்சி கூட பாக்கல. என்ன சார் மனுச வாழ்க்க. இப்ப இருக்கறவங்க கண் மூடி திறக்கறதுக்குள்ள மாயமா மறைஞ்சி போயிடறாங்க.”

“மனுசன் ரொம்ப நல்லவர் சார். யார் கிட்டயும் அதிர்ந்து பேசமாட்டார். எந்த வம்பு தும்பும் கிடையாது. பீடி சிகரெட் தண்ணி ஒரு கெட்ட பழக்கம் இல்ல. எல்லா கெட்ட பழக்கமும் இருக்கறவங்க ரொம்ப நாளைக்கி நல்லா இருக்காங்க சார்.”

“பாடிய எத்தன மணிக்கு சார் எடுப்பாங்க?”

காயத்ரி தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு,  “எங்க போனாலும் எங்கிட்ட சொல்லிட்டுப் போவீங்களே? இப்ப மட்டும் ஏங்க எங்கிட்ட சொல்லாம என்ன தனியா விட்டுட்டுப் போனீங்க?” என அதையே திரும்பத் திரும்ப ராகத்தோடு சொல்லி ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பாள். பெண் பிள்ளைகள் இரண்டும் அவர்கள் பாட்டுக்கு அழுது கொண்டிருப்பார்கள். பையன் சின்னவன். முதலில் கொஞ்ச நேரம் அழுவான். பிறகு அம்மாவிடமோ அக்காவிடமோ மொபைல் வாங்கிக் கொண்டு போய் தனியாக உட்கார்ந்துகொண்டு கேம் விளையாடிக்கொண்டு இருப்பான்.

அம்மா, “ நா பாவியா போயிட்டேனே? நீ இப்பிடி பாதியில போவன்னு நெனச்சி கூட பாக்கலியே? அந்த சாமிக்கி கண்ணு இல்லையா? இங்க வயசானவ நா ஒருத்தி கல்லு மாதிரி இருக்கறனே? என்ன உட்டுட்டு என் மவன கூட்டிகிட்டுப் போயிட்டானே?” என ஆர்ப்பாட்டம் செய்வாள்.

தம்பி வந்து அதிர்ச்சியா துக்கமா என்னவென்று தெரியாத மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு வருபவர்களிடம் மௌனமாக கை கொடுத்துக் கொண்டிருப்பான். உறவினர்கள் அவனை மொய்த்துக் கொண்டு கேட்கும் கேள்விகளுக்கள்லாம் ஒரே பதிலையே சலிக்காமல் அந்த பதிலை அவர்களுக்காக அப்போதுதான் சொல்வது மாதிரி  பொறுமையாக சொல்லிக் கொண்டிருப்பான். “நல்லாத்தான் இருந்தாரு. நேத்து கூட நான் கடைக்கி வந்து சொல்லிட்டுதானே போறேன்.”

“வீடு வேலை ஆயிடிச்சா இன்னும் இல்லையா? ரொம்ப நாளா கட்டிகிட்டு இருக்க?”

“ஆச்சி இந்த மாசத்தில பால் காய்ச்சலாம்னு இருந்தேன். அதுக்குள்ள இப்படி ஆயிடிச்சி.”

“உங்க அண்ணன விட்டுட்டு நீ தனியா வீடு கட்டவும் தான் மனசு வுட்டுட்டாரு. இல்லாட்டி அவருக்கு இது சாவற வயசா?”

…..

“என்னமோ மனுசனுக்கு நேரம் அவ்வளவுதான் யாரு என்ன பண்ண முடியும்?”

“காரியம் என்னைக்கி?”

“நாளானைக்கி மாசம் பொறக்குது. நாளைக்கே வச்சாதான் சரியா இருக்கும்.”

“நாளைக்கேன்னா இன்னும் வேல கெடக்கே? எல்லாம் கழுவி, தொடச்சி வீடு பூசிருவீங்களா?”

“வீடு இப்ப பூச முடியாது. சுவத்தையெல்லாம் கழுவி விட்டறலாம். அப்புறம் புது வீடு பால் காய்ச்சிட்டு இங்க காலி பண்ணும்போது வீட்டுக்காரங்க இன்னொருக்கா பூச சொல்லுவாங்க. ஒரே வாக்கா அப்ப பூசிக்கலாம். ஆளுக்கு ஒரு வேலையா செஞ்சி தானே ஆகனும் நாளு இல்லையே?” “அமாமா எத்தன மணிக்கி எடுக்கறீங்க? மூணு மணிக்கி மேல நல்ல நேரம் இல்ல. இப்ப இருந்தே ஆரம்பிச்சாதான் சரியா இருக்கும்.”

அதற்கு மேல் ஒன்றும் இல்லை. என் இழப்பினால் தாக்குண்டு துடித்து தவிப்பதற்கு யாரும் இல்லை. காயத்ரி தாக்கப்பட்டதாய் உணரலாம். ஆனால் உள்ளூர அவள் என் மரணத்தை எதிர்பார்க்கவில்லை என்று சொல்ல முடியாது. சீக்கிரமே அதை ஏற்றுக் கொள்வாள் சகஜ வாழ்க்கைக்கு வேகமாக மீண்டு விடுவாள்.

நான் ஏன் இப்படி யோசித்துக் கொண்டிருக்கிறேன் கார்த்திக் தன்னையே வியப்பாக கேட்டுக் கொண்டான். இப்படிப் பலமுறை தன்னைத்தானே கேட்டு கேட்டுதான் நினைவுகளை வேறு பக்கம் திருப்ப வேண்டியிருக்கிறது. அப்படி திருப்பினாலும் அவனைச் சுற்றிலும் மகிழ்ச்சியடைவதற்கான விஷயம் என்று எதுவும் இல்லை. ‘அப்படியென்றால் சாவைப்பற்றி சிந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறதா?’ மனதின் இந்தக் கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை.

ஆமாம் நான் ஏன் சாவைப் பற்றியே சிந்திக்கிறேன். அதில் நான் மகிழ்ச்சியடைகிறேனா? அப்படி சிந்திக்கும்போது, மனதில் ஒரு திருப்தி ஏற்படுவதை இப்போது கண்டுபிடிக்க முடிகிறது.  கார்த்திக் அதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். இது நல்லதுதானே? இந்த மகிழ்ச்சி எனக்கு அதைக் கொண்டு வந்துவிடும். நான் அதை விரும்புகிறேனா? ஆமாம் உண்மையிலேயே நான் சாவை விரும்ப ஆரம்பித்துவிட்டேன். இதோ இந்த நிமிடமே என் உயிர் பிரிந்துவிட்டதென்றால் என்னுடைய கடைசி உணர்வு ஒரு குரூரமான திருப்தியாகத்தான் இருக்கும்.  இதன் மூலமாக என் தம்பியை என் அம்மாவை நான் திரும்ப பலமாக தாக்கிவிட்ட திருப்தி ஏற்படும். அவனோடு சண்டை செய்வதிலோ, அழுவதிலோ கெஞ்சுவதிலோ சபிப்பதிலோ கிடைக்கும் திருப்தியைவிட இது மேலானதாக இருக்கும்.

ஆனால், அவன் அவ்வளவு பூஞ்சையானவன் இல்லையே? இந்த தாக்குதலையும் அவன் கணக்கிட்டே வைத்திருப்பான். அதையும் எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ அப்படி எதிர்கொள்வான். எப்படி கடந்து போக வேண்டுமோ அப்படி கடந்து போவான்.

2

“வர்ற புதன் கிழம புதுவீடு கட்ட பூமி பூஜ போடறம் அண்ணா, வந்துடுங்க” என ரமேஷ் சொன்னபோது, கார்த்திக் என்ன சொல்வதென்றே தெரியாமல் தத்தளித்தான்.

அதை சமாளிக்க அவனுக்கு ஒரு நிமிடம் போல தேவைப்பட்டது. “வர்ற புதன் கிழமையா?” என்றான் நம்ப முடியாதவனாய்.

“ஆமாண்ணா!”

இன்னும் அவனுக்கு புரியவில்லை. இது எப்படி சாத்தியம். போன வாரம் தானே அந்த நிலத்தில நீயே வீடு கட்டிக்க என சொன்னேன். உடனே பூமி பூஜை போடுகிறான் என்றால், என் வாயில் இருந்து எப்போது அந்த வார்த்தை வரும் எனக் காத்துக் கொண்டே இருந்திருப்பானோ?

அப்படி சொன்னால் உட்கார்ந்து பேசி ஏதாவது ஒரு முடிவுக்கு வரலாம் என நினைத்துதான் அதை சொன்னான். அவன் இப்படி செய்வான் என தெரிந்திருந்தால், அப்படி சொல்லி இருக்கவே மாட்டான்.  எதுவும் கலந்து பேசாமலேயே அவன் பாட்டுக்கு வீடு கட்ட ஏற்பாடு செய்துவிட்டான். அப்படியென்றால் அந்த நிலத்தை அம்மா அவனுக்கு கொடுத்துவிட்டாளா? என்னிடம் ஒருவார்த்தை கேட்க வேண்டாமா? சொல்ல வேண்டாமா? அந்த இடம் இப்போது சதுர அடி மூவாயிரம் ரூபாய்க்குப் போகும், கணக்குப் போட்டால் நாற்பது லட்சம் ரூபாய்க்கு மேல் வருகிறது. என்னிடம் ஒன்றும் கேட்காமல் எதுவும் சொல்லாமல் அப்படியே முழுதாக தூக்கி அவனுக்கு கொடுத்துவிட்டாளா?

நினைத்துப் பார்க்கவே கார்த்திக்குக்கு உடம்பு நடுங்கியது? இவ்வளவு தானா நான் வாழ்ந்த வாழ்வு? இவ்வளவு தானா வாழ்க்கை? அண்ணன் தம்பி, அம்மா பாசம் உறவு ரத்த சொந்தம் என்பதெல்லாம் பணத்துக்கு முன் ஒன்றுமே இல்லையா?

எவ்வளவு பெரிய காரியத்தை எவ்வளவு துணிச்சலாக மனசாட்சியின் எந்த வித உறுத்தலும் இன்றி, நியாய தர்மம் பற்றிய யோசனை இன்றி இருவரும் அரங்கேற்றி இருக்கிறார்கள்?

அந்த நிலத்தில் எனக்கு உரிமை இல்லையா? வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் அந்த இடத்தில் இரண்டு பேரும் சேர்ந்து வீடு கட்டிவிடலாம் என்று இருபது வருடங்களுக்கு மேலாய் நம்பி இருந்தேனே? என்னுடைய வாழ்க்கை என்று தனியாக நினைத்துப் பார்க்காமல் உழைத்ததால் தானே இன்று குடும்பம் தலை நிமிர்ந்து நிற்கிறது? அதையெல்லாம் அவர்கள் ஒரு நிமிடமாவது நினைத்துப் பார்த்திருப்பார்களா?

நினைக்க நினைக்க அவன் உடல் நடுங்கிக் கொண்டே இருந்தது. கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காய்ச்சல் வரும்போல இருந்தது.

அம்மாவின் பாசத்துக்கு கூட தகுதியானவனாய் ஆக முடியாத நான் எல்லாம் எதற்காக உயிரோடு இருக்க வேண்டும்?ஆமாம் செத்துப் போய்விட வேண்டும் செத்துப் போய்விட வேண்டும் செத்துப் போய்விட வேண்டும்.

நெஞ்சில் பிளப் என்று ஏதோ ஏறி அடைப்பது போல இருந்தது. இது என்ன இது இதுதான் ஹார்ட் அட்டாக்கா? ஆனால் எனக்கு உடல் வியர்க்கவில்லையே? வலது தோளில் வலி குமட்டல் எதுவும் இல்லையே? ஆனால் நெஞ்சு மட்டும் வலிப்பது போல இருப்பதேன்? காயத்ரியிடம் சொன்னால் பயந்துவிடுவாளே?

அவன் தான் மனம் உடைந்ததை அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை. அப்படி காட்டிக் கொண்டுவிட்டால் அவள் மேலும் நொறுங்கிவிடுவாள். இப்போதே எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் அவளை மலைப்பாம்பு போல விழுங்கிக் கொண்டிருக்கிறது. அவள் தன்னை முற்றிலும் கைவிடப்பட்டவளாக பாதுகாப்புக்கு ஏதும் இல்லாதவளாக திடீரென்று நான் இறந்துவிட்டால், நடுத்தெருவில் நிற்க வேண்டியவளாக மீண்டும் வீட்டு வேலைகளுக்கு செல்ல வேண்டியவளாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறாள். அந்த நிலை பற்றிய கற்பனை அவள் அச்சத்தை பல மடங்கு பெருக்கிவிட்டது. எனக்கு ஏமாற்றிவிட்டார்களே என்ற துயரத்தைத் தவிர வாழ முடியாது என்ற எண்ணம் எல்லாம் இல்லை. ஆனால் அவளுக்கு அப்படி இல்லை. அவளிடம் போய் தன் நெஞ்சு வலியை எப்படி சொல்வது?

ஆனாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். “காயத்ரி எனக்கு நெஞ்சு என்னவோ பண்ணுது?”

அவள் முகம் பயத்தில் வெளுத்துவிட்டது. அப்போதே அவள் தன் கணவனின் சாவை கற்பனை செய்துவிட்டவள் போல, “என்ன சொல்றீங்க? வாங்க போய் டாக்டரைப் பார்க்கலாம்” என்று பரபரத்தாள்.

“ஒண்ணும் பிரச்னையில்ல, அப்புறம் போய்க்கலாம்.” நீங்க கொஞ்சம் பேசாம இருக்கீங்களா?” கோபத்தில் அவள் வார்த்தைகள் வெடித்துச் சிதறின. “கடைய யாரு பாத்துப்பாங்க?” மத்தியான நேரம் கூட்டமில்லாமதானே இருக்கு. கொஞ்ச நேரம் டீ போடலைன்னா பரவாயில்ல நீங்க வாங்க, அம்மா யாராவது வந்து ஒரு டீ ரெண்டு டீ கேட்டாங்கன்னா போடுங்க நான் இவரை டாக்டர் கிட்ட கூட்டிட்டுபோய் காட்டிட்டு வர்றேன்.”

“ஏன் என்ன ஆச்சி?” என்றாள் அந்த அம்மா.

“திடீர்னு நெஞ்சி வலிக்கிதுன்றாரும்மா” சொல்லும்போதே அவள் அவனுக்காக தன் குரல் நடுங்கிவிடாதவாறு கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது தெரிந்தது.

டாக்டர் நாடி பிடித்து பார்த்துவிட்டு, “வயசென்ன?” என்றார்.

“ஐம்பது…”

“இசிஜி எடுத்து பாத்துக்கறது பெட்டர்.”

இதயத்தின் படபடப்பு அதிகமானது. இதயம் வலுவிழந்துவிட்டதா? இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. இனி காலத்துக்கும் ரத்த அழுத்தத்திற்கு மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டுமா? இனி அதிகமாக சந்தோஷப்படக் கூடாதா? அதிகமாக துக்கப்படக் கூடாதா? திடீரென ஒருநாள் என் இதயம் நின்றுவிடுமா?

இசிஜி பார்த்துவிட்டு, பெரிதாக பாதிப்பில்லை. ஆனால் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. எச்சரிக்கையாய் இருப்பது நல்லது என்றார் டாக்டர்.

அவனுக்கு நன்றாக விளங்கிவிட்டது. வீடு, நிலம் என, அதையே நினைத்து நினைத்து மனம் குமைந்து கொண்டிருந்ததால் தான் தனக்கு இப்படி ஆகிவிட்டது. இனி அதைப்பற்றி நினைக்கக் கூடாது. நிலம் போனால் மயிரே போச்சி என நினைத்துக் கொண்டான்.

அந்த வாரத்தில் சனிக்கிழமையன்று இரவு இரண்டு மணிக்கு ஏதோ வித்தியாசமாய் சத்தம் கேட்டு கார்த்திக் திடுக்கிட்டு விழித்து, மலங்க மலங்க பார்த்தான்.  பக்கத்தில் காயத்ரி தூங்காமல் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அந்த இருளிலும் அவளிடம் தென்பட்ட விநோதமான தன்மையை புரிந்து கொள்ள முடியாதவனாய், “தூங்கலியா?” என்றான்.

“தூக்கம் வரலிங்க என்றவள். ஏங்க நெஞ்சு என்னவோ போல இருக்குங்க. மூச்சு விட சிரம்மா இருக்கு” என்றாள்.

அவன் வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். “என்ன பண்ணுது காயத்ரி?” இப்போது அவனுக்கு நெஞ்சு படபடத்தது. ஒருவேளை இதுதான் ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ?

“என்னன்னு தெரியல. மூச்சுவிட முடியல.”

“பயப்படாத ஒண்ணும் இல்ல. படுத்து அமைதியா கண்ண மூடி நிதானமா மூச்ச விடு எல்லாம் சரியாப் போயிடும். பயத்த விட்டாலே பாதி சரியாயிடும்.”

“நா ஒண்ணும் பயப்படல. என்னால படுக்க முடியல.” என்ன டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போங்க.

“இந்த நேரத்தில இங்க எந்த டாக்டர் இருப்பாங்க? காலையில சேலம் போயி பாக்கலாம்.“

“ஜெயம் ஆஸ்பிடல்ல பெட் பேஷண்ட்லாம் இருக்காங்க இல்ல. நைட் டாக்டர் இருப்பாங்க. போய் பாத்துட்டு வந்துடலாம்.“

“கடவுளே இதென்ன கூத்து. நீ ஏன் இப்படி பண்ற?”

“என்னால மூச்சுவிட முடியல”

பைக் கடையில் நிறுத்தப்பட்டிருந்தது. வீட்டில் நான்கைந்து படிகள் ஏற்றி இறக்க வேண்டியிருப்பதால், சிரம்மாய் இருக்கும் என வண்டியை அங்கேயே விட்டுவிட்டு நடந்தே வீட்டுக்கு வந்துவிடுவார்கள்.

தம்பியிடம் கார் இருக்கிறது. இந்த மாதிரி சமயத்தில் கேட்டால் கூட மாட்டேன் என்றா சொல்லிவிடுவான்? ஆனால், இந்த நடு ராத்திரியில் அவனை தூக்கத்தில் இருந்து எழுப்பத்தான் வேண்டுமா? என்று யோசனையாய் இருந்தாலும் ஆபத்துக்குப் பாவமில்லை என்று அவனுக்கு போன் செய்தான்

“ரமேஷ் இங்க உன் அண்ணி, திடீர்னு மூச்சு திணறலா இருக்குன்னு சொல்லிகிட்டிருக்கா? எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. உன்னோட கார எடுத்துகிட்டு வர்றியா? ஒரு நட டாக்டர போய் பாத்துட்டு வந்துடுவம்?”

“காலையில போயிக்கலாம்னா. இப்ப  போனா எந்த ஆஸ்பிடல்லயும் பெரிய டாக்டர் யாரும் இருக்க மாட்டாங்க. காலையில கூட்டிகிட்டு வாங்கன்னுதான் சொல்லுவாங்க.” தூக்கம் தெளியாததைப் போலவும், தூக்கக் கலக்கத்தில் என்ன சொல்கிறோம் என்றே தெரியாமல் சொல்கிறான் என்பது போலவும் அவன் குரல் இருந்தது. நாளைக்கு எதாவது ஆகிவிட்டால், ஐயோ அண்ணா நீ போன் பண்ணதே எனக்கு தெரியாது. தூக்கத்துலயே பேசி இருக்கேன். நீ இன்னொருக்கா போன் பண்ணி இருக்கக் கூடாதா அண்ணா? என்ற பதிலுக்கு ஏற்றதுபோல அவன் இப்போது குரலை வைத்திருக்கிறான்.

விஷயத்தை கேட்டும் அவனிடம் எந்த பரபரப்போ அதிர்ச்சியோ இல்லை. பயப்படாத ஒண்ணும் ஆகாது என்று எதுவும் சொல்லவில்லை. 

சாவியை எடுத்துக் கொண்டு போய் கடையைத் திறந்து, வண்டி எடுத்துக் கொண்டு வந்தான்.

ஆஸ்பத்திரி அமைதியாக இருந்தது. நர்ஸ் பெண்கள் எல்லாம் ஒரு அறையில் படுத்து நல்ல தூக்கத்தில் இருந்தனர். அந்த அறையை தேடி கண்டுபிடிக்க வேண்டி இருந்தது.

ஒரு இளம் நர்ஸ் வந்து பல்ஸ் பார்த்துவிட்டு, பெயர் விபரங்களையெல்லாம் எழுதிக் கொண்டு, போய் டாக்டரை அனுப்புவதாக சொல்லிவிட்டுப் போனாள். பத்துநிமிடம் வரை யாரையும் காணவில்லை.

திரும்பவும் தேடிக் கொண்டு போக வேண்டுமா? என யோசித்துக் கொண்டிருக்கும்போதே, கல்லூரி மாணவன் போன்ற தோரணையில் ஒருவன் வந்தான். அவன்தான் டாக்டர் போல.

நாடி பார்த்தான். ஸ்டெதஸ்கோப் வைத்து பரிசோதித்துப் பார்த்தான். ஆச்சரியமாக காயத்ரியைப் பார்த்து, “எல்லாம் நார்மலா தானே இருக்கு. எந்தப் பிரச்னையும் இல்லையே என்ன பண்ணுது?” என்றான்.

காயத்ரி இதை எதிர்பார்க்கவில்லை. அழுதுகொண்டே “இல்ல மூச்சுவிட முடியாத மாதிரி இருந்தது. நா என்ன வேணும்னு சொல்வனா?”

“சமீபத்தில ஷாக் தர்ற மாதிரி ஏதாவது நடந்ததா?”

“இவங்க மனசுலதான் என்னவோ பிரச்ன நல்லா தூக்கம் வர்ற மாதிரி மாத்திரை தர்றேன். போட்டுகிட்டு தூங்குங்க. எதைப் பத்தியும் நினைச்சிகிட்டு மனசப் போட்டு குழப்பிக்காதீங்க என்று அனுப்பி வைத்தார்.

வீட்டுக்கு திரும்பும்போது, கார்த்தி எதுவும் கேட்கவில்லை. அவளாகவே, “இல்லப்பா நா அதையெல்லாம் எதையும் நினைக்கிறதில்ல” என்றாள் பரிதாபமாய்.

மணி மூன்றாகிவிட்டது. இனி கொஞ்ச நேரம் தூங்கி, ஐந்து மணிக்கு எழுந்து கடைக்குப் போக வேண்டும். காயத்ரிக்கு தூக்க மாத்திரை கொடுத்திருக்கிறார்கள். அவள் காலையில் எழுந்து கடைக்கு வர மாட்டாள். அசிரிக்கையான உணர்வோடு படுக்கையில் படுத்தாலும் தூக்கம் வரவில்லை. சின்ன வயசில் விபரம் தெரிந்த நாளில் இருந்து அவன் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொன்றும் அவன் நினைவில் எழுந்து வர ஆரம்பித்த்து.

3

ஆயிற்று இரண்டு வருடங்களுக்கு மேல் வீடு கட்டிக் கொண்டிருக்கிறான். ஊரிலேயே பெரிய வீடு இந்த வீடுதான் என, பார்த்துவிட்டு வந்தவர்கள் எல்லாம் பேசிக் கொண்டார்கள். கார்த்திக்கிடம் வந்து வியந்து போனார்கள். உள்ளுக்குள்ளேயே வளைவான படிகள் வைத்து, சினிமாக்களில் வரும் வீடு போல அவ்வளவு பெரிய வீடு.

“ரெண்டு பேரும் சேந்துதான கட்டறீங்க.”

“இல்ல”

“இல்லயா? அப்போ உனக்கு வீடு?”

….

அம்மா “டேய் அவனே லோன் போட்டுத்தான்டா வீடு கட்டறான். ஐம்பது லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கான். எப்ப கட்டறது எப்படி கட்டறதுன்னு எனக்கு ஒன்னும் புரியல” என்றாள். ஆனால், வீடு கட்ட ஆரம்பித்த ஆறு மாதத்தில் தாய்லாந்துக்கு ஒருமுறை குடும்பத்தோடு டூர் போய்விட்டு வந்தான்.

கார்த்திக் அப்போதே முடிவு செய்துவிட்டான். அவன் வாழ்க்கை வேறு. என் வாழ்க்கை வேறு. இனியும் அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அவ்வளவு பெரிய வீடு கட்டுபவன் ஒரு பைசாவும் செலவழிக்காத என்னைக் கொண்டுபோய் எப்படி சமமாய் குடி வைப்பான்? இனியும் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தால் அதை சகஜமான விஷயமாக ஊரார்கள் பார்க்க மாட்டார்கள். ‘சின்னவன் இவ்வளவு பெரிய ஆளாயிட்டான்ற பொறாமையில பேசுறான்’ என்றுதான் சொல்வார்கள். ஏற்கனவே அதை அம்மா சொல்லிவிட்டாள். “அவன் பொழைக்கறதப் பார்த்து உனக்குப் பொறாம அதுதான் நீ இப்படியெல்லாம் பேசிகிட்டிருக்க”  அவன் அவ்வளவு அவமானமாய் என்றுமே உணர்ந்ததில்லை.

சின்ன வயதில் எல்லோரும் வாழ்க்கை வாழ்க்கை என்கிறார்களே அப்படியென்றால் என்ன என யோசித்து யோசித்துப் பார்த்திருக்கிறான். அப்போதெல்லாம் அது என்னவென்றே விளங்கவில்லை. அப்பாவைக் கேட்டபோது “நாம இப்படி தினமும் தூங்கி முழிக்கிறோம். பகலெல்லாம் பாடுபடறோம் இல்லையா? இதுதான் வாழ்க்கை“என்றார். (ஒருவேளை அவர் இருந்திருந்தால் இப்படி செய்வது தர்மம் இல்லை என்று பேசியிருப்பார்.)  

இதுதான் வாழ்க்கையா? இதில் ஒன்றுமே இல்லையே? இதை ஏன் எல்லோரும் அவ்வளவு பெரிதாய் பேசிக் கொள்கிறார்கள் என்று அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஆனால் இன்று புரிகிறது. இதுதான் வாழ்க்கை. வாழ்க்கையின் இந்த குரூரங்களைக் கடந்துதான் ஆக வேண்டும்.

அவன் கடைக்கால் எடுக்கும்போதே, கார்த்திக் குடியிருந்த வீட்டை காலி செய்யச் சொல்லிவிட்டார்கள். அப்போதெல்லாம் சமாதானமாகி அம்மாவிடம் சகஜமாய் பேச ஆரம்பித்திருந்தான்.

“அம்மா என்ன வீடு காலி பண்ண சொல்லிட்டாங்க. எங்கயும் வீடு கிடைக்கில.”

“பொறுமைய தேடு கிடைக்கும். இவ்வளவு பெரிய ஊர்ல ஒரு வீடு கிடைக்காதா?”அப்போது கூட ரமேஷிடம், “டேய் அவனுக்கும் சேத்தே வீடு கட்டு, அவன் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி வாடகை வீட்ல லோல் பட்டுகிட்டிருப்பான்?” என்று சொல்ல அம்மாவுக்கு மனம் வரவில்லை. எப்படியும் அவன் மனம் மாறிவிடுவான். தனக்கும் சேர்த்துதான் வீடு கட்டுவான் என அதன்பிறகு கூட நம்பிக் கொண்டிருந்தான் கார்த்திக். அதெல்லாம் வெறும் பகல் கனவு. அவன் தன்னைத்தானே திட்டிக் கொண்டான். கூடப் பிறந்தவன் என்பதற்காக அவன் லட்ச லட்சமாய் செலவு செய்து கட்டும் வீட்டில் உன்னைக் குடி வைக்க வேண்டுமா? நீ ஏன் இப்படியெல்லாம் எதிர்பார்க்கிறாய்? அவனுடைய வாழ்க்கை வேறு உன்னுடைய வாழ்க்கை வேறு. பாசம் என்கிற சாதாரண கயிற்றை வைத்து இரண்டையும் இணைத்துவிட முடியும் என்று நீ நினைக்கிறாயா?

இன்னும் வீட்டுவேலை முடியவில்லை. ஆயிற்று இரண்டு வருடங்கள் முழுதாக முடிந்துவிட்டன. இன்னும் இவன் போய் வீட்டை எட்டிப் பார்க்கவில்லை. அவனும் அண்ணா வந்து பார் என்று கூப்பிடவில்லை.

வீடு பால்காய்ச்சும்போது கூப்பிட்டால் கூட போகக் கூடாது என வைராக்யமாய் இருந்தது. அங்கே வருபவர்கள் எல்லாம் தன்னை ஒரு காட்சிப் பொருள்போல பார்க்கின்ற நினைவே சோர்வூட்டுவதாய் இருந்தது.

“நீ எங்க நிலம் வாங்கி இருக்க?” என யாராவது கேட்டுவிடுகிறார்கள். ஒருமுறை அப்படி கேட்டவருக்கு சுடுகாடு இருக்கும் திசையைக் காட்டி “அங்க ஒரு நிலம் வாங்கி இருக்கேன்” என்றான் நமட்டுச் சிரிப்புடன். அவருக்கு அவன் சொல்வதும் புரியவில்லை. சிரிப்பதும் புரியவில்லை.

நவரசாவில் தி.ஜாவின் பாயாசம் கதையை படமாகப் பார்த்தபோது, அதில் வரும் டெல்லிகணேஷ்தான் நானா? என்ற கேள்வி எழுந்தது. அந்த பாத்திரத்தோடு தன்னை இணைத்துக் கொள்ள அவனுக்கு வெட்கமாக இருந்தது. இனி நான் இதைப் பற்றி எப்போதும் நினைக்கக் கூடாது என நினைத்துக் கொண்டான்.

அவன் வாழ்க்கையில் எந்த வீழ்ச்சியும் இல்லை. எந்த ஏமாற்றமும் இல்லை. ஏற்றம் இறக்கம் இல்லாமல் போய்க் கொண்டிருப்பதுதான் பிரச்சனை. அதே சமயம் நன்றாக கவனித்துப் பார்த்தால், அது ஒரு நல்ல விஷயமும் கூட. (ஆனால் அது வெளியில் இருந்து பார்க்கும்போதுதான்)

குளிர்காலம் சட்டென முடிந்து, கோடையின் சுவடுகள் துவங்கிவிட்டன. இந்த மனநிலையில் இருந்து வெளியில் வர எங்காவது தொலைதூரமாய் போய்விட்டு வந்தால் பரவாயில்லை என்று தோன்றியது. திடீரென ஒருநாள் “நாம எல்லோரும் மைசூரு போயிட்டு வரலாமா?” என வீட்டில் கேட்டான். பிள்ளைகள் இதை நம்பலாமா வேண்டாமா என்பதைப் போலப் பார்த்தார்கள். காயத்ரி அவனை ஆச்சரியமாய் பார்த்து, “திடீர்னு என்ன?” என்றாள்.

“ஒன்னுமில்லை சும்மாதான். வெளிய எங்கயும் போறதில்லை. இந்த வீட்டையும் கடையையும் சுத்தி சுத்தி வர அலுப்பா இருக்கு” என்றான்.

“காசு?”

“இப்ப ஒரு பைனான்ஸ் முடியப் போவுது. ஒரு முப்பதாயிரம் எடுத்தா போதாதா? எப்பயும் கட்டற கடன்தானே கட்டிக்கலாம்.”

அதன் பின், வீட்டில் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்ததைப் போல ஒரு கலகலப்பு தோன்றியது.

பணம் கைக்கு வந்ததும், பதினைந்து நாள் கழித்து வரும் ஞாயிறு திங்களில் ரயில் டிக்கெட் பதிவு செய்தான்.  பிள்ளைகள் பேக் வாங்குவது, கொஞ்சம் மலிவு விலையில் துணி மணிகள் வாங்குவது என ஆன்லைன் கடைகளில் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

யூ டியூபில் மைசூரு அரண்மனையை தேடிப் பார்த்தபோது, பிரம்மாண்டமாய் இருந்தது. ஒரு சாதாரண வீடு அது தரும் ஏற்ற தாழ்வுகளுக்கே இவ்வளவு மன உளைச்சல் உண்டாகிறதே? அரண்மனை, ஆட்சி, அதிகாரம் எல்லாம் என்னென்ன செய்யும். அப்புறம் ஏன் ராஜாவுக்கு பிறந்த அண்ணன் தம்பிகள் வெட்டிக் கொள்ள மாட்டார்கள்?

அடுத்தவாரத்தில் ரமேஷூம் அவன் மனைவி ஜீவாவும் கார்த்திக்கின் வீட்டுக்கு வந்தார்கள். மாளிகை வீட்டில் குடியேறப் போகும் அவர்கள் இந்த எளிய வாடகை வீட்டை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை ஒருவித படபடப்போது, அவன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

“வர்ற ஞாயித்துக் கிழமை வீடு பால் காய்ச்சறோம்….. “ அவர்களால் சரளமாய் பேச முடியவில்லை என்பதை கார்த்திக் ரசித்தான்.

வரும் ஞாயிற்றுக் கிழமை… அவன் அதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அப்படி சொன்னதும் உலகமே இன்ப மயமாய் மாறிவிட்டதைப் போல இருந்தது. அன்று அவர்கள் எல்லோரும் மைசூரில் அந்த பிரம்மாண்டமான அரண்மனையை ரசித்துக் கொண்டு இருப்பார்கள்.

அந்த மகிழ்ச்சியான விஷயத்தை துக்கமான முகத்தோடு சொல்ல, கார்த்திக் தன்னை தயார்படுத்திக் கொண்டான்.

குமாரநந்தன்

குமாரநந்தன் சிறுகதைகள், கவிதைகள் புனைபவர். பகற் கனவுகளின் நடனம் என்ற கவிதைத் தொகுப்பும், பதிமூன்று மீன்கள், பூமியெங்கும் பூரணியின் நிழல், நகரப் பாடகன், மகா மாயா ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகி உள்ளன. சேலம் அருகே மல்லூரில் வசிக்கிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.